"போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்னும் பொன்மொழியைப் பல சந்தர்ப்பங்களிலும் படித்திருக்கி றோம். போதும் என்பது எது? அதைப் பட்டியலிடமுடியாது. ஹிட்லரைப்போல ஒரு சர்வாதிகாரியைக் காணமுடியாது.

அவனுக்கு ஈட்டிய வெற்றிகள் போதவில்லை. அதன் விளைவு மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தான். அலெக்சாண்டரைப்போல் ஒரு வெற்றியாளரைக் காணமுடியாது. இறுதியில் அவனால் மரணத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. மாவீரன் நெப்போலியனின் மரணம் இன்றும்கூட விடைகாண முடியாத ஒன்று. இப்படியிருக்க, தெற்காசியாவில் கோலோச்சிய சோழப்பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனைப்போல் ஒருவனை இனி பார்க்க முடியுமா? ராஜராஜ சோழன்மீது எவ்வளவு மாற்றுக்கருத்து இருப்பினும், அவன் ஒரு சர்வாதிகாரியல்ல. மக்களின் மனங்களில் இடம்பிடித்தவனாகவே இருந்திருக்கிறான். மேலும், கருத்துகள் எப்போதும் முரண்பாடானவை. அது முக்கியமல்ல; செயலே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

tanjore

ராஜராஜனின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல், இறைவன் அருளோடு அவன் வடிவமைத்த தஞ்சை பெரியகோவிலாகும். மன்னன் மறைந்தாலும் அவனது செயல்வடிவம் இன்றும் உயிர்ப்புடன் உலகையே திகைத்துத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது. இதற்கு என்ன காரணம்? ராஜராஜனுக்கு ஆண்டுதோறும் சதயத் திருவிழா சிறப்பாக நடக்கிறது. விழாவின்போது பேசுபொருளாக இருப்பவன் ராஜராஜசோழனே. அவன் இடையறாத இறைப் பற்றாளனாக, சிவபக்தனாக இருந்ததே அதற்குக் காரணம். எண்ணம் மிக முக்கியம். செயல்வடிவம் அதைவிட முக்கியம். எண்ணம் எதைச் சார்ந்திருக்கிறது என்பது மிகமிக முக்கியம். இங்கே ராஜராஜனின் எண்ணமும் செயலும் சிவபெருமானைக் குறித்தே இருந்தது. மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும் என்பதே அதிலுள்ள முக்கியப் பொருளாக இருந்திருக்கிறது. மாபெரும் வீரனாக இருந்தாலும், நீதி நேர்மைக்குக் கட்டுப்பட்டவனாகவும், கருணை உள்ளவனாகவும், கொடையாளியாகவும் இருந்திருக்கிறான். இதற்குச் சான்றாக வாழ்வியல் ஞானி திருவள்ளுவர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

Advertisment

"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்

மற்றைய எல்லாம் பிற.'

ஒரு நற்செயலைச் செய்யவேண்டு மென்பது ஒருவனது மனவுறுதியே ஆகும். உறுதியில்லாத எந்தச் செயலும் அதற்கு இணையாகாது. எண்ணம், செயல், செயல்திறன், அதன் விளைவாக உண்டாகும் வடிவம் ஒருவனுக்கு மங்காத புகழைத் தரும். அதை செயல்படுத்துவது அவனுடைய மனவுறுதியாகும்.

Advertisment

ராஜராஜன் கொண்ட மனவுறுதி அவனை இறவாப் புகழுக்கு சொந்தக்கார னாக்கிவிட்டது. நாம் எதுவாக விரும்பு கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

இதுவே இயற்கையின் விதி. இயற்கை யாகவுள்ள இறைவனின் நியதி.

ஒரு கிராமத்தில் சிவபக்தன் ஒருவன் எளிமையாக வாழ்ந்து வந்தான். அவனுக் கென்றிருந்த ஒரே ஒரு உறவான அன்னையும் காலமாகிவிட்டார். அதில் அவனுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியும் இருந்தது. காரணம், எந்த உடல் துன்பத்தையும் சந்திக்காமல் அவனது தாய் மரணமடைந்தார். "என் தாய்க்கு முக்தியைத் தந்து என்னை எல்லா பந்தங்களிலிருந்தும் விடுவித்துவிட்டாயே ஈஸ்வரா! இனி என் சிந்தனையெல்லாம் நீயே' என்று சிவனை பக்தியோடு பணிந் தான்.

ஒரு நாள் ஆற்றங் கரையோரமுள்ள சிவத்தலம் ஒன்றில், அரசமரத்தடியில் அமர்ந்து இறைவனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தான். நாட்கள் கழிந்தன. அதைக் கண்ட சிவன் பார்வதியிடம் ""என் பக்தன் பசி, தாகம் மறந்து, தூக்கம் மறந்து எப்போதும் என் நினைவாகவே இருக்கிறான். அவன் தன் கடமையைச் செய்கிறான். நான் என் கடமையைச் செய்யத் தவறிவிட்டேன். அம்பிகையே, நீ அவனுக்கு உணவுகொடுத்து அவன் பசியைப் போக்கு'' என்று சொன்னார்.

tanjore

இறைவன் ஏதோ திருவிளையாடல் புரியப்போகிறார் என்றுணர்ந்த தேவி, ஒரு தங்கத்தட்டில் இறைவனின் பிரசாதங்களை வைத்து எடுத்துச்சென்று பக்தனின் அருகில் வைத்துவிட்டு நகர்ந்தாள். அம்பாளின் சலங்கை ஒலிகேட்டு தியானம் கலைந்து கண்விழித்த பக்தன், தன்னருகில் தங்கத்தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவை உட்கொண்டான். உண்ட மயக்கத்தில் அப்படியே உறங்கிவிட்டான். அவன் கண்விழித்துப் பார்த்தபோது அவனருகே நான்கைந்து அந்தணர் களும் காவலர்களும் நிற்பதைக் கண்டான். காவலர்கள் அவனை நோக்கி, ""திருடனே, திருக்கோவில் கருவறையில் இறைவனுக்கு நிவேதனம் செய்ய விருந்த உணவை மட்டுமல்லாமல், அதனுடன் சேர்த்து தங்கத் தட்டையும் திருடிக்கொண்டு வந்துவிட்டாய். எழுந்து எங்களுடன் வா. மன்னர் தரும் தண்டனையை ஏற்றுக்கொள்'' என்று சொல்லி அவனை இழுத்துச்சென்று அரசன் முன்பு நிறுத்தினர்.

""அரசே, நான் இந்தத் தட்டைத் திருட வில்லை. இதிலிருந்த உணவை மட்டுமே உண்டேன். இந்தத் தட்டோடு உணவைக் கொண்டுவந்தவர் யாரென்றும் அறியேன். அவர் ஏன் இந்தத் தட்டை திரும்ப எடுத்துச் செல்லவில்லை என்பதையும் அறியேன்'' என்று கண்கலங்கினான். அரசன் கடுங் கோபமடைந்து, சிவபக்தனை சவுக்கால் அடிக்க உத்தரவிட்டான். சவுக்கடி பக்தனின் உடலில் பலமாக விழுந்தது. சிவபக்தன் சிறிதும் கலங்காமல் சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டு அப்படியே நின்றான். சவுக்கால் அடிப்பது தொடர்ந்தது. ஆனால் பக்தனின் உடலில் சிறு காயம்கூட ஏற்படவில்லை. இனி இவனை அடிப்பதில் எவ்விதப் பயனுமில்லை என்று அவனை விரட்டிவிட்டனர். சிவபக்தனும் மீண்டும் ஆற்றங்கரையோரமுள்ள மரத்தடிக்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்துவிட்டான்.

அன்றிரவு மன்னனுக்குத் தூக்கம் வரவில்லை. நெடுநேரம் கழித்தே கண்ணயர்ந் தான். அப்போது அவன் கனவில் சிவனது உடலிலிருந்து ரத்தம் வழிவதுபோல் கனவு வந்தது. திடுக்கிட்டுக் கண்விழித்தான். உடனே விரைந்து ஆலயத்தை அடைந்து, நடை திறக்கச் சொன்னான். அங்கு இறைவனின் லிங்கத் திருமேனியிலிருந்து ரத்தம் கசிந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். சிவபக்தனைத் துன்புறுத்தியதே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்தான். உடனடியாக அரசமரத்தடி நோக்கி ஓடினான். அங்கே தியானத்திலிருந்த பக்தனின் காலடியில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். இறைவனின் உடலில் வழியும் ரத்தத்தை நிறுத்தவேண்டுமென்று கதறி னான். இதைக்கேட்ட பக்தன் துடிதுடித்து ஆலயத்தை நோக்கி ஓடினான். ""இறைவா, என்மீதுள்ள கருணையால் என்ன காரியம் செய்தீர்கள்? சவுக்கடியிலிருந்து என்னைக் காப்பாற்றி இருக்கலாமே? இக்கொடிய தண்டனையை நீங்கள் ஏற்று உடம்பில் ஏன் வாங்கினீர்கள்?'' என்று அழுது புலம்பினான்.

அப்போது லிங்கத் திருமேனியில் வழிந்த ரத்தம் நின்றது. அசரீரி வாக்கு ஒலித்தது.

"பக்தா, உன் முன்வினைப் பயன் காரண மாக இந்த தண்டனையை நீ அனுபவிக்க நேர்ந்தது. முன்வினையை அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் நீ என்னிடம் சரணாகதி அடைந்ததால் உன்னைத் துன்பத்திலிருந்து காப்பாற்ற வேண்டியது எனது கடமை. அதனால் உன்னைக் காப்பாற்றினேன்.'

இதை கதையாகப் பார்ப்பவருக்கு கதையாகத் தோன்றும். வாழ்வின் உன்னதமும், பிறப்பின் உண்மையையும் உணர்ந்தோருக்கு இதனுள் ஒளிந்திருக்கும் இயற்கை ரகசியமும் இறைத் தத்துவமும் புரியும். இங்கே தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியதை நினைவுகூர்வோம்.

"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் தெய்வம்

ஈண்டு முயலப் படும்.'

அதாவது, விரும்பிய பேறுகளை விரும்பியவாறு பெறமுடியும். இல்லற வாழ்க்கையில் இருந்த போதும்கூட ஒருவன் தனது தவக்கடமையை சரிவரச் செய்யவேண்டும். அது மட்டுமல்லாமல், உள்ள விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் கூடிய தவமானது பெரும் நன்மைகளை உண்டாக்கும். விரும்பிய வீடுபேற்றை அடையமுடியும்.

எண்ணம் நலமாக இருந்தால் எல்லாம் நலமாகவே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடந்துகொண்டிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடந்துகொண்டிருக்கிறது; எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்பதை நம் உள்ளம் மனப்பூர்வமாக நம்பவேண்டும். நாம் நம்பிக்கையின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இறைவன் நமக்காக இதைச் செய்துமுடிப்பான் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை என்பதும் ஒருவகைத் தவமேயாகும். இதுகுறித்து திருமூலர் கூறுவதைப் பார்ப்போம்.

"கரந்தும் கரந்திலன் கண்ணுக்குத் தோன்றான்

பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்

அடுத்தவர்க் கல்லால் அணுகலும் ஆகான்

விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.'

மறைந்திருந்தாலும் மறைந்தவன் அல்ல. ஏனென்றால் இறைவன் எல்லா உயிர்களோடும் இரண்டறக் கலந்திருக்கி றான். உயிரில் உணர்வாகவும், உணர்வில் நினைவாகவும் இறைவன் இருந்தாலும், ஆன்மாக்கள் அவனை அறிவதில்லை.

அவற்றால் அறியப்படாததாலேயே அவன் அவற்றோடு பொருந்தி மறைந்திருக்கிறான். புறக்கண்களுக்கு அவன் எளிதாகத் தெரியமாட்டான். பரந்துவிரிந்த சடையும், பசும்பொன் போன்ற மேனியும் கொண்ட பரமன், அரியதவம் செய்து அவனை நினைந்திருக்க முயற்சிப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களுக்கு நெருங்கவும் முடியாதவன். எளிதில் காண முடியாதவனாக- நெருங்கமுடியாதவனாக இருந்தாலும், அன்பர்களுக்கும் சிவனடியார்களுக்கும் அரியதவம் செய்பவருக்கும் விரைந்து வந்து வேண்டியன அருள்வான்.

இவ்வாறான பேறுகளை நாம் பெறவேண்டுமெனில் நமது எண்ணம், செயல், சொல் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் தூய்மையாக இருக்க வேண்டும்.

"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.'

ஒரு துறையிலும் ஒரு செயலிலும் நாம் முற்பட்டுத் தோன்றவேண்டுமெனில், இறைவனின் கருணைப் பார்வைக்கு நாம் உரியவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் புகழோடு தோன்றமுடியும். அப்புகழுக்குத் தகுதியில்லாதவர்கள் தோன்றுவதைவிட தோன்றாமலிருப்பதே நன்று.

இந்தக் குறளுக்கு சொந்தக்காரன் மாமன்னன் ராஜராஜ சோழன். இடைவிடாத ஈஸ்வர சிந்தனையே அவன் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் இடம்பெற்றிருந்தது. சிந்தையில் சிவனை நிறுத்தி, செயலில் அவன் கருணையைப் புகுத்தி, மங்காத சதாசிவனின் புகழ்போற்றி ஆனந்தம் பெறுவோம். ஆடல்வல்லானின் அருளைப் பெறுவோம்.