ம் புண்ணிய பாரத பூமியின் வடக்கு எல்லையான இமயமலைப் பிரதேசங்களில் பல புண்ணியத் தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு விதத்தில் பெருமை வாய்ந்தது.

Advertisment

இப்போதைய உத்தரகாண்ட் (பழைய உத்தராஞ்சல்) மாநில மலைப்பகுதியில் (தரைமட்டத்திலிருந்து 3,680 மீட்டர் உயரத்தில்) கார்வார் என்ற இடத்தில் பஞ்ச்சுளி நந்தாதேவி, தூனகிரி, நீலகண்ட், கேதார்நாத், சௌகாம்பா, பந்தர் பூஞ்ச் ஆகிய ஏழு புண்ணியத் தலங்கள் அமைந்துள்ளன.

இந்த ஏழு தலங்களையும் கடந்து இன்னும் 1,000 மீட்டர் மேலே சென்றால் சோப்தா என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் துங்காநாத் ஆலயமும், இன்னும் நான்கு ஆலயங்களும் சேர்ந்த பஞ்ச கேதார்ஸ் (ஐந்து கேதாரங்கள்) எனப் படும் ஐந்து கோவில்கள் உள்ளன.

Pancha Katarak temples

Advertisment

இப்போது மகாபாரதம் நிகழ்ந்த காலத்திற்கு வருவோம். குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதற்காக, பாண்டவர்கள் இந்த துங்காநாத் தலத்திலுள்ள மகாதேவரை (சிவபெருமான்) தரிசிக்க வந்தனர்.

இதற்கு முன்னதாக சிவபெருமானை வணங்க பாண்டவர்கள் காசிக்குச் (வாரணாசி) சென்றனர். ஆனால் அவர் களுக்கு அங்கு சிவன் காட்சி தரவில்லை.

சிவன் குப்தகாசியில் (தற்போதைய உத்தரகாண்ட்) இருப்பதாக அறிந்து அங்கு வந்து பார்த்தபோது, பூமியில் மறைந்திருந்த நந்தியின் வால் மட்டும் வெளியில் தெரிந்தது. இதைப் பார்த்த பீமன் நந்தியின் வாலைப் பிடித்து மேலே தூக்கினான்.

Advertisment

நந்தி தரைக்குமேல் வந்தபோது சிவபெருமானும் மேலே வந்து காட்சியளித்தார். பாண்டவர்கள் அவரை வணங்கி, பாரத யுத்தத்தின்போது வெற்றிபெற உதவியதற்காக நன்றி தெரிவித்து, போரில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்துக்கொண்டனர்.

அவர்களுக்கு வரமளித்த சிவன் உடனே மறைந்துவிட்டார்.

அந்தப் பகுதியிலேயே சிவபெருமானின் ஐந்து உடலுறுப்புக்கள் பூமிக்குமேல் தெரிந்ததைக் கண்ட பாண்டவர்கள், அந்த உறுப்புக்கள் இருந்த இடத்திலேயே ஐந்து கோவில்களைக் கட்டி வழிபட்டனர்.

ஐந்து கோவில்களின் பெயர் விவரம்:

1. கேதார்நாத்- சிவபெருமானின் கொண்டை தென்பட்ட இடம். (தர்மர் கட்டியது).

2. துங்காநாத்- சிவபெருமானின் கைகள் தென்பட்ட இடம். (பீமன் கட்டியது.)

3. ருத்ரநாத்- சிவபெருமானின் முகம் தென்பட்ட இடம். (அர்ச்சுனன் கட்டியது).

4. கல்பேஸ்வரா- சிவபெருமானின் தலைமுடி தென்பட்ட இடம். (நகுலன் கட்டியது).

5. மகாமஹேஸ்வரா- சிவபெருமானின் தொப்புள் குழி தென்பட்ட இடம். (சகாதேவன் கட்டியது).

இக்கோவில்கள் பனிப்பொழிவுகள் உள்ளே புகமுடியாத வண்ணம் கருங்கற்களால் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஐந்து கோவில்களில் ஒன்றான துங்காநாத் கோவிலுக்குள் காலபைரவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மகாபாரதம் அருளிய வேதவியாசருக்கும் இங்கு ஒரு சிலை உள்ளது.

மற்ற நான்கு கேதாரக் கோவில் காட்சிகளும் ஒரு பெரிய வெள்ளித்தட்டில் செதுக்கப்பட்டு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலுக்கு முன்னால் ஒரு சிறிய நந்தி சிலையும் உள்ளது.

இதே பகுதியில் இன்னொரு இடத்தில் லிங்க வடிவமில்லாத சிலை வடிவில் காலபரைவருக்கும், பார்வதிக்கும் தனித்தனியாக சிறிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இரு கோவில்களைச் சுற்றி மதில் சுவரும், நுழைவாயிலும் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்- மே மாதங்களில் சுவாமி துங்காநாத்தின் ஓவியம் நன்கு அலங்கரிக்கப்பட்டு, மூடிய பல்லக்கில் வைத்து மலை அடிவாரப்பகுதியான முக்கு என்ற கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்படும்.

அப்போது ஏராளமான கிராம மக்கள் துங்காநாத் சுவாமியை தரிசனம் செய்வார்கள். இப்பகுதியில் வாழும் கிராம மக்கள் இந்த சிவபெருமானை மகாதேவ் என்று அழைத்தே வழிபடுகிறார்கள்.

இங்கு வந்து பஞ்சகேதாரக் கோவில்களைக் கண்டு வழிபாடு செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங் களைப் பெற்று நலமுடன் வாழ்ந்து இறைவனடி சேர்வார்கள் என்று கூறுகிறார் இக்கோவில் அர்ச்சகர்.