ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி 13-11-2020

ரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, வாழ இருப்பிடம் ஆகியவைதான். அதன்பிறகு, நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென்னும் எண்ணம் தானே வந்துவிடும். அதிலும், இறக்கும்வரை நோயின்றி ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டுமென்னும் எண்ணம் கூடுதலாக வரும். நோயை எதிர்த்துப் போராட மனிதன் மருத்துவத்தை நாடும் அதேவேளையில், இறைவனின் அருளும் இருந்தால்தான் சாத்தியமென்பதை அனுபவத்தால் உணர்கிறான்.

நோயைத் தீர்க்கும் கடவுளாக சைவர்கள் வைத்தீஸ்வரரை வழிபடுவதுபோன்று, வைணவர்கள் திருமாலின் அவதாரமான தன்வந்திரியை வழிபடுவது வழக்கம். "வைத்யோ நாராயணோ ஹரி' என்று முன்னோர்கள் கூறியுள்ளதால், நாராயணனே தெய்வீக மருத்துவராகிறார். ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபதியாக விளங்குபவர் தன்வந்திரியே! இவரை வழிபடுவதன்மூலம் பிணிகள் நீங்கும். ஆரோக்கியமான நிலை ஏற்படும்.v சமீபத்தில் உலகமெங்கும் "கொரோனா' எனும் தொற்றுநோய் பரவி லட்சக்கணக்கான மனிதர்களை இறக்கச் செய்தது. இந்தத் தொற்றுநோயிலிருந்து மீண்டுவர மனிதன் போராடிவருகிறான். பொதுவாக, "திரிதோஷங்கள்' எனப்படும் வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்றும் மிகுதியானா லும் குறைந்தாலும் நோய் ஏற்படுமென மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாத நோய்க்கு வாயுதேவனையும், கபத்துக்கு சந்திரனையும், பித்தக் கோளாறுக்கு சூரியனையும் அதிதேவதைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டனர். இம்மூன்று தோஷங்களைப் பற்றி திருவள்ளுவரும் தமது குறளில்-

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

Advertisment

வளிமுதலா எண்ணிய மூன்று' (941)

எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதர்வண வேதத்தை முறையாகக் கற்ற பரத்வாஜ மகரிஷிக்கு, தேவலோகத்தின் தெய்வீக மருத்துவர்களான அஸ்வினி தேவர்களால் ஆயுர்வேத மருத்துவக்கலை முதலில் உபதேசிக்கப்பட்டு, அவர் அதை ஆங்கீரசர், ஆத்ரேயர் போன்ற மகரிஷி களுக்கு போதித்தார். அவர்கள்மூலம் அது வழிவழியாகத் தொடர்ந்தது. வேத மந்திரங் களுக்கும் ஆயுர்வேதத்துக்கும் நிறைய தொடர்புண்டு.

Advertisment

danvandri

தன்வந்திரி பகவானின் அம்சமாக காசி அரசப் பரம்பரையில் தோன்றிய மருத்துவ அறிஞரான திவோதாஸர், தமது சீடர்களுள் ஒருவரான சுஸ்ருதர் என்ற முனிவருக்கு ஆயுர்வேதத்தின் மற்றொரு சிகிச்சை முறையான அறுவை சிகிச்சை முறையை உபதேசித்தார். இந்த முனிவர் "சுஸ்ருத ஸம்ஹிதை' என்ற ஒப்பற்ற மருத்துவ நூலை எழுதினார்.v நம்முடைய பண்டைய தமிழர்களும் மருத்துவத்துறையில் சிறந்துவிளங்கினார்கள் என்பதற்கு சான்றாக, சங்கநூலான "பதிற்றுப் பத்'தில், போரில் ஏற்பட்ட காயத்தை ஊசி நூல் கொண்டு தைத்தனர் என்பதை,

"மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

சிரல் பெயர்ந்தன்ன நெடுவள் ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பு...'

என்னும் பாடல் கூறுகிறது. மீன் கொத்திப் பறவை நீரில் விழுந்து விரைவில் மேலே எழுவதைப்போல, மார்பில் கிழிந்த தோல் ஊசியால் தைக்கப்பட்டது என்னும் பொருளில் புலவர் பாடியுள்ளார்.

திருமாலின் அவதாரமான தன்வந்திரி யானவர் தேவர்களும் அசுரர்களும் திருப் பாற்கடலைக் கடையும்பொழுது சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்த கலசம் ஏந்திய கைகளுடன் தோன்றினார். ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி திதியன்று (தீபாவளிக்கு முன்பு) தன்வந்திரி அவதாரம் நடைபெற்றதால், அன்றைய தினத்தை தன்வந்திரி ஜெயந்தி எனப் போற்றி வழிபடுகிறோம். வடமாநிலங்களில் 'தன்தேரஸ்" என்னும் பெயரில் வழிபடு வதுண்டு. மத்திய அரசின் சுகாதாரத்துறை (ஆஹ்ன்ள்ட்) தன்வந்திரி ஜெயந்திரியை "தேசிய ஆயுர்வேத தின'மாக அறிவித்துள்ளது. மகாவிஷ்ணுவே மருந்தாக உள்ளார் என்பதை

திருவாய்மொழி பாசுரத்தில்-

"அச்சுதன் அமலனென்கோ?

அடியவர் வினைகெடுக்கும்

நச்சுமா மருந்தமென்கோ'

எனப் பாடப்பட்டுள்ளது.

அதேபோன்று, பெரியாழ்வார் திருவாய் மொழி பாசுரத்தில், ஆயர்பாடி கண்ணனைத் தொழ நம்முடைய பிணிகள் யாவும் தீருமென்பதை-

"உற்றவுரு பிணி நோய்காள் உமக்கொன்று

சொல்லுகேன் கேண்மின்

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்

திருக்கோயில் கண்டீர் அற்றமுரைக்கின்றேன்

இன்னம் ஆழ்விûனாகாள் உமக்கிங்கு ஓர்

பற்றில்லை கண்டீர் நடமின்

பண்டன்று பட்டினம் காப்பே'

என்கிற பாடல்மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

danvanthri

ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு பரவலாகத் தனிக்கோவில்களும், ஸ்ரீரங்கம் போன்ற பிரசித்திபெற்ற வைணவத் திருத்தலங்களில் தனிச் சந்நிதிகளும் உள்ளன. கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவான் கோவில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கேரள மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே ஆயுர்வேத சிகிச்சை பிரபலம். காரணம், அங்குள்ள இயற்கை சூழ்நிலை அதற்கேற்றவண்ணம் அமைந்துள்ளது.

"தன்வந்திரி பகவானை அவரது ஜெயந்தி தினத்தில்-

"ஓம் நமோ பகவதே

வாசுதேவாய தன்வந்த்ரயே

அம்ருத கலச ஹஸ்தாய

ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய

நாதாய ஸ்ரீமகா விஷ்ணவே நம:'

என்கிற மூலமந்திரத்தை ஜபித்து நோயின்றி

இன்புற்று வாழ்வோம்.