ராதாஜெயந்தி 6-9-2019

கிருஷ்ண ஜெயந்தி- கோகுலாஷ்டமி தேய்பிறையில் என்றால், அடுத்த வளர்பிறை அஷ்டமியை ராதாஷ்டமி- ராதாஜெயந்தி என்று வடநாட்டில் கொண்டாடுவார்கள். முருகன் தமிழ்க்கடவுள். தமிழ்நாட்டில்தான் அதிக கோவில்கள் உள்ளன. அதிக துதிகள் உள்ளன. முருகன் கோவில் கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிலும் மிகக் குறைவே. அதேபோன்று கோதா தேவியையும் (ஆண்டாள்) தமிழ் நாட்டுப் பெருமாள் கோவில்களில் தான் காணலாம். ஆந்திரம், கர்நாட காவில் காண்பது துர்லபமே; வடநாட்டில் காணலாகாது.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேசங்கள் தமிழ், கேரள நாட்டில்தான் அதிகம்; 95 உள்ளன. அத்தலங்களிலோ, நாலாயிர திவ்யப் பிரபந்தங்களிலோ ராதாவைக் காண முடியாது. ஏன், பல விஷ்ணுபரமான புராணங் களில்கூட ராதையைக் காணமுடியாது. ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண லீலைகளை விரிவாகக் கூறுவதற்காக ஏற்பட்டது. தசமஸ் கந்தம் முழுவதும் கிருஷ்ண லீலைகளே. ராஸ லீலையும் அதனில் உள்ளது. "ஸ்ரீமத் பாகவதமே ராதாகிருஷ்ண ஸ்வரூபம்' என்பர். அதனிலும் ராதா என்ற பெயர்கூட காணவியலாது. ராஸ லீலையின் பிரதான தேவி ராதா. அவளை "ராஸேஸ்வரி' என்பர்.

தென் துவாரகை எனப்படும் மன்னார் குடி ராஜகோபால சுவாமி கோவிலில் கண்ணனுடன் மாடு, கன்று, ருக்மிணி, சத்யபாமாவைக் காணலாம். ராதாவைக் காணமுடியாது. மதுரை மதனகோபால சுவாமி கோவிலில், தஞ்சை வேணுகோபால சுவாமி கோவிலில் ருக்மிணி, சத்யபாமாவைக் காணலாம்; ராதாவைக் காணமுடியாது.

Advertisment

அப்படியாயின் ராதா என்பவள் யார்? வடநாட்டில் எந்த கிருஷ்ணர் கோவிலுக்குப் போனாலும் கண்ணனுடன் ராதாவைத்தான் காணலாம். ருக்மிணி, சத்யபாமாவைக் காண்பதுகூட துர்லபம்.

கண்ணனின் லீலாஸ்தானமான கோவர்தன், நந்தகோவ் அருகேயுள்ள "பர்ஸானா' என்னும் சிறிய மலையில், விருஷ பானு- கீர்த்திதா தம்பதியருக்கு உதித்தவளே ராதா. அனுஷ (அனுராதா) நட்சத்திரம், வளர்பிறை அஷ்டமியில், நண்பகலில் பிறந் தாள்.

ராதாகிருஷ்ணன், ராதாமாதவன், ராதா ரமணன், ராதாகாந்தன் என்றெல்லாம் ராதைவுடன் சேர்த்து கண்ணன் நாமம் கூறுகிறோம். பஜனை சம்பிரதாயத்தில் ராதா கல்யாணமும் செய்வார்கள். ஆயின் ராதா யார்?

Advertisment

சிவனை "சக்தியில்லையேல் சவம்', "சக்தியில்லேன்னா சிவனேன்னு கிட' என்பார்கள். அதேபோல் கண்ணனை ஆட் கொண்ட- உட்கொண்ட ஹ்லாதினி சக்தி தேவியே ராதா.

கண்ணன் சந்தனம் என்றால் அதன் மனம், குளிர்ச்சி ராதை. கண்ணன் மல்லிகை என்றால் அதன் வாசனை ராதா. "ஈருடல் ஓருயிர்' என்பதே ராதா- கிருஷ்ண ஐக்கிய தத்துவம்.

வடநாட்டில் கண்ணன்கூட இரண்டாம் பட்சமே. சர்வம் ராதா மயம். சிவ பக்தர்கள் "சிவசிவ' என்பதுபோல, முருக பக்தர்கள் "முருகா குஹா' என்பது போல, வடநாட்டில் கிருஷ்ண பக்தர்கள் "ராதா ராதே' என்பர்.

வைகாசி விசாகப் பௌர்ணமியில் (கந்தன் உதித்த அன்றே) ராதா- கிருஷ்ண திருமணம் பிருந்தாவனத்தில் நடந்தது. வள்ளி பதம் பணிந்தான் கந்தன்; ராதை பதம் பணிந்தான் கண்ணன்!

ஸ்ரீமத் பாகவதம் ராதாவைப் பற்றிக் கூறாவிட்டாலும் "தேவி பாகவதம்' கூறும்! பல புராணங்கள் கூறாவிட்டாலும், பிரம்ம வைவர்த்தம், பிரம்மாண்ட புராணம், பத்மபுராணம், ஸ்காந்தம், கர்கசம்ஹிதை (கிருஷ்ணனுக்கு ரஹஸ்யமாய் பெயர் வைத்த கம்ச புரோகிதர் இயற்றியது) ராதையைப் பற்றிக் கூறும்.

பிரம்மாண்ட புராணம் "ஏகம் ஜ்யோதி: த்விதா பின்னம் ராதா மாதவ ரூபகம்' என்கிறது. ஒரே பிரம்மம், ஜ்யோதி ராதா- மாதவன் என்ற இருவுருவமாகப் பிரிந்தது என்று பொருள்.

பத்ம புராணம்-

"ரஸோய: பரமானந்த ஏக ஏவ த்வதா ஸதா

ஸ்ரீராதாக்ருஷ்ண ரூபாப்யாம்

தஸ்யை தஸ்மை நமோ நம:'

என்று போற்றுகிறது.

பரப்பிரம்மம் பூரண நிர்குணமாயி னும் ஜீவர்களை உய்விக்கும் பொருட்டு சகுண சொரூபம் எடுக்கிறது. அந்த சொரூபமானது ராதா- கிருஷ்ணன் என இரு உருவங்களாகப் பிரிகிறது. அர்த்தநாரி தத்துவம் போல பிரம்மத்தின் வலப்புறத்திலிருந்து கிருஷ்ண னாகவும், இடப்புறத்திலிருந்து ராதையாகவும் பிரிகி றது. ஆக இவ்விருவரும் ஒருவரே. எனவே, ராதா- கிருஷ்ண வடிவமானது அத்வைத தத்துவமே.

ஸ்காந்த புராண வைஷ்ணவ காண்டம்-

"ஆத்மா ராமஸ்ய க்ருஷ்ணஸ்ய ஆத்மா அஸ்தி ராதிகா

ஸ்ரீக்ருஷ்ணஸ்ய மனஸ் சந்த்ரோ ராதாஸ்ய ப்ரபயான்வித:'

என்கிறது. ஆத்மாவில் ரமிக்கும் கிருஷ்ணனின் நிரந்தர ஆத்மா ராதையே! கண்ணன் மனதின் சந்திரகாந்தி ராதையே! ரமிக்கும் மனதும் ராதையே! எந்த வஸ்துவில் ரமிக்கிறதோ, அந்த ஆத்மவஸ்துவும் ராதையே! ஆக, இதுவே அத்வைத தத்துவம்! அருணகிரியார் கந்தர் அனுபூதியில் "பேசா அனுபூதி' என்பார். அந்த ரசமய- ரகசிய- விவரிக்க முடியாத அனுபவமே அத்வைத பரம தத்துவம்.

ராதா- ராதிகா என இரு பெயர்கள் கேட்கிறோம்.

உபநிஷதம் கூறும்-

"க்ருஷ்ணேன ஆராத்யதே இதி ராதா

க்ருஷ்ணம் ஸமாராதயதி யாஸா ராதிகா.'

கண்ணன் வணங்கும் தேவி ராதா; கண்ணனை வணங்கும் தேவி ராதிகா. இரண்டு நிலையுள்ள ஒரே உன்னத பிரேம உருவம்!

சிவ என்பது சிவனுக்குப் பெயர். சிவா என்பது பார்வதி தேவிக்குப் பெயர்.

அதுபோல் ஸ்யாம் என்பது கண்ணன் பெயர்; ஸ்யாமா என்பது ராதாவின் பெயர். இது வடநாட்டில் மிகப்பிரசித்தம்.

பொதுவாக நவராத்திரியில் நாம் பராசக்தியை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று வடிவங்களில் தியானிப்போம். தேவி பாகவதம்-

"கணேச ஜனனி துர்கா ராதா லக்ஷ்மி சரஸ்வதி

ஸாவித்ரி ச ஸ்ருஷ்டி இதௌ ப்ரக்ருதி பஞ்சதா ஸ்ம்ருதா'

kkk

என்கிறது. துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியுடன், சாவித்ரி, ராதையையும் சேர்த்து பஞ்சபிரகிருதிகள் என்று கூறுகிறது. தேவி பாகவதம் (9-8-101-106) மேலும் கூறும்-

"திவ்யம் வர்ஷ ஸஹஸ்ரம்

ச தப: தத்வர ஹிமாசலே

துர்கா ச ராதாபதம் த்யாத்வா

ஸர்வ பூஜ்யா பபூஹ.'

துர்க்கையானவள் ஆயிரம் ஆண்டுகள் இமாலயத்தில் ராதையைப் பூஜித்து, மற்றவர்களால் பூஜிக்கத் தக்கவளானாள்.

"ஸரஸ்வதி தப ஸ்தத்வா

பர்வதே கந்த மாதனே

லக்ஷவர்ஷம் ச திவ்யம்

ஸர்வவந்த்யா பபூவ ஸா.'

சரஸ்வதியானவள் கந்தமாதன பர்வதத் தில் ஒரு லட்சம் ஆண்டுகள் ராதையைக் குறித்துத் தவம்செய்து மற்றவர்களால் வணங்கப்படுபவள் ஆனாள்.

"லக்ஷ்மி யுக சதம் திவ்யம்

தப: தத்வா ச புஷ்கரே

ஸர்வ ஸம்பத் ப்ரதாத்ரி ச

ஜாதா தேவி நிஷேணவித.'

லட்சுமிதேவி நூறு யுகங்கள் புஷ்கரத்தில் ராதைமீது தவம்செய்து எல்லாவித சம்பத்து களும் அடைவிக்கும் பலன் பெற்றாள்.

"சத மன்வந்தரம் தப்தம் சங்கரேண புராவிபோ

சத மன்வந்தரம் வேதம் ப்ரம்மா சக்தி ஜஜாவஹ

சத மன்வந்தரம் விஷ்ணு: தப்த்வா பாதா பபூவ ஹ.'

பிரம்மா 7,100 மகாயுகங்கள் ராதாவை ஜெபித்து வேதம், சிருஷ்டித் தொழில் சக்தியும், விஷ்ணு காக்கும் தொழில் சக்தியும், சிவன் அழிக்கும் சக்தியும் பெற்றார்களாம். ஆயின் ராதா மகிமை எத்தகையது!

துர்க்கா சப்தசதி (தேவி மஹாத்மியம்) நவராத்திரி தேவிகளான துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி சண்ட முண்ட மஹிஷாசுராதியர் களை வதைத்தனர் என்று கூறும். ராதா அவதாரம் நமது அவகுணங்களை அழித்து கிருஷ்ண பிரேம பக்தியை ஊட்டவே. தேவி பாகவதம் மேலும் கூறும்-

க்ருஷ்ண அர்ச்சாயாம் ந அதிகாரோ

யதோ ராதாம அர்ச்சாயாம் வினா

வைஷ்ணவா: ஸகலா:

தஸ்மாத் கர்த்தவ்யம் ராதார்ச்சனம்.'

ராதையைப் பூஜிக்காமல் கண்ணனைப் பூஜிக்கத் தகுதியில்லை. ஆகவே வைணவர்கள் ராதையைப் பூஜிக்க வேண்டும் என்கிறது.

"ராதா' எனச் சொல்ல விழைந்து "ரா' என்றதுமே கண்ணன் உத்தமபாவ பக்தியைத் தருகிறானாம். "தா' என முழுநாமம் கேட்டதும் தானே வந்துவிடுகிறானாம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சிணேஸ் வர பஞ்சவடியில் பெண் வேடம் தரித்து ராதா நாமத்தில் ஆழ்ந்து உழல, அவருள் பாவசமாதியில் ராதா நுழைந்தாளாம்.

அவளைத் தொடர்ந்து கண்ணனும் நுழைந்தா னாம். ராமகிருஷ்ணர் காளிகோவிலில் முதலில் பூஜித்தது ராதாகிருஷ்ணரையே. தேவி பாகவதம் கூறும் "ராத்னோதி லகலாள் காமான் இதிஸ்ரீராதா'- எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள். ஆக, அவள் நாமம் ராதா.

"ரா' இதி ஆதார வசனோ "தா' ச நிர்வாண வாசக:

யதர் அவாப்னோதி முக்திம் ச ஸா ராதா ப்ரகர்த்திதா.'

"ரா' என்றால் ஆதாரம், கொடுப்பது; "தா' என்றால் முக்தி.

எனவே ராதா நாமமானது அருணாசல ஸ்மரணம்போல் முக்தியளிக்க வல்லது.

"ராதா' நாமத்தில் "ர' என்றதும் கோடி ஜென்ம பாவங்கள் விளைவிக்கும் கெட்டவை அழியும்.

"ஆ' என்றதும், மீண்டும் பிறப்பில்லை; வியாதிகள் இல்லை.

"த' என்றதும் ஆயுள் விருத்தியாகிறது.

"ஆ' என்றதும் பவசாகரத்திலிருந்து முக்தி கிட்டும் என்கிறது ஒரு துதி.

12-ஆவது நூற்றாண்டில் ஜயதேவர் "கீதகோவிந்தம்' எனும் 24 அஷ்டபதிகள், ராதாகிருஷ்ண சேர்த்தியைப் பாடியுள்ளார்.

15-ஆவது நூற்றாண்டு ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய அவ தாரமே!

16-ஆம் நூற்றாண்டு வங்காளக் கவி சண்டிதாஸ், வித்யாபதி, 18-ஆவது நுற்றாண்டு தமிழ்நாட்டு ஊத்துக்காடு வெங்கடகவி, நாராயண தீர்த்தர், "நாரயணீயம்' செய்த நாராயண பட்டாத்ரி ராதா புகழைப் பாடியுள்ளனர்.

ராதாஷ்டமி நாளில், ராதாகிருஷ்ண ஐக்கிய ரூபத்தில்- நாமத்தில் ஆழ்ந்து அவர்கள் அருளைப் பெறுவோமே.