1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் தொழில் முன்னேற்றம் மாதப் பிற்பகுதியில் பளிச்சிடும். முற்பகுதியில் ஒருவித அந்திநேரத் தன்மையைக் கொடுக்கும். எதிலும் ஒரு தெளிவு கிடைக்காது. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மாத முற்பகுதியில் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கலாம். இந்த மாதம் உங்களின் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை வேகமாக இருக்கும். உங்கள் இளைய சகோதரிவழியில் ஒரு எதிர்மறைச் செய்தி காதில் விழும். உங்களிடம் பணிபுரியும் உயர்நிலைப் பெண் ஊழியர்கள் உங்களுக்கு ஏதோவொரு துன்பம் தரக்கூடும். இளம்பெண்களிடம் பழகும்போது கவனம் தேவை. மனை வாங்குவது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆட்களை சந்திப்பீர்கள். உங்களில் சிலரது காதல் விஷயங்கள் அவமானம் தேடித்தரும். மிக லாபம் தருமென்று வாங்கிப்போட்ட பங்குகள் காலை வாரிவிடக்கூடும். உங்கள் வாரிசுகள் அல்லது அவர்களது வேலையினால் மனக் கலக்கம் அடைவீர்கள். எதிரிகளிடம் அதிகமாக வம்பு வைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களின் நிலை பலமாகவும், உங்களது நிலை சற்று பலமற்றும் இருக்கும் காலகட்டம். உங்களின் பெற்றோர் திருமண விஷயமாக அலைவார்கள். திருமணமான தம்பதிகள் சற்று முரண்டு பிடிக்கக்கூடும். பூர்வீக சொத்து விற்பனை அல்லது வீடு மாற்றம் என ஏதோவொரு வில்லங்கம் வரும் வாய்ப்புள்ளது. சிலர் கோவிலுக்குப் போய் குதர்க்க அறிவுடன் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்மறைத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். திரைத்துறையினர் ரகசிய சன்மானம் நிறைய பெறுவர். சிலருக்குத் தாறுமாறான யோசனைகள் வந்துபோகும். மாதத்தின் இறுதி வாரத்தில் பெற்றோர்மீது சற்று மனத் தாங்கல் வரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: இந்த மாதம் அரசியல், அரசு அதிகாரிகளிடம் கையூட்டு விஷயத்தில் கவனமாக இருக்கவும். விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது நன்மை தரும். முதியோர் இல்லங்களுக்கு மின்சார பல்ப் வாங்கித் தரவும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாத முற்பகுதியில் தொழில் தொடங்கவும் அல்லது தொழில் வளர்ச்சியின் பொருட்டும் பணத்திற்கு சற்று அல்லல் படக்கூடும். மாதப் பிற்பகுதியில் இஸ்லாமிய அன்பர் ஒருவர் உங்களுக்குப் பணம்கொடுத்து உதவுவார். அதில் தொழில் வளர்ச்சியும், எண்ணம் ஈடேறுவதையும் காண்பீர்கள். வேற்றினத் தொழிலாளர்கள் தொழிலில் கைகொடுத்து உதவுவர். ஊடகத்துறை சார்ந்தவர்கள் அலைச்சலும் வளர்ச்சியும் காண்பர். இளைய சகோதரர் தொழில் பொருட்டு வேறிடம் செல்வார். உங்களது தாயார், மூத்த சகோதரிமூலம் ஒரு அதிர்ஷ்டத்தை அடைவீர்கள். சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவீர்கள். விவசாயிகள் மாதப் பிற்பகுதியில் நன்மை காண்பர். வாரிசுகள் மாத முற்பகுதியில் இம்சையும், பிற்பகுதியில் இன்பமும் தருவர். பங்கு வர்த்தகத்தை மாதத்தின் முதல் 15 நாட்களுக்குத் தவிர்ப்பது நல்லது. அதே போல ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களது வியாபார பங்குதாரர், வாழ்க்கைத் துணை போன்றவர்கள் பலமாக- உறுதியாக இருப்பார்கள். சில நேரங்களில் நீங்கள் சற்று தாழ்ந்து நடக்கவேண்டி வரலாம். சிலர் வாழ்க்கைத் துணையிடம் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். இந்த தேதிகளில் பிறந்த வர்களுக்கு இந்த மாதம் பதவி உயர்வு நிச்சயம். கலைத்துறையினர் மாதப் பிற்பகுதியில் நல்ல மேன்மை காண்பார்கள். இந்த மாதம் முதலீடும் அலைச்சலும் உண்டு. சிலரது கணக்கில் வராத தொகை, உங்கள் வாழ்வு வளர்ச்சியில் கைகொடுக்கும். சில தொழிலாளர்கள் தற்போது வேலை பார்த்துவரும் நிறுவனத்தைவிட்டு வேறிடம் செல்வார்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: உங்கள் வியாபாரம், தொழிலில் அரசுசார்ந்த ஒரு இறுக்கம் ஏற்படும். உங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு டார்ச் லைட் வாங்கிக்கொடுங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களில் சிலருக்கு வீடு வாங்கும் யோகம் கூடிவரும். அதிலும் வீட்டுக் கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். வீடு வாடகைக்கு விடுவோருக்கு இதுவரை வாடகைதாரர்கள் கிடைக்கவில்லையெனில், இப்போது உடனே குடிவருவார்கள். கல்விக்கடன், கிணறு வெட்ட கடன் என எல்லாம் எளிதாகக் கிடைக்கும். பதவி உயர்வுண்டு. உங்களது மூத்த சகோதரி வீடு வாங்குவார். நீங்கள் வேலை விஷயமாக வாகனம் வாங்குவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். இளைய சகோதரரால் செலவுண்டு. இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தையின் அதீத மேன்மை, அரசு சார்ந்த நன்மைகள் வெளியே தெரியாமல் போய்விடும். சிலருக்கு பிற மதத்தினருடன் காதல் திருமணம் நடக்கும். தந்தையின் நடவடிக்கையில் கவனம் தேவை. அவரது உடல்நலனை கண்காணிக்கவும். வேலை தேடுவோருக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும். கலைத்தொழில் புரிவோர் தங்களின் அபரிமிதமான வருமானத்தால் வீடு வாங்குவர். தொழில் மேன்மைக்கு அரசு சார்பில் கையூட்டு கொடுக்கவேண்டி வரும். அரசு அதிகாரிகள் மிகவும் மறைவாக பரிசு வாங்கவேண்டி வரும். சிலருக்கு மருமகள் வருவாள். எண்ணிய எண்ணம் எல்லாம் எதிர்மறை வழியில் ஈடேறும். பணியாளர்கள் வழியில் ஆரோக்கியத்திற்கு செலவு செய்யவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் உங்கள் வாரிசுகளின் கல்வியின் பொருட்டு இட மாற்றமும், தந்தையின் வேலை நிலையாகுதலும், உங்களில் சிலர் பழைய வேலைக்கு செல்லுதலும் நடக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் வேகம் காண்பர். சிலர் வீடு மாறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: உங்களது பூர்வீக இடத்தில் அரசுசார்ந்த வில்லங்கம் ஏற்படும். குலதெய்வக் கோவிலுக்குத் தேவையறிந்து விளக்கு வாங்கிக்கொடுக்கவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு;
கல்வி விஷயங்களில் அரசு ஆணை, அரசு அதிகாரிகள்மூலம் குழப்பமும் திகைப்பும் ஏற்படும். மாத முற்பகுதியில் உங்கள் உடலுக்கு என்ன நோய், எவ்வித சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படும். மாதப் பிற்பகுதியில் உடலுக்கு எதுவுமில்லை; நன்றாக இருக்கிறீர்கள் என்று சொல்லிவிடுவர். இதன்மூலம் செலவு ஒன்றுக்கு இரண்டு மடங்காகிவிடும். வீடு முதலீடுகள் மறைமுகத் தன்மை கொண்டிருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றிபெறும். ஆன்மிக யாத்திரை செல்லும் வாய்ப்புண்டு. இந்த மாதம் உங்கள் யோசனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை எதிர்மறையாகச் செயல்படும். உங்களுடன் பணிபுரிவோர் இதனைக்கண்டு மிரண்டுவிடுவார்கள். உங்கள் பெற்றோர் உடல்நலன், மன நலன் மாதப் பிற்பகுதியில் சீரடையும். வேறு மத ஆட்களுடன் சிலருக்கு காதல் துளிர்க்கும். உங்கள் பங்குதாரர், எளிதாகப் பணம் சம்பாதிப்பது எப்படி என பாடம் நடத்துவார். கலைத் தொழில்புரிபவர்கள் எதிர்மறை- நேர்மறை என எல்லாவகையிலும் பணம் ஈட்டுவர். திரைப்பட சம்பந்தம் கொண்டவர்கள் நாடுவிட்டு நாடு- கண்டம்விட்டுக் கண்டம் சென்று செல்வம் சேகரிப்பர். சிலருக்குத் திருமணம் நடக்கும்; அது நடக்கும் வழி மாறுபாடானதாக இருக்கும். சட்டம், ஆடிட்டர், ஜோதிடர்கள் மிகப் புதுமையான வழியில் பணிசெய்வர். சிலருக்கு மதுப்பழக்கம் அதிகரிக்கும். வீட்டு மனை விற்பனை தடைப்பட்டுக் கொண்டிருந்தால், இப்போது எளிதாக விற்றுவிடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25 .
பரிகாரம்: உங்களது ஆரோக்கியம், தந்தை, அரசு விஷயங்களில் சட்டென்று ஒரு முடிவெடுக்க வேண்டாம். நான்கு பேரிடம் விசாரித்து மாதப் பிற்பகுதியில் தீர்மானம் செய்யவும். பிற மத, இன வழிபாட்டுத் தலங்களில் வெளிச்சம் சம்பந்தமான உதவிகள் செய்யவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடுவீர்கள்; குட்டியைத் தூக்கி ஆட்டில் போடுவீர்கள். ஜகஜ்ஜால கில்லாடி ஆகிவிடுவீர்கள். ஏன், "ரஷ்யா- உக்ரைன் போரை இந்த நிமிடம் நிறுத்துகிறேன் பார்' என சவால் விடுவீர்கள். உங்களில் சிலர் சொன்ன இத்தகைய நம்பமுடியாத சொற்கள், இட்டுக்கட்டிய புனைவுகள் எல்லாம் மெய்யாகிவிடும். அதைப்பார்த்து உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மிரண்டு போய்விடுவர். அதுமட்டுமா- இந்த மாதம் மற்றவர்கள் அரசு விஷயத்தில் அல்லாடிக்கொண்டிருக்க, நீங்களோ அரசுக்கே பட்டைநாமம் சாற்றிவிடுவீர்கள் என்றால் பாருங்களேன்! மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் நேர்மறையான செல்வச் செழிப்பும், கடைசி வாரத்தில் எதிர்மறையான பணவரவும் கொழிக்கும். பக்கத்து வீடு, எதிர் வீட்டு வேலையாட்களை வைத்து வேலை வாங்கிவிடுவீர்கள். வாழ்க்கைத்துணையின் வேலை, தொழிலுக்கு ஒரு ஏற்பாடு செய்துவிடுவீர்கள். உங்கள் தந்தையின் பெயரிலுள்ள வீட்டை உங்கள் பெயருக்கு சாமர்த்தியமாக மாற்றிவிடுவீர்கள். இதுபோன்ற வேலைகள் செய்வதால் சிலருக்கு சற்று பிரஷர் ஏறும். சிலருக்கு புதுமையான முறையில் திருமணம் நடக்கும். அரசுசார்ந்த எதிர்பாராத யோகம் கிட்டும். வாழ்க்கைத்துணையின் ஊதியம் உயரும். வேண்டாத- விரும்பாத வேலை மாறுதல் தடுக்கப்படும். அதிர்ஷ்டமான மனைவி வரும் வாய்ப்புண்டு. திருமணமானவர்களுக்கு மனைவியுடன் சிறு பிணக்கு வரக்கூடும். உங்கள்மீது அதிருப்திகொண்ட மாமியார் ஏதாவது ஒரு வில்லங்கத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விடுவார். மாமியாரிடம் கவனமாக இருக்கவும். உங்களது அதீத புத்திசாலித் தனம் மாதக்கடைசியில் பிரச்சினைகளை உருவாக்கலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: உங்களது சாமர்த்தியத்தால் அரசு அதிகாரிகளையே ஆட்டம்காண வைத்துவிடுவீர்கள். கல்வி நிலையங்களுக்கு மின்விளக்குகள் வாங்கித் தரவும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களுக்கு எதிர்பாராத வகையில் இன்ப அதிர்ச்சியாக ஒரு நல்ல வேலை கிடைக்கும். அருமையான பெண் பணியாளர்கள் அமைவார்கள். இளைய சகோதரர் சிறு நெருடல் தருவார். காதல் திருமணம் கைகூடும். இப்போது நடக்கும் திருமணத்தில் அரசியல் வாதிகளின் சம்பந்தமிருக்கும். சிலர் நல்ல அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறுவர். வீட்டுக்கு நன்றாக வாடகை வசூல் செய்யமுடியும். தொலைக்காட்சி, வானொலி, ஊடகத்துறையினர் நல்ல மாறுதலும் மேன்மையும் பெறுவர். சிலர் மிக வசதியான- அழகான கைபேசி வாங்குவீர்கள். திருமணமான தம்பதியர் வேண்டாத விஷயங்களுக்கு கருத்து மாறுபாடு கொள்வர். மாதப் பிற்பகுதியில் உங்கள் தந்தை அல்லது மூத்த சகோதரர்வழியில் சற்று மன வேறுபாடு ஏற்படும். பதவி உயர்வு, "வரும்- ஆனா வராது' என்னும் கதையில் அலைக்கழிக்கப்படுவீர்கள். ஆன்மிகப் பயணம் செல்லலாம் என்று புறப்பட்டு, பொழுதுபோக்கு இடங்களைப் பார்த்து அனுபவித்துவிட்டு வருவீர்கள். உங்கள் மருமகனுக்கும் உங்களுக்குமிடையே பனிப்போர் நடக்கும். சமையல் செய்யும்போது கவனம் தேவை. பயணங்களில் வில்லங்கம் வரக்கூடும். உங்களுக்கு வரவேண்டிய கடன் தொகை வசூலாகும். மிகத் தெரிந்தவர் பங்குதாரராகக் கிடைப்பார். முன்பு களவுபோன பொருள் ஒன்று இப்போது திரும்பக் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தவர் தகுதியிழப்பு பெற்று விலகுவார். எதிர்மறைப் பணவரவால் இதுவரை இருந்த கடன்கள் அடைபட்டுவிடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: இந்த மாதம் அரசு அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம். சமையல் கலைஞர்களுக்கு சிறு டார்ச் லைட் வாங்கிக்கொடுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்தத் தேதிகளில் பிறந்த பெண்கள் வேலையில் மேன்மை பெறுவர். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அந்தக் கடன் சுபக் கடனாக- சுபச் செலவுக்கு அமையும். பெரும்பாலும் திருமண செலவுக்கு சற்று கடன் வாங்குவீர்கள். சிலருக்கு காது பிரச்சினை தரும். பழைய வீட்டை வாங்க திட்டமிடுவீர்கள். சிலரது வாழ்க்கைத் துணை கலைத்துறையில் காலடி எடுத்துவைப்பார். மனை சம்பந்தமான தொழிலதிபர்கள் மேன்மை பெறுவர். ஆன்மிகவாதியான மனைவி அமைவார். மனைவிக்கும் உங்கள் தந்தைக்குமிடையே கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. அலுவலகத்தில் உங்கள் யோசனைகள் நிராகரிக்கப்படும். வேற்று மத போதனைகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். ரகசிய அலைச்சல் அதிகமாகும். எதிர்மறை விஷயங்களுக்கு அதிக செலவு செய்வீர்கள். குற்றப் பின்னணி கொண்டோருடன் தொடர்பும் சேர்க்கையும் சிலருக்கு அதிகமாகும். இதனால் இவர்களும் குடும்பத்தாரும் சற்று பதட்டத்தில் இருக்க நேரிடும். அசைவ சமையல் கலைஞர்கள் அதிக வாய்ப்பு பெறுவர். தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவி கிடைக்க தாமதம் ஏற்படும். உங்களில் சிலருக்கு உங்களது ரகசிய- மறைவான வீடு விஷயங்கள் மனைவிக்குத் தெரியும் வாய்ப்புண்டு. இதனால் குடும்பத்தினரின் அவச்சொல்லுக்கு ஆளாகக் கூடும்; குடும்பத்தினரின் நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: அரசுசார்ந்த ஒருவரால் குடும்ப வாழ்வில் குழப்பம் ஏற்படும். மனக் கட்டுப்பாடு அவசியம். புதிதாகத் திருமணமானவர்களுக்கு விளக்கு வாங்கிப் பரிசாக அளிக்கவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் மனை லாபமுண்டு. புதிய வேலையாட்கள் அகன்று பழைய பணியாளர்கள் வேலைக்குச் சேர்வர். கலைஞர்கள் புகழும் புதிய வாய்ப்பும் பெறுவர்; தங்கள் துறையில் முக்கியத்துவம் பெறுவர். கலைத்துறை, தொலைக்காட்சி, வானொலி, ஊடகத்துறை, செய்தி, பத்திரிகைத் துறை என இவற்றில் பலர் வாய்ப்பு கிடைத்து வாழ்வில் ஏற்றம் பெறுவர். சிலசமயம் அரசு பட்டா இல்லாத மனையை வாங்கி பின்னர் சரிப்படுத்துவீர்கள். பெற்றோர் நலனில் கவனம் தேவை. வேலையில் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். பூர்வீக நிலத்தைக் குத்தகைக்கு விடுவீர்கள். குழந்தைகள் கல்வி சம்பந்தமாக வீடு மாற்றும் நிலை ஏற்படும். உங்களில் சிலருக்கு உஷ்ணம் சார்ந்த நோய்த் தாக்கம் ஏற்படக்கூடும். சிலர் அரசு டாஸ்மாக் பக்கம் அவ்வப்போது ஒதுங்குவீர்கள். வீட்டில் பழுதுபார்க்கும் செலவு ஏற்படும். வேற்றினத்தவரால் சில பொருட்கள் களவு போகக்கூடும். பயணங்களில் அடிபடும் வாய்ப்பு அல்லது அரசு அதிகாரிகளால் மிரட்டப்படும் சூழல் சிலருக்கு உருவாகும். உங்கள் தொழில் விருத்தி, முன்னேற்றம் பற்றிய குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களில் சிலர் தொழில் விரிவாக்கத்துக்கு கைபேசியைப் பயன்படுத்துவீர்கள். சிலர் கைபேசிமூலம் தொழிலை- உங்கள் சிந்தனை, செயல்களைப் பிரபலப்படுத்துவீர்கள். சமையல் கலைஞர்கள் பலர் குடும்பம் சார்ந்த சமையலில் ஈடுபட்டு பணம் பெருகக் காண்பீர்கள். உங்கள் மூத்த சகோதரர் வீடு விற்பனை செய்வார். இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உங்களது இளைய சகோதரி வேறிடம் செல்வார். சிலருக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கும். குத்தகை, கான்ட்ராக்ட் தொழிலுடையவர்கள் மிக மேன்மை பெறுவர். உங்கள் குழந்தைகளை டியூஷன் வகுப்பில் சேர்த்துவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: மனை, வீடு, வாகனம் வாங்கும்போது அரசு பட்டா, சிட்டா பத்திரங்களில் கூடுதல் கவனம் தேவை. படிக்கும் வசதியற்ற குழந்தைகளுக்கு எமர்ஜென்சி விளக்கு வாங்கிக்கொடுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களுக்கு வேலை கிடைக்கும். அதில் அயல்நாடு அல்லது வேற்றின சம்பந்தமிருக் கும். பணவரவு அதிகமாகுமளவுக்கு, பகட் டான கௌரவ செலவுகளும் அதிகமாகும். வீட்டில் சுபச்செலவுகள் வரும். திருமணம், பேரக் குழந்தைகளின் விசேஷம், பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவது என மகிழ்ச்சியான செலவுண்டு. பணியாளர்களிடம் கவனம் தேவை. பூர்வீக மனை விற்பனை சம்பந்தமாக சற்று குழப்பம் ஏற்படும். அரசு வேலை கிடைக்கும்போது தடை ஏற்படும் அல்லது அதிகமாக லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கும். உங்கள் வீட்டுத் திருமண வைபவத்தில் பட்ஜெட் மீறி செலவாகும். சிலரின் மனைவிக்கு வெளிநாடு செல்லும் யோகமுண்டு. சிலர் வியாபார விஷயமாக வெளிநாடு செல்வர். எதிர்பாராத வெளியூர்ப் பயணமுண்டு. அதுபோல் பதவி உயர்வும் திடீரென்று கிடைக்கும். ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். புதிய தொழிலில் முதலீடு செய்வீர்கள். நல்ல கட்டில், மெத்தை வாங்குவீர்கள். சிலர் படுக்கையறையை நவீனமாக மாற்றுவீர்கள். தங்க, வைர நகைகள் வாங்குவீர்கள். மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத ஒரு நன்மை கிடைக்கும். அது மனை, வயல், சீருடைப்பணி சம்பந்தம் கொண்டதாக அமையும். உங்கள்மீதிருந்த அவமானமான குற்றச்சாட்டு மறையும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: பூர்வீக நிலம், ஆரோக்கியம், வாரிசு, கர்ப்பம் என இவை சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. குழந்தைநல மருத்துவமனைக்கு டியூப் லைட் அல்லது இரவு நேர விளக்குகளைத் தேவையறிந்து வாங்கிக்கொடுங்கள்.
செல்: 94449 61845