கையில் திரிசூலம் தாங்கி, இதழ்களில் புன்முறுவலோடு மாஞ்சாலியம்மன் கருணையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
""நீ எப்பேற்பட்ட அருந்தவப் புதல்வன்!
ஜகம் கொண்டாடப்போகின்ற- வழிபடப் போகின்ற ஒரு புனிதனை- புண்ணிய குருவை என் மைந்தன் என்று கூறுவதே தித்திப்பாய் இருக்கிறது மகனே. உன் கூர்த்த அறிவு இந்த பரந்த உலகில் எத்தனை பக்தர்களிடம் பரவி படரப்போகிறது. இனிவரும் அந்த பிற்காலங்களில் உன்னைத்தேடி வருபவர் களை நீ எப்படியெல்லாம் வாத்சல்யமாய் அரவணைக்கப்போகிறாய் என்பது இதோ... இதோ... தெளிவாய் காலம் முன்னோடுகிறது. கருணையைத் தவிர வேறேதும் அறியாத என் மகனே. இந்த மாபெரும் பிரதேசம் உனக்கென சாசனம் செய்யப்பட்டும் என்னிடம் எதற்கப்பா அனுமதி?'' "அம்மா! ஏதும் தெரியாதுபோல் ஏனிந்த பாசாங்கு தாயே. இங்கு உனது எல்லைக்குள் அல்லவா நானிருக்கிறேன். இக்கலியுகத்தில் போர், வெற்றி, தோல்வி, பிரதேசம் வசமாதல் என்பதெல்லாம் மானிடருக்கு வேண்டுமானால் பெரிதாகத் தோன்றலாம். அவை மாயைதானே தாயே. திவான்மூலம் சுல்தான் எனக்கு இதை சாசனம் செய்வதென்பது உலகியல் லௌகீகம். ஆனால் உண்மையில் இது ஆதியிலிருந்தே உனது திருவாட்சியுடனும் மறுமலர்ச்சியுடனும் திகழும் இடமல்லவா. உன்னிடம் அனுமதி கேட்பதுதானே உத்தமமும் முறையுமாகும்?''
""சரஸ்வதி தேவியின் பூரண கடாட்சம் பெற்றவனல் லவா. உன்னிடம் பேச இயலுமா. தர்க்கம்தானே உனக்குத் தாய்ப்பாலே...''
""என் அன்னையே! உங்கள் ஆசியும் அனுமதியும் பரிபூரணமாகக் கிடைத்து உனது நிழலில் கோலோச்ச விரும்புகிறேன்.''
""மைந்தா, கிருஷ்ண பகவான் கீசகனை வதம் செய்தும், மற்றும் இரண்ய வதத்தின்போது பிரகலாதனாய் நீ அவதரித்தபோதும் தந்தையின் வதத்திற்கு நீ காரணமாகிப் போனதால் துக்கித்து நீ தவம் செய்ய, உனக்கு ஸ்ரீமன் நாராயணன் ஆனேகுந்தியைக் காட்டியது போன்று, அஸ்வமேத யாகம் செய்ய காட்டிய இடம் இதுவென்று நீ அறியாமலா மாஞ்சாலத்தைத் தேர்ந்தெடுத்தாய். பூர்வ ஜென்மத்து தொடர்பை உனது அவதார முடிவுக்கு மையப் படுத்துவது கண்டு நான் நெகிழ் கிறேன் மகனே. நீயும் வா. வந்து நிலையாய் பல்லாண்டு நிலை பெற்று இப்புவியைப் பெருமைப் படுத்து. மைந்தா... எனது கோரிக்கையும் உன்னிடம்...''
""அம்மா என்ன இது. ஆணையிடுங்கள்...''
""நீ உனது ஜீவ ஐக்கியத்தின் போது, உனது பிருந்தாவனத் தின் எதிரே எனது ஞாபகமாய் ஆட்டுக்கிடா தலைகொண்ட சிலையை மட்டும் அமைப் பாயாக.''
""உத்தரவு தாயே. அதுமட்டு மன்றி தங்களை முதலில் தரிசனம் செய்தபிறகே அடுத்த படி பிருந்தாவனத்தை வணங்கும் படிக்கு முறைமையை ஏற்படுத்து கிறேன் அம்மா.''
""மனது நிறைவானது மைந்தா.
நீ உனது பணியைத் தொடர லாம்.''
""தன்யனானேன் தாயே தன்யனானேன்.''
மாஞ்சாலியம்மன் என்ற எல்லை தேவதை மகிழ்வுடன் விடைபெற்றாள்.
ஸ்ரீராகவேந்திரருடன் சீடர்கள் அந்த ஆட்டு மந்தை யிலிருந்து விடுபட்டு அவசர அவசரமாய் அவரைப் பின் தொடர்ந்தனர். அதுவரை என்ன நடந்ததென்று அறியாதபடிக்கு அவர்களை மாயை அப்போதுவரை சூழ்ந்திருந்தது.
ஸ்ரீராகவேந்திரர் சற்று நிம்மதியடைந்தார். இருப்பி னும் அந்த தூய ஞானியின் மன ஓட்டம் வேறுவிதமாய் அமைந்திருந்தது. பூர்வாஸ்ரமத்தில், வேங்கடநாதன் எனும் திருநாமம் தாங்கிய கடந்த பொழுதில், அவரின் பந்துக்கள் எவருமே அவரின் சந்நியாச ஏற்பிற்கு மறுப்பு தெரிவிக்காது, மனதார அமைதி காத்தவர்களின் மாபெரும் மௌனம் அப்போதைய நேரத்தில் அவருக்கு எவ்விதமான தடையோ மறுதலிப்போ இல்லாது போனாலும், அவர் பீடமேற்று இந்நாள்வரை சொல்ல இயலாத நூலிழை வருத்தம் தொடர்ந்தவண்ணம் இருந்தது.
"இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி ஒரு நிலை பெற்று சந்நியாச தர்மம் ஏற்று, இன்றளவில் வாழ்க்கையை வென்று எனது மூலராமனிடம் நான் சரணாகதி யடைந்து அவனை போஷித்துக்கொண்டே இருப்ப தற்கு இவர்களும் அல்லவா ஒருவகையில் காரண மாகிப்போனார்கள்! அது ஜென்மம் மறக்கா பேருதவி யன்றோ? மறந்தும் ஜென்மம் கடந்தால் பக்தி, முக்தி என்பதெல்லாம் கேலி மட்டுமல்ல; கேள்விக் கு மல்லவா வழிவகுத்துவிடும்! சந்நியாச தர்மம் பொய்யாகிப்போகுமோ. கூடாது. எள்ளளவில் இது பற்றிய சிந்தனை மனதுள் தோன்றிவிட்டதோ. இதற்கு தர்மம் விலகாத நியாயம் நான் செய்யவேண்டும். சூரிய வம்சத்தின் வழிவந்தவன் ஹரிச்சந்திர மகாராஜன். பொய்யே உரைக்காத களங்கமில்லா உத்தம அரசன். ஜீவன் போனாலும் பரவாயில்லை என்றும், நாடு துறந்தும், செல்வம் இழந்தும், மனைவி, மக்களைப் பிரிந்தும், அடிமை வாழ்விலும் நெறிகாத்தவன். மகன் லோகிதாசன் பாம்பு கடித்து இறந்ததும், அவன் தன் மகன் என்று தெரிந்தும் மயானத்திலும் சத்தியம் தவறாது நேர்மையுடன் நடந்து, கடைசிவரை பொய்யே உரைக்காது ஊசி முனையளவும் உண்மை தவறாது இருந்தான். அந்த வழித்தோன்றலில் வந்தவனல்லா என் மூலராமன்! தந்தை சொல் காத்தான். நாடு விடுத்தான். அரண்மனை விடுத்தான். சுகம் விடுத்தான். ஹரி ஹரி என்பவனே மரவுரி தரித்தான். மகிழ்வோடு கானகம் சென்றான். பொன்மான் தேடி பெண் மானை இழந்து, வாலி கொன்று அனுமன் தூதில் லங்கா தகனம் செய்து, மனைவி மீட்டு, அயோத்தி வந்து பட்டத்து அரசனாகி பார்புகழ் சீதாராமனாகி, கார்பொழி வெள்ளம்போல கருணை மிகுந்து அவன் மக்களுக்குத் தந்தாலும், இடையில் அவன் பட்ட துயரை சொல்லி மாளாதே. ஏகபத்தினி விரதனாயிருந்து பல இன்னல்களைத் தாண்டி வந்தாலும், அநேக வாய்ப்புகள் என் ஐயனுக்குக் கிடைத்தாலும், ஆமையாய் புலன்களை சத்தியத்திற்குள் ஒடுக்கியவனாயிற்றே. அனைவருக்கும் பொதுவாய் இருந்தவனாயிற்றே. அவனை வணங்கும் நான் அவன்வழி நடக்க வேண்டு மெல்லவா. இதோ தெரிகின்றதே, இதுதான் அவன் பாதை. இந்த சத்தியத்தின் ராஜபாட்டை என் போன்றோருக்காக அன்றே ராமனால் போடப்பட்டதோ. ராமா... ராமா... என் அனு மானம் சரியா? அனுமனே, இதற்கு நீயும் எனக்குத் துணை நில்.'
ஸ்ரீராகவேந்திரர் மனதுள் பிரார்த்தனை அரற்றிற்று.
"வேதம்கூட ரிஷிகளுக்கும் பிள்ளைப்பேறு இருந்தால் மட்டுமே தேவருலகம் ஏற்கும் என்று சொல்கிறதே. அப்படியாயின் என் பூர்வாஸ்ரமத்தில் சரஸ்வதி பெற்ற மைந்தன் லஷ்மி நாராய ணன் வாலிபப் பருவம் எய்தி விட்டானே. ஆச்சார்யார் களுக்கு இணையாகத் தேர்ந் திருப்பதாக அல்லவா கூறுகிறார் கள். இளம்பிராயத்திலே தாயை இழந்தவன். தந்தையின் அரவ ணைப்பு பெற இயலாது... அல்ல அல்ல... கொடுக்கவே இயலாது போயிற்று. ஸ்தானத்தை அவனால் கொண்டாட உரிமை இல்லாது போனாலும் உண்மை அதுதானே. அதை யாராலும் மறுக்க இயலாதே!'
""ஸ்வாமி...'' என்ற அப்பண்ணாவின் குரல் கேட்டு நினைவு திரும்பினார் ஸ்வாமிகள்.
""சொல் அப்பண்ணா'' என்றார் கனிவுடன்.
""மன்னிக்க வேண்டும்... தங்களின் சிந்தனையில் இடைபுகுந்தமைக்கு ஸ்வாமி.''
""சொல்லேன் அப்பண்ணா'' என்றார் மேலும் கனிவுடன்.
""தமிழகத்திலிருந்து தங்களது... ம்... தங்கள் சீடரது தகப்பனார் தங்களைக் காண அனுமதி கேட்டு காத்திருக்கிறார்'' என்றார் தயங்கித் தயங்கியே...
""அப்படியா. சரியப்பா. யாரவர்? பெயர் கேட்டாயா?''
""ஆம் ஸ்வாமிகளே. குருராஜர் என்று கூறினார்.''
""ஆஹா... ராமா ராமா... என்னே உனது அருள். என்னே உனது செவி சாய்ப்பு. என்னே உனது கருணை!'' என்றார் பரவசத்துடன்.
""தங்களது மகிழ்ச்சிக்குக் காரணம் எனக் கும் புரிந்தது. அவர் தங்களின்...''
""இல்லையப்பா. உனது புரிதலில் தவறு இருக்கின்றது.''
அப்பண்ணா பதட்டமானார்.
""ஸ்வாமிகள் மன்னிக்கவேண்டும். நான் அவசரப்பட்டுவிட்டேனா?''
""அல்ல அப்பண்ணா. எனது மனதின் சிந்தனையோட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந் தால், நான் அடுத்து வெளியில் காத்திருப் பவரைப் பற்றிதான் நினைவில் தருவித்திருப் பேன். அவரிடம் நான் ஒருசிலவற்றை கேட்கவேண்டி நினைத்திருப்பேன். எனது நினைவின் நகர்வைக்கூட எனது மூலராமன் சரியாகத் தீர்மானித்து, எனது சிரமத்தைக் குறைத்து அவரையே இங்கு அனுப்பி வைத்துவிட்டான். அடுத்து நான் உன்னிடம்கூட சிலவற்றைசொல்லவேண்டி இருக்கிறது அப்பண்ணா. ஆனால், அதற்கு இன்னும் நாட்களிருக்கின்றன'' என்றார் புன்னகையுடன்.
""அவரை அழைத்து வா'' என்றார்.
அது என்னவாக இருக்கும் என கேட்க நினைத்தவர் அது அதிகப் பிரசங்கித்தனம் என தன் நிலை உணர்ந்து, அமைதியாகத் தலை வணங்கி வெளிச்சென்றவர், அவரை அறைக் குள் அழைத்துவந்து மறுபடி ஸ்வாமிகளை வணங்கிவிட்டுச் சென்றார். எதிரில் நின்றிருந்த வர் பீடாதிபதியின் பாதம் பணிந்தார்.
குருராஜர் கால ஓட்டத்தில் நிரம்பவே மெலிந்திருந்தார். கேசம் நரைத்திருந்தது. தேகம் சுற்றி அணிந்திருந்த வெள்ளை வஸ்திரத் தால்தான் ஓரளவுக்கு உருவமாய்த் தெரிந்தார்.
""அனைவரும் நலமா?'' என்ற விசாரிப்பில் பொதுத் தன்மையினை விகசித்தார் ஸ்வாமிகள்.
""பீடாதிபதிகளின் ஆசிர்வாதத்தால் ஏதும் குறையில்லை.''
""நல்லது. தங்களது விஜயம் மைந்தன் பொருட்டா.''
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ragavender_7.jpg)
""தங்கள் பொறுப்பில் அவனிருக்கையில் எனக்கேது கவலை. ஏனோ தங்களை தரிசனம் காணவேண்டுமென்ற அவாவினால் அந்த- உந்துதலில் நான் ஓடோடி வந்தேன். ஏனோ மனதுள் பயமும் இறுக்கமும் ஒருங்கே. உண்மையைச் சொல்லப்போனால் தங்கள் முகம் கண்டும் ஏனோ மனதுள் வேதனை அதிகமாகிறது.''
நல்ல மனதில், கல்மிஷம் சற்றுமில்லாத சு.த்த மனதில், உடன்பிறந்த பாசத்தினால் எண்ண அலைகள் ஆகர்ஸனமாய் உரிய இடத் திற்கு அழைத்து வந்துவிடும் என்பது அங்கு நிரூபணமாகிக்கொண்டிருந்தது. ஸ்ரீராக வேந்திரர் சலனமின்றி மௌனம் காத்தார்.
ஸ்ரீராமன் சகலத்திற்கும் மௌன சாட்சி யாயிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நகர்த் திக் கொண்டிருக்கின்றான். இந்த பொம்மலாட் டத்தின் கயிறு அவன் வசமுள்ளது. அவனது விரலசைவுகள் தனது வரலாற்றை சீராக வரைந்துகொண்டிருப்பதை ஸ்வாமிகள் பரிபூரணமாக உணர்ந்தார்.
""நல்லது. நான் தங்களிடமும் ஆச்சார்யார் நரசிம்மாச்சார்யாரிடமும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. அவருக்கு தள்ளாமை அதிகமிருக்கும். நிச்சயமாய் நான் அவரை சந்திக்க இயலாது. அந்திமம் அவரை அணுகி விட்டது. இருந்தாலும் என் எண்ண அலைகள் அவரிடம் எப்போதோ சென்றுவிட்டன. இந்நேரம் விடைபெற்றிருக்கும். அவரும் விடைபெற்றிடும் நிலைக்கு வந்துவிட்டார்.''
""நிரம்ப ஆழமான பேச்சு என்றளவில் மட்டும் என்னால் யோசிக்க முடிகிறது. துல்லியமாக விளங்கவில்லை.''
""மதுரையை நெருங்கும்போது தெரிந்து விடும். சரி ஆச்சார்யரே. இப்போது நான் தங்களிடம் நெருக்கமான கேள்வியினை... இல்லையில்லை... அனுமதியினை...''
""என்னிடம் போய் அனுமதி என்று... பெரிய வார்த்தையல்லவா...''
""இல்லை. முதலில் மனுஷ தர்மம். பிறகு சந்நியாச தர்மம். பூர்வாஸ்ரமத்தில் செய்யவேண்டியதைத் தவறிவிட்டேனோ என மூலராமனிடம் முறையிட்டேன். அதன் தொடர்ச்சி சந்நியாசத்தில் தொடர்வது நல்லதன்று.''
""இப்போதும் எனக்கேதும் புரியவில்லை. கும்பகோணத்திலிருந்து தாங்கள் புறப் படுகையில் நான் தங்களை சந்திக்க இயலாத சூழ்நிலை. ஏனோ அந்த கடந்த நாட்களிலிருந்தே மனதில் மெல்லிய திகிலான வெற்றிடம்...
ஏதோவித தவிப்பு. எதையோ இழந்துவிடு வோமோ என்கின்ற பயம். தங்களைக் காண வேண்டுமென்ற வேகத்தில் வந்தேன். திகிலான உணர்வு மட்டும் குறைந்ததே தவிர, தவிப்பும் பயமும் அப்படியே இருக்கிறது.''
""உங்கள் மனமும் தேகமும் உணர்ந்தவை, காலத்தின் எதிர்வரும் நிகழ்வின் பொருட்டே என்பதை துல்லியமாக்கியிருக்கிறது. கடின மான இரும்பு போன்ற நிகழ்வுகள் காந்தத்தி டம் சரணடையத்தானே வேண்டும்?''
""சமத்காரமாகப் பேசுகிறீர்கள். பூர்வா ஸ்ரமத்தில் பார்த்தவரா நீங்கள் என்று நினைக் கையில் பிரம்மிப்பாக இருக்கிறீர்கள். பரம குரு சுதீந்திர தீர்த்தர் கனவில் ஸ்ரீராமரே பிரத்யட்சமாகித் தேர்ந்தெடுக்கப்பட்ட வராயிற்றே நீங்கள். மிகுந்த பெருமையாயிருக் கிறது. மேலும்...''
""நான் நேரிடையாக விஷயத்திற்கு வருகிறேன். பூர்வாஸ்ரமத்திலிருந்து நான் சந்நியாசம் ஏற்கையில், முறையாக அனுமதி பெறவேண்டிய பெற்றோர்கள் அப்போது ஜீவித்திருக்கவில்லை. எனவே உற்றாரிடமும் மனையாளிடமும் உரிய அனுமதி பெற்ற பின்பே சந்நியாசம் ஏற்று இன்றளவில் தொடர் கிறேன். அனைவரும் மனமுவந்து அனுமதி தந்தனரா என்பது இப்போது யோசிப்பது நாள் கடந்த ஒன்றுதான். இருப்பினும் இன்னு மொரு நிகழ்வை நான் மேற்கொள்ள இருப்ப தால், அதைத் தொடர்புப்படுத்தி யோசித்தே நடக்க வேண்டியுள்ளது. நடுத்தர வயது, அனுப வம் கடந்தவர்கள், சரி- தவறு பிரித்தறியும் பெரியோர்கள், ஆச்சார்யார்கள் முன்னிலை யில் துறவறம் ஏற்று, சந்நியாச தர்மம் கடைப்பிடித்து பீடாதிபதி பொறுப்பேற்றா லும், தங்கள் துணைவியார், வேங்கடம்மா மற்றும் லக்ஷ்மி நாராயணனின் தாய் சரஸ்வதி பாய் இவர்களெல்லாம் இதை ஏற்றுக் கொண்டார்களா? ஏதும் தெரியாத வறுமை யில் உழன்ற லக்ஷ்மி நாராயணன் இதையெல் லாம் உணரக்கூடிய மனோநிலையும் வயதும் எட்டாத அவனுக்கு இது துரோகமாகாதா?'' இடைமறித்தார் குருராஜர்.
""ஏன் இப்போது தங்களுக்கு இந்த எண்ணம் ஸ்வாமி. நான் அறியலாமா?''
""நிச்சயமாக. நான் இன்னும் சிறிது காலத்தில் ஜீவனுடன் சமாதியாகப் போகிறேன்'' என்றார் சலனமில்லாமல்.
""ராமா ராமா... என்ன இது... இதுபற்றி தங்கள்மூலமாகவே கேட்கவா இவ்வளவு தூரம் ஓடோடி வந்தேன். நாராயணா!''
""பார்த்தீர்களா. எவ்வளவு பதட்டப்படு கிறீர்கள். பண்பட்ட நீங்களே இப்படியென் றால்... அன்று சந்நியாசம் ஏற்கையில்...''
""ஸ்வாமிகளே. சந்நியாசம் ஏற்கையில் மனது சற்றே கவலையானாலும் பீடாதி பதியாகத் தங்களை தரிசிக்கையில் பெரும் நிறைவிருந்தது. இப்போது தங்களது சரீர சஞ்சாரம் மறைக்கப்படும் என்கின்ற நிகழ்வைக் கேட்டு நான் எப்படி சமாதானமாக முடியும்? ஜீவசமாதி என்பதை கும்பகோணத்திலேயே நான் வதந்தி என்றுதான் எண்ணியிருந்தேன்.''
""தங்களது மகனைக் காணும்போது உடன் லக்ஷ்மி நாராயணனும் இருக்க வாய்ப்புண்டு. ஜீவசமாதியாகும் நிகழ்வைப் பற்றி அவன்...''
""தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யலாகாதா?''
ஸ்ரீராயர் மெலிதான புன்னகையில் தனது மறுதலிப்பை வெளிப்படுத்தினார்.
""பாருங்கள். தாங்களும் ஆச்சார்யார். ஒரு வித்வானின் மூத்த குமாரர். வித்யாபதியின் கூடவே இருந்து அனைத்தும் கற்றவர். ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் அனுபவப்பட்டவர். என்னை இந்த முடிவெடுக்க வைத்ததும் எனது மூலராமனே. ஒருவேளை எனக்கான தனித்துவத்தை ஏற்படுத்தவே அந்த ஸ்ரீராமன் இந்த எண்ணத்தை உருவாக்கி இருப்பான்.
என்னே அவனது கருணை! பாருங்களேன்...
எனது ஒவ்வொரு அசைவினையும் அவன் எப்படி துல்லியமாக முன்கூட்டியே தீர்மானிக் கிறான் பாருங்கள். எனவே தாங்களும் இதுபற்றி இசைவான முடிவெடுத்தால் நன்று. இது வற்புறுத்தலன்று... நடக்கும் இந்த சத்யமான யுகதர்மத்திற்கு நீங்களும் ஒரு சாட்சியாய் இருக்கிறீர்கள். உங்களுக்கும் இதை நடத்திவைக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா?''
ஒருசில நிமிட இடைவெளி அங்கு மௌனம் நிலவியது. குருராஜரின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
""நல்லது. ஸ்வாமிகளுக்கு ஸ்ரீராமன் இட்ட யுகக்கட்டளையாக நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன். புரிந்துகொண்டேன். பந்துக்களுக்கும் இதுபற்றி தெளிவுபடுத்தி தெரியப்படுத்துவேன். என்ன ஒன்று என்றால் லக்ஷ்மி நாராயணனை நினைத்தால்தான்...''
""வேறுவழியில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இப்பொறுப்பை முடித்து மதுரை கிளம்பிச் செல்லுங்கள். நீங்கள் அவசியம் அங்கு இருக்கவேண்டிய தருணமிது. உள் சென்று ஓய்வெடுத்து பின் உணவெடுத்துக் கொள்ளுங்கள்.''
மதுரைக்குத் தன்னை துரிதப்படுத்த என்ன காரணமிருக்கும். ம்... ஏதோ முக்கிய மானதாகத்தான் இருக்கும். இந்த தருணத்தை முன்னரே அறிந்திருக்கும் அபரோக்ஷித ஞானம் பெற்ற ஸ்வாமிகள் பூர்வாஸ்ரமத்தில் எனது தம்பி என்பது பெருமிதமாக இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டவர் ஸ்வாமிகளை வணங்கி எழுந்து உள்ளே சென்றார்.
""வாருங்கள் அப்பா. நலமா. அம்மா எங்கே? அவர்கள் சௌக்கியமா'' என்றபடி குருராஜரின் மகன் வேங்கடநாராயணன் அவரின் பாதம் தொட்டு வணங்கினான்.
""தீர்க்காயுஷ்மான் பவ. நல்லதப்பா. அம்மா நலமாயிருக்கிறாள்'' என்றவர் மகனின் சிரசைத்தொட்டுக் கோதி ஆசிர்வதித்தார். ""சரி, எங்கே லக்ஷ்மி நாராயணன்? உன்னோடு தானே எப்போதும் இருப்பான்?''
""மாலையாகிவிட்டதல்லவா... ஸ்வாமிகள் கண்மூடி தியானிக்கும் நேரமல்லவா...''
""அதனால்...''
""இந்த நேரம் யாரும் அறியாது ஒரு ஓரமாக நின்று, கண்மூடி தியானிக்கும் அவர் முகத்தினையே வெகுநேரம் பார்த்த வண்ணமிருப்பான். கண் திறக்கும் முன்பாக வெளியேறிவிடுவான். தகப்பனாரைக் காண்பதில் அலாதிப் பிரியம். பெரும்பாலும் அவன் கண்களில் கண்ணீர் வராத நாட்கள் குறைவு.''
""ஸ்... என்ன இது. அவர் ஸ்வாமிகள். இங்கு உறவு முறைக்கே இடமில்லை. அப்படி உறவு கொண்டாடுவதாயிருந்தால் நீயும் என்னோடு இங்கிருந்து வெளியேறி விடு'' என்றார் கோபமாய்.
""மன்னியுங்கள் அப்பா. இதுவரை நான் ஸ்வாமிகளை அப்படி நினைத்ததும் இல்லை; அழைத்ததும் இல்லை. மடத்தில் நானும் ஒரு மாணவன். அவ்வளவே. நான் இதுவரை எந்த உரிமையையும் உரைத்ததேயில்லை. ஆனால் லக்ஷ்மி நாராயணன் நிலை அப்படியல்லவே. கண்னெதிரே பிதா இருந்தும் வாய்விட்டுக் கூப்பிடக்கூட இயலாது மௌனமாய் அவன் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே... ஸ்வாமிகளின் வகுப்பில் பாடம் எடுக்கையில் அவன் அவரது முகத்தைப் பார்ப்பதுமில்லை. செவியால் உணர்ந்து மலர்கிறான் அப்பா. நானும் காரணம் கேட்டேன். வெகுநேரம் பார்த்தால் தனக்கு அழுகை வந்துவிடுகிறதென்று சொல்கிறான். எனக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாது அப்போது.''
""தவறு மகனே. உனது தம்பியான அவனிடம் நீதான் பொறுப்பாக அனைத்தையும் சுட்டிக் காட்டவேண்டும். நாம் அனைவரும் செய்தது ஒரு யுகத் தியாகம். ஒரு மாபெரும் ஞானப் புருஷன் நமது வம்சத்திலிருந்து ஸ்ரீமன் நாராயணனாலேயே தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார் என்பது எப்பேற்பட்ட வரம்! பல யுகங்களுக்குப் பேசப்படப்போகின்ற மாபெரும் உத்தம நிகழ்வப்பா. மேலும்...'' என்றவர் சற்று முன்னர் ஸ்ரீராயரிடம் ஏற்பட்ட உரையாடலையும் விளக்கினார்.
தான் லஷ்மி நாராயணனிடமும் இந்நிகழ்வினை எடுத்துக்கூறி, நமக்கும் அதற்கான கடமை இருக்கின்றதென்பதையும் விளக்க வேண்டியுள்ளது என்றும், எப்படி இதனை ஆரம்பிப்பது என்பதுதான் தெரியவில்லை என்றும் அவர் சொல்கையில்- ""அனைத்தும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்'' என்ற குரல் கேட்டு இருவரும் துணுக்குற, அங்கு லக்ஷ்மி நாராயணன் நின்றிருந்தான்.
""வா லக்ஷ்மி. அப்பா இப்போதுதான் உன்னைக் கேட்டுக்கொண்டிருந்தார். நானும் நீ இப்போது...''
""வந்துவிடுவேன் என்றாயா அண்ணா?'' சற்றே மௌனித்த குருராஜர் அருகே சென்று லக்ஷ்மி நாராயணனை அணைத்துக்கொண்டார். சூடான கண்ணீரை அவரது இடது தோள் உணர்ந்தது. அவனது உடல் குலுங்கலில் அந்த வேதனையான அழுகையின் தீவிரத்தை உணரமுடிந்தது அவரால். முழுவதும் அழுது முடிக்கட்டும் என்று அவனைத் தடவித்தடவி ஆசுவாசப்படுத்தி னார். மூவருக்குள்ளும் பிறகு உணர்ச்சி கரமான சம்பாஷனைப் பரிமாற்றங்கள் நடந்தன. அந்த வளர்ந்த வாலிபன் முகம் பொத்தி அழுததும், சப்தமில்லாது யாருக்கும் தெரியாது நாகரிகம் காத்ததும் மகிழ்ச்சிக்கு பதில் வேதனையினை அதிகப்படுத்துவதாய் இருந்தது. இவன் பிறப் பெடுத்து பெற்றோர்களைக் கண்முன்னே இழந்ததும், இப்போது இழக்கப் போகி றோம் என்று தெரிவதும் உலகத்திலேயே சிகரமான வேதனையன்றோ என குருராஜர் நினைத்து வேதனையுற்றார். அவருக்கும் வேங்கடநாராயணனுக்கும் நடுவில் லக்ஷ்மி இருக்க, அவனை இருவரும் தேற்றுவதை நடந்துவந்துகொண்டிருந்த ராகவேந்திரர் கண்ணுற்றார். அந்த சூழ்நிலையை அவரால் பரிபூரணமாக உணரமுடிந்தது. நடந்து கொண்டிருந்தவர் வான் நோக்கி வணங்கினார்.
மூவர் இருந்த திசை நோக்கி இருகரம் தூக்கி ஆசிர்வதித்தார்.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10/ragavender-t.jpg)