இறைவன் படைத்த உயிரினங்களில் பறவைகளும் ஒருவகை. சின்னஞ்சிறிய குருவிமுதல் உயரப் பறக்கும் கழுகுவரை ஒற்றுமை என்னும் குணம் மட்டும் எல்லாப் பறவைகளுக்கும் உண்டு. ஒரு கிளி இன்னொரு கிளியுடன்தான் சேர்ந்து பறக்கும். ஒரு காக்கை இன்னொரு காக்கையுடன்தான் பறக்கும். ஒரு புறாவும் அப்படித்தான். அந்தந்தப் பறவைகள் அந்தந்த இனத்துடன்தான் சேர்ந்து பறக்கும்.
பறவைகளில் உயர்வு- தாழ்வென்ற பேதம் கிடையாது. ஜாதி, மதப் பிரிவும் கிடையாது.
அவற்றுக்கு மரம் தெரியும்; மதம் தெரியாது. பழம் தெரியும்; பணம் தெரியாது ஒரு பழத்தை ஒரு பறவை கொத்தித் தின்றால், மிச்சமென்று இன்னொரு பறவைக்கு வைத்துவிட்டுத்தான் செல்லும்.
புராணத்தில்கூட பறவைகளுக்குத் தனி மேன்மை வழங்கப்பட்டுள்ளது. நளனுக்கும் தமயந்திக்கும் "அன்னப் பறவை' தூது சென்று அவர்களின் காதலுக்குத் துணைபோயிருக்கிறது. இராவணன் பேராசையோடு சீதையைத் தூக்கிச்சென்றபொழுது "ஜடாயு' என்ற பறவை இராவணனுடன் போராடித் தன் உயிரையே தியாகம் செய்திருக்கிறது. மதுரையில் மீனாட்சியம்மன் தனது தோளின்மீது கிளியை வைத்திருக்கிறாள். ஆண்டாளும் கிளியோடுதான் காட்சி தருகிறாள். முருகப்பெருமானுக்கு மயிலே வாகனம். சனீஸ்வரனுக்கு காக்கை வாகனமாக உள்ளது.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் சிபிச்சக்கரவர்த்தி என்ற அரசன் ஒரு புறாவின் உயிருக்காக அதன் எடை அளவுக்குத் தனது தொடை தசையை அறுத்து தானம் செய்திருக்கிறான்.
கிளியின் வாக்கு பலிக்குமென்று அதை ஜோதிடர்களும் பயன்படுத்துகின்றனர்.
மூதாதையர் நினைவு தினத்தில் காக்கைக்கு அன்னமிட்டு புண்ணியத்தைத் தேடிக் கொள்கிறோம்.
இப்படிப் பல வகையிலும் பறவைகள் பெருமை பெற்றிருப்பதாலோ என்னவோ திருமால் "கருடன்' என்னும் பறவையைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். எல்லாம்வல்ல எம்பெருமானின் திருவடி கருடன்மீது படுவதால் கருடனுக்க
இறைவன் படைத்த உயிரினங்களில் பறவைகளும் ஒருவகை. சின்னஞ்சிறிய குருவிமுதல் உயரப் பறக்கும் கழுகுவரை ஒற்றுமை என்னும் குணம் மட்டும் எல்லாப் பறவைகளுக்கும் உண்டு. ஒரு கிளி இன்னொரு கிளியுடன்தான் சேர்ந்து பறக்கும். ஒரு காக்கை இன்னொரு காக்கையுடன்தான் பறக்கும். ஒரு புறாவும் அப்படித்தான். அந்தந்தப் பறவைகள் அந்தந்த இனத்துடன்தான் சேர்ந்து பறக்கும்.
பறவைகளில் உயர்வு- தாழ்வென்ற பேதம் கிடையாது. ஜாதி, மதப் பிரிவும் கிடையாது.
அவற்றுக்கு மரம் தெரியும்; மதம் தெரியாது. பழம் தெரியும்; பணம் தெரியாது ஒரு பழத்தை ஒரு பறவை கொத்தித் தின்றால், மிச்சமென்று இன்னொரு பறவைக்கு வைத்துவிட்டுத்தான் செல்லும்.
புராணத்தில்கூட பறவைகளுக்குத் தனி மேன்மை வழங்கப்பட்டுள்ளது. நளனுக்கும் தமயந்திக்கும் "அன்னப் பறவை' தூது சென்று அவர்களின் காதலுக்குத் துணைபோயிருக்கிறது. இராவணன் பேராசையோடு சீதையைத் தூக்கிச்சென்றபொழுது "ஜடாயு' என்ற பறவை இராவணனுடன் போராடித் தன் உயிரையே தியாகம் செய்திருக்கிறது. மதுரையில் மீனாட்சியம்மன் தனது தோளின்மீது கிளியை வைத்திருக்கிறாள். ஆண்டாளும் கிளியோடுதான் காட்சி தருகிறாள். முருகப்பெருமானுக்கு மயிலே வாகனம். சனீஸ்வரனுக்கு காக்கை வாகனமாக உள்ளது.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் சிபிச்சக்கரவர்த்தி என்ற அரசன் ஒரு புறாவின் உயிருக்காக அதன் எடை அளவுக்குத் தனது தொடை தசையை அறுத்து தானம் செய்திருக்கிறான்.
கிளியின் வாக்கு பலிக்குமென்று அதை ஜோதிடர்களும் பயன்படுத்துகின்றனர்.
மூதாதையர் நினைவு தினத்தில் காக்கைக்கு அன்னமிட்டு புண்ணியத்தைத் தேடிக் கொள்கிறோம்.
இப்படிப் பல வகையிலும் பறவைகள் பெருமை பெற்றிருப்பதாலோ என்னவோ திருமால் "கருடன்' என்னும் பறவையைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். எல்லாம்வல்ல எம்பெருமானின் திருவடி கருடன்மீது படுவதால் கருடனுக்குப் "பெரிய திருவடி' என்ற பெயரும் உண்டு. எப்பொழுதெல்லாம் திருமால் அவதாரம் செய்கிறாரோ அப்பொழு தெல்லாம் கருடன் உடனிருப்பார்.
திருமலையில் எம்பெருமான் எழுந்தருளி அங்கிருந்து எங்கும் போகாமல் நீண்ட நாட்கள் ஆகிவிட்ட காரணத்தால், பெருமாளை விஷ்ணுவிடம் கொண்டு சேர்க்க கருடாழ்வார் அம்மலையை அப்படியே பெயர்த்தெடுக்க முற்பட்டபோது, பெருமாள் கருடனைத் தடுத்து, உலகை ரட்சிக்க தாம் சில காலம் இம்மலைமீது இருக்கப்போவதாகவும், அதுவரையில் இம்மலையின் தெற்குத் தாழ்வரையில் நித்யவாசம் செய்துவர கருடனுக்கு ஆணையிட்டதாகவும் வாமன புராணம் கூறுகிறது. இதனால் திருமலைக்கு (திருப்பதி) கருடாத்திரி, கருடாசலம் என்ற பெயருண்டு.
கருடாழ்வார் ஸத்யன், ஸுபர்ணன், விஹகேச்வரன், பந்தகாசனன், பதசேந்திரன் என்ற ஐந்து மூர்த்திகளை உடையவர் என்றும், உயர்ந்த பூதங்களைத் திருமேனியாகக் கொண்டவர் என்றும், ஆற்றலில் அனுமனைப் போன்றவர் என்றும், வேதத்தின் உட்பிரிவுகள் ஐந்தினையும் தனது அவயவங்களாகக் கொண்டவர் என்றும், இதேபோல ரிக், யஜுர், சாம வேதங்களையும் தனது திருமேனியாக உடையவர் என்றும் பத்மபுராணம் கூறுகிறது.
கருடாழ்வார் ஆவணி மாத வளர்பிறை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திரத்தில் கச்யப முனிவரின் மனைவி விநதைக்கு மகனாக அவதரித்தார். ஸ்ரீகருடாழ்வார் ஒன்றரை அடி நீளமுள்ள சிவப்பு இறக்கையும், தலைமுதல் பாதம்வரை உடல் வெண்மையாகவும், மேற்புறம் செம்மையுடனும் காணப்படுவார். சாமுத்திரிகா லட்சணப்படி கருடனுக்கு முகஅழகு. வசீகரக்கும் பார்வை. இவர் சிவப்பும், வெண்மையும் கலந்த பார்வை உள்ளவர் என்பதால் செம்பருந்து என்றும் அழைப்பார்கள்.
திருவேங்கடப்பெருமாளுக்கு கருடன் கொடியாக இருக்கிறார். இதையே ஆண்டாள் "ஆடும் கருடக்கொடியார்' என்று ஒரு பாசுரத்தில் பாடுகிறாள். "கருட ஸ்கந்த வாஸிநே ஸ்ரீவெங்கடேசாய நம' என்பது திருவேங்கடவனின் 108 திருநாமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எனவேதான் கருடாழ்வாரின் செயற்கரிய செயலைக்கண்ட திருவேங்கடவன் திருவோணத் திருவிழாவில் கருடவாகனம் கொண்டு காட்சி தருகிறார். மணவாள மாமுனிகள் ஒரு பாசுரத்தில் "பெரிய திருவடியைப் பண் செய்து, ஏறப்பெறாமல் வெம்புறத்திலே மேற்கொண்டான்' என்று, கஜேந்திரனைக் காப்பாற்ற அவர் வரும் வேகம் போதாமல் கருடாழ்வாரையும் இறுகக் கட்டிக்கொண்டு திருமால் பறந்து வந்தார். அப்போது பகவானின் வேகத்தைவிட கருடாழ்வார் மேலும் வேகமாகப் பறந்து வந்தார் என்று மிக அழகாகப் பாடுகிறார்.
இராவணனுக்கு முன்பு வாழ்ந்த மாலி முதலான அரக்கர்களைக் கொன்று முடிசூட்டிக்கொண்டவர் கருடாழ்வார். இதை "இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர்குலம் கெட்டு அவர்மாள கொடிப்புள் திரித்தாய்' என்று திருமங்கையாழ்வார் ஒரு புராணக்காவியம் பாடியுள்ளார். இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தில் மயக்கமுற்றுக் கிடந்த ஸ்ரீராம, லக்ஷ்மணரை உயிர்ப்பித்தவர் இந்த கருடாழ்வார்.
விஷ்ணு புராணத்தில் ஒரு பகுதியாக கிருஷ்ணனின் கதை வருகிறது. ஸ்ரீகிருஷ்ணர் ஒருசமயம் பசுக்களை மேய்க்க காட்டிற்குச் சென்றபொழுது, கடுமையான வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீகிருஷ்ணன் வெப்பம் தாங்காமல் அவதிப்பட்டான். அப் போது ஆகாயத்தில் தன் சிறகுகளைப் பரப்பி நிழல் தந்து காத்தருளினார் கருடன் என்று கூறுகிறது. இதையே ஆண்டாளும் தன் பாடல் ஒன்றில், "மேலாற்பறந்த வெய்யில் காப்பு வினதைச் சிறுவன சிறகென்னும் மேலாப்பின் வருவானை விருந்தாவனத்தே கண்டோம்' என்று பாடுகிறாள்.
ஒருசமயம் பிரகலாதனுடைய மகன் விராசணன் பாற்கடலிலிருந்த மகாவிஷ்ணு வின் கிரீடத்தைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான். இதையறிந்த கருடன் விசாரணனைத் தேடி, பாதாள உலகத்தில், வெள்ளையம் என்ற தீவில் அவன் இருப்பதைக் கண்டறிந்து, அவனுடன் போரிட்டு கிரீடத்தை மீட்டுவரும்போது பிருந்தாவனத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஒரு மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். கருடன் தான் மீட்டுக்கொண்டுவந்த கிரீடத்தை மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் தலையில் சூட்டிவிட்டார். இந்த நிகழ்ச்சி இன்றும் பல விஷ்ணு ஆலயங்களில் "வைரமுடிசேவை' என்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திவ்யதேசமான திருநாராயணபுரத் தில் இது விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
பாரதப் போரின் கடைசி நாளில் "கருட வியூகம்' அமைத்துப் பாண்டவர்கள் வெற்றி கண்டனர் என்று மகாபாரதம் கூறுகிறது.
மகாவிஷ்ணுவின் சங்கர்ஷண அம்சமே கருடன். கருடன் ஞானத்தையும், வீரியத்தையும் அள்ளிக்கொடுக்கக்கூடியவர். கல்வியில் தேர்ச்சியையும், பேசும் திறமையையும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் தரவல்லவர். காற்றை அடக்கியாளும் சக்தி பெற்றவர். கருடன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமானவர் மட்டுமல்ல; உற்றதோழனாகவும், கொடியாகவும் விளங்குகிறார். நித்திய சூரிகளில் ஒருவரான கருடன் எப்பொழுதும் மகாவிஷ்ணுவை வைகுந்தத்தில் அவருக்கு எதிரே கண்ணாடிபோல நின்று அவரை தரிசித்துக்கொண்டே இருக்கிறார்.
பத்ம புராணப்படி கருடனுக்கு பிறரை வசியம் செய்வது, பகைவர்களை அடக்குவது,
உணர்வுகளை மயங்க வைப்பது, படிப்பில் தேர்ச்சி பெறச் செய்வது, காற்று, நீர், நெருப்பு களில் அச்சமின்றிப் புகுவது, வாதத்தில் வெற்றியடைவது, அதிக நினைவாற்றல் போன்ற அபூர்வ சக்தியுண்டு. ஸ்ரீகருடஜெபத்தை ஜெபித்தால் மேற்கண்ட மகிமைகளைப் பெறலாம். கருடனுடைய தியானம், உபாசனம், பாராயணம், பூஜை இவற்றால் தீராத நோய்கள் குணமடையும். நம் உடலிலுள்ள பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்ற ஐந்து வாயுக்களினால் நமக்குத் துன்பம், துயரம் வராமலிருக்க,
"நம: ப்ராணதி வாயூணாம்
ஈசாநாய கருத்மதே!'
என்று ஜெபித்தால் நல்ல பலன் கிடைக்கும். சபரிமலையில் மகரஜோதியின்போது ஆகாயத்தில் பறக்கும் கருடனை "கிருஷ்ண பருந்து' என்றழைப்பார்கள். வீட்டுக்குள் பாம்பு தென்பட்டால்,
"அபஸர்ப்ப ஸர்ப்ப: பத்ரம்
தேதூரம் கச்ச மஹாசய:'
என்னும் மந்திரத்தை ஜெபித்தால் பாம்பு சென்றுவிடும். கருடன் நிழல்பட்ட வயல்களில் விளைச்சல் அதிகமிருக்கும்.
கருடன் எடுத்துவந்த அமிர்தக் கலசத்தில் ஒட்டியிருந்த தேவலோகப் புல்லே பூமியில் விழுந்து "தர்ப்பைப் புல்'லாக விளைந்தது.
"கருடக்கிழங்கு' என்ற கிழங்கை வாசலில் கட்டினால் விஷப்பூச்சிகள் வராது.
மௌரியர்கள் கருடனை அதிர்ஷ்டம் நிறைந்த கடவுளாகத் துதித்தனர். குப்தர் களுடைய நாட்டு நாணயத்தில் கருட முத்திரையைப் பதித்திருந்தார்கள். சந்திரகுப்த விக்ர மாதித்தன் டில்லியில் நாட்டின் நலம் காக்க முதன்முதலாகக் கருடகம்பத்தை நாட்டினான்.
தேவகிரி யாதவர்கள் கொடி "கருடக் கொடி' யாகும். "இலங்கை' என்னும் நாடு கருடன் தகர்த்த மேருமலையின் ஒரு தீவாகும். இந்தோனேஷியா விமானத்திற்கு கருடன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் சின்னம் "ராஜாளி' என்ற கருடனாகும்.
ஸ்ரீரங்கத்தில் கருடனைப் பெரிய வடிவிலும், திருவெள்ளியங்குடி கோவிலில் கோலவில்லி ராமன் சந்நிதியில் கருடனை சங்கு சக்கரமுடனும் காணலாம். மிகவும் சுமை கொண்ட "கல் கருடன்' நாச்சியார் கோவிலில் உள்ளது.
வானத்தில் கருடனை ஞாயிற்றுக்கிழமையில் தரிசித்தால் நோய் தீரும். திங்கள், செவ்வாயில் தரிசித்தால் அழகு கூடும்; துன்பம் நீங்கும்; துயரம் அகலும். புதன், வியாழனில் தரிசித்தால் பகைவர்கள் வைத்த சூன்யம் அகலும். வெள்ளி, சனிக்கிழமைகளில் தரிசித்தால் ஆயுள் கூடும்; செல்வம் பெருகும்.
வீட்டிலிருந்து ஏதாவது வேலையாக வெளியில் வரும்போது கருடன் வலப்புறமிருந்து இடப்புறம் சென்றால் காரியம் வெற்றியடையும். தலைக்குமேல் வட்டமிட்டு சுற்றிவந்தால் தனம், தானியம், செல்வம் பெருகும்.