"திருமகள் கேழ்வன்' எனப் போற்றப்படும் ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரங்கள் பல.
அவருடைய அவதாரக் காலத்தில் அவரை அணுகி அருள்பெற முடியாத நம்போன்ற மக்களுக்காக ஊர்தோறும் கோவில்கொண்டுள்ளான்.
"பின்னானார் வணங்கும் சோதி' என திருமங்கையாழ்வார் சிலாரூபமாக கோவில்களில் அருளும் எம்பெருமானைச் சொல்கிறார்.
அவதாரம் முடிந்த பிறகும் நமக்கு அனுக்கிரகம் செய்யவே கோவில்களுள் குடிகொண்டுள்ளார் இறைவன் என்பது அவரின் கூற்று. அதிலும் குறிப்பாக, ஒருமுகூர்த்த காலமே அவதாரம் நிகழ்த்திய நரசிம்ம அவதாரத்தை வழிபடுவோர், வாழ்வில் அடையாததே இருக்கமுடியாது.
அவர் ஹிரண்யன் கேட்ட வரத்தின்படி சேராத தெல்லாம் சேர்த்து, நடக்காததென்று எண்ணி யிருந்ததையும் நடத்திக்காட்டினார்.
பல கோவில்களுக்குச் சென்று நவகிரக சாந்தி செய்தும் பலன் கிடைக்கவில்லை என்போருக்கு இந்த நரசிம்மர் தலங்கள் ஒரு வரப்பிரசாதம். நரசிம்மர் இந்த ஒன்பது தலங்களில் நவகிரகங்களுக்கு அதிதேவதையாகத் திகழ்கிறார்.
அவரை நவகிரகங்களுக்குரிய கிழமைகளில் வழிபடும்போது, அநவகிரகங்களை நமக்கு சாதகமாகச் செயல்படச்செய்வார் என்பது தந்த்ரா நூல்களில் சொல்லப்பட்ட விஷயம்.
ஜாதகத்தில் சூரியனால் தோஷ முள்ளவர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், கண் நோயுள்ளவர்கள், ஆரோக்கியக் குறைபாடுள்ளவர்கள் சிங்கிரிகோவில் என்னும் ஊரில் கோவில்கொண்டுள்ள லட்சுமி நரசிம்மரை ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபட நன்மை யுண்டாகும். சூரிய பகவானுக்கு ப்ரீதியான தாமரை மலரால் அர்ச்சிக்க கண் நோய் அகலும். வேலூரி லிருந்து போளுர் செல்லும் செல்லும் வழியில் 25 கிலோமீட்டரில் உள்ளது இவ்வூர்.
ஜாதகத்தில் சந்திர தோஷமுள்ள வர்கள், ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், மாதவிடாய்க் கோளாறுள்ள பெண்கள், சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில், மறைமலைநகர் அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை வழிபட நன்மையுண்டு. திங்கள்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் சென்று தரிசிக்க பெண்களுக் குண்டான நோய்கள் நீங்கும்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷ முள்ளவர்கள், ரத்த சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள், ஆறாத ரணமுள்ளவர்கள், ரியல்எஸ்டேட் தொழில்செய்பவர்கள் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தேவர்மலையில் குடிகொண்டுள்ள கதிர்நரசிம்மர் திருவடிகளை சரண்புகுந்தால் விரைவில் திருமணம், நல்ல பிள்ளைகள், நோயில்லா வாழ்வு யாவும் கிடைக்கும். அவரை செவ்வாய்க்கிழமை சிவப்புநிற வஸ்திரம் சமர்ப்பித்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, மாதுளம்பழம் நிவேதிக்க வாழ்வு ஒளிரும். கரூரிலிருந்து பாளையம் வழியாக திண்டுக்கல் செல்லும்சாலையில், பாளையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலை விலுள்ளது தேவர்மலை.
ஜாதகத்தில் புதன் தோஷமுள்ள வர்கள், நரம்பு மற்றும் மூளை சம்பந்தமான நோயுள்ளவர்கள், சொந்த வியாபாரம் செய்வோர், தொலைத்தொடர்பு சம்பந்தமான வேளையிலுள்ளோர், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சென்று வழிபாடு நிகழ்த்தவேண்டிய இடம் நாமக்கல். நாமக்கல் நரசிம்மரை புதன்கிழமை வழிபட, புதன் கிரகத்தின் பூரண ஆசிபெற்று, அறிவு சார்ந்த தொழில்களில் சிறந்து விளங்கலாம்.
அங்கே தீபமேற்றி வழிபட, வலிப்பு நோய் அகலும்.
வாழ்வில் வெளிச்சம் உண்டாகும்.
ஜாதகத்தில் குருவினால் தோஷமுள்ளவர்கள், "காஸ்ட்ரிக்' பிரச்சினை உள்ளவர்கள், அதிக உடற்பருமனால் அவதிப்படுபவர்கள், வயிறு சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள், இதயக் கோளாறுள்ளவர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், கல்வி சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் வழிபட வேண்டியது ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர். ரிஷி முனிவர்களுக்காகத் தோன்றி அருள்பாலிக்கும் இவரை வியாழக்கிழமையன்று முல்லை, செண்பகம் போன்ற மணம்மிக்க மலர்களால் அர்ச்சித்தால் சிறந்தஞானம் பெறலாம். ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகிலுள்ளது இக்கோவில்.
ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷமுள்ளவர் கள், கர்ப்பப்பை மற்றும் சிறுநீரகம் தொடர் பான நோயிலுள்ளவர்கள், தாம்பத்தியத்தில் பிரச்சினையுள்ளவர்கள், பரணி, பூரம், பூராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் சென்று வணங்கவேண்டியது நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவில். ஸ்வயம்புவான இந்த நரசிம்மரை வெள்ளிக்கிழமை பாலாபிஷேகம் வழிபட்டால் சுக்கிரப்ரீத்தி ஏற்படுகிறது. இனிமையான இல்வாழ்வு, குறைவற்ற செல்வம், மக்கட்பேறு யாவும் இந்த நரசிம்மரை வழிபடுவதால் கிடைக்கும். நங்கவள்ளி- சேலம் மாவட்டத்தில், மேட்டூர் அருகே உள்ளது.
ஜாதகத்தில் சனியினால் தோஷமுள்ள வர்கள், இரும்புத் தொழில்செய்பவர்கள், எலும்பு சம்பந்தமான நோயுள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்த வர்கள் வல்லம் என்னும் ஊரிலுள்ள மாதவப் பெருமாள் கோவில் யோக நரசிம்மரைப் பணிய பிணியகலும். இங்கே சாம்பிராணித் தைலம் மற்றும் சந்தனாதித் தைலம் சாற்றி வழிபடுவோர் வாழ்வில் ஏற்றம் காண்பர். வல்லம்- தஞ்சாவூர்- திருச்சி மார்க்கத்தில், தஞ்சாவூருக்கு அருகே ஏழு கிலோமீட்டரில் உள்ளது. சிறந்த ஞானம்பெற யோக நரசிம்மரை சனிக்கிழமைதோறும் துளசித் தளங்களால் அர்ச்சனை செய்யவும்.
ஜாதகத்தில் ராகு தோஷமுள்ளவர்கள், சரும நோயுள்ளவர்கள், ஏற்றுமதி- இறக்குமதி தொழிலில் ஈடுபடுவோர், உரம் மற்றும் மருந்து சம்பந்தமான தொழில் செய்வோர், திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கரை. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், தாயார் சந்நிதி வாசலில் இருக்கும் இவரை சனிக்கிழமை தாழம்பூ கொண்டு ஆராதித்தால் ராகுப்ரீதி ஏற்படும். வாழ்வு வளம்பெறும்.
ஜாதகத்தில் கேது தோஷமுள்ளவர்கள், அஸ்வினி, மகம், மூல நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், வைதீகம் மற்றும் புரோகிதத் தொழில்செய்வோர், மீன் பிடித்தல் மற்றும் விற்பனைத் தொழில்புரிவோர் கேதுவின் அருள்பெற வழிபடவேண்டிய தலம் ஆவணியாபுரம். நரசிம்மர் மட்டுமல்லாது மகாலட்சுமியும் சிங்கமுகத்தோடு அருளும் தலமிது. இங்கு அருளும் லட்சுமி நரசிம்மரை செவ்வாய்க்கிழமை சர்க்கரைப் பொங்கலிட்டு , பலவண்ண மலர்கொண்டு வழிபட கேதுவின் அனுக்கிரகம் கிட்டும். ஆவணியாபுரம்- ஆரணி யிலிருந்து 16 கிலோமீட்டர்; வந்தவாசியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. சென்னை- தாம்பரம்- காஞ்சிபுரம்- செய்யார் வழியிலும் சென்று இக்கோவிலை அடையலாம்.
நரசிம்மர் என்றும் உடனிருந்து காப்பார்!