ஆழ்ந்த சிவ பக்தர்களை நாயன்மார்கள் என்கிறோம். அவ்வாறே ஆழ்ந்த விஷ்ணு பக்தர்களை ஆழ்வார்கள் என்பர். நாயன்மார்கள் அறுபத்துமூவர்; ஆழ்வார்கள் பன்னிருவர். ஒவ்வொரு ஆழ்வாரும் விஷ்ணுவின் அம்சமாக உதித்தவர்களே. அவர்கள் பாடிய துதிகள் திவ்யப் பிரபந்தம் எனப்படும். அவை நான்காயிரம். ஆழ்வார்கள் பாடிய பாடல் எண்ணிக்கை, அவர்களது திருமால் அம்சம், அவர் களது பிறந்த தினம் ஆகியவை வரிசைக்கிரமமாக கீழே தரப்பட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nammalvar.jpg)
பொய்கையாழ்வார்- 100- சங்கு- ஐப்பசி திருவோணம் பூதத்தாழ்வார்- 100- கதை- ஐப்பசி அவிட்டம் பேயாழ்வார்- 100- நந்தகம் (வாள்)- ஐப்பசி சதயம் திருமழிசையாழ்வார்- 216- சுதர்சனம் (சக்கரம்)- தை மகம் நம்மாழ்வார்- 1,296- கௌஸ்துபம் (மணி)- வைகாசி விசாகம் மதுரகவியாழ்வார்- 11- குமுதம்- சித்திரை, சித்திரை குலசேகராழ்வார்- 105- கௌஸ்துபம்- மாசி புனர்பூசம் பெரியாழ்வார்- 473- கருடன்- ஆணி சுவாதி ஆண்டாள்- 173- பூதேவி- ஆடிப் பூரம் தொண்டரடிப் பொடியாழ்வார்- 55- வனமாலை- மார்கழி கேட்டை திருப்பாணாழ்வார்- 10- ஸ்ரீவத்ஸம்- கார்த்திகை ரோகிணி திருமங்கையாழ்வார்- 1,253- கார்த்திகை ரோகிணி இவற்றுடன் ஸ்ரீராமானுஜ அந்தாதி 108 என அனைத்தும் சேர்ந்து 4,000 திவ்யப் பிரபந்தப் பாடல்கள் ஆகின.
ஆழ்வார்கள் பாடிய தலங்களை 108 திவ்யதேசங்கள் என்பர். அவர்கள் பாடிய திவ்யப் பிரபந்தங்களில், மூன்றில் ஒரு பங்கு பாடியவர் நம்மாழ்வாரே. குறைவாக பத்து பாடல்கள் மட்டுமே பாடியவர் திருப்பாணாழ்வார்.
வைகாசி விசாகத்தில் உதித்தவர் சடகோபர் என்னும் நம்மாழ் வார். அவர் சரிதத்தை சற்று சிந்திப் போமா... இவர் காலம் கி.பி 8-9-ஆம் நூற்றாண்டு என்பர்.
பொதுவாக கங்கையைப் புனிதநதி என்று கூறினாலும், ஸ்ரீமத் பாகவதம் தாமிரபரணி எனும் பொருநை ஆற்றை சிலாகித்து, அங்கு பாகவதோத்தமர்கள் அவதரிப்பார்கள் என்று கூறுகிறது. நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், மணவாள மாமுனிகள் போன்றவர்களைக் கூறலாம். நவ கயிலாயங்கள், நவ திருப்பதிகள், நவகோள் தலங்களும் உள்ளன.
அவற்றுள் திருநகரி அல்லது திருக்குருகூர் என்னும் தலமும் உண்டு. வேளாளர்கள் உழவுத்தொழில் செய்து வாழ்ந்துவந்த ஊர். திருமாலின் திருவடிக்குத் தொண்டு செய்வதையே கடமையாகக்கொண்ட காரியர்- உடைய நங்கையார் என்னும் தம்பதி கள் அங்கு வாழ்ந்துவந்தனர். (அத்தல பெருமாளின் பெயர் பொலிந்து நின்ற பிரான்; குருத் தலம் எனப்படுகிறது.) பல நாட் களாகப் பிள்ளைப்பேறு இல்லாததால் திருக்குறுங்குடி தலம் சென்று நம்பி எனும் பெருமாளை ஆழ்ந்து வணங்கினர்.
அவர்களது பக்தியில் மகிழ்ந்து, "நானே உங்களுக்குப் புதல்வனாகப் பிறப்பேன்' என்று பிரசாதம் தந்தாராம் பெருமாள்.
தம்பதியர் திருநகரி வந்துசேர்ந்தனர்.
நாளடைவில் வைகாசி மாதம் 12-ஆம் நாள், விசாக நட்சத்திரம், வளர்பிறை வெள்ளிக்கிழமையில் குழந்தை பிறந்தது. திருமாலின் கௌஸ்துபம் எனும் அம்சமாக- சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்தது என்பர். பெருமாள் என்றால் குடை, ஆசனம், படுக்கைபோன்று அனந்தாழ்வாரும் ஆதி சேஷனும் வரவேண்டியதுதானே. எனவே அவர் ஒரு புளியமரமாக ஆனார். அந்த மரத்தின் கீழே குழந்தை வளர்ந்தது. இன்றும் அந்தப் புளியமரத்தைக் காணலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nammalvar1.jpg)
குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாள் குழந்தையை திருநகரி கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அந்த புளிய மரத்தின் அடி யிலேயே குழந்தை வளர்ந்தது. குழந்தை பால் உண்ணாமல், அழாமல் வினோதமாக மாறுபட்டிருந்தது. எனவே மாறன் என்று பெயரிட்டனர்.
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது ஞானம் பெற்றதாக இருந்ததாம். பிறந்தபின்பு அழுதல் போன்ற செயல்கள் இல்லை. அதற்குக் காரணம் சடம் எனும் வாயு சூழ்ந்துகொள்வதால்தான் குழந்தை அழும். சடவாயு அண்டியபோது அந்தக் குழந்தை கோபம்கொண்டதாம். ஆக, அவர் பெயர் சடகோபன் ஆயிற்று.
இந்தநிலை 16 வருடங்கள்! பெருமாள் அருளிய குழந்தை இப்படி வினோத விகார மாக உள்ளதே என பெற்றோர் விசனம் கொண்டு பெருமாளை வணங்க, பெருமாள் சேனை முதல்வரை அனுப்பி சகல கலைகள், மந்திரங்களை உபதேசிக்கச் செய்தாராம். சட மாக இருந்தவர் ஞானக் களஞ்சியமானார்.
திருக்கோளூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருமாலின் அம்சமாக அவதரித்தவர் மதுரகவியாழ்வார். கவிதைகள் புனைதல், பாடுதல் போன்றவற்றில் சிறந்த வராக விளங்கியதால் அவரது பெயர் மதுரகவி என்றாயிற்று. தல யாத்திரைகள் பல செய்தார். எங்கிருந்தாலும் திருக்கோளூர் பெருமாளை மறக்காமல் தென்திசை நோக்கித் தொழுவாராம். ஒருசமயம் அயோத்தி நகரிலும் அவ்வாறு செய்ய, தென்திசையில் ஒரு பேரொளி தோன்றியது. அவர் வியந்து அந்த ஒளியை அறியும் பொருட்டு அதனை நோக்கி வந்துகொண்டிருந்தார். இறுதியில் திருநகரியில் சடகோபன் இருந்த இடம்வந்து சேர்ந்தார்; வியந்தார். சடகோபர் யோக நிலையிலிருந்தார். எனவே ஒரு சிறிய கல்லை யெடுத்து ஓசை வரும்படி இவர் வீச, சடகோபர் கண்விழித்தார். சடகோபர் பேசுவாரா என்னும் சந்தேகம் இவருக்குத் தோன்ற, மதுரகவியாழ்வார், "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?' என்று கேட்டார். 16 ஆண்டு களாக பேசாத சடகோபர் உடனே, "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றார். ஆக, உள்ளறிவு டையவர் என்று மதுரகவியாழ்வார் உணர்ந் தார். சடகோபரிடம் தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். அச்சமயம் அவரது வாய் பெருமாளைத் துதித்தது.
திருவிருத்தம் (100), திருவாசிரியம் (10), பெரிய திருவந்தாதி (87) ஆகியவை பிரபந்தங்களில் போற்றப்படுகின்றன. இவை ரிக், யஜுர், அதர்வண வேத சாரமே. திருவாய்மொழி (1,102) சாம வேத தத்துவ விளக்கம் என்பர். இவற்றை மதுரகவி வேண்ட அவர் உபதேசித்தாராம். நாதமுனிகளும் உபதேசித்துள்ளார்.
35 ஆண்டுகளே வாழ்ந்தவர் சடகோபர். வகுளாபரணர், பராங்குசர், காரிமாறன், அருள் மாறன், திருவாய்மொழிப் பெருமாள், குருகைப் பெருமாள், குருகூர் நம்பி என பல பெயர்கள் இவருக்குண்டு. எனினும் இவரை நம் ஆழ்வார் என்று கூறியதால் நம்மாழ்வார் என்ற பெயரே நிலைத்தது. ஆழ்வார்கள் பெருமாளைத்தான் பாடுவார்கள். மதுரகவியாழ்வாரோ, "கண்ணி நுண் சிறுத்தாம்பு'' என்று 11 பாடல்களில் நம்மாழ்வாரையே தெய்வமாகப் பாடினார்.
அவரது நம்மாழ்வார் துதி ஒன்றை சிந்திப்போமா...
"கண்டுகொண்டு என்னைக் கரிமாறப்பிரான்
பண்டை வல்வினை மாற்றி அருளினான்
எண்டிசையும் அறிய வியம்புகேன்
ஒண்டமிழ் சடகோபன் அருளையே.'
கரிமாறனாகிய நம்மாழ்வார் என்னை அடையாளம் கண்டு ஆட்கொண்டு, யான் முன்செய்த தீவினைகள் அனைத்தையும் நீக்கினார். தமிழால், இனிய பாக்களால் தத்துவங்களைப் படைத்த அவர் அருள் எட்டு திசைகளிலும் பரவிட விரும்புகிறேன் என்கிறார்.
இப்போது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, நம்மாழ்வார் பாடல்களில் (1,296) ஒரு சிலவற்றை சிந்திப்போமா...
திருவிருத்தம் (100 பாடல்கள்)
பிறப்பு- இறப்பென்னும் சங்கிலித் தொடர் அழியவேண்டுமென்று பக்தனின் விண்ணப்பமாக உள்ளது.
"பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருள்வாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே.'
"சுவாமி, அடியேன் சம்சாரத் தொடர் தொடராமல் இவ்வளவோடும் அற்றுப்போக அருள்செய்ய வேண்டும்' என்று வேண்டுகிறார். "யாம், அடியேன்' என்னும் இரு சொற்களால், இந்த வேண்டுதல் தனக்கு மட்டுமல்ல; அடியவர் யாவரையும் குறிக்கும்.
"நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர்
வல்லார் அடி கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையல் நூறும் வல்லார் அழுந் தார் பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே.'
இந்த 100 பாடல்களையும் ஆழ்ந்து ஓதுபவர்கள் திருமால் அருளால் பிறப்பு- இறப் பென்னும் தொடர் நீங்கி முக்தி பெறுவர். இதனில் திருவேங்கடம், திருவெண்கா, திருவரங்கம் ஆகிய மூன்று திருப்பதிகளையும் துதிக்கிறார்.
திருவாசிரியம் (10)
இது எஜுர் வேத சாரம். ஆசிரியப் பாக்களால் அமைந்ததால் திருவாசிரியம் எனப்பட்டது. சம்சார பந்தம் அழிந்து, பரமபதம் அடைந்தபின்பு அனுபவிக்கக்கூடிய எம்பெருமானின் மேன்மையையும், வடிவழகையும் ஆழ்வார் அனுபவிக்கிறார்.
பெருமாள் அல்லாது சிவன், பிரம்மன், தேவேந்திரன் முதல் எவரையும் தெய்வமாக வணங்கமாட்டேன் என்கிறார்.
பெரிய திருவந்தாதி (87)
இது அதர்வண வேத சாரம். "பெருமாளே, உலகங்களுக்கெல்லாம் தலைவனாகிய நீ என் செவியுள் புகுந்து எனக்குள் அடங்கி யிருப்பதால் நீ பெரியவனல்ல; நானே பெரியவன்' என்கிறார்.
"பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் ஆவாரும் நீ பேசில்- ஏற்றையோ
மாய மாமாயவனை மாயமுலை வைத்த
நீயம்மா காட்டும் நெறி.'
"நீ பெரிய மாயவன். என்னைப் பெற்ற
தாய்- தந்தை நீயே. எனது ஆசானும் நீயே.
பூதனையைக் கொல்ல, பாலருந்துவதுபோல் அவள் உயிரையேக் குடித்தாயே... ஆக எனக்கு ஞானவழி காட்டியது வியப்பே' என்கிறார்.
"மனமே, நம் பாவங்களைத் தொலைக்க பெருமாள் திருவடிகளையே துதிசெய். எப்போதும் அகலாத சக்கரம் ஏந்தும் அந்த பெருமாள் திருவடிகளை உற்சாகத்துடன் துதிசெய் என்பதே எனது உபதேசமாகும்' என்கிறார்.
திருவாய்மொழி (1,102)
இதனை தமிழ்மறை, திராவிட வேதம் என்பர். இது சாமவேத சாரம். திருவாய்மொழித் துதிகள் வைணவ தத்துவமான அர்த்த பஞ்சகம் என்பர்.
ப் ஆன்மாவின் இயல்பு
ப் ஈஸ்வரனின் இயல்பு
ப் ஆன்மா அடையும் பயன்
ப் பயனையடைய உபாயம்
ப் அப்பயனை அடைய பகையாய் உள்ளவை
முதல் பாடல்:
"உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனமே.'
"மனமே, உயர்ந்த ஆனந்தம் முதலிய நற்குணம் உடையவன், என்னிடமுள்ள அறி வின்மையை நீக்கி ஞானத்தையும் பக்தியையும் அருளியவன், மறதியற்ற நித்திய சூரிகளுக்குத் தலைவனானவன் எவனோ, அந்த எல்லா துன்பங்களையும் நீக்குகின்ற ஒளிமயமாக உள்ளவனின் திருவடிகளை வணங்கி பிறவிக் கடலி-ருந்து கரையேறுவோம்.'
இறுதித் துதி (1,102)
"அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந் தார் உயர்ந்தே.'
தன்னைக் காணவேண்டுமென ஆசைப் பட்டவர்களின் ஆசையைத் தீர்த்துவைத்த அரி எனும் பெருமாள், சிவனுக்கும் பிரம் மனுக்கும் அந்தராத்மாவாய் உள்ளான். திருக் குருகூரில் அவதரித்த சடகோபர் அத்தகைய பெருமாளை வணங்கி முக்தி எய்தினார்.
பக்திப் பரவசத்தால் எழுந்தவை அப்பாசுரங் கள். அதனைத் துதிப்பவர்கள் சம்சாரத்தில் இருந்தாலும் நித்திய சூரிகளுக்கு ஒப்பானவர்கள்.
நம்மாழ்வாருக்கு எனில் அது பெருமாள் வாக்கே. நாதமுனிகள் சடகோபர்மீது- திருவாய்மொழிமீது பாடிய ஒரு துதியுடன் நிறைவுசெய்வோம்.
"பக்தாம்ருதம் விஸ்வஜானு மோதனம்
சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சகஸ்ர சாது உபநிஷத் சமாககம்
நமாம்யஹம் த்ராவிட வேத சாரம்.'
அடியவர்களுக்கு அமுதமாக இருப்பதும், ஆனந்திக்கச் செய்வதும், உபநிடதங்களின் தொகுதியாக இருப்பதுமான நம்மாழ்வார் அருளிய தமிழ்வேதக் கடலை நான் வணங்கு கிறேன் என்பது இதன் பொருள்.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/nammalvar-t.jpg)