தமிழரின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாள், பஞ்சபூதத் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள் என்று யாவரும் அறிவோம்.
நகர்ப்புறத்தினைவிட கிராமப்புறங்களில் பொங்கல் திருநாள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.
பொங்கலுக்கு முதல் நாள் போகி. அதற் கடுத்த நாள் தை முதல் தேதியன்று பொங்கல் திருநாள். அதற்கடுத்து வருவது மாட்டுப் பொங்கல். அதனைத் தொடர்வது கன்னிப் பொங்கல் என்னும் காணும் பொங்கல். பொங்கல் பண்டிகை மூன்று நாட்கள் தொடர்ந்தாலும் போகிப் பண்டிகையைச் சேர்த்து நான்கு நாட்கள் கொண்டாடப் படுகிறது.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்னும் தொல்காப்பியரின் கூற்று ஒரு தத்துவ மாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. வீட்டி லுள்ள உபயோகமற்ற பொருட்களை வீட்டை விட்டுப் போக்கி எரித்துவிடுவதால் வீடு சுத்தமடைகிறது. மேலும், வீட்டிற்கு வெள்ளை யடித்து பளிச்சிடச் செய்வதும் இன்றும் கிராமப்புறத்தில் நடைமுறையில் உள்ளது.
மனிதனானவன் மனதில் எழும் கீழ்த்தரமான இச்சைகளையும், தவறான ஆசைகளையும், பேராசைகளையும் தன்னு டைய ஞானமென்னும் தீயால் எரித்துவிட வேண்டும். அறிஞர் பெருமக்கள், ஆன்மிக ஆன்றோர்கள் அருளிய நல்ல கருத்துகளை ஏற்று மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே போகிப் பண்டிகையின் உயரிய தத்துவம்.
போகிப் பண்டிகையின் அடுத்தநாள் தை மாதம் பிறக்கிறது. "தை பிறந்தால் வழி பிறக் கும்' என்பது முதுமொழி.
பச்சரிசியைப் பொங்கியதும் சாப்பிடும் நிலைக்கு வருவதுபோல, மானிடர்கள் மனமென்னும் அடுப்பில், இறை சிந்தனை என்னும் நெருப்பை ஏற்றிப் படரவிட்டு, பச்சரிசி யைப் பக்குவப்படுத்தி, அத்துடன் வெல்லம், முந்திரி, ஏலம், உலர்ந்த திராட்சை, நெய் சேர்த்து, சுவைமிக்க சர்க்கரைப் பொங்கல் தயாரித்து இறைவனுக்கு (சூரியன்) படைப்பதுபோல, நம் பேராசையை அகற்றி மனதை ஒருநிலைக்குக் கொண்டுவந்தால் இனிப்பான பொங்கல்போல் வாழ்வில் என்றும் சுகம் காணலாம்.
பொங்கல் வழிபாட்டில் கரும்பு, மஞ்சள், இஞ்சிக்கொத்து முதலிடம் பெறும். கரும்பு இனிப்பாக இருந்தாலும் முழுக்கரும்பும் சுவையானதாக இருக்காது. அடிக்கரும்பு இனிக்கும். மேலே செல்லச்செல்ல சுவை குறையும். நுனிக்கரும்பு உப்புச் சுவையுடைய தாகவும், அடிக்கரும்பு இனிப்பு குணம் கொண்டதாகவும் திகழ்வதுபோல, நம் உழைப்பின் அருமை ஆரம்பத்தில் உப்புத் தன்மைபோல் இருந்தாலும், அதன் முடிவில் அடிக்கரும்புபோல இனிமையாக இருக்கும். தோகையுடன்கூடிய கரும்பு அழகாகக் காட்சி தந்தாலும், அதன்கீழ் இடையூறுகள் என்ற எத்தனையோ முடிச்சுகள் (கர்ணைகள்) இருந்தாலும் இனிப்பான சாறு உள்ளே உள்ளதுபோல் வாழ்க்கையில் பல சோதனைகள், இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற் றைக் கடந்து இறைவன் அருளால் இனிமை யான வாழ்வு அமையும் என்பதை பொங்கல் பண்டிகையில் முதலிடம் பெறும் கரும்பு உணர்த்துகிறது. பொங்கல் பானையின் வாய்ப்புறத்தில் மஞ்சள் கொத்தும், இஞ்சிக் கொத்தும் கட்டப்படுகின்றன. நம் வாழ்வு என்றும் மங்களமாக அமையவேண்டும் என்ற தத்துவத்தை மஞ்சள் சொல்லும் அதேவேளையில், இஞ்சி நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பொங்கல் பண்டிகையானது பஞ்சபூதத் திருநாளென்று சொல்லப்படுவதற்குக் காரணம்- கிராமப்புறங்களில் மண்பானை யில்தான் பொங்கல் இடுகிறார்கள். இந்தப் புதுப்பானை, பூமியிலிருந்து எடுத்த களிமண்ணால் ஆனது. அந்தப் பானையில் நீர்விட்டு, பனை ஓலைமூலம் நெருப்பினை அடுப்பில் வைத்து, அரிசியைப் பானையிலிட்டு கொதிக்க வைக்கப்படுகிறது. நெருப்பு எரிவதற்குக் காரணமாக காற்று இருக்கிறது. வெட்டவெளியில் பொங்கல் வைத்து வழிபடுவதுதான் முன்னோர்களின் வழக்கம். அதன்மூலம் ஆகாயத்தைக் காண்கிறோம். பொங்கல் தயாராகும்போது நெருப்பிலிருந்து வெளிப்படும் புகையும் வளிமண்டலத்திற்கு நன்மை செய்கிறதென்று சொல்லப்படுகிறது.
இதன்படி பஞ்சபூதங்களின் துணையோடு பொங்கல் தயாராகிறது. இயற்கையை வழிபடுவதுதானே பொங்கல் திருநாளின் அடிப்படைத் தத்துவம்! அதற்கேற்ப பஞ்சபூதங்களையும் வழிபடும் வைபவமாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்த நாள், விவசாயப் பெரு மக்களுக்கு பலவிதங்களில் உதவும் காளைகளையும், வீட்டிற்குப் பால் கொடுக்கும் பசுக்களையும் போற்றும் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அன்று காளைகளையும் பசுக்களையும் நீராட்டி, கொம்புகளுக்கு வண்ணம்தீட்டி, மலர் மாலை அணிவித்து பொங்கல் படைத்து வழிபடுவதைக் காணலாம்.
பசு மகாலட்சுமியின் சாந்நித்தியம் நிறைந்தது. காலை எழுந்ததும் பசுவின் பின்பாகத்தை தரிசிப்பது மகாலட்சுமியை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று வேத நூல்கள் கூறுகின்றன. நாம் எங்கேயாவது வெளியில் செல்லும்போது நம் எதிரில் பசுமாடு வந்தால் நாம் மேற்கொள்ளும் நல்ல காரியம் சுபமாக முடியும்.
திருவானைக்கா கோவில் ஸ்ரீஅகிலாண் டேஸ்வரி சந்நிதியில் தினமும் நண்பகல் கோபூஜை செய்த பின்பே அம்பிகைக்கு ஆராதனை காட்டப்படுகிறது. எல்லா தேவதைகளும் பசுவின் உடம்பில் வாசம் செய்வதாக வேதநூல்கள் சொல்வதால் கோபூஜை போற்றப்படுகிறது. உழவுக்குப் பெருந்துணையாக இருக்கும் காளையை அன்று வழிபடுவதால் சிவபெருமானின் அருள்கிட்டும். சிவபெருமானின் வாகனம் காளை என்பது நாமறிந்ததே.
மாட்டுப் பொங்கலுக்கு அடுத்தநாள் கன்னிப் பொங்கல் என்னும் காணும் பொங்கல். அன்று கிராமங்களில் வசிப்பவர்கள் ஆற்றங்கரைக்குச் சென்று பொங்கலிடுவதும் உண்டு. கடலோர ஊர்களில் வசிப்பவர்கள் கடற்கரைக்குச் சென்று, வீட்டில் தயாரித்த மதிய உணவினை ஒன்றுகூடி சாப்பிட்டு நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மகிழ்வர்.
அன்றைய தினம் சிறுமிகள் உறவினர் கள் இல்லத்திற்குச் சென்று கும்மியடித்துப் பரிசுகள் பெறுவர்.
விவசாயப் பெருங்குடி தனவந்தர்களிடம் பணியாற்றும் அன்பர்கள் அன்று தங்கள் எஜமானர்களை சந்தித்துப் பரிசுகள் பெறுவதுண்டு.
சில குடும்பங்களில் அவரவர்கள் பரம்பரை வழக்கப்படி, அன்று மாலை முன்னோர்களுக் கான வழிபாட்டினை மேற்கொள்வதும் உண்டு.
பஞ்சபூதத் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டா டும் வேளையில் நம் மனதின் மாசு நீங்கும்; இனிமையான பொங்கல்போல் நலமான வாழ்வு அமையும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.