திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத்தில் அப்பரும் சம்பந்தரும் தங்கியிருந்தனர். அப்போது பாண்டிநாட்டு மன்னன் சமண சமயம் சார்ந்திருந்ததால் சைவ சமயத்தின் பெருமை குன்றியது. மன்னருக்கு அறிவுபுகட்டி சைவத்தைத் தழைக்கச் செய்யும்பொருட்டு மதுரை அரசி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் சம்பந்தர் மதுரை வரவேண்டுமென்று தூதர்கள் வாயிலாக அழைப்புவிடுத்தனர். அதைக்கேட்ட அப்பர், ஏற்கெனவே சமணர்களின் பல கொடுமைகளுக்கு ஆளாகியிருந்த காரணத்தாலும், அப்போது கோள்நிலை சரியில்லாததாலும் மதுரை செல்லவேண்டாமென்று சம்பந்தரைத் தடுத்தார்.
அல்லது தானும் உடன்வருவதாகக் கூறினார். அதற்கு சம்பந்தர், "சிவன் என்னுள் உறையும்போது நாளும் கோளும் எதுவும் செய்யாது' என்று சொல்லி,
"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல்
அணிந்தென் உளமே புகுந்த ததனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லதல்ல அவை நல்லதல்ல
அடியாரவர்க்கு மிகவே'
எனத் தொடங்கும் "கோளறு பதிக'த்தைப் பாடியருளினார்.
முருகப்பெருமானே அடியெடுத்துக் கொடுக்க "திருப்புகழ்' பாடிய அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில்,
"நாள் என்செய்யும் வினைதான்
என்செய்யும் எனை நாடிவந்த
கோள் என்செய்யும் கொடுங்கூற்று
என்செய்யும் குமரேசன் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
முன்னே வந்து தோன்றிடினே'
என்று பாடினார்.
அவர்கள் இறைதரிசனம் பெற்றவர்கள். "நாளும் கோளும் என்ன செய்யும்' என்று கேட்கலாம். ஆனால் சாதாரணமானவர்களால் அவ்வாறு கேட்க முடியுமா? கேட்கும் தகுதிதான் உள்ளதா? நாளும் கோளும் அதன் வேலையை செய்துதான் தீரும்.
ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணையும் வரை சாஸ்வதமானது என்றிருந்தாலும், செய்யும் பாவ- புண்ணியங்களுக்கேற்ப பற்பல உடல்களில் பிறக்கிறது; நன்மை- தீமைகளை அனுபவிக்கிறது; இறக்கிறது. மீண்டும் மீண்டும் இதே சுழற்சிதான். அத்வைத முக்தி நிலையை எய்தும்வரை நல்லதும் கெட்டதும் நடந்தே தீரும். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர், அரவிந்தர் போன்ற மகான்களெல்லாம் நோய்த் தாக்கத்தால் அவதியுறவில்லையா?
எனவே நவகிரக வழிபாடு அவசியமே. நல்ல தசையில் இருக்கும்போது வழிபட்டால் கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வதை அதிகரிக்கும். கெட்ட தசையாக இருந்தாலும் தொல்லைகள் குறையும்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களில் நவகிரக சந்நிதி இருக்காது.
சுதர்சனர் வழிபாடே போதும் என்பர். (மதுரை கூடலழகர் கோவிலில் நவகிரக சந்நிதி உண்டு. தற்காலத்தில் சில பெருமாள் ஆலயங்களில் நவகிரகங்களை அமைத்துவருகிறார்கள்.)
பொதுவாக பெருமாள் கோவில்களில் நவகிரக வழிபாடு இல்லையென்றாலும், ஸ்ரீவைகுண்டத்தைச் சுற்றியுள்ள சில பெருமாள் கோவில்களை "நவதிருப்பதி' என்று குறிப்பிட்டு, கிரக வழிபாட்டுக்கு உகந்த தலங்கள் என்று சில வருடங்களாக வழிபாடு நடக்கிறது. பிரத்யேகமான ஆன்மிகச் சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன.
ஸ்ரீவைகுண்டம் (கள்ளபிரான்) சூரியன் தலமாகவும்; வரகுணமங்கை (எம்மிடர்க்கடிவான்) சந்திரன் தலமாகவும்; திருக்கோளூர் (வைத்தமாநிதி) செவ்வாய்த் தலமாகவும்; திருப்புளியங்குடி (காய்சின வேந்தன்) புதன் தலமாகவும்; ஆழ்வார்திருநகரி (பொழிந்துநின்ற பிரான்) குருத் தலமாகவும்; தென்திருப்பேரை (நிகரில் முகில்வண்ணன்) சுக்கிரன் தலமாகவும்; பெருங்குளம் (மாயக்கூத்தன்) சனித்தலமாகவும்; இரட்டைத் திருப்பதிகள் (தேவர்பிரான், செந்தாமரைக் கண்ணன்) ராகு- கேது தலங்களாகவும் கொள்ளப்படுகின்றன.
வைணவப் பெரியார் நிகமாந்த தேசிகர்-
"ஆரோக்கியம் ப்ரதாது தினகர:
சந்த்ரோ யசோ நிர்மலம்:
பூதிம் பூமிஸுத: சுதாம்ச தயை:
ப்ரக்ஞாம் குரு: கௌரவம்
கான்ய: கோமள வாக் விலாசம்
அதுலம் மந்தோமுதம் சர்வதா
ராஹு பாஹீ பலம் விரோத சமனம்:
கேது குலஸ்ய உன்னதிம்'
என்னும் நவகிரகத் துதியை அருளியிருக்கிறார். இந்த ஒரு துதியே நவகிரக அருள்கோரும் துதியாக உள்ளது. இதில் சிவன் நாமமோ, விஷ்ணு நாமமோ இல்லை. கிரகங்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அனைவரும் துதித்துப் பயன்பெறலாம்.
கும்பகோணத்தைச் சுற்றியுள்ள சூரியனார் கோவில் முதலான நவகிரகத் தலங்கள் பிரசித்தி பெற்றவை. ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். அதுபோல திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில், தாமிரபரணி நதிக்கரையில் நவகயிலாயம் எனும் நவகிரக சிறப்புத் தலங்கள் உள்ளன. யாவும் பழமையான தலங்கள். திருநெல்வேலியில் காலை 5.00 மணிக்குப் புறப்பட்டால் இரவு 9.00 மணிக்குள் நவகயிலாயங்களையும் தரிசித்துவிடலாம்.
திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி, பைரவாஷ்டமி (தேய்பிறை அஷ்டமி), ஆருத்ரா தரிசன நாட்கள், கார்த்திகை மாதம் ஆகியவை நவகயிலாய தரிசனம் காண மிக உகந்த நாட்கள்.
நவ கயிலாயம் தோன்றக் காரணம் என்ன?
அகத்தியரின் சீடர் ரோமச முனிவர்.
அகத்தியர் பொதிகைக்கு வந்தபோது அவரும் உடன்வந்தார். சிவ தரிசனம் பெற்று முக்தியடைய வழிகூறுமாறு குரு அகத்தியரிடம் கேட்டார் ரோமசர். (ஸ்ரீமத் பாகவதம் தாமிரபரணி நதியை மிகவும் சிறப்பித்துக் கூறும்.)
அதற்கு அகத்தியர், ""நான் ஒன்பது தாமரை மலர்களைத் தருகிறேன். அவற்றை தாமிரபரணி நதியில் இடு. ஒவ்வொரு மலரும் எங்கு ஒதுங்குகிறதோ அந்த நதிக்கரைகளில் சிவலிங்கத்தை நிறுவி வழிபடு. கடைசி மலரானது நதி கடலில் கலக்கும் இடத்தில் தங்கும். அங்கு சிவனை ஸ்தாபித்து, சங்கமத்தில் நீராடி இறைவனை வழிபடு. சிவதரிசனம், முக்தி கிடைக்கும்'' என்று கூறினார்.
அவ்வாறு உருவான ஆலயங்களே நவ கயிலாயங்கள் ஆகும்.
இவ்வாலயங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்றாலும், நால்வர் பாடல் பெற்றவையல்ல. ஆனால் நால்வர் சந்நிதி உண்டு.
ஒருவேளை அவர்களது பாக்கள் காலப் போக்கில் கிட்டாமல் போயிருக்கலாம்.
பொதுவாக சிவாலயங்களில் நந்திக்குப் பின் கொடிமரம் இருக்கும். இந்த நவகயிலாயங்களில் நந்திக்குமுன் கொடிமரம் உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோவில்களில் இவ்வாறுதான் இருக்கும் என்கின்றனர்.
இனி நவ கயிலாயங்களை தரிசிப்போமா?
1. பாபநாசம்
நவகயிலாயங்களில் முதலாவதாக விளங்கும் பாபநாசம் சூரியனுக்குரிய தலம். பொதிகையிலிருந்து தவழ்ந்துவரும் தாமிரபரணி நதிக்கரையிலேயே ஆலயம் அமைந்துள்ளது. அகத்தியர் தவம்புரிந்த தலம். உலகாம்பிகை அம்மையுடன் கயிலாயநாதர் அருள்புரிகிறார். நதியில் நீராடி ஈசனை வணங்கினால் நம் பாவமெல்லாம் அழியும். இங்குள்ள மூல லிங்கம் ருத்ராட்சத்தால் ஆனதென்பர். இவருக்கு வயிராசல லிங்கம், பழமுறைநாயகர், பரஞ்சோதிலிங்கர் என பல பெயர்கள் உண்டு.
இவ்வாலயம் விக்ரசிம்ம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதென்பர். வசந்த மண்டபத்தில் ஒற்றை- இரட்டை மீன் சின்னங்கள் உள்ளன. அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலம் காட்டியருளிய தலமிது.
விராட் என்னும் பக்தர் வாழ்வில் விரக்தியடைந்து இத்தல இறைவனை வழிபட, சிவதரிசனம் பெற்று மோட்சமும் அடைந்தார்.
ஆடி, தை அமாவாசைகள், சிவராத்திரி நாட்களில் நதியில் நீராடி தர்ப்பணங்கள், சாந்தி ஹோமங்கள் செய்து சிவபெருமானை வழிபட பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.
இது சூரியத் தலமாகவும் விளங்குவதால் உடல்நலம் குன்றியோர், பார்வைக்குறைபாடுள்ளவர்கள் வணங்கி நலம் பெறலாம்.
இத்தலம் திருநெல்வேலியிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
2. சேரன்மகாதேவி
இது சந்திரனுக்குரிய தலமானதால், இத்தல சிவனை வழிபட பயிர் விளைச்சல் பெருகும். ஆரோக்கியம், அழகு மேம்படும். இங்கு அன்னை ஆவுடைநாயகியுடன் அம்மைநாதர் அருள்புரிகிறார். இத்தல ஈசன் ஆலமரத்தடியில் சுயம்புவாகத் தோன்றியவர். கருவறை வாயில் தூணில் ரோமச முனிவர் தவம்செய்யும் அற்புதக் கோலத்தை தரிசிக்கலாம்.
இரண்டு பெண்கள் நெல்குத்தி, அதன்மூலம் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு கோவில் கட்ட முயன்றனர். ஆனால் வருமானம் போதவில்லை. அவர்கள் சிவபெருமானை வேண்டி வருந்தினர்.
அப்போது சிவபெருமான் அடியார் வடிவில் வர, அவரை வரவேற்று உபசரித்தனர். அவரும் உண்டு ஆசி வழங்கினார். அதன்பின் அப்பெண்களுக்கு செல்வம் பெருகியது. அதைக்கொண்டு இவ்வாலயத்தைக் கட்டினர் என்பது வரலாறு. இவ்வாலயத் தூணில் அவர்கள் நெல்குத்துவது போன்ற சிற்பத்தைக் காணலாம்.
இங்கு வரும் சுமங்கலிப் பெண்கள் ஒரு உரலில் மஞ்சள் இட்டுப் பொடித்து, அதைத் தங்கள் தாலியில் பூசிக்கொள்கின்றனர். அதனால் மங்களம் நிலைக்கும் என்பது ஐதீகம். கன்னிப்பெண்கள் மஞ்சளை மாலையாகக் கட்டி நந்திக்கு அணிவிக்க, விரைவில் திருமணம் ஈடேறுகிறதாம். மஞ்சள், வெல்லம் மாலையாகக் கட்டி நந்திக்கு அணிவிக்க குழந்தைச் செல்வம் கிட்டுமாம்.
இத்தலத்தில் ஐப்பசி உத்திர நட்சத்திர நாளில் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும். மார்கழி மாதத்தில் வியாச தீர்த்தம்- மகாவதி பாகம் என்னும் மூன்று நாள் திருவிழா நடக்கும்.
மகாமகம்போல அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் எழுந்தருளுவதாக ஐதீகம். அப்போது இத்தலம் பெரும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
திருநெல்வேலியிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
(மற்ற தலங்கள் அடுத்த இதழில்)