ஒன்பதாவது சர்க்கம்

இராவணன் முதலானோர் தோற்றம் திருமாலிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, அரக்கர் தலைவனான சுமா- தன் இனத்தவருடன் ரசாதலத் தில் சென்று வசித்துவந்தான். அந்நிலை யில் குபேரன் இலங்கையைத் தன்வயப் படுத்திக் கொண்டான். இந்நிலையில் சிலகாலம் கழித்து, கார்மேக நிறத் தினனும் ஒளிவீசும் தங்கக் குண்டலங் கள் அணிந்தவனுமான சுமாலி, திருமகளைப் போன்ற அழகுகொண்ட தன் மகள் கைகஸியை அழைத்துக் கொண்டு, ராசாதலத்திலிருந்து வெளிப் பட்டு பூமியெங்கும் சுற்றிவந்தான்.

இவ்வாறு அவன் வந்துகொண்டிருந்த போது, நவநிதிகளுக்கும் தலைவனான குபேரன், புலத்தியரின் புதல்வரும் தனது தந்தையுமான விச்ரவஸைக் காண புஷ்பக விமானத்தில் சென்றுகொண்டி ருந்தான்.

தேவர்களைப்போல ஒளிபொருந்திய வனும், எண்ணம்போல் பயணிப்பவனு மான குபேரனைக்கண்டு வியந்த சுமா-லி, மீண்டும் பூவுலகிலிருந்து ராசாதலத்திற்குச் சென்றான். பேரறிவு கொண்ட அவன் 'அரக்கர்களாகிய நாம் என்ன செய்தால் இத்தகைய உன்னத நிலையை அடையலாம்? எதைச் செய்தால் நமக்கு நன்மை உண்டாகும்' என்று யோசிக்கத் தொடங்கினான்.

Advertisment

அந்த நிலையில் அவன் தன் மகளிடம், "மகளே, உன்னை கன்னிகாதானம் செய்துகொடுக்க வேண்டிய நேரமிது. உன் இளமை கழிந்துகொண்டிருக்கிறது. நாங்கள் மறுத்துவிடுவோம் என்ற அச்சத்தால் உன்னைப் பெண் கேட்டு யாரும் வரவில்லை. அறவழியில் செல்லும் நாங்கள் உன் திருமணம் குறித்து மிகவும் முயன்று கொண்டிருக்கிறோம். ஏனென் றால் அனைத்து நற்குணங்களும் நிரம்பிய திருமகளைப்போல நீ இருக்கிறாய்.

கௌரவத்தை விரும்புகிறவர்களுக்கு ஒரு பெண்ணின் தகப்பனாக இருக்கும் நிலையென்பது மிகவும் பரிதாபமானது. ஏனெனில் எத்தகையவன் பெண்கேட்டு வருவான் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதல்லவா? ஒரு பெண் தன் அன்னையின் பரம்பரை, தந்தையின் பரம்பரை, புகுந்த வீட்டின் பெருமை ஆகிய மூன்றையும் எப்போதும் கவலையில் மூழ்கச் செய்கிறாள். எனவே மகளே, பிரஜாபதி வம்சத்தில் தோன்றிய வரும், நல்ல பண்புகள் நிரம்பியவரும், புலஸ்தியருடைய மகனுமான விச்ரவஸிடம் நீயே நேரில்சென்று, உன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளு மாறு வேண்டிக்கேட்டுக்கொள். சூரியனுக்கு நிகரான ஒளிபொருந்திய குபேரனைப்போன்ற பிள்ளைகள் உனக்குப் பிறப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை'' என்று சொன்னான்.

தந்தை கூறியதைக் கேட்ட கைகஸி, சுமாலி-யின் சொற்களுக்கு மதிப்பு கொடுத்து விச்ரவஸ் தவம் மேற் கொண்டிருந்த இடத்திற்கு வந்தாள்.

Advertisment

அந்த சமயத்தில் விச்ரவஸ் பிரதோஷ கால அக்னி சடங்குகளை மூன்று குண்டங்களில் நிறைவேற்றிவிட்டு, நான்காவது தீப்பிழம்பாக பிரகாசித்துக் கொண்டிருந்தார்.

அந்திசாயும் பிரதோஷ வேளையானது ஆண்- பெண் இணைவுக்கு ஏற்புடைய தல்லாத தீமையான வேளை என்பதை மறந்த கைகஸி, தந்தையின் வாக்கை மட்டுமே மனதில்கொண்டு விச்ரவஸை நெருங்கி அவரது பாதங்களைப் பார்த்தவாறு தலைகுனிந்து நின்றாள்.

மிகச்சிறந்த உடற்கட்டும், உள்ளொளிப் பிரகாசமும், முழுநிலவு போன்ற முகமும் கொண்ட அவள் தன் கால் பெருவிரலால் தரையில் கோடுபோட்ட வண்ணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த விச்ரவஸ், "பெண்ணே, நீ யாருடைய மகள்? எங்கிருந்து வந்தாய்? அழகுடையவளே, இங்கு உனக்கென்ன வேலை? எதன் காரணமாக வந்திருக்கிறாய்?'' என்று கேட்டார்.

அப்போது அவள் தன் இரு கரங்களையும் கூப்பிக்கொண்டு, "முனிவரே, தங்கள் ஆத்மசக்தியால் என் மனதி-லிருப்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். இருந்தாலும் சொல்கிறேன். என் தந்தையின் கட்டளைப்படி நான் இங்கு வந்தேன். என் பெயர் கைகஸி. மற்ற அனைத் தையும் தாங்களே அறிவீர்கள்'' என்றாள்.

அப்போது அவர் மனதுக்குள் தியானித்து, அவள் வந்திருப்பதற்கான காரணத்தை அறிந்துகொண்டார்.

"நற்குணம் நிரம்பியவளே, உன் மனதிலுள் ளதை நான் உணர்ந்துகொண்டேன். பெண்யானை போன்ற மென்மையான நடை உடையவளே, என்மூலம் பிள்ளைகளைப் பெற நீ விரும்புகிறாய். ஆனால் நீ வந்திருக்கும் வேளை பயங்கரமானது. இந்த சமயத்தில் என்னுடன் கூடினால் எத்தகைய பிள்ளைகள் பிறப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள். கொடூரமானவர்கள், பயங்கர தோற்றம் கொண்டவர்கள், அக்கிரமங்கள் செய்பவர் களை உறவாகக் கொண்டவர் கள், மிக தீய செயல்களைச் செய்யும் அரக்கர்களே பிள்ளைகளாகப் பிறப் பார்கள்'' என்றார்.

அதைக்கேட்ட அவள் அவரது பாதங் களில் விழுந்து, "இறைவனே, ஆத்மஞானம் பொருந்திய உங்கள்மூலமாக இத்தகைய கொடூரமான பிள்ளைகளைப் பெற நான் விரும்பவில்லை. என்மீது நீங்கள் கருணை செய்ய வேண்டும்'' என்றாள். அதற்கு விச்ரவஸ்,

"அழகு பொருந்தியவளே, உன் கடைசி மகன் என் வம்சத்திற்கு ஏற்றபடி அறநெறி

பிறழாதவனாக நிச்சயமாக இருப்பான்''

என்றார். (பின்னர் இருவரும் கூடினர்.)

அதற்குப்பின் சிலகாலம் கழித்து கொடூர மனமும் தீய எண்ணமும் கொண்ட ஓர் அரக்கனை மகனாகப் பெற்றெடுத்தாள் கைகஸி. அவனுக்கு பத்து தலைகள், பெரிய பற்கள், மைபோன்ற கரிய உடல் வண்ணம், சிவந்த உதடுகள், இருபது கைகள், மிகப்பெரிய வாய், தீக்கொழுந்து போன்ற தலைமுடி ஆகியவை இருந்தன.

அவன் பிறந்த நேரத்தில் நரிகள் நெருப்பைக் கக்கின. கழுகுபோன்ற மாமிசம் உண்ணும் பறவைகள் இடப்புறமாக வட்டமிட்டன. ஆகாயத்திலி-ருந்து சிவந்தநீரைப் பொழிந்தான் இந்திரன். மேகங்கள் பயங்கர முழக்கமிட்டன. சூரியன் ஒளி குன்றினான். எரிகோள்கள் பூமியின்மீது விழுந்தன. உலகமே நடுங்கியது. கடும் சூறைக் காற்று வீசியது. எவராலும் வெல்லமுடியாததும், நதிகளின் தலைவனாக விளங்குவதுமான கடல் அடங்கி நின்றது.

அதன்பின்னர் பிரம்ம தேவனுக்கு நிகரான தவ ஆற்றல்கொண்ட அவனது தந்தையான விச்ரவஸ், "இவன் பத்து தலைகளுடன் பிறந்திருப்பதால் தசக்ரீவன் என்று அழைக்கப்படுவான்'' என கூறினார். தசக்ரீவனுக் குப் பிறகு பெரும் வலி-மைவாய்ந்த கும்பகர்ணன் பிறந்தான். அவனது மிகப் பெரிய உடலுக்கு நிகரான உடல் கொண்டவர்கள் பூமியில் யாருமே இல்லை. அதன்பின்னர் அவலட்சணமான முகமுடைய சூர்ப்பனகை பிறந்தாள். கடைசி மகனாக அறநெறி அறிந்த விபீஷணன் பிறந்தான்.

v

விபீஷணன் பிறந்தபோது வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. வானில் துந்துபிகள் முழங்கின. நிம்மதியான குரல் வெளிப்பட்டது.

தசக்ரீவனும் (இராவணன்) கும்பகர்ண னும் அந்த அடர்ந்த காட்டில் மிகவும் ஆற்றல்கொண்டு வளர்ந்தார்கள். அந்த இருவரில் தசக்ரீவன் உலகிற்கு பெரும் அச்சத்தைத் தோற்றுவிப்பவனாக இருந்தான். கும்பகர்ணன் மதம் பிடித்த யானைபோல இருந்தான். மூன்று உலகங்களுக்கும் சென்று, அறம்தவறாத தவசிகளைக் கூட தின்று பசியடங்காமல் சுற்றித் திரிந் தான். நன்னெறியை உயிர்மூச்சாகக் கொண்ட விபீஷணன் அறத்தைப் பின்பற்றி வந்தான். அறநூல்களைக் கற்று, அளவாக உணவுண்டு, புலன்களை வென்று வளர்ந்து வந்தான்.

சிறிது காலம் சென்றது. நிதிகளுக்குத் தலைவனான வைச்ரவன் எனப்படும் குபேரன் தன் தந்தையைக் காண புஷ்பக விமானத்தில் வந்தான். அவனைக் கண்டதும் அரக்கியான கைகஸி தசக்ரீவனிடம், "மகனே, வைச்ரவன் பெருமையுடன் விளங்குவதைப் பார். நீயும் அவனும் சகோதரர்கள். அவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறான்? நீயோ சாதாரணமாக இருக்கிறாய். தசக்ரீவனே, அளவற்ற வலிமைகொண்டவனே, என் செல்ல மகனே! வைச்ரவனுக்கு நிகரான உயர்ந்த பெருமைகளை அடைய நீ முயற்சி செய்'' என்றாள்.

பெரும் வலிமைகொண்ட தசக்ரீவன் அன்னையின் சொற்களைக்கேட்டு உடனே ஒரு சபதம் செய்தான். "அம்மா, தாங்கள் மனக்கவலையை விடுங்கள். என்னுடைய ஆற்றலி-னால் அவனுக்கு நிகராக அல்ல;

அவனைவிடவும் மேலானவனாவேன் என்று உங்களுக்கு உறுதிசொல்கிறேன்'' என்றான். அதே வேகத்துடன் செயற்கரிய செயலைச் செய்யும் ஆர்வத்துடன் தவமிற்றுவதில் மனதை நிலைநாட்டினான். "தவத்தின் வலி-மையால் என் ஆசைகள் அனைத்தையும் அடைவேன்' என்று தீர்மானித்து, தன் எண்ணம் கைகூட கோகர்ணம் என்னும் மங்களகரமான தவச்சாலைக்கு தம்பிகளுடன் சென்றடைந்தான். அங்கு தளராத மனவுறுதியுடன் நிகரற்ற தவம் மேற்கொண்டு பிரம்மதேவனை மகிழ்வித்தான். அவர் அவனுக்கு "எப்போதும் வெற்றி கிட்டும்' என்னும் வரத்தை அருளினார்.

பத்தாவது சர்க்கம்

இராவணன் முதலானோர் வரம் பெறுதல் மேற்கண்ட வரலாற்றை அகத்திய முனிவர் கூறியதைக் கேட்ட இராமபிரான், "அந்த சகோதரர்கள் எத்தகைய தவத்தைக் காட்டில் செய்தனர்?'' என்று கேட்டார். நிறைந்த மனதுடன் விளங்கிய இராமபிரானைப் பார்த்து அகத்தியர் கூறத் தொடங்கினார்.

இராமா, அந்த மூன்று சகோதரர் களும் தனக்கென ஒரு முறையை ஏற்படுத்திக் கொண்டு தனித்தனியே தவம் மேற்கொண்ட னர். கும்பகர்ணன் அறவிதிகளின்படி தவம் செய்தான். கடும் கோடைகாலத்தில் அவனைச் சுற்றி நான்குபுறமும் தீப்பிழம்புகள் எரிய, தலைக்கு மேலே சூரியன் சுட்டெரிக்க, இந்த ஐந்து அக்னிகளுக்கு நடுவில் நின்று தவம் புரிந்தான். மழைக்காலத்தில் வெட்டவெளியில் வீராசனத்தில் அமர்ந்தபடி கொட்டும் மழையில் நனைந்தவாறு தவம் மேற்கொண்டான். குளிர்காலத்தில் தண்ணீரில் நின்றபடி தவம்செய்தான். நல்வழியில் உறுதியுடன் நின்று, அறத் தில் முழு மனதைச் செலுத்தி பத்தாயிரம் ஆண்டுகள் தவம்புரிந்தான் கும்பகர்ணன்.

விபீஷணன் நேர்வழியில் மனதைச் செலுத்தி, தூய எண்ணம் கொண்டவனாய் ஒற்றைக்காலில் நின்றபடி ஐயாயிரம் ஆண்டுகள் தவம் மேற்கொண்டான்.

அவன் சங்கல்பம் செய்துகொண்டபடி தவம்செய்து முடித்ததும் அப்சரப் பெண்கள் மகிழ்வுடன் நடனமாடினர். வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. தேவர்கள் போற்றினர்.

அதன்பின்னர் விபீஷணன் தன் இரு கைகளையும் முகத்தையும் மேலே உயர்த்தி, உள்முகமாய் மனதை செலுத்தி, நின்றபடியே சூரியனைக் குறித்து ஐயாயிரம் ஆண்டுகள் தவம்புரிந்தான். இவ்வாறாக மனதை ஒரு நிலையில் நிறுத்தி தேவலோக நந்தவனத்தில் வசிப்பதுபோல பத்தாயிரம் ஆண்டுகளை மகிழ்வுடன் கழித்தான் விபீஷணன்.

தசக்ரீவனோ உணவுகூட உண்ணாமல் பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். ஓராயிரம் ஆண்டுகள் முடிந்ததும் தனது ஒரு தலையை அறுத்து அக்னி குண்டத்தில் ஆகுதியாக இட்டான். இவ்வாறு ஒன்பதாயிரம் ஆண்டுகள் கழிந்தபோது அவனது ஒன்பது தலைகள் அக்னியைச் சேர்ந்தன. பத்தாவது ஆயிரம் ஆண்டுகள் முடிந்தபோது அவன் தனது எஞ்சியிருந்த பத்தாவது தலையை வெட்ட ஆயத்தமானான்.

அப்போது அங்கு பிரம்மதேவர் தேவர்கள் புடைசூழத் தோன்றினார். பிரம்மா மகிழ்வு டன், "தசக்ரீவனே, நான் திருப்தியடைந்தேன். நீ விரும்பும் வரத்தைக் கேள். உன் எண்ணத்தை நான் உடனடியாக நிறைவேற்றுகிறேன். உனது கடும்தவம் வீண்போகாது'' என்றார்.

பெரும் மகிழ்ச்சியடைந்த தசக்ரீவன் பிரம்மதேவருக்குத் தலைவணங்கி, "பெருமை வாய்ந்தவரே, உயிர்களுக்கு மரணத்தைத் தவிர வேறு எந்தவிதமான பயமுமில்லை. எமன் என்பவனைத் தவிர வேறு எதிரி இல்லை. எனவே இறவாமை என்னும் வரத்தைத் தங்களிடம் கேட்கிறேன்'' என்றான்.

அதற்கு பிரம்மதேவர், "மரணம் என்பது எப்போதும் ஏற்படாது என்னும் வரத்தைக் கொடுக்க இயலாது. வேறு வரம் கேள்'' என்றார். உலகைப் படைப்பவரான பிரம்மா இவ்வாறு கூறியதைக்கேட்ட தசக்ரீவன் தன் கரங்களைக் கூப்பிக்கொண்டு, "முடிவற்றவரே... கருடன், நாகர், யக்ஷர், அசுரர், அரக்கர், தேவர் முதலியோரால் கொல்லப் பட முடியாதவனாக நான் இருக்கவேண்டும். மற்ற உயிர்களைப் பற்றி நான் கவலைப் படவில்லை. மனிதர் முதலான உயிர்களை வெறும் புல்லாகவே மதிக்கிறேன்'' என்றான்.

அவன் கூறியதைக் கேட்ட பிரம்மா, "அரக்கர்களின் சிறந்தவனே, நீ என்ன கேட்டாயோ அவ்வாறே தந்தேன். மகிழ்வுடன் இருக்கும் நான் மேலும் ஒரு வரத்தையும் தருகிறேன். நீ நெருப்பில் ஆகுதி செய்த உன் தலைகள் மீண்டும் முன்புபோல தோன்றும். எவராலும் அடையமுடியாத இன்னொரு வரத்தையும் தருகிறேன். விரும்பிய வடிவத்தை எடுக்கும் ஆற்றலை நீ பெறுவாய்'' என்றார்.

பிரம்மதேவர் இவ்வாறு கூறியதும் தசக்ரீவன் முன்பு அக்னியில் இட்ட அவனது தலைகள் மீண்டும் தோன்றின.

அடுத்து பிரம்மா விபீஷணனை நோக்கி, "அறநெறியை மதிப்பவனே, விரதங்களைக் கடைப்பிடிப்பவனே, நீ செய்த அறம்சார்ந்த தவத்தால் மகிழ்ந்தேன். பிள்ளையே, நீ விரும்பும் வரத்தைக் கேள்'' என்றார்.

அப்போது விபீஷணன், "எல்லா உலகங்களுக்கும் தலைவராக விளங்கும் தாங்கள் என்மீது பரிவுடன் இருக்கிறீர்கள் என்றால் அது நான்பெற்ற பெரும்பேறா கும். தங்கள் சொற்களிலேயே எல்லாவற்றையும் அடைந்தவனாகிவிட்டேன். தாங்கள் உள்ளம் குளிர்ந்து எனக்கு வரமளிக்க விரும்பினால் சொல்கிறேன். மிகப்பெரிய துன்பம் நேர்ந்த காலத்திலும் என் மனம் அறத் திலிருந்து வழுவக்கூடாது. இதுவரை எனக்கு கற்பிக்கப்படாத பிரம்மாஸ்திர மந்திரம் தானாகவே எனக்குப் புரியவேண்டும். பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நான்கு வகை வாழ்க்கை முறைகளில் எவ்வகை ஆசிரமத்தை நான் ஏற்க எண்ணினாலும், அது அறம் சார்ந்ததாகவே இருக்கவேண்டும். அவற்றுக்

கான நெறிகளைக் கடைப்பிடிப்பவனாக இருக்க அருளவேண்டும். இவையே நான் விரும்பும் உயரிய வரம். அறவழியில் பிறழாது நடப்பவர்களுக்கு உலகில் அடைய முடியாதது எதுவுமில்லை'' என்றான்.

மகிழ்ச்சியடைந்த பிரம்மா, "நீ கேட்டபடியே அனைத்தும் நடக்கும்.

அரக்கர் குலத்தில் தோன்றிய வனாக இருந்தபோதிலும், உன் மனம் அநீதிக்குத் துணை போகாது. மேலும் உனக்கு இறவாமை என்னும் வரத்தையும் தருகிறேன்'' என்றார்.

அடுத்து கும்பகர்ணனுக்கு வரமளிக்கச் சென்றார் பிரம்மா. அப்போது தேவர்கள் அனைவரும் பிரம்மாவை நோக்கி கைகளைக் கூப்பிக்கொண்டு, "கும்பகர்ணனுக்குத் தாங்கள் வரம் தரக்கூடாது. இவன் அனைவரையும் எவ்வளவு துன்பப்படுத்துகிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நந்தவனத்திலிருந்த ஏழு அப்சரப் பெண்களையும், இந்திரனது பணியாளர்கள் பத்து பேரையும், முனிவர்கள் பலரையும், மனிதர்களையும் இவன் தின்றிருக்கிறான். வரம் பெறுவதற்கு முன்னதாகவே இத்தகைய கொடூரம் புரிந்திருக்கிறான் என்றால், வரம் பெற்றால் மூவுலகையும் அழித்துவிடுவான். எல்லையற்ற ஒளி படைத்தவரே, வரம் கொடுக்கும் நேரத்தில் இவனுக்கு மன மயக்கத்தைத் தந்து விடுங்கள். அதனால் எல்லா உலகங்களுக்கும் மங்களம் உண்டாவதுடன், இவனுக்கும் பாடம் கற்பிக்கப்பட்டதுபோலாகிவிடும்'' என்று வேண்டிக் கொண்டனர்.

அதைக்கேட்ட பிரம்மதேவர் சரஸ்வதி தேவியை மனதில் நினைத்தார். அடுத்த நொடியே அவர் அருகே வந்து நின்றாள் கலைமகள். அவள் கைகளைக் கூப்பிக் கொண்டு, "ஐயனே, நான் என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள்'' என்றாள். அதற்கு பிரம்மா, "தேவர்கள் விருப்பப்படி அரக்கர் தலைவனான கும்பகர்ணன் முகத்தில் இருப்பாய்'' என்றார். அவ்வாறே அவள் கும்பகர்ணன் முகத்தில் (நாக்கில்) புகுந்துகொண்டாள்.

அதன்பின்னர் பிரம்மா கும்பகர்ணனிடம், "நீ விரும்பும் வரத்தைக் கேள்'' என்று கூறினார். அதற்கு கும்பகர்ணன், "தேவாதிதேவா, நான் எண்ணிலடங்கா ஆண்டுகள் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் நான் விரும்பும் வரம்'' என்றான்.

"அப்படியே ஆகட்டும்'' என்று சொல்லி தேவர்களோடு பிரம்மா சென்றுவிட்டார். சரஸ்வதியும் கும்பகர்ணனை விட்டு அகன்றாள்.

சரஸ்வதியின் பிடியி-லிருந்து விடுபட்ட பின்னரே சுய நினைவை அடைந்த கும்பகர்ணன், "என்ன இது! இத்தகைய சொற்கள் என் வாயி-லிருந்து எப்படி வெளிப்பட்டன?' என்று மிகவும் வருந்தி யோசித்தான். "இங்கே வந்திருந்த தேவர்களால் நான் மனமயக்கம் அடைந்தேன்போலும்' என்று எண்ணிக்கொண்டான்.

இவ்வாறு பிரம்மாவிடம் வரம் பெற்ற மூன்று சகோதரர்களும், தந்தையின் தவச்சாலையி-லிருந்த ஸ்லேஷ்மாதக வனம் சென்று மகிழ்வுடன் வாழத் தொடங்கினார்கள்.

(தொடரும்)