"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.'

-திருவள்ளுவர்

சொல்லும்போது கேட்பவரைத் தன்வயப்படுத்தும் தன்மையுடையதாக வும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக்கூடியதாகவும் அமைவதே சொல்வண்மை எனப் படும்.

Advertisment

மகாபாரத யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. "என் மகன் அபிமன்யுவின் முடிவுக்குக் காரணமான ஜெயத்ரதனைக் கொல்வேன்' என சபதம் செய்திருந்த அர்ஜுனன், ஆகாயத்திலிருந்த ஜெயத் ரதனின் தலையை அம்பெய்து கொய்தான்.

அப்போது அர்ஜுனனின் தேரை செலுத்திக் கொண்டிருந்த கண்ணன், "பார்த்தா... ஜெயத்ரதனின் தலை கீழேவிழாதவாறு அம்புகளை ஏவி தட்டிக்கொண்டே செல்'' என்றார். அர்ஜுனனும் அவ்வாறே செய்தான்.

சற்று நேரமானதும், "அர்ஜுனா, அங்கே பார்... ஒருவர் தவம் செய்துகொண்டிருக்கிறா ரல்லவா? அவர் மடியில் தலையை வீழ்த்து'' என்றார்.

Advertisment

அர்ஜுனனும் அவ்வாறே அங்கு தவம் செய்துகொண்டிருந்தவர் மடியில் ஜெயத்ரதனின் தலையைத் தள்ளினான். தவம் செய்துகொண்டிருந்தவர் திடுக்கிட்டுக் கண்விழித்து, தன் மடியில் ஒரு தலை இருப்பதைக்கண்டு சட்டென்று அதைக் கீழே தள்ளினார். அடுத்த நொடி அவரும் தலைசிதறி இறந்துபோனார். அவர் பெயர் விருத்த ஷத்திரன். அவர்தான் ஜெயத்ரதனின் தந்தை. மகன் தலையைக் கீழேதள்ளிய அவர் ஏன் இறக்கவேண்டும்?

விருத்த ஷத்திரன் தவம்செய்து, "என் மகனது தலையை எவன் கீழே தள்ளு கிறானோ அவன் தலைசிதறி இறக்க வேண்டும்' என வரம் வாங்கியிருந்தார். மகனுக்கு பாதுகாப்பு செய்துவிட்டோம் என்பது அவர் எண்ணம். ஜெயத்ரதன் இதையறிந்து வைத்திருந் தான். எனவே "என்னை எவராலும் எதுவும் செய்ய முடியாது' என்ற எண்ணத்தில் அட்டகாசம் செய்துகொண்டிருந்தான். அதற்கு சிகரம் வைத்ததுபோல பாஞ்சா-யைக் கவர்ந்து சென்று பாண்டவர்களால் அவமானப்படுத்தப் பட்டான். அந்த அவமானத்தின் விளைவாக அபிமன்யு வதத்தில் முக்கிய பங்குவகித்தான். என்னதான் செய்தாலும் தெய்வம் இருக்கிறதல்லவா? அது ஜெயத்ரதனின் தலையை வாங்கி தந்தையின் மடியில் விழச்செய்து அவன் கதையை முடித்தது. தன்னை நம்பிய பாண்டவர்களைக் காத்தது.

தெய்வம் உள்நின்று உணர்த்தும்; தீவினைகளை நீக்கும்; கவலைகளை ஒழிக்கும்; நல்வினைகளை ஓங்கச்செய்யும் என்பதை உணர்வுப்பூர்வமாக உணரவைக்கும் உன்னதமான திருத்தலம்தான் பாண்டூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.

இறைவன்: வைத்தியநாத சுவாமி.

இறைவி: பாலாம்பிகை என்னும் தையல்நாயகி.

சிறப்பு மூர்த்தி: அனுக்கிரக சனிபகவான், பரிகார துர்க்கை.

ஊர்: பாண்டூர்.

தலவிருட்சம்: வில்வ மரம்.

தீர்த்தம்: சூரிய புஷ்கரணி.

இணைப்பு கோவில்: பூதேவி, நீளாதேவி சமேத பாண்டவ சகாயப் பெருமாள் திருக்கோவில்.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்; காவிரி வடகரையில் தேவார வைப்புத் தலமாகத் திகழ்வதும்; பஞ்ச வைத்திய நாத தலங்களில் ஒன்றாக விளங்குவதும்; மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகள் கொண்டதும், மேலும் பல்வேறு சிறப்பு களைப் பெற்றதொரு திருத்தலம்தான் பாண்டூர்.

po

தலப்பெருமை

சோழ வளநாட்டில் காவிரி வடகரையிலுள்ள நீடூர் சோமநாத சுவாமி ஆலயத்திற்கு மேற்கிலும், அன்னியூர் என்னும் பொன்னூர் ஆபத்சகாயேஸ் வரர் ஆலயத்திற்கு வடக்கி லும், திருமணத் தலமான திருமணஞ்சேரிக்குக் கிழக்கிலும், அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்குத் தெற்கிலும் மத்திய க்ஷேத்திரமாய் விளங்கும் ஆலயம்தான் பாண்டூர் சிவாலயம்.

முன்னொரு காலத்தில் ஆகாயத்திலிருந்து ஐந்து வில்வ தளங்கள் பூமியில் விழுந்தன. அவற்றில் முதலா வது வில்வம் வைத்தீஸ்வரன் கோவி-லும், இரண்டாவது மண்ணிப்பள்ளத்திலும், மூன்றாவது பாண்டூரிலும், நான்காவது பனையூரிலும், ஐந்தாவது ராதாபுரத்திலும் விழுந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இவை ஐந்தும் பஞ்ச வைத்தியநாத க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இறைவன் வைத்தியநாதசுவாமி, இறைவி தையல்நாயகி என்னும் திருநாமங்களுடன் ஐந்து தலங்களிலும் அருள்பா-க்கின்றனர்.

தல வரலாறு

துவாபர யுகத்தில் பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட சமயம், அவர்களுக்கு பாண்டுரோகம் என்னும் கொடிய நோய் ஏற்பட்டது. அது ஒருவிதமான ரத்த சோகை போன்ற நோய்; மனவ-மையைக் குறைக்கக்கூடியது. இதனால் மிகவும் அவதிப்பட்ட பாண்டவர்கள், அந்த நோய்தீர கண்ண பரமாத்மாவைப் பிரார்த்தனை செய்தனர். அங்குவந்த கண்ணன் அவர்களது நோயின் தீவிரத்தைக்கண்டு அஞ்சினார். உடனே அவர்களுக்கு மகாவிஷ்ணுவாகக் காட்சிதந்து, ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் அனைவரையும் நீராடி, அங்கொரு சிவ-ங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து பூஜைசெய்து வழிபடச் சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். சிவபெருமான் அவர்களுக்கு அனுக்கிரகம் செய்து, அவர்களது கடும் நோயை நிவர்த்தி செய்தருளினார். "பாண்டு என்னும் இந்த நோய் நீங்கிய இத்தலம் பாண்டூர் என விளங்கட்டும்' என்று பரமேஸ்வரன் கூறினார்.

p

(அன்றுமுதல் இத்தலம் பாண்டூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.) இதைக்கேட்டு பாண்டவர்கள் மகிழ்ந்து, "இந்த தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோயாக இருந்தாலும் அதனை இறைவன் தீர்த்தருள வேண்டும்' என்று வேண்டிக்கொண்டனர்.

அவ்வாறே சிவபெருமானும் அருளினார்.

இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் அருகிலுள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி இறைவனை பிரதட்சிணம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நோய்களும் நீங்கும்.

சிறப்பம்சங்கள்

= தலங்களில் உத்தமமான பாதீர்தியுத புரம், பாண்டரூர், பாண்டவபுரம் என்றெல்லாம் பெயர்கள் இருந்தாலும் தற்போது பாண்டூர் என்றே வழங்கப்படுகிறது.

= சந்திராங்கதன் என்னும் அரசனுக்கு தந்திரி நோய் ஏற்பட்டு நிவர்த்தியடைந்த தலம்.

= பாண்டு மகாராஜனுக்கு பாண்டு ரோகத்தை நீக்கிய தலம்.

= புண்டரீகவாசியான சண்டிகை என்பவளுக்கு மண்ட- ரோகத்தை நிவர்த்திசெய்த தலம்.

= கார்க்கோடகனால் தீண்டப்பட்ட நள மகாராஜா நீலோத்பவ மலர்களால் ஈசனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவர, அவனுக்கு பூர்வ வடிவத்தை அளித்த தலம் இதுவென்று தலபுராணம் கூறுகிறது.

= அங்க தேசத்து அரச குமாரனுக்கு, மண்டல ருத்ரா அபிஷேகத்தின்மூலம் குஷ்டரோகத்தை அறவே நீக்கி உடல்நலம் அருளிய தலம்.

= இந்த சிவாலயம் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. வரலாற்று டன் இணைந்த பெருமாள் கோவில், பாண்டவர்கள் வழிபட்ட திரௌபதியம்மன் கோவில், பிடாரியம்மன் கோவில், அய்யனார் கோவில் போன்றவையெல்லாம் கிராம நிர்வாகத்தில் செயல் பட்டுவருகின்றன. இணைப்புக் கோவிலான பாண்டவ சகாய பெருமாள் கோவி-ல் சுவாமிக்கு வலப்புறம் மகாலட்சுமியும், ஈசான்ய திக்கில் காரியசித்தி ஆஞ்சனேயரும் அருள்கின் றனர். "பாண்டவர்களுக்கு சகாயம்செய்து நல்வழிகாட்டிய பாண்டவ சகாயப் பெருமாள் தம்மை வழிபடுபவர் களுக்கு நல்வழி காட்டியருள்வார்'' என்று ஆணித் தரமாகச் சொல்கிறார் ஆலய அர்ச்சகர் கோவிந்தராஜ பட்டாச்சாரியார்.

pon

பரிகார துர்க்கை

பொதுவாக துர்க்கை வடக்கு நோக்கிதான் காட்சி தருவாள். ஆனால் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் கிழக்குநோக்கி அஷ்டபுஜ துர்க்கையாக தனிச்சந்நிதி கொண்டு, பரிகார துர்க்கை என்னும் பெயரில் அருள்புரிகிறாள். இந்த அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் (மாலை 4.30-6.00) அபிஷேகம் செய்து செவ்வரளி மலர்சாற்றி வழிபட, ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்க்கையால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தி பெறுவதோடு, குடும்பத் தலைவரின் ஆயுள் பெருகும்.

திங்கட்கிழமையன்று நான்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, வாச மலர்களால் அர்ச்சனை செய்துவர, சந்திரன், ராகு சேர்க்கைப் பெற்ற ஜாதகர்களுக்கு தோஷநிவர்த்தி ஏற்பட்டு மனம் தெளிவாகும்; தாயின் உடல்நலம் சீராகும்.

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் (3.00-4.30) எலுமிச்சை சாறு அபிஷேகம் செய்து, 27 எலுமிச்சம்பழ மாலை சாற்றி, நான்கு எலுமிச்சை நெய்தீபமேற்றி வழிபட, உடலிலுள்ள உட்பிணி, மாதவிலக்குப் பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் விருத்தியடையும். தைரியம் கிட்டும். நான்கு முறை வலம்வரவேண்டும்.

புதன்கிழமை உதயாதி நாழிகையில் செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர். ஞாபகசக்தி வளரும்.

வியாழக்கிழமையன்று காலசந்தி பூஜையின்போது நான்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட, குருவின் அருள் கடாட்சம் கிட்டும்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30-12.00) அபிஷேகம் செய்து, செவ்வரளி மற்றும் மணமுள்ள மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, நாக தோஷம் நீங்குவதோடு சுக வாழ்வு கிட்டும்.

சனிக்கிழமை மாலை வேளையில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட, நவநாயகர் களின் அருள்கிட்டும்.

;

இந்தப் பரிகார துர்க்கையை வளர்பிறை அஷ்டமியன்று புத்தாடை சாற்றி பகல் 11.00 மணிக்குள் அபிஷேகம் செய்து, செவ்வரளி மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சித்து வழிபட, லட்சுமியின் அருள் கிட்டுவதுடன் நேர்மறை எண்ணம் பெருகும்.

"பாண்டு என்பது ஒரு கொடுமையான நோயின் பெயர். அதாவது உடலிலுள்ள தோல் முழுவதும் வெண்புள்ளிகளை ஏற்படுத்தி, மன வ-மையைக் குறைத்து, உடல்சோர்வு தந்து, செயல்பாடுகளைக் குறைத்து, சக்தியை இழக்கச் செய்யும். அத்தகைய நோய் விலகியோடிய ஊர் பாண்டூர் ஆகும். மனிதனுக்கு வரக்கூடிய 4,448 நோய்களை நீக்க வல்லவர் இத்தல வைத்தியநாதர். அத் தகைய இறைவன் தற்காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய தொற்றுநோயிலிருந்தும் காத்து நல்ல தீர்வுதருவார். அனைவரும் நலம்பெற வேண்டும்'' என்று கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகர் சதாசிவ சிவாச்சாரியார். மேலும் அவர் கூறுகையில், "சிவபெருமானுக்குகந்த வழிபாடுகளில் பிரதோஷம் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அத்தகைய பிரதோஷம் இருபது வகையாக உள்ளன. அவற்றுள் ஐந்து மிக முக்கியமானவை'' என்று சொல்- அந்த விவரங்களைக் கூறினார்.

ஏகாட்சரப் பிரதோஷம்: தமிழ் வருடத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே சனிப் பிரதோஷம் வந்தால் அது ஏகாட்சரப் பிரதோஷம் எனப்படும்.

அன்றைய தினம் சிவாலயம் சென்று "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ அத்தனை முறை ஓதி, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி, விநாயகர், நந்தீஸ்வரரை வழிபட, பலவிதமான நன்மைகள் கிடைக்கப் பெறுவர்.

அர்த்தநாரி பிரதோஷம்: தமிழ் வருடத்தில் இரண்டுமுறை சனிமகா பிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அன்றைய தினம் சிவாலயம் சென்று வில்வார்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் ஈடேறும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.

திரிகரணப் பிரதோஷம்: தமிழ் வருடத்தில் மூன்றுமுறை சனிமகா பிரதோஷம் வந்தால் அது திரிகரணப் பிரதோஷம் எனப்படும். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்டலட்சுமிகளின் அருளாசி கிட்டும். பிரதோஷம் முடிந்ததும் வீட்டில் அஷ்டலட்சுமி படம் வைத்துப் பூஜித்துவர நற்பலன் ஏற்படும்.

[p

பிரம்மப் பிரதோஷம்: தமிழ் வருடத்தில் நான்குமுறை சனிமகா பிரதோஷம் வந்தால் அது பிரம்மப் பிரதோஷம் எனப்படும். இந்த பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்ம பாவம், தோஷம் நீங்கி நன்மைகளைப் பெறலாம்.

அட்சரப் பிரதோஷம்: தமிழ் வருடத்தில் ஐந்துமுறை சனிமகா பிரதோஷம் வருவது. தாருகாவனத்து ரிஷிகள் தான் என்னும் அகந்தையால் ஈசனையே எதிர்த்தனர். ஈசன் பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகாவன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள் இந்தப் பிரதோஷ வழிபாட்டை அனுஷ்டித்து பாவவிமோசனம் பெற்றனர்.

அத்தகைய அட்சரப் பிரதோஷம் இவ்வாண்டு நடக்கும் பிலவ வருடத்தில் வருகின்றது. "ஓம்' இதழ் வாசகர்கள் அட்சரப் பிரதோஷ வழிபாடுகளைக் கடைப்பிடித்து நன்மைகளைப் பெறலாம்.

1. சித்திரை மாதம் 11-ஆம் தேதி, சனிக்கிழமை. (24-4-2021).

2. ஆவணி மாதம் 19-ஆம் தேதி, சனிக்கிழமை. (4-9-2021).

3. புரட்டாசி மாதம், 2-ஆம் தேதி, சனிக்கிழமை. (18-9-2021).

4. தை மாதம், 2-ஆம் தேதி, சனிக்கிழமை. (15-1-2022).

5. தை மாதம், 16-ஆம் தேதி, சனிக்கிழமை. (29-1-2022).

பசுமையான வயல் வெளிகளுக்கு மத்தியில், அழகிய கிராமத்தில் பிரதான சாலையருகே, நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பட்டு கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் ஆலயம் திகழ்கிறது. கருவறையில் மூலவர் கிழக்குநோக்கி அருள்புரிகிறார். அம்பாள் பாலாம்பிகை தெற்குநோக்கி நின்றநிலையில் தனிச்சந்நிதி கொண்டிருக்கிறாள். கோஷ்ட தெய்வங்கள் தட்சிணாமூர்த்தி, -ங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். மேலும் சிவாலயத்திற்குரிய அனைத்து பரிவார மூர்த்திகளும் சிறப்புடன் சந்நிதி கொண்டுள்ளனர்.

நளனும் அரிச்சந்திரனும் வழிபட்ட அனுக்கிரக சனிபகவான் அருள்கின்ற தலம்- பஞ்சபாண்டவர்களுக்கு அருளியதோடு பலதரப்பட்ட மக்களுக்கும் அருளிய ஈசன் விளங்குகின்ற தலம்- கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி, நவராத்திரி, ஆடி வெள்ளி, தேய்பிறை அஷ்டமி, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என அனைத்து விசேஷங்களும் சிறப் பாக நடக்கின்ற தலம்... இத்தனை சிறப்புகொண்ட பாண்டூர் அருளும் பாலாம்பிகை உடனுறை பரமனாம் வைத்தியநாதசுவாமியை பிலவ வருடத்தில் அட்சரப் பிரதோஷ நாட்களில் வழிபடுவோம்.

காலை 7.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: சதாசிவ சிவாச்சாரியார், வைத்தியநாத சுவாமி திருக்கோவில், நீடூர் (வழி), பாண்டூர் (அஞ்சல்), மயிலாடு துறை மாவட்டம்- 609 203.

அலைபேசி: 94420 13493, 93604 15819.

பெருமாள் கோவில் பூஜை விவரங்களுக்கு: கோவிந்தராஜ பட்டாச்சாரியார், அலைபேசி: 94438 73407.

அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாக செல்லலாம். மயிலாடுதுறை ரயில்வே கேட்டைக் கடந்து மாப்படுகைக்கு வடக்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில், பொன்னுரை அடுத்துள்ளது பாண்டூர் கிராமம். மினி பஸ், ஆட்டோ வசதி உண்டு.

படங்கள்: போட்டோ கருணா