தினேழாவது சர்க்கம் வேதவதி தந்த சாபம்

(அகத்திய முனிவர் இராமபிரானுக்குக் கூறிவருகிறார்.)

அரசரே, தோள்வலிமைமிக்க இராவணன் பூவுலகில் அனைத்து இடங்களிலும் சுற்றிவந்தான். ஒருசமயம் இமயமலைப் பகுதியில் உலவிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு கரிய மான்தோல் உடுத்தி, கூந்தலை முடிந்து, வேத விதியின்படி தவமியற்றிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் கண்டான். உடனே அவள்மீது மோகம் கொண்டான். மெல்லிய சிரிப்புடன் அவளிடம், "அழகியவளே! உன் இளமைக்குத் பொருந்தாத செயலைச் செய்துகொண்டிருக்கிறாய். இது உனக்கு ஏற்புடையதல்ல. உனது அழகுத் தோற்றம் உவமை கூற இயலாதது. ஆண்களின் உள்ளத்தின் ஆசை மயக்கத்தை விளைவிக்கக்கூடியது. நீ தவம்புரிவது தவறு. யாருடைய மகள் நீ? எதற்காக இந்த விரதத்தை மேற்கொண்டிருக்கிறாய்? உன்னுடைய கணவன் யார்? உன்னோடு கூடிக் களிக்கும் ஆண் மிகவும் கொடுத்து வைத்தவன். எதை அடையும்பொருட்டு இவ்வளவு பெரிய முயற்சி செய்துகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டான்.

இவற்றையெல்லாம் கேட்ட அந்தப் பெண் முறைப்படி அவனுக்கு மரியாதை செலுத்திவிட்டுக் கூறத் தொடங்கினாள்.

Advertisment

"பிரகஸ்பதியின் மகனும், அளவற்ற தவவலிமை கொண்டவரும், பிரம்ம ரிஷியுமான குசத்வஜரே என்னுடைய தந்தை. அவர் பிரகஸ்பதிக்கு இணையான அறிவுமிக்கவர். தினமும் வேதமோதும் அவருடைய அறிவாற்றல் பெண் வடிவம்கொண்டு வெளிப்பட்ட தைப்போல பிறந்தவள் நான். என் பெயர் வேதவதி.

உரிய காலத்தில் தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சதர்கள், பன்னகர்கள் போன்றோர் என் தந்தையிடம் வந்து என்னை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு என்னைத் திருமணம் செய்துகொடுக்க என் தந்தை விரும்பவில்லை. அதற்குக் காரணம் உண்டு. மூன்று உலகங்களுக்கும் தலைவரும், தேவர்களின் தலைவருமான மகாவிஷ்ணுதான் எனக்குக் கணவராக வேண்டு மென்று என் தந்தை விரும்பினார். அதன் காரணமாகவே வேறு எவருக்கும் என்னைக் கொடுக்க அவர் எண்ணவில்லை.

இந்த செய்தியைக் கேள்விப்பட்டு, என்மீது பெரு விருப்பம் கொண்டிருந்த தைத்ய மன்னனான சம்பு என்பவன் மிகுந்த கோபம்கொண்டான். ஒரு இரவு நேரத்தில் என் தந்தை உறங்கிக்கொண்டிருந்தபோது அவன் அவரைக் கொன்று விட்டான். என் தந்தையின் உடலை எரியூட்டியபோது, என் தாயாரும் அவரது உடலைத் தழுவிக்கொண்டு உடன் கட்டை ஏறினாள்.

Advertisment

என் தந்தை, எனக்கு மணாளனாக ஸ்ரீமன் நாராயணனே வரவேண்டுமென்று எவ்வாறு ஆசைகொண்டாரோ அதை உறுதியாக நிறைவேற்றும் பொருட்டு, மகாவிஷ்ணுவையே மனதில் வைத்துக் கடுமையாகத் தவம்செய்து வருகிறேன். நாராயணனே எனது கணவர். அவரைத்தவிர வேறு எவரும் எனக்குத் துணையாக முடியாது. அவரை அடைவதற்காகவே கடுமையான நியமங்களை மேற்கொண்டு வருகிறேன். புலஸ்தியர் குலத்தில் வந்தவரே, நீங்கள் யார் என்பதை நான் அறிந்துகொண்டேன். என் தவத்தின் வலிமையால் மூவுலகங்களிலும் நடைபெறும் அனைத்து செயல்களையும் அறியும் ஆற்றல் பெற்றவள் நான்.''

இவற்றையெல்லாம் கேட்ட இராவணன், மன்மதனின் அம்புகளால் தாக்கப்பட்ட இதயத்தினனாய், உயரிய விரதத்தை மேற்கொண்டிருக்கும் அந்த கன்னிப் பெண்ணை நோக்கி மீண்டும் பேசலானான்.

"அழகு மிக்கவளே, நீ மிகவும் கர்வம் கொண்டவள்போல் தோன்றுகிறது. அதனால் தான் உனக்கு இதுபோன்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. மான்குட்டியின் கண்களை உடையவளே, கடுமையாக தவம் மேற்கொண்டு புண்ணியத்தைச் சேர்ப்பது முதியவர்களுக்கே ஏற்புடையது. நற்குணங்கள் நிறைந்தவளே, மூன்று உலகங்களிலும் பார்க்கமுடியாத பேரழகு வாய்ந்தவள் நீ. எனவே நீ இவ்வாறு பேசாதே. கோழைமனம் உடையவளே, உன்னுடைய இளமைப்பருவம் கடந்து கொண்டிருக்கிறது. நான் இலங்கேஸ்வரன். தசக்ரீவன் என்பது எனது பெயர். பெருமை வாய்ந்த எனக்கு நீ மனைவியாகி, அனைத்து சுகங்களையும் அனுபவித்து வாழ்வாய்.

விஷ்ணு என்று யாரையோ புகழ்ந்து பேசுகிறாயே... அவர் யார்? நீ விரும்பும் அவர் வீரம், தவம், சுகபோகம், பலம் போன்ற எந்த விஷயங்களிலும் எனக்கு நிகரானவரே அல்ல.''

அதைக்கேட்ட அவள் இராவணனைப் பார்த்து, "இல்லவே இல்லை. இவ்வாறெல் லாம் என்னிடம் பேசாதீர்கள். அனைத் துலக மக்களாலும் வணங்கப்படுபவர் மகா விஷ்ணு. மூவுலகங்களுக்கும் அவரே தலைவர்.

அரக்கர்களின் அரசரான உம்மைத் தவிர, அறிவு கொண்ட எவர்தான் அவரை இழிவாகப் பேச எண்ணுவர்?''

இவ்வாறு வேதவதி கூறியதைக் கேட்ட இராவணன் சினம்கொண்டு அவளது கூந்தலைப் பற்றினான். அதனால் மிகுந்த கோபம்கொண்ட வேதவதி தன்னுடைய கையினால் தனது கூந்தலை வெட்டிவிட்டாள். அவளுடைய கையே கத்திபோல மாறி அவளது தலையிலிருந்த கூந்தலை மழித்தது. எல்லையற்ற கோபம் கொண்ட அவள் அவனை எரித்துவிடுவதுபோல பார்த்தாள்.

அந்த நிமிடமே தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவுசெய்து நெருப்பைத் தோற்று வித்தாள்.

"பண்பில்லாதவனே! என்னை நீ அவமானப் படுத்திவிட்டாய். இனி ஒரு நிமிடமும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. உன் கண்முன்னாலேயே நான் தீயில் மூழ்கி இறக்கப்போகிறேன். பாவப் பிறவியான நீ இந்த வனத்தில் என்னை சீர்குலைத்துவிட்டாய். எனவே உன்னைக் கொல்வதற்காக நான் மீண்டும் பிறப்பேன். பாவம்செய்ய எண்ணிய ஒரு ஆணை ஒரு பெண்ணால் போரிட்டுக் கொல்லமுடியாது. உனக்கு சாபம் கொடுத்தால் என் தவப்பயன் குறைந்துவிடும். நான் ஏதேனும் நல்ல காரியங்கள், தானங்கள், வேள்விகள் செய்திருந் தால், அவற்றின் விளைவாக அடுத்த பிறவியில் ஒரு தாயின் வயிற்றில் தோன்றாத மகளாகப் பிறந்து, அறம் பிறழாத ஒருவரது மகளாக வளர்வேன்.''

இவ்வாறு கூறிய அவள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பில் புகுந்தாள். அப்போது நான்கு புறங்களிலிருந்தும் வானிலிருந்தும் மலர்மாரி பொழிந்தது.

அந்த வேதவதியே ஜனக மன்னரின் மகளாக அவதரித்தாள். அவளே தங்களது மனைவியான சீதை. நீங்களே ஆதியை அறிய முடியாத மகாவிஷ்ணு. வேதவதியின் கோபத் தால் இராவணன் ஏற்கெனவே கொல்லப் பட்டுவிட்டான். தற்சமயம் மனிதர்க்கு மேலான வலிமைபெற்ற உங்களால் அவன் வதைக்கப் பட்டான். பெரும்பேறு பெற்றவளாகிய அவள் மண்ணுலகில் மீண்டும் இராவணனை அழிக்கும் பொருட்டு தோன்றினாள். வேள்விக் குண்டத்தில் சுடர்விட்டு ஒளிவீசும் தீயைப் போன்றவளாகிய அவள், வேள்விச்சாலை அமைக்க நிலத்தை உழுதபோது ஏர் முனையில் வெளிப்பட்டாள். கிருத யுகத்தில் வேதவதியாக இருந்தவள் திரேதாயுகம் வந்ததும் இராவ ணனை அழிப்பதற்காக ஜனகரின் மிதிலைப் பரம்பரையில் தோன்றினாள். ஏர்க் கலப்பை யில் (கொழு) தோன்றியதால் சீதா என்று அனைவராலும் அழைக்கப்பட்டாள்.

பதினெட்டாவது சர்க்கம்

மருத்தனை வென்ற இராவணன்

வேதவதி நெருப்பில் விழுந்தவுடன், இராவணன் புஷ்பக விமானத்திலேறி உலகைச் சுற்றிவந்தான். அவ்வாறு அவன் வரும்போது, உசீரபீஜம் என்னும் நாட்டில் மருத்த மன்னன் என்பவன், தேவர்கள் புடைசூழ வேள்வி செய்துகொண்டிருப்பதைக் கண்டான். பிரகஸ்பதியின் நேர் சகோதரரான சம்வர்த்தர் என்னும் பிரம்மரிஷி தலைமைப் பொறுப்பேற்று வேள்வியை நடத்திக்கொண்டி ருந்தார். இராவணனை அங்கே கண்டதும், பிரம்மாவிடமிருந்து பெற்ற வரத்தின்படி அவன் வெல்வதற்கு இயலாதவன் என்பதை உணர்ந்துகொண்ட தேவர்கள் விலங்கினங் களில் மறைந்துகொண்டார்கள். இந்திரன் மயிலாகவும், எமதர்மன் காகமாகவும், குபேரன் ஓணானாகவும், வருணன் அன்னப் பறவையாகவும் மாறினார்கள். இவ்வாறு மற்றவர்களும் இராவணனிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக வெவ்வேறு உருவங்களில் புகுந்துகொண்டனர்.

அசுத்தம் நிரம்பிய ஒரு நாயைப்போல வேள்விச் சாலைக்குள் புகுந்தான் இராவணன். அவன் மருத்தனிடம் சென்று, "என்னுடன் போரிட வா. அல்லது தோல்வியுற்றதாக ஏற்றுக்கொள்'' என்று கூறினான்.

அப்போது மருத்தன், "தாங்கள் யார்?'' என்று, கேட்க, ஏளனமாக நகைத்த இராவணன், "அரசனே, குபேரனுடைய தம்பி நான். என் பகட்டான தோற்றத்தைப் பார்த்து நீ வியப்படையவில்லை. உன்னிடம் அச்சமும் தோன்றவில்லை. உனது இந்த இயல்பைக்கண்டு திருப்தியடைந்தேன். மூவுலகங்களிலும் எனது ஆற்றலை அறியாதவர் எவரேனும் உண்டா? எனது வலிமையினால் என் சகோதரனான குபேரனையே வென்று இந்த புஷ்பக விமானத் தைக் கைப்பற்றினேன்'' என்றான்.

அதற்கு மருத்தன், "போரில் அண்ணனையே வென்றிருக்கிறீர்கள்! மிகவும் பாக்கியசாலிதான். மூவுலகங்களிலும் உங்களைப்போல புகழுக்குரியவர் வேறு யாரும் இல்லைதான். தாங்கள் முற்காலத்தில் அறநெறியைப் பின்பற்றி தவம்மேற்கொண்டு வரம் பெற்றீர்கள். ஆனால் பின்னாளில் பல்வேறு கொடுமை களைச் செய்துவருகிறீர்கள். உம்மிடம் தோல்வியடைந்ததாக எம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. எனவே போருக்குத் தயாராக நில்லுங்கள். இங்கிருந்து நீர் உயிருடன் திரும்பிப்போகப் போவதில்லை. கூர்மையான அம்புகளால் எமன் வீட்டிற்கு உம்மை அனுப்பு கிறேன்'' என்று சொன்ன மருத்தன், கையில் வில்லும் அம்பும் தாங்கிப் போரிட ஆயத்த மானான். அப்போது முனிவர் சம்வர்த்தர் அவனைத் தடுத்தார்.

"இப்போது நான் சொல்வதைக் கேள். சிந்திக்கத்தக்கது என்று நீ கருதினால் அதன்படி நடந்துகொள். தற்போது இராவணனுடன் போரிடும் வாய்ப்பு உனக்கில்லை. நீ தொடங்கி யுள்ள மாகேஸ்வர பெரும்வேள்வி இன்னும் நிறைவடையவில்லை. அதை நிறைவு செய்யாவிட்டால் வேள்வியின் தலைவனான உனது பரம்பரையே அழிந்துவிடும். வேள்வி செய்யும் விரதத்தை மேற்கொண்டிருப்பவன் போர்புரிவது தகாத செயல். விரதமேற்றவனுக்கு கோபம் வரவேகூடாது. ஒரு போரில் யார் வெற்றிபெறுவார்- தோல்வியடைவார் என்பதுபற்றி உறுதியாகக் கூறமுடியாது. மேலும் அரக்கனான இராவணன் வெல்வதற்கு அரியவன்'' என்றார்.

அதைக்கேட்ட மருத்தன் போர்புரியும் எண்ணத்தைக் கைவிட்டான். வில்லையும் அம்பையும் போட்டுவிட்டு வேள்வி செய்வதில் மனதை ஈடுபடுத்தினான். அவன் போரிடாமல் திரும்பிவிட்டதால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதாக் கருதிய இராவணனின் அமைச்சனான சுகன் என்பவன், "இராவணன் வெற்றி பெற்றுவிட்டார்' என்று வெற்றிக்குரல் எழுப்பினான்; சிம்ம நாதம் செய்தான். அங்கு வந்திருந்த முனிவர்களையெல்லாம் கொன்று புசித்துவிட்டு, அப்போதும் அவர்களுடைய ரத்தத்தால் திருப்தியடையாத இராவணன் தொடர்ந்து பூமியில் அலைய ஆரம்பித்தான்.

இராவணன் அங்கிருந்து சென்றதும் இந்திரனும் மற்ற தேவர்களும் தங்கள் சுய வடிவை அடைந்தனர். பின்னர் தங்கள் உயிர்களை அதுவரை ஏற்றுக்கொண்டிருந்த பிராணிகளைப் பார்த்துப் பேசலானார்கள்.

நீலவண்ணப் பீலிகளையுடைய மயிலைப் பார்த்து இந்திரன், "அறம் தெரிந்தவனே, உன்மீது நான் மகிழ்ச்சிகொண்டிருக்கிறேன். இனிமேல் உனக்கு பாம்பிடம் பயம் தோன்றாது.

எனக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. இது போலவே உன் தோகைகளில் கண் போன்ற அடையாளங்கள் தோன்றும். மேகங்களைக்கொண்டு நான் மழையைப் பொழிவிக்கும்போது நீ மிகவும் மகிழ்ச்சி யடைந்து, அதை வெளிப்படுத்தும் வகையில் தோகைகளை விரித்து நடனமிடுவாய்'' என்று வரம் கொடுத்தான். அதற்குமுன்பு மயில்களின் தோகைகள் நீலவண்ணமாக மட்டுமே இருந்தன. இவ்வாறு வரம்பெற்ற மயில்கள் அங்கிருந்து அகன்றன.

வேள்விச் சாலையின் கிழக்குப் பக்கத்தில், வேள்வியை நடத்தும் தலைவனும் அவனது மனைவியும் தங்குவதற்காக அமைக்கப் பட்டிருந்த குடிலின்மேல் அமர்ந்திருந்த காகத்தைப் பார்த்து எமதர்மராஜன், "பறவையே, நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டேன். மன மகிழ்வுடன் கூறுகிறேன். மற்ற பிராணிகளை பலவகை நோய்களால் நான் துன்புறுத்துகிறேன். உன்னிடம் நான் மகிழ்வடைந்ததால் அத்தகைய நோய்கள் உன்னைத் தீண்டாது. என்னுடைய வரத்தின் பயனாக எமனிடம் உனக்கு பயம் தோன்றாது.

எமன் நாள் குறித்து உன்னைக் கவர்ந்துசெல்ல மாட்டான். மற்ற பிராணிகள் உன்னைக் கொல்லாதவரையில் நீ உயிருடன் இருப்பாய். என் உலகத்தில் பசியினால் வாடிக்கொண்டிருக்கும் மானிட உயிர்களின் சந்ததியர், உனக்கு உணவுகொடுத்து உன் பசியைப் போக்கினால், அவர்களும் சுற்றமும் உறவினரும் பசிதீர்ந்து திருப்தியடைவார்கள்'' என்றான்.

vv

கங்கையில் நீராடி மகிழ்ந்துகொண்டிருந்த அன்னப் பறவையைப் பார்த்து வருணன், "பறவைகளில் சிறந்தவனே! உன்னுடைய உடல் வண்ணம் நிலவைப் போன்றதாக- மாசற்றதாக- தூய வெண்ணிறமாக இனி ஒளிரும். நான் நீர் உடல் கொண்டவன் என்பதால், அளவற்ற என் மன மகிழ்ச்சியின் நிறைந்த நினைவுச்சின்னமாக நீ எப்போதும் பொலிவுடன் திகழ்வாய்'' என்றான். அதற்குமுன் அன்னப்பறவைகள் நீல நிறம் கலந்த வெண்ணிறம் உடையவையாக இருந்தன. சிறகுகளின் முன்பகுதி நீளமாக இருந்தது. சிறகுகள் உடலுடன் இணையும் பகுதி புதிதாக முளைத்த அறுகம்புல்லைப் போன்று பசுமையாக இருந்தது. அதன்பின்னரே முழுமையான வெண்ணிறம் பெற்றன அன்னப்பறவைகள்.

குபேரன் மலையிலிருந்த ஓணானைப் பார்த்து, "உன்னிடம் நான் அன்புடன் இருக்கிறேன். உன் உடல் வண்ணம் பொன்னிறமாகட்டும் உன் தலைப்பகுதி எப்போதும் குறைவற்ற பொன்போன்று பேரொளி வீசட்டும். இந்த வண்ணத்தை நான் உனக்கு மனமுவந்து அளிக்கிறேன்'' என்றான்.

அந்த வேள்விப் பெருவிழாவில் இவ்வாறு வரங்களை அந்த பிராணிகளுக்கு கொடுத்த தேவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினர். மன்னனும் திரும்பினான்.

பத்தொன்பதாவது சர்க்கம்

அனரண்யன் கொடுத்த சாபம்

மருத்தனை வென்ற பின்னர் இராவணன் மற்ற அரசர்களும் போர்புரிய விரும்பி அவர்களது நகரங்களுக்குச் சென்றான். இந்திரன், வருணன் போன்றவர்களுக்கு இணையான ஆற்றல் பெற்றிருந்த மன்னர்களிடம் சென்று, "என்னுடன் போர்செய்ய வாருங்கள்.

அல்லது "நாங்கள் வெல்லப்பட்டோம்' என்று ஒப்புக்கொள்ளுங்கள். இந்த இரண்டில் ஒன்றை ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் தப்பிக்க இயலாது'' என்றான்.

அச்சமற்றவர்களும், அறவழியில் நடப்பவர்களும், திறமைகொண்டவர்களும், அறிவாளிகளுமான அரசர்கள் தங்களுக்குள் ஆலோசித்து, எதிரி பெற்றுள்ள வரத்தின் சிறப்பை உணர்ந்து, அவனை வெல்லமுடியா தென்று உணர்ந்து, "நாங்கள் வெல்லப்பட் டோம்' என்று ஒப்புக்கொண்டனர். துஷ்யந்தன், காதி, கயன், புரூரவஸ் போன்ற மன்னர் கள் "நாங்கள் வெல்லப்பட்டோம்' என்று கூறினார்கள்.

பின்னர், அமராவதி நகரத்தை இந்திரன் பாதுகாத்து வருவதுபோல அனரண்யன் என்பவனால் பாதுகாக்கப்பட்ட அயோத்தி நகரை அடைந்தான். ஆண்பு- போன்ற அந்த அரசனைப் பார்த்து, "என்னுடன் போர்செய்ய வா. அல்லது என்னால் வெல்லப்பட்டாய் என்ற சொல். இதுவே என் கட்டளை'' என்றான்.

அயோத்தியின் அரசனாகிய அனரண்யன், இராவணனின் சொற்களைக் கேட்டு மிகுந்த கோபம்கொண்டு, "அரக்கர் தலைவனே, நான் உன்னுடன் துவந்த யுத்தம்புரிய வருகிறேன். உன்னை நீ ஆயத்தப்படுத்திக்கொள். நானும் ஆயத்தப்படுத்திக் கொள்கிறேன்'' என்றான்.

மிகப்பெரிய படைகள் இராவணனால் தோற்கடிக்கப்பட்டன என்பதை அனரண்யன் கேள்விப்பட்டிருந்தான். அவனது பெரும்படை இராவணன் படைகளை எதிர்கொள்ளும் பேரார்வத்துடன் புறப்பட்டன. பதினாயிரம் யானைகள், ஒரு லட்சம் குதிரைப்படை, பல்லாயிரம் தேர்தல் மற்றும் காலாட்படையி னர் பூமியை மறைத்த வண்ணம் புறப்பட்டார் கள். காலாட்படையினரும் தேர்ப்படையினரும் முன்னதாகச் சென்று போர்க்களத்தை அடைந்தனர். இரண்டு படையினருக்குமிடையே வியப்பூட்டும் வண்ணம் பெரும் போர் கடுமையாகத் தொடங்கியது.

அனரண்யனுடைய படை முழுவதும் இராவணனின் படையை எதிர்த்துப் போராடி, வேள்விக் குண்டத்தில் இடப் பட்ட ஆகுதிப் பொருட்கள்போல சாம்பலா கிப் போயின. அவனது பெரும்படை வெகுநேரம் போர்புரிந்து தங்கள் வீரத்தை வெளிப்படுத்தின. ஆனால் இராவணப் படையினரின் தாக்குதலைத் தாங்கவியலாமல் நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகளைப் போல பெரும் குழப்பத்தில் அகப்பட்டு அழிந்துபோயினர். மிகச்சிலரே எஞ்சினர்.

வெள்ளமாய்ப் பெருகிவரும் நூற்றுக் கணக்கான நதிகள் கடலை அடைந்ததும் அதில் கலந்து தங்களை இழந்துவிடுவதுபோல, தன்னுடைய மாபெரும் படையானது அழிந்துகொண்டிருப்பதைப் பார்த்தான் அனரண்ய மன்னன். கோபத்தால் மனம் துடித்த அவன் இந்திர வில்லுக்கு நிகரான தனது வில்லை வளைத்து இராவணனோடு போர்புரிய வந்தான். அவனைக்கண்டு இராவணனின் அமைச்சர்களான மாரீசன், சுகன், சாரணன், பிரகஸ்தன் ஆகியோர் தலைதெறிக்க ஓடினார்கள். இக்ஷவாகு பரம்பரையின் பெருமையைக் காத்து வருபவனாக அனரண்யன் இராவணனின் நெற்றியில் எண்ணூறு அம்புகளைச் செலுத்தினான். ஆனால் அவ்வளவு அம்பு களும், பெருமழைப் பொழிந்தாலும் சற்றும் கலங்காத மலைச்சிகரம்போல, இராவணனிடம் எவ்வித தளர்ச்சியையும் உண்டாக்கவில்லை. அப்போது கோபம் கொண்ட அரக்கர் தலைவன் தன் உள்ளங்கை யால் அயோத்தி மன்னனின் தலையில் அடித்தான். அதனால் அவன் தேரிலிருந்து கீழே விழுந்தான். உடல் நடுங்க, அங்கங்கள் பழுதுபட, காட்டில் ஒரு மரம் இடியினால் தாக்கி எரிக்கப்பட்டதுபோல கிடந்தான்.

அப்போது அவனைப் பார்த்து ஏளனமாய் சிரித்த இராவணன், "என்னை எதிர்த்துப் போரிட்டதால் என்ன பயனை அடைந்தாய்? மூன்று உலகங்களிலும் என்னுடன் யுத்தம் செய்யக்கூடியவர் எவருமில்லை. ஒருவேளை எப்போதும் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டிருந்ததால் நீ என் பலத்தைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை போலிருக்கிறது'' என்றான்.

அனரண்யனின் உயிர்மூச்சு மெதுவாக அடங்கிக்கொண்டிருந்தது. அப்போது அவன், "காலத்தை மீறி எதுவும் செய்ய இயலாது. அரக்கனே, தற்புகழ்ச்சி பேசும் உன்னால் நான் வெல்லப்படவில்லை. உண்மையில் என்னை வென்றது விதிதான். இதற்கு நீ ஒரு காரணமாக மட்டுமே இருக்கிறாய். உயிர் அடங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் என்னால் என்னசெய்ய இயலும்? நான் புறமுதுகிட்டு ஓடிப்போகவில்லை. போர் செய்துகொண்டிருக்கும்போது உன்னால் தாக்கப்பட்டேன்.

நீ இக்ஷவாகு குலத்தைப் பற்றி இழிவாகப் பேசினாய். அதனால் உனக்கு நான் சாபமிடுகிறேன். தானங்கள், நித்யாக்னி ஹோமங்கள், நல்ல காரியங்கள் போன்றவற்றை நான் செய்திருந்தால், குடிமக்களை பொறுப்புடன் காப்பாற்றியிருந்தால் நான் கூறப்போகும் சொற்கள் நிச்சயமாக நிறைவேறும். மகாத்மாக்களான இக்ஷவாகு மன்னர் களின் பரம்பரையில், தசரதனின் மகனாக இராமன் தோன்றுவான். அவன் உன் உயிரைப் பறிப்பான்'' என்று சொல்லி முடித்தவுடன் வானவர்கள் துந்துபி முழக்கினார்கள். வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. அரசனின் உயிர் பிரிந்து மேலுலகம் சென்றது.

அதன்பின் இராவணன் அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

(தொடரும்)