ன்பு தெய்வமான என்னப்பன் கந்தக் கடவுள் அருளாலும் சர்வரோக நிவாரணியான எங்கள் குலதெய்வம் அருள் திரு வைத்தியநாதசுவாமியின் அருளாலும் மதுரை பிரார்த்தனா ஹோமியோபதி மருத்துவமனையின் தலைமை மருத்துவராகவும், நிர்வாக இயக்குனராகவும் உள்ளேன்.

Advertisment

cc

இந்த இளம் வயதிலேயே வாழ்வில் நல்லதொரு நிலையை அடைந்த ரகசியத்தை, இக்கட்டுரையின் வாயிலாக உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு மனிதனானவன் இந்த பூமியில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து, மறைந்து செல்கிறான். இம் மனிதனானவன் தனக்கென வகுத்துக் கொள்ளும் குணாதிசயங்களாலும் பிறர்க்கு செய்யும் நன்மைகளாலும் தனது சுற்றார் இதயங்களில் நீங்கா இடம் பெறுகிறான். இதுவே இறைமுக்தி அடைவதற்கான மிக எளிய வழி என்று நான் திண்ணமாக நம்புகிறேன். சைவ சம்பிரதாய நெறியைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்ததால் சிறுவயதிலிருந்தே எனக்கு மிகுதியான இறை நாட்டம் உண்டு.

பள்ளிப் பருவம் முழுவதும் பெற்றோ ரின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்தேன். அச்சமயம் உலகத்தின்மீதான எனது பார்வையும் எண்ணமும் மிக எளிதானதாக இருந்தது. எனது மருத்துவப் படிப்பிற்காக நான் வீட்டின் அரவணைப்பிலிருந்து, வெளியே சென்றபோதுதான், உலகின் மறு முகத்தை சந்தித்தேன்.

"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி''

என்பதன் பொருளை நான் கண்கூடாக பார்த்தேன். ஒழுக்கமிகு சைவ நெறியை பற்றிகொண்ட எனக்கு துளி அளவும், தவறான எண்ணங்களோ, சிந்தனைகளோ வந்ததில்லை. இறை அருளால் என் அன்பு நிறைந்த அணுகுமுறைமூலமாக தடம் மாறிச் செல்லும் பல சக மாணவர்கள் மற்றும் நண்பர்களை திருத்தி ஒழுக்கத்தின்பால் அழைத்துவந்தேன். மருத்துவக் கல்லூரியில் படிப்பது என்பது அத்தணை எளிதானதல்ல என நாம் அனைவரும் அறிவோம். அதீத பணிச்சுமை, நீண்ட பணி நேரம் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அம்மாதிரியான நேரங்களில், கந்த குரு கவசம் மற்றும் கந்த சஷ்டி கவசத்தை காலையும்- மாலையும் கேட்பேன். பொருளுணர்ந்து கேட்கும்பொழுது அதிலுள்ள வரிகள் என்னை ஆழமாக ஆட்கொள்ளும். கந்த குரு கவசத்தை கேட்டவுடனே மனதில் ஒரு புத்துணர்ச்சியும் உத்வேகமும் பிறக்கும். கந்த குரு கவசத்தின் உந்துதலால், கல்லூரி காலத்தில், நான் பல்வேறு போட்டிகளிலும் மருத்துவ கருத்தரங்கங்களிலும், 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளேன். மனத்தகத்துள் முருகப்பெருமான் குடிகொண்டுவிட்டால் ஆழ்ந்த ஞானம் பிறக்கும். மனமாயையும் எதிர்மறை எண்ணங்களும் அகலும். நம் சிந்தனை அறத்தின் வழியே செல்லும் என்பது நான் எனது கல்லூரி பருவத்தில் அனுபவங்களால் உணர்ந்தது.

மதுரைவாசியான எனக்கு, மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கடவுள்மீது, அதீத பற்று உண்டு. நான் மாதம் ஒரு முறையாவது சென்று வணங்கி எனது நன்றியை தெரிவிப்பேன்.

எனது இஷ்ட தெய்வமான மதுரை மீனாட்சியம்மன் கோவில் பாலதண்டாயுதபாணி தெய்வத்தின், பரிபூரண கருணையால் மருத்துவ பொது நுழைவுத் தேர்வின் வாயிலாக எனக்கு பெலகவியில் ஹோமியோபதி மருத்துவத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மருத்துவ முதுகலை படிப்பின் ஒரு முக்கிய அங்கமாக நான் அங்குள்ள மருத்துவமனையில், பணி புரிந்துவந்தேன். ஆறுமுகக் கடவுள் வகுத்த சத்தியத்தின் வழியே, பயணிக்கும் எனக்கு நேர்மையின் வழியை விரும்பாத, பல மேலதிகாரிகளிடமிருந்து, பல்வேறு இன்னல் களைச் சந்தித்தேன். ஒருவருக்கும் தீங்கு நினைக்காத, எனக்கு ஏன் இந்த சோதனை என்று எண்ணி வருந்தினேன். இதுபோல், தாளாத துன்பங்கள் என்னை சூழ்ந்தபோது, என் கண் முன் அபயஹஸ்தமாக தோன்றிய வாசகம் - "வந்த வினையும், வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே, செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை'' ஆகும். திருமுருகாற்றுப்படையில் உள்ள இம்மந்திர சொற்களைப் பொருள் உணர்ந்து ஓதி திருநீறு அணிந்த சில நாட்களிலேயே எந்த அதிகாரிகளால் எனக்கு இன்னல்கள் ஏற்பட்டதோ, அவர்களே என்னை பாராட்டி புகழத் துவங்கிவிட்டனர். இதுவே கந்தன் பெயர் கூறி, திருநீறு அணிபவர்க்கு வினைகள் யாவும் நீங்கும் என்பதற்கான சான்றாகும்.

அகத்துள் குமரக் கடவுள் அன்புமயமாய் நிறைந்திருப்பதால் எனக்கு மிகுதியான சேவை மனப்பான்மை உண்டு. இதனாலேயே எங்கள் பிரார்த்தனா ஹோமியோபதி மருத்துவமனையில், பல வருடங்களாக மாதம் தோறும், இரண்டாம் ஞாயிறன்று இலவச மருத்துவ முகாம் நடத்திவருகிறோம்.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள், பிறவி குறைபாடு உள்ள குழந்தைகள், வறுமையிலுள்ள மக்கள் போன்ற பலர் பயன்பெற்று வருகிறார்கள். எனக்கும், என்னை சார்ந்த பிற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், மேன்மேலும் சேவை மனப்பான்மையை அதிகரித்து அதற்குத் தேவையான சக்தியையும், முருகப்பெருமான் அருளவேண்டுமென்று வணங்குகிறேன்.

படங்கள்: விஜயா கண்ணன்