1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனை எண்ணின் நாயகராகக் கொண்டவர்கள் இந்த எண்காரர்கள். வீட்டில் வைத்து வணங்கவேண்டிய எந்திரம் சிதம்பரச் சக்கர எந்திரமாகும். இந்த மாதம் உங்களுக்கு எப்படி அமையும்? "விக்க விக்கக்கொடுத்து, கக்கக் கக்க அடிப்பான்' என்று சொல்வார்களே, அதுபோல இந்த மாதப் பலன்கள் ஓடும். பணவரவும், லாபமும் ஓஹோதான். நீங்கள் நினைத்துப் பார்த்தே இல்லாத அளவுக்கு வருமானம் கிடைக்கும். அதனை அனுபவிக்கப்போகும் நேரத்தில், முன்பு வாங்கிய கடன்தொகை நிறைய வட்டியுடன் பெருகி நிற்கும். கடன் கொடுத்த நபர் அல்லது வங்கி "இந்த நிமிடம் கடனைக் கட்டு' என கழுத்தைப் பிடித்து நெரிக்க, வேறு வழியின்றி பணத்தை அவர்கள் கையில் கொடுத்துவிட வேண்டியதுதான். உங்கள் இளைய சகோதரியும் அவள் பங்குக்கு இடையூறு தருவாள். உள்ளூர்ப் பயணம் சிறிது சிரமம் கொடுத்து, பின் சரியாகும். காதலிப்பவர்கள் அலைபேசி அல்லது கௌரவம் சம்பந்தமாக சண்டையிட்டு, பின் சரியாவர். பெற்றோர் களால் சொத்து சேரும் யோகம் உள்ளது. இவ்விஷயத்தில் உங்கள் மூத்த சகோதரன் சற்று வெறியாவார். வாரிசுகளால் ஒரு நன்மை கிடைக்கும். கலைஞர்கள் நன்மையும்- தீமையும் கலந்து பெறுவர். எதிரிகளிடம் வீண் வம்பு வேண்டாம். அதுபோலவே மனைவியிடம் பதவிசாக நடந்துகொள்ளவும். ஒரு நேரம்போல ஒரு நேரம் இருக்காது. உங்கள் முதலாளிகள் சிறிய பணப்பலன் கொடுத்துவிட்டு, நிறைய வேலை வாங்குவர். தொழில் நடத்துபவர்களுக்கு சிறிய இடையூறு ஏற்பட்டு, பின் சரிசெய்ய நேரிடும். அரசியல்வாதிகள் மிகப்பெரிய பதவி உயர்வும், ஒரு வழக்கு முறையீடும் பெறுவர். வெளிநாடு செல்வோர் ஒரு இம்சையை எதிர்கொள்ள நேரிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

Advertisment

பரிகாரம்: நரசிம்மருக்கு ஞாயிற்றுக்கிழமை களில் நெய்தீபமேற்றவும். உங்கள் வீட்டில் அல்லது தொழிற்சாலையில் வேலை செய்யும் இளம் வயதுப் பெண்களுக்கு அலைபேசி அல்லது புத்தகம், பத்திரிகை வாங்கிக்கொடுக்கவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் சந்திரன்; வழிபாட்டு எந்திரம் துர்க்கா எந்திரம். இந்த மாதம் பணவரவுக் கான தகவல்கள் கைபேசிமூலம் வந்துசேரும். சிலர் அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். புதிய கைபேசி வாங்குவீர்கள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். ஞாபகசக்தி அதிகரிக்கும். மாணவர்கள் கணக்குப் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவர். சிலர் புதிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவர். விமானப் பயணம் உண்டு. புதிய பத்திரிகையில் வேலைக்குச் சேர்வீர்கள். சிலர் பத்திரிகை ஏஜெண்சி எடுப்பீர்கள். இடமாற்றம், வீடு மாற்றம் கண்டிப்பாக நடக்கும். வெகுநாள் விற்பனையாகமலிருந்த வீடு, நிலம் இம்மாதம் நல்ல விலைக்கு விற்பனையாகும். காதல் ஓஹோதான். வாரிசுகள் வெளிநாடு செல்வர். சிலருக்கு தொழில் விஷயமாக வெளிநாட்டுப் பயணம் உண்டு. கலைஞர்கள் சினிமா, டி.வி. நடிகர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் முன்னேற்றம் சிறிது தடைப்பட்டு, பின் சரியாகும். பங்கு வர்த்தக முதலீடு உண்டு. வேலையில் கண்டிப்பாக பதவி உயர்வும் இடமாற்றமும் வரும். உங்கள் எதிரிகள் இடம்பெயர்வர். கடன் அடையும். நோய்க்கு நல்ல மருத்துவரைத் தேடியலைந்து கண்டுபிடித்து விடுவீர்கள். இதனால் நோய்த் தாக்கம் மறையும். தம்பதிகளுக்குள் யுத்தம் ஏற்படும். அதற்கு உங்கள் தந்தை காரணமாக இருப்பார். இந்த எண்ணில் பிறந்த குழந்தைகளின் தந்தை சற்று கவனமாக இருக்கவேண்டும். மூத்த சகோதரிக்கு சற்று இன்னல் ஏற்பட்டு பின் சரியாகும். அரசியல்வாதிகள், சிறிது பின்னடைவை சந்தித்து பின் நேர் சீராவர். இந்த மாதம் வெகு பயணங்கள் இருக்கும். அதில் நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும். உங்கள் தாயார் காது பிரச்சினையாகி சரியாவார். உங்கள் மாமனார் திடீர் உயர்ச்சியடைவார்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: நரசிம்மருக்கு திங்கட்கிழமை களில் விளக்கேற்ற நெய்யும், அபிஷேகத்திற்குரிய பொருட்களும் காணிக்கை செலுத்தவும். காது கேட்காத இளம்பெண்களுக்கு தேவையைக் கேட்டறிந்து உதவிசெய்யவும்.

ss

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் குரு; வணக்கத்துக்குரிய எந்திரம் ஸ்ரீசக்கர எந்திரம். இந்த மாதம் உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தவேண்டிய நிலை வரும். உஷ்ணம் சார்ந்த இம்சை உண்டு. வெளிநாட்டுப் பணவரவு வரும். எதிர்பாராத காரணத்தால் வீடு மாறவேண்டியிருக்கும். உங்கள் தாயார் வேறிடம் செல்வார். காதல் துளிர்க்கும். அது தொழில் செய்யுமிடத்தில் அமையும். கடன் வாங்கவேண்டி இருக்கும். வீடு, வாகனம் பழுதுநீக்கும் செலவுண்டு. உங்களில் சிலரின் காதல் திருமணம் வெகு சிறப்பாக கைகூடும். வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணங்கள், வெகு விமரிசையாக, வெகு கௌரவத்துடன் செய்யப்படும். உங்கள் தந்தை, தன் தொழிலில் மிக மேன்மை காண்பார். உங்களில் சிலர் அரசுப் பணியில் சிறு இடையூறுக்குப் பின் சேர்வர். இப்போது உங்கள் தொழிலில் வெகு பிரபலமான பங்குதாரர், தன் முதலீட்டுடன் உங்களுடன் இணைந்துகொள்வார். இதுவரை உங்களின் கம்பெனி சிறு, குறு அளவில் இருந்தது, இப்போது பெரிய கம்பெனி எனும் அளவில் பிரசித்தியடையும். அரசியல்வாதிகள் சிலசிறு பிரச்சினைக்குப் பிறகு, நல்ல பதவி கிடைக்கப்பெறுவர். சில அரசியல்வாதிகள் பதவி மாற்றம் பெறுவர். உங்களின் மூத்த சகோதரர் சிறு சுணக்கதுக்குப் பின், புதிய தொழில் தொடங்குவார். சிலரின் வாழ்க்கைத்துணை இடப்பெயர்ச்சி பெறுவார். உங்கள் மாமியாருக்கு வெகு யோகமான மாதமிது. அவர் தொழில், வேலை செய்பவராக இருந்தாலும், இல்லத்தரசியாக இருப்பினும் வெகு கௌரவம் பெறுவார். வாழ்க்கைத் துணை அல்லது காதலால் அதிக செலவுண்டு. உங்கள் தாயார் நேரத்திற்கொன்று பேசி டென்ஷனாக் குவார். உங்கள் மாமனார் எங்காவது சென்றுவிட வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 2, 11, 20, 29.

பரிகாரம்: நரசிம்மரை மஞ்சள், மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் பூக்கள் கொண்டு வணங்கவும். சமையல் வேலை பார்க்கும் பெண்களின் திருமணத்திற்கு வேண்டிய பொருளை வாங்கிக்கொடுங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் ராகு; வணக்கத்துக் குரிய எந்திரம் ஸ்ரீசர்ப்ப எந்திரம். எப்போதும் வெகு தீவிரமாக யோசிக்கும் நீங்கள் இப்போது அதனினும் மோசமாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவீர்கள். கொஞ்சமும் பிடிக்காத இடமாற்றம் கிடைக்கும். அதனைத் தவிர்க்க, யாரைப் பிடித்தால் பலன் கிடைக்குமென ஓவராகத் தேடுவீர்கள். ஒப்பந்த விஷயங்களை குறுக்குவழியில் பெற்றுவிடுவீர்கள். நீங்கள் வாங்கிய வாகனத்தில் சிறிய பழுது ஏற்பட்டாலும், விற்பனையாளரை மிரட்டி, புதிய வாகனம் வாங்கிவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை, எத்தனைப் பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் மண்டையை ஒரு மாதிரி குழப்பி, உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்வீர்கள். சிலர் ஆயிரம் பொய் சொல்லி ஒரு அருமையான காதலை ஆரம்பித்துவிடுவீர்கள். ஒரு லட்சம் பொய் சொல்லி பெரிய இடத்தில் திருமணம் செய்துவிடுவீர்கள். அதுபோல் விவாகரத்துக்குக் காத்துக் கொண்டிருக்கும் கணவர்கள், தங்கள் மனைவிக்கு எந்த இழப்பீடும் கொடுக்காமல் சல்லிசாக டைவர்ஸ் வாங்கிவிடுவர். அரசாங்க வரி வழக்கிலிருந்து மிக எளிதாகத் தப்பிவிடுவர். ரியல் எஸ்டேட் காரர்கள், அரசின் சில இம்சைகளை சில பல அன்பளிப்புக்கள்மூலம் சரிக்கட்டிவிடுவர். மாணவர்கள் அக்கவுன்டன்சி பாடத்தில் மிக வெற்றி மதிப்பெண் பெறுவர். வியாபாரிகள் வணிகத்தில் முழு முனைப்பு காட்டுவர். உங்கள் மாமனாருக்கு உடல்நலம் கெட்டு, பின் சரியாகும். மாமியார் சற்று வதந்தியைக் கிளப்பிவிடுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: நரசிம்மருக்கு துளசி மாலை அணிவிக்கலாம். எங்காவது அடிப்பட்டவர்களுக்கு தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் புதன்; வணக்கத்துக் குரிய எந்திரம் ஸ்ரீ சுதர்சன எந்திரம். இந்த மாதம் உங்களின் கௌரவம் மிக உயரும். இந்த எண் தொழிலதிபர்கள் மிக மேன்மை பெறுவர். உங்கள் பணவரவு சற்று தாமதமாகி பின் கைக்கு வந்துசேரும். உங்கள் சொற்களில் குழப்பமிருக்கும். உங்கள் தொழிற்சாலையில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஊழியர்களாகச் சேர்வர். உங்களுக்கு வரும் சில தகவல்களில், கள்ளம் ஒளிந்திருக்கும். இந்த மாதம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது, மிக கவனம் தேவை. குடும்பத்துடன் ஆன்மிக தல தரிசனம் செய்வீர்கள். வாரிசுகளுடன் மனக்கசப்பு வரும். உங்களில் சிலருக்கு ஏற்படும் காதல், சுத்தமான ஏமாற்றுத்தனத்தால் செய்யப்பட்டதாக இருக்கும். தொழில் பெருக்கத்தை முன்னிட்டு, அரசு சார்ந்த அலைச்சலும் விரயமும் உண்டு. சிலரின் தந்தை ஏதேனும் அடிப்பட்டுக் கொள்வதால், அதற்குரிய செலவும் இருக்கும். இந்த மாதம் காதல் விஷயம் ஓடட்டும். ஆனால் திருமணத்தை உறுதிசெய்ய வேண்டாம். நன்றாக விசாரித்தபின் திருமணத்தைப் பற்றி யோசிக்கவும். உங்களின் தொழில் மேன்மை, சில திருஷ்டி தோஷத்தைக் கொண்டுவரும். அதனால் சில பாதகங்களும் ஏற்படக்கூடும்; கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: நரசிம்மரை மரிக்கொழுந்து கொண்டு வழிபடவும். உங்கள் குடும்பத்திலுள்ள இளம்பெண்ணிற்கு ஆன்மிக சுற்றுலா செல்ல பணம் கொடுத்து உதவுங்கள்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன்; வணங்கத்தக்க எந்திரம் அஷ்டலட்சுமி எந்திரம். இந்த மாதம் உங்களுக்கு சற்று வியப்பான செயல்கள் நடக்கும். வரும்; ஆனா வராது. நடக்கும்; ஆனா நடக்காது எனும் நிலையில் நாட்கள் ஓடும். இந்த மாதம் ஒருவித சோம்பேறித்தனம் மிக்கதாக- அலுப்பாக சோர்வாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் முக்கிய வேலை வரும்போது, சட்டென்று ஒருவித சுறுசுறுப்பு வந்து, வேலையை முடிந்துவிடுவீர்கள். குடும்பத்தில் அதிர்ஷ்டமான பணவரவுண்டு. திருமணம் கைகூடும். உங்கள் பணியாளர்கள், எதையாவது திருடிவிட்டு கம்பி நீட்டிவிட, பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படும். நினைத்தறியா வீடு மாற்றம், கண்டிப்பான சூழ்நிலையில் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதுவே பின்னர் உங்களுக்கு அளப்பரிய நன்மை தரும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு, வெளிநாட்டை அடிப்படையாகக் கொண்ட வேலை கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு வரும் துன்பங்கள், சின்ன சிராய்ப்புக்குப் பிறகு மறைந்துவிடும். உங்களுக்கு வரும் அதிர்ஷ்டம், பெரிய செலவையும் கூடவே கூட்டிக்கொண்டுவரும். இந்த மாதம் பெரிய பதவி உயர்வும், அதனினும் பெரிய இடமாற்றமும் உண்டு. அரசியல்வாதிகள் மிகப்பெரிய பதவி மற்றும் நாற்காலி மாற்றத்தையும் பெறுவர். இதுவரையில், சிறையிலிருந்த அரசியல்வாதி, தனது வழக்குகளை வெற்றிகரமாக முடித்து வெளியில் வருவார். சில கடுமையான நோய்த்தாக்கம் குறையும். உங்களில் பலர் வேலை, தொழில், உயர்கல்வி, குடும்பம் சார்ந்து வெளிநாடு செல்வீர்கள். உங்கள் தந்தை அரசு சார்ந்த பயணம் செய்வார். மூத்த சகோதரர் ஒரு நல்வாய்ப்பு பெறுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: நரசிம்மரை இனிப்புப் பிரசாதம், நல்ல இனிப்பான பழங்கள் கொண்டு வணங்கவும். நோயினால் மிகக் கஷ்டப்படும் ஒரு இளம்பெண்ணிற்கு அதற்குரிய மருந்து செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் கேது; வணக்கத்துக் குரிய எந்திரம் ஸ்ரீ மகாகணபதி எந்திரம். எப்போதும் சற்று நிதானமான, மந்தமான சிந்தனைகொண்ட நீங்கள் இந்த மாதம் அதிசயமாக பரபரவென யோசனை செய்வீர்கள். "இந்தத் தொழில் போதுமா- இல்லை இன்னும் நாலு தொழில் கூடவே ஆரம்பிக்கலாமா' என பரபரப்பீர்கள். சிலர் "இந்தத் தெருவை வாங்கட்டுமா? இல்லை இந்த சாலையை வாங்கலாமா! அட, இந்த ஊர் என்ன வெலைன்னு கேளப்பா' என உதார் விடுவார்கள். "அரசியல்வாதின்னா என்னா பெரிய ஆளா? அட பக்கத்து நாட்டு அரசியல்வாதியைக்கூட நான் ஒரு கை பார்த்துவிடுவேன். யார்கிட்ட' என பந்தா காண்பிப்பார்கள். "ஒரு மனை வாங்கறதெல்லாம் வேஸ்ட்; பேசாம ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி ஆரம்பிச்சிட வேண்டியதுதான்' என தூள் பரத்துவார்கள். "ஊர்ல உள்ள பயல்களெல்லாம் ஒரு காதல் பண்ணவே திணறுகிறார்கள். ஐயா பாரு, ஒரு நூறு காதல் பண்ணுவேன்' என ஜம்பமாக அடித்துப் பேசுவார்கள். சிலர் "உலகிலேயே பெரிய ஆள் நான்தான்' என ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எதுவரை? இவர்கள எதிரிக்குக் கோபம் வந்து, ஒரு இருட்டு சந்தில் முரட்டுக் குத்து குத்தும் வரை. பின்னர் இவர்கள் அம்பேல்தான். ஆக, இந்த மாதம் ஆர்ப்பாட்டம் அதிகம்; அதற்கேற்ற எதிர்வினையும அதிகம். எனவே அதற்கேற்ப பொறுமை காக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: முடிந்தால் நரசிம்மருக்கு வெண்கலப் பாத்திரம் கேட்டறிந்து வாங்கிக்கொடுங்கள். அல்லது பூஜைக்குத் தேவையான வஸ்த்துகளை வாங்கிக் காணிக்கை செலுத்தவும். வாழ்க்கையில் கணவருடன் பிரிவு ஏற்பட்டு, விரக்தியாக வாழும் பெண்ணிற்குத் தேவையைக் கேட்டறிந்து பரிவுடன் உதவுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் சனிபகவான்; வணக்கத்துக்குரிய எந்திரம் ஸ்ரீ பைரவ எந்திரம். இந்த மாதம் உங்களின் மனபலம் சற்று மாறுபடும். ஞாபக சக்தி நன்றாக இராது. வீரம் வீணாகப் போகும். உங்கள் எண்ணின் நாயகர் சனி சற்றே அல்லாட்டம் கொள்வதே காரணம். வீடு வாங்க கடனுக்கு ஏற்பாடு செய்வீர்கள். அலைபேசியில் வரும் தகவல்களை நம்பவேண்டாம். உங்கள் தாயார் சற்றே உடல்நலம் கெடக்கூடும். கர்ப்பஸ்திரிகள், வெகு கவனமாக இருக்கவேண்டும். சிறு சுகவீனம் என்றாலும் உடனே மருத்துவரை நாடவேண்டும். உங்கள் வாரிசுகளின் மேல்நாட்டு உயர்கல்வி பயணத்தில் தடங்கல் ஏற்பட்டு பின் சரியாகும். தரவுகளை சரியாகக் கையாளவும். உங்கள் பெண்ணின் உடல்நிலை சற்று மருத்துவரை நாட வேண்டியிருக்கும். பங்கு வர்த்தகம் கொஞ்சம் பின்னடைவை சந்தித்து பின் மேன்மை தரும். கலைஞர்கள் தொழிலில் சற்று சுணங்கி, பின் ஏற்றம் காண்பர். உழவாரப் பணி புரிவீர்கள். அரசாங்க வேலை, சற்று செலவு, தடங்கல், இன்னலுக்குப் பிறகு கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்களது நல்ல அதிர்ஷ்டத்தின்போது, அவமானத் தையும் சந்திப்பார்கள். காதல் விஷயங்கள் தடுமாற்றம் காணும். தொழிலில் இடையூறு ஏற்படும்போது மலைக்க வேண்டாம். ஏனெனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மூத்த சகோதரருக்கு வேலை மாற்றம் உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: நரசிம்மர் சந்நிதிக்கு நல்லெண்ணெய் வாங்கிக்கொடுங்கள். அதனை அவர்கள் பிரசாதம் தயாரிக்க, விளக்கேற்ற பயன்படுத்துமாறு கொடுங்கள். கர்ப்பமுற்ற இளம்பெண்ணிற்குத் தேவையறிந்து, பாசத்துடன் உதவுங்கள்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் செவ்வாய்; வணக்கத்துக்குரிய எந்திரம் ஸ்ரீ சண்முக எந்திரம். இந்த மாதம் பணவரவென்பது, வரவும் செலவும் சமமாக இருக்கும். திருமண விஷயமாகக் கேட்ட கடன், சற்று இழுப்பறிக்குப்பின் கிடைக்கும். தகவல் தொடர்பு சம்பந்த வேலை கிடைக்கும். அதில் அரசு அல்லது காவல்துறை சம்பந்தம் கலந்திருக்கும். சிலரின் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில், தகவல் தொடர்பான பங்குகள் வெகு நன்மை தரும். கலைஞர்கள் சிறிது தாமதத்திற்குப்பின் நல்ல வாய்ப்புபெறுவர். விளையாட்டுத் துறை சார்ந்தோர் வேலை கிடைக்கப்பெறுவர். காதல், கலப்புத் திருமணம் சற்று கலாட்டாவுக்குப்பின் நடக்கும். சிலருக்கு வேலை செய்யுமிடத்தில் காதல் துளிர்க்கும். உஷ்ண சம்பந்த ஆரோக்கியக் கோளாறு ஏற்படும். உங்கள் இளைய சகோதரர் ஏதேனும் சிக்கலில் அகப்பட்டுக்கொள்வார். வீடு விற்கும் சமயம், ஏதேனும் வில்லங்கத்தை சந்திப்பீர்கள். உங்கள் முதலாளி பணச்சலுகை தரும்போது, சற்று எரிச்சலையும் வெளியிடுவார். ஆன்மிப் பயணம் செல்லும் நேரம், சிறுசிறு இடையூறுகள் ஏற்படும். உங்கள் தொழிலில் லாபமானது கஷ்டத்தையும் உடன் அழைத்துவரும். சில நஷ்டங்கள், லாபத்தைக் கைப்பிடித்து வரும். அரசியல்வாதிகள், "நாம் நல்லவனா, கெட்டவனா' என அவர்களைப் பார்த்து அவர்களே கேட்டுக்கொள்வர். அந்தளவுக்கு குழம்பிப்போய் விடுவர். மூத்த சகோதரர் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தில், எங்காவது சிக்கிக்கொண்டு திணறுவார். நீங்களும் பயணங்களின்போது கவனமாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: நரசிம்மர் சந்நிதி யில் தாம்பூலம், பழங்கள் இவற்றோடு தீபமேற்றி வழிபடுங்கள். வேலை செய்யும் இளம்பெண்களின் கடன்தீர வழிகாட்டுங் கள்.

செல்: 94449 61845