குன்றங்களிலெல்லாம் குடிகொண்டிருப்பவன் குமரவேள். இதை "குன்றுதோறாடல்' என குறிப்பிடுகிறார் சங்கப்புலவர் நக்கீரர். "சேயோன் மேய மைவரை உலகமும்' என தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்கிறார்.

Advertisment

அவ்வாறு முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோவில்களுள் ஒன்று தோரணமலை என்னும் எழிலார்ந்த குகைக்கோவில்.

Advertisment

nm

சித்தர்கள் பலரும் வாசம்செய்த மலை இது. குறிப்பாக அகத்தியர் தனது சீடர்களுக்கு மருத்துவம், கணிதம், வானவியல் போன்ற நுட்பமான அறிவியலை போதித்த இடம் இதுவென்பர். அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலையின் ஓர் அங்கமாகவே தோரணமலை திகழ்கிறது.

கபால அறுவை சிகிச்சை என்னும் மிக அரிய- மண்டையோட்டைப் பிளந்து சிகிச்சையளிக்கும் அதிநுட்ப மருத்துவ விந்தையை அகத்திய மாமுனி உலகிலேயே முதன்முதலாக இங்கேதான் செய்தாராம். காசி மன்னனின் தீராத தலைவலியைப் போக்க இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அகத்தியருக்கு உறுதுணையாக விளங்கியவர் தேரையர் சித்தர். எனவே மருத்துவ ஆராய்ச்சி, மாணவர்களுக்கு போதித்தல் போன்ற பணிகளை தேரையரிடம் ஒப்படைத்துவிட்டு அகத்திய முனிவர் பொதிகை மலை ஏகினார் என்பர்.

Advertisment

தென்காசி- கடையம் சாலையில், தென்காசியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், கடையத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது தோரணமலை. தோரணமலை விலக்கு என்னும் இடத்திலிருந்து மலைக்குச் செல்லும் பாதை பிரிகிறது. அங்கு தோரண வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரம் வரை போக்குவரத்து வசதியுண்டு. அடிவாரத்தில் விநாயகர், பாலமுருகன், குருபகவான், சப்த கன்னியர், நவகிரக சந்நிதிகள் உள்ளன.

அங்கிருந்து 1,193 படிகள் ஏறிச்சென்றால் மலையுச்சியிலுள்ள ஆலயத்தை அடையலாம். மலைப்பாதையில் பக்தர்கள் இளைப்பாற ஆறு மண்டபங்கள் உள்ளன. படிகள் அகன்றிருப்பதாலும், மூலிகைக் காற்று இதமாக வீசுவதாலும் மலையேறுவது இனிமையான அனுபவமாகவே இருக்கிறது.

மலையுச்சியிலுள்ள குகைக் கோவிலில் முருகப்பெருமான் கிழக்கு நொக்கியவண்ணம் பேரருள் புரிகிறார். ஆலயத்தின் அருகே வற்றாத சுனை ஒன்றுள்ளது. இதுவன்றி மேலும் சில சுனைகளும் இம்மலையில் உள்ளன. இவை மருத்துவ குணம் கொண்டவை என்கிறார்கள்.

nm

முருகன் ஆலயத்திற்கு சற்று தொலைவில் பத்ரகாளியம்மனின் சந்நிதி ஒன்றும் உள்ளது. இங்குள்ள பாறைகளில் ஆங்காங்கே சிறு குழிகள் உள்ளன. இவை சித்தர்கள் மருந்தரைக்கப் பயன்படுத்தியவையாம்.

சித்தர்கள் வழிபட்ட மிகப் பழமையான இவ்வாலயம் காலப் போக்கில் கவனிப்பாரின்றிப் போயிற்று. முருகன் விக்ரகமும் காணப்படவில்லை. இந்த நிலையில் 1930-ஆவது வருடம், இந்த மலைக்குக் கிழக்கேயுள்ள முத்துமாலைபுரம் என்னும் கிராமத்தில் வசித்துவந்த பெருமாள் என்பவரின் கனவில் தோன்றிய முருகன், தான் மலைமீது ஒரு சுனையில் இருப்பதாகவும், தனது விக்ரகத்தை எடுத்து வழிபடுமாறும் அருளினாராம்.

அதன்படியே ஊர்மக்கள் சிலருடன் மலையேறிச் சென்ற பெருமாள், அங்குள்ள சுனை ஒன்றில் முருகன் சிலை இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்து, சிலையை எடுத்துக் குகைக் கோவிலில் வைத்து வழிபட்டு வந்துள்ளார். பெருமாள் அமரரானபின், அவரது பேரன் ஆதிநாராயணன் அறங் காவலராகப் பொறுப்பேற்று, பொதுமக்கள் உதவியுடன் மலையேறிச் செல்ல வசதியாக படிகள் அமைக்கும் முயற்சியை முன்னெடுத்தார். சுனைகள் சீர்திருத்தப்பட்டன. மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து பக்தர்களின் வருகை அதிகரித்தது. தற்போதைய அறங்காவலராக, ஆதிநாராயணின் மகன் செண்பகராமன் உள்ளார். இவர் இறைப்பணிகளோடு பல்வேறு அறப்பணிகளையும் செய்து வருகிறார்.

அடிவாரத்தில் காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும். பகல் 3.00 மணிவரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகி றார்கள். பௌர்ணமிதோறும் காலை 6.00 மணிக்கு கிரிவலம் நடத்தப்படுகிறது.

இறையருளும் இயற்கையருளும் ஒருங்கே பெற தோரணமலை செல்லலாமே.

-எம்