தூத்துக்குடியிலிருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், விளாத்திகுளம் வட்டம், குளத்தூர் நகரிலிருக்கிறது அருள்மிகு துர்க்கையம்மன் திருக் கோவில். நவராத்திரி நாயகியான துர்க்கையம்மனை நம்பி வழிபடு வோர்க்கு சகல சௌபாக் கியங்களும் தந்து அருள் பாலிக்கிறாள்.

aa

இந்த ஆலயம் அமைந் ததற்கு ஆதிமூல காரணமாகி வரமும் அளித்தது தேவியர்களே. ஆலயத்தின் வரலாறு கேட்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன்பு முப்பெரும் தெய்வங்களான பத்ரகாளியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர். புனிதநதியான பாபநாசம், குற்றால ஆறுகளில் நீராடி விட்டு கன்னியாகுமரி செல்லும் வழியில் குளத்தூர் அருகில் வரும்போது கிழக்கு வெளுத்துவிட்டது. அப்போது அங்கு திரண்ட மக்கள் மூன்று தெய்வங் களையும் தொழுதார்கள். மக்களுக்கு அருளாசி வழங்கிய முப்பெரும் தெய்வங்கள், "எங்களுக்கு இந்த மண்ணில் கோவில் அமைத்து வழிபடுங்கள்; உங்கள் வாழ்க்கை சிறப்பா கும்'' என்று ஆசிர்வதித்து வரமருளினர்.

Advertisment

அதையடுத்தே குளத் தூரில் நாடார் சமூகம் சார்பில் பத்ரகாளியம்மன் கோவில், யாதவர் சமூகம் சார்பில் மாரியம்மன் கோவில், இந்து சைவ வெள்ளாளர் சமுதாய மக்கள் சார்பில் துர்க்கையம்மன் கோவில் என்று உருவானது.

ஆரம்ப காலங்களில் கூரைவேய்ந்த- மண்ணாலான கோவிலே இருந்தது. வருடந்தோறும் சமூக மக்களின் ஆதரவோடு கோவில் மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்பட்டது. அன்னையின் ஆசியால் அனைத்து சமுதாய மக்களும் வளம்பெறத் தொடங்கினர்.

காலப்போக்கில் மாறுதல டைந்த துர்க்கையம்மன் கோவில் சைவ வெள்ளாளர் சமூக அனைத்து மக்களின் பங்களிப்புடன், குளத்தூரிலிருந்து மலேசியாவில் குடி யேறிய மலேசிய வாழ் தமிழர்களும் ஆலயம் அமைய தங்களின் பங்களிப்பை வழங்கினார் கள்.

Advertisment

இப்படி மக்களின் பங்களிப்பே அஸ்தி வாரமாக அமைய, ஆறு சென்ட் நிலத்தில் அன்னை துர்க்கையம்மன் ஆலயம் இன்று சிறப் பாக உருவெடுத்துள்ளது. சகல மக்களுக்கும் அருள்பாலிக்கிறாள் அன்னை.

aa

இதற்கு முன்முயற்சி எடுத்து, பல வருடங்களாக முன்நின்று ஆலயம், கோபுரம், சுற்றுப்பிராகாரம், திருச்சப்பரம் என உழைப்பையும் பங்களிப்பையும் அயராது வழங்கியவர்கள் துரைராஜ், சுடலைவேல் முருகன், சண்முகசுந்தரம், முத்துராஜ், முத்து ராமகிருஷ்ணன், குருசாமி, சந்திரசேகர் போன்றவர்களே.

அன்னையின் திருக்கோவில் என்றால் அதற்கொரு தனிச்சிறப்பு உண்டுதானே. ஆண்டுதோறும் கும்பாபிஷேகங்கள் மிக விமரிசையாக நடத்தப்படும் இந்தக் கோவிலுக்கு சுற்றுப்பகுதியிலுள்ள கிராமக்கள் திரண்டுவந்து வழிபடுகின்றனர்.

புரட்டாசி மாத நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் விசேஷ பூஜை, கொலு என்று மக்களின் வழிபாடு அமர்க்களப்படும். கடைசி தினமான சரஸ்வதி பூஜையின்போது (துர்க்கா பூஜை) துர்க்கையம்மன் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து வருடந்தோறும் நடப்பது தனிப்பெரும் மகிமை.

"துர்க்கையம்மன் ஆலயத்தில் பொதுநலம், மக்களின் வாழ்வு சிறக்க நவசண்டிய மகாயாகம் நடத்தவேண்டுமென்று நாங்களும் சமுதாய மக்களும் மூன்று வருடங்களாக யோசித்து, அது அம்மனின் அருளாசியால் இந்த வருடம்தான் பூர்த்தியானது'' என்கிறார் திருக்கோவிலின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான துரைராஜ்.

adf

கடந்த செப்டம்பர் 30-ஆம் நாள் நவசண்டி யாகம் நடத்தப்பட்டாலும், அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் 28, 29-ஆம் தேதிமுதலே யாகங்கள் தொடங்கி நடந்தன. புரட்டாசி 12-ஆம் நாள் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை என நடத்தப்பட்டன. அன்றைய ஆரம்பதின நிகழ்ச்சியில் பெருங் குளம் செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப் பிரகாசதேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

புரட்டாசி- 13 அன்று திருமுறைப் பாராயணம், மிருத்சங்கிரஹனம், பிரவேச பலிபூஜை ஆகியவை நடத்தப்பட்டு, மூன்றாம் நாளான புரட்டாசி- 14 அன்று கிருஷ்ணபட்ச நவமி திதியும், புனர்பூச நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் காலை ஏழரை மணியளவில் நவசண்டி யாகம் தொடங்கியது. அன்றைய தினம், வேத பாராயணங்களோடு சோபன திரவிய மகா பூர்ணாகுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவை நடத்தப்பட்டன.

மூன்று நாட்களும் ஆலயம் விழாக் கோலம் பூண்டிருந்ததோடு, பக்தர்களின் கூட்டமும் திரண்டிருந்தது. யாகத்தின்போது நகரமக்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு துர்க்கையம்மனை தரிசித்தார்கள்.

நவசண்டி யாகத்தின் நோக்கமும், சிறப்புகள் பற்றியும் அதை நடத்திவைத்த பட்டர்களில் முதன்மையானவரான கார்த்திகேய பட்டரிடம் பேசியபோது...

dd

"நவசண்டி மகாயாகம் தூர்க்கையம்மன் ஆலயத்தில் நடத்தப்படுவதுதான் சிறப்பான அம்சம். ஆலயங்களில் தெய்வ சாந்நித்ய அபிவிருத்திக்காகவும், அன்றாடம் அதிகரிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலகமக்களின் சுபிட்சத்திற்காகவும், குடும்ப சேமத்திற்காகவும் இந்த யாகம் நடத்தப்படுவது சிறப்பானதாகும்.

மார்க்கண்டேய புராணத்தின் நடுநாயகமாகிய 700 மந்திரங்கள் அடங்கிய தேவி மகாத்மியம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நந்தா, சாகம்பரி, பீமா, ரக்த நந்திகா, துர்க்கா, பிரமாரி, சதாக்சி எனும் ஏழு தேவியரின் சரித்திரம் 700 மந்திரங்களால் ஆனது. "என்னைத் தவிர இரண்டாமவர் இல்லை' என்ற தனது பரமாத்ம, விஸ்வரூபத்தை பராசக்தி உணர்த்துவதால், தேவி மாகாத்மியம் என்பது காரணப் பெயராயிற்று. தேவி மாகாத்மியம் முழுவதும் சர்வசித்தி மந்திரங்களாகும். படிப்பதைக் கேட்டாலே போதும்; பலன் கிடைத்துவிடும். சீக்கிரமாகப் பயனடைய விரும்புவோருக்காக உருவாக்கிய பராசக்தியின் ஆவேசவாக்கு இதுவாகும். அபௌருஷேயம் என்று இதற்குப் பெயர். அம்பிகையின் மாயா மந்திரம் என்று சொல்லக்கூடிய ஸ்ரீங்காரத்திலிருந்து தோன்றிய ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீமகா சரஸ்வதி ஆகியோர் முப்பெரும் தேவியராவார்கள். சண்டி என்றால் பிடிவாதம் என்று பொருள். தேவர்களையும், மனிதர்களையும் காத்தருளும் பொருட்டு, கஷ்டப்படுவோரைக் காக்கவேண்டும் என பிடிவாதம் கொண்டு அசுரர்களை அழித்த தனால் அன்னைக்கு சண்டி என திருப்பெயர் ஏற்பட்டது.

அன்னையின் இந்த யாகத்தில் கலந்துகொண்டு வழிபடுவோர்க்கு அனைத்து வகை துன்பங்களிலிருந்து விடுதலையும், காரிய சித்தியும், சகலவிதமான சௌபாக்கியங்களும் ஏற்படுவது நிச்சயம்'' என்றார்.

குளத்தூரில் எழுந்தருளி அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீதுர்க்கா ஆலயத்தில் நடந்த நவசண்டி யாகமானது மக்களுக்கும் நாட்டிற்கும் சுபிட்சத்தை அளிப்பது திண்ணம்.

படங்கள்: ப. இராம்குமார்