"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பது பழமொழி. பலரும் இதை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொருவரும் தங்களையே உயர்வானவர்களாகக் கருதி முட்டி மோதிக்கொள்கின்றனர். ஆனால் வல்லவர்களில் யாரெல்லாம் நியாயத்துக்காக பாடுபடுவார்களோ அவர்களுக்கு மட்டுமே இறைவன் துணைபுரிவான். அநியாயக்காரர்களை அழித்துவிடுவான். இந்த தத்துவத்தை உணர்த்தும் வகையில்...
ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து, "திருடனாக இருப்பவனுக்கு கெட்டதுதான் நடக்கும்' என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் "இல்லை, நல்லதும் நடக்கும்' என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குரலைக் கேட்டு அங்கு வந்த குருநாதர், அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்க ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார்.
ஒரு போர்வீரன் தன் உயரதிகாரியின் மனைவியைக் காதலி−த்தான். அது உயரதிகாரிக்குத் தெரிந்தால் மரண தண்டனைக்கு ஆளாவோம் என்று அஞ்சி அதிகாரியின் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவி யுடன் ஓடிவிட்டான்.
பின்னர் இருவரும் சந்தோஷமாக வாழ்வதற்குத் திருடர்களாக மாறினர். சிறிது காலம் நிலைத்த சந்தோஷம் விரைவில் முடிவுக்கு வந்தது. ஒரு நாள் போர்வீரனை உதறிவிட்டு அந்தப்பெண் ஓடிவிட்டாள். மனமுடைந்த போர்வீரன் அருகிலி−ருந்த ஊரில் பிச்சையெடுக்க ஆரம்பித்தான். தனது வாழ்நாளில் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, சில நல்ல காரியங்களைச் செய்ய முடிவெடுத்தான். அப்போது ஒரு குன்றின்மீது ஆபத்தான சாலை இருப்பதும், அச்சாலை வழியே சென்ற பலர் மரணமடைந்ததும் அவனுக்குத் தெரியவந்தது. அதனால் அந்த மலைவழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்குப் பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டும் வேலையையும் செய்துவந்தான்.
பல ஆண்டுகள் கடந்தன. சுரங்கப்பாதையும் அகலமானது. வேலை முடியும் தறுவாயில் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டான். அதாவது உயரதிகாரியின் மனைவியைக் கவர்ந்து வந்தானல் லவா? அவரது மகன் கண்களில் அகப்பட்டான். தந்தைக்கு துரோகம் செய்தவனைப் பழிதீர்க்கும் கோபம் அவனது கண்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே சரணடைந்தான் போர்வீரன். "உன் கோபம் நியாயமானதுதான். ஆனால் பின்வரும் தலைமுறையினருக்குப் பயன்படும் வண்ணம் இந்த சுரங்கப்பாதையை வெட்டி முடித்ததும் என்னைக் கொன்றுவிடு' என்று உருக்கமாக கோரிக்கை வைத்தான். அதன் படி... எஞ்சியிருக்கும் சுரங்க வேலைகளை வேகமாகச் செய்ய ஆரம்பித்தான். எத்தனைக் காலம்தான் பழிவாங்கும் கோபம் இருக்கும்? அதனால் கோபம் படிப்படியாகக் குறைந்து, போர்வீரனுடன் சேர்ந்து அவனும் சுரங்க வேலைகளைத் துரிதப்படுத்தினான். கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுகாப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர்.
போர்வீரன் கத்தியுடன் சரணடைந்தான். தன்னைக் கொன்றுவிடும்படி கேட்டுக் கொண்டான். முன்னர் கோபத்தினால் சிவந்த அதிகாரி மகனின் கண்கள் இப்போது கண்ணீரால் சிவக்க ஆரம்பித்தது. "என் அன்னையை ஏமாற்றிய போர்வீரனுக்கும், மற்ற உயிர்களைக் காப்பாற்ற நினைக்கும் உனக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இப்போது நான் உன்னைக் கொன்றால் பழியும் பாவமும் என் தோள்களில் விழுந்து விடும். அதை என்னால் சுமக்க முடியாது. ஆகவே மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்து உன் பாவங்களைப் போக்கிக்கொள்' என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
இக்கதையைக் கூறிய குருநாதர், "திருடனாக இருந்து, திருந்தியபின் நல்லதே நினைத்தால் அவனுக்கு நல்லதே நடக்கும் என்பதை இந்தக் கதை தெளிவாக விளக்குகிறதல்லவா?' என்றார்.
நல்லது நினைத்தால் எவராயினும் நல்லதே நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் திருத்தலம்தான் மங்கைநல்லூர் ஸ்ரீமங்களபரமேஸ்வரர் திருக் கோவில்.
இறைவன்: மங்கள பரமேஸ்வரர்.
இறைவி: மங்கள பரமேஸ்வரி.
விசேஷமூர்த்தி: ஜுரஹேஸ்வரர்.
புராணப்பெயர்: மங்களபுரி, மங்கைநல்லூர்.
ஊர்: மேலமங்க நல்லூர்.
விநாயகர்: மங்கள விநாயகர்.
தீர்த்தம்: மங்களத் தீர்த்தம்.
தலவிருட்சம்: வில்வமரம்.
சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இவ்வாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலமான அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூருக்கும், வியாழனை தேவகுருவாக நியமிக்கப் பட்ட பெருஞ்சேரி தலத்திற்கும் நெருங்கிய தொடர்புடைய திருத்தலம். காவேரி தென்கரைத் தலங்களில் வைப்புத்தலமாகத் திகழ்வதும், தமிழ்நாடு அரசு இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் மங்கள பரமேஸ்வரர் திருக்கோவில்.
தலவரலாறு:
ரிஷிகள் அனைவரும் தவமிருக்க ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்து தருமாறு பிரம்மாவிடம் முறையிட்டனர்.
அப்போது பிரம்மா தர்ப்பையினால் ஒரு வளையம் செய்து, "இதை வானிலே வீசுகிறேன். அது பூமியில் எங்கு விழுகிறதோ அங்கு தவம் செய்யுங்கள்' என்று சொல்லி−, "ஓம் நமசிவாய' மந்திரத்தை உச்சரித்து வானில் வீசினார்.
அது பூமியில் விழுந்த இடம் தாருகாவனம்.
(தற்போதுள்ள பெருஞ்சேரி). தாருகாவனம் என்றால் தர்ப்பையினாலான வனம்; தேவதாரு மரங்கள் அடர்ந்த சோலை என்று பொருள்.
அந்த தாருகாவனத்தில் 48,000 முனிவர் களும் யாகம், தவம் செய்து தங்களது தவ வலி−மையைக் கூட்டிக்கொண்டனர். அதன்பின் தங்களால் தான் உலகமே இயங்கு கிறது என்று ஆணவம் கொண்டனர்.
அவர் களது ஆணவத்தைப் போக்க சிவன் பிட்சாடனராகவும், திருமால் மோகினி அவதாரத்துடனும் வந்தனர். இதற்கிடையில் சிவனையே அழித்துவிட்டால் என்ன என்றெண்ணிய ரிஷிகள், பெருஞ்சேரி யில் ஆபிசார ஹோமம் செய்தனர். ஹோமத் திலி−ருந்து மான், மழு, சர்ப்பம், தீ முதலி−யவற்றைத் தோற்றுவித்து ஈசன்மேல் ஏவினர்.
அவற்றையெல்லாம் சிவபெருமான் அணிகலன்களாக்கிக் கொண்டார். ஹோமத்தின் உச்சகட்டமாக யானையை ஏவிவிட்டனர். சிவபெருமான் பிரம்பால் யானையின் மத்தகத்கை ஒரு தட்டு தட்டினார்.
அதன்விளைவு- யார் ஏவிவிட்டார்களோ அவர்களையே அழிக்க யானை அலறி ஓடியது. யானை திரும்பி வருவதைக்கண்டு ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் மரண பயத்தால் இங்குமங்கும் ஓடினர். இதனை முன்னரே எதிர்பார்த்த அந்த 48,000 மகரிஷிகளில் ஒரு மாமுனிவர், ஆபிசார ஹோமம் நடந்த பெருஞ்சேரிக்கு மேற்கேயும், ஏவிவிட்ட யானையை சிவன் திருப்பியனுப்பிய வழுவூருக்கு தெற்கேயும் ஒரு இடத்தைத் தேர்வு செய்து, ரிஷிகளையும் ரிஷிபத்தினிகளையும் காப்பாற்றும் நல்ல எண்ணத்தில் ரகசியமாக லி−ங்க வழிபாடு மேற்கொண்டு வந்தார்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரக் குறியீடு உள்ளது. அதன் அடிப்படையில் பூரம், மக நட்சத்திரக் குறியீட்டை செப்புத்தகட்டில் தனித்தனியே எழுதி, அதற்கு அபிஷேக வழிபாடுசெய்து, பூர நட்சத்திரத் தகட்டை பூமியில் புதைத்து அதன்மீது சுவாமியை கிழக்கு நோக்கியும், மக நட்சத்திரத் தகட்டை பூமியில் புதைத்து அதன்மீது அம்பாளை தெற்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்து, மங்கள பரமேஸ்வரர், மங்கள பரமேஸ்வரி என்று திருநாமம் சூட்டி, ருத்ர ஹோமம் மற்றும் பலவகை மலர்களைக் கொண்டு புஷ்ப குங்கும அர்ச்சனை செய்து ஒரு மண்டல காலம் வழிபட்டார்.
"மகத்தில் மங்கை, பூரத்தில் புருஷன்' என்ற ஜோதிடப் பொன்மொழிக்கேற்ப, திருமணத்திற்கு தசவிதப் பொருத்தங்கள் பார்ப்பதுபோல் அனைத்து வகையிலும் சுவாமி, அம்பாளுக்குப் பொருத்தம் பார்த்து, அனைவரும் பயன்படும் விதத்தில் வேத பாராயணம் முழங்க மங்களங்கள் ஒருங்கே அமையப் பெற்ற நல்லூராக மாறியது.
இதற்கிடையில் ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் தங்களது தவறை உணர்ந்து வழுவூர் ஈசனிடத்தில் தஞ்சமடைந்து மரணபயத்திலி−ருந்து விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டனர். ஈசன் அசரீரியாக, "நாம் இருக்கும் இடத்திலிலி−ருந்து தெற்குப்புறம் செல்லுங்கள். அங்கு உங்களில் ஒருவர் என்னைப் பூஜித்துக் கொண்டிருக்கிறார். அங்கு சென்று வழிபட்டால் உங்களது குறைகள் நீங்கும். அந்த யானையை நான் பார்த்துக் கொள்கிறேன்....' என்றார். அப்படியே அவர்கள் மங்கைநல்லூருக்கு மண்டல பூஜை நிறைவு பெறுவதற்கு முன்தினம் வந்தனர்.
அதேசமயம் யானை வழுவூரை நோக்கிச் சென்றது. ஈசன் அக்னி சொரூபமாக குழந்தை வடிவெடுத்து யானையின் வாயினுள் புகுந்தார். அந்த நாள் ஆயில்ய நடசத்திரம். உலகமே இருண்டது. யானை வ− தாங்க முடியாமல் இங்குமங்கும் திணறி, வழுவூர் பஞ்ச பிரம்ம தீர்த்தத்தில் விழுந்தது. மறுநாள் (மாசிமகம்) யானைத் தோலை உரித்து வீரச்செயல் புரிந்து கஜசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருட்காட்சி தந்தார்.
அதேசமயம் மக நட்சத்திர நாளில் மண்டல பூஜை நிறைவுற்று மங்கள பரமேஸ்வரி சமேத மங்கள பரமேஸ்வரருக்கு மகா தீபாராதனை செய்து ரிஷிகள் பலரும் வழிபட்டு, நிம்மதிப் பெருமூச்சுடன் தாருகாவனம் சென்றனர்.
பின் உலக நலன் கருதி வழிபட்டு இறுதிக்காலத்தை இனிதே கழித்தனர் என்று வழுவூர் மகாத்மியம் சொல்கிறது.
அவரவர் ஜென்ம நட்சத்திரக் குறியீடுகளை தினமும் பார்த்து வந்தாலோ பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம். இதற்கான ஆதாரம் புராண இதிகாசங்களில் உள்ளது.
வெற்றிதரும் ஜென்ம நட்சத்திரக் குறியீடுகளை நாம் வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடை, அறிமுக முகவரி அட்டை, கடித முகவரி, ஏடு போன்றவற்றில் சின்னங்களாகப் பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றிபெறலாம். இதற்கு இதிகாசம் என்னசொல்கிறது என்றால்-
பகவான் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணி. அந்த நட்சத்திரத்தின் உருவம் தேர். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மகாபாரதப் போரில் வெற்றி தேடித்தந்தார்.
ராமரின் நட்சத்திரம் புனர்பூசம். அந்த நட்சத்திரத்தின் உருவம் வில். ராமர் வில்லேந்தி இராவணனை வெற்றி கொண்டார்.
வாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். அந்த நட்சத்திர வடிவம் மூன்று பாதச் சுவடுகள் என குறிக்கப்பட்டுள்ளது. வாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து, மூன்றா வது அடியை மகாபலி− சக்ரவர்த்தியின் தலைமேல் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார். எனவே வாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.
அனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலம். மூல நட்சத்திர வடிவம் சிங்கத்தின் வால். அனுமன் கையிலுள்ள ஆயுதம் சிங்கத்தின் வால்போன்ற வடிவில்தான் இருக்கும்.
ருத்ரனின் நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திர வடிவம் மண்டையோடு. ருத்ரன் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவர்.
சிறப்பம்சங்கள்
இவ்வாலயத்தில் "மகத்தில் மங்கை, பூரத்தில் புருஷன்' என்ற அடிப்படையில் அம்பாள் மங்கள பரமேஸ்வரி எமனின் திசையான தெற்கு நோக்கி வீற்றிருந்து மரண பயத்திலிலிலிருந்து விடுவித்து மங்கள வாழ்வை அருள்பவளாகத் திகழ்கிறாள்.
சுவாமி மங்கள பரமேஸ்வரர் எழுச்சியையும் மலர்ச்சியையும் தருபவராக கிழக்கு நோக்கி பன்னிரு ராசியினரையும் மகிழ்விக்கும் வண்ணம் அருள்பாலிக்கிறார்.
மங்களத் தீர்த்தம் தெளிவைத் தருகின்ற மகிமை வாய்ந்த தீர்த்தம்.
தீராத பிணி, ஜுரம் முதலி−யவற்றால் அவதிப்படுபவர்கள் இத்தல ஜுரஹேஸ்வரருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்ய நலம்பெறுவர். ஜுரஹேஸ்வரர் எதிரே மேற்கு நோக்கி காக்கும் தெய்வமான மகாவிஷ்ணு அருள்புரிகிறார்.
கோமுகித் தீர்த்தம் விழுமிடத்தில் கோஷ்டத்தில் தாளமிட்டபடி திருஞானசம்பந்தர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகம், பூர நட்சத்திர நாளில் கட்டளைதாரர் அடிப்படையில் அனைத்து ராசியினரும் பயன்படும்விதத்தில் விசேஷ அபிஷேக அர்ச்சனை உண்டு.
மாசி மகம், மகாசிவராத்திரி, கும்பாபிஷேக தினங்களில் சிறப்பு ஹோம வழிபாடுகள் நடைபெறுவதோடு, சிவாலயத்திற்குரிய அனைத்து பூஜைகளும் சிவாகம விதிப்படி நடைபெறுகிறது.
இத்தலத்தின் மேற்கே அக்ரஹாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. மற்ற ஆலயங்களில் லட்சுமணர் மற்றும் சீதாப்பிராட்டியுடன் ஸ்ரீஆஞ்சனேயர் பணிந்துநிற்கும் வகையில் திருக்காட்சி நல்கும் ஸ்ரீ ராமபிரான், இங்கு அரக்கர்கோனாகிய விபீஷணருடன் இணைந்துள்ள காட்சி வேறு எங்கும் காணற்கரிய ஒன்றாகும்.
மங்கையர்க்கு மரணபயம் நீக்கி மணப்பேறு, மக்கட்பேறு நல்கும் தலமாம்- மானடி சேர்ந்தார் எவராயினும் அவர்கட்கு அதிவேக செயல்திறனைத் தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் தலமாம் மங்கைநல்லூரில் உறையும் மங்களபரமேஸ்வரர் உடனுறை மங்கள பரமேஸ்வரியை மனதார வணங்குவோம்.
காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத்தொடர்புக்கு: சிவாகம ரத்தினம் என். கல்யாண சுந்தர சிவாச்சார்யார், ஸ்ரீமங்களபரமேஸ்வரர் திருக்கோவில், மேலமங்கநல்லூர், குத்தாலம் தாலுகா.
மங்கைநல்லூர் (அஞ்சல்), நாகை மாவட்டம்- 609 404. அலைபேசி: 99408 54976, 80729 71076.
அமைவிடம்: மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மங்கநல்லூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து கோமல் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் சென்றால் மேலமங்கநல்லூரை அடையலாம். அங்கு ஆலயம் உள்ளது.