விநாயகர் சதுர்த்தி 10-9-2021

"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

Advertisment

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.'

நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மனநிம்மதி கிடைக்கவும், 16 வகை செல்வங்களும் பெற்று வாழவும் இறைவனை நினைத்து மேற்கொள்வது விரதம். விரத மென்பது ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து, ஐம்புலன்களை அடக்கி, உண்ணாமலிருக்கும் நிலையாகும். விரதமிருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மையடையும்.

விரதங்களைக் கடைப்பிடிப்பதால் ஆன்மிகரீதியான பயனுடன், அறிவியல்ரீதியாக உடலும் உள்ளமும் நலம்பெறும்.

Advertisment

பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விராதாதி நாட்களை திதி மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் கடைப்பிடிப்பது இந்துக் களின் வழக்கம். சாதாரண மனிதர்கள்முதல் மிக உயரிய அந்தஸ்துள்ளவர் கள்வரை, பிரச்சினை வந்தால் அதை வழிபாட்டால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்பதை அறிவார்கள். ஆனால் எத்தகைய வழிபாட்டால் சரிசெய்யமுடியும் என்னும் சூட்சுமம் அறிந்தவர்கள் சிலரே.

திதிகளின் தேவதைகளுக்கு சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகொடுக்கும் சக்தி உள்ளதால், பிறந்த திதிகளுக்கான தெய்வங்களை வழிபாடு செய்துகொள்வது சிறப்பான பலன் களைத் தரும். திதியால் ஏற்படும் கிரகதோஷம் நீங்க அதற்குரிய திதிதேவதைகளை வழிபட்டால் எத்தகைய கடுமையான பாதிப்புகளிலிருந்தும் விடுபடலாம். திதிகளின் அதிதேவதைகளை வழிபாடு செய்தால் அவை அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை, பிணி பீடை, கஷ்டம் என அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கச் செய்யும்.

பொதுவாக அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, திரயோதசி போன்ற சில குறிப்பிட்ட திதிகள் காலத் தால் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கும் வலிமை பெற்றவை. அந்த வகையில் வளர் பிறை சதுர்த்தி திதியின் அதிதேவதை யான விநாயகரை, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் உன்னதமானது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதிக்கும், மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு தடை, தாமதங்கள் மற்றும் நவகிரக தோஷத்தை நீக்கும் வலிமையுண்டு என்றாலும், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியானது விநாயகர் அவதரித்த நாள் என்பதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்துக்களின் தெய்வ வழிபாடு களில் முதன்மையானது விநாயகர் வழிபாடு. கணபதியை வழிபட்டுத் துவங்கும் அனைத்தும் சித்தியாவதுடன் நற்காரியமாக மாறுமென்பது நம்பிக்கை. தன்னை வழிபடும் பக்தர்களின் வேண்டுதல் களை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விரதம் பிலவ வருடம், ஆவணி மாதம் 25-ஆம் நாள் (10-9-2021) சித்திரை நட்சத்திரத்தில் வருகிறது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், விரதமிருந்து விநாயகரை வழிபட ஜனனகால ஜாதகத்திலுள்ள அனைத்து தோஷங்களும் அகலும்.

விநாயகரின் சிறப்புகள்

இந்திய மக்கள் அனைவராலும் விரும்பி வழிபாடு செய்யப்படுபவர் விநாயகர். எளிமை யான கடவுள். களிமண், சாணம், மஞ்சள் என எதைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையாராகிவிடுவார்.

எளிதில் கிடைக்கும் அறுகம்புல், எருக்கு போன்ற பூக்களால் அர்ச்சனை செய்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர். ஆற்றங்கரை, குளத்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் விநாயகர்.

ஓங்கார நாயகனாகத் திகழும் விநாயகரின் உட-ல் நவகிரகங்களும் இருப்பதாக ஐதீகம்.

அவரது நெற்றியில் சூரியனும், நாபியில் (தொப்புள்) சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் எனப்படும் அங்காரகனும், வலது கீழ்க்கையில் புதனும், வலது மேல்கையில் சனி பகவானும், சிரசில் குரு பகவானும், இடது கீழ்க்கையில் சுக்கிரனும், இடது மேல்கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இருப்பதால், நவகிரகங் களால் ஏற்படும் தீமைகளைக் கட்டுப்படுத்தும் சக்தி விநாயகருக்கு உண்டு.

மேலும் அவரது ஐந்து கரங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களைக் குறிப்பதுடன், "சிவாயநம' என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்துவ தால் "ஐங்கரன்' என்று அழைக்கப்படு கிறார்.

அதாவது பாசத்தை ஏந்திய கை படைத்தலையும், தந்தம் ஏந்திய கை காத்தலையும், அங்குசம் ஏந்திய கை அழித்தலையும் குறிக்கிறது என்பதால், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய வற்றைச் செய்யும் மும்மூர்த்தியாகிறார்.

மோதகம் ஏந்திய கை அருளலைக் குறிப்பதால் இவர் பராசக்தியாகவும், தும்பிக்கை ஏந்திய கை மறைத்தலைக் குறிப்பதால் இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார். விநாயகரின் பெரிய வயிறு எல்லா உயிர்களும் உலகங்களும் தம்முள் அடங்கி யிருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர் என்பதால் விநாயகர் தத்துவப் பொருள். முக்காலத்துக்கும் வழிகாட்டுப வர். நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத் துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் சுகம், ஞானம், ஆனந்தம் என அனைத்தும் தேடிவரும்.

பரந்த இவ்வுலகில் நல்லவற்றை மட்டுமே கூர்ந்து நோக்கவேண்டும் என்பதை உணர்த்துவது விநாயகரின் கூரிய சிறிய கண்கள். செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை விநாயகரின் முறம் போன்ற செவிகள் குறிக்கின்றன.

விநாயகர் மகாபாரதத்தை எழுது வதற்குத் தன் தந்தத்தை ஒடித்ததால், தந்தங்கள் ஞானத்தைக் குறிக்கின்றன. விநாயகரின் பெரிய திருவடிகள் நல்லனவற்றை செய்வதன்மூலம் இறைவனை அடையலாம் என்பதைக் குறிக்கின்றன. ஆக, விநாயகரின் திருவுருவம், வெளித் தோற்றத்தைவிட அறிவுக்கு முன்னுரிமை தரவேண்டுமென்ற உண்மையை உணர்த்துகிறது.

பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டுமென்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். விநாயகப்பெருமானின் கல் விக்ரகத்திற்கு சுவாசம் சம்பந்தப்பட்ட சூரியகலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால்தான், கோவிலுக்குச் செல்லும்போது முதலில் அவரை வணங்குகிறோம். நாடி சிந்தாந்தத்தைக் குறிக்கும் வகையில்தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம் புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கிறார்கள்.

மூளையின் இடது, வலது பாகங்கள் தான் மனித உடலின் அத்தனை செயல் களுக்கும் காரணம். இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகின்றன என்கிறது விஞ்ஞானம். வலப்பக்க மூளை செயல் படும்பொழுது இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதேபோல இடப்பக்க மூளை இயங்கும்பொழுது வலது நாசியில் சுவாசம் வரும். விநாயகரை வணங்கும்போது அவரது துதிக்கை எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்தப் பக்க நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் இடது நாசியிலும் சுவாசம் வருவதைக் காணலாம். "வெளியே இருக்கும் நான்தான் உன் உள்ளேயும் இருக்கிறேன்' என விநாயகர் கூறும் விஷயமிது.

வலது நாசியின் வழியாக நம்முள் செல்லும் காற்றுக்கு சூரியகலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றுக்கு சந்திரகலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் வைத்துள்ளார்கள். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்பு களும் வெவ்வேறு வகையான செயல்பாடு களும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரியகலை)

வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் போது உடலின் வெப்பநிலை சற்றே உயரும். உடலுக்குத் தேவையான வெப்பசக்தியைத் தருகின்ற பிராணன் என்பதால், உடல் சுறுசுறுப் படைந்து சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரித்து மூளையும் உடலும் சுறுசுறுப்பாக இயங்கும்.

இடது நாசிக் காற்று (சந்திரகலை)

சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக்காற்று உடலைக் குளிர்விக்கும் தன்மைகொண்டது. இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்பநிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அதனால்தான் ஆவணி மாத சுக்கிலபட்ச சதுர்த்தி திதியை பிரணவ மந்திரத்தின் நாளாக, பிரணவரூபனின் நாளாகக் கொண்டாடுகிறோம்.

விநாயகர் ஆதிப் பரம்பொருள். எல்லாருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லாரையும் உருவாக்கியவர் அவர்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. நலம்தரும் விநாயகர் சதுர்த்தி விரதத்தை பார்வதிதேவியே கடைப்பிடித்திருக்கிறார்.

ஸ்வஸ்திக் சின்னமும் விநாயகரும்

எந்த செயலையும் தொடங்கும் முன் விநாயகரை வணங்குவது நமது மரபு. எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் விநாயகர் வழிபாடு வெற்றியைத் தருவதற்குக் காரணம், அவரது கையிலுள்ள மங்களம் மற்றும் வெற்றியின் சின்னமான ஸ்வஸ்திக். செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். இதிலுள்ள எட்டுக்கோடுகளும் எட்டு திசைகளைக் குறிக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவில் வைக்கப்படும் புள்ளி நமது ஆன்மா. மனக் கட்டுப்பாடு இல்லாமல் அலைபாயும் ஆன்மாவைக் கட்டுபடுத்தி பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரும் சக்தி ஸ்வஸ்திக் சின்னத் திற்கு உள்ளது. எனவே விநாயகர் வழிபாடு தடையற்ற நல்வாழ்வு, பொருள், வெற்றியைத் தேடித்தரும் ஸ்வஸ்திக் சின்னத்தை பூஜையறையில் வரையவேண்டும். அல்லது ஸ்வஸ்திக் சின்னம் கையிலுள்ள விநாயகரை வைத்து வழிபடவேண்டும்.

vv

விநாயகர் சதுர்த்தி விரத முறைகள்

அதிகாலையிலேயே எழுந்து, சுத்தமாகக் குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ளவேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி இரண்டு வாழைக் கன்று களையும் கட்டவேண்டும். பூஜையறையைத் தூய்மை செய்து ஒரு மணையை வைத்துக்கோலம் போட்டு, அதன்மேல் ஒருதலை வாழையிலையை வைக்கவேண்டும். இலையின் நுனி வடக்குப் பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின்மேல் பச்சரிசி யைப் பரப்பி வைத்து, நடுவில் விநாயகரை வைக்கவேண்டும். களிமண் பிள்ளையார், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். படமும் வைக்கலாம்.

விநாயகருக்கு கொழுக்கட்டையுடன் எள்ளுருண்டை, பாயசம், பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்தியம் செய்யலாம்.

நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றி லும் 21 என்ற கணக்கில் வைக்கலாம். பூஜையின் போது மண் அகலில் நெய்தீபமேற்றவேண்டும்.

அதன்பிறகு எருக்கம்பூ மாலை, அறுகம்புல், சாமந்தி, மல்லிப் பூக்களால் அலங்காரம் செய்து, 21 வகை இலைகள் மற்றும் அறுகம் புல்லினால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், அஷ்டோத்திரம் படித்தும் அர்ச்சனை செய்யலாம். விநாயகர் அகவல், காரியசித்தி மாலை, விநாயகர் கவசம் படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

இந்த விரதத்தைப் பட்டினியாக இருந்து அனுஷ்டிப்பது சிறப்பு. உலகில் மனிதனுக்கு போதுமென்ற எண்ணம் தோன்றுவது உணவருந்தும்போதுதான். ஒருவர் வயிறு நிரம்பி, மனதார வாழ்த்தினால் அனைத்து செல்வங்களும் தேடிவரும். எனவே இயன்ற உணவுகளை- தான தர்மங்களைச் செய்ய பலன் இரட்டிப்பாகும். சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரித்து, பௌர்ணமிக்குப்பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி; விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி- மேற்கொள்ளும் விரதத்தை ஆத்மார்த்தமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இனி, விநாயகர் சதுர்த்தி விரதத்தால் தீரும் பிரச்சினைகளைக் காண்போம்.

நாகதோஷ நிவர்த்தி

சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள்; 4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்; ராகு- கேது தசை நடப்பவர்கள்; ஜனனகால ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு- கேது சாரம் பெற்றவர்கள்- வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன்,

அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் எனும் ஒன்பது தெய்வத்தன்மை மிகுந்த நாகங்களை மனதில் நிறுத்தி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் அரச மரத்தடியிலிருக்கும் விநாயகர் மற்றும் நாகர்சிலைக்கு பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்தால், ஜாதகத்திலுள்ள அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தியாகும். திருமணத்தடை நீங்கும். தீர்க்கசுமங்க- பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அத்துடன் கண்திருஷ்டி, செய்வினை பயம், ஏதாவது ஒரு ரூபத்தில் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருக்கும் பிரச்சினைகள், முன்னேற்றமின்மை போன்றவை நீங்கும். சம்பள உயர்வு . வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பவரும்.

மாங்கல்ய தோஷம்

ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அதிதேவதையாகும். ஜனனகால ஜாதகத்தில் எட்டாமிட கேது, செவ்வாய் மற்றும் சனியினால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கி திருமணத் தடைகள் அகன்று மங்களவாழ்வு அமையவும். சனிபகவானின் தோஷம் நீங்கி, ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கவும் விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை தரிசித்து, விநாயகருக்கு சூறைத்தேங்காய் உடைத்து வழிபட, அனைத்துத் தடை, தாமதங்களும் விலகி சுபப்பலன் தேடிவரும்.

ஜாதகத்தில் கேது தசை மற்றும் கேது புக்தி நடப்பில் இருப்பவர்களுக்கு நிச்சயம் விநாயகர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும். இப்படியாக நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான இன்னல்களுக்கும் விநாயகரை வழிபடுவதன்மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் உண்டாகும்.

ஜனன ஜாதகத்தில் கேது சந்திரன் சாரம், சந்திரன் கேது சாரம், சந்திரன் வீட்டில் கேது, சந்திரன்- கேது சேர்க்கை, சந்திரனுக்கு அடுத்த வீட்டில் கேது, திரிகோணம் மற்றும் கோட்சார கேது, சந்திரன் தொடர்பால் பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கும் விநாயகர் சதுர்த்தியன்று செய்யும் வழிபாடு அதிக நன்மை செய்யும். செவ்வாய், ராகு- கேது சேர்க்கை, ராகு- கேது தோஷம், செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும்.

கடன், நோய், பகை தீர்க்கும் ருண விமோசன கணபதி மந்திரம் சொல்லி வணங்க, தீராத கடன் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

"ஓம் கணேசாய ருணம்

சிந்தி வரேண்யம்

ஹும் நம்; பட் ஸ்வாஹா.'

கிழக்குமுகமாக அமர்ந்து குத்துவிளக் கேற்றி 108 முறை இந்த மந்திரத்தை ஜெபித்து, விளக்கின் பாதத்தில் குங்குமமிட்டு, அந்தக் குங்குமத்தை அணிந்து வந்தால் விரைவில் மந்திர சித்தியாகும். விநாயகர் சதுர்த்தியன்று ஆரம்பித்து 90 நாட்களுக்கு, குறைந்தது 108 முறை ஜெபித்து வரவும். 90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம் செய்துகொள்ளவும்.

அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, சனி தசையால் பாதிப்படைபவர்கள் விநாயகரின் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி, விநாயகர் சதுர்த்தி யன்று பூஜையில் வைத்து வணங்கிவந்தால் நன்மைகள் தேடிவரும்.

இந்த விரதத்தால் உள்ளம் மேன்மை யடையும்; உடல் ஆரோக்கியம் சீராகும்; எல்லா வளங்களும் நிறையும்.

ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ.

ஆன்மிகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்துகொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு, பலர் பார்க்கும்படி கோவிலுக்கு நன்கொடை செய்வது, அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவிசெய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல், மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே ஆன்மிகம். அடுத்ததாக, பல மணிநேரம் வேறுபல சிந்தனையுடன் பூஜைசெய்யாமல், இறைவனை ஒரு நிமிடமேனும் எந்தவித தீய சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, "எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரியாது; உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. இந்த உடலையும் ஆன்மாவையும் நீயே வழிநடத்திச் செல்' என விநாயகரிடம் சரணடைந்து வழிபட, நவகிரக தோஷங்கள் நீங்கும். பொன், பொருள், ஆபரணங்கள் சேரும்.