மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!
11
இரண்டாம் பாகம்
பிட்சாலயா அல்லது பிட்சாலி. எழில் ஓங்கிய கிராமம். இந்துக்களுக்கு சரிசமமாக முஸ்லிம் மக்களும் நிரவி ஒற்றுமையுடன் பழகும் கிராமம். மதம் என்ற வேறு பாட்டைத் தவிர எவ்வித பாகுபாடும் பார்க்காத கிராமம். பள்ளி வாசல் தொழுகையினை இவர்கள் பார்க்க, கோவிலில் கோரிக்கையினையும் வழிபாட்டினை யும் அந்தணர்கள் தவறாது செய்தனர்.
""அடேய்... மாலையாயிற்று. இவ்வளவு நேரம் கழித்து வருகிறாயே... எங்கிருந்தாய் இந்நேரம்?'' என்று அந்த பிராமணர் கேட்க, ""கவுர் மாமா வீட்டுத்திண்ணையில் அமர்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன் அப்பா'' என்று மகன் கூறுவான்.
இப்படியாய் ஒற்றுமை தவழும் அந்த கிராமத்தில் மாற்று மதத்தவரையும் மரியாதை நிமித்தம் உறவுமுறை சொல்லிப்பழகும் அத்யந்தம் வளர்ந்திருந்தது. அந்தணர் வீட்டிற்குள் நடக்கும் வேத பாடங்களை ஜன்னலில் முகம் புதைத்துக் கேட்கும் முஸ்லிம் பிள்ளைகளும் உண்டு.
அப்படிப்பட்ட அற்புதமான கிராமத்தில் அப்பண்ணா என்னும் ஆச்சார்யார் வசித்து வந்தார். நன்கு வேதம் கற்ற சுத்த பிராமணர். ஆனால் பரம ஏழை. எந்த சுலோகத்தையோ, ஸ்தோத்திரங்களையோ பிழையில்லாது உச்சரிக்கும் மாணவர்களின் கேசம் கோதி முதுகு வருடி வாத்சல்யமாய் பாராட்டுவதில் வஞ்சனையில்லாதவர். மாணவர்களிடம் எவ்விதமான தட்சணையினையும் போதிப் பதற்காக வாங்கியதில்லை. சுழிற்றோடும் துங்கபத்ரையில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்து ஜபதபங்களை முடித்து, வியாசராய தீர்த்தர் ஸ்தாபித்த ஸ்ரீஅனுமனையும் வணங்கி, எதிரேயிருக்கும் லிங்கத் திருமேனியருகே லிங்காஷ்டகம் பாடி, பிறகு அதற்கு எதிரிலிருக்கும் ஸ்ரீலக்ஷ்மி ந்ருசிம்மரின் திருமேனியை வணங்கி, பின் கூடியிருக்கும் தனது மாணவர் களுக்கு அன்றைய பாடங்களை ஆரம்பித்து சுவாரசியமாக நடத்துவார். திறந்தவெளியில் திருத்தமான பாடம்.
உஞ்சவிருத்தி செய்து, அதன்மூலம் கிடைக்கும் அரிசியினை வேட்டியில் கொட்டி முடிச்சிட்டு, தாழத்தவழும் விருட்சத்துக் கிளையில் கட்டி, துங்கபத்ரையின் நீரை இரு கரங்களால் எடுத்து தனது குருவை நினைத்து மந்திர உச்சாடணை செய்து, அந்த முடிச் சிட்ட அரிசித்துணிமீது ப்ரோட்சணம் செய்து, பிறகு மூட்டையினைப் பிரித்துப் பார்க்க, அதிலிருந்த அரிசி சாதமாக மலர்ந்து உணவாகப் பிரகாசிக்கும். அதை அங்கிருக்கும் அனைத்து தெய்வீக மூர்த்தங்களுக்கும் படைத்திட்டு, பிறகு தனது மாணவர்களுக்கும் கொடுத்து, மீதமிருப்பின் இல்லம் கொண்டு செல்வார். இல்லையெனில் முகம் சுளியாது. வேட்டியினை நதி நீரினில் நன்கு அலசி உலர்த்தி, இரு கைகளால் துங்கபத்ரையினை அள்ளியள்ளிப் பருகி திருப்தியடையும் உன்னதமான ஆத்மா அவர். வறுமை அவருக்கு கிரீடம். வாய்மையே அவரது வேதம். நேர்மையே அவரது உடுப்பு. சத்தியமே அவரது ஸ்வாசம்.
அப்படியாக வாழ்ந்து வந்த அவரது தினசரி வாழ்வில் அவருக்கு சற்றே பிடிமானம் தளர்ந்துபோயிற்று. எழுதுவது, ஸ்நானம் செய்வது, சந்தியாவந்தனம் செய்வது, முறைப் படி காயத்ரி மந்திரம் ஜபிப்பது, பிள்ளை களுக்கு போதிப்பது, கிடைத்தால் உண்பது- இல்லையேல் வெறும் துங்கை நதி நீர்.
இப்படியே காலம் நகர்தலில் ஒரு வெறுமையே மிஞ்சியது. "ஏன் இப்படி? நாம் எதற்குப் பிறந் தோம்? நான் ஜனித்ததினால் என்ன பயன்? அல்லது நமது கடமை என்ன? எல்லாரும் போலத்தான் நானுமா? இதற்கு நான் அந்த விவசாயியாகவே பிறந்திருக்கலாம். குயவனாக இருந்திருந்தால் பானையாவது பிடித்திருக்க லாம். இந்த நதி நீராகவேனும் அல்லது மீனாக வாவது பிறந்திருந்தால் நான் பிறர் பசிக்காகவாவது பயன்பட்டிருப்பேனே. என் விதிப்பயன்தான் என்ன!'
அன்று சிந்தனையின் தாக்கத்தால் நதியில் அவர றியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். சட் டென்று மின்னல் தட்டியதுபோல் நின்றார்.
கரையையொட்டி கம்பீர மாக அந்த விருட்சம் வளர்ந் திருந்தது. அதைச்சுற்றி பல சர்ப்பங்கள் மேலும் கீழுமாக, குறுக்கும்நெடுக்குமாக ஊர்ந்து கொண்டிருந்தன. சில நீரின் மேலே வளைந்து நெளிந்து நீந்தி அப்பண்ணாவை நெருங்கி அவரை வலம் வந்து, பின் மறுபடி புறப்பட்ட இடத்திற்குச் சென்று சேர்ந்தன. அப்பண்ணா அவற்றை வாஞ்சையோடுதான் பார்த்தார். இதுபோல பலமுறை அவரை நெருங்கி விலகிப்போவது நிகழ்ந்திருந்தாலும், அவரை அவை வலம் வந்தது இதுவே முதன்முறை.
அவர் நீரினுள் அமிழ்ந்து பின் எழுந்து மறுபடி முன்னேற முயல, அந்த விருட்சத்தின் மடியில் ஒரு ஒளிவெள்ளம் உருவாகியது. தெய்வீகமான குரல் முழங்கியது.
""மனக்குழப்பம் நீங்குக அப்பண்ணா. நீ பூரணமாகப் போகிறாய். பவித்திரமான உனது வித்யாபணி ஓர் உன்னத அர்ப்பணிப்பு. எனவே உனது யுகக்கடமைக்கு ஸ்ரீமன் நாராயணன் நல்வழி காட்டப்போகிறார். ஆம்; தூயவனான உனக்கு வழிகாட்ட குருமுகம் தேவை. குருவை ஒருவன் தேடியடைவதே தர்மம். அந்த தர்மமே புண்ணியப் பிறப் பெடுத்து பூவுலகில் சஞ்சரித்து உன்னைக் கண்டடையப் போகிறது. ஆம்; குருவே உன்னைத் தேடிவந்து அருள்செய்வார். எதிரே நீ பார்க்கும் இந்த வெளிச்சத்தின் ஊடே தெரியும் மேடை அவருக்கானது; சாஸ்வத மானது. அவர் வரும்வரை இவ்விடத்தைக் காப்பாய்'' என்று முழங்கிய குரல் பின் நீரின் குமிழ் உடைவது போல் மென்மையாய் அடங்கியது.
அப்பண்ணா சுற்றும் முற்றும் நோக்கினார்.
தன்னைத் தவிர யாரும் இல்லையென்பது உறுதியானதும் அந்தக் குரல் தனக்கானதே என்பதை உறுதிசெய்து மகிழ்வுற்றார். அந்த வெளிச்சத் திரளை அவர் உற்று நோக்க, அங்கே கொத்துக்கொத்தாக சர்ப்பங்கள் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தன. அவர் அவ்விடம் நோக்கி இரு கைகூப்பி வணங்கினார். ஒரு பெரிய கிருஷ்ண சர்ப்பம் மட்டும் தனது படத் தைப் பெரிதும் விரித்து அந்த விருட்சத்தின் வேர்மீது மும்முறை பதித்து எடுத்தது.
அப்பண்ணா மகிழ்வுற்றார். பின் திரும்பி நடந்தார்.
மெல்ல அவ்விடத்தைவிட்டு அகன்று மேலேறி வந்தார். அப்போது குதிரைமீது ஒரு அழகான- கம்பீரமான அதிகாரி சற்றுத் தொலைவில் வந்துகொண்டிருந்தார். அவரது தோற்றமே மரியாதைக்குரியதாக இருந்தது. குதிரை அவரை நெருங்கி வந்து நிற்க, அவர் அப்பண்ணாவைப் பார்த்துப் புன்னகைத்து முகமன் கூறினார்.
""வணக்கம் அய்யா. தாங்கள் யாரென்று தெரியவில்லை. இத்தனை நாட்களில் நான் தங்களைப் பார்த்ததுகூட இல்லையே'' என்றார் அப்பண்ணா.
""ஐயா! எனது பெயர் வெங்கண்ண பட் என்பது. நான் ஆதோனியிலிருந்து வருகிறேன். நவாப் சித்தி மசூத்கான் அவர்கள் என்னை திவானாகப் பொறுப்பேற்கச் செய்துள்ளார். நான்... அவரின்...''
""ஆஹா! தாங்கள்தானா அது. நான் காண்பது கனவல்லவே. அந்த ஹயக்கிரீவப் பெருமாள், சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் பெற்றவரல்லவா நீங்கள். யாரோ ஒரு மாத்வ துறவியால்தான் தாங்கள்... அவரின் பேரருளால்தான் தாங்கள் ஞானம் பெற்றதாக பலர் பேசக்கேட்டிருக்கிறேன். தாங்கள் உருதும் கற்றவரோ?''
வெங்கண்ணா கடகடவென்று வாய் விட்டுச் சிரிக்கலானார். ""இல்லை நண்பரே. அது இன்ன மொழிதான் என்பதும் எனக்குத் தெரியாது. வலியும் வேதனையும்தான் எனக்கு என் ஆத்ம குருவை ஞாபகப்படுத்தியது. அவரை எண்ணி அழுதேன். மனதால் தொழுதேன். பிறகுதான் அந்த அற்புதமே நிகழ்ந்தது. எனது வாய்தான் உச்சரித்தது. நெளிவு சுளிவுகளுடன், ஏற்ற இறக்கத்துடன் நான் எப்படித்தான் உரக்கவே படித்தேன் என்பது பெருத்த அதிசயம்... எனது ஆத்மார்த்த குரு ராகவேந்திரரின் மகிமையே மகிமை!''
""ஆஹா... ஏனோ உங்கள் குருவின் பெயரைக் கேட்டவுடனே என் தேகம் சிலிர்த்து அடங்கு கிறது. அவர் பெயரை உச்சரிக்கும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுப்பதைக் கண்டு ஆனந்தமாயிருக்கிறது எனக்கு. இது ஏனென்றே தெரியவில்லை.''
""இந்த நிகழ்வை நான் அனுபவித்தேன். இதே சிலிர்ப்பை நான் உணர்ந்திருக்கிறேன். ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ என்ற உச்சரிப்பே என்னை ஒரே நிமிடத்தில் உயரே அமர்த்திவிட்டது.''
""ஆஹா... அந்த மகானை நான் காண இயலுமா? அவர் இப்போது எங்கிருப்பார்?''
""உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர்மீது அசாத்திய நம்பிக்கைக்யுடன் பக்தியோடு தொழுதால் நிச்சயம் அவரது அருள் கிடைக்கும் என்பது பரிபூரண உண்மை.''
""நானும் ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ என்று உச்சரித்துத் தொழலாமா? அனுமதி யுண்டா?''
""அதைதான் இதோ இப்போது சொல்லிவிட்டீர்களே. விசித்திரமாக இருக்கின்றது... நில நிர்வாகமும் வரி விதிப்பும் முறையாக இருக்கிறதா என மேற்பார்வையிட கனதானம் வரைதான் வருவதாகப் புறப்பட்டேன்.
ஆனால் இந்தப் புரவி என்னை உங்கள்வரை கொண்டு வந்திருக்கிறதென்றால் எனது குருவின் கணக்கு உங்களையும் கூட்டியிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.''
""நன்றி ஐயா. இன்றிருந்து நானும் ஸ்ரீராகவேந்திரரை குருவாய் எண்ணி வழிபடு வேன். ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ... ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ'' என்று உச்சரிக்க உச்சரிக்க அவர் கண்கள் தானே மூட, அவர் மனதுள் ஆழ்ந்துகொண்டிருந்ததை வெங்கண்ணா உணர்ந்தார்.
வெகுநேரம் ஆழ்ந்திருந்தவர் கண்விழிக்க, வெங்கண்ணா புறப்பட்டுவிட்டிருப்பதை உணரமுடிந்தது. மாலை மங்கத் தொடங்கி இருந்தது. திவான் வெங்கண்ணாவை சந்திக்கும்முன் நதியருகே கேட்ட அந்த தெய்வீகக் குரல் சொன்னதும் உணர்த்திய தும் ஸ்ரீராகவேந்திரரைதான் என்பதை அவரால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. இடைவிடாது அவர் ராயரின் நாமத்தை உச்சரிக்கலானார். அந்த உச்சாடணையே அவரின் உணவாகிப்போனது. உணர்வாகிப்போனது.
ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் குடந்தை மடத்தில் அன்று அனைத்து நியமநிஷ்டைகள் முடித்து, அட்சதை யினைத் தனது திருக்கரங்களால் கொடுத்துக் கொண்டி ருந்தார். அப்போது உள்ளே வந்த சீடன் மெல்ல அவர் அருகில் சென்று வாய்பொத்தி நிற்க, ஸ்வாமிகள் அவரை புன்னகையுடன் ஏறிட்டார்.
""என்ன செய்தி மாதவா'' என்றார்.
""தஞ்சை அரண் மனையிலிருந்து அமைச்சர் வந்திருக்கி றார். அவசர செய்தி. மன்னரே தங்களிடம் கூறச்சொல்லி அவரை நேரிலேயே அனுப்பி யுள்ளார்.''
""அவரை உடனடி யாக அழைத்து வா'' என்றார். வணங்கிச் சென்ற மாதவன் கையுடன் அவரை அழைத்து வந்தான்.
""ஸ்வாமிகளுக்கு எனது பணிவான வணக்கங்கள்'' என்றபடி உள்ளே நுழைந்த மகாமந்திரி ராயரை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். ஸ்ரீராகவேந்திரர், அவருக்கு தனது திருக்கரங்களால் அட்சதையளிக்க, அதனை பவ்யமுடன் பெற்றுக்கொண்டு தனது தலையினில் பக்தியுடன் தரித்துக்கொண்டார்.
""மன்னர் நலமா?'' என்ற ஸ்வாமிகளின் வதனத்தில் புன்னகை பொலிவாய் மாறாதி ருந்தது. மௌனமாயிருந்த அமைச்சர் பிறகு...
""இல்லை ஐயனே. மன்னர் மனதளவில் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளார். சரியாக உண்பதுமில்லை. உறங்கியும் நாளாயிற்று. மக்கள் படும் இன்னலைக் கண்டு மன்னர் பெரிதும் வேதனையுறுகிறார்.''
""புரிகிறது. தமிழகம் நெருங்க நெருங்க எனது சஞ்சாரத்தின்போது தகவல்களை வழியில் கேள்வியுற்றேன். கருவூலம் என்னவாயிற்று?''
""தங்களுக்குத் தெரியாதது ஏது மில்லை. மன்னர் விஜயராகவநாயக் இயல்பிலேயே மென்மையானவர்.
மக்களின் துயரைத் துடைக்க இயலாத விதியின் பிடியில் தன்னால் விடுபட்டு வர இயலாத நிலையை எண்ணியெண்ணி அவர் வருந்துகிறார். பீஜப்பூர் சுல்தானும், மைசூர் மகாராஜா மற்றும் வேலூரை ஆண்டு வந்த அரசரும் ஒன்று சூழ்ந்து தொடுத்த போரில் நமது தஞ்சை அரசர் தோற்றுப் போனார். அதனால் வேறுவழியின்றி அவர்களுக்காக சமாதானம் செய்து கொண்டார். அதனால் வேறு மிகுந்த பொருட் செலவை அவர் சந்திக்க வேண்டியதாகி விட்டது. அதிலும் தஞ்சை மண்ணின் புராதன மும் கலைச்சின்னங்களும் சேதப்பட வாய்ப் புண்டு என்பதனாலேயே மன்னர் சமாதானம் செய்துகொண்டார். இதுபற்றி அறியாதோர் முதுகிற்குப்பின் பரிகசித்ததுண்டு. அவரின் உயர்ந்த நோக்கம் திரைபோடப்பட்டது. பஞ்சம் வந்து மக்களும் கால்நடைகளும் பட்டினியில் நடமாடுவதுதான் வேந்தரை நிலைகுலையச் செய்துவிட்டது. அரசு தானியக் கூடத்திலிருந்தும் தானியங்கள் மக்களுக்கு இப்போது விநியோகிக்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. அதுவும் சொற்ப காலமே தாங்கும்.
ஐயனே தாங்கள் தொலைதூர சஞ்சாரம் முடிந்து பல காலம் கழித்து வந்திருக்கிறீர்கள். தங்களுக்கு சரீர அசௌகரியம் கொடுக்க லாகாது என்ற எண்ணத்தில்தான் இருந்தார். இருப்பினும் மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு தங்களை அவரே வந்து நேரில் அழைத்ததாகக் கூறி தஞ்சைக்கு வரும்படிக்கு என்னை குடந்தைக்கு விரைந்தனுப்பினார்'' என தனது நீண்ட உரையை மந்திரி முடித்தார்.
""மன்னரின் உயர்ந்த நோக்கம் அவருக்கு புண்ணியம் சேர்க்கும். இந்த நல்ல நோக்கத் திற்கு என்னையும் நற்கருவியாக்கிய ஸ்ரீமன் நாராயணனுக்கு நன்றி சொல்லுங்கள். கவலை வேண்டாம். என் மூலராமன் தஞ்சை வந்து பஞ்சம் நீக்குவான். நாம் நாளையே புறப் படுவோம்'' என ஸ்வாமிகள் அருளினார்.
மந்திரி, ஸ்வாமிகளை சுமக்க தஞ்சையிலிருந்து கொண்டு வந்திருந்த பல்லக்கினை மறுத்து, தனது சீடர்களுடன் சேர்ந்தே தஞ்சை நோக்கி நடக்கலானார். அந்த திருநடை தரும் பெரும்விடை என்ற ஆழ்ந்த நம்பிக்கையினை மந்திரியும் பிரதானிகளும் உள்ளுள் வாங்கி பவ்யமாய் ஸ்வாமிகளைத் தொடர்ந்தனர்.
கிருதயுகம், த்ரேதாயுகம் கடந்து கலியுகம் என்று மூன்று யுகங்களில் பிரகலாதன், பாகாலீகர், வியாசராஜர் மற்றும் ஸ்ரீராக வேந்திரர் என நான்கு பிறவிகளில் முறையே நரசிம்மர், கிருஷ்ணர், ஆஞ்சனேயர், சரஸ்வதி தேவி, ராமர், ஹயக்ரீவர் என எண்ணற்ற தெய்வங்களின் நேரடி அனுக் கிரகங்களையும் ஆசிர்வாதத்தையும் பெற்று அளப்பரிய தெய்வீகச் சக்தி மேலோங்க வலம் வந்து கொண்டிருந்தார். பகவான் ஸ்ரீஹரி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியாக திரு அவதாரம் செய்தபோதும் தான் இறைரூபம் என்று எந்த சமயத்திலும் தனது சக்தியை வெளிப்படுத்தியதே இல்லை. மாறாக தான் மானிடன் என்ற அளவிலேயே சத்தியத்திற்கும் நேர்மைக்கும் உட்பட்டே நிகழ்வுகளைப் பூர்த்திசெய்து அவதாரத்தை நிறைவு செய்தார். நமது ராகவேந்திரரும் வீணே தனது சக்தியினை வெளிப்படுத்தியதேயில்லை. தனது அவதாரக்கடமையின் பொருட்டு மட்டுமே அவர் நிகழ்த்திய அற்புதங்கள், அதிசயங்கள் அவசியம் கருதி நிகழ்ந்தவை.
ஸ்வாமிகள் வழியெங்கும் கண்ட காட்சிகள் அவர் மனதை ரணமாக்கியது. வெடித்திருந்த வயல்களும், காய்ந்துபோன புற்களும், பச்சை பறிகொடுத்த பட்டுப்போன விருட்சங்களும் கண்டு உருகினார். ஒட்டிய வயிறு, குழிவிழுந்த கண்களுடன் பசி மயக்கத்தில் இருக்கும் ஜனங்கள் அவர் மனதை பாதித்தனர். அந்த பலவீனமான நிலை யிலும், ஸ்ரீராகவேந்திரரைக் கண்டவுடன் அவர்களின் கண்களில் ஜீவன் வந்தது. பாதை யெங்கும் விழுந்து வணங்கி வரவேற்றனர்.
சிறுகச்சிறுக சேர்ந்து ஸ்வாமிகளின் பின்னே நடந்தவர்கள் அரண்மனை சமீபமாக நின்று விட்டனர். ஸ்வாமிகளை மன்னர் வரவேற்றார்.
பூர்ண கும்பத்தை ஏற்றுக்கொண்டாலும் அது வெறும் சம்பிரதாயமாகவே அப்போது தென்பட்டது.
""ஸ்வாமிகள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாமே... நாளை காலை பூஜை முடிந்தபிறகு இங்குள்ள நிலவரம்...''
""நேரிலேயே கண்டுகொண்டேன். மக்கள் பசியுடன் போராடும்போது ஓய்வா?
இங்குள்ள பஞ்சமும், ஜனங்களின் பஞ்ச டைந்த கண்களும் கண்டபிறகு ஒரு நொடியும் வீணாகலாகாது. எனவே அரண்மனைக் களஞ்சியம் இருக்கும் இடத்திற்குச் சென்று நான் சில செய்ய வேண்டியுள்ளது. மன்னரே, நாம் அங்கு செல்லலாமல்லவா?''
""ஆஹா... பெரும்பாக்கியம்... ஸ்வாமிகளின் கருணைக்கு ஈடேது. வாருங்கள் செல்வோம்.''
தஞ்சையின் தானியக் களஞ்சியம் மிக பிரம்மாண்டமாயிருந்தது. அதை மூடி யிருந்த கதவுகளும் நாதாங்கிகளும் வலிமை யாக கம்பீரமாக இருந்தன. ஒரு கோட்டை யின் கதவு போன்று உயர்ந்திருந்த கதவு களை நான்கைந்து பேராக சேர்ந்து பிரயத் தனப்பட்டு திறந்தனர். உள்ளே உணவுக் கான தானியங்கள் பாதியளவு குறைந்திருந் தன; சரிந்திருந்தன. ஸ்வாமிகள் தனது தண்டத் தினை தோளில் தாங்கிய கோலத்திலேயே தனது இருகரம் குவித்து வணங்கினார். "தாயே... ஸ்ரீலக்ஷ்மி தாயே. எனக்கு எப்போதும் துணையிருப்பாய் என்ற நம்பிக்கையில் வணங்கி உன்னை வரவேற்கிறேன் அம்மா. செல்வத்திற்கு இணையான உணவுக்கும் உனது பெருமையுணர்ந்து தான்யலக்ஷ்மி என போற்றும்படிக்கு உன்னதமான என் தாயே, உன்னை வணங்குகிறேன். வேள்வித்தீயாய் இங்கு மக்கள் தங்கள் வயிற்றில் பசித்தீயை வளர்த்திருக்கின்றனர். நடக்கவும் இயலாத படிக்கு பரிபூரணமாக தங்களின் ஜீவசக்தியை இழந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் உயிர் ஸ்திரப்பட சகாயம் செய் தாயே' என மனதுள் உருக்கமாகப் பிரார்த்தித்தார். மெல்ல விழிதிறந்தவர் மன்னரை நோக்கினார். ""எனக்கு உடனடியாக உலோகத்த கட்டினை ஏற்பாடு செய்து தர இயலுமா'' என்றார் ஸ்வாமிகள்.
""எதற்கென்று தெரிந்துகொண்டால் அந்த வசதிக்கு...''
""ஒரு எந்திரம் வரையுமளவிற்குத் தேவை''
என்றார். உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு பெரும்தட்டினில் பட்டுத்துணியின் நடுவே கிடத்தப்பட்டு பவ்யமாய்க் கொடுக்கப் பட்டது.
ஸ்வாமிகள் கண்ணசைவை உணர்ந்த அவரது சீடன் ஓலைக்கட்டில் பொருத்திய எழுத்தாணியை ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்தார்.
மந்திரங்கள் மகாமகா சக்தி வாய்ந்தவை. பஞ்ஷாட்சரம் என்று ஐந்து எழுத்துள்ள மந்திரம் மற்றும் எட்டு எழுத்துள்ள அஷ்டாட் சரம் என்று எண்ணிக்கை அடிப்படையிலான மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. அதேபோன்று ஓரெழுத்து தாங்கிய மந்திரங்கள் மிகமிக சக்தி வாய்ந்தவை.
பீஜம் என்றால் விதை. அட்சரம் என்றால் எழுத்து. பீஜம் + அட்சரம் என்பது விதை என்ற எழுத்து என்று பொருள். ஓரெழுத்து என்பது சிறியதானாலும் உயரியது. ஆலம் விதை மிகச்சிறியது. அந்த ஒரு சிறு விதை எப்படி பிரம்மாண்ட ஆலமரத்தைத் தன்னிலிருந்து வெளிப்படுத்துகிறதோ அதுபோலவே பீஜாட்சர மந்திரத்தின் ஆற்றல் மகா பிரம்மாண்டமானது.
மற்ற மந்திரங்களைவிட உயர்வானது.
ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் கண்மூடி மூலராமரைப் பிரார்த்தித்தார். பிறகு தனது திருக்கரங்களால் பீஜாட்சர மந்திரத்தை அந்த தகட்டில் எழுதிப் பூஜித்தார். பிறகு தனது கரங்களாலேயே களஞ்சியத்தினுள் நிலையாய் வைத்தார். அந்த தானியக் கூடத்தினுள் மெல்ல ஒரு வெளிச்சம் கூடியது. பிறகு மெல்ல மெல்ல அந்த தானியங்கள் பெருகத் தொடங்கின. எப்படி தணலில் வைக்கப்பட்ட அமுதம் மெல்ல மெல்லப் பொங்கிப் பிரவகிக்குமோ அதே போன்று இங்கு தானியம் பிரவகிக்கத் தொடங்கிற்று. பெருகிப்பெருகி சரிந்தது. மன்னர் பிரம்மித்தார்.
""மன்னரே! உடனடியாக அரண்மனை வாயிலில் காத்திருக்கும் ஜனங்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் அள்ளி அள்ளி... போதும் என்று சொல்லும்படிக்குக் கொடுத்துக்கொண்டேயிருங்கள்.''
பிரம்மித்திருந்த மன்னர் உடனே அதனை செயல்படுத்தினார். மக்கள் சாரிசாரி யாக வந்து தானியத்தைப் பெறப்பெற, களஞ்சியத்தில் தானியம் பெருகிக்கொண்டே இருந்தது. மன்னருக்கு நன்றியுணர்விலும் ஆனந்தத்திலும் கண்ணீர் பெருகிக் கொண்டேயிருந்தது. அந்த பீஜாட்சரம் அந்த தானியக் களஞ்சியத்தை அட்சயப் பாத்திரமாகவே ஆக்கிவிட்டிருந்தது.
சாரிசாரியாக மக்கள் வந்து தானியங்களை மூட்டை கட்டிச் சுமந்தபடி மகிழ்வோடு சென்றனர். களஞ்சியத்திலிருந்து சற்றுத் தள்ளி கண்மூடி ஸ்ரீராயர் அமர்ந்திருந்தார்.
அவர் உதடுகள் லோக க்ஷேமத்திற்காக ஜபித்துக்கொண்டேயிருந்தது. மக்கள் சந்தோஷத்துடன் ஸ்வாமிகளை வணங்கி நகர்ந்து கொண்டேயிருந்தனர்.
மன்னரும் மாபெரும் மனநிறைவில் ஸ்வாமி களின் அருகே வாய் பொத்தி, எப்போது விழிமலர்வார் என ஆவலுடன் காத்துக் கொண்டேயிருந்தார்.