இரண்டாம் பாகம்

மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்

Advertisment

2

நிர்மலமான நீரோடைபோன்ற மனநிலை கொண்ட- உத்தமமான உயர்ந்த மனோபாவமுள்ள- எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஞானிகளால் மட்டுமே எந்தச் சூழ்நிலையையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தன்மையில் எளிதாகத் தங்களை இருத்திக்கொள்ள முடிகிறது.

சம்சார பந்தத்தில் கட்டுண்டு பிணைப்புடன் இருந்த வேங்கடநாதரை குரு சுதீந்திரர் பீடமேற்றுக்கொள்ளுமாறு கூறி, துறவறம் பூண வற்புறுத்தியும் அவர் இணங்க மறுத்ததால், காலத்தேவையின் பொருட்டும் தன் முதுமையின் பொருட்டும் அப்போது இளைய யதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே யாதவேந்திர தீர்த்தர். முறைப்படி பார்ப்பின் தனக்கும் மூத்தவரான யாதவேந்திரரின் வருகை கண்டு தயக்கம்கொள்ளாமல் அவரை வரவேற்கத் தயாரானார் ஸ்ரீராகவேந்திரர்.

Advertisment

உள்நுழைந்த யாதவேந்திரரை எழுந்திருந்து வரவேற்றார். ""வாருங்கள் யாதவேந்திரரே, வாருங்கள்'' என்றார். இருவரும் மரியாதை நிமித்தம் கைகளைப் பற்றிக்கொண்டனர்.

""சஞ்சாரம் நல்லபடி அமைந்ததா?'' என்று கேட்டார் ஸ்ரீராகவேந்திரர்.

""ஆம் ஸ்வாமிகளே...''

""மிக நெடிய சஞ்சாரமாக அமைத்துக் கொண்டீர்கள்...''

""ஆம். தொலைவே... வெகுதொலைவே என்று நீண்ட பயணமாக இருந்தாலும், பல இடங்களுக்குச் சென்றதும், பலமொழி பேசுபவர்களின் நடுவே உழன்றதும் நல்ல அனுபவமாக இருந்தது. வழியெங்கும் இருக்கும் ஷேத்திரங்கள், திருத்தலங்கள், ஜீவ நதியோரங்களில் தங்கிச் சென்றதும், பிற மாநிலத்து குருக்களை சந்தித்ததும், அவர்களுடன் பல விஷயங்களைப் பரிமாறிக்கொண்டதும் பெரும் பேறா கும். அனைத்திற்கும் நமது குருவின் நல்லாசியே காரணமாய்- ஜீவனாய் இருந்து வழிநடத்துவதாய் என் மனதின் அடிநாதம் சொல்லிக்கொண்டேயிருந்தது. இருப்பினும் குருவின் அந்திமத்தில் அவர் அருகில் இல்லாமல் போனது பெருத்த வருத்தமாய் இருக்கிறது. ஏனோ அந்த பாக்கியம் எனக் கில்லை. தகவல் தெரிந்துகொள்ளக்கூடிய தொலைவில் இல்லாததோ அல்லது நான் இருக்கும் இடத்தினைத் தெரிவிக்காமல் இருந்ததோ அல்லது இரு வெவ்வேறு திசைகளில் நம் சஞ்சாரம் இருந்ததால் தொடர்பின்மை ஏற்பட்டுவிட்டதோ... எப்படியோ நான் துரதிருஷ்டசாலி.''

நீண்ட பெருமூச்சொன்று அவரிடம் எழுந்தது. நெடிய பயணத்தினால் பெரிதும் களைத்திருந்தார்; இளைத்திருந்தார். தேகம் கருத்தும் இருந்தார். மழிக்கப்பட்ட தலையில் சரிந்திருந்த காவி விலகி, அந்த வஸ்திரம் வியர்வையில் சற்றே ஈரம்கண்டிருந்தது.

""தாங்கள் சஞ்சாரம் முடித்து எப்போது வந்தீர்கள்?'' என ராகவேந்திரரைப் பார்த்துக் கேட்டார் யாதவேந்திரர்.

""சில மணி நேரம்தான் ஆயிற்று. குருவின் பிருந்தாவனக் கிரியையை முடித்துக்கொண்டு, பயணம் தொடராமல் குடந்தை வந்துவிட்டேன். ஒருவேளை தங்களை சந்திக்க வேண்டிதான் நம்மோடு எப்போதும் சூட்சுமமாக இருக்கும் குரு சுதீந்திரர் இப்படி திருவுள்ளம் கொண்டிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. தாங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள். ஸ்நானம் செய்து சற்றே ஓய்வெடுத்துக்கொள்ளுங்களேன்'' என்றார் கனிவுடன்.

மாலை ஸ்ரீராகவேந்திரர் ஸ்ரீமடத்துப் பூஜைகளை முடித்துக்கொண்டு யாதவேந்திரரை சந்திக்கப் புறப்படலானார்.

அதற்குள் அவரே நேரில் வர, அவரை வரவேற்று உரிய ஆசனமளித்தார். களைப்பு தீர்ந்திருந்தது என்பது அவரின் முகத் தெளிவில் தெரிந்தாலும், நெற்றிச் சுருக்கம் ஏதோ எதிர்பார்ப்பைத் தெரிவித்தது.

""நான் தங்களிடம் முக்கியமான செய்தியைப் பகிரவேண்டும் ஸ்வாமிகளே'' என்றார் ராகவேந்திரர்.

""நானும் தங்களிடம் ஒரு கோரிக்கை சொல்லவேண்டி இருக்கிறது யதிகளே!'' என்றார் யாதவேந்திரர்.

""என்னவென்று தாங்களே முதலில் சொல்லிவிடுங்களேன்.''

""இல்லை யதிகளே... மத்வ சமஸ்தானத் தின் பீடாதிபதிகளான தாங்கள் அல்லவா சொல்லவேண்டும்? முதல் உரிமை அனைத் தும் தங்களுக்கே உரியது.''

""ஆஹா, நான் என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தேனோ, தாங்களே அதைப்பேச எடுத்துக்கொடுத்துவிட்டீர்கள். சரி ஸ்வாமிகளே, நான் நேரிடையாக விஷயத்திற்கு வருகிறேன். குரு சுதீந்திரர் பீடத்திற்குத் தலைமையேற்க முதலில் உங்களையல்லவா தேர்ந்தெடுத்தார்... ஆகவே...''

""ஆகவே... என்ன யதிகளே?''

""இனி நீங்கள் மடத்துப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்றார் ஸ்ரீராக வேந்திரர். அவர் முகத் தில் அமைதி தவழ்ந்தது.

ragavendra

யாதவேந்திரர் அதிர்ந்து எழுந்தே நின்றுவிட்டார்.

""யதிகளே... இது நான் எதிர்பாராதது. மேலும் இது எவ்வகையில் நியாயம்?''

""நமது குரு முதன்முதலில் தனக்கடுத்து பீடத்திற்குத் தங்களையல்லவா பட்டம் சூட்டினார்? தங்களுக்குத்தான் அதற்கான முழு உரிமை இருக்கிறது. எனவே தயவுசெய்து பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள்.''

""இது தங்களின் பெருந்தன்மையை மட்டுமல்ல; எதற்கும் எப்போதும் ஆசைப்படாத- பக்குவம் நிறைந்த- நிறைவான- எதையும் எப்போதும் துறக்கத்துணிந்த தூய சந்நியாசத்தைதான் எனக்கு உணர்த்துகிறது யதிகளே. ஆஹா... எப்பேற்பட்ட அற்புதமான ஜீவனை நான் தரிசிக்க ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் திருவுளம் கொண்டிருக்கிறார் என்பதையும், அவரின் தெளிவான தீர்க்க தரிசனத்தையும் உணரமுடிகிறது...''

""போதும் யாதவேந்திரரே. நீங்கள் சொல்வதை யார் ஏற்றுக்கொண்டாலும் என்னால் இயலாது. ஒரு குற்ற உணர்வுடனல்லவா நான் வலம்வரவேண்டும். அந்த அபவாதமே...''

""தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும் யதிகளே. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது முக்கியமான காலகட்டம். அது காலத்தின் கட்டாயம். நான் அவசரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அதுமட்டுமின்றி, குருவினது சொப்பனத்தில் ஸ்ரீமூலராமச்சந்திர மூர்த்தியே காட்சி தந்து, அவரின் திருவாசகத்தினாலேயே ஸ்ரீராகவேந்திரர் என்ற திருநாமத்தை சூட்டி அருளியுள்ளார். தங்களுக்கு அந்த கலைமகளே நேரில் வந்தல்லவா காட்சியளித்து பீடமேற்க அருளியுள்ளார்! ஸ்ரீஹயக்ரீவர் முதலான தெய்வங்களின் தெய்வீகக் காட்சியைப் பெற்ற பெரும்ஞானி தாங்கள் என்பதை இந்த உலகறியும். சகல தகுதிகளும் பொருந்திய தாங்கள் தயைகூர்ந்து இனி இதுபற்றிப் பேசலாகாது. முத்தாய்ப்பாக குருவின் இறுதிக்காலம்வரை அவருடன் இருந்து, அனைத்து கடமைகளையும் முன்னிருத்திச் செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள். எனவே இனி பொறுப்பைத் தாங்களே தொடர வேண்டும். ஆனால் என் சிறு வேண்டுகோளை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். இது எனது ஆத்மார்த்தமான ஆசையும்கூட..''

""சொல்லுங்கள் ஸ்வாமிகளே. நிச்சயம் நிறைவேறும்.''

""ஒருமுறை... ஒரேமுறை... எனது கையால் நான் ஒரு நாளேனும் மூலராமர் பூஜையை நிறைவாய்ச் செய்ய ஆசைப்படுகிறேன்.

அனுமதிப்பீர்களா?'' என்றவரின் பணிவு ஸ்ரீராகவேந்திரரை இளகச்செய்துவிட்டது.

""தங்களது உரிமை ஸ்வாமிகளே. நாளை தாங்கள் தங்கள் கரங்களால் பூஜை செய்து சிறப்பு செய்யுங்கள்.''

எதிர்பார்ப்புகளற்ற இரு யதிகளின் தன்னலமற்ற பேச்சையும், தலைமையை விட்டுக்கொடுக்கத் தயங்காத ஸ்ரீராகவேந்திர யதிகளின் பெருந்தன்மையைக் கண்டும் கேட்டும், அங்கிருந்த மடத்து நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் ஸ்ரீராகவேந்திரர்மீது மேலும் பக்தியும் மரியாதையும் பெருகியது.v அந்த பொழுது மிக அற்புதமான பொழுதாகும். ஒரு குருவானவர் சூழ்நிலையின் பொருட்டு, வெவ்வேறு காலகட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு யதிகள் ஒருசேர அன்று மக்களுக்கு தரிசனமளித்தனர். ஸ்ரீராகவேந்திரர் ஏற்பாட்டின்படி அன்றைய மூலராமர் பூஜையினை தனது கைகளால் தொட்டுப் பரவசத்துடன் பார்த்துப் பார்த்துச் செய்யலானார். "ஹே ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி... தங்களின் திருமேனி தொட்டு சமஸ்தான பூஜைசெய்ய பல ஆண்டு காத்திருப்பு இன்றல்லவா பூர்த்தியாகியது. மைதிலி மணாளா! தினமும் ஸ்ரீமடத்துப் பூஜை யினையும் மேனி குளிர நடக்கும் அபிஷேகத்தையும் ஏற்று, இந்த தேசமும் மக்களும் குளிர்ச்சியாகவும் நிறைவாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்க திருவருள் புரியுங்கள். எனது பூஜையினை ஏற்றுக்கொண்டமைக்கு மெத்த நன்றி இறைவா நன்றி.' பவித்ரமான அந்த சந்நியாசியின் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்யம் பெருகியது. கைகள் நடுங்கின. தட்டில் குவிக்கப்பட்டிருந்த பூக்குவியலை இரு கரங்களிலும் வாரி வாரி அள்ளி தெய்வத் திருமேனிகளில் அர்ச்சித்துக் கொண்டேயிருந்தார்.

சில நாட்கள் ஸ்ரீமடத்தினிலேயே தங்கியிருந்த யாதவேந்திரர், ராகவேந்திரரிடம் சொல்லிக்கொண்டு மறுபடியும் சஞ்சாரத் தைத் தொடர்ந்தார். ஒவ்வொரு இடம் நகரும்போதும் ஸ்ரீமடத்துக்கும் தகவல் சொல்லி நகர்ந்து நகர்ந்து தேசத்தில் ஒரு மூலைக்குப் பயணத்தைத் தொடர்ந்தார். கிருஷ்ணாநதி தீரத்திலுள்ள "முதுமலே' என்னும் இடத்தில் சிறிதுகாலம் தவமிருந்து, அங்கேயே பிருந்தாவனஸ் தரானார்.

ஸ்ரீராகவேந்திரர் தினசரி காலை ஜபதபங்கள் முடித்து, நித்ய கடமைகள் செய்தபிறகு, மதியம் ஸ்நானம், ஜெபம் தொடர்ந்து, ஆஸ்தான பூஜை செய்து , தொடர்ந்து பகவத் ஆவாகனம்,

தியானம், அர்க்ய பாத்தியம், பிறகு நைவேத்தியம் சமர்ப்பித்து மகா தீபாரதனை செய்வித்து புஷ்பங்கள் சமர்ப்பிப்பார். ஹஸ்தோதகம் சமர்ப்பித்து திக்விஜயராமர் மற்றும் வசுதேவர் மூர்த்திகளைக் காண்பித்துப் பூஜையினை முடிப்பார். பிறகு பிக்ஷை ஏற்று, பிறகு மாணவர் களுக்குப் பாடப் பிரவசனம் செய்வார். நேரம் தவறாமல் இவற்றைக் கடைப்பிடித்து வந்தார். சஞ்சார காலங்களில் இவற்றில் ஒருசில மட்டுமே விடுபடலாம். ஆங்காங்கே கூடும் மக்களிடையே ஸ்ரீராகவேந்திரர் பல்வேறு போதனைகளை, எளிமையாக புராண இதிகாச நிகழ்வுகளை மேற்கோள் காட்டி மனதில் படியும்படியாக நிகழ்த்துவார். தினசரி அயராது இருபது மணி நேரம் அவரின் பணி கண்துஞ்சாமல் நடைபெற்றது என்பது அவரது தூய துறவறத்தை நிரூபித்துக் காட்டியது. ஸ்ரீராகவேந்திரர் ஞானமே மொத்த உருவாகக் கொண்டு பெரும்ஞானியாக நகர்ந்துகொண்டிருந்தார்.

பகவத் நாமாவின் மகிமைகளை எடுத்துக்கூறி, ஸ்ரீமன் நாராயணனின் பக்தி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி தனது ஞானப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இவ்வாறு தனது யாத்திரை மார்க்கத்தில் மதுரை மாநகரை அடைந்தார். மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில்கொண்டிருக்கும் மதுரை இயல், இசை, நாடகம் மட்டுமின்றி முச்சங்கம் வளர்த்த திருவிளையாடல் தலம். இறைவனே நேரில் இறங்கி நக்கீரரையே சோதித்து நக்கீரரின் ஞான வைராக்கியத்தை உலகறியச்செய்த அந்த பாண்டியர் வளர்த்த ராஜ்யத்தை, அப்போது திருமலை நாயக்கர் ஆண்டுவந்த காலம். மகாபண்டிதரான அப்பைய தீட்சிதரின் பேரனான நீலகண்ட தீட்சிதர் மன்னர் திருமலை நாயக்கரின் முக்கிய மந்திரியாக இருந்தார்.

மன்னர் ஸ்ரீராக வேந்திரரை பூரண கும்ப மரியாதை யுடன் அரண்மனைக்கு எழுந்தருளச் செய்தார். மக்கள் பெருவெள்ளம் நடுவே ஸ்வாமிகள் தர்பாருக்குள் வரவேற்கப்பட்டு ஆசனத்தில் அமரவைக்கப்பட்டார். வழி பாட்டிற்கு ஏற்றாற்போன்று சைவம், வைணவம், மாத்வம் போன்ற மார்க்கங்களில் போட்டி எப்போதுமே உண்டென்பதனால், ராஜ்ய சபையில் நீலகண்ட தீட்சிதர் மெல்ல ஸ்வாமிகளை சீண்ட முயற்சித்தார்.

""மதுரை மாநகர் தெய்வீகத்திலும் கலைகளிலும் தொன்மையானது. எளியவருக்கு இரங்கும் பரமேஸ்வரன் பிரம்படி வாங்கியும், கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்தும், அடியவர்களுக்கு அடியாராய் விளங்கி, நேரில் வந்து தமிழின் தொன்மையை உலகிற்கே எடுத்துக்காட்டிய பெருமைமிகு தர்பாரில், மாற்று சமூகத்து பீடாதிபதியை வரவேற்று மேலும் மெருகேற்றிக் கொள்கிறது. வருக ஸ்வாமி ராகவேந்திரரே, வருக வருக... எப்போதுமே மதுரைக்கு சோதித்துப் பார்க்கும் தகுதியுண்டு. தாயாராய் இருந்து வந்தவரை போஷிக்கும்; தயாராய் வந்திருந்தால் பரீட்சித்தும் பார்க்கும்'' என்றவரின் பேச்சில் சீண்டல் இருந்தது. ஸ்ரீராகவேந்திரர் புன்முறுவல் பூத்தார். ""எனது பால்யம் மதுரையில்தான் வளர்ந்தது. எனவே தாயாராகத்தான் இத்திருநகரைப் பார்க்கிறேன். எப்போதும் உரைகல்லாக இருந்து என் போன்றோரை நிறைகல்லாக நிரூபித்து வாழ்த்தி வளர்க்கும் சங்கம் வளர்த்த மதுரைத் தமிழுக்கு எனது மரியாதையான வணக்கங்கள்'' என்றவுடன் சபை கரகோஷித்தது. நீலகண்ட தீட்சிதரின் சீண்டலுக்கு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி களின் நாகரிகமான தாக்குதல் நயமாயிருந்ததை திருமலை நாயக்கரும் ரசிக்கவே செய்தார்.

மெத்தப் படித்த வர்களுக்கு இயல்பாகவே இருக்கும் லேசான கர்வம் தீட்சிதருக்கும் இருந்தது. அதுவும் தமது மேதமையினை அரசர்முன் காண்பித்து தம்பட்டம் அடிப்பவர்களில் நீலகண்ட தீட்சிதரும் விதிவிலக்கல்ல. ஈசனை முன்னிருத்தியும், சைவமே சிறந்தது என பலப்பல சிந்தாந்தங்களை மேற்கோள்காட்டி வாதித்தபோதும், ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் மத்வ சித்தாந்தத்தை அடிப்படையாகக்கொண்டு மிகத்தெளிவாக வாதிட்டார். பதட்டமில்லாத தீர்க்கமான வாதங்களுக்கு ஒருகட்டத்தில் தீட்சிதரால் விளக்கமளிக்க இயலவில்லை. அடுத்து தொடரமுடியாமல் திணறித்தான் போனார். ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் இளநகை புரிந்தார். ""மிகச்சிறந்த அறிவார்ந்த நண்பருடன் அளவளாவியதாக இருந்தது நீலகண்ட தீட்சிதரே. வளர்க நினது தமிழ்த்தொண்டு. வாழ்க நினது தமிழ்ப்பற்று'' என்றார்.

""ஆஹா... எப்பேற்பட்ட வணக்கத்திற்குரிய பெருந்தன்மை... ஒரு மடத்து தலைமைப் பீடத்தின் யதிகளுக்கேயுரிய சகல லட்சணங்களில் பொறுமை, நயனங் களில் கருணை, பேச்சில் கண்ணியம், சமநோக்குத்தன்மை, வாதிப்பவர் மனது நோகாது மதித்துப் பாராட்டும் நற்பண்பு... இது இதுவரை இந்த சபை அறியாதது. சிறப் பான இந்த நிகழ்வு மதுரை தர்பாரின் ஒரு வரலாற்றுப் பதிவு. இந்த காலகட்டத்தில் என்னை உட்படுத்தியதாய் விதி செய்த பரமனுக்கு நன்றி சொல்வேன். வாழ்க மன்னர்.

வளர்க அவர் சீர்மிகு ஆட்சி. மாமன்னரே, ஒரு வேண்டுகோள்...'' என்றார் தீட்சிதர்.

""சொல்லுங்கள் தீட்சிதரே... இந்த அற்புதமான நிகழ்வுக்கு நானும் பெருமை கொள்கிறேன். என்ன சொல்ல வந்தீர்கள்?''

""மன்னரே, வந்திருந்து தர்பாரை சிறப் பித்த ஸ்ரீராகவேந்திரர் ஒரு அபரோஷித ஞானி. வாதத்தின்போது அவர் இயற்றிய கிரந்தமான "பாட்ட சங்கிரஹ' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு பேசினார். எனவே அந்த உயரிய நூலை கௌரவப்படுத்துவது நமது தலையாய கடமை.''

""ஆம்; மறுப்பதற்கில்லாத உயர்வான கருத்து. சரி அடுத்து...''

""நமது பட்டத்து யானையை அலங்கரித்து, ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரரின் "பாட்ட சங்கிரஹ' நூலை சகல மரியாதைகளுடன் அம்பாரியில் இருத்தி நகர்வலம் வரச்செய்து கௌரவிக்க வேண்டும்.''

""ஆஹா... உத்தமோத்தமருக்கே உரிய உயர்ந்த மரியாதையும் கற்றாரைக் கற்றாரே காமுறுவதும் நமது சபையில் நிகழ்ந்து விட்டது தீட்சிதரே... நன்று நன்று...''

அந்த பிரம்மாண்ட மிருகம் இடமும் வலமும் துதிக்கை அசைய அரண்மனை வாசல் அருகே நின்றிருந்தது. முதுகில் உயர்ந்ததோர் பட்டு போர்த்தப்பட்டு, தங்க சரிகை கொண்டு நெய்யப்பட்ட அந்த அங்கி யானையின் முழங்கால்வரை தொங்கி அழகு சேர்த்தது. அலங்கரிக்கப்பட்ட முத்தங்கி கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. இடையிடையே தங்கப்பூண்கள் பளபளக்க, அதன் அகன்ற முதுகில் தங்க அம்பாரியில் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் கிரந்தம் பூஜிக்கப்பட்டு மரியாதையுடன் ஏற்றி இருத்தப்பட்டது. பின் படைவீரர்கள் புடைசூழவும், சபை அலங்கரித்த பெருத்த ஞானியர் பின்தொடரவும் நகரை வலம்வந்த அந்த நிகழ்ச்சி நம் குருராயருக்கு கிடைத்த மாபெரும் ராஜமரியாதை. குரு ராகவேந்திரரின் புகழ் மேன்மேலும் உலகறிய இது பெரும் நிகழ்வாகப் பேசப்பட்டது.

(தொடரும்)