ஆகஸ்ட் 15 சுதந்திர தின சிறப்புக்கட்டுரை

முனைவர் இரா. இராஜேஸ்வரன்

தியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியானவன் சிவபெருமான். சிவனை வழிபடும் நெறியான சைவமே மிகப் பழமையான சமயம். எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முழுமுதற்கடவுளான சிவனை தென்னாட்டவராகிய தமிழர்கள் பெரிதும் போற்றினார்கள். இதனை-

"தென்னாடுடைய சிவனே போற்றி

Advertisment

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'

adinamஎன்ற திருவாசகம்மூலம் உணரலாம். சைவமும் தமிழும் தழைத்தோங்க மடங்களும் ஆதீனங்களும் பெரிதும் பாடுபட்டன.

புராணங்கள் பதினெட்டு, சித்தர்கள் பதினெட்டு போன்று சைவ ஆதீனங்கள் பதினெட்டு உண்டு. "சுத்த சைவ பதினெண் ஆதீனங்கள்' என்று கூறுவார்கள். பதினேழு ஆதீனங்கள் (மடம்) தமிழ்நாட்டிலும், ஒரு ஆதீனம் "வரணி ஆதீனம்' எனும் பெயரில் இலங்கை யாழ்ப்பாணத்திலும் உள்ளன. சைவ மடங்களில் முதலாவது திருவாவடு துறை ஆதீனம். தேவாரப்பாடல் பெற்ற தலமான திருவாவடுதுறையில் சுமார் 600 ஆண்டு களுக்குமுன்பு நமசிவாய மூர்த்தி என்பவரால் மடம் நிறுவப்பட்டது. பாரத நாடு சுதந்திரம் பெற்ற தருணத்தில் இவ்வாதீனம் செய்த மகத்தானப் பணி போற்றுதலுக்குரிய ஒன்றாகும். இது தமிழகத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு.

Advertisment

ஆதீன வரலாறு

திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானிடமிருந்து சிவஞான உப தேசத்தை நந்திதேவர் (நந்தி) பெற்றார். அவர் அதை பல சிவஞானிகளுக்கும், முனிவர் களுக்கும், சிவனடியார்களுக்கும் உபதேசித்தார். நந்திதேவர் மரபில் வந்த பரஞ்ஜோதி முனிவர் மெய்கண்டாருக்கு சிவஞானத்தை உபதேசித்தார். இவரது இயற்பெயர் சுவேதவனப் பெருமாள். இவரால் எழுதப்பட்டதுதான் "சிவஞான போதம்' எனும் அற்புதமான நூல். இது ஒப்புயர்வற்ற சைவ சித்தாந்த சாத்திர நூலாகும். மெய்கண்ட தேவரை முதற்குருவாகக் கொண்டு ஒரு குரு பரம்பரை தமிழகத்தில் தோன்றியது. அவருக் குப் பின்பு சந்தானாச்சாரியார்கள் என போற்றப் படும் அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் போன்றோர் வழியில்வந்த சித்தர் சிவப்பிரகாசர், சிவஞான உபதேசத்தை மூவலூரில் அவதரித்த (புன்னாகவனம்) ஸ்ரீ நமசி வாய மூர்த்தி என்பவருக்கு அருளினார். இவர்மூலம் "அபிஷேக பரம்பரை' எனும் ஆதீன குரு பரம்பரை தோன்றி யது. திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குருமகா சந்நிதா னம் இவரே ஆவார்.

திருக்கயிலாயப் பரம் பரைமூலமாகத் தோன்றிய ஆதீனம் என்பதால், "திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்'

எனப் பெயர் ஏற்பட்டது. இந்த ஆதீனத்தில் நான்கா வது குருமகா சந்நிதானமான ஸ்ரீ உத்திரகோடி தேசிகர் அருளாட்சிக் காலத்தில், மதுரைப் பகுதியை அரசாண்ட சிற்றரசனான முத்து வீரப்பநாயக்கர் ஈசானத் தம்பிரான் பெயரில் ஆதீனத்திற்கு எட்டு மடங்களுக்கு வேண்டிய நிலங்களை அளித்தான். அதேபோன்று 1615-ல் சிவந்திபுரம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர் ஆகிய ஊர்களில் புதியதாக கிளை மடங்களை ஏற்படுத்த உதவி செய்தான். 1621-ல் நெல்லை ஈசான மடம் என்கிற கிளை மடம் உருவாக்கப்பட்டதாக ஆதீனத்தின் செப்பேடு தெரிவிக்கிறது.

பன்னிரண்டாவது குருமகா சந்நிதானமான ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் (1730-1770), இராமநாதபுர சமஸ்தானத்தில் மழையில்லாமல் மக்கள் துன்பப்பட்ட நேரத்தில் மழைப்பதிகங்களை மேகராகக் குறிஞ்சி ராகத்தில் .ஓதுவார்களைக் கொண்டு பாடச்செய்து மழையை வரவழைத்தார். இதனால் மகிழ்ந்த சேதுபதி மன்னர் திருப்பொற்கோட்டை என்ற ஊரை ஆதீனத்திற்கு 1733-ஆம் ஆண்டு வழங்கினார்.

பதின்மூன்றாவது குருமகா சந்நிதானம்

adinamஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1770-1789) அருளாட்சிக் காலத்தில், ஆதீன தம்பிரானான கண்ணப்பசாமி என்பவரைக் கொண்டு காசியில் கோனார்புரா எனும் இடத்தில் "கண்ணப்ப சாமி மடம்' என்கிற பெயரில் கிளை மடத்தை ஏற்படுத்தினார். இங்கு காசி யாத்திரைக்காக தமிழ்நாட்டிலிலிருந்து வருவோருக்கு தங்க இடமும், அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. பதினைந்தாவது குருமகா சந்நிதானமான ஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1845-1869) காலத்தில், திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876) ஆதீன மகாவித்துவானாக இருந்து பல பாடல் களை எழுதினார். இதனால் இவரை "பத்து கம்பர்' என அழைப்பார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பிள்ளைக்கு நாவலர் எனும் பட்டத்தைச் சூட்டி கௌரவித் தார்.

பதினாறாவது குருமகா சந்நிதானமான ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (1869-1888) காலத்தில், திருவிடைமருதூர் மகாலிலிங்க சுவாமி கோவிலுக்கு மராட்டிய மன்னர் புதிதாக தேர் செய்து கொடுத்தார்.

இந்த சமயத்தில்தான் தமிழ் வித்துவான்கள் உ.வே. சாமிநாதையர் (1855-1942) (தமிழ்த் தாத்தா), தியாகராசச் செட்டியார் போன்றவர்கள் ஆதீனத்தில் கல்வி பயின்றனர். அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை, ஓலைச்சுவடியிலிலிருந்து அச்சிட்டுப் பாதுகாத்த பெருமை உ.வே. சாமிநாதையருக்கு உண்டு. திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானமிடம் மிகுந்த பக்தியை வைத்திருந்தார். இந்த குருமகா சந்நிதானத்தின் அருளாட்சிக் காலமே தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என கூறலாம்.

பத்தொன்ப தாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ வைத்தியலிலிங்க தேசிகர் (1922-1937) அருளாட்சியில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு தமிழகமெங்கும் சுமார் 130 இடங்களில் கிளை மடங்கள் ஏற்படும் அளவுக்கு வளர்ச்சி கண்டது. இருபத்து மூன்றாவது குருமகா சந்நிதானமான ஸ்ரீ சிவப்பிரகாச தேசிகர் (1983-2012) சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம், சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் ஆகிய அமைப்புகளை நிறுவினார். இவரையடுத்து திருவிடைமருதூர் கோவில் நிர்வாகத்தை ஏற்றிருந்த மீனாட்சிசுந்தரம் தம்பிரானைப் பட்டத்திற்கு நியமித்து, ஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் என்ற யோகப்பட்டமும் அளிக்கப்பட்டது. தற்போதைய இருபத்து நான்காவது குருமகா சந்நிதானமான இவர், தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் ரத்தின சபாபதி தேசிகர், பொன்னம்மாள் என்னும் தம்பதியினருக்கு மகனாக 1960-ஆம் ஆண்டு, மே மாதம் 19-ஆம் நாள் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தாயுமானவன். இவர் தம்முடைய 23-ஆம் வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் துறவு பெற்றார்.

adinam

பாடல்பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோவில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோவில் உட்பட 50-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோவில்கள், கிராமக் கோவில்கள் இந்த ஆதீனத்தின் ஆளுகையில் உள்ளன. ஆதீனம் சார்பில் கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள்) மற்றும் சரஸ்வதி மகால் எனும் பெயரில் நூல் நிலையம் உள்ளன.

இந்த நூல் நிலையம் 1895-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு சுமார் 1000 தமிழ், பிறமொழி களின் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆதீனம் சார்பில் விரைவில் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி ஒன்று துவங்கப் பட உள்ளது.

இதுதவிர லண்டன், மலேசியா உட்பட தமிழ்நாட்டில் சுமார் 80 இடங்களில் சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையங்கள், வகுப்புகள் நடத்தப்படுகின்றன. திருமுறை, சைவசித்தாந்தம், ஆகமம், திருமந்திரம், தல வரலாறு என பல துறைகளில் தமிழ்நூல்கள் ஆதீன வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. தொன்மையான இந்த ஆதீனம் சமய அருட்பணியான சைவ சித்தாந்தச் செந்நெறியை பரப்புவது மட்டுமின்றி சமூக, சமுதாய அறப்பணி களையும் செய்துவருகிறது. இதன்மூலம் ஏழை, எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

திருவாவடுதுறையின் சிறப்புகள்

நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை- கும்பகோணம் பாதையில் திருவாவடுதுறை அமைந்துள்ளது. தேவாரப் பாடல்பெற்ற ஒப்பிலாமுலையம்மை சமேத கோமுக்தீஸ்வரர் திருக்கோவில் இங்குதான் அமைந்துள்ளது. தேவார மூவரான திருஞான சம்பந்தர், "காந்தார பஞ்சமம்" ராகத்தில் 11 பாடல்களையும், திருநாவுக்கரசர் "திருநேரிசை'யில் முதலில் 10 பாடல்களையும், பிறகு 10 பாடல்களையும், சுந்தரர் "தக்கேசி' ராகத்தில் 10 பாடல்களையும் பாடியுள்ளனர். இதுதவிர மாணிக்கவாசகர் உள்ளிட்ட சைவ சமயப் பெரியவர்கள் திருவாய் மலர்ந்தருளி பதிகங்களைப் பாடியுள்ளனர்.

adinam

திருஞான சம்பந்தர் தம்முடைய தந்தையார் சிவபாதவிருதயர் நடத்திய வேள்வியின் (யாகம்) செலவுக்காக ஆயிரம் பொற்காசுகளை இறைவனிடமிருந்து இத்தலத்தில் பெற்றார். திருமூலர் இத்தலத்திலுள்ள அரசமரத்தின்கீழ் அமர்ந்து நீண்டநாட்களாகத் தவம்புரிந்தார். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனக் கூறிய திருமூலரின் சமாதி இங்குதான் அமைந்துள்ளது. திருமாளிகைத்தேவர், போகர், கருவூரார், கொங்கணச் சித்தர் எனப் பல சித்தர்கள் வழிபட்ட புனிதத் தலமாக திருவாவடுதுறை அமைந் துள்ளது. இந்த தலத்திற்கு நவகோடி சித்தபுரம் எனும் மற்றொரு பெயரும் உண்டு. எனவேதான் இத்தலத்தில் நமசிவாய மூர்த்தி திருவாவடு துறை ஆதீனத்தை 14-ஆம் நூற்றாண்டில் நிறுவனார்.

தேசியத்தில் ஆதீனம்

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியா சுமார் 200 ஆண்டு காலம் அடிமைப்பட்டி ருந்தது. பல ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, "ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து அதிகாரம் இந்தியாவுக்கு மாற்றப்படும்' என ஜூன் மாதம் 4-ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபு அறிவித்தார். அதன்படி ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் முழு சுதந்திரத்தை இந்தியா பெற்றது.

"ஊதுமினோ வெற்றி! ஒலிலிமினோ வாழ்த்தொலிகள்!

ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ!

ஓங்குமினோ!

திதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்!

வேதனைகள் இனி வேண்டா; விடுதலையோ திண்ணம்'

என்கிற மகாகவி பாரதியாரின் எண்ணம் ஈடேறியது. அவர் விரும்பிய வண்ணம் விடுதலை மலர்ந்தது. புதுடெல்லிலியில் ஆட்சி மாற்றம், பதவி ஏற்புவிழா நாடாளுமன்ற மத்திய ஹாலிலில் பக்திப் பூர்வமாகவும், உணர்ச்சிகர மாகவும் நடைபெற்றது. பண்டித ஜவஹர்லால் நேரு ""உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா உயிர்த்துடிப்புடன் விழித்தெழுந்தது'' என அறிவித்தார். பின்னர் செங்கோட்டையில் நம்முடைய மூவர்ணக் கொடியை இந்திய அரசின் முதல் பிரதமர் என்கிற முறையில் கம்பீரமாகப் பறக்கவிட்டு பெருமளவு திரண்டிருந்த பொதுமக்கள்முன்பு உணர்ச்சிகரமாகப் பேசினார்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை யன்று காலை 8.00 மணிக்கு விழாவை வைத்துக்கொள்ள வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபு முதலிலில் முடிவு செய்தார். அந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பு சரியில்லை என ஜோதிடர்கள் கருத்துக் கூறியதால் 14-ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு சுதந்திரம் வழங்கும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. சுதந்திரத் திருவிழா நிகழ்ச்சியை பக்திப் பூர்வமான நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என மூதறிஞர் இராஜாஜி உள்ளிட்ட சில தலைவர்கள் விரும்பி னார்கள். அதனடிப்படையில் நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், சுப்பிரமணிய தம்பிரான் (பண்டார சாமி) தலைமையில் தேவார ஓதுவார் மூர்த்திகள், நாதஸ்வரக் கலைஞர் திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை மற்றும் ஆதீனத்தின் முக்கிய நிர்வாகிகளை அன்றைய குரு மகாசந்நிதானமான ஸ்ரீ அம்பலவாண தேசிகர் புதுடெல்லிக்கு புதிய அரசை வாழ்த்துவதற்காக அனுப்பி வைத்தார். பதவியேற்பு வைபவத்திற்குப் பிறகு பிரதமர் நேரு விடம் ஆதீனம் சார்பில் சைவச்சின்னமான ரிஷிப முத்திரை யோடுகூடிய ஒரு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலும், பிரசாதமும் வழங்கப்பட்டன.

புதிய அரசுக்கு கிரக அமைப்புகளால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக திருஞானசம்பந்தர் பாடிய "வேயுறு தோளி பங்கன் விடமுண்ட' எனத் தொடங்கும் கோளறு பதிகத்தின் கடைசிப் பாடலை ஓதுவார் மூர்த்திகள் பக்திப்பரவசத்துடன் பாடிய பின்பு செங்கோல் வழங்கப்பட்டது. அதன்பிறகு ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற சுதந்திரத் திருவிழா கொண்டாட்டத்தில் மங்கள வாத்தியமான நாதஸ்வரத்தை ராஜரத்தினம் பிள்ளை வாசித்தார். பின்னா ளில் இவரது சேவையையும் திறமையையும் போற்றும்வண்ணம் இந்திய அரசின் தபால்துறை சார்பில் 2010-ஆம் ஆண்டு சிறப் புத் தபால்தலை வெளியிடப்பட்டது.

மகாத்மா காந்தியடிகள் 1934-ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த சமயத்தில், அன்றைய குருமகா சந்நிதானம் ஸ்ரீவைத்தியலிங்க தேசிகர் ஆதீனம் சார்பாக சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி வழங்கினார்.

அதேபோன்று முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் திருவாவடுதுறை ஆதீன மடாலயத்திற்கு வருகை தந்தபோது கஸ்தூரிபா காந்தி நிதிக்கு ரூ. 35,000/- வழங் கப்பட்டது. இப்படி நாட்டின் முக்கிய சரித்திர நிகழ்வுகளில் திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்றது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும்.