"புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.'
-திருவள்ளுவர்
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் உலகிலும், தேவருலகிலும் காண்பது அரிது.
மூத்தோர் சொல் அமிர்தம் என்பார்கள். "நல்லவர்களுக்குப் பக்கத்தில்தான் கடவுள் எப்போதும் இருப்பார் என பெரியவர்கள் சொல்வது வழக்கம்.
இதற்கு என்ன காரணம்?... நாம் எப்பவும் நல்லவங்களா இருக்கறதுக்குப் பழகிக்கணும் என்பதற்காகதான்.
நேர்மையாகவும் நல்ல நெறியுடனும் ரொம்ப நாள் வாழ்ந்தார் மாசிலாமணி என்பவர். ஒருநாள் அவரது காலம் முடிஞ்சது. நேரா சொர்க்கத்துக்குப் போய் சேர்ந்தார்.
ரொம்ப பிரியமா வரவேற்பு கொடுத்து உபசரிச்சார் கடவுள். இவருக்கு ரொம்ப சந்தோஷம். "உங்க, அன்பும் ஆசீர்வாதமும் எப்பவும் எனக்கு வேணும் என்றார்.
"என் ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு. ஏன்னா நீ ரொம்ப உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்திருக்கே. அதனால உலகத்தில நீ வாழ்த்துட்டு இருந்தப்போ உனக்குப் பின்னாடியேதான் நான் நடந்து வந்துகிட்டிருந்தேன்' என்றார் கடவுள்.
இந்த வார்த்தையை கேட்டவுடனே அந்த மாசிலாமணி மனசு உருகி, கடவுள் கால்ல விழுந்து வணங்கினார். உடனே "அதோ பார்...' என்று அவனது கடந்தகால வாழ்க்கையைக் காட்டினார் கடவுள். இவரும் கவனிச்சுப் பார்த்தார்.
"அதோ முன்னாடி தெரிகிறதே, அதெல்லாம் உன் காலடிகள். உனக்குப் பின்னாடி தெரிகிறதே, அதெல்லாம் என் காலடிகள். நான் உன் பின்னா டியே தொடர்ந்து வந்துக்கிட்டிருந்தேன்' என்றார் கடவுள்.
அதைக் கூர்ந்து பார்த்துக்கிட்டே வந்தார். இவர் சினிமா வில் தெரியறது மாதிரி தன் பின்னாடியே தொடர்ந்து வந்துக் கிட்டிருத்த காலடிகள், ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், மறைஞ்சு போய் ரெண்டு காலடிகள் மட்டுமே வந்துகிட்டிருந்தது. அதாவது ஒரு ஆளு வர மாதிரி.
அதைப் பார்த்ததும் மாசிலாமணி மனசுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. ஏன்னா, இவரு தன் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்ட நேரமது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/perumal_38.jpg)
"நாம ரொம்பவும் கஷ்டப்பட்டுகிட்டிருந்த நேரத்துல கடவுள் நம்மை தனியா நடக்க விட்டுட்டாரே' என்று நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார் மாசிலாமணி.
மாசிலாமணி முகத்தைப் பார்த்து, "ஏன்... ஒரு மாதிரியா இருக்க?' என்றார் கடவுள்.
வாழ்நாள் பூரா நீங்க என் பின்னாடி வந்து என்னைக் காப்பாத்தியிருக்கிறீங்க. ஆனா நான் கஷ்டப்பட்ட சமயத்துல என்னை தனியா விட்டுட்டீங்களே. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு' என்றார் மாசிலாமணி.
"ஓ... அதைச் சொல்றீயா... அங்கே தனியா தெரியறது. உன் காலடிகள்னா நினைச்ச... அது என் காலடிகள் என்றார்.
"நீ கஷ்டப்பட்ட சமயத்துல, உன்னை என் தோளில் தூக்கிக்கிட்டு நடந்தேன்.
அப்படி நடந்த என் காலடிகள் அல்லவா அது?' என்றார்.
அதைப்புரிஞ்ச உடனே மறுபடியும் காலில் விழந்து வணங்கினார் மாசிலாமணி.
மாசிலாமணிக்கு அருளியதுபோல் நல்லவர்களுக்குத் துணை யாக கடவுள் எப்பவும் இருப்பார்ங்கிறதுக்கு எடுத்துக் காட்டாய் விளங்குகின்ற உன்னதமான ஒரு திருத்தலம் தான் நன்னிலம் ஸ்ரீ மதுவனேஸ்வரா திருக் கோவில்.
இறைவன்: ஸ்ரீ மதுவனேஸ்வரர்.
இறைவி: அருள்மிகு மதுவனேஸ்வரி.
புராணப் பெயர்: மதுவனம் திரு நன்னிலத்துப் பெருங்கோவில்.
தலவிருட்சம்: வில்வமரம், வேங்கை, கோங்கு செண்பகமரம்.
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம், தேவ தீர்த்தம்.
ஆகமம்: சிவாகமம்.
ஊர்: நன்னிலம்.
மாவட்டம்: திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 134-ஆவது தேவாரத்தலமாகவும், காவிரி தென்கரை ஸ்தலங்களில் 71-ஆவது தலமாகவும் போற்றப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக் களுடன் இன்னும் ஏராளமான சிறப்புக் களைக்கொண்டதொரு திருத்தலம்தான் நன்னிலம் ஸ்ரீ மதுவனேஸ்வரர் திருக்கோவில்.
"குளிர்தரு திங்கள்கங்கை குரவோடரவக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமே லுடையான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்கு வேங்கை தடமாதவி செண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப் பெருங்கோவில் நயந்தவனே.''
-சுந்தரர்
முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்த கோச் செங்கட்சோழன் யானையினால் ஏற்பட்ட இடர் காரணமாக யானை ஏறமுடியாத மாடக்கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. அத்தகைய கோவில்களில் நன்னிலத்துப் பெருங் கோவிலும் ஒன்று.
தலவரலாறு
முன்னொரு காலத்தில் தேவர்களின் சபையில் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் மகாமேருவின் ஆயிரம் சிகரங்களையும் மறைத் துக்கொண்டான். எனவே வாயுபகவானால் மகாமேருவை அசைக்க முடியவில்லை. இத னால் எல்லா உலகங்களும் அதிர்வடைந்தது.
உலகமே அழிந்துவிடும் என்று அஞ்சிய தேவர்கள் ஆதிசேஷனிடம் வேண்டிக் கொள்ள மகாபேருவின் ஒரே ஒரு சிகரத்தை மட்டும் விட்டுக்கொடுத்தான். வாயுபகவான் அந்த சிகரத்தைப் பெயர்த்து தெற்கிலுள்ள கடலில்போட எடுத்துச் செல்லும்போது அந்த சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாக தலபுராணம் கூறுகிறது. சமவெளி யாக இருந்த இப்பகுதியில் சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறியது. அதன்மீது கோவில் கட்டப்பட்டதாக தலபுராணம் சொல்கிறது.
கிருதயுகத்தில் சந்திர குலத்தில் தோன்றிய சோமபுரியை ஆண்ட "பிருஹத்' என்ற அரசன் தன் பதவியையும், அரச போகத்தையும் எதிரிகளால் இழந்தான். திருநன்னிலத்திற்கு வந்து தங்கி தவம்புரிந்தான். மன்னன் பிருஹத் ராஜன் செய்த தவப்பயனாக சிவபெருமான் இத்தலத்தில் "தேஜோ லிங்கமாய்' காட்சி தந்தார்.
மன்னன் திருநன்னிலத்து லிங்கத்தில் என்றும் எழுத்தருளியிருக்கவேண்டும் என வேண்டினான். மன்னன் வேண்டுகோளின்படி சிவபெருமான் ஆலயத்தில் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினா ராம். இது சூல தீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மதுதீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜலத்திரன் என்ற அசுரனை வதம் செய்தபோது வீசிய சக்கரம் இத்தலத்தினருகில் விழுந்ததாம். அங்கு உருவான தீர்த்தம் சக்கரக்குளம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இது ஆலயத்தின் கிழக்கே சற்று தொலைவில் உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/perumal1_10.jpg)
புராணச்சிறப்பு
கயிலைமலையில் சகல சாஸ்திரங் களையும், புராணங்களையும் உணர்ந்தவர் சூத மகாமுனிவர். சதானந்தர் முதலிய முனிவர்கள் சூத மகாமுனிவரை வணங்கி "புத்தி முத்தி தரக்கூடிய சிவத்தலங்களைப் பற்றி சொல்லுங்கள்' என விண்ணப்பித்தார்கள்.
சூத முனிவர் திருநன்னிலம் என்னும் சிவத்தலம் பற்றி கூறினார். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் முதலியோர் வந்து வணங்கிட நல்ல புத்தியும் உயர்ந்த முக்தியும் கொடுக்க வல்லதொரு திருத்தலம் திருநன்னிலம். இத்தலம் புராணக் காலத்தில் "ஸீந்தரதவனி' என்றும் இறைவன் பிரகதீஸ் வரர் என்றும் வழங்கப்பட்டது என்று இத்தல பெருமைகளை விரிவாகக் கூறினார்.
திரேதாயுகத்தில் திருநன்னிலம் "தேவாரண் யம் எனப்பட்டது. "ஜலந்தரன்' என்ற அசுரன் கடுந்தவம் புரிந்து பிரம்மாவிடம் பல வரங்கள் பெற்றான். வரத்தின் வலிமையால் தேவேந்திரனையும், தேவர்களையும் போரிட் டுத் தேவ உலகத்திலிருந்து துரத்தினான்.
தேவர் தலைவனும், தேவர்களும் ஜலந் தரனுக்கு பயந்து பெண் வேடம் கொண்டு திருநன்னிலம் திருக்கோவிலில் இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டுவந்தனர். தேவர்கள் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த இறைவன் "நீங்கள் இழந்த பதவியை நாம் மீட்டுத்தருவோம். கவலை கொள்ளவேண்டாம்' என அருளினார்.
ஜலந்தரன் கர்வமடைந்து "நான் பலத்தால் தேவர்களையெல்லாம் வென்றேன். பிரம்மா வையும், நாராயணனையும் வென்றேன். திரிபுரங்களை வென்ற சிவபெருமானையும் வெல்வேன்' எனக் கயிலை மலை சென்றான்.
பரம்பொருளை தன்னோடு போரிட வேண்டும் என அழைத்தான். சிவபெருமான் "ஜலந்தரனே! பகைவர் பலத்தை அறிந்தே போரிடுவது என் வழக்கம். எனவே நான் பூமியில் ஒரு சக்கரம் போடுகிறேன். அதை நீ பூமியோடு பெயர்த்து எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டால் உன்னோடு போரிடு வேன்' என்றார்.
இறைவன் சக்கரத்தைத் தரையில் தோன்றி டச் செய்தார். அசுரன் மிகுந்த பலத்துடன் வருத்தப்பட்டுப் பெயர்த்துத் தூக்கினான். அது கழுத்தளவு வந்ததும் அவ்வசுரன் கழுத்தை வெட்டியது. பிறகு தேவர்கள் இறைவனை வழிபட்டுத் தங்கள் இன்ப உலகத்தை அடைந்தனர். தேவர்கள் வந்து வசித்த இடம் ஆதலால் இத்தலம் தேவாரண்யம் எனப்பட்டது. தேவர்கள் திருக்குளத்தை திருப்பணி செய்ததால் "தேவ தீர்த்தம்' என்றும் வழங்கப்பட்டது.
துவாபரயுகத்தில் திருநன்னிலம் இந்திரன், தேவர்கள் முதலியோர் விருத் தாசுரன் என்பவனால் துன்புறுத்தி துரத்தப் பட்டனர். இவர்கள் விருத்திராசுரனுக்கு பயத்துகொண்டு பூமிக்கு வந்தனர். தேவர்கள் பூமியில் இயற்கை அழகும், நீர்வளமும் நிலவளமும் நிறைந்து விளங்கும் திருநன்னிலத்தைக் கண்டனர். இறைவன் எழுந்தருளியிருக்கும் இயற்கைச் சூழல் இந்திரன், தேவர்கள் மனத்தை ஈர்த்தது. தேவர்கள் இறைவனுக்கு வழிபாடுசெய்து நாளும் வணங்கிவந்தனர்.
இந்நிலையில் விருத்திராசுரன் இந்திராதி தேவர்களைத் தேடிவர தூதர்களை அனுப்பினான். இச்செய்தியறிந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனிக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனிக்களை கூடுகட்டி வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம்கொண்டு வழிபட்டதால் இத்தல இறைவன் மதுவனேஸ்வரர் என்றும் அம்மன் மதுவன நாயகி என்றும் பெயர்பெற்றனர்.
தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் மதுவனம் என்று பெயர்பெற்றது. இப்போதும் சுவாமியின் கர்ப்பக்கிரகத்திலும் கோவிலின் சுற்றுப்புறங்களிலுள்ள மறை இடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்துவருகின்றன.
சிறப்பம்சங்கள்
* இறைவனின் திருநாமம் மதுவனேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாய் அருள்பாலிக்கும் மூலவர்க்கு தேவாரண்யேஸ்வரர், பிரகாச நாதர், பிரகதீஸ்வரர் என பல பெயர்கள் இருந்தாலும் சொல்வழக்கில் மதுவனேஸ்வரர் என்றே பெயர்பெற்றது.
* இறைவியின் பெயர் தேவகாந்தார நாயகி, பிரகாச நாயகி, பிரகதீஸ்வரி என்ற சிறப்புப் பெயர்கள் இருந்தாலும் மக்கள் மனதில் மதுவனேஸ்வரி என்றே நிலைத்திருக்கிறது.
* தலவிருட்சம் கோங்கு, வேங்கை, செண்பகமரங்கள் தலத்தை சுற்றி காரணப் பெயர்களோடு இருந்தாலும் வில்வமரம்தான் பிரதான தலவிருட்சமாய் விளங்குகிறது.
* பிரம்மன் தன் தொழில்நலம் வேண்டி மதுவனேஸ்வரரை வழிபட்டார். லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜைவழிபாடு செய்ததால் அதற்கு பிரம்மலிங்கம் என்று பெயர். இந்த லிங்கத்தை நாளும் வழிபடுவோர் தம் தொழிலில் மேன்மையும் சிறப்பும் அடைவர்.
* அகத்தியர் இத்தலத்திற்கு எழுந்தருளி மதுவனேஸ்வரரை வணங்கி பின் தனியொரு லிங்கத்தை ஸ்தாபித்து அதில் மதுவனேஸ் வரரை எழுத்தருள வேண்டினார். வேண்டு வோர்க்கு வேண்டுவதை நல்கும்.
* கருணைக் குணமாகக்கொண்ட குணக் கடலாகி மதுவனேஸ்வரர் அகத்தியர் வேண் டுதல்படி அந்த லிங்கத்தில் எழுந்தருளி "அகத் தீஸ்வரராக' காட்சியளித்து அருள்கிறார்.
ப் சூரியன் இத்தல ஈசனே வழிபட்டு வலிமைபெற்றான் என்றும், மதுவனேஸ் வரரை வழிபடுபவர்களுக்கு சூரியதோஷம் இனி இல்லை. அறவே நீங்கும் என்கிறது தலபுராணம்.
* இத்தல அம்பிகை மதுவன நாயகி வலக்கரத்தில் மணி மாலையும் இடக்கரத்தில் நீலோற்பவ மலரும், வரம் அருளும் திருக் கரமும், திருவடிகளைகாட்டும் திருக்கரமும் கொண்டு நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கிய அம்பிகை அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாக அருளாட்சி செய்கிறாள்.
மதுவனநாயகி சந்நிதியில் சண்டீஸ்வரி சந்நிதி இல்லை. காரணம் விரும்பியதை நேரிடையாக அருளும் அருட் சக்தியாக இத்தலத்தில் மட்டுமே அம்பிகை அருள்கிறாள். கையில் மணிமாலையுடன் காட்சியளிப் பது ஞானம் கல்வியருளவும், நீலோத்பவ மலர் செல்வங்களே அருளவும், வரம் அருள் தரும் திருக்கரம் வீரத்தை அருளவும், திருவடிகள் வீடு பேற்றை அருளவும் மதுவனநாயகியின் கருணையால் அருட்பார்வையால் பெறுவோம் என்கிறார் ஆலய பிரதான அர்ச்ச கரான சிவகுமார் சிவாச்சாரியார்.
* சூரியனை பார்த்தவண்ணம் அனைத்து கிரகங்களும் இருப்பதும், சூரியனும், குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும் சிறப்பான ஒன்று.v ப் சூரியனின் அருகில் பைரவர் தனிச் சந்நிதி கொண்டு அருள்வதும், சனிபகவான் காக்கை வாகனத்துடன் தனிசந்நிதி கொண்டு அருள்பாலிப்பதும் சிறப்பம்சம் வாய்ந்தது.
* சண்டிகேஸ்வரர் மனைவியுடன் அருட் காட்சியளிப்பது தம்பதி ஒற்றுமை மற்றும் வம்சவிருத்திக்கு உறுதுணையாக அருள் வதும் தனிச் சிறப்பு.
* பிரதோஷம், மகாசிவராத்திரியன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், திருவாதிரை இம்மூன்று திருவிழாவிற்கும் சுவாமி புறப்பாடு உண்டு.
* சுந்தரரால் பதிகம் பாடிய இத்தலத்தில் ஆடிமாதம் சுந்தரருக்கு குருபூஜை சிறப்பாக நடக்கும்.
* ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமிக் கும் தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தோடு சேர்த்துவரும் நாள் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கிறோம். இந்நாளில் நிலா பூமிக்கு மிக அருகில் வரும் என்பதால் பார்க்க பெரிதாக தெரியும். சித்ரா பௌர்ணமியன்று இரவு நிலவு ஒளியில் நதிக்கரைக்கு குடும்பத்தோடு சென்று சாப்பிடும் பழக்கம் உண்டு. நவீன காலத்தில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிடுவார்கள். சித்ரா பௌர்ணமி நாளையொட்டி சித்ர குப்தர் பூஜை நடத்துவார்கள். மனிதர்களின் பாவ- புண்ணியங் களை எழுதி எமனுக்கு கொடுக்கும் பணி இவருக்கு. இவர் சித்ரா பௌர்ணமியன்றுதான் பிறந்தார். அன்றைய தினம் இவரை வணங்கினால் நீண்ட ஆயுளை யும் உடல் வலிமையையும் கொடுப்பார்.
இத்தகைய சிறப்புமிக்க சித்ரகுப்தர்க்கு பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்யக்கூடாது. எருமைப் பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்யவேண்டும் என்று சித்ரகுப்தர் வரலாறு கூறுகிறது.
இடக்கையில் ஏடும் வலக்கையில் எழுத்தாணியுமாக சிலாரூபத்தில் அருட் காட்சியளிக்கும் சித்ரகுப்தரை இத்தலத்தில் வருகிற குரோதி வருஷம் சித்திரை மாதம் 10-ஆம் நாளான சித்ரா பௌர்ணமியன்று (23-4-2024) ஐந்துமுறை வலம்வந்து தீபமேற்றி வழிபாடுகள் மேற்கொண்டால் சகலதோஷங்களும் நிவர்த்தியாகி சகல நலன்களையும் பெறுவதோடு மோட்சம் கிட்டுமென்று ஆலய அர்ச்சகர் சிவகுமார் சிவாச்சார்யார் பெருமிதத்துடன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில் நானிலம் போற்றும்வகையில் நல்வாழ்வையருளும் நன்னிலத்து நம்பெருமான் மதுவனேஸ்வரர், மதுவனேஸ்வரியை சித்ரா பௌர்ணமியன்று அகமகிழ்வோடு வழிபடுவோம். வாழ்வில் இகபர சுகங்களைப் பெறுவோம் என்கிறார்.
திருக்கோவில் அமைப்பு
சோழநாட்டில் முற்காலச் சோழர் தலைநகரமாக விளங்கி, சோழ மன்னர் கள் முடிசூட்டிக்கொள்ளும் சிறப்புமிக்க ஊர்களில் ஒன்றாக விளங்கியும், பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்திலே முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் நலந்தரு நன்னிலம் என்ற சுந்தரர் பதிகத்தில் பாடியபடி நாளும் நலம்தரும் சோலைகள் சுற்றிலும் சூழ்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இரண்டு நிலை கோபுரத்துடன் 270 அடிநீளமும் 135 அடி அகலம்கொண்ட பரப்பில் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்து அமைந்துள்ளது.
முகப்பு கோபுரவாயில் வழியே நுழைந்தால் ஆலயத்தின் நடுவிலே மூலவர் சந்நிதி சில படிகளேறி செல்லும்வண்ணம் ஒரு கட்டுமலைமீது அமைந்துள்ளது. கொடி மரவிநாயகர் நந்திபலிபீடம் கடந்தால் தெற்கு நோக்கி அம்மன் சந்நிதி உள்ளது. மாடக் கோவில் அமைப்பிலுள்ள கருவறையில் மூலவர் மதுவனேஸ்வரர், உயர்ந்த தளத்தில் கிழக்கு நோக்கியும், அவருக்கு முன்பாக பிரதோஷ நந்தி உள்ளது. மேல் சுற்றில் சோமாஸ்கந்தர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும், கோஷ்டத்தில் விநாயகர் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை முறைப்படி உள்ளன.
படிகளில் கீழே இறங்கினால் பிரம்மன் வழிபட்ட பிரம்மரீஸ்வரர், அகஸ்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர், தென்புறம் வெளிசுற்றில் தலவிருட்சம் வில்வம், வேம்பு, செண்பக மரங்கள் உள்ளது. திருச்சுற்றில் க்ஷேத்திர விநாயகர், வள்ளி- தெய்வானையுடன்கூடிய சுப்ரமணியர் மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் மனைவியுடன் காட்சிதரும் நிலையில் அருள்கிறார். சூரியன், பைரவர், சனீஸ்வரர், சித்ரகுப்தன் சந்நிதி உள்ளது. சூரியனைப் பார்த்தவாறு நவகிரகங்கள் உள்ளது. வடக்கே குபேர லிங்கம், கிழக்கே இந்திரன் ஸ்தாபித்த லிங்கம், தெற்கே யமன், மேற்கே வருணலிங்கம் உள்ளது. தீர்த்தக் கிணறு ஈசான்யதிக்கில் உள்ளது. மடப்பள்ளி மற்றும் திருக்கோவில் அலுவலகம் உள்ளது.
சுந்தரவாணி, மதுவனம், தேவாரண்யம், சுந்தரவனம் மற்றும் பிரஹத்புரம் என்ற வரலாற்றுப் பெயர்களுடன் விவசாய நிலத்தால் சூழப்பட்ட நன்னிலத்துப் பெருங் கோவிலாம்; சோழ மன்னன் கோச்செங்கட்ட சோழனால் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டு படிப்படியாக வளர்ச்சிபெற்று 15-9-1996 அன்றும், அதன்பின் 14-9-2008 அன்று கடைசியாக 24-8-2022 அன்று குடமுழக்கு கண்டு தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி, பொலிவுடன் அருட்காட்சி அளிக்கும் ஆலயமாம் நன்னிலத்து பெருங்கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து தரிசிப்பது அவசியம் என்கிறார் செயல் அலுவலர்.
நடைதிறப்பு: காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ மதுவனேஸ்வரர் திருக் கோவில், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். நன்னிலம் (அஞ்சல்) 610 105.
பூஜை விவரங்களுக்கு: சிவகுமார் சிவாச்சார்யார் அலைபேசி: 79043 74770.
அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், மயிலாடுதுறை யிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவிலும்; கும்ப கோணம்- நாகப்பட்டினம் பேருந்து சாலை யில் ஸ்ரீவாஞ்சியத்திலிருந்து கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நன்னிலத்திற்கு பேருந்து வசதி உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/perumal-t.jpg)