இருகை விரித்து இறுதி ஊர்வலம் சென்ற அலெக்சாண்டரின் தத்துவம்போல் பல முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் தத்துவம் கூறிவந்தும் கையிலும், பையிலும், வைத்து செலவழிக்காது வாழ்ந்துகாட்டிய "காமராஜர்' போன்று அரசியல் உலகில் அதிகம் பேர் வராத நிலைக்கு காரணம்? - ஆர்.ஜே.கல்யாணி, திசையன்விளை- 621 651.
ஜோதிடம் அரசியலை குறிக்க 11-ஆமிடத்தை குறிகாட்டுகிறது. அது மேலும் லாப ஸ்தானமும்கூட. ஆக அரசியலுக்கு வருபவர்கள் லாபத்தை எதிர்நோக்கி மட்டுமே வருவார்கள். காமராஜர் போன்றவர்கள் அபூர்வ பிறவிகள். அவர்கள் மாதிரி பிறவிகள் எப்போதாவது தான் பிறப்பார்கள். இவர்கள் ஒரு முனிவர், தவசீலர்கள் போன்றவர்கள். அதனால் வெகுமேன்மையான பிறப்பு எப்போதாவதுதான் பிறக்கும். அபூர்வங்கள் அடிக்கடி நிகழாது. அட, இந்த காலத்தில், காமராஜர் மாதிரி, பைசா லஞ்சம் வாங்காமல், வெகுநேர்மையாக ஒரு மனிதர், அரசியலுக்கு வர விடுவோமா? அரசியலுக்கு வந்தாலும், லஞ்சம் வாங்குபவர்கள் சேர்ந்து சம்பவம் பண்ணிவிட மாட்டார்களா! யோசியுங்கள்.
12 ராசிகளின் அடிப்படையில் உலக ஜனத் தொகையைக் கணக்கிட்டால் ஒவ்வொரு ராசிக்கும் சுமார் 60 கோடி பேருக்குமேல் உள்ளார்கள். தினப் பலன், வாரப் பலன், மாதப் பலன் என்றெல்லாம் இதழ்களில் வரும் ராசி பலன்கள் எவ்வகையில் தாக்கத்தை தரமுடியும்? - என்.ஜானகிராமன், 123, செல்வமருதூர்- 621 651.
நீங்கள் கேட்ட கேள்வி சரிதான். நிறைய மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருக்கும். ஒரு தனி மனிதரின் ஜாதகப் பலனை கூறும்போது. அவரின் ஜாதக தசாபுக்தி. அந்தர பலன்களை எடுத்துக்கொள்கிறோம். இது லக்னம் கொண்டு கண்டுபிடிக்கப்படுகிறது. பொதுப் பலன்கள். பத்திரிகையில் மாத, வார, தினப்பலன் இவை எல்லாமே சந்திரனின் நகர்வைகொண்டு கணக்கிடப் படுகிறது. ஆக, உங்கள் சொந்த ஜாதகத்தில் தசாபுக்தி பலன்கள் நன்மை தரும்விதத்தில் நடந்து, அப்போது சந்திரனும் உங்களின் நல்ல ராசி பாவங்களில் நகர்ந்தால் நிச்சயமாக, பத்திரிகையில் எழுதப்பட்ட பலன்கள் நடக்கும்.
சிலருக்கு பிறந்த ஜாதக தசாபுக்தி பலன் மோசமாக நடந்து, அப்போது சந்திரனின் நகர்வு நல்ல நிலைமையில் இருந்தால் ஓரளவு சமாளித்துவிடுவீர்கள். எப்படியிருப்பினும், உங்கள் தசாநாதர், புக்திநாதரை சந்திரன் எப்படியாவது தொட்டுகொண்டு செல்லும். எனவே முழுவதுமாக இல்லாவிட்டாலும், பாதியளவாவது தாக்கம் தரத்தான் செய்யும்.
நாம் வழிபடும் இறைவனுக்கு விலங்குகளும், பறவைகளும் வாகனங்களாக இருப்பது ஏன்? கே.கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
நமது தெய்வங்களுக்கு நிறைய மிருகங்கள், பறவைகள் வாகனமாக உள்ளது.
கஜம்: இது சமஸ்கிருத சொல். தமிழில் யானை. பிரபஞ்சத்தின் வருகையையும் தோற்றத்தையும் குறிப்பது கஜம். இதனால் விநாயகருக்கு யானை முகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. வாகனம் மூஞ்சுறு.
காளை: சிவன் கோவில்முன் இருக்கும். இதை நந்தி என்பார்கள். இவர் சிவனின் பூத கணங்களின் தலைமை கணமாவார். எனவே நந்திகேஸ்வரர் சிவனின் வாகனமாகும்.
சிங்கம்: இது துர்க்கையின் வாகனம். ஒரு முறை, பராசக்தி கடுந்தவம் இருந்தபோது, சிங்கம் இவரின் பாதுகாப்பிற்காக இவர் கூடவே இருந்துள்ளது. அதனால் சிங்கத்தை தனது வாகனமாக வைத்துக்கொண்டார்.
அன்னம்: இது சரஸ்வதியின் வாகனம். அன்னம் பாலையும், தண்ணீரையும் பிரித்து அருந்தக்கூடியது. இதுபோல் நல்லது- கெட்டதுகளை பிரிக்கும் தன்மையில், அறிவுக் கடவுளான சரஸ்வதி, அன்னத்தை வாகனமாக வைத்துள்ளார்.
ஆந்தை: மகாலட்சுமியின் வாகனம்
ஆந்தை. மிக நுண்ணிய புத்தி கூர்மை யுடையது. எனவே மகாலட்சுமி தாயார் ஆந்தையை வாகனமாகக் கொண்டுள்ளார். இப்போது சிலர் ஆந்தையை பார்த்தால், லட்சுமி கடாட்சம் கிடைத்தாக உணர் கிறார்கள்.
கருடன்: காஷ்யப முனிவருக்கும், விந்தைக்கு பிறந்த கருடன், விஷ்ணுவிடம் அவரது வாகனமாக அமைய, அருள்பாலிக்க வேண்டுமென வினவ, அதனால் கருடன் விஷ்ணுவின் வாகனம் ஆனது.
மூஞ்சுறு: இது விநாயகரின் வாகனம்.
மோசமான குணம் கொண்ட துர்தேவதை ஒன்று, விநாயகரிடம் அடைக்கலம் கேட்டு வந்துள்ளது. அதனின் பணிவை பாராட்டி, மூஞ்சுறுவை விநாயகர் வாகனமாக ஏற்றுக்கொண்டார்.
கருப்பு நாய்: பைரவரின் வாகனம் கருப்பு நாய். பைரவரை காலதேவன் என்பர். நாயும் எதிர்காலம் பற்றி உணர்ந்திருப்பதால், பைரவரின் வாகனம் கருப்பு நாயாக இருக்கிறது.
மயில்: முருகப்பெருமான், அசுரர்களிடம் கந்த சஷ்டியில் போரிட்டு, அந்த அசுரரை சேவலாகவும், விஷ்ணு முருகருக்கு மயில் வாகனத்தையும் அளித்தார்.
ஐராவதம்: இது பாற்கடல் கடைந்தபோது வந்தது. இதனை இந்திரன் வாகனமாக்கிகொண்டார்.
புலி: ஐயப்பன் காட்டிற்குள் வேட்டை யாடும்போது புலியை வாகனமாகக் கொண்டார்.
காகம்: இது சனீஸ்வரரின் வாகனம்.
சனீஸ்வரர் ஆயுள்காரகன். காகம் பித்ருக்களை குறிப்பது. எனவே சனீஸ்வரரின் வாகனம் காகம் ஆகும்.
ஏழு குதிரைகள்: சூரியனின் வாகனமிது. வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும் விதத்தில் ஏழு குதிரைகளை கொண்டுள்ளார்.
எருமை மாடு: எமன் கொண்டுள்ள வாகனம் எருமை மாடு ஆகும். ஆக, இவ்விதம் நிறைய விலங்குகள், பறவைகள் தெய்வங்களின் வாகனமாகும். இதில் நிறைய, உண்மை என்னவென்றால், சிலபல ராட்சசகர்கள், அரக்கர்கள், தெய்வத்துடன் போரிட்டு தோற்று, பின் அவர்களையே வாகனமாக ரட்சிக்கும்படி, அனுக்கிரகம் பண்ண வேண்டினர்.
அதன்படி, அந்தந்த தெய்வங்களுக்கு வாகனம் ஏற்பட்டது.
சில கோவில்களில் காணப்படும் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்தும், மகாமண்டபம் மேற்கூரையில் வரையப்பட்டுள்ள அல்லது வடிவமைக்கப்பட்ட ராசி சக்கரம், நவகிரக சன்னதிமேல் வடிவமைக் கப்பட்ட 27 நட்சத்திரங்கள் இவற்றை தரிசனம் செய்துவந்தால் கிரக பாதிப்பிலிருந்து விடுபட முடியுமா? -எஸ் வஜ்ரவடிவேல், கோவை- 641006.
ஸ்ரீசக்கரம் என்பது பராசக்தியின் குறியீடாக உள்ளது. இது மிகமிக மேன்மையானது. தந்தை சிவன். தாய் பார்வதி. ஸ்ரீசக்கரம் என்பது, பார்வதிதேவியின் லலிதா சொரூபமாகவே கருதப்படுகிறது. ஜ்யோமெட்ரிக் வகை கோடுகளும், கோணங்களும் காணப்படுகிறது. சாஸ்திரப்படி, நடுவில் புள்ளியும், முக்கோணம், எண்கோணம், அந்தர்தசாரம், பகிர்தசாரம், சதுரதசாரம் எண் பாகம், பதினாறு பாகம், வட்டக் கோணபகுதி, சதுர வடிவம் என்பவை உட்படுத்தி அமைக்கப்பட்டதே ஸ்ரீசக்கரம் ஆகும். நடுவில் புள்ளிக்குப் பின் மேல்நோக்கி நான்கு, கீழ்நோக்கி ஐந்து முக்கோணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது நாற்பத்தி மூன்று முக்கோணங்களை காணலாம். இதைச்சுற்றி எட்டும், பதினாறும் தாமரை இதழ்களுள்ள இரண்டு சக்கரமும், அவற்றை சுற்றி மூன்று வட்டங்களும். நான்கு பக்கமும் திறக்கின்ற தூபரங்கள்கொண்ட சதுர வடிவமும் அடங்கியதே ஸ்ரீசக்கரம் ஆகும். இதனை தங்கம், வெள்ளி, செம்பு இதனில் செதுக்குவர். பஞ்சலோகத்திலும் ஸ்ரீசக்கரம் வரைவர். ஸ்ரீசக்கரம் மிகுந்த மேன்மைகொண்டது. நிறைய கோவில்களில் அம்மன் மிக ரௌத்ரமாக இருந்தபோது, ஸ்ரீ ஆதிசங்கரர் மற்றும் காஞ்சி பெரியவர்கள் அங்கு ஸ்ரீசக்கரம் பதித்து, அந்த அம்மன்களை சாந்தப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட கோவில்கள் ஸ்ரீசக்கரம் பதியப்பட்டுள்ளது. அந்த அம்மன்கள் மிக சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதை அனுபவத்தில் காண்கிறோம்.
ஒரு பெண்ணின் தோஷம் நீங்குவதற்கு காஞ்சி பெரியவர், அபிராமி அம்மனின் காதில் அணிந்துள்ள ஸ்ரீசக்கர தோடுகளை சற்று நேரம் கூர்ந்து பார்த்துவிட்டுவர கூறியுள்ளார்.
நிறைய அம்பாள் உபசாகர்கள், விக்ரக வழிபாட்டையும், ஸ்ரீசக்கர வழிபாட்டை முதன்மையாகவும் கொண்டுள்ளனர்.
இதேபோல் ராசி சக்கரம், 27 நட்சத்திரங்கள் என இதுபோல் தரிசனம் செய்வதால், நமது பீடைகள் ஒழியும். மேலும் ஊழ்வினை குற்றங்கள் இருப்பினும், ஸ்ரீசக்கர தரிசனம், குற்றங்களை குறைக் கும். நமக்கு தொல்லை தந்த எதிரிகள், அவர்களாகவே விலகிவிடுவர். ஸ்ரீசக்கரம் மிக மேன்மையானது. அதனால் அதனை தரிசிக்கும் போது உங்களுக்கும் மேன்மையான பிரார்த்தனை, சிந்தனை இருத்தல் அவசியம். வேறு யாராவது அழிந்து போய்விட வேண்டும் என இதுபோன்ற மட்டமான எண்ணத்துடன், ஸ்ரீசக்கர தரிசனம், வழிபாடு செய்தீர்கள் எனில், முழு கெட்ட பாதிப்பும் உங்களுக்கே திரும்பிவிடும். சிலர் ஸ்ரீசக்கரத்தை வீட்டில் வைத்து வணங்க கொஞ்சம் யோசிப்பார்கள். அது அவ்வளவு பவர்புல் ஆனது. ஸ்ரீசக்கர தரிசனம், வழிபாடு செய்யுங்கள். மேன்மையும், நிறைவும் பெறுங்கள்.
சமத்துவம், ராஜஸ, தாமஸ இம்மூன்று குணங்களின் இயல்புகள் எப்படி இருக்கும்? -எஸ்.ஆர். ஹரிஹரன் சென்னை.
27 நட்சத்திரங்களையும், தாமஸ நட்சத்திரம், ராஜஸ நட்சத்திரங்கள், சாத்வீக நட்சத்திரங்கள் என பிரித்துள்ளனர். தாமஸ நட்சத்திரங்கள் -12 அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி. தாமஸ நட்சத்திரக் குணங்கள் அதிக தூக்கம், பொய் பேசுவது, நிதானம் இல்லாமை, சோம்பேறி, பாவம் செய்யும் மனம், முன்யோசனை இல்லாதது இவை யாகும். இதனை கவனித்தீர்களானால், மேற்கண்ட நட்சத்திர சாரநாதர்கள் கேது, ராகு, செவ்வாய், சனி என இவர்கள் உள்ளனர். அதால் இந்த நட்சத்திரம் மோசமான பலன்களைத் தரும் தாமஸ குணம் கொண்டுள்ளது. ராஜஸ நட்சத்திரங்கள்- 9
கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், பரணி, பூரம், பூராடம் என்பவையாகும். ராஜஸ நட்சத்திரக் குணம்
நல்ல அறிவு, மேன்மையான கல்வி, இரக்கம், சுகம், உதவி செய்தல், எல்லாருக்கும் நன்மை செய்தல், தானதர்மம் வழங்குதல், நடுநிலைமயாக இருத்தல், இனிமையான பேச்சு என இந்த குணங்களை ராஜஸ நட்சத்திரத்தார் கொண்டிருப்பார்கள். இந்த ராஜஸ நட்சத்திரங்களின் சார நாதர்கள் சூரியன், சந்திரன், சுக்கிரன் இவர்கள் ஆவார்கள். எனவே நல்ல குணம் இருப்பது இயல்புதான். சாத்வீக நட்சத்திரங்கள்- 6
பூனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி என இந் நட்சத்திரங்கள் சாத்வீக வகையைச் சேர்ந்தவை. சாத்வீக நட்சத்திரக் குணம்
தெய்வபக்தி, நல்ல ஞானம், கணித அறிவு, குரு பக்தி, நேர்மை, கூர்மையான புக்தி, தீய செயல்களைத் தவிர்த்து நல்ல செயல்களை மட்டும செய்தல் ஆகும். இவர்களின் சாரநாதர் குரு, புதன். எனவே சாத்வீக நட்சத்திரத்தார், மிக மேன்மையான குணம் கொண்டிருப்பதில் சந்தேகமில்லை.
பாவம்- மகாபாவம் எதைக் கூறுவார்கள்? -எஸ்.ஆர். ஹரிஹரன் சென்னை.
பகவத் கீதையில், ஸ்ரீகிருஷ்ணரை பார்த்து, அர்ஜுனன் கேட்கிறான். "கிருஷ்ணா யாருமே பாவம் செய்ய விரும்புவதில்லை. ஆனாலும் எதுவோ அவனை பாவத்திலேயே பலாத்காரமாக தூண்டிக் கொண்டிருக்கிறரே அது என்ன?'' எனக் கேட்க, பகவான், அதுதான் ஆசை என்பது என்கிறார். மனிதரிகளின் ஆசை நிறைவேறிவிட்டால், உடனே அடுத்த ஆசையை தொடங்கிவிடுகிறார்கள். ஒருவேளை ஆசை நிறை வேறாவிட்டால், ஆத்திரம், குரோதம் உண்டாகிறது. இதுதான் மகாபாவம் ஆகிறது. பாவம் செய்யாமலிருக்க ஒரே வழி ஆசையை உண்டாக்கும் நம் மனசை அடக்குவதுதான். நாம் நான்கு வழிகளில் பாவம் செய்கிறோம். உடம்பால் கெட்ட காரியம், வாயால் புரளி பேசி பாவம், மனதால் கெட்ட நினைவு, பணத்தால் செய்யும் பாவ காரியங்கள். உடம்பை பகவானை நமஸ்கரித்து, புண்ணியம் சேர்க்க வேண்டும்.
வாயால் பகவான் நாமாவைச் சொல்லி புண்ணியம் சேர்க்க வேண்டும்.
மனம் பகவானின் இருப்பிடம்
அதனை குப்பையாக்காமல், தினமும்
தியானம் செய்து புண்ணியமாக்க வேண்டும்.
பணத்தைக் கொண்டு பகவானுக்கும்,
ஏழைகளுக்கு தர்மம் செய்தும்
புண்ணியம் சேர்க்கவேண்டும்.
பாவத்துக்கு இரண்டு சக்திகள்
ஒன்று இப்போது நம்மை தவறில்
ஈடுபடுத்துவது இரண்டாவது
நாளைக்கும் இதே தவறைச் செய்ய தூண்டுவது.
என்னை மட்டும் சரணடைந்து வீடு. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் என்று அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
எனவே மகா பாவங்களை செய்யாமல் பகவானின் பாதங்களை சரணடைவதுதான் மனிதர்களின் புண்ணிய செயலாகும்.