பதினொன்றாவது சர்க்கம் இலங்கையை அடைந்த இராவணன்
இராவணன் முதலான அரக்க சகோதரர்கள் பிரம்ம தேவரிடமிருந்து வரம் பெற்றார்
கள் என்பதை அறிந்துகொண்ட சுமாலி அச்சத்தை விடுத்து, தான் மறைந்திருந்த ரசாலதத்திலிருந்து வெளிப்பட்டான். அவனது அமைச்சர்களான மாரீசன், பிரஹஸ்தன், விரூபாக்ஷன், மகோதரன் ஆகிய நான்குபேரும் கோபம் பெருகியவர்களாக வெளியே வந்தனர். அரக்கர் பலர் புடைசூழ, அமைச்சர்கள் பின்தொடர, தசக்ரீவனைச் சென்றடைந்த சுமாலி, அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.
"திருவே, மூவுலகங்களுக்கும் தலைவரான பிரம்மதேவரிடமிருந்து மிக உயர்ந்த வரங்களை நீ பெற்று வந்தது பெரும்பேறு! வெகுகாலம் நீ விரும்பிய எண்ணம் இப்போது நிறைவேறிவிட்டது. நிகரற்ற தோள்வலி கொண்டவனே, திருமாலிடம் கொண்ட மிகுந்த அச்சம் காரணமாக அரக்கர்களாகிய நாம் இலங்கையைவிட்டுச் செல்ல நேரிட்டது. இப்போது அந்த அச்சம் நீங்கிவிட்டது.
திருமால் அடிக்கடி எங்களுடன் போரிட்டு இன்னல் விளைவித்தார். அதைத் தாங்கமுடியாத நாங்கள் அனை வரும் எங்களது வீடுகளைத் துறந்து மொத்தமாக இடம் பெயர்ந்து செல்லும் நிலை வந்தது. அறிவுடையவனும், உன் சகோதரனும், நிதிகளுக்கு அதிபதியுமான குபேரன் வசித்துக்கொண்டிருக்கும் இந்த இலங்கை நகரம் நம்முடையதுதான். முதலில் அரக்கர்கள்தான் இங்கு வசித்துக்கொண்டிருந்தார்கள் தூய்மையானவனே, சாம, தான, தண்டம் என்னும் உபாயங்களில் ஏதாவதொன்றி னால் நாம் இந்த இலங்கையைத் திரும்ப அடைந்தோமா னால் நாம் வெற்றிபெற்றவர்கள் ஆகிவிடுவோம். குழந்தாய், நீ இலங்கையின் அரசனாகப் போகிறாய் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எதிரிகளால் அழுத்தப் பட்டு தவித்துக்கொண்டிருக்கும் அரக்கர்குலத்தை நீ மீண்டும் வீறுகொண்டெழச் செய்திருக்கிறாய். எங்கள் அனைவருக்கும் நீயே மன்னனாகப் போகிறாய்" என்றான் சுமாலி.
தாய்வழிப் பாட்டனான சுமாலி இவ்விதம் கூறியதைக் கேட்ட தசக்ரீவன், "செல்வத்திற்குத் தலைவனான குபேரன் எமது மூத்த சகோதரன். எனவே இத்தகைய நீதிக்குப் புறம்பான செயலைச் செய்யும்படி நீங்கள் கூறுவது தகாது" என்றான்.
வலிமைமிக்க அரக்கனான தசக்ரீவன், மிகுந்த அமைதியுடன் கூறிய எதிர்பாராத இந்த பதிலைக் கேட்டு, குபேரனுடன் போரிட தசக்ரீவன் விரும்பவில்லை என்னும் அவனது மனநிலையைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டான் சுமாலி.
தசக்ரீவன் அந்த இடத்திலேயே வசித்துவந்தான். சிறிது காலம் சென்றது. அமைச்சனான பிரஹஸ்தன், சுமாலி முன்பு கூறிய அதே கருத்தை மிக அடக்கத்துடன் உதாரணம் காட்டி மீண்டும் தசக்ரீவனிடம் எடுத்துக் கூறலானான்.
"ஆற்றல் மிக்கவரே, தாங்கள் குபேரனை விரட்டுவது அநீதி என்று கூறுவது தங்களுக்குத் தகாது. வீரர்களுக்கு சகோதரபாசம் என்பதெல்லாம் இல்லை. நான் இப்போது சொல்லப்போவதைக் கேளுங்கள்.
பேரழகு நிரம்பியவர்களான அதிதியும் திதியும் சகோதரிகள். அவர்கள் கச்யப பிரஜாதிபதியின் மனைவி களாவார்கள். அதிதி தேவர்களைப் பெற்றெடுத்தாள்.
அவர்கள்தான் தற்போது மூவுலகங்களுக்கும் தலைவர் களாக விளங்குகிறார்கள். திதி என்பவள் அசுரர்களைப் பெற்றாள். தேவர்களும் அசுரர் களும் கச்யபரின் சொந்த பிள்ளைகள்.
அறம் தெரிந்த வீரனே, காடுகள், கடல்கள், மலைகள் சூழ்ந்த இந்த உலகம் முதன் முதலில் மிகுந்த பராக்கிரமசாலிகளான தைத்யர்கள் (அசுரர்கள்) வசமாகத்தான் இருந்தது.
ஆனால் முடிவற்ற ஆற்றலுடைய திருமாலானவர் போரில் தைத்ரியர்களைக் கொன்று, அழிவற்ற இந்த மூவுலகங்களின் ஆட்சிப் பொறுப்பை தேவர் களுக்குக் கொடுத்தார்.
மூத்த சகோதரனை விரட்டி யடிக்கும் நீதிக்குப் புறம்பான இந்த செயலை யாரும் செய்ய வில்லை; உங்களைதான் புதிதாக செய்யச்சொல்கிறோம் என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். தேவர்கள், அசுரர்கள் ஏற்கெ னவே கடைப்பிடித்த வழிதான் அது. அதை நீங்களும் கடைப் பிடிக்கலாம். நான் கூறுகிறபடி செய்யுங்கள்" என்றான்.
இதைக்கேட்டு உள்ளூர சற்று மகிழ்ச்சிறடைந்த தசக்ரீவன், சற்றுநேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு, பிறகு "ஆகட்டும்; அவ்வாறே செய்கிறேன்" என்றான்.
வீரனான அவன் அந்த மகிழ்ச்சி மறைவதற்குள்ளாக, அதேநாளில் அரக்கர்களுடன் இலங்கையை ஒட்டியிருந்த வனத்துக்குள் சென்றான்.
அங்கிருந்து திரிகூட மலைக்குச் சென்று தங்கிய அவன், பேச்சாற்றல்கொண்ட பிரஹஸ்தனை அழைத்து, "நீ யக்ஷர் தலைவரான குபேரனிடம் உடனேசென்று, இப்போது நான் கூறுவதை அமைதியான முறையில் எடுத்துக் கூறு.
மாசற்ற மன்னரே, மிகுந்த வீரம் பொருந்திய அரக்கர்களுக்கு சொந்தமான இந்த இலங்கை நகரம் தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நல்ல இயல்பு கொண்டவரே, இது தங்களுக்கு நியாயமானதல்ல. ஈடற்ற வீரம்கொண்டவரே, இப்போது தாங்கள் இந்த நகரைத் திரும்பக் கொடுத்தால் அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும். மேலும் நீதியும் தங்களால் கடைப்பிடிக்கப்பட்டது என்றாகும்" என்று கூறினான்.
அவ்வாறே பிரஹஸ்தன், குபேரனால் காக்கப்படும் இலங்கை நகர் சென்று, செல்வத்தைக் காக்கும் குபேரனிடம் மிகவும் சாந்தமாக, "விரதங்களில் உயர்ந்தவற்றைக் கடைப்பிடிப்பவரே, ஆயுதம் தாங்கியவர்களுள் சிறந்தவரே, ஆற்றல் பொருந்தியவரே, தங்களது சகோதரன் தசக்ரீவன் கூறியதன் பொருட்டு இங்கு வந்திருக்கிறேன். மிகச்சிறந்த அறிவுடையவரே, அறநூல்கள் பல கற்றவரே, நவநிதிகளின் தலைவரே, பத்து தலைகளையுடைய தங்களது சகோதரன் கூறியதைச் சொல்கிறேன்.
பெரும் ஆற்றல் கொண்ட அரக்கர்கள் சுமாலி போன்றவர்கள் இந்த நகரத்தை அனுபவித்து வந்தனர். விச்ரவரஸின் மைந்தரே, தற்போது இந்த நகரை எங்களுக்குக் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்றான்.
பிரகஸ்தனுடைய பேச்சைக்கேட்டு வைச்ரவணன் (குபேரன்) பதில் கூறினான்.
"அரக்கர்கள் கைவிட்டுச் சென்றபின் பாழடைந்து கிடந்தது இந்த நகரம். அது என் தந்தையால் எனக்கு வழங்கப்பட்டது. பொருள் கொடுத்து, ஆதரவு காட்டி யக்ஷர்களை இங்கு குடியமர்த்தி நானும் வசித்துவருகிறேன். தூதனே, நீ தசக்ரீவனிடம் சென்று, 'தோள் வலிமை மிகுந்தவனே, எவ்வித இடையூறுகளும் இல்லாத எனது இந்த நாட்டை நீயும் என்னுடன் சேர்ந்து அனுபவிக்கலாம். உனக் கும் இது உரியதுதான். எனது செல்வம், நாடு ஆகியவற்றை என்னுடன் சேர்ந்து நீயும் அனுபவி. இதைப் பிரிவினை செய்யவேண்டாம்' என்று நான் சொன்னதாகச் சென்று கூறுவாய்" என்று பிரகஸ்தனிடம் கூறிய குபேரன், பின்னர் தன் தந்தையைக் காணச் சென்றான்.
அவரை வணங்கிய குபேரன், "தந்தையே, தசக்ரீவன் ஒரு தூதனை என்னிடம் அனுப்பினான். 'முன்பு அரக்கர்கள் வசமிருந்த இலங்கையை இப்போது எனக்குக் கொடுத்து விடுங்கள்' என்று கேட்கிறான். தந்தையே, இந்த விஷயத்தில் நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுங்கள்" என்று சொன்னான்.
பிரம்மரிஷியான மகாமுனிவர் விச்ரவஸ், தனக்குமுன் கரங்களைக் கூப்பிநிற்கும் குபேரனைப் பார்த்து, "மகனே, நான் சொல்வ தைக் கேள். தோள்வலிமை மிகுந்த தசக்ரீவன் இதை என்னிடமும் முன்பு கூறியிருக்கிறான். நான் அவனைக் கடிந்துகொண்டதோடு, நல்லறங்கள் பலவற்றை எடுத்துக்கூறினேன்.
ஆனால் அவனோ தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. 'நீ அழிந்துபோவாய்' என்று பலமுறை நான் கோபத்துடன் கூறியிருக்கிறேன். மகனே, மங்களம் தருவதும், அறநெறிக்கு உட்பட்டதுமான எனது சொற்களை நீயாவது கேள்.
வரம் பெற்றதால் அகந்தையுடன் இருக்கும் அந்த துர்மதியாளன் செய்யக்கூடியது- கூடாதது என்று பிரித்துப் பார்க்கும் அறிவை இழந்துவிட்டான். மேலும் என் சாபத்தின் விளைவாக பயங்கரமான இயல்பையும் பெற்றிருக்கிறான். எனவே மாவீரனே, உனது உற்றார்- உறவினரோடு இலங்கையைவிட்டு அகன்று, இந்த உலகத்திற்கு ஆதார மாகத் திகழும் கயிலை மலைக்குச் சென்று அங்கேயே வசிப்பாயாக. அங்கு பொன்மய மான, சூரியனைப்போல ஒளிவீசும் தாமரை, ஆம்பல், நீலோத்பவம் உள்ளிட்ட, இன்னும் பலவகை மணம்மிகுந்த மலர்கள் நிறைந்த புனிதமான மந்தாகினி என்னும் அழகிய நதி ஓடுகிறது. அங்கு உல்லாச விரும்பிகளான தேவர்கள், கந்தர்வர்கள், அரம்பையர், உரகர்கள், கின்னரர்கள் போன்றோர் எப்போதும் வந்து மகிழ்வுடன் ஆடிப்பாடி திளைப்பார்கள்.
மகனே, இந்த அரக்கனை உன்னால் எதிர்த்துப் போரிடமுடியாது. அத்தகைய மிக உயரிய வரத்தை அவன் பெற்றிருக்கிறான் என்பதை நீயே அறிவாய்" என்றார்.
இவ்வாறு தந்தை கூறியதைக் கேட்ட குபேரன் அவரது சொற்களுக்கு மதிப்பளித்து, விரைவாக நகரம் திரும்பி, தன் மனைவிலி மக்கள், உற்றார்- உறவினர், வாகனங்கள், செல்வங்கள் போன்றவற்றுடன் அங்கிருந்து அகன்றான்.
பிரகஸ்தன் மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பச் சென்று, தம்பிகள் மற்றும் அமைச்சர்கள் புடைசூழ வீற்றிருந்த பலம்பொருந்திய தசக்ரீவனிடம், "குபேரன் இலங்கையைவிட்டு அகன்றுவிட்டான். எனவே நீங்கள் அந்த நகருக்குள் புகுந்து நல்ல தர்மத்தைக் காப்பாற்றுவீர்களாக" என்றான்.
பிரஹஸ்தன் கூறியதைக் கேட்ட தசக்ரீவன், தனது சகோதரர்களுடனும் படைவீரர்களுடனும் சென்று, குபேரன் கைவிட்டுச் சென்றதும், செம்மையாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளைக் கொண்டதுமான இலங்கை நகருக்குள் நுழைந்து, தேவலோகத்தில் இந்திரன் இருப்பதுபோல அரியணையில் ஏறினான்.
அரக்கர்கள் அவனுக்கு முடிசூட்டினர்.
அவன் அந்த நகரத்தை மேலும் அழகாக்கினான்.
நாளடைவில் அந்த நகரம் கருநிறம் கொண்ட அரக்கர்களால் நிரம்பியதாயிற்று.
செல்வங்களுக்குத் தலைவனான குபேரன், மாசற்ற நிலவுபோல ஒளிவீசும் கயிலை மலையில், தேவர் தலைவன் இந்திரனுடைய அமராவதி நகருக்கு நிகரான பெருமாளிகைகள் அழகுற நிறைந்த அளகாபுரி என்னும் நகரத்தை உருவாக்கி அங்கு வசிக்கத் தொடங்கினான்.
பன்னிரண்டாவது சர்க்கம்
இராவணன் முதலானோரின் திருமணங்கள் (இராமபிரானுக்கு அரக்கர்களின் வரலாற்றை கூறிவரும் அகத்திய மாமுனிவர் தொடர்ந்து கூறலானார்.)
அரக்கர்களின் அரசன் தசக்ரீவன் பட்டா பிஷேகம் முடிந்தவுடன் தன் சகோதரர்களுடன் இலங்கையில் வசிக்கத் தொடங்கினான்.
அப்போது தன் தங்கையான சூர்ப்பனகைக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினான். எனவே அவன் தானவர் தலைவனான காலகேயனின் மகனான வித்யுஜ்ஜிஹ்வன் என்பவனுக்கு தன் தங்கை சூர்ப்பனகையை மணமுடித்துக் கொடுத்தான்.
தங்கையின் திருமணம் நடந்துமுடிந்த பின்னர் ஒருமுறை தசக்ரீவன் வேட்டை யாடுவதற்காக காட்டில் திரிந்துகொண்டிருந் தான். அங்கே திதியின் மகனான மயனைக் கண்டான். ஒரு பெண்ணுடன் இருந்த அவனைக் கண்ட தசக்ரீவன், "மனிதர்களே இல்லாத இந்த வனத்தில் தனியாக இருக்கும் நீங்கள் யார்? மான்விழிகொண்ட இந்தப் பெண்ணுடன் எதற்காக இங்கே வசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டான். அதற்கு மயன், "என்னுடைய வரலாறு அனைத்தையும் நடந்தபடி சொல்கிறேன்; கேள்" என்று கூறத் தொடங்கி னான்.
"அன்புடையவனே, ஹேமா என்னும் அப்சரப் பெண்ணைப் பற்றி நீ ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பாய். புலோமன் என்னும் தானவனின் மகளாகிய சசீதேவி இந்திரனுக்கு மணம்முடித்து வைக்கப்பட்டதுபோல, ஹேமா எனக்கு வழங்கப்பட்டாள். நான் அவள்மீது மிகவும் அன்புகொண்டு ஆயிரமாண்டுகள் வாழ்ந்திருந்தேன். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தேவதைகள் இட்ட ஒரு பணியை முடிப்பதற்காக அவள் தேவலோகம் சென்றுவிட்டாள்.
என்னுடைய அற்புத சக்தியைக் கொண்டு நான் அவளுக்காக ஒரு தங்கமயமான நகரத்தை உருவாக்கியிருந்தேன். அந்த நகரம் மரகதம், வைடூரியம் போன்றவை இழைக்கப்பட்டு பேரழகுடன் விளங்கியது. அங்கு அவளது பிரிவாற்றாமையைத் தாங்க இயலாமல் இதுநாள் வரை வசித்துவந்தேன். தற்போது அந்த நகரத் திலிருந்து என் மகளையும் அழைத்துக்கொண்டு இந்த வனத்திற்கு வந்திருக்கிறேன்.
இவள் ஹேமாவின் வயிற்றில் பிறந்தவள்.
இப்போது தக்க பருவத்தை அடைந்துள்ளாள். இவளுக்கேற்ற ஒரு கணவனைத் தேடிக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன். ஒரு பெண்ணுக்குத் தந்தையாக இருப்பது மிகவும் சிரமம். குறிப்பாக சமுதாயத்தில் கௌரவத்தை நிலைநிறுத்த விரும்பும் ஒருவனுக்கு மிகவும் சிரமம். பெண் என்பவள் இரண்டு குலங்களின் பெருமையையும் காப்பாற்றவேண்டியவள் அல்லவா?
அன்பு மிக்கவனே, அந்த ஹேமாமூலம் எனக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். மூத்தவன் மாயாவி; அடுத்தவன் துந்துபி. என்னைப்பற்றி நீ கேட்டதற்கு சரியான பதிலைச் சொல்லிவிட்டேன். அது சரி; நீ யார் என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா? அதை எவ்வாறு நான் அறிந்துகொள்வது?" என்று கேட்டான்.
இவ்வாறு மயன் கூறியதைக் கேட்ட தசக்ரீவன் பணிவுடன், "புலஸ்தியரின் மைந்தனான விச்ரவஸின் மகன் நான். தசக்ரீவன் என்பது எனது பெயர். விச்ரவஸ் முனிவர் பிரம்மதேவரின் மூன்றாவது தலைமுறை" என்றான்.
அரக்கர் தலைவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட மயன், ஒரு மாமுனிவரின் மகன் இவன் என்பதையறிந்து மகிழ்ச்சிகொண்டான். தனது மகளை அவனுக்கு மணம்செய்து கொடுக்கவும் விரும்பினான். பின்னர் தானவர் தலைவனான மயன் தனது மகளுடைய கையைப்பிடித்து தசக்ரீவன் என் கையில் கொடுத்து, புன்சிரிப்புடன், "அரசரே, இவள் எனது மகள்; ஹேமா என்னும் அப்சரப் பெண்ணுக்குப் பிறந்தவள். மண்டோதரி என்னும் பெயருடைய இந்த கன்னிப்பெண்ணை நீர் மனைவியாக ஏற்றுக் கொள்வீராக" என்று கூறினான்.
தசக்ரீவன் சம்மதம் தெரிவித்தான்.
அப்போதே நெருப்பை உண்டாக்கி, அதன் சாட்சியாக தன் மகள் மண்டோதரியை பாணிக்கிரகணம் செய்துகொடுத்தான் மயன்.
விச்ரவஸ் முனிவர் தசக்ரீவனுக்கு, 'குரூர இயல்பு கொண்டவனாவாய்' என்று கொடுத்த சாபம்பற்றி மயனுக்குத் தெரியும். என்றாலும் பிரம்மாவின் வழிவந்தவன் என்ற காரணத்தால் தன் மகளைக் கொடுத்தான். மேலும் தன் கடுந்தவத்தால் பெற்ற சிறப்பான-வீண்போகாத ஆற்றலையும் தசக்ரீவனுக்குக் கொடுத்தான் மயன். (அந்த சக்தியைக் கொண்டுதான் இலங்கையில் பின்னர் நடந்த போரின்போது லட்சுமணனை காயப்படுத்தித் துன்புறச் செய்தான் தசக்ரீவன்.)
இவ்வாறு ஒரு மனைவியை அடைந்து, இலங்கையின் நிகரற்ற தலைமைப் பொறுப்பை யுடைய தசக்ரீவன் நகருக்குள் பிரவேசித்தான். தனது சகோதரர்களுக்கும் தகுந்த பெண்களை மணம்முடித்து வைத்தான்.
விரோசனனின் மகன் பலிச் சக்கரவர்த்தியின் மகள்வழி பேத்தியான வஜ்ரஜ்வாலா என்னும் பெண்ணை கும்பகர்ணனுக்கு மனைவியாக்கினான் இராவணன். கந்தர்வ அரசன் சைலூஷன் என்பவனுடைய மகளும், அறம் அறிந்தவளுமான ஸரமா என்பவளை விபீஷணனுக்கு மனைவியாக்கினான்.
ஸரமா மானசரோவர் ஏரிக்கரையில் பிறந்தவள். அப்போது மழைக்காலம். பெருமழை பொழிந்து ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே வந்தது. குழந்தையை நீர் மூழ்கடித்துவிடுமோ என்னும் பயத்தில், 'இனிமேலும் பெருகி வளராதே' என்று (ஸர: மா) கூச்சலிட்டாள் குழந்தையின் தாய். அதனால் அவள் பெயர் ஸரமா என்றாயிற்று.
இவ்வாறு மனைவிகளை அடைந்த மூன்று அரக்கர்களும், தேவலோகப் பூங்காவனத்தில் கந்தர்வத் தம்பதியர் கள் களிப்புடன் இருப்பதுபோல, இலங்கையில் ஆனந்தமாக வாழத் தொடங்கினார்கள்.
பின்னர் தசக்ரீவனின் மனைவி மண்டோதரி மேகநாதன் என்னும் மகனைப் பெற்றாள். அவனே இந்திரஜித் என்னும் பெயரால் பின்னாளில் அழைக்கப்பட்டான். இராவணன் மகன் மேகநாதன் பிறந்த வுடனேயே மேகங்களைப்போல மிகவும் பெருத்த சப்தத்துடன் அலறியழுதான்.
அந்த பேரோசையால் இலங்கை நகரமே செயலிழந்தது. எனவே அந்த குழந்தைக்கு மேகநாதன் என்று பெயர் சூட்டினான் தசக்ரீவன்.
எல்லா வளங்களும் நிரம்பிய இராவணனுடைய அந்தப்புரத்தில் அந்தக் குழந்தை வளர்ந்தது. மரக்கட்டைகளால் மூடப்பட்ட நெருப்பைப்போல, பொறுப்பு வாய்ந்த பணிப்பெண்களால் பாதுகாக்கப்பட்டு, பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்வை அளித்துவந்தான் இராவணனின் மகன்!
(தொடரும்)