1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தில் முதலிரண்டு வாரங்கள் மனம் முழுக்க யோசனைகளும் திட்டங்களும் நிறைந்திருக்கும். இந்த யோசனை நடைமுறைக்கு சரியாக வருமாவென மிகவும் குழம்பிவிடுவீர்கள். மனம் நிலையற்ற தன்மையில் இருக்கும். இந்த சமயத்தில் உங்கள் தந்தை, சகோதரர், காவல்துறை நண்பர் என ஒருவர்மூலம் ஆலோசனை கிடைக்கும். பண விவகாரம், குழந்தைகள், ஆரோக்கியம், காதல், பங்குப்பத்திரம், ஊழியர்கள் என இவற்றில் ஏதாவதொன்று அல்லது பல விஷயங்களால் திணறிப்போக நேரலாம். முதலிரண்டு வாரங்கள் கடந்தபின்னர் வாழ்வுநிலை தெளிவடையும். அறிவு பிரகாசிக்கும். திட்டங்கள் சீராகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு விற்பனை அல்லது பழுது விஷயங்கள் ஒரு நிலைப்படும். மாதப் பிற்பகுதியில் திருமண ஏற்பாடுகள் வேகமாகும். வேலைகாரணமாகப் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேர்வார்கள். இந்த மாதம் முழுவதும் சற்று பணத்தட்டுப்பாடு தெரிவதால், சிறிது கடன்வாங்க நேரலாம். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சிலருக்கு வேலை கிடைக்கும் அல்லது உங்கள் தொழிலைப் புதுவித யுக்தியுடன் நடத்தி வெற்றிபெறுவீர்கள். பெண்கள் சிலர் மாதப் பிற்பகுதியில் அரசியல் ஜோதியில் ஐக்கியமாகலாம். அரசு வேலைவாய்ப்பு வரும். அரசியலில் ஊழியராக, தொண்டராகப் பணிகிடைத்து, நல்ல வெகுமதியும் நான்குபேர் பழக்கமும் கிட்டும். காவல்துறையினர் இதுவரை சந்திக்காத புதுமையான வழக்குகளை எதிர்கொள்ள நேரும். கிணற்றைக் காணோம், வயலைக் காணோம் போன்ற புகார்களுக்கு பதில்சொல்ல வேண்டியிருக்கும். கலைஞர்களுக்கு நன்மை- தீமை கலந்தே கிடைக்கும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் யோசிக்கவே நேரம் சரியாக இருக்கும். மாணவர்கள் புதிய யுக்தியைக் கையாள்வார்கள். மாதப் பிற்பகுதியில் விவசாயிகள் நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: எப்போதுமே நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் சிவபெருமான். இந்த மாதம் யாகம்செய்யும் அந்தணர்கள் அல்லது முதியோர் இல்லத்திற்கு ஆடை வாங்கிக்கொடுங்கள். குழப்பம் தெளிவாகும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் சக மனிதர்களை சந்தித்துக்கொண்டே இருப்பீர்கள். திருமணத்திற்குக் காத்துக்கொண்டிருப்பவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையைச் சந்திப்பார்கள். அரசியல்வாதிகள் ஓயாமல் பயண சந்திப்புகளைப் பெறுவர். பத்திரிகை, டி.வி, சினிமா சார்ந்தோர் நிறைய பெண் அரசியல்வாதிகளைப் பேட்டிகாண்பர். பெண் அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி சார்ந்தவர்களையும், தாங்கள் தாவப்போகும் கட்சியில் உள்ளவர்களையும் நலம் விசாரிப்பர். வீடு, மனை, வாகனம் சம்பந்தமாக விசாரணை செய்வீர்கள். சில தம்பதியர் பிணக்கத்தை இணக்கமாக மாற்றும் முயற்சியை மேற்கொள்வார்கள். உடல்நிலை குறித்த மருத்துவ அறிவுரை பெறுவீர்கள். சில தம்பதியர் விவாகரத்து கிடைக்குமா என வழக்கறிஞரை அணுகுவார்கள். இளைய சகோதரர் திருமணம் சம்பந்தமாக அலைச்சல் ஏற்படும். வீடு மாற்ற தரகர் பின்னால் அலையக்கூடும். வியாபாரிகள் தங்கள் கொள்முதல் மற்றும் கணக்கு விஷயமாக அதற்குரியவர்களை அணுகுவார்கள். விவசாயிகள் முதலிரண்டு வாரங்கள் தங்கள் சொந்த இடத்திலும், கடைசி இரண்டு வாரங்கள் வேற்றின- மத ஆட்களுடனும் பழக நேரிடும். சிலரது குடும்பம் அரசு ஆணையால் வேற்றிடம் செல்லலாம். வீடு மற்றும் தரகுவேலை செய்பவர்கள் நிறைய சந்திப்புகள் கிடைக்கப்பெறுவர். ரியல் எஸ்டேட் மற்றும் கலை சார்ந்த பிரிவினர் அரசு வகையறாக் களிடம் விண்ணப்பம் தர நேரும். சில எதிரிகளை நேருக்கு நேர் பார்க்கநேரும். அதுபோல் குடும்பத்தில் நீண்ட நாட்கள் பேசாமல் விட்டுப்போயிருந்த சொந்தங்களைத் தற்செயலாக சந்திக்க நேரும். அவர்களோடு கைகுலுக்கவோ கைகலக்கவோ என ஏதோவொன்று நிகழ வாய்ப்புண்டு. வரன் பார்க்கும் படலம் உண்டு. மொத்தத்தில் இந்த பிப்ரவரி மாதம் சந்திப்பு மாதம் எனலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: எல்லா எண்களுமே.
எச்சரிக்கை எண்கள்: எல்லா எண்களுமே.
பரிகாரம்: நீங்கள் எப்போதும் வணங்கவேண்டிய தெய்வம் திருப்பதி வேங்கடாசலபதி. உங்கள் தினசரி வாழ்வில் சந்திப்பவர்களுக்கு உண்ண- அருந்த ஏதாவது கொடுங்கள்; அதுவே போதும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் பேச்சில் கவனம் தேவை. மாத முற்பகுதியில் தந்தையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இந்த மாதம் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். அது உங்கள் பணம் அல்லது அடுத்தவர் பணம், கடன் வாங்கிய காசு, அரசியல்வாதிகளை அண்டியதால் அள்ளிய ஆதாயம், அரசு இலவசவகை பணம், பங்குதாரர்களின் பங்கு, வாழ்க்கைத்துணைவழி வரவு, பஞ்சாயத்து செய்ததால் கிட்டிய பணம், தொழிலில் வந்த தொகை, வேலையில் கிடைத்த சம்பள உயர்வு என எல்லா வகையிலும் பணவரவு உங்களுக்குதான்! ஆனாலும் ஏனோ ஒரு நிறைவின்மை இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் பேசியதைப் பிறர் காட்டிக்கொடுத்து விடுவார்களோ என்றோ அல்லது அடுத்தவர் பணத்தை எப்படித் திரும்பக் கொடுக்கப்போகிறோம் என்றோ, கடனை அடைக்கமுடியுமா என்றோ இதுபோன்ற கவலைகள் ஏற்படக்கூடும். ஆனால் நீங்கள் எதற்கும் கலங்காதவராகக் காட்டிக்கொண்டு வலம்வருவீர்கள். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு அரசு, அரசுசார்ந்த வேலை, அரசியல்வாதிகளிடம் பணிபுரிதல், பெண் அரசியல்வாதிகளிடம் சேவைசெய்தல் என்பதுபோன்ற வேலைகள் கிடைக்கும். அதில் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிவீர்கள். சிலர் அரசியலில் பதவி கிடைக்க கடும் முயற்சி செய்வீர்கள். சில பெண் அரசியல் வாதிகள் உங்களுக்கு உதவக்கூடும் அல்லது இந்த எண் பெண்கள் அரசியலில் பெரும் முயற்சி செய்து பதவிக்கு "டோக்கன்' வாங்கிவிடுவர். திருமண வாழ்வு நுனிக்கருப்பாக இருக்கும். விவசாயிகள் கடன் கிடைக்கப்பெறுவர். காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் வரலாம். சிலருக்கு வீட்டிலிருந்தே வெளிநாட்டுப் பணிசெய்யும் வாய்ப்பு வரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 2, 11, 20, 29.
பரிகாரம்: நீங்கள் எப்போதும் ஐயப்பனை வழிபடவும். உங்கள் உறவினர், நட்பு வட்டாரத்தில் பணத்தேவை உள்ளவர்களுக்கு நல்வழிகாட்டி உதவவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் ஏதோவொன்று அல்லது பல விஷயங்களுக்கு முயற்சி செய்துகொண்டே இருப்பீர்கள். இதுவரையில் முயன்ற சில விஷயங்கள் இந்த மாதம் பலிதமாகும். இதுவரை பெற்றோராகும் வகையில் மருத்துவப் பரிசீலனையில் இருந்தவர்களுக்கு இப்போது கரு உருவாகும் பாக்கியம் கிட்டும். பூர்வீகம், பங்கு சார்ந்த பணபலம் கிடைக்கும். திரைப்படம், தொலைக்காட்சியில் முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிலர் வேலை கிடைக்கப் பெறுவர். பிரிந்த தம்பதியர் மாதப் பிற்பகுதியில் ஒன்றுசேர்வர். ஒரு வேலையில் இருக்கும்போதே இன்னொரு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். ஒரு தொழில் அல்லது கடை நடத்திக்கொண்டிருந்தால் அதை மாற்றவோ விரிவுபடுத்தவோ முயற்சிப்பீர்கள். அரசியல் ஈடுபாடு நூறு சதவிகிதம் நற்பலன் தருமென்று கூறமுடியாது. காவல்துறையினருக்கு நல்ல வருமானம் கிட்டும். பழைய கடன் பாக்கிகளை மிகப் பிரயாசைப்பட்டு வசூலித்துவிடுவீர்கள். விவசாயிகள் மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் விரயத்தையும், அடுத்த இரு வாரங்கள் வரவையும் பெறுவர். திருமணப் பேச்சு அலைச்சலைத் தரும். இந்த எண்களில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரின் போக்குவரத்தில் சற்று சந்தேகம் கொள்ளும் நிலை ஏற்படும். மிகச் சிலருக்கு அரசுவேலை கிடைக்கும் அல்லது தொழில் சார்ந்த அரசுப் பணிகள் கிடைக்கும். சிலருக்கு உடல்நலம் சற்று பாதிக்கப்படலாம். முழங்கால் அல்லது வயிற்றில் வலி ஏற்படக்கூடும். உங்கள் தாயாருக்கும் மனைவிக்குமிடையே கௌரவப்போர் நடக்கலாம். மிகப் பழமையான கோவில் ஒன்றை தரிசிப்பீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு வேண்டிய விஷயங்களைத் தொடங்குவீர்கள். சிலரது மனை விற்பனையாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்டத்தை விரட்டிப்பிடிக்க முயற்சி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: எப்போதும் துர்க்கையை வணங்குங்கள். பிற மத- இனம் சார்ந்த கோவில்களுக்கு விளக்கு வசதி செய்து கொடுங்கள். அல்லது வெளிச்சம் தரும் வகையில் பரிகாரம் செய்யுங்கள்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த பிப்ரவரி மாதத்தில் நீங்கள் எண்ணியவையெல்லாம் ஈடேறும். திருமணம் நடந்துவிடும். மறுமணத்திற்கு நீண்டநாள் காத்திருந்தவர்களுக்கு இம்மாதம் நல்லபடியாக கூடிவரும். காதல் திருமணம் கைகூடும். கலைத்துறை ஈடுபாடு கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். உங்கள் தொழில் பற்றிய அறிவின் வீச்சு அதிகரிக்கும். அதனால் தொழில், வியாபாரத்தில் புதிய இலக்குகளை, புதுமையான பாதைகளை, மாறுபட்ட லட்சியத்தை அடைவீர்கள். மாத முற்பகுதியில் உங்கள் இளைய சகோதரரும் பணியாட்களும் முரண்டுபிடிப்பார்கள். சிலரது செல்போனில் உங்களைப் பற்றிய வேண்டாத செய்தி வரும்; கவனம் தேவை. வீடு பழுதுபார்க்கும் செலவு வரலாம். நீண்டநாட்களாக வீட்டிலிருந்தே வருமானம் பெறுவதற்குரிய யோசனை இம்மாதம் நிறைவேறும். சிலர் உங்கள் வாகனத்தை வாடகை நிறுவனத்துக்கு ஒப்பந்தம் பேசி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வாரிசுகளின் திருமணம் விஷயமாக அலைச்சலும் செலவும் இருக்கும். காவல்துறையினர் மாத முற்பகுதியில் திண்டாட்டத்தையும், பிற்பகுதியில் கொண்டாட்டத்தையும் அடைவர். விவசாயிகள் சிறிது சிரமத்திற்குப் பிறகு புதுவிதமான மாறுதலான உதவி கிடைக்கப்பெறுவார்கள். பெற்றோருக் கிடையே ஈகோ யுத்தம் ஏற்படலாம். உங்களில் சிலருக்கு அறிவார்ந்த வேலை கிடைக்கும். சிலர் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த வேலைவாய்ப்பையும் பதவி உயர்வையும் பெறுவர். பொழுதுபோக்கு விஷயங்கள் செலவைக் கூட்டும். கலைத்துறையினருக்கு வாய்ப்பும் அலைச்சலும் இருக்கும். பங்குப் பத்திரம் பலவகையான யோசனையைத் தரும். சற்று ஆலோசித்து முடிவெடுக்கவும். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிகபட்ச காதல் வாய்ப்புகள் வந்து திணறச் செய்யும். தயவுசெய்து அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவேண்டாம். இரண்டு மாதம் தள்ளிப் போடவும். தந்தை- மகனுக்கிடையே பிணக்கு வரலாம். குழந்தைகள் கல்வியில் நல்லபெயர் எடுப்பர். வாழ்க்கை மேன்மை பற்றிய நல்ல தகவல் ஒன்று கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: நீங்கள் எப்போதும் பெருமாளை வணங்கவேண்டும். வீடு பார்த்துத் தரும் தரகர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் வேலை, தொழில், கௌரவம் என ஏதோ ஒன்றின் பொருட்டு அலைந்துகொண்டே இருக்க நேரும். மாதத்தின் முதல் மூன்று வாரங்களும் வீடு, வாகனம், மனை, பூமி, வயல், தோட்டம், கிணறு, குடிநீர்க் குழாய், கழிவுநீர்க் குழாய், நீர்க்கருவிகள், கல்வி, கணினி, உங்கள் தாய் என இவ்வளவு வகையறாக்களும் சேர்ந்து உங்களுக்கு சற்று இன்னல் தரலாம். இதில் சிலருக்கு கடன் கொடுத்தவர்களும் சேர்ந்து நெருக்கடி தருவார்கள். கௌரவப் பிரச்சினை யின் பொருட்டு சற்று அல்லல்பட நேரும். மாதத்தின் இறுதி வாரம் இதற்கெல்லாம் நல்ல தீர்வு கிடைக்கும். சிலரது மூத்த சகோதரர் பிரச்சினை செய்வார். மாத நடுவில் தம்பதிகளுக்குள் பிணக்கு வர வாய்ப்புண்டு. அதற்கு பிற மத- இனத்தவர் காரணமாக இருப்பர். சொந்தங்களிடம் கவனம் தேவை. சில பிரிவுகளுக்கு, பிரச்சினைகளுக்கு உங்கள் வார்த்தைகள் காரணமாகக் கூடும். வயிறு அல்லது மார்பில் சிறிது வலி வந்து பின் சரியாகிவிடும். திருமணப் பேச்சு ஆரம்பித்து, பின் ஏதோ தடங்கலாகி நிற்கக்கூடும். அரசியல்வாதிகள் தேர்தலில் எங்கே நிற்பதென்று தெரியாமல் திண்டாடுவர். மேலும் சிலர் எந்த கட்சியில் சேர்வதென்னும் குழப்பமும் அடைவர். காவல்துறையினர் மாதத்தின் இறுதி இரண்டு வாரங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கல்வி சார்ந்த உபகரணங்களை மாற்றவேண்டி வரலாம். சிலரது கைபேசி பழுது நீக்கவேண்டி வரும். மாதப் பிற்பகுதியில் மருமகளைப் பற்றிய செய்தி கிடைக்கும். அரசு வேலையின் பொருட்டு அதற்குரிய விண்ணப்பம் சம்பந்தமான செயலில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: எப்போதும் நீங்கள் மகாலட்சுமியை வணங்குதல் நன்று. வீடு கட்டும் அல்லது சாலை பழுதுபார்க்கும் கடைநிலைத் தொழிலாளர்களுக்கு குளிர்பானம் அல்லது தூய்மையான குடிநீர் கிடைக்க உதவுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் அதிர்ஷ்டத்தேடல் இருந்துகொண்டே இருக்கும். மாத முற்பகுதியில் கடுமையான பணிச்சுமை, சற்று உடல் சோர்வு, எதிரிகளின் தொல்லை, கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி என ஒருவித எரிச்சல் இருக்கும். மாதப் பிற்பகுதியில் உங்கள் யோசனையாலும் மாறுபட்ட போக்கினாலும் சற்றே எதிர்மறைச் செயல்களுடன் போராடி உங்களை நிலைநாட்டிக் கொள்வீர்கள். உங்கள் திறமை கைபேசியின்மூலம் காசாகப் பரிமளிக்கும். இதில் கிடைக்கும் சிறிய வெற்றியையும் பெரிய அளவில் கொண்டுசேர்க்க முயற்சிப்பீர்கள். சில குழந்தைகள் இளைய சகோதரம் கிடைக்கப்பெறுவர். சிலரது இளைய சகோதரிக்குத் திருமணம் நடக்கும். உங்கள் வாரிசுகளின் வெற்றிச்செய்தி காதில் கேட்கும். கைபேசி அதிர்ஷ்டம் தரும். கலைத்துறையினர் சிறு தடங்கலுக்குப் பின்னர் நல்ல வாய்ப்பு, பணவரவு பெறுவர். வீடு மாற்றம் உண்டு. வாகனப் பரிமாற்றம் செய்வீர்கள். உங்களில் பலர் திருமணம் அல்லது வியாபார விஷயமாக வேறிடம் செல்வர். அரசு சார்ந்த வரி விஷயங்கள் செலவு தரும். சிலரது வாழ்க்கைத்துணைக்கு அரசு சார்ந்த வேலை அல்லது ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் நிலை சற்று கவலை தரும். இவர்களைப் பற்றிய தவறான செய்திகள் வெளியாகி பதட்டத்திற்கு உள்ளாக்கலாம். காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஊர்விட்டு ஊர்மாறிப் பணிபுரியும் நிலையுண்டு. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்கும் தொழில், வேலை, வீடு என எதிலும் ஊழியர்கள், தொழிலாளர்கள், வேலையாட்கள் நன்கு அமைந்தாலும், பணப் பிரச்சினையால் அவர்கள் தொல்லை தருவர். எனவே வேலையாட்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 11, 20, 29.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: நீங்கள் எப்போதும் விநாயகரை வணங்குவது சிறப்பு. விவசாயப் பெருமக்களுக்கு விதை, உரம் வாங்க இயன்ற உதவி செய்யவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் பிறரை சந்திக்கும், அளவளாவும், பேச்சுவார்த்தை நடத்தும், கலந்துரையாடும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாதமாக அமையும். சிலர் தங்கள் திருமணத்துணையைச் சந்திப்பார்கள். வியாபாரம், தொழிலில் பங்குதாரர்களுடன் அது சார்ந்த பேச்சுவார்த்தை நடக்கும். உங்கள் வேலையாட்கள் சிலர் நீங்கிவிடுவதால் புதியவர்களைத் தேர்ந்தெடுக்க பேட்டி காண்பீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்போர் நேர்காணலில் பங்கேற்பர். வேற்று மதத்தவரிடமிருந்து மனை, வீடு வாங்குவீர்கள். நீங்கள் எந்த நிலையுடையவராக இருப்பினும், அரசு தரும் சில தொந்தரவுகள் மாத முற்பகுதியில் சிரமப்படுத்தலாம். மாதப் பிற்பகுதியில் அரசுத்துறைக்கு, அரசு அதிகாரிக்கு செலுத்தவேண்டிய தொகையை நேரடியாகவோ மறைமுகமாகவோ செலுத்தியபின்னர் நிம்மதியாக இருக்கலாம். குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளால் கௌரவம் கூடும். குறிப்பாகப் பெண் பிள்ளைகள் மேன்மை தருவர். மருமகனுடன் ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்படும். வெளிநாட்டுப் பங்குப்பத்திரம் லாபம் தரும். கலைத்துறையினர் வேற்றுமொழியில் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத பணவரவுண்டு. அது விளையாட்டு, பொழுதுபோக்கு, போட்டி, கலை சார்ந்த வகையில் கிடைக்கும். அலைபேசி செய்திகளை நம்பி எதிலும் பணம் செலுத்தவேண்டாம். விரயமாகிவிடக்கூடும். விவசாயிகளில் சிலர் தங்கள் பூர்வீக வயலை வாங்கமுடியும். அரசியல்வாதிகள் தங்கள் சொந்தத் தொகுதியில் வேற்றின- வேற்றுமத மக்களை சந்தித்து கலந்துரையாடுவார்கள். நிறைய பெண்கள் அறிவுசார்ந்த வேலை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளிடம், அரசு அதிகாரிகளிடம் பழகும்போது மிக கவனமாக இருக்கவும். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு வேலை கிடைக்கும். தீய பழக்க- வழக்கங்களின் அருகில்கூட செல்லாதீர்கள். திருமணம் சம்பந்தமான செலவுகள் கூடும். திட்டமிட்டுச் செலவிடுங்கள். இந்த மாதம் வாய்ப்புகள் மட்டுமல்ல; செலவுகளும் வரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: எப்போதும் சக்கரத்தாழ்வாரை வணங்கவும். இந்த மாதம் நிறைய சந்திப்புகள் நடக்கும்போது, உடல்ரீதியாகவும் மனரீதியாக வும் ஆரோக்கியத்தைக் கடைப்பிடியுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் உங்கள் சொந்த வாழ்க்கை வசதிகளைப்பற்றியே நிறைய யோசிப்பீர்கள். திருமணம் நன்கு கூடிவரும் போது, வரப்போகும் வரனின் சொத்து, தொழில்பற்றி மிகவும் கவலைகொள்ள நேரும். சிலருக்கு வேலை கிடைக்கும். அப்போது வேலைச்சுமை அதிகமாக இருக்குமோ என்று கவலைப்படுவர். கலைத்துறை, பங்குவர்த்தகம், பொழுதுபோக்கு, விளையாட்டுத்துறை என ஏதோ ஒன்றில் ஈடுபடும் வாய்ப்புண்டு. ஆனால் அவற்றிலும் ஏதோவொரு யோசனை தோன்றும். தந்தையின் உடல்நிலை குறித்த கவலை ஏற்படலாம். இந்த மாதம் உங்களுக்கு வகைவகையான தொழில் செய்ய ஆசை தோன்றும். உபதொழில் ஆசை பலமாக இருக்கும். எதிலும் அதீத பற்றுக்கொண்டு செயல்படுவீர்கள். வெளிநாட்டுப் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சிலர் இப்போது செய்யும் தொழிலுடன் தொலைக்காட்சியிலும் தலைகாட்டலாம் என ஏக்கம் கொள்வர். சிலர் எங்காவது கௌரவப் பட்டம் மலிவாகக் கிடைக்குமா என்று தெரிந்து, நான்கைந்து படங்களாவது வாங்கி விடுவார்கள். அரசியல்வாதிகள் எல்லா இடங்களிலும் அலைந்து சேவை செய்வர். ஆனால் மனதிற்குள் இவையெல்லாம் ஓட்டாக மாறினால் போதும் என்ற பேரவா இருக்கும். சில அரசியல்வாதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையை அமைச்சர் பதவியில் அமர்த்த மிக சிரத்தை கொள்வார்கள். மாதப் பிற்பகுதியில் இதற்காக அயராது உழைத்து வெற்றியும் பெற்று விடுவார்கள். காவல் துறையினருக்கு பண வரவு அதிகரிக்கும். விவசாயிகள் நஷ்டத் தில் லாபம் காண்பர். சிலரது காதல் விஷயங்கள் திருமணத்தில் முடிந்து நல்ல லாபத்தையும் தரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். இந்த மாதம் வீடு, மனை விஷயமாக பெரும் முயற்சியும் சீரிய சிந்தனையும் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: எப்போதும் சுப்பிரமணியரை வணங்கவும். கல்வி சார்ந்த உதவிகள் செய்வது நன்று.