26-ஆவது சர்க்கம் நளகூபரன் சாபம் சூரியன் மேற்கு திசையில் மறைந்ததும், கயிலாய மலையிலேயே படைகளைத் தங்கச்செய்து அன்றிரவைக் கழிப்பதென்று இராவணன் தீர்மானித்தான். அப்போது கயிலை மலைபோலவே வெண்ணிறத்தில் விளங்கிய சந்திரன் உதயமானான். பலவகை யான அஸ்திரங்களையும் சஸ்திரங்களையும் வைத்திருந்த இராவணனின் மாபெரும் படை ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியது. ஆனால் இராவணன் மலைச் சிகரத்தின் மேல் அமைதியாக இருந்த வண்ணம், சந்திர ஒளியில் பேரழகுடன் விளங்கும் அந்த மலைப் பகுதிகளைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தான்.
ஒருபுறம் சரக்கொன்றைகள் மண்டிக் கிடந்தன. வேறொரு புறம் கதம்ப மலர்கள் அடர்த்தியாகக் காணப்பட்டன. மந்தாகினி நதியின் நீர் நிரம்பிய குளங்களில் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின. செண்பகம், அசோகம், புன்னாகம், மந்தாரம் முதலான மரங்களும்; மா, பாதிரி, லோத்ரம், ப்ரியங்கு, மருதம், தாழை, தகரம், தென்னை, பிரியாலம், பலா, ஆரக்வதம், தமாலம், மகிழம் போன்ற மரங்களும், மேலும் இன்னும் பலவகையான மரங்களும் அவற்றின் மலர்களால் அவ்விடத்தை மிகவும் அழகாக்கிக் கொண்டிருந்தன.
இனிய குரல்கொண்ட கின்னரர்கள் மன்மதனால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக காம வேட்கையை வெளிப்படுத்தும் பாடல்களைத் தங்களது துணைகளுடன் சேர்ந்து இசைத்தனர். அது கேட்போரின் மனதை மகிழ்விப்பதாக இருந்தது. வித்யாதரர்கள் காமத்தில் மூழ்கிவிட்டிருந்ததால், அவர்களது இமைகளில் செந்நிறம் படர்ந்திருந்தது. இளம்பெண்களோடு விளையாடியபடி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர்.
குபேரனின் மாளிகையில் பாடிக் கொண்டிருந்த அப்சரஸ் பெண்களின் இனிமையான குரல் மணியோசைபோல் செவியில் கேட்டது. எல்லா காலமும் வசந்தகாலம்போல் விளங்கியதால், அங்கிருந்த மரங்களெல்லாம் பூத்துக் குலுங்கின. காற்று வீசும்போது மலர்கள் உதிர்ந்து அந்த மலையையே மணம் மிக்கதாகச் செய்துகொண்டிருந்தன. பலவகையான மலர்களின் மகரந்த ரசமும் துகளும் கலந்த மிகுந்த மணத்தைச் சுமந்து, மெல்ல உடலை வருடிச் செல்லும் நறுமணம் மிக்க காற்றானது இராவணனுடைய காம இச்சையை அதிகரிக்கச் செய்தது. இசையின் இனிமை, பலவிதமான மலர்களின் குவியல், தென்றலின் தழுவல், மலைச் சிகரங்களின் அழகு, இரவுப் பொழுது, சந்திர உதயம் போன்றவற்றால் காமவசப்பட்ட இராவணன், பெருமூச்சு விட்டபடி சந்திரனைப் பார்த்து உருகினான்.
இவ்வாறிருக்கும் வேளையில், அப்சரஸ் பெண்களில் மிகவும் அழகானவளும், முழுநிலவு போன்ற முகமுடையவளுமான ரம்பை, தெய்வீகமான ஆடை, அணிகலன்கள் அணிந்து அங்கு தென்பட்டாள்.
அவள் தன் உடலில் தேவலோக சந்தனத்தைப் பூசியிருந்தாள். தேவலோக மலர்களைக் கூந்தலில் சூடியிருந்தாள். தான் விரும்பும் ஆணுடன் சேர்ந்து மகிழும் இனிய நிகழ்வுக்காக சென்றுகொண்டிருந்தாள். மேகலையும் மலர் மாலைகளும் அணிந்து இன்பக் கேளிக்கைக்குத் தன்னை அர்ப் பணிப்பதற்காக நடந்துகொண்டிருந்தாள்.
கன்னம் முதலான பகுதிகளில் ஹரிச் சந்தனக் குழம்பால் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஆறு பருவ காலங் களிலும் பூக்கும் புத்தம்புதிய மலர்மாலையை அணிந்திருந்தாள். தன் உடல் ஒளி, செழிப்பு, உடல் வண்ணம், பெரும்புகழ் போன்றவற்றால் இன்னொரு திருமகள்போல விளங்கினாள். வில் போன்ற புருவங்கள். கார்முகில் போன்ற நீலவண்ண ஆடையால் தன் உடலை மூடியிருந்தாள். அவளது தொடைகள் யானையின் துதிக்கை போன்றிருந்தன. இளந்தளிர்போல கைகள் மிருதுவாக இருந்தன.
உறக்கத்தில் ஆழ்ந்திருந்த படைவீரர்களைக் கடந்து அவள் நடந்துகொண்டிருந்தபோது, அவளை இராவணன் பார்த்துவிட்டான். அவளைப் பார்த்த வுடனேயே காமனின் கணைக்கு இரையாகிப்போனவன் அவளைத் தடுத்து, அவள் கையைப் பிடித்து நிறுத்தி இளநகையுடன் பேசலானான்.
"பெண்கள்குலத் திலகமே! நீ எங்கு சென்று கொண்டிருக்கிறாய்? யாருடைய வேட்கையைத் தணிப்பதற்காக நீ சென்றுகொண்டிருக்கிறாய்? உன்னுடன் சேர்ந்து களிக்கும் மிகப்பெரிய பாக்கிய நேரம் யாருக்கு அமைந்திருக்கிறது? உன் முகத்தில் மலர்களின் நறுமணம் வீசுகிறது. உதடுகளில் அமுத மழை பொழிகிறது. இந்த அமுதத் துளிகளை இன்று சுவைத்து மனநிறைவு அடையப்போகிறவன் யார்?
அச்சத்தில் இருப்பவளே! தங்கக்குடம் போன்று ஒன்றோடு ஒன்று உரசியபடி, இடைவெளியின்றி புடைத்து விளங்கும் உன் மார்பகங்கள் யாருடைய மார்புடன் இணையப் போகின்றன? பொன்னா பரணங்கள் இழைக்கப்பட்டதும், சக்கரம்போல் விசாலமாக நிமிர்ந்து விளங்குவதுமான உன் இடையின் பிற்பகுதி என்னும் சொர்க்கலோகத்தை அடைந்து குறைவற்ற இன்பத்தை அனுபவிக்கப்போகிறவன் யார்? இப்போது என்னைவிட மேலானவன்- இந்திரன், உபேந்திரன், அஸ்வினி தேவர்கள் உட்பட வேறு யார் இருக்கிறார்கள்? என்னைக் கண்டுகொள்ளாமல் நீ வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறாய். இது உனக் குத் தகுந்ததல்ல. சுகமான இந்தப் பாறையின்மீது அமர்ந்து சற்று இளைப்பாறு. மூவுலகங்களுக்கும் தலைவனான என்னைக்காட்டிலும் உயர்ந்தவன் வேறொருவன் இல்லை. பத்து தலைகளைக் கொண்ட இராவணனாகிய நான் மூன்று உலக உயிரினங்களின் விதியை நிர்ணயிப்பவன். ஆனால் இந்நேரத்தில் கைகூப்பி உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். என்னை ஏற்றுக்கொள்.''
இதைக்கேட்டு ரம்பை உடல் நடுங்க கைகளைக் கூப்பிக்கொண்டு, "நீங்கள் என் மாமனாரைப்போல வணங்கத் தக்கவர். உங்கள் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் வரலாகாது. தயவுசெய்து கருணை காட்டுங்கள். வேறு ஆண்கள் உங்களைப்போல இப்படி என்னை அச்சமூட்டினால் அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டியவர் நீங்கள். தர்ம நியதிகளின்படி பார்த்தால் நான் உங்களுக்கு மருமகள் உறவு வேண்டும். இது உண்மை.''
தலையைத் தாழ்த்தி தன் பாதங்களைப் பார்த்த வண்ணம் அச்சத்திலிருந்த ரம்பை யைப் பார்த்து இராவணன், "என் மகனுக்கு நீ மனைவியானால் எனக்கு மருமகள்தான்'' என்றான்.
அதற்கு ரம்பை, "அரக்கர்களின் மாணிக்க மானவரே, நீதி நூல்களில் சொல்லப் பட்டுள்ளபடி நான் உங்கள் மகனின் மனைவி தான். உங்கள் சகோதரர் குபேரனுடைய மகன் என் உயிரைக் காட்டிலும் மேலான வர்; அன்பானவர். நளகூபரன் என்னும் பெயர் கொண்ட அவர் மூன்று உலகங்களி லும் புகழ்பெற்றவர். அறநெறிகளைக் கடைப் பிடிப்பதில் அந்தனர் போன்றவர். வீரத்தில் சத்திரியர். கோபம்கொண்டால் நெருப்பைப் போல பொசுக்குபவர். பொறுமையில் பூமா தேவிக்கு இணையானவர். திசைக் காவலரின் மகனான அவரை இன்றிரவு சந்திப்பதாக நான் தகவல் தந்திருக்கிறேன். அவருக்காகவே இவ்வளவு அலங்காரங்கள் செய்துகொண்டு செல்கிறேன். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர் அவர். அதுபோல எனக்கும் அவரிடம் அன்புண்டு. அவரிடம் மட்டுமே அன்புண்டு; வேறெவரிடமும் இல்லை.
எதிரிகளை அடக்கும் மன்னரே! இப்போது நான் சொன்ன காரணங்களால் நீங்கள் தயவுசெய்து என்னை என் வழியில் செல்ல அனுமதிக்கவேண்டும். அவர் என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். அவர் விருப்பத்திற்கு இடையூறான செயலை நீங்கள் செய்யவேண்டாம். அரக்கர்களின் தலைவரே, என்னை விட்டுவிடுங்கள். பெரியோர் வழியைப் பின்பற்றுங்கள்.
என்னால் வணங்கத் தக்கவர் நீங்கள்; உங்களால் காப்பாற்றப்பட வேண்டியவள் நான்.''
இதைக்கேட்ட இராவணன் மிகப் பொறுமையுடன், "என் மருமகள் நீ என்று சொன்னாயே, அந்த உறவுமுறை யாருக்குப் பொருந்தும்? ஒரே கணவனோடு வாழும் பெண்களுக்கே இது பொருந்தும். ஆனால் தேவலோக சட்டத்தின்படி அப்சரப் பெண்களுக்கு ஒரு கணவன் என்னும் கட்டுப்பாடு இல்லை. ஒரு ஆணுக்கே உரிய மனைவி என்ற நியதியும் இல்லை. இது தேவ லோகத்தில் நீண்டகாலமாக இருந்துவரு கிறது.''
இப்படிப் பேசிய இராவணன் தன் வேட்கையைத் தீர்த்துக்கொள்ள தவியாய்த் தவித்தான். அவன் அவளை அங்கிருந்த பாறையில் அமர்த்தி, அவள் உடலை ஆக்கிரமித்தான்.
பின்னர் அவனால் விடுவிக்கப்பட்ட அவள் மலர்மாலைகள் கசங்கி, அணிகலன்கள் உடைந்து, யானைக்கூட்டம் விளையாடிக் கலக்கிப் பாழாகிவிட்ட ஆற்றைப்போல அலங்கோலமாக இருந்தாள். மலர்கள் உதிர்ந்துவிட்ட கூந்தல் முடிச்சவிழ்ந்து போனதால், கூந்தலின் நுனிப்பகுதி அசைந் தாடியது. இளந்தளிரைப்போன்ற கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவள் அச்சமும் வெட்கமும் மேலிட, நடுங்கிய வண்ணம் கைகளைக் கூப்பியவாறு நளகூபரனை சந்தித்து அவன் பாதங்களில் விழுந்தாள்.
பரந்த மனம் படைத்த நளகூபரன் அந்த நிலையில் அவளைப் பார்த்து, "பெண்ணே, இது என்ன? ஏன் இவ்வாறு என் கால்களில் விழுகிறாய்?'' என்று கேட்டான். அவள் கைகளைக் கூப்பிக்கொண்டு நடுங்கிய வண்ணம் நடந்த நிகழ்ச்சிகளை நடந்தபடியே சொன்னாள்.
"ஐயா, தேவலோகத்தை வெல்வதற்காக போய்க்கொண்டிருக்கிறான் இராவணன்.
அவனுடைய பெரிய படை இந்தப் பகுதியில் இன்றிரவு தங்கியது. நான் தங்களைக் காண வந்துகொண்டிருந்தபோது அவன் என்னைப் பார்த்துவிட்டான். அவன் என் கையைப் பற்றி, "நீ யாரைச் சார்ந்தவள்' என்று கேட்டான். நான் அனைத்து உண்மை களையும் அவனிடம் கூறினேன். ஆனால் காம மயக்கத்திலிருந்த அவன் நான் கூறிய எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. "நான் உங்களுடைய மருமகள்' என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். அவனோ என் வேண்டுகோளைத் தவிர்த்துவிட்டு என்னை பலாத்காரம் செய்துவிட்டான். விரதங்களை அனுஷ்டிப்பரே, எனது இந்த குற்றத்தை தாங்கள் மன்னித்தருள வேண்டும். ஆண் களுக்கு நிகரான உடல்வலிமை பெண்களுக்கு இல்லையல்லவா" என்றாள்.
இதைக்கேட்ட குபேரனுடைய மகன் மிகவும் கோபம்கொண்டான். மிகப்பெரிய அநீதி அவளுக்கு இழைக்கப்பட்டதை உணர்ந்து தியானத்தில் ஆழ்ந்தான். அந்த தியானத்தில் இராவணனின் பலாத்கார செயலை அவன் அறிந்துகொண்டான். அவனது கண்கள் கோபத்தால் சிவந்தன. உடனே கையில் தண்ணீரை எடுத்தான். முறைப்படி உடல் அங்கங்களை தண்ணீரால் துடைத்துக்கொண்டு, கையில் நீரை வைத்துக் கொண்டு இராவணனுக்கு பயங்கரமான சாபத்தைக் கொடுத்தான். "பெண்ணே, விருப்பமில்லாத உன்னை அவன் பலாத்காரம் செய்தான். எனவே இனி அவனை விரும்பாத எந்தப் பெண்ணிடமும் அவன் இன்பம் அனுபவிக்க முடியாது. அவன்மீது விருப்பமில்லாத ஒரு பெண்ணை அவன் பலாத்காரம் செய்வானானால் அவனுடைய தலை ஏழு துண்டுகளாக சிதறக்கடவது'' என்று சாபமிட்டான்.
நளகூபரனுடைய முகத்திலிருந்து கொழுந்து விட்டெரியும் அக்னிக்கு நிகரான சாபம் வெளிப்பட்டதும், தேவர்கள் பேரிகை கள் முழங்கினார்கள். வானத்திலிருந்து மலர்மாரி பொழிந்தது. அனைத்து தேவர்கள் பிரம்மாவினால் மகிழ்விக்கப்பட்டார்கள். இனி உலகில் நடக்கவிருக்கும் சம்பவங்களை அறிந்துகொண்ட முனிவர்களும் பித்ரு தேவதைகளும் எல்லையற்ற ஆனந்தத்தை அடைந்தார்கள். மயிர்சிலிப்ரிப்பை உருவாக்கும் பயங்கரமான சாபத்தைக்கேட்ட பின்னர், தன்னை விரும்பாத பெண்களிடம் பலாத்காரமாக உறவுகொள்வதைத் தவிர்த்தான் இராவணன்.
நளகூபரனின் சாபத்தை அறிந்து, இராவணனால் கடத்தி வரப்பட்ட கற்புக்கரசிகள் நிம்மதியடைந்தனர்.
27-ஆவது சர்க்கம்
சுமா- வதம்
இராவணன் கயிலை மலையைக் கடந்து படைவீரர்கள், வாகனங்களுடன் இந்திர லோகத்தை நோக்கிச் சென்றான். நாற்புறமும் நிறைந்தபடி அரக்கர் படை சென்றபோது கடலைக் கடைவதுபோல பேரொலி எழுந்தது. இராவணன் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கேட்டதும் தேவேந்திரன் இருக்கையிலிருந்து வெகுண்டெழுந்தான்.
அங்கு குழுமியிருந்த ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்ரர்கள், விச்வேதேவர்கள், சாத்தியர்கள், மருத்கணங்கள் ஆகியோரைப் பார்த்து, "இராவணனுடன் போர்புரிய அனைவரும் ஆயத்தமாகுங்கள்'' என்று கட்டளை யிட்டான். இவ்வாறு அவன் கூறியதும், போர்புரிவதில் இந்திரனுக்கு நிகரான ஆற்றல் கொண்ட தேவர்கள் கவசம் போன்றவற்றை அணிந்துகொண்டு போரில் ஈடுபட ஆர்வம் கொண்டனர்.
அதேசமயம் இராவணனிடம் தோன்றிய அச்சத்தால் தேவேந்திரன் மகாவிஷ்ணுவை சரணடைந்து, "விஷ்ணுவே, மிகவும் ஆற்றல் கொண்டவனான இராவணன் என்னுடன் போர்புரிய வந்துகொண்டிருக்கிறான். நான் எவ்வாறு அவனை எதிர்கொள்வது? பிரம்மா விடம் பெற்ற வரத்தால் அவன் மிகுந்த வலிமை பெற்றிருக்கிறான். பிரம்மதேவரின் சொற்களை மதித்து, அதை மெய்யாக்க வேண்டியது நமது கடமை என்ற ஒரு காரணத் தாலேயே அவனை நான் கொல்லாமல் இருக்கிறேன். வேறு காரணம் எதுவுமில்லை.
முன்பு தங்கள் பேரருளைப் பெற்று நமுசி, விருத்திராசுரன், பலி, நரகாசுரன், சம்பரன் போன்ற அசுரர்களை எவ்வாறு அழித்தேனோ, அதுபோன்றே இப்போதும் நடக்குமாறு ஏதேனும் உபாயம் கூறுங்கள். மதுசூதனரே, தேவதேவரே, அண்ட சராசரங்கள் அடங்கிய மூவுலகங்களிலும் தேவர்களுக்குப் புகலிடம் அளிக்கக்கூடியவர் நீங்களே. ஆதரவுகாட்டிக் காப்பாற்றக்கூடியவர் உங்களைத் தவிர எவருமில்லை. நீங்களே பரம்பொருளான நாராயணர். அனைத்து செல்வங்களும் நிறைந்தவர். தோற்றம் தெரியாத பழமை வாய்ந்தவர். உலகங்கள் மூன்றும் தங்களிடம் நிலைபெற்றுள்ளன. என்னையும் தேவர்களின் தலைவனாக ஆக்கியவர் நீங்களே. அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் உள்ளடங்கிய இந்த உலகங்கள் அனைத் தும் தங்களாலேயே படைக்கப்பட்டன. யுக முடிவில் அனைத்துயிர்களும் பொருட்களும் உங்களிடமே புகுந்துகொள்கின்றன. ஒப்பற்ற தலைவரே, தாங்கள் சக்ராயுதத்தை ஏந்தி இராவணனுடன் போர்புரிய வருவீர்களா என்பதைக் கூறவேண்டும்'' என்றான்.
அதைக்கேட்ட ஸ்ரீமன் நாராயணர், "அச்சம் கொள்ளாதே. நான் கூறுவதைக் கேள். தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடி எதிர்த்தாலும் இவனை இப்போது வெல்லவும் முடியாது; கொல்லவும் முடியாது. எவராலும் வெற்றிகொள்ள முடியாத வரங்களைப் பெற்றிருக்கிறான். தன் மகனோடு வந்திருக்கும் இந்த அரக்கன் தன் வலிமையின் செருக்கினால் பெரிய நாசச் செயல்களை செய்யப்போகிறான் என்பதை என் இயல்பான ஞானதிருஷ்டியினால் தெரிந்துகொண்டேன். தேவர் தலைவனே, இவனுடன் என்னைப் போர்புரியுமாறு சொன்னாயல்லவா? தற்சமயம் அரக்கனான இராவணனை போர்க்களத்தில் நான் எதிர் கொள்ள மாட்டேன். ஏனெனில் போர்க்களம் புகுந்தால் எதிரியைக் கொள்ளாமல் நான் திரும்பியதில்லை. ஆனால் வரங்களால் காக்கப்படும் இராவணன் விஷயத்தில் என்னுடைய இந்தக் கொள்கை நிறைவேறுவது கடினம்.
ஆனால் தேவேந்திரனே, ஆயிரம் அஸ்வ மேத யாகங்கள் செய்தவனே, சபதம் செய்து உன்னிடம் கூறுகிறேன். இந்த அரக்கனின் அழிவுக்கு நானே காரணமாக இருப்பேன். இவனுடைய முடிவு காலம் வரும்போது அதை அறிந்துகொண்டு, உற்றார்- உறவினரோடு கூடிநிற்கும் இராவணனை நானே கொல்வேன். தேவர்களை மகிழ்விப்பேன். தேவர் தலைவனே, இந்திராணியின் கணவனே, இப்போது அச்சத்தை விடுத்து அனைவருடனும் சென்று நீயே போர்புரிவாய்" என்று கூறினார்.
அதன்பின்னர் ருத்ரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், மருத்துகள், அஸ்வினி குமாரர்கள் போன்றோர் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போர்புரிவதற்கு ஆயத்தமாக அமராவதி நகரத்திலிருந்து புறப்பட்டனர்.
இதற்கிடையில் இரவு கழிந்ததும், இராவணனின் படைவீரர்களுடைய ஆரவாரம் நான்கு திசைகளிலிருந்தும் கேட்கத் தொடங்கியது. மிகுந்த வீரமுடைய வர்களும் போர்புரிய துடித்துக்கொண்டி ருப்பவர்களுமான அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் மலர்ச்சியுடன் பார்த்த வண்ணம் போர்க்களத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். கட்டுக் கடங்கா மாபெரும் அரக்கர் படையைப் பார்த்ததும் தேவர் படையினருக்கு அச்சம் தோன்றியது. பின்னர் தேவர், தானவர், அரக்கர்களிடையே கோரமான போர் தொடங்கியது. அந்த நிலையில் பயங்கர தோற்றமுடைய இராவணனின் அமைச்சர் கள் போர்க்களம் வந்துசேர்ந்தனர்.
மாரீசன், பிரஹஸ்தன், மகாபார்சுவன், மகோதரன், அகம்பனன், நிகும்பன், சுகன், ஸாரணன், ஸம்ஹ்ராதன், தூமகேது, மகாதம்ஷ்ட்ரன், கடோதரன், ஜம்புமா-, மகாஹ்ராதன், விருபாக்ஷன், சுப்தக்னன், யக்ஞகோபன், துண்முகன், தூஷணன், கரன், திரிசிரஸ், கரவீராட்சன், சூர்யசத்ரு, மஹாகாயன், அதிகாயன், தேவாந்தகன், நராந்தகன் போன்ற வீரம் பொருந்திய அரக்கர்களுடன் இராவணனின் தாய்வழிப் பாட்டனாகிய சுமா- தேவர்களின் படையிடையே ஆவேசமாகப் புகுந்தான்.
அவன் மிகுந்த கோபத்துடன் பலவகை கூர்மையான ஆயுதங்களால், மேகக் கூட்டத்தை காற்று சிதறச்செய்வதுபோல தேவர் கூட்டத்தை சிதறியோடச் செய்தான். அரக்கர்களால் பேரழிவுக்கு ஆட்பட்ட தேவர்படை சிங்கத்தால் தாக்கப்பட்ட மான்கள்போல எல்லா திசைகளிலும் தெறித்து ஓடியது.
இந்த சந்தர்ப்பத்தில் எட்டாவது வசுவான சாவித்ரன் என்பவன் பலவகை ஆயுதங்களை ஏந்திய படைவீரர்களால் சூழப்பட்டு, மகிழ்ச்சியுடன், சிறு உயிரினங் களை சிங்கம் நசுக்குவதுபோல எதிரிப்படையை அழித்துக்கொண்டு யுத்தகளத்தில் புகுந்தான். அப்போது அதிதியின் மகன்களான த்வஷ்டா, பூஷா என்னும் மாவீரர்கள் சிறிதும் அச்சமின்றி தங்கள் படைகளுடன் போர்க்களத்தில் புகுந்தனர். போரிலிருந்து பின்வாங்காத சிறப்பை யுடைய அரக்கர்களும், அதைக்கண்டு கோபம் கொண்ட தேவர்களுக்குமிடையே பெரும் போர் நிகழ்ந்தது.
போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான தேவர்களை பயங்கரமான அஸ்திரங்களால் அரக்கர்கள் கொன்றழித்தனர். அதுபோலவே தேவர்களும் பயங்கரமான அரக்கர்களைத் தாக்கி எமனுலகு அனுப்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது சுமாலி என்னும் அரக்கன் பலவகை ஆயுதங்களை ஏந்திக்கொண்டு அரக்கர் படையில் இணைந்தான். மிகவும் கோபம் கொண்டிருந்தவன் தேவர்களின் படைகளைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி சிதறச் செய்தான். மிகப்பெரும் அம்புகளில் பொழிவினா லும் சூலங்கள், ஈட்டிகளாலும் தாக்கப்பட்ட தேவர்களால் ஒன்றுகூடி நிற்க இயலவில்லை.
தேவர் படைகள் சுமாலியால் விரட்டியக் கப்படுவதை கண்ட எட்டாவது வசுவான சாவித்ரன், தன்னுடைய தேர்ப்படை சூழ வந்து அந்த அரக்கனைத் தடுத்து நிறுத்தினான். பின்னர் சுமாலிக்கும் வசுவுக்குமிடையே மிகக்கடுமையான போர் பார்ப்பவர் அஞ்சும் வண்ணம் நிகழ்ந்தது.
அளவுகடந்த ஆற்றல்கொண்ட வசுவின் வலிமையான அம்புகளால், சர்ப்பங்களால் இழுக்கப்படும் தேரிலிருந்து சுமாலி கீழே சாய்க்கப்பட்டான். நூற்றுக்கணக்கான பாணங்களால் அவனுடைய தேரை அழித்துவிட்டு, சாவித்ரன் சுமாலியைக் கொல்வதற்காக கதையைக் கையில் எடுத்தான்.
காலதண்டம் போலிருந்த தலைப்பகுதியில் நெருப்புப் போன்று விளங்கும் கதாயுதத்தை சுமாலியின் நெற்றியை நோக்கி செலுத்தினான் சாவித்ரன். இந்திரனால் ஏவப்பட்ட வஜ்ராயுதம் மலைச் சிகரத்தின்மீது மிகுந்த ஓசையுடன் விழுவதைப்போல, எரியும் கொள்ளி போன்ற கதாயுதம் சுமாலியின்மீது விழுந்தது. அதன்பின்னர் அவனது எலும்பு, தலை, சதை என எதுவுமே தென்படவில்லை. கதாயுதத்தால் தாக்கப்பட்ட அவன் சாம்பலாக்கப் பட்டுவிட்டான். சுமாலி கொல்லப்பட்டதை அங்கு கூடியிருந்த அரக்கர்கள் கண்டனர். அனைவரும் அலறியவண்ணம் அங்கிருந்து ஓடிச்சென்றனர். வசுவினால் விரட்டப்பட்ட அரக்கர்களால் அவனை எதிர்த்து அங்கு நிற்க முடியவில்லை.