மேஷம்
இந்த மாதம் மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது சிறப்பு என்பது நீங்கள் அறிந்ததே! காரியசித்தி உண்டாகும். தடைப்பட்ட செயல்பாடுகள் பூர்த்தியாகும். 5-க்குடைய சூரியன் 7-ல் கேந்திரம் பெறுகிறார். கணவன்- மனைவிக்குள் சங்கடங்கள் தோன்றி னாலும் ஒற்றுமையில் பாதிப்பு ஏற்படாது. 17-ஆம் தேதிமுதல் சூரியன் 8-ல் மறைகிறார். தகப்பனார்வழியில் மனக்கசப்பு ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வில்லங்கம், விவகாரங்கள் உண்டாகும். என்றாலும் 13-ஆம் தேதிமுதல் 9-க்குடைய குரு 11-ல் மாறுகிறார். அது உங்களுக்கு ப்பெரிய ஆறுதலையும் தேறுதலையும் தரும். அவர் 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். உங்கள் திட்டங்களில் இருந்த நெருக்கடி நிலைமைகள் விலகும். 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் சகோதர சகாயம் உண்டாகும். நண்பர்களிடையே நட்புறவு மலரும். திருமண முயற்சிகள் கைகூடும். பழநிமலையில் போகர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைகிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே, ராசிநாதன் மறைந் தாலும் ராசியை குரு பார்ப்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. உங்கள் திறமைகள் வீண்போகாது. செயல்வேகமும் குறையாது. அவ்வப்போது மனதில் சில சந்தேகங்கள் தோன்றலாம். கற்பனை பயமும் உண்டாகலாம். குரு பார்வையால் அது நிவர்த்தியாகும். 13-ஆம் தேதிமுதல் குரு 10-ஆமிடத்துக்கு மாறுகிறார். 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். பொருளாதாரத் தடை விலகும். குடும்பத்தில் குழப்பம் அகலும். தேகநலன் நன்றாக இருக்கும். பூமி, வீடு சம்பந்தமான கட்டடப் பணிகள் செயல்படும். அதற்காகக் கடன் வாங்கும் முயற்சிகளும் கைகூடும். பாதியில் நின்றுபோன கட்டடப் பணிகள் மீண்டும் துவங்கி பூர்த்தியாகும். வீட்டுக்கடன் வாகனக்கடன் அமையும். செவலூர் பூமிநாதசுவாமி கோவில் சென்று வழிபடலாம்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் 3-க்குடைய சூரியனும் 11-க்குடைய செவ்வாயும் சேர்க்கை. புதன் 1, 4-க்குடையவர். கேந்திராதிபதி திரிகோணம் பெறுவது சிறப்புதான். பூர்வ புண்ணியவகையில் நன்மைகள் உண்டாகும். தாய்மாமன் ஒருவரால் உதவி, ஒத்தாசை ஏற்படும். 13-ஆம் தேதிமுதல் 8-ல் இருக்கும் குரு 9-ல் மாறுகி றார். "அகப்பட்டவனுக்கு அட்டமச்சனி; ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு' என்ற ஒரு பழமொழி உண்டு. இங்கு மிதுன ராசிக்கு அட்டமச்சனி நடந்தாலும், குரு 9-ல் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குரு 1-ஆமிடம், 3-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். எதிரி, போட்டி பொறாமை களை சமாளிக்கும் திறன் உண்டாகும். சுதர்சன சக்கரத் தாழ்வாரை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 7-ஆமிடம் மகரம் குருவுக்கு நீசவீடு என்றாலும் சனி அங்கு ஆட்சிபெற்றிருப்பதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் கிடைத்தது. அது ஒருசிலருக்கு நன்மைகளைக் கொடுத்தது; ஒரு சிலருக்கு கெடுதல்களையும் செய்தது என்பதையும் மறுக்கமுடியாது. இப்போது 8-ல் மறையும் குரு 10-ஆமிடம், 12-ஆமிடம் 2-ஆமிடங்களைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஊர்விட்டு ஊர் மாறுவதால் சில முன்னேற்றங்களும் உண்டாகும். ஏனெனில் 12-ஆமிடம் வெளியூர் வாசம், அலைச்சல் போன்றவற்றைக் குறிக்கும். 2-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தனவரவு, குடும்பத்தில் நிம்மதி போன்ற பலன்களும் உண்டாகும். 17-ஆம் தேதிமுதல் 2-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெறுவது ஒரு ப்ளஸ் பாயின்ட்தான். ஆன்மிக ஞானம், தந்தைவழி உபதேசம், தந்தை விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து நடத்துதல் போன்ற நன்மைகள் ஏற்படும். தென்குடித்திட்டை சென்று தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சிம்மம்
மாத முற்பகுதிவரை சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசமாக இருக்கிறார். அவருடன் 4-க்குடைய செவ்வாயும், 2-க்குடைய புதனும் இணைவு. பூமி, வீடு கட்டடப் பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். 13-ஆம் தேதிவரை குரு 6-ல் மறைவு. எனவே, எடுத்த காரியங்களைத் தொடர்ந்து முடிக்க முடியாமல் சிரமப்பட நேரிடும். 13-ஆம் தேதி 5-க்குடைய குரு 7-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். அது ஒரு ப்ளஸ் பாயின்ட். மடைதிறந்த வெள்ளம்போல தடைப்பட்ட- தாமதப்பட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். 17-ஆம் தேதிமுதல் சூரியன் நீசம் தெளிந்து 4-ஆமிடத்துக்கு மாறுகிறார். அது மேலும் ப்ளஸ் பாயின்ட். 7-ல் நிற்கும் குரு 11-ஆமிடம், ஜென்ம ராசி, 3-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு பெறும். வசதிவாய்ப்புகள் பெருகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தஞ்சை பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வர சுவாமியை வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 17-ஆம் தேதிவரை 2-ல் இருக்கிறார். 3-க்குடைய செவ்வாயும், 12-க்குடைய சூரியனும் சேர்க்கை. சகோதரவகையிலும் சகோதரிவகையிலும் அலைச்சல், திரிச்சல்கள் உண்டாகும். சுபவிரயச் செலவுகளும் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு சற்று ஆறுதலைத் தரும். திடீர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். 13-ஆம் தேதிமுதல் 4, 7-க்குடைய குரு 6-ல் மறைகிறார். கடன், நோய், எதிரி, வைத்தியச் செலவு போன்றவற்றை சந்திக்கும் நிலை ஏற்படும். கணவன் அல்லது மனைவிவழியில் சங்கடங்கள் உண்டாகும். குரு 2-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்க்கி றார். தனவரவு ஏற்படும் என்றாலும் செலவுக்கும் விரயத்திற்கும் குறை விருக்காது. சிலநேரம் வரவை மிஞ்சிய செலவு கள் மனதை வருத்தும். மயங்கவைக்கும். 10-ஆமி டத்தைப் பார்ப்பதால் தொழில் இயக்கம் தடைப் படாது; உத்தியோகமும் பாதிக்காது. லட்சுமி நாராயணரை வழிபட வும்.
துலாம்
இந்த மாத ஆரம்பத்தில் துலா ராசியில் சூரியன், செவ்வாய், புதன் சேர்க்கை. ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைவு. 3-க்குடைய குரு 4-ல் சனியுடன் சேர்க்கை. கேகநலனில் வைத்தியச் செலவு ஏற்படலாம். சகோதரவழியில் மனக்கிலேசம் ஏற்படும். 11-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நீசம். வியாபாரத்தில் மந்தப்போக்கு காணப்படும். 13-ஆம் தேதிமுதல் குரு 5-ல் மாறி ராசியைப் பார்க்கிறார். 9-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். ஆகவே, மேற்கண்ட பலன்களில் குரு மாறுதலுக்குப் பிறகு நன்மையும் யோகமும் உண்டாகும். தகப்பனார் வழியில் மகிழ்ச்சியும், பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக சாதகமான பலன்களும் நடைபெறும். வியாபாரம், தொழி-ல் புதிய அணுகுமுறைகளையும் கையாளலாம். உங்கள் பேச்சுக்குரிய மதிப்பும் கிடைக்கும்; பாராட்டும் பெறலாம். நவகிரகத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து சுண்டல்கடலை மாலைசாற்றி வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. அவருடன் 10-க்குடைய சூரியனும் 11-க்குடைய புதனும் மறைவு. மாத முற்பாதிவரை எதிலும் ஒரு திருப்தியற்ற நிலை உருவாகலாம். 2-க்குடைய குரு 3-ல் மறைவு. எனவே, பொருளாதாரத்திலும் ஒரு பற்றாக்குறை நிலை நிலவிவரும். என்றாலும் சனி 3-ல் ஆட்சிபெறுவதால் தைரியம், தன்னம்பிக்கை யுடன் எதிர்கொள்ளும் ஆற்றலும் திறனும் இருக்கும். 17-ஆம் தேதிமுதல் சூரியனும் புதனும் ஜென்ம ராசியில் சஞ்சாரம். 13-ஆம் தேதிமுதல் குரு 4-ல் மாறி 8-ஆமிடத்தையும், 10-ஆமிடத்தையும், 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். 10-ஆமிடத் தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் சில நேரங்களில் மனக்குழப்பமும் வேதனையும் கற்பனை பயமும் வரலாம். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வெளியூர் வாசத்தை ஏற்படுத்துவார். தட்சிணாமூர்த்திக்கு கல்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து அபிஷேக ஆராதனை செய்யலாம்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 2-ல் ஆட்சிபெற்ற சனியோடு கூடியிருக்கிறார். 9-க்குடைய சூரியனும் 10-க்குடைய புதனும் 11-ல் சேர்க்கை. அது தர்மகர்மாதிபதி யோகம். எனவே, ஏழரைச்சனி நடந்தாலும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காரியங்கள் அமையும். குரு 13-ஆம் தேதிமுதல் 3-ஆமிடத்துக்கு மாறுகிறார். 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். திருமணம் கைகூடும். தம்பதிகள், கூட்டுத்தொழில் புரிகிறவர்களுக்குள் அன்யோன்யம், ஒற்றுமை போன்ற நிகழ்வுகள் உண்டாகும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வப் பிரார்த்தனை முதலானவற்றை நிறைவேற்றலாம். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடந்தால், கடந்த காலத்தில் தந்தைவழியில் இழப்பு, நஷ்டங்கள், பொருட்சேதம் அல்லது உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கலாம். சாதகமான தசாபுக்தி நடந்தால் நன்மைகளை அனுபவிக்கலாம். தொழி-லும் லாபகரமான நிலை காணப்படும். சனிக்கிழமை காலபைரவரை வழிபடவும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஆட்சிபெறுகி றார். அவருடன் 12-க்குடைய குரு நீசபங்கம் பெறுகிறார். அதிக அலைச்சல், திடீர்ப்பயணம் ஆகியவற்றை சந்திக்கும் நிலை. 9-க்குடைய புதன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் அது உங்களை வழிநடத்தும். 13-ஆம் தேதிமுதல் குரு 2-ல் மாறுகிறார். தனவரவு நன்றாக இருக்கும். கல்வி பயிலும் வாய்ப்பும் ஏற்படும். குரு 6-ஆமிடம், 8-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். 6 என்பது கடன், போட்டி, பொறாமை ஆகியவற்றைக் குறித்தாலும், தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத்துக்கு யோகமான இடம். 8-ஆமிடம் கௌரவப் போராட்டம். கவலை, சஞ்சலம் இவற்றைக் குறிக்குமிடம் என்றாலும், தொழில் ஸ்தானத்திற்கு லாபஸ்தானம். ஆக, குரு கெட்ட இடங்களைப் பார்த்தாலும் முழுமை யாக கெடுபலனைச் செய்யமாட்டார் என்று நம்பலாம். சனி ஆட்சிபெறுவதால் ராசிநாதன் பலத்தால் எல்லாவற்றை சமாளித்து வெற்றிபெறலாம். ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலைசாற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி விரயஸ்தானத்தில் (12-ல்) இருக்கிறார். 11-க்குடைய குருவும் சனியுடன் சேர்க்கை. தனவிரயம், நஷ்டம் ஏற்பட இடமுண்டு. 13-ஆம் தேதிமுதல் குரு 12-ல் இருந்து ஜென்ம ராசிக்கு மாறுகிறார். "ஜென்ம ராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்தது' என்பது பாடல். அதற்காக கஷ்டம், நஷ்டம், பாதிப்பு என்று அர்த்தமல்ல. குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு சிறப்பு அதிகம். அதன்படி 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். திட்டங்களும் கற்பனைகளும் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்; மனநிறைவும் ஏற்படும். திருமணமாகாத ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். பிரிந்த கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். தகப்பனாரால் அல்லது தகப்பனார்வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பங்கு பாகங்கள் முறையாகப் பிரிக்கப்படும். சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு நெய் தீபமேற்றி வழிபடவும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 11-ல் சனியுடன்கூடி நீசபங்க ராஜயோகமடைகிறார். என்றாலும் பலருக்கு தொழில், உத்தியோகத்தில் அதற் குண்டான நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போனது. இந்த மாதம் குரு 13-ஆம் தேதிமுதல் 12-ஆமிடத்திற்கு மாறுகிறார். 12-ல் வரும் குரு 4-ஆமிடத்தையும், 6-ஆமிடத் தையும், 8-ஆமிடத்தையும் பார்க்கிறார். பூமி, வீடு வாகனம், சுகம், கல்வி இவற்றில் யோகம் உண்டாகும். வீடு, வாகனம் இவற்றிற்கு கடன் வாங்கும் அமைப்பும் உருவாகும். அது சுபக் கடன் ஆகும். மனைவிவகையில் முதலீடு செய்ய லாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் சுகமும் தெரியும். ஒருசிலருக்கு தாயார்வகையில் கண் சிகிச்சை செலவுகள் ஏற்படும். ஜாதக தசாபுக்தி கள் யோகமாக இருந்தால் 8-ஆமிடத்துக் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் அபகீர்த்தி, கௌரவ பங்கம், அவமானம் போன்றவற்றை சந்திக்கநேரும். லட்சுமி நரசிம்மருக்கு துளசிமாலை சாற்றி வழிபடவும்.