போலரா மங்களாதேவி ஆலயம் கர்நாடக மாநிலத்தில், போலரா என்னும் இடத்தில் இருக்கிறது. மங்களூரிலிருந்து தென்கிழக்கில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் உள்ளது.

இந்த ஆலயத்தில் குடியிருக்கும் அன்னயின் பெயர் மங்களாதேவி. அந்த அன்னையின் பெயரில்தான் மங்களூர் என்ற ஊரே அழைக்கப்படுகிறது.

bb

Advertisment

பரசுராமர் இந்த ஆலயத்தைக் கட்டியதாகப் புராணத்தில் கூறப் பட்டிருக்கிறது. கி.பி. 9-ஆவது நூற்றாண்டில் அலுபா வம்சத்தைச் சேர்ந்த குந்தவர்மன் என்ற அரசன் இந்த கோவிலைப் புதுப்பித்துக் கட்டினான். கேரள கட்டடக்கலை அமைப்புடன் கட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் மரப்பலகைகளையே இந்த ஆலயம் கட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார் கள்.

அன்னை மங்களாதேவி அமர்ந்திருக்கும் தோற்றத்தில் காட்சியளிக்கிறாள். இந்த ஆலயம் காலை 7.00 மணியிலிருந்து பகல் 1.00 மணிவரையிலும், மாலை 4.00 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரையிலும் திறந்திருக்கும்.

கேரளத்தின் மலபார் பகுதியைச் சேர்ந்த பரிமளாதேவி என்னும் அரசி, மத்ஸ்யேந்திரநாத் என்னும் முனிவரின் சிஷ்யை. இந்த ஊருக்கு வந்த அவளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட, அவள் இறந்து விட்டாள். அவளின் நினைவாக, மத்ஸ்யேந்திரநாத்தின் உதவியுடன் இந்த ஆலயத்தைப் புதிப்பித்துக் கட்டினான் மன்னன் குந்தவர்மன்.

Advertisment

இந்த கோவிலைப் பற்றி இன்னொரு கதையும் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் மத்ஸ்யேந்திரநாத்,போரக்நாத் என்னும் இரு துறவிகள் நேபாளத்திலிருந்து இந்தப் பகுதிக்கு வந்தார்கள்.

அவர்கள் நேத்ராவதி ஆற்றைக் கடந்து வந்தனர். அவர்கள் கடந்துவந்த அந்த இடம் இப்போது போரக்தண்டி என்று அழைக்கப்படுகிறது. நேத்ராவதி ஆற்றின் கரையில் ஓரிடத்தில் அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்த இடத்தில்தான் முனிவரான கபிலர் இருந்திருக்கிறார்.

அந்த இரு துறவிகளையும் வந்து பார்த்தான் மன்னன் குந்தவர்மன். மன்னனின் ஆட்கள் அந்த இடத்தைத் தோண்ட, மண்ணுக்குள்ளிருந்து ஒரு லிங்கம் அவர்களுக்குக் கிடைத்தது.

அத்துடன் பரசுராமர் கட்டிய மங்களாதேவி ஆலயத்தைப் பற்றிய தடயங்களும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து குந்தவர்மன் அந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துக் கட்டினான்.

இந்த ஆலயத்திற்கு அருகில் கத்ரி என்றொரு ஆலயமும் இருக்கிறது. புகழ்பெற்ற யோகி ராஜ் மடமும் அங்குள்ளது. பட்டாடைகளை வைத்து அங்கு பூஜை செய்கிறார்கள்.

விஷ்ணு பகவானின் அவதாரமான பரசுராமர் கட்டிய ஆலயம் செடிகள், கொடிகள், புதர்கள் ஆகியவற்றால் மூடப்பட, புதிப்பித்துக் கட்டப்பட்ட இந்த ஆலயம் இரு அடுக்குகளைக் கொண்டது. கோவிலின் மத்திய பகுதியில் கருவறை இருக்கிறது. அன்னை மங்களாதேவிக்கு இடப் பக்கத்தில் சிவலிங்கம் உள்ளது.

நவராத்திரி, தசரா ஆகிய பண்டிகைகள் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. அந்த சமயத்தில் ஒன்பது நாட்கள் விசேஷ பூஜைகள் நடக்கும். ஏழாவது நாளன்று அன்னை மங்களாதேவி, சண்டிகை வடிவத்தில் காட்சியளிக்கிறாள். அன்று ஏராளமான பக்தர்கள் அன்னையின் அருளைப் பெறுவதற்காக வருவார்கள்.

எட்டாவது நாளன்று சரஸ்வதியின் வடிவத்தில் காட்சியளிப்பாள் மங்களாதேவி.

ஒன்பதாவது நாளான மகாநவமியன்று வாக்தேவி வடிவத்தில் மங்களாதேவி காட்சியளிக்க, அவளை பக்திப்பெருக்கு டன் வழிபடுவார்கள் மக்கள். அந்த நாளில் ஆயுதபூஜை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது பல்வேறு ஆயுதங்களை வைத்துப் பூஜைசெய்யப்படும். அந்த சமயத்தில் சண்டிகா யாகம் செய்வார்கள்.

பத்தாவது நாளன்று ரதோற்சவம் நடக்கும். தேர்த் திருவிழா நடைபெறும் அந்தநாள் தசரா என்று அழைக்கப் படுகிறது. அந்த நாளன்று பிரம்மாண்ட மான தேரில் அமர்ந்து அன்னை ஊர்வலம் வருவாள். அவளை பாரதத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் மனமுருக வழிபடுவார்கள். தங்களின் சிரமங்களைப் போக்கி, பிரகாசமான எதிர்காலத்தைத் தரும்படி அன்னையை வேண்டிக் கொள்வார்கள்.

மங்களாதேவியை வழிபடும் பக்தர்கள், இந்த ஆலயத்திலிருக்கும் வன்னி மரத்தை யும் வழிபடுவார்கள். வன்னி மரத்தின் இலைகளை அர்ச்சகர்கள் பிரசாதமாக அளிப்பார்கள்.

சென்னையிலிருந்து 890 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் மங்களூரை அடையலாம். அங்கிருந்து மங்களாதேவி ஆலயம் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது அன்னையை தரிசித்து அவளது பேரருளைப் பெறுங்கள்!