நக்கீரர் ஒரு சங்கப்புலவர் என்கிறோம். "கீர்' என்றால் சொல் என்று பொருள். நக்கீரர் என்றால் சிறப்பான சொல்லை உடையவர்; சிறந்த சொற்களைக் கூறுபவர்; அறிந்தவர் எனலாம். நக்கீரர் பெரும்புலவர். கணக்காயரின் மைந்தர். கருணீகர் குலம். கணக்காயர் என்றால் தமிழாசிரியர் எனப் பொருள். "சிங்கததிற்குப் பிறந்த குட்டி குரங்காகுமோ' என்பது போல், நக்கீரரும் நற்புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்தார். சங்கப்புலவர்களின் தலைவ ராய்த் திகழ்ந்தவர்.
துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், நக்கீரரை "இலக்கியப் புலவர் சிங்கம்' என்பார். "இறையனார் அகப் பொருள்' உரைநூலை நக்கீரர் செய்தார். முருகப்பெருமானே உக்ர சிம்மன் எனும் பெயரில் ஊமையாகப் பிறந்து, "அந்த உரை மிகச்சிறந்தது' என்று இணங்கும் வகையில் கண்ணீர் மல்கி மகிழ்ந்து தலையசைத் தாராம் எனில், நக்கீரரின் உன்னதப் புலமையை அறியலாம்.
நக்கீரர், தேவார மூவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோருக்கு முற்பட்டவர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
நக்கீரர் பெயரில் கீழ்க்கண்ட நூல்களும் குறிக்கப்பட்டுள்ளன.
1. கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
2. திரு ஈங்கோய்மலை எழுபது
3. திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
4. திரு எழுக்கூற்றிருக்கை
5. பெருந்தேவ பரணி
6. கோபப்ரஸாதம்
7. கார் எட்டு
8. போற்றிக் க-வெண்பா
9. திருக்கண்ணப்பதேவர் திருமறம்
ஆனால் அவை நக்கீர தேவநாயனார் என்பவரால் இயற்றப்பட்டவை; அவர் தேவார மூவருக்கப் பிந்தையவர் என்பர். நக்கீரர் பாடல்களை வேதமொழி. மறைமொழி, மந்திரமொழி என்பர். அதாவது அம்மொழிக்கு சக்தி, பலன் அதிகம்.
ஒருசமயம், நக்கீரர் பட்டிமண்டபத்தில் அமர்ந்திருந்த போது, குயக்கொண்டான் என்பவர் வந்து "வடமொழியே (சமஸ்கிருதமே) உயர்ந்தது; தமிழ் தாழ்ந்தது' என்று இகழ்ந்து கூறினார்.
தமிழ்மொழியை உயிரினும் மேலாகக் கருதிய நக்கீரர் தமிழில் ஒரு கவிதை பாட, குயக்கொண்டான் மாண்டு போனான். சபையோர் அதிர்ந்துபோயினர்! சுதாரித்துக் கொண்டு, "அவர் அறிவி-, தமிழின் வ-மை தெரியாதவர். அதனால் அவரைத் தமிழ்ச் சொல்லாலேயே மாய்ப்பது உசிதமல்ல. மாய்த்தவரை உய்விக்கவேண்டியது உமது பொறுப்பு' என்றனர். நக்கீரரும் மன சமாதானமடைந்து,
"ஆரியம் நன்றுதமிழ் தீதென உரைத்த
காரியத்தால் காலக்கடன் பட்டானை சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனார்
ஆணையினால்
செந்தமிழே சீர்க'
என்றதும், மாய்ந்த குயக்கொண்டான், உயிர்பெற்றெழுந்து மன்னிப்பு கோரினான். நக்கீரர் சொற்கள் மந்திரத் தமிழ் என்பதற்கு இதுவும் சான்று!
தருமிக்குப் பொற்கிழி வழங்க சிவபெருமான் திருவிளையாடல் புரிந்த கதை அனைவரும் அறிந்ததே. "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா' என்னும் பாண்டிய மன்னனின் சந்தேகத்தைத் தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.
சுந்தரேஸ்வரரே புலவராக வந்து, "கொங்குதேர் வாழ்க்கை' என்னும் பாடல் மூலம் "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டு' என்றார். தலைமைப் புலவர் நக்கீரர் அதை மறுத்து வாதிட்டார். சொற்போர் நீண்டது. இறுதியில் புலவராக வந்த சிவன், "மலைமகள் உமாதேவியின் கூந்த-ல்கூட மணமில்லையோ?' என்று கேட்க, "இல்லை' என்று உறுதியாகக் கூறினார் நக்கீரர். "ஞானப்பூங்கோதை என்னும் பெயரை நீ கேள்விப்பட்டதில்லையா?' என்று சிவன் கேட்க, "அதுவும் தவறே' என்றார் நக்கீரர்.
சிவபெருமான் கோபம்கொண்டு நெற்றிக் கண்ணைத் திறக்க, "நெற்றிக்கண் திறப் பினும் குற்றம் குற்றமே' என்றார் நக்கீரர். சிவபெருமான் கனலைக் கக்க, அந்தத் தீ நக்கீரரைத் தகித்தது. ஈசனருளால் அவர் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி வெப்பம் தணிந்தார். ஆயினும் அவரை தொழுநோய் பீடித்தது. அவர் சிவபெருமானைப் பணிந்துவேண்ட, "கயிலையை தரிசித்தால் உன் நோய் நீங்கும்' என்றார் ஈசன்.
அதன்படி அவர் கயிலைநோக்கிப் புறப் பட்டார். திருப்பரங்குன்றம் வந்தபோது வழிபடும் நேரமாயிற்று. குளக்கரையில் அமர்ந்து தியானிக்கலானார். அப்போது "கற்கிமுகி' என்னும் பூதம் அவரை ஒரு மலைக்குகையில் அடைத்தது. யார் அந்த கற்கிமுகி? ஒருசமயம் தேவமாது ஒருத்தி சுக்ர முனிவரின் சாபத்துக்கு உள்ளானாள். அவர், அவளை குதிரைமுகம் கொண்ட அரக்கி பூதமாக சபித்தார். அவள், முனிவரைப் பணிந்து வணங்க, "பத்து வருடங்களுக்குள் சிறந்த 1000 முனிவர்களை ஒரே நாளில் ப-கொடுத்தால் உன் சாபம் நீங்கி மீண்டும் தேவமாது ஆவாய்' என்றார். அந்த பூதம் 999 புலவர்களை முன்பே சிறைப் பிடித்து வைத்திருந்தது. 10-ஆவது ஆண்டு முடியும் தறுவாயில், நக்கீரர் அடைபட்டார். மற்ற புலவர்கள் நக்கீரரை வைதனர். "நாம் யாவரும் அந்த கற்கிமுகியால் ப-யிடப்படப் போகிறோமே' என்று கூச்ச-ட்டனர். நிலைமையை உணர்ந்த நக்கீரர், "எவரும் பயமுறத் தேவையில்லை' என்று கூறி, முருகனைத் திருமுருகாற்றுப் படையால் உள்ளமுருகித் துதித்தார். புலவர்களையும், "தமிழ்க்கடவுளான முருகனைத் துதியுங்கள்' என்றார். முருகன் வேல் வந்து கற்கிமுகியை அழித்து, புலவர்களைக் குகையினின்று வெளியேற்றியது.
முருகன் தோன்றினான்! புலவர்கள் யாவரும் முருகன் தாள் பணிந்தனர். நக்கீரர் தமக்கு வந்த நோயைப் பற்றியும், கயிலாய தரிசனத்தைப் பற்றியும் கூறினார். முருகன், "இந்த ஸ்வர்ணமுகி நதியில் அமிழவும். தென் கயிலாயமான காளத்தீசனை தரிசனம் செய்வீராக. உமது பிணி தீரும்' என்றார்.
அவ்வாறே நீராடி, காளத்தீசனை கயிலை பாதி, காளத்தி பாதி என்று அந்தாதி பாடிட, அவர் நோய் தீர்ந்ததாம். காளத்திநாதனின் அம்பிகையின் பெயர், ஞானப்பூங்கோதை. முன்பு மதுரை சோமசுந்தரரிடம், "ஞானப் பூங்கோதை கூந்த-லும் இயற்கை மணம் இல்லை' என்று கூறியதற்காக, அந்த தேவியின் தலத்திற்கே வந்து பாடியபின் அவர் துயர்தீர்த்தார் போலும்!
புராணக்கதை எவ்வாறாகிலும், சிவன் பாடலுக்குக் குறைகூறிய நக்கீரர், சிவகுருநாதனை "திருமுருகாற்றுப்படை' என்று துதித்துப்பாட, தென்கயிலைநாதனை தரிசித்தும் பாட, துயர் களைந்தது. ஆக, துயர்களையும் பாடல் திருமுருகாற்றுப்படை!