பள்ளிப்படையில் நீங்கா நித்திரையிலிருக்கும் மாவேந்தனின் ஆற்றல் பெட்டகமாகக் கருதப்பெற்ற அவனது தொப்புள் கொடியை, இளவலின் தாய்மாமன் கொணர்ந்ததைக் கடந்த இதழில் பார்த்தோம்.
அரச வைத்தியர்களின் சூட்சும அறிவியல்!
இளவலின் சுற்றத்தார் அனைவரும் அந்த பொற் பெட்டகத் தைப் பார்த்து, பேரரசன் உயிரோடு இருந்த போது அவனுக் குக் கொடுத்த மரியாதைக்கு ஒப்ப, தங்களின் தலைகளைத் தாழ்த்தி வணங்கி மரியாதை செய்த னர். பழங்காலத் தில் சித்தர் பெரு மக்கள், இந்த நாபிக் கொடியிலிருந்து இறந்தவர் களின் அறிவாற்றல், மதிநுட்பம், உடற்கூறு ஆகியவை சேர்ந்த புதிய கருவை உருவாக் கும் சூட்சும அறிவியலைத் தங்களின் சீடர் களுக்கும் வைத்தியர்களுக்கும் கற்றுக்கொடுத் திருந்தனர்.
இம்முறைகளை மிக ரகசியமாக அரச வைத்தியர்கள் பாதுகாத்துவந்தனர். அது என்னவெனில்- இந்த நாபிக்கொடியைப் பொடித்துத் தூளாக்கிக்கொண்டு, அதனை சம பாகமுள்ள இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்வார்கள். அதில் ஒரு பகுதியுடன், அப்பொடியின் அளவில் பத்து மடங்கு கூவிள மரவேர்ப்பட்டை, ஐந்து மடங்கு சிவகரந்தைப் பொடி, ஐந்து மடங்கு சிவனார்வேம்புப் பொடி, 15 மடங்கு சிறுநெருஞ்சிப்பூவின் பொடி, பத்து மடங்கு கோரைக்கிழங்குப் பொடி, பத்து மடங்கு சீந்தில்கொடியின் பொடி போன்றவற்றைக்கொண்டு, குழித்தைலம் இறக்கி எடுத்துவைத்துக் கொள்வார்கள். இதற்கு ஆண்பாக மருந்தென்று பெயர்.
இதேபோன்ற மற்றொரு பாகத்துடன், நான்கு மடங்கு முல்லைப்பூ, நான்கு மடங்கு குறிஞ்சிப்பூ, நான்கு மடங்கு மனோ ரஞ்சிதப்பூ, 15 மடங்கு அத்திப்பழம், பத்து மடங்கு பத்துராட்சக் கொட்டை, பத்து மடங்கு அரசமரப் பட்டை, பத்து மடங்கு முருங்கைப் பூ, ஐந்து மடங்கு விஷ்ணு கரந்தை போன்றவற்றைச் சேர்த்து, குழித்தைலம் எடுத்து வைத்துக்கொள்வார்கள். இதற்கு பெண்பாக மருந்தென்று பெயர்.
நிலவால் உயிரினப் பரிமாணம்!
இப்புவியில், ஆண் மக்களை சூரியகலை வித்துகள் என்றும், பெண் மக்களை சந்திரகலை வித்துகள் எனவும் சித்தர்கள் அழைத்தனர். சூரிய குடும்பத்திலுள்ள கோள்களிலேயே தலைசிறந்த கோள் புவி மட்டுமேயாகும். புவியிலிருந்து பார்த்தால், சந்திரனும் சூரியனும் ஒரே அளவில் தோன்றும். மற்ற கோள்களில், சந்திரனும் சூரியனும் வெவ்வேறு அளவுகளில் தோன்றும். அதாவது, புவியிலிருந்து பார்க்கும்போது சூரிய- சந்திரர்களின் குறுக்குவிட்ட அளவு ஒரே அளவில் இருப்பதாகத் தோன்றும். இதனை சித்தர்கள், சூரிய கிரகணம் நடக்கும் சமயத்தில், நிலவானது சூரியனை முழுமையாக மறைத்துவிடும் நிகழ்விலிருந்து கண்டறிந்தனர். அதாவது சூரிய வட்டமும் சந்திர வட்டமும் ஒரே அளவாக இருப்பதை எடுத்துக்காட்டினர். பூமிக்கென நிலவு இருப்பதால் மட்டுமே உயிரினங்கள் தோன்றலாயிற்று என்று நம்பினர். நிலவு இல்லாதிருந்தால், தற்போது புவியிலிருக்கும் உயிரினப் பரிணாமங்கள் ஏற்பட்டிருக்காது எனக் கூறினர்.
ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி யானது, நிலவின் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட சுழற்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுகிறது என்ற ஆச்சரியமிக்க கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர். இதேபோன்று, பெண்களின் கர்ப்ப நாட்கள் இந்த சந்திரகலைகளின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டுதான் அமைகிறது. அதாவது ஒரு அமாவாசை தினத்திற்கும், பௌர்ணமி தினத்திற்கும் இடைப்பட்ட நாட்களின் பத்து மடங்குதான் பெண் கருசுமக்கும் காலமென சித்தர் கள் உறுதிபடக் கூறியுள்ளனர்.
அதாவது, ஒரு பெண் கருவுற்ற நாளிலிருந்து 9 மாதம், 9 நாள், 9 மணிநேரம், 9 வினாடி முடிந்தவுடன் குழந்தை யைப் பெற்றெடுப்பாள். இப்புவியுலகப் பெண்களின் படைப்புகள் அனைத்தும் சந்திரனின் கூறுகளை அடிப்படையாக வைத்தே அமையும். ஆகவே பழங்காலத்தில் சந்திரனை வைத்துதான் சக்தி வழிபாட்டு நாள் வரையறுக்கப்பட்டது.
அடுத்து, பெண்பாகக் குழித்தைல மருந்தில் அத்திப்பழம் சேர்ப்பதற்குக் காரணம் என்னவெனில், அத்திமரம் என்பது பெண் சாரமுள்ள மரம். சந்திர ஒளியை அதிக அளவு உட்கிரகிக்கும் ஆற்றலுடையது. இது, சந்திர ஒளியில் பிரம்மாண்டமாக ஒளிர்ந்து காட்சிதரும்.
அத்திமரக் கட்டிலில் தம்பதியர்!
நீர்த்தன்மையுள்ளது அத்திமரம். அதை வைத்திருக்க வைத்திருக்க கெட்டியாகிக்கொண்டே போகும். மற்ற மரங்கள் யாவும் நீருக்குள் ஊறித் தங்கள் பலத்தை இழந்துவிடும். அத்தி, நீருக்குள்தான் அதிக பலத்தைப் பெறும். எனவேதான் ஆதி வேளாண் குடிகள், வளமிக்க ஆற்றுப்பகுதிகளில் தங்கள் நகரங்களை வடிவமைக்கும்போது, குடிநீர் எடுப்பதற்காக உறை கிணறுகள் தோண்டுவார்கள். அப்போது அத்திமரத் தோப்பிற்குள் இருக்கும் அகன்ற அத்தி மரத்தை வெட்டியெடுத்து வந்து, அதன் நடுவே குடைந்து, வட்ட வடிவ மர உறையை உருவாக்கிக்கொள்வார்கள்.
உறை கிணறு தோண்டப்படும்போது, அக்குழியில் முதன்முதலில் அத்திமர உறையை இறக்குவார்கள். பிறகு அதன்மீது, அதே அளவு வட்ட வடிவமுள்ள சுட்டமண் உறைகளை இறக்கி, அதன் நடுவே மணலைத் தோண்டுவார்கள். மணலைத் தோண்டத் தோண்ட, அத்தி உறை கீழே இறங்கிக்கொண்டே போகும். அதன்மீது ஒன்றின்மேல் ஒன்றாக சுட்ட மண் உறைகளை அடுக்கிக்கொண்டே போவார்கள். தேவையான அளவுக்கு அவ்வுறை கிணற்றில் நீர் வற்றாமல் ஊறிக்கொண்டேயிருந்தால், மேலே வைத்துக்கொண்டு போகும் மண் உறைகளை நிறுத்திக்கொள்வார்கள். அடியில் போடப்பட்ட அத்திமர உறை, நீரில் ஊறி நாளாக நாளாக பலம் வாய்ந்ததாக மாறிக் கொண்டேயிருக்கும். மரம் மற்றும் மண் உறைகளின் வழியே ஊறிவரும் நீர், தூய்மையான குடிநீராக விளங்கும். இந்த அத்தி உறை, உறைகிணறு உள்ள நாள்வரையிலும் பழுதடையாமல் இருக்கும்.
அதேபோல், அத்திமரக் கட்டில்களில் திருமணமான தம்பதியரைப் படுக்கச் செய்வார்கள். அத்திமரம் புவியீர்ப்பு விசையைக் குறைக்கக்கூடிய தன்மையுடையது. மேலும், உடலுக்கும் குளிர்ச்சியைத் தரும். முழுமையான பெண்மையை உணர வைக்கும் ஆற்றலுடையது. எனவே, இந்த அத்தியின் பழமும், அமிர்த சஞ்சீவினி என்றழைக்கப்படும் சீந்தில் கொடியும், ஒரு கருவை உருவாக்கும் அண்ட செல்களில் நாபிக் கொடியிலிருக்கும் அத்துணை கூறு களையும் சேர்க்கும் வல்லமையுடையன. இதேபோல், சிவகரந்தையும் சீந்தில் கொடியும் சேர்ந்து, ஆண்பாக மருந்திலிருந்து ஆண் உயிரணுக்களுக்கு மூதாதையரின் கூறுகளை எடுத்துச் செல்லக்கூடியவை என சித்தர்கள் கூறுகின்றனர்.
அத்தானிடம் கெஞ்சிய கோமேதக இதழ்கள்!
நிலவுக்கும் பூமிக்குமுள்ள தொலைவில், 108 மடங்குதான் சூரியனுக்கும் பூமிக்குமுள்ள தொலைவாக இருக்கிறது என ஆதித் தமிழர்கள் கருதினர். இந்த சூரிய- சந்திர கலைகளைக்கொண்டு கருத்தத்துவம் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் உயிர் உருவாக்க ரகசியங்களை சித்தர்கள் உருவாக்கியுள்ளனர். மேற் சொன்ன ஆண்பாக மருந்தையும் பெண்பாக மருந்தையும் ஐம்பத்து நான்கு, ஐம்பத்து நான்காகப் பிரித்து, மாப்பிள்ளை- பெண் திருமண உடன்பாடு ஏற்பட்டவுடன் இருவருக்கும் கொடுத்துவருவார்கள். மணமகனுக்கு பாலில் கலந்து இரவில் அருந்தச் செய்வார்கள். மணமகளுக்கு தேனில் கலந்து இரவில் சாப்பிடச் செய்வார்கள். இம்மருந்து தொடர்ச்சியாக 54 நாட்கள் இருவருக்கும் கொடுக்கப்படும். இவ்வாறு மறைந்தவர் ஆற்றல்களை மீண்டும் உயிர்ப்பித்து, மறுபிறவியாக புதிய குழந்தையை உருவாக்கலாமென சித்தர்கள் போதித்துள்ளனர். இதற்கு "பள்ளிப்படை உயிர்ப்பு முறை' என்று பெயரிட்டனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தந்தையின் கருப்பொருளை தன் அம்மான் கொணர்ந்து தந்தபோது, அது தனக்கும் தன் இல்லத்தரசியான வருங்கால மனையாளுக்குமான அருமருந்து என்ற மனநிறைவோடு, பொற்கவசமணிந்த தன் இருகைகளால், இளவல் அதனை அன்புடன் பெற்றுக்கொண்டான். பொன்தட்டில் அதை ஏந்திய நிலையில், இரு விழிகளையும் மூடி, தன் தந்தையை நினைத்து வேண்டி னான். "இன்றுபோல் என்றும் அமைதியான சூழலுடன் மக்களைப் பேணிப் பாதுகாக்க, என்னுடனே இருந்து நீங்கள் வழிநடத்த வேண்டும்' என்று, தன் ஆழ்மனதில் தந்தையை நினைத்து தியானித்தான். சுற்றத் தார் அனைவரும் இதே சிந்தனையில் அமைதியாக இருந்தனர். இவ்வமைதியான தருணத்தில், யாரும் எதிர்பாராத வகையில், கூட்டத்திலிருந்து ஒரு கரம் வந்து இளவலின் கைகளில் ஏந்தியிருந்த பொற்பெட்டகத்தைப் பற்றியெடுத்தது.
அதிர்ச்சியில் இளவல் தன் விழிகளைத் திறந்து பார்த்தபோது, அக்கரம் பொன் தட்டிலிருந்து அப்பெட்டகத்தை எடுத்து விட்டது. உடனே, இளவல் சுதாரித்தான். அபரிமிதமான துணிச்சலுடன் மாபாதகம் செய்த அந்தக் கரத்தைத் துண்டித்தெறிய சினங்கொண்ட சிங்கமாய் ஒரு நொடிப் பொழுதில் அக்கரத்தை விரைந்து பற்றி னான். அதனைக்கண்டு அனைவரும் அதிர்ந்தனர். தான் பற்றிய கரத்தை நழுவவிடாமல், இரும்புக்கரம்கொண்டு இறுக்கினான். இறுகிய கரத்திற்குள் துவண்டு நெளிந்தது ஒரு வெண்தந்த நிறத்திலிருந்த பெண்மை மாறா பிஞ்சுக்கரம். அக் கரத்தின் வழியே இளவல் தன் கண்களை விரைந்து செலுத்தினான். பஞ்சனைய முகில்மீது துஞ்சும் விண்மீன்களோடு, கொஞ்சும் இளங்கூன் பிறைபோல் வஞ்சி, தன் இடை வளைத்து வலக்கரத்தால் பொற்பேழையையும், இடக்கரத்தால் இளவலின் அம்மான் தோளையும் பற்றியிருந்தாள்.
மஞ்சுக்குழல் தவழ்ந்த செஞ்சந்தன நுதலில், வஞ்சமறியாமல் விரிந்த விற்புருவங்களுக்குள் அஞ்சி இமைக்கும் இமைகளில், கொஞ்சித் தவழும் விழிகளிடையே தஞ்சம் புகுந்த நாசிகளுக்கடியில், கெஞ்சிய கோமேதக இதழ்கள், "அத்தான் எனக்குத் தாருங்கள்' எனச் சிந்திய மணிமொழிகள், அந்த இடத்தின் அமைதியை அடிமையாக்கி, அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கின. மென்கொடியாளின் கரத்தின்வழி மின்னல் கள் வந்து, இளவலின் மேனியெங்கும் மேய்ந்து விளையாடின. மெல்ல தளர்ந்த இளவலின் கரங்கள் இறுகப் பற்றியது, அம்மான் மகளின் கரங்களிலுள்ள பொற்பேழையை!
களவொழுக்கம் கல்லாமலே கற்பொழுக்கத்திற்குள் புகுந்த இரு உள்ளங்கள் வரும் இதழில்!
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்