"ஐப்பசி அடைமழை; கார்த்திகை கனமழை; கார்த்திகைக்குப்பின் மழையில்லை; கர்ணனுக்குப்பின் கொடையில்லை' என கிராமங்களில் பெரியவர்கள் கூறுவார்கள். ஐப்பசி மாதத்தை ஆச்வினம் மற்றும் ஆச்வயுஜம் என சொல்வதுண்டு. அச்வம் என்றால் குதிரை. (வெள்ளை குதிரை). ஆச்வம் என்றால் குதிரையுடன் தொடர்புடையது எனப் பொருள். ஆச்வயுஜம் என்றாலும் இதுவே பொருள்.

முன்பு அரசாண்ட மன்னர்கள் தசரா விழா (நவராத்திரி) எனும் சக்தி வழிபாடு சமயத்தில், பட்டத்து குதிரைக்கு பொன் நகைகளையும் மாலைகளையும் அணிவித்து வழிபடுவதுண்டு. தசராவை வீர வழிபாடு என மன்னர்கள் காலத்தில் சொல்வதுண்டு. இவ்வருடம் நவராத்திரி சமயத்தில் ஐப்பசி மாதப்பிறப்பு அமைந்துள்ளது. இதனால் இந்த மாதத்தில் காற்றும் மழையும் சற்று அதிகமாக இருக்கும். பொதுவாக இம்மாதத்தில் நெல்லும் உளுந்துப் பயறும் அதிகமாக விளையும். ஆச்வினம் என்ற சொல்லில் ஆசு + இனம் - அதாவது விரைவில் சூரியனை மறைப்பது என்கிற பொருளும் இருப்பதால் இம்மாதத்தில் மழை மிகுந்து பெய்து, சூரியனை அடிக்கடி விரைவில் மறையச் செய்யும்.

அம்பிகைக்கு உகந்த மாதமான ஐப்பசியில்- நவராத்திரி சமயத்தில் அம்பிகையை சிறப் பாக வழிபடுவது நம்முடைய மரபு. சக்தி பீடங்களில்- குறிப்பாக ஆகம பீடமான திருவானைக்கா, சாரதா பீடமான சிருங்கேரி, ஜாலந்தர பீடமான காளஹஸ்தி, மந்த்ர பீடமான கும்பகோணம், பாலா பீடமான வைத்தீஸ்வரன் கோவில், மஹாமாயா பீடமான சமயபுரம், வைஷ்ணவ சக்தி பீடமான ஸ்ரீவைஷ்ணவீ (பஞ்சாப்), காமாஸிகா பீடமான காமாக்யா தேவி (அஸ்ஸாம்), மாயா பீடமான ஹரித்வாரம், ஸ்வர்ண பீடமான கனகதுர்க்கை (விஜயவாடா) போன்ற இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஜகன்மாதாவான அம்பிகை வைத்திருக்கும் ஆயுதங்களைப் பற்றி லலிதா சஹஸ்ரநாமாவில் விரிவாகக் கூறப் பட்டுள்ளது. அதில் ராகஸ்வரூபமான பாசக்கயிற்றை (சுருக்கை) இடது பின்கையில் கொண்டவள் (ராகம் என்றால் ஆசை, பாசம் போன்றவற்றால் ஏற்படும் துன்பம்); குரோதமான அங்குசம் என்கிற ஆயுதத்தை வலது பின்கையில் ஏந்தி இருப்பவள் (குரோதம் என்பது வெறுப்பு, ஆத்திரம் இதனால் ஏற்படும் கோபா வஸ்தை); இடது முன்கையில் வில்லையும், வலது முன் கையில் அம்பு களையும் உடையவள் என விவரிக்கிறது. ஆசை, பாசம், வெறுப்பு, கோபம் போன்ற தீய குணங்களை கருணை வடிவமான அம்பிகையை வழிபடுவதன்மூலம் போக்கிக்கொள்ள வாய்ப்புண்டு. இதைதான் அபிராமிபட்டர் தனது அந்தாதியில்-

Advertisment

adhisakthi

"ஆசைக்கடல் அகப்பட்டு

Advertisment

அருளற்ற அந்தக னகப்

பாசத்தில் அல்லற்பட

இருந்தேனை நின் பாதமென்னும்

வாசக்கமலம் தலைமேல்

வலிய வைத்தாண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லுவேன்

ஈசர் பாகத்து நேரிழையே'

என்று, அம்பிகை அருளால் ஆசைக் கடலைக் கடந்தேன் என கூறுகிறார்.

நவராத்திரி சமயத்தில் ஆயுதபூஜை செய்வது தொன்றுதொட்டு வரும் பழக்கம். இதைத்தான் மன்னர்கள் காலத்திலும் செய்து வந்தனர். தற்சமயம் மன்னராட்சி முறை இல்லாத இந்த காலகட்டத்தில் சில அரசப் பரம்பரையினர்- குறிப்பாக மைசூர் சமஸ்தானம், ராஜஸ்தான் சமஸ்தானம் போன்ற அரசப் பரம்பரையினர் முன்பு பயன் படுத்திய வெண்குடை, சாமரம், சிம்மாசனம், கத்தி, கேடயம், வாள் போன்றவற்றை சிறப் பாகப் பூஜைசெய்து வழிபடும் வழக்கத்தை இன்றும் செய்து வருகிறார்கள். அதில் குறிப்பாக மைசூரில் தசராவை பெரும் விழாவாகக் கொண்டாடுவதுண்டு. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசர் அக்பர்கூட தசரா வைக் கொண்டாடினார். அவர் நவராத்திரி விழாவைக் கொண்டாட, அவருடைய அரசவையில் இருந்த ஆஸ்தானக்கவி, "நவரோஸ்' என்கிற புதிய ராகத்தைக் கண்டுபிடித்தார்.

நவராத்திரியை அடுத்த பத்தாவது நாளான விஜயதசமி வெற்றியைத் தரும் நாளாகும். அதை விஜய+த+சமீ என்று பிரித்தால், வெற்றி தரும் வன்னிமரத்தைக் குறிக்கும். இன்றும் பல கோவில்களில் வன்னி மரம் தலவிருட்சமாக உள்ளது. அங்கு உற்சவ மூர்த்தியை வீரத்திருக்கோலமாக குதிரை வாகனத்தில் அலங்கரித்து கத்தி, அம்பு, கேடயம் போன்ற ஆயுதங்களுடன் ஊருக்கு வெளியே உள்ள காலி மைதானத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அப்போது அங்கு "அம்பு போடுதல்' என்கிற நிகழ்ச்சி நடை பெறும். வன்னி மரத்தில் அம்பெறியும் நிகழ்ச்சி ஒரு வீர விழாவாகக் கருதப்படும்.

ஹயக்ரீவரால் அகத்திய முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட "ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்', வியாச பகவனால் பிரம்மாண்ட புராணத்தின் மூலம் வெளியுலகுக்கு அளிக்கப்பட்டது. இதை நவராத்திரி சமயத்தில் பாராயணம் செய்தால் அம்பிகையில் அருள் கிட்டும். அதேபோன்று ஆதிசங்கரரால் இயற்றப் பட்ட "சௌந்தர்ய லஹரி'யும் ஒரு சிறந்த ஸ்தோத்திரமாகும். மேற்படி இரு ஸ்தோத்திரங்களில் சில சூட்சும மந்திரார்த்தங்கள் இருக்கின்றன. சக்தி வாய்ந்த சில பீஜாட்சரங்கள் சரியான முறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதைப் பாராயணம் செய்யும்போது நிச்சயம் அதற்கான பலன் கிட்டும்.

ஆதிபராசக்தியான அம்பிகையிடமிருந்து தான் மற்ற சக்திகள் தோன்றின என "ஸ்ரீதேவி மஹாத்மியம்' எனும் நூல் நமக்குத் தெரிவிக்கிறது. பராசக்தியே உண்மையான வலிமையுள்ள சக்தி என்பதை ஆதிசங்கரர் தமது சௌந்தர்யலஹரியில் முதல் சுலோகத்தில் தெரிவிக்கிறார்.

"சிவ: சக்த்யா யுக்தோ யதி

பவதி சக்த ப்ரபலிதம்

நசேதேவம் தேவோ

நகலு குஸல: ஸ்பந்திதுமபி

அதஸ்த்வாம் ஆராத்யாம

ஹரிஹர விரிஞ்சாதிபிரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா

கதமக்ருத புண்ய: ப்ரபவதி.'

இதில், பராசக்தி இல்லை என்றால் பரமசிவனுக்கே சக்தியில்லை என உணர்த்து கிறார். முப்பெரும் தேவிகளான துர்க்கை (அம்பிகை), லட்சுமி, சரஸ்வதியை நவராத்திரி நாட்களில் சிறப்பாக வழிபட்டால் நம் வாழ்வில் நிச்சயம் பூரண அருள் கிட்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.