மேஷம்
இந்த மாதம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 10-ல் உச்சமாக இருக்கிறார். (மாதக்கடைசிவரை மகரத்தில் இருக்கிறார்). இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த குரு பகவான் இந்த மாதம் 4-ஆம் தேதிமுதல் 8-ல் மாறுகிறார். குரு 8-ல் வருவது நல்லதல்ல என்றாலும், அவர் பார்க்கும் 2, 4, 12 ஆகிய இடத்துப் பலனை மேம்படுத்துவார். பொருளாதாரத்தில் சிக்கல்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பம் விலகும். கணவன்- மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் தீர ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்துச் செல்லலாம். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். தாயாருக்கும் தேக சுகம் தெளிவு பெறும். வீடு, மனை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வெற்றி காணலாம். சிலர் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். தொழில்துறையில் சில மாற்றங்கள் செய்வதன்மூலம் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். விரயங்களை சுபவிரயமாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. திடீர்ப்பயணம், அலைச்சல் போன்ற பலன்களை சந்திக்க நேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமதமான சூழல் உருவாகும். வியாழ பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அளித்து வழிபடவும்.
ரிஷபம்
இந்த மாதம் 4-ஆம் தேதி வரும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிக யோகமான பெயர்ச்சியாகும். குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். உங்களது காரியங்களில் இருந்த தடைகள் விலகும். முயற்சிகள் வெற்றியாகும். தேவைகள் நிறைவேறும். ராசியையும், 3-ஆமிடத்தையும், 11-ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். 7-ல் இருக்கும் குரு திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்ணுக்குத் திருமண முயற்சிகளைக் கைகூட வைப்பார். கடமையில் இருக்கும் தொய்வுகள் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். அட்டமச்சனி நடந்தாலும் ரிஷப ராசிக்கு சனி கெடுதல் செய்யமாட்டார். பொதுவாகவே சனி மிகவும் நல்ல கிரகம். நேர்மையானவர். அவரவர் கர்மவினையின் பலனாக நன்மை- தீமைகளை அவர் நிறைவேற்றுவார். ராசிநாதன் சுக்கிரன் அக்டோபர் 11-ல் வக்ரம் பெறுகிறார். வக்ரத்தில் உக்ர பலமாக செயல்படும். 3-ஆமிடம் சகோதர ஸ்தானம். அதை குரு பார்ப்பதால் உடன்பிறந்த வகையில் ஆதரவும் அனுகூலமும் ஏற்படும். தொழில்துறையில் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அது வெற்றியாகவும் அமையும். வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். இடமாற்றமும் உண்டாகும். வெள்ளிதோறும் மகாலட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
இதுவரை 5-ல் இருந்து உங்கள் ராசியைப் பார்த்த குரு பகவான் இந்த மாதம் 6-ஆம் இடத்தில் மறைகிறார். (அக்டோபர்- 4-ஆம் தேதி). 2-ல் உள்ள ராகுவும் குடும்பத்தில் குழப்பம், பொருளாதாரத்தில் சிக்கல் போன்றவற்றை நிகழ்த்தியிருப்பார். இப்போது குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் இருந்துவரும் பற்றாக்குறை ஓரளவு குறையும். என்றாலும் செலவுக்கும் பஞ்சமிருக்காது. வரவு குறைவாக வரும். ஆனால் செலவு அதற்குமேல் இருக்கும். ஏற்றமும் இறக்கமும் கலந்தே அமையும். 6-ல் உள்ள குரு எதிரி, கடன், நோய், வைத்தியச்செலவு போன்றவற்றை உருவாக்குவார். அவர் பார்வை 2, 10, 12-ஆம் இடங்களுக்குக் கிடைக்கிறது. தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் குறைவுக்கு இடமிருக்காது. அதேசமயம் அதில் செலவுகளையும் தவிர்க்கமுடியாது. கூட்டாளிகளுக்குள் ஒற்றுமையாக செயல் படலாம். கணவன்- மனைவிக்குள் சில சச்சரவுகளும் சங்கடங்களும் தோன்றி மறையும். ராசிநாதன் புதன் சுக்கிரனோடு (5-ல்) இணைகிறார். அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. பிள்ளைகள் வகையிலும் நல்லவை நடைபெறும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
கடகம்
இந்த மாதம் அக்டோபர் 4-ல் கடக ராசிக்கு 5-ல் குரு மாறி உங்கள் ராசியைப் பார்க்கிறார். குடத்துக்குள் விளக்காக இருந்த நீங்கள் இனி குன்றின்மேல் தீபமாக ஒளிரலாம். உங்கள் திறமை, செயல்பாடு, கீர்த்தி, புகழ் யாவும் சிறப்பாக இருக்கும். உங்களை வெத்துவேட்டு என்று கணக்குப் போட்டவர்கள் மூக்கின்மேல் விரல்வைத்துப் பார்க்குமளவு நீங்கள் உயருவீர்கள். 5-ல் உள்ள குரு உங்களது நீண்டகாலக் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவார். திருமணமாகி வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகத்தைத் தரும். பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். குரு ஜென்ம ராசி, 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கி றார். தகப்பனார்வழியில் நன்மைகளும் ஆதரவும் அனுகூலமும் உண்டாகும். தகப்பனாரால் உங்களுக்கும், உங்களால் தகப்பனாருக்கும் நன்மதிப்பு, பாராட்டு ஏற்படும். தொழில்துறையில் வெற்றிகளை ருசிக்கலாம். 6-ல் உள்ள சனியும் அதற்குப் பக்கபலமாக அமைவார். சத்ருக்களை விரட்டியடிக்கலாம். ஜென்மத்தில் உள்ள ராகு உங்கள் செயல்பாடுகளில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தினாலும் முடிவில் வெற்றி பெறலாம். நெல்லிக்கனியை ருசிக்கும் போது துவர்ப்பு ஏற்பட்டாலும், தண்ணீர் பருகியவுடன் இனிப்பதுபோல!
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதி வரை 2-ல் இருக்கிறார். இதுவரை 3-ல் இருந்த குரு இந்த மாதம் (அக்டோபர்-4-ல்) 4-ஆமிடத்துக்கு மாறுகிறார். தேக சுகம் நன்றாக இருக்கும். தாயார்வழியில் இருந்துவரும் வைத்தியச் செலவுகள் குறையும். இடம், மனை போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் மாறும். 4-ல் உள்ள குரு 8-ஆம் இடம், 10-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 8 என்பது அதிர்ஷ்டம், சஞ்சலம், ஏமாற்றம், விபத்து ஆகியவற்றைக் குறிக்கும். எதிர்பாராத திடீர் பணப்ராப்திகளும் கிடைக்கும். வாகன வகையில் செலவுகளும் உண்டாகும். 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். அதை குரு பார்ப்பதால் தொழில், வேலை, உத்தியோகம் போன்றவற்றில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். தொழில்துறையில் புதிய பங்குதாரர்கள் இணைவர். அதன்மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு குரு வழிவகுத்துத் தருவார். வேலை, உத்தியோகத்தில் நல்ல இடமாற்றங் கள் வந்துசேரும். அதை ஏற்றுக்கொள்ளலாம். சிலருக்கு ப்ரமோஷனுடன் கூடிய இடமாற்றமும் வரலாம். 12 என்பது விரய ஸ்தானம். தொழில் சம்பந்தமாக சில விரயங்கள் ஏற்பட லாம். அப்படி ஏற்படும்போது அதைப் பயனுள்ள விரயமாக மாற்ற முற்படுங்கள். 5-ல் உள்ள சனி பிள்ளைகளால் பிரச்சினைகளையும், சங்கடங்களையும், பிள்ளைகளுக்கு வைத்தியச்செலவையும் உண்டுபண்ணுவார். தன்வந்திரியை வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் இதுவரை ஜென்ம ராசியில் உச்சமாக இருந்தார். இந்த மாதம் அவர் 2-ல் சுக்கிரனோடு இணைந்து செயல்படுவார். 2-க்குடைய சுக்கிரன் 2-ல் ஆட்சி. பணவரவு திருப்திகரமாக இருக்கும். எண்ணங்கள் ஈடேறும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். இந்த மாதம் 2-ல் இருந்த குரு 3-ல் மாறுகிறார். தைரியத்தையும் சகாயத்தையும், உடன்பிறந்தவர் வகையில் ஆதரவையும் அனுகூலத்தையும் குரு தருவார். 3-ல் உள்ள குரு 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்தின் பலன்களை மேம்படுத்துவார் என்பது உங்களுக்கே தெரிந்த விஷயம்தான். திருமணமாகாமல் இருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமணம் கைகூடும். தொழில் துறையில் கூட்டாளிகளுடன் இருந்துவரும் மனக்கிலேசம் மாறி நல்லுறவும் நட்புணர்வும் உண்டாகும். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். குலதெய்வ வழிபாடு, நிறைவேற்ற முடியாமல் இருந்த பிரார்த்தனைகள் யாவும் நிறைவேறும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நடைபெற்று வரும் பிரச்சினைகள், வழக்குகளில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம். 11-ல் இருக்கும் ராகுவும், அதைப் பார்க்கும் குருவும் முயற்சிகளில் வெற்றி, தொழில்துறையில் லாபம், புதிய திட்டங்களை வழிவகுத்தல் போன்ற பலன்களைத் தருவார்கள். லட்சுமி நாராயணரை வழிபடவும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். அது ஒரு பலம். அத்துடன் இதுவரை ஜென்மத்தில் இருந்த குரு அக்டோபர் 4-ல் 2-ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் அற்புதமான இடங்கள். அது கூடுதல் பலம். தனவரவு தாராளமாக இருக்கும். கல்வியில் மேன்மை அடையலாம். பாதியில் விட்டுப்போன படிப்பை மீண்டும் தொடரலாம். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சொல்வாக்கு செல்வாக்கு பெறும். 2-ல் உள்ள குரு 6-ஆமிடம் 8-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். எதிரி, கடன், நோய் இவற்றை குரு விருத்தி செய்தாலும், அதை நிவர்த்தி செய்வதற்கும் வழிவகுத்துக் கொடுப்பார். 2-க்குடைய செவ்வாய் உச்சமாக இருப்பதால் மேற்கண்ட சிக்கல்களில் இருந்து அவரும் விடுவிக்கும் வழிகளைக் காட்டுவார். 8-ஆமிடத்தை குரு பார்க்கிறார். வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் செலவுகள் தோன்றினாலும் சரிசெய்யும் விதமாகவே அமையும். சில விஷயங்களில் ஏமாற்றம் காணப்பட்டாலும் திடீர் அதிர்ஷ்டம் அல்லது தனவரவுகளைச் சந்திக்கலாம். தொழில்துறையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படலாம். குரு 10-ஐப் பார்ப்பதால் தொழிலை முன்னேற்ற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். தொழில் நிமித்தமாக விரிவுபடுத்துவதற்கு வங்கிக்கடனும் அமையும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் இறுதிவரை 3-ல் உச்சமாக இருக்கிறார். தொட்ட காரியங்களில் வெற்றி, அனுகூலம் கிடைக்கும். என்றாலும், ஏழரைச்சனியும், செவ்வாயுடன் இணைந்த கேதுவும் அவ்வளவு எளிதாக வெற்றியைத் தட்டிப்பறிக்க விடமாட்டார்கள். போராடித்தான் வெற்றியை அனுபவிக்க வேண்டும். 12-ல் இருக்கும் குரு அக்டோபர் 4-ல் ஜென்மத்தில் பெயர்ச்சியாகிறார். ஜென்ம குரு செல்வநிலையை உயர்த்துவார். 2, 5-க்குடைய குரு ஜென்மத்தில் இருந்து 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்துத் தகராறுகள் விலகும். பிள்ளைகளுக்கு நற்காரியங்கள், சுபமங்கள நிகழ்வுகள் உண்டாகும். அதற்குண்டான செலவுகளுக்கு கடனும் பெற்று நடத்தி முடிக்கலாம். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமண முயற்சிகள், தொழில்துறையில் மகிழ்ச்சி போன்றவற்றை செயல்படுத்துவார். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம், தகப்பனார் ஸ்தானம். அதைப் பார்க்கும் குரு தகப்பனாரிடையே நிலவி வரும் கருத்து வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை உண்டாக்குவார். வழக்கு, வில்லங்கம், வியாஜ்ஜியம் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக யாத்திரைகளை மேற்கொள்ளலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபடவும். (ஆரணவல்லி சமேத பூமிநாத சுவாமி திருக்கோவில்).
தனுசு
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. தேக சுகத்தில் பாதிப்பு, வைத்தியச்செலவு ஆகியவற்றை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். மருத்துவர்களுக்குப் புலப்படாத நோய் வாட்டி வதைக்கிறது. இதுவரை 11-ல் இருந்த தனுசு ராசிநாதன் குரு இந்த மாதம் 12-ஆம் இடத்திற்கு மாறி 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். 4-ஆமிடத்துக்குரியவரே 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் நோய்நொடி, வைத்தியச்செலவு இவற்றில் நிவாரணம் உண்டாகும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கலாம். பூமி, வீடு, மனை போன்றவற்றில் சுபமங்கள விரயங்கள் ஏற்படலாம். சிலர் பழைய வீட்டை வாங்கி சீர்திருத்தம் செய்யலாம். அல்லது புதிய வீடும் வாங்கலாம். 6-ஆமிடமான எதிரி, கடன் போன்ற பலன்களையும் சந்திக்க நேரும். மேற்கண்ட வீடு கட்டும் அல்லது வாங்கும் பயனுக்காக கடன் பெறலாம். "வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்' என்பார்கள். அதுபோல ஒரு வீடு வாங்கியதற்கே உறவினர்களினாலோ, அண்டை அயலார் குடியிருப்பாலோ திருஷ்டி கள் ஏற்படலாம். அதற்குரிய பரிகாரங்களைச் செய்து நிவர்த்தி காணுங்கள். திடீர் யோகம், அலைச்சல், பயணம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை அவசியம். திங்கட்கிழமை சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. 4-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் உச்சம். உங்கள் காரியங்கள் கைகூடும். சிக்கல்கள் விலகும். இதுவரை மகர ராசிக்கு 10-ல் இருக்கும் குரு இம்மாதம் 11-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3-ஆமிடம் தைரிய, வீரிய, பராக்கிரம, சகோதர ஸ்தானம். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில்துறை அல்லது வேலையில் துணிச்சலாக எடுக்கும் முடிவுகளால் வெற்றி ஏற்படும். பிள்ளைகளுக்கு நடக்கவிருந்த சுபகாரிய நிகழ்வுகள் குரு பார்வையால் சிறப்பாக நடந்தேறும். அவர்களின் கல்வி அல்லது மேற்படிப்பு போன்றவற்றில் நற்பலன்கள் உண்டாகும். அவர்களிடையே நல்ல மாற்றங்களும் காணப்படும். பிள்ளைகளைப் பற்றிய கவலை மாறும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமண முயற்சிகளைக் கைகூடவைப்பார். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் அன்யோன்யமும் பலப்படும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த தம்பதிகள் இனி ஒன்றுசேரலாம். உபதொழில் சிறப்பாக இயங்கும். படித்துக்கொண்டு பகுதி நேர வேலைக்கும் முயற்சி செய்தவர்களுக்கு வேலை அமையும். வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு முயற்சிகள் சித்தியாகும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார்; ராசியைப் பார்க்கிறார். அது சிறப்பு. லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பொருளாதாரத்தை உயர்த்துவார். 2-க்குரிய குரு இந்த மாதம் 4-ஆம் தேதி 9-ல் இருந்து 10-ஆமிடத்துக்கு மாறுகிறார். 10-ல் குரு வந்தால் பதவி மாற்றம் என்பது வழக்கம். தன லாபாதிபதி 10-க்கு வரும்பொழுது தனவரவு அதிகரிக்கும். அவர் 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். 2-க்குடைய குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். ஒருசில விஷயங்களில் செலவுகள் அதிகமாகத் தோன்றினாலும், உங்களது சாதுர்யமான பேச்சாலும் சமயோசித புத்தியாலும் அதை சமாளித்துவிடுவீர்கள். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வீடு, மனை போன்றவற்றில் யோகமான பலன்களைத் தருவார். வீடு வாங்கும் யோகம் அல்லது வீடு கட்டும் முயற்சிகள் கைகூடிவரும். புதிய வாகனம் வாங்கலாம். 6-ஆமிடத்தை குரு பார்க்கிறார். எனவே ஒருபுறம் சத்ருக்களையும் சமாளிக்க வேண்டியது வரும். நோய்நொடிகளைச் சந்தித்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் வராது. 6-ல் உள்ள ராகு அவற்றை நிவர்த்தி செய்வார். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மீனம்
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்து உங்களைப் பாடாய்ப்படுத்திய குரு பகவான் இந்த மாதம் 4-ஆம் தேதி 9-ஆம் இடத்துக்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனே ராசியைப் பார்த்த பெருமை வந்துசேரும். தொய்வாகவும் துவண்டுபோயும் தோல்வியையும் சந்தித்து வாடி வதங்கியிருக்கும் உங்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி புது எனர்ஜியைத் தரும். தொய்வையும் தோல்வியையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காணலாம். உடன்பிறப்புகளும் உடனிருந்தவர்களும் உங்களைக் கைவிட்டு ஒதுக்கியவர்களும் இனி ஆச்சரியப்படுமளவு உங்களின் வளர்ச்சி அமையும். ஜென்ம ராசி, 3-ஆமிடம், 5-ஆமிடங்களை குரு பார்க்கிறார். உங்களது திறமை, புகழ் மேம்படும். சகோதர வகையில் நற்பலன்கள் நடக்கும். தொழில்துறையில் சாதிப்பதற்கு தைரியமான திட்டங்களை செயல்படுத்தலாம். பிள்ளைகளால் சங்கடங்களைச் சந்தித்திருந் தாலும் அவை மாறி நன்மதிப்பும் பாராட்டும் உண்டாகும். இதெல்லாம் சாத்தியமா என்றால் ராசிநாதன் ராசியைப் பார்க்கும் பலம் இவற்றை சாத்தியப்படுத்தும். திருமணமாகி வாரிசு இல்லாதவர்களுக்கு இனி வாரிசு யோகம் அமையும். சிலர் பணி மாறலாம். அல்லது பணியில் இடம் மாறலாம்.