தினைந்தாவது சர்க்கம்

புஷ்பக விமானத்தைக் கவர்ந்துசென்ற இராவணன்

(இராமபிரானுக்கு அர்க்கர்குல வரலாற்றைக் கூறிவருகிறார் அகத்தியர்.)

ஆயிரங்கணக்கான யக்ஷ வீரர்கள் போர்க்களத்திலிருந்து வெகுண்டு ஓடுவதைக் கண்ட அவர்களது அரசனான குபேரன், மாணிபத்ரன் என்னும் யக்ஷனை அழைத்து, "கெடுமதியுடையவனும், தீய நடத்தை கொண்டவனுமான தசக்ரீவனை அழிப்பாய். எஞ்சியிருக் கும்- போர்செய்ய விரும்பும் யக்ஷ வீரர்களுக்கு அடைக்கலம் கொடு'' என்று ஆணையிட்டான்.

Advertisment

அதைக்கேட்ட மாணிபத்ரன் நான்காயிரம் வீரர்களுடன் போரிடச் சென்றான். அந்த யக்ஷ வீரர்கள் கதாயுதங்கள், உலக்கைகள், ஈட்டி, வேல், ஏறியாயுதம், இரும்பாலான கதாயுதம் ஆகியவற்றைக்கொண்டு அரக்கர்களைத் தாக்கத் தொடங்கினர்.

அவர்கள் ராஜாளி பறவைபோல கடுமை யாகப் போர்செய்த வண்ணம் சுற்றி வந்தனர். முன்னணியில் இடம்கிடைக்காத வீரன், "எனக்கும் சண்டையிட சற்று இடம்கொடு'' என்று கெஞ்சினான்.

மற்றொருவன், "என் இடத்தை விட்டு விட்டுப் பின்னே செல்லமாட்டேன்'' என்றான். இன்னொருவன், "ஆயுதத்தை என்னிடம் கொடு'' என்றான்.

Advertisment

தேவர்களும் கந்தர்வர்களும் முனிவர் களும், கொடூரமான அந்த போரைப் பார்த்து வியந்து நின்றனர்.

அப்போது இராவணனின் அமைச்சன் பிரஹஸ்தன் ஆயிரம் யக்ஷர்களைக் கொன்றான். மகோதரன் மேலும் முன்னே றிச் சென்று ஆயிரம் யக்ஷர்களை அழித் தான். மாரீசனின் கோபம்நிறைந்த தாக்குதலில், ஒரு வினாடி நேரத்தில் இரண்டாயிரம் வீரர்கள் வீழ்த்தப்பட்ட னர். யக்ஷர்கள் நேர்மையாகப் போர் செய்ய, மாய சக்தியால் மறைந்திருந்து தாக்கினர் அரக்கர்கள். அவர்கள் மாயையால் தங்கள் வலிமையை நிலைநாட்டினார்கள்.

தூம்ராக்ஷன் கோபத்துடன் மாணிபத்ரனின் மார்பை உலக்கையால் தாக்கினான். ஆயினும் அவன் சோர்ந்து விடவில்லை. தன் கதாயுதத்தால் தூம்ராக்ஷனின் தலையில் அடிக்க, அவன் நிலைகுலைந்து தரையில் விழுந்தான்.

ரத்தம் தோய்ந்த நிலையில் தரையில் விழுந்து கிடக்கும் தூம்ராக்ஷனைக் கண்டதும், தசக்ரீவன் மாணிபத்ரனை நோக்கி கோபத்துடன் பாய்ந்துவந்தான். அவன் தன்னைத் தாக்குவதற்காக வேகமாக வருவதைப் பார்த்த யக்ஷர் தலைவனான மாணிபத்ரன், தசக்ரீவன்மீது மூன்று வேல்களை எறிந்தான். அதனால் காயம்பட்ட தசக்ரீவன், மாணிபத்ரனின் கிரீடத்தின்மேல் ஓங்கி அடித்தான். பலமான அந்தத் தாக்குதலால் மாணிபத்ரனின் தலை ஒருபக்கமாக சாய்ந்துவிட்டது. தீரத்துடன் போர் புரிந்துகொண்டிருந்த அவன் செயலற்று நின்றான். ஆனால் கலங்கவில்லை.

(அதுமுதல் அவனுக்கு பார்ச்வமௌலி- சாய்ந்த தலைகொண்டவன் என்று பெயர் உண்டாயிற்று.)

பெருவீரம்கொண்ட யக்ஷனான மாணிபத்ரன் போர்க்களத்திலிருந்து வெளியேறினான். உடனே அரக்கர் களிடமிருந்து வெற்றி முழக்கம் எழுந்து, அது மலையில் எதிரொலித்தது.

அப்போது கதாயுதத்தைத் தாங்கிய வண்ணம் குபேரன்- சுக்கிரன், ப்ரோஷ்ட பதன் என்னும் அமைச்சர்களுடனும், சங்கநிதி, பதுமநிதி ஆகியவற்றின் அபிமான தேவதைகளுடனும் தூரத்தில் வந்துகொண்டிருந்தான்.

vvb

தனது அண்ணன் வருவதைக் கண்டதும் தம்பியான தசக்ரீவன் அவனை வணங்கியிருக்க வேண்டும். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. விச்ரவஸ் முனிவரின் சாபத்தினால் தீய பண்புகளைப் பெற்றுவிட்ட- நல்ல நெறிகளிலிருந்து தவறிய தன் தம்பியைப் போர்க்களத்தில் பார்த்த குபேரன், பிரம்மாவின் குலத்திற்கேற்ற நல்லுபதேசங்களைக் கூறலானான்.

"இழிவான செயல்களைச் செய்யாதே என்று முன்பே நான் உனக்குக் கூறினேன். ஆனால் அதை நீ பொருட்படுத்தவில்லை. இப்போது நீ செய்துள்ள கொடிய செயல்களின் விளைவால் நாளை நீ நரகத்தில் விழுவாய். அப்போது நான்கூறிய அறிவுரைகளை நினைத்துப் பார்ப்பாய். அறிவுகுறைந்த ஒருவன் மன மயக்கத்தால் தெரியாமல் விஷத்தை அருந்திவிட்டான் என்றால், அதன் விளைவை அவன் அனுபவிக்கும்போது அந்த உண்மையை உணர்ந்துகொள்வான்.

நீ செய்வது அறச்செயல் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய். ஆனால் நீ செய்த எந்த செயலாலும் தேவதைகள் மகிழவில்லை. கொடிய குணத்தை அடைந்துவிட்ட நீ அதைப்பற்றி அறியாமல் இருக்கிறாய். தாய்- தந்தையர், குருமார்களை மதிக்காதவன் எமன் கையில் அகப்பட்டுக் கொண்டபின் அதன் விளைவைப் புரிந்து கொள்வான்.

நிலையற்றது உடல். அது நன்றாக இருக்கும்போதே நல்லவை செய்து புண்ணியம் தேடிக்கொள்ளாத அறிவற்றவன், இறந்தபின் தனக்கேற்படும் துன்பங்களை அனுபவிக்கும்போது மனம் வெதும்புகிறான்.

தர்மத்தைக் கடைப்பிடிப்பதால்தான் அரசு, செல்வம், சுகம் போன்றவை கிடைக்கப் பெறுகின்றன. அதர்மத்தினால் துன்பமே பெறப்படும். எனவே இன்பவாழ்வை அனுபவிக்க அறம் செய்யவேண்டும். பாவங்களை விலக்கவேண்டும். பாவத்தின் பரிசு துயரம்தான். அதை அனுபவித்துதான் தீரவேண்டும். அறிவிழந்த மனிதன் தன்னைத் தானே அழித்துக்கொள்வதற்காக பாவம் செய்கிறான். தீய குணமுடைய எவருக்கும் நற்குணமென்பது தானாக ஏற்பட்டு விடுவதில்லை. அவன் எத்தகைய செயல் களைச் செய்கிறானோ அதற்கேற்ற பலன்களையே அனுபவிக்கிறான்.

உலகிலுள்ள மக்கள் புண்ணிய காரியங்களைச் செய்து நல்லறிவு, நல்ல தோற்றம், ஆற்றல், மக்கட்செல்வம், பொருள், அஞ்சாமை போன்றவற்றைப் பெறுகிறார்கள். நீயோ நரகத்தின்மீது நாட்டம் கொண்டு தகாத செயல்களைத் தடையின்றிச் செய்கிறாய்.

அறம் பிறழ்ந்தவனோடு அளவளாவுதல் கூடாது என்பது தர்ம நியதி. எனவே இனி உன்னுடன் பேச விரும்பவில்லை'' என்றான்.

இதே சொற்களை அங்கிருந்த தசக்ரீவனின் அமைச்சர்களிடமும் குபேரன் சொன்னான்.

அதைக்கேட்ட மாரீசன் முதலியோர் போர்புரிய மனமின்றி அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டனர். பின்னர் குபேரன் தனது கதாயுதத்தால் தசக்ரீவன் தலையில் தாக்கினான். அவன் காயமடைந்தாலும் தன்னிலை இழக்கவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஆனால் சற்றும் கலங்கவில்லை; சோர்வடையவில்லை. ஆனால் பொறுமை இழந்தனர்.

குபேரன் தசக்ரீவன்மீது அக்னி அஸ்திரத்தை விடுத்தான். அரக்கர் தலைவன் வருணாஸ்திரத்தை ஏவி அதை மறித்தான். அதையடுத்து தசக்ரீவன் மாயையைக் கையாண்டு குபேரனை அழிப்பதற்காக லட்சக்கணக்கான உருவங்கள் எடுத்தான். மேகம், மலை, கடல், மரங்கள், யக்ஷன், அசுரன் போன்ற பல்வேறு தோற்றங்களில் அவன் காணப்பட்டான். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் தெரிந்தாலும் தசக்ரீவன் மட்டும் குபேரனின் கண்களில் தென்படவில்லை. அப்போது பெரிய அஸ்திரத்தை எடுத்த தசக்ரீவன், கதையை சுழற்றிவந்த குபேரனின் தலையில் தாக்கினான்.

இவ்வாறு கடுமையாகத் தாக்கப்பட்ட குபேரன் ரத்தத்தால் உடல் நனைய, நிலைதடுமாறி வெட்டப்பட்ட அசோகமரம் வேருடன் விழுவதுபோல தரையில் சாய்ந்தான். சங்கநிதி, பதுமநிதி முதலிய வற்றின் அதிஷ்டான தேவதைகள் அவனை சூழ்ந்துகொண்டு, பூங்காவுக்கு அவனை எடுத்துச்சென்று சுயநினைவு பெறச் செய்தன.

குபேரனை வென்ற தசக்ரீவன் மகிழ்ந்தான்.

தன் வெற்றியின் நினைவுச் சின்னமாக குபேரனின் புஷ்பக விமானத்தை வசப்படுத் திக்கொண்டான். அந்த விமானம் தங்கத்தால் செய்யப்பட்ட தூண்களைக் கொண்டது. நுழைவாயில்கள் வைடூரியத்தால் இழைக் கப்பட்டவை. முத்துச்சரங்களால் அனைத்து பக்கங்களும் மறைக்கப்பட்டிருந்தன.

எல்லா விருப்பங்களையும் ஈடேற்றும் ஆற்றல்கொண்டது. மனோவேகத்தில் செல்லக்கூடியது. தலைவனின் விருப்பப்படி எங்கும் செல்லும் தனிச்சிறப்பு பெற்றது. செலுத்துபவரின் தேவைக்கேற்ப குறுகும்- விரிவடையும் தன்மைகொண்டது. பரந்த வான்வெளியில் செல்லும் சக்தி படைத்தது.

ரத்தினம், தங்கம் இழைக்கப்பட்ட படிக்கட்டுகள், உருக்கி வார்த்த பொன்னா லான மேடைகள் கொண்டது. தேவதை களையே சுமந்துசெல்லும் ஆற்றல்பெற்றது. பார்வைக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியளிப்பது. பலவித அதிசயங்கள் நிரம்பியது. சிறந்த ஓவியங்கள் கொண்டது. விஸ்வகர்மாவால் திறம்பட சிந்தித்து உருவாக்கப்பட்டது.

அதிக வெப்பமும் குளிர்ச்சியுமின்றி, எல்லா பருவ காலங்களிலும் உடலுக்கு இதமான சூழலை அளிக்கவல்லது அந்த விமானம். தனது ஆற்றலால் வெற்றிகொள்ளப் பட்டதும், எண்ணியவாறு செல்லக்கூடியது மான அந்த விமானத்தில் ஏறியமர்ந்த அரக்க மன்னன், கர்வத்தின் மிகுதியாலும், தீயகுணம் பெற்றிருந்ததாலும் மூவுலகங் களையும் வென்றுவிட்டதாகவே நினைத் துக்கொண்டான். உலக பாலனான குபேரனை வென்றபின் கயிலையிலிருந்து கீழே இறங்கினான். அழகிய கிரீடம், மாலைகள் அணிந்து, நிகரற்ற தனது வீரத்தால் மிகப்பெரும் வெற்றிபெற்று, மகிமைவாய்ந்த அந்த விமானத்தில் அமர்ந்து, வேள்வி குண்டத் தில் சுடர்விட்டெழும் நெருப்பைப்போல பிரகாசமாக விளங்கினான் தசக்ரீவன்.

பதினாறாவது சர்க்கம்

இராவணன் என்று பெயர் பெறுதல்

பின்னர் தசக்ரீவன், கார்த்திகேயன் அவதரித்த பெருமைவாய்ந்த நானல்காட்டை நோக்கிச் சென்றான். அங்கு பொன்னொளி வீசும் அகன்ற நாணல்காட்டைக் கண்டான். அதனருகில் அழகான வனப்பகுதிகளைக் கொண்ட ஒரு மலை இருந்தது. அதற்குமேல் செல்லமுடியாமல் புஷ்பக விமானம் நின்றுவிட்டது. விருப்பப்படி செல்லும் விமானம் அசைவற்று நின்றுவிட்டதைக் கண்ட அரக்கர்கோன் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தான்.

"என்ன காரணத்தால் இவ்வாறு நின்றுவிட்டது? மலைமீது இருக்கும் யாரோ ஒருவருடைய செயலாக இது இருக்குமோ?'' என்று கேட்டான். அறிவாளியான மாரீசன், "அரசே, காரணமில்லாமல் விமானம் நின்றிருக்காது. அல்லது இது குபேரனை மட்டுமே சுமந்துசெல்லும் நியமத்தோடு இருக்கலாம். செல்வங்களுக்கு அரசன் இந்த விமானத்தில் இல்லாததால் இவ்வாறு நின்றிருக்கக்கூடும்" என்றான்.

அப்போது சிவபெருமானின் தொண்டரான நந்திபகவான் அங்கு வந்தார். அவர் பார்ப்பதற்கு அவலட்சணமாகக் காட்சிதந்தார். கருமையும் பழுப்பும் கலந்த உடல்வண்ணம் கொண்டிருந்தார். குள்ளமான உருவம்; குறுகலான கால்கள்; பயங்கரமான தோற்றம்; மொட்டைத்தலை. கைகள் குறுகி இருந்தன. ஆனால் வலிமைமிக்கவர் என்பது தெரிந்தது.

அவர் அரக்கர் தலைவனிடம், "தசக்ரீவனே, இங்கிருந்து திரும்பிச் செல். மலைமீது சங்கரர் ஆனந்தமாக இருக்கிறார். சுபர்ண- நாக- யக்ஷர்கள், தேவ- கந்தர்வ- அரக்கர்கள், மற்றுமுள்ள அனைத்து உயிரினங்களும் இதற்குமேல் செல்ல அனுமதியில்லை. எனவே திரும்பிச் செல். அழிவடையாமல் தப்பலாம்'' என்றார்.

நந்தி கூறிய இந்த சொற்களைக் கேட்டதும் தசக்ரீவனின் செவிக் குண்டலங்கள் கோபத்தால் நடுங்கின; குலுங்கின. ஆணவத்தால் கண்கள் சிவக்க விமானத்திலிருந்து இறங்கிவந்து, "யார் அந்த சங்கரன்?'' என்று கேட்டபடியே மலையடிவாரத்தை அடைந்தான். அங்கு மகாதேவனுக்கு அருகில் பேரொளி வீசும் சூலத்தைத் தாங்கியவண்ணம், இரண்டாவது சங்கரரைப்போல நந்திபகவான் நின்று கொண்டிருந்தார்.

குரங்கு போன்ற முகத்துடன் இருந்த நந்தியைக் கண்டு, தசக்ரீவன் கர்ஜிக்கும் குரலில் ஏளனமாகச் சிரித்தான். அதைக் கண்டு கோபம் கொண்ட நந்தி எதிரே நின்றிருந்த அரக்கர் தலைவனைப் பார்த்து, "தசக்ரீவா, குரங்குபோன்ற வடிவிலிருக்கும் என்னை அவமதித்து ஏளனமாக சிரித்தாயல்லவா? உன் குலத்தை அழிப்பதற்காக எனக்கு இணையான வீரமும் தோற்றமும் தீரமும் கொண்ட வானரர்கள் தோன்றுவார்கள். நகங்களையும் பற்களையும் ஆயுதங்களாகக் கொண்டவர்கள். கொடூர மாகத் தாக்கக்கூடியவர்கள். மனோவேகம் உடையவர்கள். போர்புரியத் துடித்துக் கொண்டிருப்பவர்கள். நடமாடும் மலை போன்றவர்கள். உனக்குள் ஆழமாகப் பதிந்துள்ள உன் செருக்கையும் பெரிய தோற்றத்தையும், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அழிப்பார்கள். அரக்கனே, உன்னை இங்கேயே என்னால் கொல்லமுடியும். ஆனால் உன் தவறான செயல்களால் ஏற்கெனவே நீ இறந்துவிட்டாய். இப்போது உயிரற்ற வெறும் உடலுடன் நிற்கும் உன்னை மீண்டும் கொல்வதால் பயனென்ன?'' என்று கூறி முடித்தார் நந்தி. அப்போது வானத்திலிருந்து மலர்மாரி பொழிந்தது; தேவர்கள் துந்துபி முழக்கினார்கள்.

நந்தியின் பேச்சை அலட்சியப்படுத்தி மலையருகில் சென்ற தசக்ரீவன், "பசுபதியே, எனது விமானம் எவர்பொருட்டு தடைப்பட்டு நின்றதோ, அவருடைய மலையான இதை அகழ்ந்து வீசப்போகிறேன். எந்த மகிமையால் சங்கரர் தினந்தோறும் அரசரைப்போல உல்லாசமாக விளையாடிக் கொண்டிருக்கிறாரோ, அவருக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டிருப்பதைக்கூட இப்போது அவர் அறியவில்லையே'' என்றான்.

இவ்வாறு கூறிய தசக்ரீவன் மலையின் அடியில் கைகளைச் செலுத்தி அதனைத் தூக்குவதற்கு முயன்றான். அதன்காரணமாக அந்த மலை குலுங்கத் தொடங்கியது. அது கண்டு சிவகணங்கள் நடுங்கினர்.

பார்வதிதேவியும் அச்சத்துடன் சிவ பெருமானைத் தழுவிக்கொண்டாள்.

அப்போது அனைவரிலும் உயர்ந்தவரும், பாவங்களைப் போக்குபவருமான சிவபெருமான், தனது கால் பெருவிரலால் விளையாட்டாக மலையை அழுத்தினார். அதனால் மலையின்கீழ் சிக்கிக்கொண்ட தசக்ரீவனின் கரங்கள் நசுங்கின. இதைப் பார்த்த தசக்ரீவனின் அமைச்சர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அந்த அவமானத்தால் ஏற்பட்ட கோபத்தாலும், கைகளின் தாங்கமுடியாத வலியாலும் பெரும் அலறலை எழுப்பினான் தசக்ரீவன். அந்த அலறல் ஓசையால் மூவுலகங்களும் நடுங்கின. அவனுடைய அமைச்சர்கள், யுக முடிவு காலத்தில் ஏற்படும் இடிகளின் தாக்குதல்கள் இப்போது நிகழ்கின்றனவோ என்று நினைத்தார்கள். இந்திரன் முதலான தேவர்கள் சென்றுகொண்டிருந்த வழிகள் ஆட்டம்கண்டன. பெருங்கடல்கள் பொங்கிப் பெருகின. மலைகள் குலுங்கின. யக்ஷலி வித்யாதர- சித்தர்கள், "என்ன நடந்தது?' என்று கவலையுடன் பேசிக்கொண்டனர்.

அப்போது அமைச்சர்கள் அலறிக் கொண்டிருந்த தசக்ரீவனைப் பார்த்து, "உமாதேவியின் கணவரும், நீலகண்டருமான மகாதேவரை வேண்டுங்கள். இந்தநிலையில் அடைக்கலம் தர அவரைத்தவிர வேறு எவரு மில்லை. பணிவுடன் அவரைப் போற்றி வணங்கி அவரையே சரணடையுங்கள். கருணைமிகுந்த சங்கரர் உங்களுக்கு அருள் வார்'' என்றனர்.

அமைச்சர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட பத்து தலைகளைக்கொண்ட அரக்கர் தலைவன், ரிஷபக்கொடியுடைய மகா தேவரை சாமவேத மந்திரங்கள் மற்றும் பலவகை தோத்திரங்களால் பணிவுடன் போற்றத் தொடங்கினான். மலையின்கீழே சிக்கியிருந்த கைகளில் வலியால் அவனது கண்களில் கண்ணீர் பெருகியது. எனினும் அவனது போற்றுதல் தொடர்ந்தது. இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன.

அந்நிலையில் அவனது வழிபாட்டால் திருப்தியடைந்த மகாதேவர் மலையுச்சியில் காட்சிதந்தார். தசக்ரீவனுடைய கைகளை விடுவித்து அவனை நோக்கி, "தசக்ரீவனே, உன்னுடைய வீரம், விடாமுயற்சி கண்டு திருப்தியடைந்தேன். மலையால் அழுத்தப் பட்ட உனது கைகளின் வேதனை தாங்காமல் நீ கூச்சலிட்டாய். அதைக்கேட்டு மூவுலக உயிரினங்களும் அஞ்சி அலறின. எனவே நீ இனி இராவணன் என்னும் பெயரால் அழைக்கப்படுவாய். தேவதைகள், மனிதர்கள், யக்ஷர்கள், மேலும் உலகத்திலுள்ள மற்றவர்கள் யாவரும், உலகத்தையே அலறச் செய்த உன்னை இராவணன் (மற்றவரை அலறச் செய்பவன்) என்றே அழைப்பார்கள். புலஸ்தியரின் வம்சத்தில் வந்தவனே, நீ விரும்பிய வழியில் தடையின்றிச் செல்வாய். அரக்கர் அரசனே, உனக்கு விடைகொடுக்கிறேன். நீ செல்லலாம்'' என்று சம்புதேவர் கூறினார்.

அதுகேட்டு இலங்கை மன்னன், "நீங்கள் என் வழிபாட்டால் உள்ளம் குளிர்ந்திருக்கிறீர் கள் என்றால், பணிவுடன் நான் கேட்கும் வரம் ஒன்றையும் அருளவேண்டும். தேவர், கந்தர்வர், தானவர், அரக்கர், குஹ்யகர், நாகர் போன்றவர்களாலும், வலிமைமிகுந்த மற்றவர்களாலும் எனக்கு மரணம் நேரக்கூடாது என்னும் வரத்தை முன்னரே பெற்றிருக்கிறேன். இறைவா, மனிதர்கள் துச்சமானவர்கள் என்பதால் அவர்களால் மரணம் நேரக்கூடாது என்னும் வரத்தை நான் கேட்கவில்லை.

முப்புரங்களை எரித்தவரே, நீண்ட வாழ்நாள் கொண்ட வரத்தை பிரம்மா விடமிருந்து பெற்றுள்ளேன். அது எவ்வகையிலும் குறையாமல் அவ்வாறே இருக்கவேண்டும். மேலும் எனக்கு ஒரு சஸ்திரத்தையும் (வலிமைவாய்ந்த மந்திராஸ்திரம்) தந்தருளவேண்டும்'' என்று கேட்டான்.

இவ்வாறு அவன் வேண்டியதும், சந்திரஹாசம் என்னும் மிகுந்த ஒளிவீசும் ஒரு வாளை அவனுக்குக் கொடுத்தார் சங்கரர். மேலும் இதுவரை கழிந்து விட்ட அவனது வாழ்நாட்களை விலக்கி, அவனது ஆயுளை மேலும் நீட்டித்தார். பின்னர் அவனிடம், "ஒருபோதும் இந்த வாளை நீ அலட்சியம் செய்யாதே. இதற்கு கௌரவக்குறைவு ஏற்பட்டால் மீண்டும் என்னிடமே வந்துவிடும்'' என்று சொன்னார்.

இவ்வாறு பரமேஸ்வரனாலேயே இராவணன் என்று பெயர் சூட்டப்பட்ட அவன், மகாதேவரைப் பணிந்துவிட்டுப் புஷ்பக விமானத்தில் ஏறிப் புறப்பட்டான்.

பின்னர் மண்ணுலகில் பெரும்வீரம் பொருந் திய க்ஷத்ரியர்களுடன் போர்புரிந்துகொண்டு இங்குமங்குமாக சுற்றிவந்தான். வீரமிக்கவர் களும் போர்செய்வதில் பெருவிருப்பம் கொண்டவர்களுமான சில க்ஷத்ரிய சூரர்கள் அவனுக்கு அடங்கிநடக்க மறுத்து, அவனுடன் போரிட்டு இறுதியில் உற்றார்- உறவினருடன் அழிந்துபோனார்கள். அறிவுகொண்ட வேறுசிலர், வெல்ல முடியாதவன் இராவணன் என்பதைப் புரிந்துகொண்டு, "எங்களை நீங்கள் வென்றுவிட்டீர்கள்'' என்று சொல்லி உயிர்தப்பினார்கள்!

(தொடரும்)