கொரோனாவின் பாதிப்பு, இழப்பு, இறப்பென எண்ணிக்கை உச்சம் தொடுகிறது. இப்போதும்கூட தமிழக மக்கள் பெரும்பாலானோரிடம் பயம் என்பது சற்றும் இல்லை. இது மிக ஆறுதலான விஷயம். பயம் என்பது பேய்க் குணமாகும். தைரியம், தன்னம்பிக்கை என்பது கடவுள் குணமாகும். நாம் எதனுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் நமது நல்வாழ்வு இருக்கும்.

பேயுடன் கூட்டணி வைத்தவன் மனநோயாளியாகி விடுவான். கடவுளிடம் கூட்டணி வைத்தவன் ஆரோக்கிய மான ஆனந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரனாவான்.

இப்போது ஒரு சிக்கலான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கிறது.

இங்கு மனிதனின் நடவடிக்கை என்பது நலமாக இருக்கவேண்டும். ஆனால், இங்கே மனிதனின் அறிவு வேலை செய்கிறதா எனக் கேட்டால், இல்லவே இல்லை எனச் சொல்லவேண்டும். ஒழுக்கம் இல்லாதவரிடம் அன்பிருக்காது, அறிவிருக்காது, பக்தி இருக்காது.

Advertisment

எது பக்தி? நூறு விழுக்காடு சுயஒழுக்கமே மிகச்சிறந்த ஆன்மிகமாகும். அன்பு, பக்தி, கருணை, ஒழுக்கம் பற்றியெல்லாம் வாய் மட்டுமே பேசுகிறது. நடைமுறையில் எதிர்மறையாக செயல்படுகிறது. உதாரணமாக, இப்போது பொதுப்போக்குவரத்து தொடங்கிவிட்டது. முன்பைக் காட்டிலும் இப்போது சட்டத்தை மீறும் செயல் அதிகரித்திருக்கிறது. சிக்னலை மீறுவதென்பது மிகவும் கேவலமாக உள்ளது. படித்தவர்- படிக்காதவர் என்னும் வேறுபாடு சட்டத்தை மீறுவதில் இல்லை. படித்தவரே சட்டத்தை பகிரங்கமாக மீறுகிறார்.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்'

Advertisment

என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவன் தனிமனித ஒழுக்கத்தில் உயர்ந்தவனாக இருக்கவேண்டும். தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவனின் பிறப்பானது உயர்குடித் தன்மை வாய்ந்ததாகும். ஒழுக்கம் தவறுபவனின் பிறப்பானது இழிவான தாழ்ந்த பிறப் பாகும்.

நாம் தாய்வழிக் கல்வியை மறந்துகொண்டிருக்கி றோம். தாய்மொழி என்பது அந்த இனத்தின் வரலாறு. எவரும் நெருங்கமுடியாத தனிக் கலாச்சாரத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம். நமது கலாச்சாரத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம். இதற்கெல்லாம் காரணமென்ன? நடைமுறை வாழ்க்கையில் நமது தனிமனித ஒழுக்கம் சிதைந்ததேயாகும்.

பஞ்சமகா பாதகச் செயல்களில் ஒருவன் ஈடுபடுவதற்கு அவன் வளரும் சூழ்நிலையும், வளர்க்கப்படும் விதமுமே காரணமாகும். "பொய், களவு, கள், காமம், கொலை' ஆகியவையே பஞ்சமகா பாதகச் செயல்களாகும். ஒருவன் பசிக்காகத் திருடினா லும் அது பாவமாகும். திருடியதை மறைக்கச் சொல்லும் பொய் அடுத்த பாவச் செயல். ஆகையால், இதற்கு யார் காரணம்? சமுதாயமும், சமுதாயத்தை வழிநடத்துபவர்களும் காரணமாகின்றனர். ஆனால், இப்போது யாரும் பசிக்காகத் திருடவில்லை; பொய் சொல்லவில்லை. சுகமான வாழ்க்கைக்காக பொய் சொல்கிறான். அடுத்த கட்டமாகத் திருடுகிறான். திருடுபவன் கள் (மது) குடிக்கிறான். மது அருந்தியவன் காமவெறி பிடித்து மாதுவைத் (மங்கையை) தேடுகி றான். மது அருந்தி மதியை இழந்து மாதருக்கு பாலியல் துன்புறுத்தலையும், பாலியல் வன்கொடுமைகளையும் செய்கிறான்.

இதை மறைக்கக் கொலைசெய்கிறான்.

இதற்கெல்லாம் காரணம் நமது வாழ்க்கைக் கல்வியின் அடிப்படையை சிதைந்துவிட்டதுதான்.

ஒருபுறம் பக்தியைப் பற்றிப் பேசுகி றோம்... மறுபுறம் பக்தியை எதிர்த் துப் பேசுகிறோம். ஆனால், மூட நம்பிக்கையைவிட கொடூரமாக, பெண்களின் நம்பிக்கையை சிதைத்து சீரழித்துவிட்டு, பக்திமான் வேஷம் போடுகின்றனர் சிலர். ஒன்றை மறந்து விட்டோம். நாம் செய்யும் தவறை யார் பார்க்கப் போகிறார்கள்? நம்மை யார் கேட்கப் போகிறார்களென இத்தகைய பாதகமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்பெல் லாம் ஆரம்பப் பள்ளிக் கல்வியிலும் சரி; பள்ளி உயர்கல்வியிலும் சரி- "நீதிபோதனை வகுப்பு' என்ற பெயரில் தினசரி வகுப்பு இருந்தது. அறம் செய்தல், ஒழுக்கம், நடுநிலைமை தவறாதி ருத்தல் போன்ற உயரிய வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைக் கல்வியாக நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. மேலும், அந்த வகுப்பில் நீதிபோதனையைக் கற்பிக்கும் ஆசிரியர் தினசரி ஏதாவதொரு நீதிக்கதை பற்றியோ, ஏதேனும் ஒரு நிகழ்வைப் பற்றியோ கூறி, அதிலுள்ள நீதியின் தன்மையை மாணவர்களுக்குக் கற்பிப்பார். ஆசிரியர் கற்பித்து முடித்ததும், "இக்கதையின்மூலம் நீ எதைத் தெரிந்துகொண்டாய்?' என்ற கேள்வி கேட்கப்படும்.

இன்றைக்கு அதைப்போன்ற நிலையிருக்கிறதா? அத்தகைய சிறப்புமிக்க கல்வி இருக்கிறதா? தான் கற்றுக்கொண்ட கல்வி சார்ந்து வேலை இருக்கிறதா? எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பாடுகளோடுள்ளது. காரணம், நாம் நமது அடிப்படைக் கல்வியான ஒழுக்கக் கல்வியை மறந்ததேயாகும். ஒழுக்கக் கல்வியை மறந்ததன் விளைவு- மக்களின் மனதில் பொறாமை, துவேˆ மனப்பான்மை, தீங்கிழைத் தல், சட்டத்தை மீறுதல், உதவும் குணமின்மை என பட்டில் நீள்கிறது.

siva

ஒழுக்கத்தின் மாண்பைப் பற்றி திருமூலர்-

"கண்காணி இல்லென்று

கள்ளம் பலசெய்வார்

கண்காணி இல்லா

இடமில்லை காணுங்கால்

கண்காணியாகக் கலந்து

எங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார்

களவொழிந்தாரே'

என்கிறார். கண்காணிப்பவர்- அதாவது, காவலுக்கு ஆளில்லை; கேட்பதற்கும் எவரு மில்லை என திருட்டுத்தனம் பல செய்யும் இயல்புடையவர்கள் மனிதருள் பலர். ஆனால், எல்லாவற்றையும் (நடந்துகொண்டிருக்கும்) கண்காணிப்பவனைக்கொண்டு, காவல் இருக்கின்ற- காப்பாளன் இல்லாத இடம் உலகில் எதுவுமில்லை. அவன் எங்கும் நிறைந் திருக்கிறான். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும், கண்காணித்துக்கொண்டும் இருக்கிறான். அவனே சிவப் பரம்பொருள். இந்தக் காவலனை, உயிர்களின் காப்பாளனைக் கண்டறிந்துகொண்டவர்கள் எத்தகைய துன்பங்களிலிருந்தும், கொடிய தீவினைகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்களாவர்.

நம்மை யாரும் கவனிக்கவில்லையென, எந்தச் சூழ்நிலையிலும் எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது. எந்தத் தவறையும் செய்யக்கூடாது. அதுவே தலைசிறந்த தனிமனித ஒழுக்கம்.

தனிமனித ஒழுக்கம் மேம்படும்பொழுது சமத்துவம் சீராகிறது. ஒழுக்கமே உயர்வுக்கு வழியாகும். ஒழுக்கமே உயிர் வாழும் உடலுக்கு ஆதாரமாகும். அதுவே ஆரோக்கியப் பேரானந்தமாகும். ஒழுக்கம் சிறந்திருக்கும் பொழுது அவருக்கு சுயநலமிருக்காது. சுயநலமில்லாதவருக்கு பொதுநலம் உயர்வாகத் தெரியும். சுயநல விளைவுக்கான ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.

ஒருவர், தான் கட்டிய புது வீட்டில் குடிபுகுந்துவிட்டேன் என்று சொல்லி, என்னை அவரது வீட்டுக்கு வருமாறும், வந்து நல்லதைச் சொல்லுமாறும் அழைப்பு விடுத்தார். அதையேற்று நானும் அவரது புதிய வீட்டுக்குச் சென்றேன். வீட்டைச் சுற்றிப் பார்க்கலாமென்று கூறினார். வீட்டை மிக உயர்ந்த பொருட்செலவில் கட்டியிருந்தார். சொல்லப்போனால், நான்கு வீடுகள் கட்டவேண்டிய பொருட்செலவில் ஒரு வீட்டை மிக அழகாக, நேர்த்தியாக, ஆடம்பரமாக வடிவமைத்திருந்தார்.

ஒவ்வோரிடமாகக் காண்பித்துக் கொண்டே வந்தவர், இறுதியாக ஒரு பெரிய அறையைத் திறந்து, "இதுதான் அய்யா ஸ்டோர் ரூம்' என்று சொன்னார். அங்கே சில பொருட்கள் ஒழுங்காகவும், பல பொருட்கள் ஒழுங்கற்றும் சிதறிக்கிடந்தன. "இந்த அறையில் வேண்டாத பொருட்கள், உபயோகமில்லாத பொருட்களையெல்லாம் போட்டு வைத்துக்கொள்ளலாம்' என்றார்.

ஆனால், நான் பார்த்தவரையில், அந்த அறையில் சிதறிக்கிடந்த பொருட்கள் அனைத்தும் பலருக்குப் பயனுள்ளதாகவும், உபயோகப்படுத்தும் வகையிலும் இருந்தன. இதுதான் இன்றைய நடைமுறை. வாழ்க்கையில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் விஷயம்.

பலருக்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கும், பலவற்றை அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த மானிட உடம்பே மூச்சுக்காற்று வெளியேறியவுடன் வேண்டாது வீசியெறியும் பொருளாகிவிடும். உயிரற்ற இவ்வுடல் இடுகாட்டில் வீசப்படும். முன்பெல்லாம் இறந்த உடலை விறகால் எரியூட்டுவார்கள். அல்லது புதைத்து சமாதி கட்டிவிடுவார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், விமானத்துறையில் பணியாற்றியவர் என்றால், அவரின் சமாதியை விமானம் போன்று கட்டிவிடுவார்கள். காவல்துறை யில் பணியாற்றியவரென்றால் ஒரு காவல் நிலையத்தையே சமாதிபோன்று கட்டி விடுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை பெருகிவிட்டதால், இன்று புதைப்பது, சமாதி எழுப்புவது என்பதெல்லாம் குறைந்து விட்டது. ஒவ்வோர் இடுகாட்டிலும் மின்சாரத் தகனமேடை அமைத்துள்ளனர்.

இறந்தவரின் உடலை அதில் தள்ளிய 20-ஆவது நிமிடத்தில் சுடச்சுட சாம்பலை ஒரு கலயத்தில் போட்டு நம்மிடம் தந்து விடுகின்றனர். முடிந்தது வாழ்க்கை.

எனவே, "ஸ்டோர்' என ஒன்று தேவையில்லை. தனக்குப் பயன்படாத பொருள் வேறொருவருக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பொருளை ஓர் அறையில்போட்டுப் பூட்டி வீணாக்குவதைக் காட்டிலும் பிறருக்குக் கொடுத்து உதவினால், அவர் பயனடைந்து மகிழ்ச்சியடைவார்.

மாட்டின் சாணத்தை எரித்த சாம்பல்கூட திருநீறாகப் பயன்படுகிறது. மனிதர்களின் சாம்பலோ பயனற்றதாகப் போய்விடுகிறது.

கொரோனா எனும் கொடிய வைரஸ் கிருமி மனிதர்களுக்குத் தூய்மையைக் கற்பித்துக்கொண்டிருக்கிறது. தமிழில் ஒரு பழமொழி உண்டு- "சுத்தம் சோறு போடும்.' மனசுத்தம், உடல்சுத்தம் இல்லாத வர்களை பல வைரஸ் தாக்கும். ஆரோக்கி யத்தை அழித்துக் கூறுபோடும். மனம், உடல், புத்தி ஆகியவையெல்லாம் தூய்மையாக இருந்தால் ஆரோக்கிய ஆனந்தம் தரும். எனவே வாழ்க்கைக் கல்வி போற்றப் படவேண்டும். வாழ்க்கைக் கல்வி பயில, வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க, இயற்கையை சுவாசமாகக் கொண்டிருக்கும் இறைபக்தி மிக முக்கியமாகும்.

"தத்துவம் எங்குண்டு

தத்துவன் அங்குண்டு

தத்துவம் எங்கில்லை

தத்துவன் அங்கில்லை

தத்துவ ஞானத்தின்

தன்மை அறிந்தபின்

தத்துவன் அங்கே

தலைப்படும் தானே'

என்பது திருமூலர் வாக்கு.

தத்துவம் என்பது சுயம்பு. தத்துவம் என்பதே மெய்ப்பொருளாகும். மெய்ப் பொருளை அறிவு அறியும்பொழுது அல்லது பகுத்தறியும்பொழுது மெய்ப்பொருளின் தலைவனும் உணரப்படுவான். அங்கே தத்துவமும் வெளிப்படும். தத்துவம் அறியப்படாத நிலையில், தத்துவன் உணரப்படாதவனாகவே இருப்பான். தத்துவ ஞானத்தின் உண்மை உணர்பவர்களுக்கு தத்துவ விளக்கமாகப் பரம்பொருள் எம்பெருமான் சிவத் தத்துவமாக வெளிப்படுவான்.

சட்டத்தை மதித்து நடப்போம். தனிமனித ஒழுக்கத்தைப் போற்றுவோம்- பின்பற்றுவோம். சுத்தமாக இருப்போம். தூய்மையின் அடையாளமான சிவப் பரம் பொருளைப் போற்றுவோம். ஆரோக்கிய ஆனந்தம் பெறுவோம்.