"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.'
-திருவள்ளுவர்
விடாமுயற்சி செல்வங்களை உண்டாக்கவும் வளர்க்க வும் செய்யும். முயற்சியில்லாமல் எதுவுமில்லை. முயற்சி தான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
நெகமம் கிராம கிணற்றில் நிறைய தவளைகள் வாழ்ந்துவந்தன. அவற்றுள் மங்கு என்னும் குட்டித் தவளையும் இருந்தது. வெளியுலகத்தைப் பார்க்க விரும்பிய அது தன் பெற்றோரிடம், "நீங்கள் இதுவரை கிணற்றுக்கு வெளியே சென்றதுண்டா?'' என கேட்டது. "அதுபற்றியெல்லாம் எண்ணியதேயில்லை. இவ்வளவு உயரமான கிணற்றின் சுவரைக் கடந்து எங்கு போவது?'' என்றனர் பெற்றோர்.
மங்குவை மற்ற தவளைகள் கேலி செய்தன. அதில் முதிய தவளை ஒன்று, "வெளியேற நீ முயன்று பார்''
என ஊக்குவித்தது. மங்குவுக்கு உற்சாகம் பிறந்தது. அன்றுமுதல் கிணற்றின் சுவரைப்பிடித்து ஏறத் தொடங்கியது. அந்த கிணற்றில் சேறு மிகுந்து காணப் பட்டதால் இரண்டு அடி ஏறினால் நான்கு அடி வழுக்கியது.
ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து வந்தது மங்கு.
மழைக்காலம் முடிந்து கோடைகாலம் வந்தது. கிணற்றில் நீர்வற்றியது. மீண்டும் முயற்சித்தது மங்கு. கிணற்று சுவரில் வளர்ந்திருந்த மரவேர்கள், கிளைகள் வழியாக ஏறியது. மனவுறுதியுடன் கிணற்றின் விளிம்பை எட்டியது. அங்கு வீசும் குளிர்காற்றை சுவாசித்தது. மரங்கள், புல் பூண்டுகளைக் கண்டதும் அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மங்குவின் காதில் சிற்றோடை சலசலக்கும் சத்தமும் கேட்டது. ஓட்டமும் குதியுமாக அந்த ஓடையருகே சென்றது. தண்ணீர் பளிங்குபோல தெளிவாக ஓடுவதைக் கண்டது. மகிழ்வுடன் அதில் குதித்து மீன்களுடன் சேர்ந்து நீந்தியது. புதிய அனுபவம் பெற்றது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
காரசேரி காட்டில் ஆவலோடு மேய்ந்துகொண்டிருந்தது ஒரு பசு. அதைக் கண்ட வஞ்சக நரியின் மனதில் விபரீத ஆசை எழுந்தது. கொழுத்த பசுவைப் புசித்தால் சுவையாக இருக்கும் என்றெண்ணியது.
தன் கூட்டம் இருக்குமிடத்திற்கு அதை ஏமாற்றி அழைத்துச்செல்ல எண்ணி, அதற்காக திட்டம் தீட்டியபடி மெதுவாக பசுவினருகே வந்தது. அதைக் கண்டதும் முறைத்தபடி கூரிய கொம்புகளை ஆட்டியது பசு. நரி எதற்கும் அஞ்சாமல், "அண்ணே... எப்படி இருக்கீங்க?'' என்று பவ்யமாகக் கேட்டது. "ரொம்ப நல்லா இருக்கேன்'' என்று பதில் சொன்னது பசு.
"எங்கிருந்து வந்திருக்கீங்க?''
"மெம்மேடு கிராமத்திலிருந்து...''
"அப்படியா! அது ரொம்ப தூர மாச்சே! இந்த காய்ஞ்சுபோன புல்லைச் சாப்பிடவா இவ்வளவு தூரம் வந்தீங்க... இதுல என்ன சத்து இருக்கப்போகுது. நான் பெரிய தோட்டத்துல சோளம் விதைச்சிருக்கேன். நல்லா வளர்ந்து கதிர் விளைஞ்சிருக்கு. சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும்'' என ஒரு சோளப் பயிரைக் காட்டியது. பசுவின் நாக்கில் எச்சில் ஊறியது. "இதை சாப்பிடுங்க'' என நீட்டியது நரி. சற்றும் சிந்திக்காமல் ருசித்துச் சாப்பிட்டது பசு.
"எனக்கு முன்னமாதிரி விவசாய வேலை செய்ய முடியறதில்ல. தோட்டத்தை யாருக்காவது கொடுத்துடலாம்னு இருக்கேன். நீங்க வேணும்னா வச்சுக்கங்க...'' என ஆசைவார்த்தை கூறியது நரி!
தலையாட்டி "சரி' என்ற பசு, நரியுடன் புறப்பட்டது. "கண்ணுக்கெட்டிய தூரம்வரை தோட்டம் எதையும் காணவில்லை. சற்றுதூரம் நடந்தபின், "என்ன நரியாரே, எதையும் காணலையே'' என கேட்டது பசு.
நரி ஏளனமாக சிரித்தபடி, "தோட்டமாவது கத்தரிக்காயாவது. பைத்தியகாரப் பசுவே, மாமிசப் பட்சிணியான நான் தோட்டம் போடுவேனா...'' என்றது. அதன் வஞ்சக வலைபற்றி நிதானமாக யோசித்தது பசு. விதியை மதியால் வெல்லலாம் என்று துணிவுகொண்டது.
"என் அடி வயிற்றைப் பார்'' என்றது பசு.
உற்றுப்பார்த்து, "மனித விரல்கள் மாதிரி தொங்கு றதே... அது என்ன?'' என்று கேட்டது நரி.
"அது சுவைமிக்க பாலைத்தரும். என் மாமிசத்தைவிட பலமடங்கு ருசியா இருக்கும் அந்தப்பால்.
அதைக் குடிச்சா நீண்ட ஆயுளோட வாழலாம். எந்த விலங்கும் எதிர்த்து நிற்கமுடியாது'' என்றது.
ஆசை மேலிட, "அதை எனக்கும் கொஞ்சம் தருவியா?'' என்று கேட்டது நரி.
"நிச்சயமா தர்றேன். என் பின்பக்கமா வந்து குடிச்சிக்க...'' என மிக சாதுர்யமாக அழைத்தது. மகிழ்வுடன் வந்த நரியை பின்னங்கால்களால் எட்டி உதைத்தது பசு.
நய வஞ்சக நரி தொலைவில் விழுந்து மரண ஓலமிட்டது. மதியால் வென்ற பசு கம்பீரமாக வீடு நோக்கி நடை போட்டது.
தர்மநெறியைச் சார்ந்து வாழ்ந்தால் புத்துலகம் கண்ட தவளையைப்போல, விதியை வென்ற பசுவையைப்போல் மகிழ்ந்து வாழலாம்; தர்மநெறியைப் புறக்கணித்தால் நரியைப்போல் வீழ்வர் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு திருத்தலம்தான் குறிச்சி வாலீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: வாலீஸ்வரர்.
இறைவி: வடிவாம்பிகை, வடிவுடைநாயகியம்மை.
விசேஷமூர்த்தி: மயில்மீது அமர்ந்த முருகன்.
ஆகமம்: காரணாகமம்.
உற்சவர்: சந்திரசேகரர், சவுந்தரவல்லி.
புராணப் பெயர்: குறிச்சி.
ஊர்: சுந்தராபுரம், கோயம்புத்தூர்.
தலவிருட்சம்: வில்வமரம்.
தீர்த்தம்: நொய்யல் தீர்த்தம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், வாலி பூஜை செய்ததும், இராமாயண காலத்தில் நிர்மானம் செய்யப்பட்ட பெருமைவாய்ந்ததுமான தலம். ஆலயம் சிறிதாய் இருந்தாலும் இதன் மகிமைகள் அளவிடற்கரிய சிறப்புக் களைக் கொண்டது.
"பிறையினைத் தலையில் கொண்ட
பரமனின் பாதம் பற்றி
குறைகளைச் சொன்னால் ஈசன்
கருணையால் கிட்டும் வெற்றி
மகர மாத மகோற்சவ
மகத்துவ பூஜை ஏற்று
வாழ்நாளை வளமாக்கும் வடிவாம்பிகை
சமேத வாலீஸ்வரர் தாளைப் போற்று.'
வாழ்க்கையில் முன்னேற ஒரு லட்சியம் வகுத்து, அதை நிறைவேற்ற விடாமுயற்சி மேற்கொண்டால் வெற்றிகிட்டும். அந்த வகையில் தான் நினைத்த வரத்தினைப் பெறுவதற்காக பல இடங்களில் சிவவழிபாடு, செய்தான் வாலி. அப்படிப்பட்ட தலங்களில் குறிப்பிடத்தக்க ஒரு தலம்தான் தர்மநெறியைப் புகட்டியருளிய கோவை குறிச்சி வாலீஸ்வரர் திருக்கோவில்.
இராமாயண கதாபாத்திரமான வாலி ஈசனிடம் பெற்றவரம் யாதெனில், எவனொரு வன் தன் எதிரில் நிற்கிறானோ அவனது பாதி பலம் தனக்கு வந்துவிடவேண்டும் என்பது. இனி தல வரலாற்றைப் பார்ப்போமா?
"வாலி' என்ற பெயர்ச் சொல்லுக்கு வாலை உடையது; கரிக்குருவி; இராமாயணத்தில் சுக்ரீவனின் அண்ணனும், இந்திரனின் மகனுமான வாலி; வாலுவன்; மழைத்தூறல்; குதிரைவாலி தானியம்.
வானரமான வாலி கிஷ்கிந்தையின் அரசன். தாரை இவனது மனைவி; அங்கதன் இவர்களது மகன்.
இராமன், இலக்குவன், சுக்ரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற வானர வீரர்களோடு கிஷ்கிந்தையை அடைந்து வாலியைக் கொல்வதற்குரிய வழியை ஆராய்ந்தனர். இராமபிரான், போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலிமீது அம்பு தொடுப்பதாகக் கூற, சுக்ரீவன் அதை ஏற்றுக்கொண்டு வாலியை வலிய போருக்கு அழைத்தான். வாலியும் போருக்குப் புறப்பட, இராமன் துணையோடு சுக்ரீவன் போரிட வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, போருக்குச் செல்லவேண்டாமென தடுத்தாள் வாலியின் மனைவி தாரை. வாலி, இராமனது அறப்பண்புகளை தாரைக்கு எடுத்துரைத்துவிட்டு, போரை விரும்பி குன்றின் புறத்தே வந்தான்.
வாலிக்கும் சுக்ரீவனுக்கும் கடுமையாகப் போர் நடந்தது.
வாலியை சமாளிக்கமுடியாத சுக்ரீவன் இராமபிரானைச் சரண டைந்தான். இராமன் சுக்ரீவனை கொடிப்பூ அணிந்து போரிடச் சொன்னான்.
அவ்வாறே சுக்ரீவனும் சென்று வாலியுடன் மோதினான். வாலி சுக்ரீவனை மேலேதூக்கி கீழே எறிந்து கொல்ல முயன்றபோது, இராமன் வாலியின் மார்பில் அம்பை எய்தான். வாலி மண்ணில் சாய்ந்தான். தன்மீது அம்பெய்தவன் யாரென்றறிய அம்பைப் பிடுங்க, அதனால் குருதி வெள்ளம் பெருகியது. அதைக்கண்டு சுக்ரீவன் உடன்பிறந்த பாசத்தால் கண்களில் நீர்மல்க நிலமிசை வீழ்ந்தான்.
வாலி தன் மார்பில் தைத்த அம்பில் இராமன் என்னும் நாமத்தைக் கண்டான்.
இராமன் அறமற்ற செயலைச் செய்து விட்டதாக எண்ணி இராமனைப் பலவாறு இகழ்ந்தான். இராமன் செய்தது முறையான செயலே என தெளிவுபடுத்தினான் சுக்ரீவன்.
தான் விலங்கினம் என்பதால் தம்பி மனைவியை விழைந்தது தவறான செயலல்ல என்றான் வாலி. உருவத்தால் விலங்காயினும், நல்லறிவு பெற்ற வாலி செய்த செயல் குற்றமுடையது என இராமன் விளக்கினான். அதனைக்கேட்ட வாலி, தகாத வகையில் மறைந்து நின்று அம்பெய்த காரணம் யாதென்று வினவ, அதற்கு இலக்குவன் விடையளித்தான். இராமனை சுக்ரீவன் முதலில் சரண டைந்துவிட்டதால் அவனைக் காக்க வேண்டி இராமன் இவ்வாறு செய்ய நேரிட்டது என உரைத்தான்.
சிறியன சித்தியாதானாகிய வாலி, மனம் மாறி தன்னை மன்னிக்குமாறு இராமனிடம் வேண்டி, அவன் பெருமையைக் கூறித் துதித்தான். வாலிக்கு இறக்கும் தறுவாயில் தர்மநெறி புகட்டியருளியதால், இத்தல ஈசனுக்கு வாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இறைவியின் பெருமை
இறைவியின் திருநாமம் வடிவாம்பிகை. "உன்னைக் காக்கவே நான் எப்போதும் இருக்கிறேன். உனக்காகவே நான் வெவ்வேறு வடிவெடுத்து வருகிறேன்' என்கிறாள் பாகவதத்தில் தேவி. அவளின் தோற்றத் தில் ஒன்றுதான் குறிச்சி தலத்திலுள்ள தர்மத்தின் வடிவமாய்த் திகழும் வடிவாம்பிகை. பூரண சரணாகதியே அவளுக்கு நாம் செய்யவேண்டிய நிவேதனம். ஒரு தாயானவள் தன் குழந்தை எதுவும் கேட்காமலேயே அதற்குத் தேவையான அனைத்தையும் செய்கிறாள். "தாயே, நான் உன்னை சரணடையாவிட்டாலும் நீ என்னை பரிபாலிக்க வேண்டியவள்' என்கிறது ஸ்ரீபாத சப்ததீ சுலோகம்.
"அன்னை நமக்காகவே வடிவெடுக்கிறாள். நம் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படை சக்தியாக இருப்பவள் அம்பிகை. உயிர்கள் இயங்குவது அவள் சக்தியால்தான். "உன்னை எப்படி வணங்குவது?' என்று பக்தன் கேட்கிறான். "தர்மத்தைவிட்டு விலகாதே' என்கிறாள் அம்பிகை. அந்த தர்மத்தின் வடிவமாக வடிவாம்பிகை என்று திருநாமம் கொண்டு அருட்காட்சி அளிக்கிறாள்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார்- பரம்பரை அறங்காவலரும் 12-ஆவது தலைமுறையாக ஆலயத்தை நிர்வகித்து வருபவருமான உமாபதி சிவாச்சாரியார்.
சிறப்பம்சங்கள்
=சுவாமியும் அம்பாளும் கிழக்குநோக்கி அருள்பாலிக்கின்றனர். இருவருக்கு நடுவில் சோமாஸ்கந்த மூர்த்தமாக முருகன் மயில்மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் அருட் காட்சி தருவது சிறப்பானது.
=சங்கடஹர சதுர்த்தியன்று க்ஷேத்திர விநாயகருக்கும், வளர்பிறை சமாத சதுர்த்தியன்று அரசமர விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
= தமிழ்மாதப் பிறப்பன்று சூரியனுக்கும், பௌர்ணமியன்று சந்திரனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
=தை மாத ஆண்டுவிழா, ஆருத்ரா, ஐப்பசி சூரசம்ஹாரம், பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, தீபத்திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
=தேய்பிறை அஷ்டமியன்று கட்டளைதாரர் அடிப்படையில் ஹோமம், சிறப்பு அபிஷே கம் நடந்துவருகிறது. வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷே கம் உண்டு.
= நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள 38 சிவாலயங்கில் ஒன்று. திரேதாயுகத் தில், இராமயண காலத்தில் வாலியால் பூஜிக்கப்பட்டு பெருமைவாய்ந்த இத் தலத்தில், ஜாதகமே இல்லாதவர்கள் கூட வெளிப் பிராகாரத்தை 12 முறை வலம்வந்து வழிபட்டால் அவர்களுக்கு காரியத்தடை விலகி மன தைரியம் பிறக்கும். எதிரிபயம் நீங்கும். திருமணக் கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருளும் முருகனை வழிபட திருமணத்தடை விலகி, காரியம் கைகூடும். வாலீஸ்வரர் எதிரிகளை உதிரியாக்கி அருள்வதோடு, சித்தத்தை தெளிவுபடுத்தி தர்மநெறியுடன் வாழ அருள்பவர்.
"திரேதாயுகத்தில் மட்டுமல்ல; கலியுகத்திலும் வேண்டுவோர்க்கு வேண்டும் வரத்தினை தர்மநெறியுடன் அருளும் வடிவாம்பிகை சமேத வாலீஸ்வரரை வழிபட்டு வளமாக வாழ்வோம்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார். (இவர் பரம்பரை அறங்காவலர் உமாபதி சிவாச்சாரியாரின் வாரிசு) நொய்யல் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆலயம். அமர பயங்க சோழன்கால செப்பேட்டில் (கி.பி. 987-1017) குறிக்கப்பட்ட பெருமை வாய்ந்தது.
அமைவிடம்: கோவை- பொள்ளாச்சி பிரதான சாலையில் சந்தராபுரம் குறிச்சி பேருந்து நிறுத்தத்தின் அருகிலுள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
ஆலயத் தொடர்புக்கு: சரவண சிவாச்சார்யார், அலைபேசி: 99446 58646. வடிவாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக் கோவில், சுந்தராபுரம், குறிச்சி, கோயம் புத்தூர்- 641 024.