24-ஆவது சர்க்கம் கரன், சூர்ப்பனகையை தண்டகாரண்யம் செல்லுமாறு கூறுதல்
வருணனை வெற்றிகொண்ட இராவணன் இலங்கை நோக்கி மகிழ்ச்சி யில் திளைத்தவண்ணம் திரும்பிக்கொண்டி ருந்தான். வரும் வழியில் பல அரசர்கள், தானவர்கள், முனிவர்களின் கன்னிப் பெண் களைக் கவர்ந்து சென்றான். அழகான ஒரு கன்னியையோ மணமான பெண்ணையோ பார்த்துவிட்டால், உடனே அவர்களுடைய உறவினர்களைக் கொன்றுவிட்டு அந்தப் பெண்களை விமானத்தில் ஏற்றிக்கொண் டான்.
இவ்வாறு நாகர், அரக்கர், அசுரர், யக்ஷர், தானவர், மானுடப் பெண்களை விமானத் தில் ஏற்றினான். துயரம் தாங்காத அவர்கள் வெப்பம் நிறைந்த கண்ணீர்த் துளிகளைப் பெருக்கினர். பயம், சோகம் காரணமாக வெளிப்பட்ட அந்த கண்ணீர்த் துளிகள் நெருப்புப் பொறிபோல இருந்தன. நதிகளின் நீரினால் கடல் நிரம்புவதைப்போல அந்த அழகிய பெண்களின் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரால் அந்த விமானம் நிரம்பி வழிந்தது.
நீண்ட கூந்தல், அழகிய அவயங்கள், முழுநிலவு போன்ற முகம், விம்மிப் புடைத்த மார்பகங்கள், வைரம் இழைக்கப்பட்ட மேடைபோல் விளங்கும் இடைப்பகுதி, தேவகன்னியர் போன்ற எழில்மிகு தோற்றம், உருக்கி வார்த்த தங்கம் போன்று கண்களைக் கூசச்செய்யும் ஒளி என அந்தப் பெண்கள் பேரெழிலுடன் விளங்கினார்கள். அவர்கள் அனைவரும் கவலையாலும் அச்சத்தினா லும் மிகவும் கலக்கமடைந்திருந்தனர். வெப்பமான அவர்களது மூச்சுக் காற்றினால் புஷ்பக விமானத்தின் அனைத்து பாகங்களும் ஒளியூட்டப்பட்டதுபோல் தோன்றின. அக்னி ஹோத்ர யாக குண்டம் இருக்கும் இடம் போல, அந்த விமானத்தின் உட்புறம் வெப்ப மாக இருந்தது.
சிங்கத்திடம் சிக்கிக்கொண்ட பெண் மான்கள்போல இராவணனுடைய பிடியில் அகப்பட்டுத் தவித்த அந்த இளம்பெண்களின் முகமும் கண்களும் மிகப் பரிதாபமாக இருந்தன. "இந்த அரக்கன் என்னை சாப்பிட்டு விடுவானோ' என்றொருத்தி கவலைப்பட் டாள். இன்னொருத்தி "என்னைக் கொன்று விடுவானோ' என்று மிகவும் கலங்கி சிந்தித் தாள். அந்தப் பெண்கள் தங்களது தாய்- தந்தை, சகோதரன், கணவன் ஆகியோரை மனதில் நினைத்து, அதனால் ஏற்பட்ட துக்கத்தில் ஆழ்ந்து, ஒன்றாகக்கூடி புலம்பலாயினர்.
"ஐயோ, என் சிறிய மகன் நானில்லாமல் எப்படி இருப்பான்? என் தாய் எவ்வளவு தவிப்பாள்! சகோதரன் இதை எவ்வாறு தாங்கிக்கொள்வான்' என்றெல்லாம் புலம்பி சோகக் கடலில் மூழ்கினர். "என் கணவரைப் பிரிந்து எவ்வாறு நான் உயிர்வாழ்வேன். கால தேவனே, உன்னை கெஞ்சிக் கேட்டுக் கொள்கி றேன். சோகக்கடலில் மூழ்கியிருக்கும் எங்களை உனது உலகத்திற்கு அழைத்துக் கொள்.
முற்பிறவியில் வேறுடலில் இருந்த நாங்கள் என்னென்ன பாவங்கள் செய்தோமோ?
அவற்றின் காரணமாக நாங்கள் அனைவரும் இப்போது துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறோம். இது தீர்வதற்கான அறிகுறியே தென்படவில்லையே! என்ன உலகமிது. சொல்லவே வெட்கமாக உள்ளது. இதைவிட கீழ்த்தரமான உலகம் வேறெதுவும் இருக்காது. சூரியன் தோன்றியதும் நட்சத்திரங்கள் தாங்களாகவே மறைந்துவிடுவதுபோல, பலம் குறைந்த எங்கள் கணவர்களை ஆற்றல் மிகுந்த இவன் வெகு எளிதாக அகற்றிவிட்டு எங்களைக் கவர்ந்து போகிறானே. வலிமை பொருந்திய இந்த அரக்கன் அடுத்தவர்களை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறான். தீய செயல்களை செய்யும் இவன் தான் தரம் தாழ்ந்துவிட்டதை எண்ணவில்லையே!
கடுமையாகத் தவம்செய்து அளவில்லா ஆற்றலைப் பெற்றிருக்கிறான் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அடுத்தவர் மனைவியை பலாத்காரமாக அபகரிப்பது இவனது வீரத்திற்கு ஏற்றதல்லவே. இவன் பிறருடைய மனைவிகளை அனுபவிப்பதில் இன்பம் காண்கிறான். இவனது அழிவு ஒரு பெண்ணை முன்னிருத்தியே நிகழப் போகிறது.'
கற்புக்கரசிகளான அந்த உத்தமப் பெண்மணிகள் சாபமிடுவதுபோல இவ்வாறு கூறியவுடன், வானத்தில் துந்துபிகள் முழங்கின; மலர்மாரி பொழிந்தது. அந்தப் பெண்கள் மேற்கண்டவாறு சபித்தவுடன், இராவணனுடைய ஆற்றல் சற்று குறைந்ததுபோலாயிற்று. மனம் சோர்வடைந்துபோல அவன் உணர்ந்தான். அவர்களின் அழுகுரலைக் கேட்டபடியே சென்றுகொண்டிருந்த அரக்கன், இலங்கையில் அரக்கர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டு நகரத்திற்குள் பிரவேசித்தான்.
இந்நிலையில், எண்ணியபடி உருவம் எடுக்கக்கூடியவளும் அரக்கியுமான இராவணனின் தங்கை திடீரென்று அவன் எதிரில் வந்து தரையில் விழுந்தாள்.
அவன் தங்கையைத் தூக்கிநிறுத்தி, "நங்கையே, ஏதேனும் அவசரச் செய்தியை என்னிடம் சொல்ல விரும்புகிறாயா?'' என்று ஆறுதலாகக் கேட்டான்.
அவள் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. கண்ணீர்ப் பெருக்கினால் மங்கியிருந்த பார்வையுடன், "அரசரே, பேராற்றல் உடையவர் நீங்கள். அதனால் தானே சற்றும் ஆலோசிக்காமல் என்னை விதவையாக்கிவிட்டீர்கள். காலகேயர்கள் என்று பெயர்பெற்ற 14 ஆயிரம் தைத்யர்கள் போர்க்களத்தில் உங்களால் கொல்லப்பட்டார்கள் அல்லவா? என் உயிரினும் மேலானவரும், வீரம் பொருந்தியவருமான என் கணவர்- எனது சகோதரன் என்று பெயர்கொண்ட எதிரியான உங்களால் கொல்லப்பட்டார்.
அரசரே, சகோதர உறவுகொண்ட நீங்கள் என் கணவரைக் கொன்றதன்மூலம் என்னையே கொன்றுவிட்டீர்கள். உங்களால் நான் விதவையென்னும் பெயரை சுமக்கப் போகிறேன். மருமகனான அவர் போர்க்களங்களிலும் உங்களால் காப்பாற்றப் பட வேண்டியவர் அல்லவா? ஆனால் நீங்களே அவரைக் கொன்றுவிட்டீர்கள்.
அதற்காக நீங்கள் வெட்கப்படவும் இல்லை'' என்று அழுதபடி சொல்லிப் புலம்பினாள்.
அவளுக்கு ஆறுதல் கூறிய இராவணன் சாந்தமான குரலில், "மகளே, அழுதது போதும். இனி அதனால் பயனொன்றும் இல்லை. உன் நிலை என்னவாகுமோ என்று அஞ்சவேண்டாம். பொருள், அந்தஸ்து, இன்னும் பல சலுகைகளை வழங்கி, மிக அக்கறையுடன் உன்னை மகிழ்வோடு வாழச்செய்வேன்.
போரில் நான் வெறியுடன் இருந்தேன். சிந்தித்து செயல்படும் நிலையில் இல்லை. வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு அம்புகளைப் பொழிந்துகொண்டிருந்தேன். போர் புரியும்போது எதிரில் இருப்பவர் நம்முடையவரா- வேறு மனிதரா என்ற உணர்வு தோன்றுவதில்லை. வெறியுடன் ஆயுதங்களை செலுத்திக்கொண்டிருந்த எனக்கு, "இவர்களுள் என் சகோதரியின் கணவரும் இருப்பாரே' என்ற எண்ணம் எழவே இல்லை. அதனால்தான் என் சகோதரியின் கணவரும் என்னால் கொல்லப்பட்டு விட்டார். தற்போதைய சூழலில் உனக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்.
குறைவில்லாத செல்வச் செழிப்பும் மேன்மையும் பொருந்திய, இளைய தாயின் மகனான கரனுடன் நீ இருந்துவருவாய். அவன் 14 ஆயிரம் அரக்கர்களுக்குத் தலைவனாக இருப்பான். அரக்கர்களை வழிநடத்திச் செல்வதிலும், சன்மானம் அளிப்பதிலும் வலிமைவாய்ந்த அவனே தலைவனாக இருப்பான். அவ்விடத்தில் அவன் முழு அதிகாரத்தோடு விளங்குவான். உன் கட்டளையை அவன் எப்போதும் நிறைவேற்றி வைப்பான். அவன் என் கட்டளைப்படி தண்டகாரண்யத்தைக் காவல் மையமாகக்கொண்டு செயல்படுவதற்கு விரைவில் செல்லவிருக்கிறான். பெரும் பலம்பொருந்திய தூஷணன், கரனுடைய படைத்தலைவனாக நியமிக்கப்பட்டிருக்கி றான்.
கரன் அங்கே உன் சொற்படி எப்போதும் நடப்பான். நினைத்த உருவமெடுக்கும் அரக்கர்களுக்குத் தலைவனாக அவன் விளங்கப் போகிறான்'' என்று சகோதரியிடம் கூறியவன், கரனுன் செல்லவேண்டிய வீரம் பொருந்திய 14 ஆயிரம் படைகளுக்கு உத்தரவிட்டான். பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கர்கள் சூழ, சற்றும் அச் சமற்றவனாக தண்டகாரண்யத்திற்கு விரைந்து சென்றான் கரன். அங்கே எவ்வித இடையூறுமின்றி ஆட்சிபுரியத் தொடங்கினான். இராவணனின் தங்கை சூர்ப்பனகை, கரனுடன் தண்டகாரண்யத்தில் வசித்துவந்தாள்.
25-ஆவது சர்க்கம் தேவலோகத்தின்மீது படையெடுப்பு
பயங்கரமான காடுகள் கொண்ட தண்டகாரண்யத்தின் ஆட்சிப் பொறுப்பை கரனிடம் ஒப்படைத்த இராவணன், தங்கைக்கும் ஆறுதல் தந்து நிம்மதிபெற்றான். பின்னர் அவன் பணியாளர்கள் தொடர்ந்துவர இலங்கையின் மேற்குப் பகுதியிலுள்ள நிகும்பலை என்னும் இடத்திற்குச் சென்றான்.
அங்கிருந்த வேள்விச் சாலையில் பலியாடுகளைக் கட்டிவைக்கும் நூற்றுக்கணக்கான தூண்கள் நாட்டப்பட்டிருந்தன. வழி பாட்டிற்கான இடங்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. தெய்வீகப் பொலிவு டன் அந்த வேள்விச்சாலை பிரகாசித்துக் கொண்டிருந்தது.
அங்கு பிரம்மச்சரிய விரதத்தின் சின்னங் களான கமண்டலம், சிகை, கொடி முதலியவை தாங்கி, கரிய மான்தோல் அணிந்து, அரக்க இயல்புக்கு மாறாக இருந்த தன் மகன் மேகநாதனைக் கண்ட இராவணன் நெருங்கிச் சென்று, மகனை மார்புடன் தழுவிக்கொண்டு, "மகனே, நீ இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உண்மையைச் சொல்வாய்'' என்றான்.
வேள்வி நியமங்களுக்கேற்ப இருந்ததால், அவன் மௌன விரதத்தைக் கடைப்பிடித்துக்கொண்டிருந்தான். வாய் திறந்து பேசினால் யாகப்பயன் முழுமையாகக் கிடைக்காது. எனவே அவனுடனிருந்த குரு சுக்கிராச்சாரியார் இராவணனுக்கு பதில் கூறினார்.
"அரசே, எல்லாவற்றையும் நானே சொல்கிறேன். உங்கள் மகனால் மகத்தான ஏழுவகை வேள்விகள் மிக விரிவாக செய்து முடிக்கப்பட்டுவிட்டன. அக்னிஷ்டோமம், அஸ்வமேதம், பஹுஸுவர்ணகம், ராஜசூயம், கோமேதம், வைஷ்ணவம் ஆகிய யாகங்கள் நிறைவேறிவிட்டன.
மனிதர்களால் செய்வதற்கு அரிதான மாஹேஸ்வர வேள்வியை செய்யத் தொடங்கியதும், அந்த மகாதேவரே இங்குவந்து உங்கள் மகனுக்குப் பல்வேறு வரங்களை அருளினார்.
விருப்பம்போல் வானில் செல்லக்கூடிய தெய்வீகத் தன்மைகொண்ட ரதம் ஒன்றையும் பெற்றிருக்கிறான். இருளை உண்டாக்கும் "தாமஸீ' என்னும் மாய வித்தையையும் பெற்றுள்ளான். இந்த மாயசக்தியைப் போர்க்களத்தில் பிரயோகித்தால், அதை ஏற்படுத்தி யவன் இருக்குமிடத்தை தேவர் களாலும் அறியமுடியாது.
மேலும், எடுக்க எடுக்கக் குறையாத அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணி, முறியாத வில், எதிரிகளைக் கொன்றுகுவிக்கும் அஸ்திரங்கள் போன்ற அனைத்தையும் மேகநாதன் பெற்றுக்கொண்டான். தங்களுடைய புதல்வன் எவராலும் பெறுதற்கரிய வரங்களையும் மேன்மை பொருந்திய ஆயுதங்களையும் பெற்று வேள்வியை முடிக்கும் நிலையில், தங்களைக் காணும் ஆர்வத்துடன் இங்கே நான் காத்திருக்கிறேன்'' என்றார்.
அதைக்கேட்ட இராவணன், "இங்கு நடைபெற்றது நற்செயல் அல்ல. நமது பகைவர்களான இந்திரன் முதலானவர்கள் இந்த யாக ஆகுதிப் பொருட்களால் அவி அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கி றார்கள். அவர்கள் ஆற்றல் அதிகரித்துள்ளது. சரி; நடந்தது எல்லாம் நன்மைக்கே. வா மகனே, நாம் அரண்மனை செல்வோம்'' என்றான்.
பின்னர் தம்பி விபீஷணனுடனும், மகன் மேகநாதனுடனும் தனது விமானத்தினருகே சென்று, அதனுள் கண்களில் நீர்வழிய பரிதாபமாக இருந்த அபலைப் பெண்களை விமானத்திலிருந்து இறங்கும்படி கூறினான்.
பேரழகிகளான அந்தப் பெண்கள்மீது இராவணன் மோகம் கொண்டிருக்கி றான் என்பதைத் தெரிந்துகொண்ட அறமறிந்த விபீஷணன் இராவணனிடம், "அடுத்தவர் மனைவிகளான இவர்களிடம் தகாதமுறையில் ஆசைகொள்வது நமது புகழ், பொருள், குலம் அனைத்தையும் அழித்துவிடும். உறவினர்களை இவ்வாறு அவமானப்படுத்துவது நீதியல்ல என்பதை தாங்கள் அறிவீர்கள். அவ்வாறிருந்தும் உங்கள் விருப்பப்படி செயல்படுகிறீர்கள். உறவினர்களை அழித்துவிட்டு கற்புக்கரசிகளான இவர்களைக் கவர்ந்து வந்திருக்கிறீர்கள்.
ஆனால் உங்களைமீறி மது என்னும் அரக்கன் கும்பீநசஸியைக் கவர்ந்து சென்றுவிட்டான்'' என்று கூறினான்.
அதைக்கேட்ட இராவணன், "நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குப் புரியவில்லை. மது என்று யாருடைய பெயரையோ சொன்னாயே, யார் அவன்?'' என்று கேட்டான.
விபீஷணன் மிகவும் கோபம் கொண்டவனாய் அண்ணனைப் பார்த்து, "நீங்கள் செய்யும் இத்தகைய பாவச் செயல்களின் பயன் கிடைத்துவிட்டது. நமது தாய்வழிப் பாட்டனாரின் மூத்த சகோதரர் மால்யவான் புகழ் வாய்ந்தவர்; அறிவாளி; வயது முதிர்ந்தவர். அவர் நமது அன்னை கேகஸியின் பெரியப்பா. இந்த முறையில் அவர் நமக்கும் பாட்டனார்.
அவருடைய மகள் அநலா என்பவள் நமக்கு சிற்றன்னை முறை. அவளுடைய மகள்தான் கும்பீநஸி. நமது சிற்றன்னை மகள், முறைப்படி நம் அனைவருக்கும் சகோதரியே.
உங்கள் மகன் நெடுங்காலம் வேள்வியில் ஈடுபட்டிருந்தான். நான் தண்ணீருக்குள் மூழ்கியபடி தவம் செய்துகொண்டிருந்தேன். கும்பகர்ணன் உறக்கத்தை சுகமாக அனுபவித்துக்கொண்டிருந்தான்.
அப்போது மது என்பவன் இங்கிருந்த அரக்க வீரர்களைக் கொன்றுவிட்டு, மற்றவர்களை அஞ்சச்செய்து, தங்கள் அந்தப்புரத்தில் மறைவாக இருந்த அவளை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றுவிட்டான். இதைக்கேட்ட பின்னரும் மற்ற அரக்கர்கள் அவனை மன்னித்து விட்டுவிட்டார்களே தவிர போரிட்டுக் கொல்லவில்லை.
திருமணத்திற்குரிய பருவமடைந்த ஒருத்தியை தகுதியானவனுக்கு மணம்செய்து கொடுக்கவேண்டியது முதன்மையான கடமை. சகோதரர்களாகிய நாம் அதைச் செய்யவில்லை. அதற்கு மாறாக இவ்வித நியாயமற்ற செயல்களில் ஈடுபட்டதால், அதன்பயன் இந்த உலகில் இவ்வாறாகக் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும்'' என்றான்.
விபீஷணன் கூறியதைக்கேட்ட இராவணன், மது என்னும் அரக்கனின் பாதகச்செயலை நினைத்து பெருங்கோபம் கொண்டான். கொதிக்கும் நீருள்ள பெருங்கடல்போல வெப்பமடைந்தான். கண்கள் கோபத்தால் சிவந்தன.
தன் ஏவலாளர்களைப் பார்த்து அவன், "என் தேரைக் கொண்டுவாருங்கள். நம்முடைய வீரர்கள் உடனே ஆயுதங்களை ஏந்தி போருக்குத் தயாராகட்டும். தம்பி கும்பகர்ணனும் மற்றுமுள்ள முக்கிய அரக்கர்களும் பலவகை ஆயுதங்களுடன் வாகனங்களில் ஏறட்டும். இராவணனிடம் பயமில்லாத அந்த மதுவைக் கொன்றொழிக் கப் போகிறேன். போர்செய்வதில் பெரு விருப்பமுடைய நான் நண்பர்களுடன் (படையினருடன்) தேவலோகம் நோக்கிச் செல்லப் போகிறேன்'' என்றான்.
அப்போது போரிடுவதில் மிகுந்த விருப்பம்கொண்ட நான்காயிரம் அக்ரோணிப் படையினர் பலவகையான அஸ்திர- சஸ்திரங்களை எடுத்துக்கொண்டு விரைந்து இலங்கைக்கு வெளியே வந்தனர். அவர்களில் ஒரு பகுதியினரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு முன்னணியில் சென்றான் மேகநாதன். நடுவில் இராவணனும், பின்னால் கும்பகர்ணனும் சென்றனர். விபீஷணன் கடமைகளைச் செய்வதற்காக இலங்கையிலேயே தங்கினான்.
கழுதைகள், ஒட்டகங்கள், குதிரைகள், ஒளிபொருந்திய சிம்சுமாரங்கள், பெரியபெரிய சர்ப்பங்கள் ஆகியவற்றில் ஏறிக்கொண்டு விண்வெளியை நிரப்பியபடி மதுவின் நகரத்தை நோக்கிச் சென்றனர்.
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் தீராத பகை இருந்தது. அதனால் தேவலோகத்தின்மீது படையெடுத்துச் செல்லும் இராவணனைப் பார்த்ததும் நூற்றுக்கணக்கான அசுரர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.
இராவணன் மதுபுரத்தை அடைந்து உள்ளே நுழைந்தான். அங்கே மதுவைக் காணவில்லை. இராவணனது சகோதரி மட்டும் இருந்தாள். இராவணனைக் கண்டு மிகவும் அச்சம்கொண்ட கும்பீநஸி மிகவும் பணிவுடன் கைகூப்பி அவன் பாதங்களில் தலைவைத்து வணங்கினாள். "பயப்படாதே'' என்று சொல்லி அவளைத் தூக்கி நிறுத்திய இராவணன், "நான் உனக்கு எந்தவகையில் உதவவேண்டும்?'' என்று கேட்டான்.
"அரசரே, அடுத்தவரை கௌரவிப்பவரே... தங்களுக்கு என்னிடம் அன்பிருப்பது உண்மையென்றால் என் கணவரை இப்போது நீங்கள் கொல்லக்கூடாது. நல்ல குலத்தில் பிறந்த பெண்களுக்கு அனைத்தையும்விட கைம்பெண் என்னும் நிலை அதிக சோகத்தைத் தரக்கூடியது.
அரசருக்கு அரசரே, உங்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் என்னைப் பாருங்கள். நீங்கள் என்னிடம் "பயப்படாதே' என்று கூறினீர்களே! அதை சத்தியவாக்காகக் கொள்ளுங்கள்'' என்றாள்.
அதைக்கேட்டு மகிழ்ந்த இராவணன் தன் சகோதரியைப் பார்த்து, "உன் கணவர் எங்கே இருக்கிறார் என்பதை உடனே சொல். நான் அவரையும் அழைத்துக்கொண்டு தேவலோகம் சென்று அதைக் கைப்பற்றிக் கொள்வேன். உன்னிடம் ஏற்பட்டுள்ள இரக்கத் தினாலும் பாசத்தினாலும் மதுவைக் கொல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட் டேன்" என்றான்.
இவ்வாறு இராவணன் கூறியதைக்கேட்ட கும்பீநஸி மிகவும் மகிழ்ந்தாள். உடனே உறங்கிக்கொண்டிருந்த தன் கணவனை எழுப்பி, "பெரும் வலிமை கொண்ட எனது சகோதரர் இராவணன் இங்கு வந்திருக்கி றார். தேவலோகத்தை வெற்றி கொள்ள விரும்பும் அவர் உங்கள் உதவியைக் கேட்கிறார். தாங்கள் உற்றார்- உறவினரோடு அவருக்குத் துணையாகச் செல்லுங்கள். என்பொருட்டு அவர் உங்களிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்'' என்றாள்.
அதைக்கேட்ட மது, "அப்படியே ஆகட்டும்'' என்றான். பின்னர் முறைப்படி அவன் இராவணனைக் காணச் சென்றான். அரக்கர் தலைவனான இராவணனை அறநெறிக்கு உட்பட்ட முறையில் வரவேற்றான்.
அவனது வரவேற்பை ஏற்றுக்கொண்ட இராவணன், மதுவின் அரண்மனையில் ஓர் இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் பயணத்தைத் தொடங்க ஆயத்தமானான்.
தேவேந்திரனுக்கு ஒப்பான பராக்கிரமம் கொண்ட இராவணன் கயிலை மலைப் பகுதியை அடைந்து, குபேரன் வசிக்கும் இடமருகே சென்று, அங்கே தன் பாசறையை அமைத்தான்.
(தொடரும்)