மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

இரண்டாம் பாகம்

5

Advertisment

மிகச்சிறந்த ஆச்சார்யர்கள் உலக நன்மையின் பொருட்டு தாங்கள் சார்ந்த இந்து மதத்தின் மிகச்சிறந்த கோட்பாடு களையும் தத்துவங்களையும் தங்கள் சஞ்சாரங்களின்போது ஆங்காங்கே தங்கியிருந்து, மக்களிடையே எடுத்தியம்புவதைக் குறிக்கோளாகவும் கடமையாகவும் கொண்டிருந்தனர். இதில் ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் இன்னும் சிறப்பாக மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். வாயுவேக- மனோவேகமாக ஸ்ரீராயரது புகழ் பரவியிருந்தது. அவர் விஜயம் செய்வதற்கு முன்பாகவே அங்கு ஏற்கெனவே அவரது மகிமைகள் பேசப்பட்டு, அவர் முக தரிசனம் காணவும், அருளுரைகளைக் கேட்கவும் மக்கள் ஆவலாய்க் கூடினர்.

""ஏதோ மாம்பழ ரசமாம். அதில் மூழ்கி இறந்துபோனதாம் குழந்தை. இவர் தண்ணீர் தெளித்து உயிர்ப்பித்தாராம். ஏதேனும் நம்பும்படியாக இருக்கிறதா?''

""இது பரவாயில்லை ஓய். பாம்பு கடித்து மண்ணில் புதைத்து சமாதி எழுப்பப்பட்ட குழந்தையைக்கூட மந்திரம் ஓதிப் பிழைக்க வைத்ததாகச் சொல்வது, கற்பனையாக மிகைப்படுத்திக் கூறுவதாக அல்லவா இருக்கிறது?''

Advertisment

ragavender

மகிமைகள் பேசுபவர் நடுவே மடமையாய்த் தூற்றுகின்ற ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்தது. ஆனால் காலம் அவர்களுக்கும் உரிய பதிலை இன்னொரு நிகழ்வில் கொடுத்துக் கொண்டேயிருந்தது. ஸ்ரீராயரின் புகழ் இதனால் சிறிதளவும் குறையாது வளர்ந்துகொண்டுதான் இருந்தது.

ஸ்வாமிகள் தனது பயணத்தில் சித்தல்துர்க், கதக், ஜுப்ளி கடந்து பண்டரிபுரம் சென்றடைந்தார். பண்டரிநாதரை மனதார தரிசித்தார். பல தாசானுதாசர்களும் மகான்களும் தரிசித்த பண்டரிநாதரை மெய்மறந்து தரிசித்தது அவருக்கு பெரும் சந்தோஷத்தையும் மனநிறைவையும் தந்தது. ஸ்வாமிகளின் வருகை, ஒற்றர்கள் மூலமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி போஸ்லேவுக்குத் தெரியவர, ஸ்ரீராகவேந்திரரை தரிசிக்கவும், தமது கொல்ஹாபூர் அரண்மனையில் அவரைத் தங்கியிருக்கச் செய்யவும் எண்ணம் கொண்டு, சந்நியாசிகளுக்கான- குறிப்பாக மாத்வ குருக்களின் அன்றாடத் தேவைகள் என்னவென்று தகவல் பெற்று, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆணையிட்டுவிட்டு, சத்ரபதி சிவாஜி பண்டரிபுரம் சென்று ஸ்வாமிகளை தரிசிக்க விரும்புவதாகத் தகவல் அனுப்பினார்.

அப்போதைய இந்திய துணைக்கண்டமே வீரசிவாஜியின் வரலாற்றைக் கேட்டு வியந்து நின்றது. அவரின் வீரம் உலகறிந்த ஒன்று. தன் சிறிய படையை, இன்னும் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, மறைந்திருந்து தாக்கும் கொரில்லா தாக்குதல் முறையில் போரிட்டு எதிரிகளைக் குலைநடுங்கச் செய்தவர். மிகப்பெரிய முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கும் தக்காண சுல்தான்களுக்கும் பெரும் சவாலாக இருந்தவர். எதிரிகள் இவரைக் கொல்வதற்கு பலமுறை முயன்று தோல்வியே கண்டனர். இந்தியாவைச் சுரண்ட வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேயர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்களின் கப்பல் படையை சிதறடித்து, கடல் மார்க்கமாகவும் தன் போர்த்திறமை யால் பலருக்கு சவாலாயிருந்த மராட்டிய சிவாஜியின் சாம்ராஜ்ய விரிவு, தமிழக வேலூர், ஆற்காடு கடந்து செஞ்சிவரை இருந்தது. அப்பேற்பட்ட மாவீரரான சிவாஜி மதங்களுக்கு இணக்கமானவர். பிற மதங்களை இழிவாகப் பேசியதில்லை. மத அடையாளங்களையோ மசூதியையோ இடித்ததில்லை. மாறாக அம்மதத்தினரையும் சமமாக நடத்தி, பல தர்காக்களுக்குச் சென்று தொழுகை செய்து, பல மசூதி களுக்குத் தேவையான நிலங்களை தானமாகக் கொடுத்து பலரும் மதிக்கும் பண்பாளராகத் திகழ்ந்தவர். வாளேந்தி மலைமீதிருந்து சரிவான பாதையில் வேகமாக குதிரைமீது பயணித்துப் போர் செய்யும் திறன் கொண்டவர். தன் கச்சிதமான போர்முறையால் முகலாய சாம்ராஜ்யாபதி ஔரங்கசீப்பையே நிலைகுலையச் செய்தவர். இந்து மதத்தின் அப்போதைய நம்பிக்கையான காவலராக மதிக்கப்பட்ட வீரசிவாஜி தன்னை தரிசிக்க வந்ததைக் கேள்வியுற்ற ஸ்வாமிகள் உடனே சம்மதித்தார்.

""ஜெய் அன்னை பவானி. வாழ்க மகாராஷ்ட்டிரம். வணங்குகிறேன் ஸ்வாமிஜி. தங்கள் புனித பாதம்பட்டு எமது தேசம் சுபிட்சமாகட்டும்'' என்று ஸ்ரீராகவேந்திரரை வணங்கினார் வீரசிவாஜி. அவருக்கு மந்த்ராட்சதையும் தீர்த்தப் பிரசாதமும் கொடுத்து வாழ்த்தினார் ஸ்வாமிகள்.

""வாருங்கள் சத்ரபதி அவர்களே. தங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.''

முறுக்கிய மீசை, அடர்ந்த தாடி, நெற்றியில் பிறை நிலா வடிவ திருச்சின்னம், இடுப்பில் வளைந்த உறுதியான போர் வாள், இடுப்பி லிருந்து பாதம்வரை பருத்தியிலான இறுக்கமான கால்சராய், அதன்மீது சரிகை வேலைப்பாடுடனான தோளிலிருந்து தொடைவரை இறங்கிய மேல்சட்டை... விரைப்பான குதிரை போன்று தன்னெதிரே நின்று வணங்கிய அவரை புன்னகையுடன் பார்த்தவர் மீண்டும் கரமுயர்த்தி வாழ்த்தினார்.

""ஸ்வாமிகளின் புன்னகைக்கு என்ன அர்த்தமென்று நான் அறியலாமா?''

""ஒரு சிறந்த மன்னருக்குரிய தெளிவான பார்வை உங்களுடையது. நன்று நன்று. உங்களுக்கு வெகுவிரைவில் தமிழகத்தில் ஒரு பெண் தெய்வத்தின் தரிசனம் கிட்டும்.''

""ஆஹா! உண்மையாகவா ஸ்வாமிஜீ?'' என்றார் மன்னர் சிவாஜி நெகிழ்வுடன்.

""இதில் புகழ்ச்சி சிறிதளவும் இல்லை.

நீங்கள் செய்த நற்பலன்களும் புண்ணியங் களும் மட்டுமின்றி, உங்களின் உன்னத குருவின் தன்னலமற்ற அண்மையாலும், உங்களின் நேர்மையான பக்தியாலுமே இந்த தரிசனம் வரமாய் அமையப்போகிறது. அன்னை பவானி இன்னொரு பெயரில் தங்களுக்கு காட்சி தருகையில் தாங்கள் திக்குமுக்காடித் தான் போவீர்கள்'' என்று இதழ்மலர சிரித்தார்.

சிலிர்ப்புடன் தலைவணங்கிய மன்னர் சிவாஜி, ""தங்களைப் போன்ற தன்னலமற்ற துறவிகளின் அன்பைப் பெற்றமைக்கு அன்னை பவானியின் அருளே காரணம். நன்றி ஸ்வாமிகளே. என்னுடைய சிறு வேண்டுகோளினை ஏற்று கொல்ஹாபூர் அரண்மனையில் தாங்கள் தங்கியிருந்து சிறப்புச் செய்யும்படி வேண்டுகிறேன். மேலும் நாளை எனது குருநாதர் சமர்த்த ராமதாசர் வருகின்ற நாளாகும். எனவே இரு ஸ்வாமிகளும் ஒருசேர இருந்து என்னையும் மக்களையும் வாழ்த்த வேண்டுகிறேன்'' என்றார் பணிவுடன்.

ஸ்வாமிகள் மனப்பூர்வமாக சம்மதிக்க, மன்னர் தனது அமைச்சரான நாரே பந்த் அனுமந்த்தை அழைத்து, சகல ஏற்பாடு களையும் கவனிக்கச் செய்து விடைபெற்றார்.

ஸ்ரீமூலராமர் பூஜையினை முடித்து, கூடியிருந்த பக்தர்களுக்கு மந்த்ராட்சதை கொடுத்து முடிக்கவும், ஸ்ரீசமர்த்த ராமதாசர் வந்து சேரவும் சரியாக இருந்தது. மலர்ச்சியுடன் வந்த சமர்த்த ராமதாசரைக் கண்ணுற்ற ஸ்ரீராகவேந்திரர் முகம்மலர்ந்து வரவேற்றார். இருவரும் பரஸ்பரம் வணங்கிக்கொள்ள, ""வயதில் இளையவனான என்னை தாங்கள் வாழ்த்தலாமே தவிர வணங்கலாமா?'' என்றார் ஸ்வாமிகள்.

""சூரியனைத்தான் வணங்கமுடியும். சுடரை வணங்கலாமா ஸ்வாமிகளே?'' என்றார் சமர்த்த ராமதாசர் பெரும் மரியாதையுடன். ""ஆஹா... நீங்கள் கண்ணாடியைப் பார்த்துப் பேசுகிறீர்கள் என்பதை இங்குள்ளோர் அனைவரும் அறிவர்'' என்று உயர்வாய்க் கூறினார் ஸ்ரீராயர்.

""உண்மைதான். நீங்கள்தான் என் எதிரே இருக்கும் கண்ணாடி'' என்றார் ராமதாசர் இன்னும் ஒருபடிமேலான சிலேடையுடன்.

""கற்றாரைக் கற்றாரே அறிவார் என்ப தனை இரு ஸ்வாமிகளும் எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்'' என்று இடைபுகுந்த சத்ரபதி சிவாஜி சூழ்நிலையினை நடுநிலை யாக்கி, அந்த திவ்ய தருணத்தினை மேலும் மெருகூட்டி நிலை கொணர்ந்தார்.

ragavenderநல்ல தீட்சண்யமான விழிகள். அதில் சுடர்விடும் அருள் பிரவாகம். இடக்கையில் தண்டம்; வலக்கையில் கமண்டலம். வெள்ளைத்துணியை லங்கோட்டா என்பது போன்ற முறையில், இடுப்பிலிருந்து தொடை யின் வழியாக பின்பக்கம் செருகப்பட்ட நேர்த்தியான கௌபீணமாக தரித்து, நிமிர்ந்த கோலத்திலிருந்த சமர்த்த ராமதாசரின் தேகம் கண்டவுடனேயே வணங்கும்வகையில் அமைந்திருந்தது. தண்ட, கமண்டல கைகளுடனேயே மூலராமரை வணங்கி, ஸ்ரீராயரிடம் தீர்த்தமும் மந்த்ராட்சதையும் பெற்றுக்கொண்டார்.

இரு துறவிகளின் நயனங்களும் யுக க்ஷேமத்திற்கான ரகசியத்தைப் பரிமாறிக் கொண்டன. பரஸ்பரம் தலையசைத்தும் கொண்டனர்.

""சரி. நீங்களாகவே முதலில் தெரியப் படுத்திவிடுங்கள்'' என்றார் ராமதாசர்.

""இல்லை. உங்களது சீடரிடம் நீங்கள் கூறுவதுதான் நன்று'' என்றார் ஸ்ரீராயர்.

நெற்றி சுருக்கிய சத்ரபதி, ""ஸ்வாமிகள் இருவரும் என்னைப் பற்றிதான் ஏதோ சொல்வதாகத் தோன்றுகிறது. என்னவென்றறிய லாமா?''

""சரி; நானே ஆரம்பிக்கிறேன். இவ்வுலகில் அதர்மங்களும் அநியாயங்களும் பெருகும்போது நான் அவதரிப்பேன் என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா போதித்திருக்கிறார். அவதாரம் நிகழாதபோது தர்மத்தைக் காக்கும் பொருட்டு யுகபுருஷரை நிலைநிறுத்துவார். அதன்படிக்கு நீவிர் இந்து மதத்தைக் காக்கும் நடுநிலையான- தைரிய வீரபுருஷர் என்பதனால், ஸ்ரீவிஷ்ணு தங்களை கலியுக தர்மம் காக்கும் கருவியாக்கியிருக்கிறார். எனவே நீங்கள்...''

""ஆஹா. ஸ்ரீகிருஷ்ணர் அவ்வாறாக என்னை வரித்திருப்பாரேயானால் நான் பாக்கியசாலிதான். நான் அன்னை பவானிக்கு என்னை அர்ப்பணித்துக்கொண்டவன். இருப்பினும் கிருஷ்ண பரமாத்மா என்பால் கொண்ட வாத்சல்யத்திற்கு தலைவணங்கி, நான் இந்து மதத்தினை காப்பேன் என உறுதி கூறுகின்றேன்'' என்றவர் முழங்காலிட்டு இருவரையும் வணங்க, "ஆயுஷ்மான் பவ' என இரண்டு குருக்களும் சந்துஷ்டியுடன் ஒருசேர வாழ்த்தினர்.

சத்ரபதியின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அவரின் பரிசுகளையும் நிவந்தங்களையும் ஸ்ரீராயர் ஏற்றுக்கொண்டார். பின் ஓரிரு நாட்களே அங்கு தங்கி அருளுரை செய்து, தனது பயணத்தைத் திரும்பவும் ஆரம்பித்து பீஜப்பூர் நோக்கிச்சென்றார்.

அங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த இஸ்லாமிய மாமன்னர், தன் ஆட்சியின்கீழ் இயங்கும் சாவனூர் பகுதி குறுநில மன்னரது இறந்த மகனை உயிர்பெறச் செய்த ராகவேந்திர ஸ்வாமிகளின் மகிமை களை மட்டுமின்றி, அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் கேள்வியுற்றதனால், அவர் தனது சாம்ராஜ்ய எல்லைக்குள் பிரவேசித்தது கேள்வியுற்று விலையுயர்ந்த ஆடைகளுடன், நவமணிகள் பதிக்கப்பட்ட பல்லக்கினை மேலும் அழகுற அலங்கரித்து, இந்து முறைப்படியே கோவில் குருக்கள்மூலம் பூர்ண கும்ப மரியாதையுடன் ஸ்வாமிகளை எதிர் நோக்கியிருந்தார்.

"மதம், இனம், இருப்பவன்- இல்லாதவன் என எந்தப் பாகுபாடுமின்றி, அனைவரையும் சமமாக பாவிக்கும்- உலக நன்மையை மட்டுமே மனதில் கொண்டிருக்கும் ஒரு துறவி தமிழகத்திலிருந்து இப்போது நமது எல்லைக்குள் பிரவேசித்திருக்கிறார். அவரைக் கண்ணுற்று ஆசிபெறுவது மட்டுமல்லாமல், அவரின் அறிவுரைகளைக்கேட்டு மனம் தெளிந்தவர்களும் குறைகள் நீங்கப் பெற்றவர்களும் அநேகம் அநேகம். வாருங்கள்... முக்கியஸ்தர்களோடு நாமும் அவரை வரவேற்போம்' என்று ஒவ்வொரு பகுதியிலுள்ள மக்களும் அவரை எதிர்நோக்கிக் காத்திருப்பது எங்கும் வழக்கமாக இருந்தது.

தொலைவே ஸ்ரீராயரது வருகையைக் கண்டு மக்கள் தேகம் நிமிர்ந்து நுனிக்கால்களால் எட்டி எட்டிப் பார்த்து, "ஸ்வாமிகள் வந்துவிட்டார்... வந்துவிட்டார் ஸ்ரீராகவேந்திரர் வாழ்க வாழ்க' என்று தொடர் கோஷம் எழுப்பவும், ஸ்ரீராகவேந்திரர் தமது சீடர்களுடன் வந்து சேரவும் சரியாக இருந்தது. கூடியிருந்தோர் மலர்களை உயரத்தூக்கித் தூவி வரவேற்றனர். மேளதாளம் முழங்க, பூர்ணகும்பம் கொடுக்கப்பட, மார்பில் தண்டம் சாய்த்துக் கொண்டு தனது திருக்கரங்களால் ஆசிர்வதித்து ஏற்றுக்கொண்டார்.

சபா மண்டபத்தில் ஸ்ரீராயர் கொலு வீற்றிருந்தார். பீஜப்பூர் சுல்தான் இரண்டாம் ஆதிர்ஷா பலர் முன்னிலையில் மண்டியிட்டு ஸ்வாமிகளிடம் தன் மத வழக்கப்படி ஆசி பெற்றுக்கொண்டார். தனது குளிர்ந்த விழிகளால் சுற்றியிருந்தோரை கருணையோடு நோக்கிய ஸ்வாமிகள், புன்னகையுடன் பேசலானார்.

""மகா ஜனங்களே! நான் உங்களது ஊர் எல்லையில் புகும்முன்பாகவே ஊரின் செழுமையைக் கண்ணுற்றேன். ஒரு தேசத்தின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அதன் பசுமையான பரந்த வயல்களே சான்று. மேய்ச்சல் பூமி முழுக்க பசுக்கூட்டங் கள். அவை நடக்கையில் எழும்புகின்ற பாதத்தூளிகள் சூரிய வெளிச்சத்தை மறைக்கும் அளவுக்கு பெரும் மந்தைகள் பலவற்றைக் கண்டேன். ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் கால்நடைகளும் விவசாயமுமே பெரும்பங்கு வகிக்கின்றன. நீர்நிலைகள் நிரம்பித் தளும்புகின்றன- இந்த மக்களின் மனதைப்போல. ஒரு நிறைவான பொற்காலம் இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதன்மூலம் உங்கள் மன்னர் நிறைவான ஆட்சி செய்கிறார் என்பது பிரதானமாகத் தெரிகிறது. வாழ்க மன்னர். வளர்க அவரது நல்லாட்சி'' எனக்கூறி, மேலும் பல நல்லுரைகளை நிகழ்த்தி நிறைவு செய்து, அந்த இஸ்லாமிய மன்னர் ஏதோ கேட்க நினைப்பதும் பிறகு தயங்குவதும் கண்டு ஸ்வாமிகள் புன்முறுவல் பூத்தார்.

""தாங்கள் ஏதோ தயங்குவது போலுள்ளதே...''

""ஆம் ஸ்வாமிகளே. எங்கள் மத சம்பிரதாயப்படி பெரியோர்களைக் கண்டால் பாதம் தொடுவது அல்லது ஆரத்தழுவுவது என்றவாறு பரஸ்பரம் மரியாதையைப் பரிமாறிக்கொள்வது மரபு. பிறகு பழங்கள், உடைகள், உயர்ந்த ஆபரணங்கள் சமர்ப்பிப்பது என்பதுதான் நடக்கும்.''

""சரி... அதனால் என்ன குழப்பம் உங்களுக்கு?''

""தங்களைப்போன்ற துறவிகளை சந்திக்கும்போது மட்டும் இந்து மத சம்பிரதாயப்படி ஒரு சொம்பில் நீர் நிறைத்து, அதன் மேல்பாகத்தை மாமர இலை, உரிக்காத தேங்காயினால் மூடி, பூச்சரம் கொண்டும், துணி கொண்டும் அலங்காரம் செய்து, உங்கள் கையில் இங்குள்ள கோவில் குருக்கள் கொடுப்பதைப் பார்க்க மிக நேர்த்தியாக இருந்தாலும், எதற்கான ஏற்பாடு இது என்ற அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. ஸ்வாமிகள் மன்னிக்க வேண்டும். இதுபற்றித் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்'' என்றார்.

ஸ்வாமிகள் புன்னகைத்தார். கரம் தூக்கி ஆசிர்வதித்தார். ""நல்லது நவாப் அவர்களே. நீங்கள் கேட்டது மிகத்தெளிவான கேள்வி. பார்க்கின்ற காட்சிகளின் நெருடலான விஷயங்களை அல்லது புரிய இயலா விஷயங்களைக் கண்டு வெறுமனே கடந்துசெல்லாமல், தெளிவு வேண்டி நீங்கள் கொள்ளும் ஆவல் வரவேற்க வேண்டிய ஒன்று. இதற்கான விளக்கம் மிக நெடியது. எமது இந்துமதப் புராண காலங்களின் நிகழ்வுகளைக் கூறினால்தான் நீங்கள் தெளிவு பெறமுடியும். இதில் தங்களுக்கு சம்மதமா?''

""ஆஹா. பெரும் பாக்கியமல்லவா இது எனக்கு! சொல்லுங்கள் ஸ்வாமி.''

""நல்லது. இந்த உலகம் தோன்றிய பிறகு முதலில் உருவானது நீர். நாரத முனிவர் தோன்றியதற்குப் பின்னரே இவ்வுலகில் நீர் தோன்றிற்று. "நாரா' என்றால் நீர் என்ற பொருளில், நாரதர் என்றழைக்கப்பட்டவர். பிரம்ம ஞானி. புண்ணியத்தின் மொத்த உருவே நாரதர். தட்சப் பிரஜாபதியானவர் சிருஷ்டி இடையறாது நடைபெறும் பொருட்டு ஆயிரம் உருவங்களைப் படைத்தார். அவர்கள் அனைவரும் சிந்துநதி தீரம் அருகே சிருஷ்டி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அவ்விடம் சென்ற நாரதர் பிரம்மஞானம் உபதேசித்து மோட்சத்துக்கு வழிகாண்பித்துவிட படைப்பே நின்று போனது.

மீண்டும் தட்சப் பிரஜாபதி பத்தாயிரம் பேரை உருவாக்கிப் பணிக்க, அவர்களையும் நாரதர் பிரம்மஞானம் உபதேசித்து மோட்சத்துக்கு அனுப்பிவிட சிருஷ்டி தடைப்பட்டது. சினம் கொண்ட பிரஜா பதி, "ஓரிடத்தில் நிற்காமல் நீ எங்கெங்கும் சஞ்சரிக்கக்கடவது' என நாரதரை சபிக்க அவர் சஞ்சாரியானார். ஆம்; நாரத முனி ஒரு ஐந்து நிமிடம் எவரிடம் நின்றாலும் அவருக்கு மோட்சம் நிச்சயம் என்பது திண்ணம். அப்பேற்பட்ட நாரதரிடம் பிரகலாதர் பத்தாயிரம் வருடங்கள் பாடம் கேட்டதாகச் சொல்கிறது புராணம். என்றால் பிரகலாதரின் புண்ணிய அளவு அளப்பரியது. நாரதம் என்றால் தீர்த்தம் என்றும் அர்த்தமாகிறது. எமது நாராயணன் தீர்த்தத்திலேயே சயனித்திருப்பன் என்பதால் தீர்த்தம் புனிதமானது.

அதனாலேயே க்ஷேத்திரங் கள் மற்றும் நதிகளிலுள்ள நீரை முதலில் சிரசில் புரோக்ஷணம் செய்த (தெளித்த) பிறகே கால்களில் நனைத்தல் வேண்டும். அப்பேற்பட்ட நீரை ஒரு கலசத்தில் இட்டு, அதில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் ஆவாகனம் செய்து, எதிரில் இருப்பவரை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்துப் பூஜிப்பதே எமது சிறப்பு. அந்தப் புனித கலசத்தைப் பெரியோர் கைகளில் கொடுத்து அழைப் பதே பூரண கும்பமாகும். ஒரு துளியானாலும் தீர்த்தமே. சிறு தூறலானாலும் அது மழையே. தீர்த்தத்தை அபஹாஸ்யம் (ஏளனம்) செய்யக்கூடாது என்று வேதமே கூறுகின்றது! அப்படி சிறப்பான தீர்த்தம் நிறைந்த கலசமே பூரண கும்பம். இதில் இவ்வளவு உயர்வான சூட்சுமங்கள் இருக்கின்றன'' என்று நீண்ட உரையாற்றி, அங்குள்ள அனைவரும் செவிமடுக்கும்படி செய்தார்.

""ஆஹா! என்ன தெளிவான விளக்கம். படைப்பிலிருந்து ஆரம்பித்து என்னைப் போன்ற எளியவனுக்கும் விளங்கும் வண்ணம் விளக்கமளித்த தங்கள் ஞானம் கண்டு வியப்பாய் இருக்கிறது. நான் தங்களின் சிறப்புகளையும் அற்புதங்களையும் கேள்விப்பட்டிருந்தாலும், நேரில் இன்று தங்களின் அருளுரையினைக் கேட்கும்போதுதான் தெரிகின்றது தாங்கள் அளவிடவே முடியாதவர் என்பது. நான் ஏதோ புண்ணியம் செய்துள்ளேன். அதனாலேயே தங்களுடன் உரையாடும் பெரும்பேறு கிடைத்துள்ளது. அல்லாவுக்கு நன்றி. இறைத் தூதருக்கு நிகரான தங்களுக்கு நன்றி.''

""எனது சந்யாசக் கடமையைத்தான் நான் செய்தேன். துறவியானவன் ஓரிடத்திலேயே நிலையாகத் தங்காது, பல்வேறு ஊர்களுக்கும் பட்டினங்களுக்கும் சஞ்சாரம் செய்து, யுக தர்மத்தை உபதேசித்து தர்ம நியாயங்களை எடுத்துரைப்பதும், தத்தமது மதக்கோட்பாட்டின் தனித்தன்மையைக் காத்து, தேவைப்படின் தர்க்கம் செய்தும் அவற்றைப் பேணி வளர்ப்பதுவே சீரிய கடமையாகும். இப்போதும் நான் என் கடமையைத்தான் செய்தேன் நவாப் அவர்களே.''

""தங்களைப் போன்ற நெறி வழுவாத துறவிகளைக் கண்ணுற்றும் ஆசி பெறவுமே அல்லா என்னைத் தங்களிடம் அனுப்பினான் போலும். தங்களுக்கு நான் எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. தங்கள் மதத்தவர்களுக்கு மட்டுமல்லாது, எல்லா மார்க்கத்தவர்களையும் ஒருங்கிணைத்து நல்வழிப்படுத்தும் நீங்கள் எங்களுக்கெல்லாம் ஞானகுருவானவர். தங்களுக்கு மரியாதை செய்யும்விதமாக இந்த வெண்கொற்றக் குடையை அளித்து, இந்த ஜகத்திற்கே ஒளி விளக்காய் விளங்கும் தங்களை ஜகத்குரு ராகவேந்திரர் என்று பட்டம் சூட்டி அழைப்பதில் பெருமை கொள்கிறோம்'' என்று நவாப் பேசி முடித்தவுடனேயே மக்கள் ஒன்றிணைந்து, "ஜகத்குரு ஸ்ரீராகவேந்திரருக்கு ஜே... ஜே... ஜே... ஜகத்குரு ஸ்ரீராகவேந்திரருக்கு ஜே... ஜே... ஜே...' என்ற கோஷம் அலையாய் எழும்புவதும் பின் அடங்குவதுமாக வெகுநேரம் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஸ்ரீராகவேந்திரருக்கு அநேக பரிசுகளும் நிவந்தங்களும் மன்னர் கொடுத்து கௌரவப்படுத்தியதை பக்த கோடிகளும் சீடர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தனது சஞ்சாரப் பயணத்தை ஸ்வாமிகள் தொடர்ந்துகொண்டே யிருந்தார். தேவைப்படும் இடங்களில் மட்டுமே அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடித்தாலும், அடுத்து தனது பயணத்தைத் தொடர்ந்து, ஓய்வைக் குறைத்து உபதேசங்களை நீடித்து மக்களை நன்கு நெறிப்படுத்திக்கொண்டே இருந்தார். அப்படி இருக்கையில் பயணத்தில் ஒரு நாள் அனுமன் சந்நிதியில் தங்க வேண்டி இருந்தது. அந்த ஊரின் பெயர் மான்வி.

அந்த அனுமன் ஆலயம் பெரிதுமில்லாது சிறிதுமில்லாது நடுத்தரமாக இருந்தது. ஆனால் சுத்தமாக இருந்தது. கோவிலின் சுற்றுப்பாதையில் மண்டபம் அமைக்கப்பட்டு தீவட்டி சொருகும் வசதியுடன் வெளிச்சத்திற்கு வழிசெய்யப்பட்டிருந்ததன்மூலம் அங்கு பெரும்பாலும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

நமது ஸ்வாமிகள் அன்று அங்கு தங்க திருவுளம் கொண்டார்.

(தொடரும்)