தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங் களில் 15-ஆவது ஆலயமாக விளங்கி வருகிறது திருக்கோலக்கா ஆலயம். இவ்வாலயத் திலுள்ள ஓசைநாயகி, தாளபுரீஸ்வரர் ஆலயம் தேவாரப் பாடல் பெற்றதெப்படி?

Advertisment

சீர்காழியில் பிறந்தவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர். இந்த ஊரைச் சேர்ந்த சிவபாதர்- பகவதியம்மாள் தம்பதி களின் மகனாகப் பிறந்தவர். இவரது இயற் பெயர் ஆளுடைய பிள்ளை. இவர் மூன்று வயது சிறுவனாக இருக்கும்போது இவ்வூரி லுள்ள சட்டநாதர் ஆலயத்தின் குளக்கரையில் பசிக்காக அழுதுகொண்டிருந்தார். அப்போது பார்வதிதேவி ஆளுடைய பிள்ளைக்கு ஞானப்பால் ஊட்டினார். அப்போதுமுதல் அவருக்கு திருஞானசம்பந்தர் என்னும் பெயர் உருவானது. ஞானம் பெற்ற சிறுவன் இறைவனையும் அம்பாளையும்பற்றிப் பதிகம்பாடத் தொடங்கினார். சீர்காழியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருக்கோலக்கா என்னும் ஊரில் கோவில்கொண்டிருந்த காரக்குதவனேஸ்வரர், அம்பாள் அபித குசலாம்பாள் இருவரையும் பற்றி முதன்முதலில் பதிகம் பாடத் தொடங்கினார்.

dd

திருஞானசம்பந்தர் தன் பிஞ்சுக்கரங் களால் தாளம்தட்டியபடியே துதி பாடிக் கொண்டிருந்தார். தட்டும்போது அவரது பிஞ்சுக் கரங்கள் சிவந்து போனது. இதைப் பார்த்து மனம் கனிந்த சிவபெருமான், சம்பந்தருக்கு கை வலிக்குமே என்று பொற்றாளத்தை வழங்கினார். அதைக்கொண்டு சம்பந்தர் தட்டிப் பாடும்போது, அந்த பொற்றாளத்திலிருந்து ஓசை வரவில்லை.

அப்போது இவ்வா லய அம்பாள் அந்த தாளத்திற்கு ஓசை வழங்கினாள். இவ்வாலய இறைவன் தாளம் வழங்கியதால் தாளபுரீஸ்வரர் என்றும், ஓசை வழங்கியதால் அம்பாளுக்கு ஓசைவழங்கிய நாயகி என்றும் பெயர் உருவானது. இறைவனுக்கு சப்தபுரீஸ்வரர் என்ற பெயருமுண்டு.

இந்த ஆலயத்தில் இருந்துதான் "தோடுடைய செவியன்' என்ற பதிகத்தை முதன்முதலில் பாடத் துவங்கினார் சம்பந்தர். அதன்பிறகே பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று பாசுரம் பாடும் பணியைத் தொடர்ந்தார். 16 வயதுவரையே வாழ்ந்த திருஞான சம்பந்தர் இறைவனின் அன்பைப்பெற்றவர். அதற்குச் சான்றாக இறைவனிடமிருந்து பல பரிசுகளைப்பெற்று வியக்கவைத்தவர்.

சிவ தரிசனத்திற்காக தனது தந்தையின் தோளில் அமர்ந்தபடி புறப்பட்ட திருஞான சம்பந்தர், திருக்கோலக்கா ஆலயத்தில் பொற்றா ளம், திருவீழிமிழலையில் படிக்காசு, திருப் பெருந்துறையில் பொற்கிழி, திருவட்டத் துறையில் முத்துப் பல்லக்கு, பட்டீஸ்வரத்தில் முத்துப் பந்தல் என இறைவனிடத்திலிருந்து பல பரிசுகளைப்பெற்றார் மதுரையைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சிசெய்த பாண்டிய மன்னர்களில் ஒருவரான கூன் பாண்டியனுக்கு ஏற்பட்ட நோயை நீக்கினார். திருமருகலில் பாம்புகடித்த ஒருவரை உயிர்பிழைக்கச் செய்தார். மயிலாப்பூரில் இறந்துபோன பெண்ணை உயிர்ப்பிக்கச் செய்துள்ளார். இப்படி இறைவனருளால் பதிகம்பாடி பல அதிசயங்களை நிகழ்த்தி, மக்களின் மனதில் இறைவனையும் இறைவியையும் நீக்கமற நிறைந்து நிலைக்கச் செய்தார் என்றால் அது மிகையல்ல.

சம்பந்தர் முதன்முதலில் பாடியது திருக்கோலக்கா ஆலயத்தில்தான்.இவ்வாலயத் திற்கு தரிசனம் செய்யவரும் அனைத்து பக்தர்களுக்கும் இறைவனும் அம்பாளும் அனைத்து நன்மைகளையும் வாரிவழங்குகிறார் கள். அதிலும் குறிப்பாக பேச்சுவராத ஊமை, திக்குவாய், சிறுவயதுக் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் வந்து இவ்வாலயத்திலுள்ள திருத்தாளமுடையாருக்கு அஷ்டோத்திர அர்ச்சனையும், ஓசைகொடுத்த நாயகிக்கு வாக்குவாதினி அர்ச்சனையும் செய்வதோடு, இரண்டு லிட்டர் தேனை வாங்கிக்கொடுத்து அம்பாளுக்கு நிவேதனம் செய்து, அந்தத் தேனை எடுத்து மேற்படி வாய்பேசமுடியாத குழந்தைகளின் நாக்கில் தொடர்ந்து தடவும்போது, தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பாடிய "மடையில் வாளை பாய' என்னும் பதிகத்தையும் பாடி, "என் குழந்தைக்குப் பேசும் சக்தியைக் கொடு தாயே' என்று மெய்யுருக வேண்டுபவர்களின் குழந்தைகளுக்கு, விரைவில் பேச்சுதிறன் கிடைக்கிறது என்கிறார்கள்- குழந்தைகளுக்குப் பேச்சுதிறன் கிடைக்கப்பெற்ற பெற்றோர்கள்.

Advertisment

ss

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற தலம். இங்கு சம்பந்தர் இறைவனை நோக்கி "தோடுடைய செவியன் என் உள்ளம்கவர் கள்வன்' என்னும் பதிகத்தைத் தொடங்கியுள்ளார்.

சுந்தரர் இவ்வாலயக் குளத்தில் வாளை மீன்கள் துள்ளி விளையாடும் காட்சியைக் கண்டவர், "அடையும் காலை பாய மாதரார் குடையும் பொய்கை கோலக்காவுளான' என்று இறைவனைப் பற்றிப் பாடியுள்ளார்.

பிறவி ஊமைகள், வாய்பேசமுடியாதவர்கள் இவ்வாலயம் வந்து வழிபட்டு பேச்சுக் கிடைக்கப் பெற்றுள்ளனர். அதேபோல் கல்வி மற்றும் இசைக்கலை உட்பட பல்வேறு கலைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்குவந்து வழிபட்டால், இறைவனருளால் மிகப்பெரிய சாதனையாளர்களாக விளங்குவார்கள் என்பதற்குப் பலர் உதாரணமாக உள்ளனர்.

திருஞான சம்பந்தர் வாழ்ந்து மறைந்தது ஏழாம் நூற்றாண்டில். அதன்பிறகு 200 ஆண்டுகள் கழித்து ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோவிலுக்கு வந்து பதிகம் பாடியுள்ளார். அதில் சம்பந்தருக்கு எம்பெருமான் பொன்னாலான பொற்றாளம் கொடுத்தது குறித்துப் பாடியுள்ளார். அதில் தேவர்கள், முனிவர்கள் முன்னிலையில் எம்பெருமான் சம்பந்தருக்குப் பொற்றாளம் (பொன்னால் செய்யப்பட்ட தாளம்) கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இப்படி கீர்த்திபெற்ற தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி இருவரையும் வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் ஏராளம் ஏராளம்.

aa

Advertisment

பிறவி ஊமைகள், காது, கேளாதவர்கள், திக்கித்திக்கிப் பேசுபவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டு, அபிஷேகம் செய்யப்பட்ட தேனை 45 நாட்கள் நாக்கில் தடவிவந்தால் போதும்; பேச்சுவரம் நிச்சயம் கிடைக்கும். அதற்கு ஒரு உண்மை சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள் இவ்வாலய அர்ச்சகர்கள்.

1979-ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகிலுள்ள இருளப்ப புரத்தைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர், அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். அப்படிப்பட்ட தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அதில் முதல் குழந்தை நல்ல பேசும்திறனைப் பெற்றிருந்தான். இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தை பேசவில்லை. ஒரு வயது, இரண்டு வயது, மூன்று வயதென வயது கூடிக்கொண்டே போனது. பையனுக்கு பேச்சுமட்டும் வரவேயில்லை. அந்த பையனின் தந்தை மருத்துவர் என்பதால், எவ்வளவோ ஆங்கிலவழி மருத்துவம் செய்துப் பார்த்தும் அந்த பையன் பேசவேயில்லை.

அப்போது அந்த வீட்டுக்கு வயதான அவர்களது உறவினர் ஒருவர் சென்றுள்ளார். அவரிடம் தங்களது மகன் வாய்திறந்து பேசாத நிலை குறித்து இருவரும் கவலையோடு தெரிவித்துள்ளனர்.

அப்போது அந்த பெரியவர், "கவலைப்படவேண்டாம். சீர்காழி அருகிலுள்ள திருக்கோலக்காவில் இறைவனும் இறைவி யும் கோவில் கொண் டுள்ளார்கள். அவர் களை நினைத்து மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் மகனுக்கு பேச்சு வரும்'' என்று நம்பிக்கை யோடு கூறியுள்ளார்.

அப்போதே அந்த மருத்துவரின் மனைவி தன் கைகளில் அணிந்திருந்த வளையல் களைக் கழற்றி பூஜையறையில் வைத்து, "ஓசை நாயகி, தாளபுரீஸ்வரர் ஆகிய தெய்வங்களே! என் மகனுக்குப் பேச்சுவரம் வேண்டும். அப்படி வந்துவிட்டால் நாங்கள் தங்கத்தால் தாளம் செய்து ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்துகிறோம்'' என்று வேண்டிக்கொண்டுள்ளார்.

அன்றிரவு அனைவரும் படுத்துத் தூங்கி யுள்ளனர். மறுநாள் காலை எழுந்ததும் தனது மகனை மருத்துவரின் மனைவி எழுப்பியுள்ளார். அவன், "அம்மா' என்று கூப்பிட்டபடியே எழுந்துள்ளான். தம்பதிகள் அதிசயித்துப் போனார்கள். மீண்டும் கூப்பிடச் சொன்னார்கள். அவன் தெளிவாக "அம்மா' என்று கூப்பிட்டதோடு எல்லாவற்றையும் பேச ஆரம்பித்தான்.

இவ்வாலய தெய்வத்தின் அருளை எண்ணி மனமுருகிய அந்தத் தம்பதிகள், சில நாட்களிலேயே அவர்கள் வேண்டிக் கொண்டபடி ஐந்து பவுன் எடையில் தங்கத்தால் செய்யப்பட்ட தாளத்தைக் கொண்டுவந்து ஆலயத்தில் காணிக்கை யாக செலுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

"இதுவரை பேச்சு வராத, காதுகேட்காத, மூன்று வயதுமுதல் எழுவது வயதுவரை யேள்ள சுமார் 1,700 பேர் இவ்வாலய இறைவன்- இறைவியின் சக்தியால் பேச்சுத்திறனும் காதுகேட்கும் திறனும் கிடைக்கப்பெற்றுள்ளனர்' என்று கூறுகிறார்கள் இவ்வூர் முக்கியஸ்தர்கள்.

பக்தர்களுக்கு எல்லா செல்வங்களையும் வழங்கக்கூடிய மகாலட்சுமி இவ்வாலயத்தில் தனிச் சந்நிதியில் அமர்ந்துள்ளார். இதற்கும் ஒரு புராண வரலாறுள்ளது. திருமால் இரணியனை வதம் செய்வதற்காக நரசிம்ம அவதாரமெடுத்தார். இரணியவதம் முடிந்த பிறகும் அவரது கோபம் தணியவில்லை.

அப்போது சிவபெருமான் சரப மூர்த்தியாக அவதாரமெடுத்து நரசிம்மரின் கோபத்தைக் குறைத்தார். அந்த காலகட்டத்தில் திருமாலைப் பிரிந்திருந்த மகாலட்சுமி, அவரை மீண்டும் அடைவதற்காக சிவபெருமானின் உதவியைவேண்டி இப்பகுதியிலுள்ள வனத்தில் தவமிருந்தார். மகிழ்ந்த சிவபெருமான் மகாவிஷ்ணுவை அழைத்துவந்து, இவ்வாலயம் அமைந்துள்ள பகுதியில் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைத்தார். அந்த நிகழ்வின் காரணமாக திருமணக் கோலம்கொண்ட ஊர் என்று ஊருக்குப் பெயர் உருவானது. இதுவே மருவி திருக்கோலக்கா என்று அழைக்கப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் விதத்தில் மகா லட்சுமிக்கு இங்கே தனிக்கோவில் அமைந் துள்ளது குறிப்பிடத்தக்கது.

"திருமணத் தடையுள்ள ஆண்- பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதோடு, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தொடர்ந்து ஆறு வாரம் மஞ்சள்பொடி அர்ச்சனை செய்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது'' என்கிறார் ஆலய அர்ச்சகர் கார்த்திகேய சிவாச்சாரியார்.

இவ்வாலய இறைவனை பிரம்மா, திருமால், திருமகள், இந்திரன், வருணன், எமதர்மன், அக்கினி, வாயு, அகத்தியர் மற்றும் தேவலோக தேவதைகளான ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோரும் வந்து வழிபட்டுப் பெரும்பேறு பெற்றுள்ளனர் என்கிறது இக்கோவில் தலபுராணம்.

மேலும் இக்கோவிலில் ஓசைகொடுத்த நாயகிக்கு இரண்டு சிலைகள் உள்ளன. பல ஆண்டுகளுக்குமுன்பு கருவறையிலிருந்த பழைய அம்மன் சிலைக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. அதனை மாற்றிவிட்டு புதிய சிலையை அமைத்தனர். அன்றிரவே ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலரது கனவில் தோன்றிய அம்மன், "உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் ஏற்பட்டால் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவீர்களா?' என்று கேட்க, காலையில் கண்விழித்ததும் ஒவ்வொருவரும் அவரவர் கண்ட கனவுகளைப் பரிமாறிக்கொண்டதோடு, தாங்கள் செய்த தவறை உணர்ந்து பழைய அம்மனை கருவறை அருகே தனிச்சந்நிதி அமைத்துப் பூஜைசெய்து வருகிறார்கள்.

ஆலயத்தில் அருகிலுள்ள திருக்குளத்திற்கு சூரிய தீர்த்தம் என்று பெயர். சூரியபகவான் சிவபெருமான் வேண்டித் தவமிருந்து, அவரிடமிருந்து நவகிரகங்களுக்கெல்லாம் தலைமைப் பதவியைப் பெற்ற இடம். இங்குள்ள குளத்தை சூரியபகவான் உருவாக்கி, இதில் குளித்து இறைவனையும் அம்பாளையும் வேண்டித் தவமிருந்துள்ளார். கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரம்.

ஆலயப் பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர் மற்றும் தேவாரம் பாடிய நால்வர் தனித்தனியே அமைந்துள்ளனர்.

"இவ்வாலய சனிபகவானையும், பைரவரையும் எட்டுமுறை வலம்வந்து வழிபாடு செய்தால் நவகிரக தோஷங்கள் அனைத்தும் அகலும்'' என்கிறார்கள் சீர்காழியிலுள்ள வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர் ஆகியோர்.

ஆலய இறைவனையும் அம்பாளையும் தரிசனம் செய்ய கோவில் வளாகத்தில் தனது மூன்றுவயது மகனுடன் காத்திருந்தார் உளுந்தூர்பேட்டை பகுதியில் வசித்துவரும் சங்கீதா என்னும் பெண். அவரிடம் கேட்டபோது, "மகன் ராஜ்வீருக்கு சிறுவயதிலிருந்து சரியாகப் பேச்சுவரவில்லை. அவன் பேசும் ஓரிரு வார்த்தைகளையும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது. இந்த நிலையில்தான் என்னுடன் வேலைபார்க்கும் எனது தோழி, இந்த கோவிலைப்பற்றிக் கூறினார்.

உடனே எனது மகனை அழைத்துக் கொண்டு வந்தோம். எப்படி யும் எனது மகன், ஓசைநாயகி யின் கருணையினால் பேசுவான்; பேசவேண்டும் என்ற வேண்டுத லோடும் நம்பிக்கையோடும் உள்ளேன்'' என்றார்.

திருஞான சம்பந்தருக்கு பொற்றாளமும், அதில் தெய்வீக ஓசையையும் கொடுத்த அம்பாளை யும், இறைவன் எம்பெருமானையும் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் இதைப் படிக்கும் வாசக பக்தர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்குமே! புறப் படுங்கள் சீர்காழியை நோக்கி. சீர்காழி பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலை விலேயே அமைந்துள்ளது திருக் கோலக்கா ஆலயம்.

காலை 7.30 மணிமுதல் பகல் 11.30 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: 98422 2853, 94442 13933.