கவத்கீதையில் கண்ணன், "மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்' மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னான். சிவபெருமானுக்கு அவ்வாறு நிகழ்ந்திருக்குமானால், "மாஸானாம் கிருத்திக்கோஹம்' மாதங்களில் நான் கார்த்திகை என்று அருளியிருப்பார். காரணம் என்ன?

கார்த்திகை மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உகந்தது. கார்த்திகைத் திங்கட்கிழமை, கார்த்திகை அமாவாசை, கார்த்தி கைப் பௌர்ணமி, கார்த்திகைப் பிரதோஷம், கார்த்திகைத் திருவாதிரை என்று சிவ வழி பாட்டுக்கு உகந்த நாட்கள் பல உள்ளன. கார்த்திகைப் பௌர்ணமியை ஒட்டியே திருவண்ணாமலையில் பிரம்மோற் சவம் நடைபெறுகிறது.

karthigai

திங்கட்கிழமைக்கு சிறப்பு ஏன்? அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களும் தட்சனின் மகள்கள்.

Advertisment

அவர்கள் அனைவரையும் சந்திரனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான் தட்சன். சந்திரன் ரோகிணி என்ற மனைவியிடம் மட்டுமே அதிக ஈடுபாட்டுடன் இருந்தான். இதனால் மனவருத்தம் கொண்ட மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். சந்திரனை அழைத்த தட்சன், "அனைத்து மனைவிகளுடனும் சமமாகப் பழகு; ஒன்றாக நேசி' என்று அறிவுரை கூறி னான். சந்திரன் அதைக் கேட்காமல் ரோகிணியிடம் மட்டுமே அன்பைத் தொடர்ந்தான். இதனால் கோபமடைந்த தட்சன், "உன் ஒளியிழந்து தேய்ந்து போ' என்று சபித்தான். ஒளியிழந்த சந்திரன் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான சோமநாத சிவனை வழிபட்டான். அவன் மீண்டும் வளர வரமருளிய ஈஸ்வரன், பிறைச் சந்திரனைத் தலையில் சூடி சந்திரமௌலி, சந்திரசேகரன் ஆனார். தட்சனின் சாபம், சிவனது வரத்திற்கேற்ப சந்திரன் தேய்பிறை, வளர்பிறை என்று திகழ்ந்தான். திங்களூரிலும் சந்திரன் சிவனை வழிபட்டு அருள்பெற்றான்.

திருநெல்வேலி- தாமிரபரணி நதியைச் சுற்றி அமைந்திருக்கும் நவ கயிலாயத் தலங்களில் சேரன்மகாதேவியும், நவ திருப்பதிகளில் வரகுணமங்கையும் சந்திரன் வழிபட்ட தலங்களாக விளங்குகின்றன.

கார்த்திகை அமாவாசையின் சிறப்பு

Advertisment

(இவ்வருடம் 14-12-2020 அன்று கார்த்திகை அமாவாசை அமைகிறது.) கும்பகோணம் அருகேயுள்ள திருவிச நல்லூரில் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் என்னும் சிவபக்தர் இருந்தார். அவர், 59-ஆவது காமகோடி பீட பரமாச்சாரியார் பகவந்நாம போதேந்திர சுவாமிகளின் (நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர்) சமகாலத்தவர். பரமேஸ்வரனின் அவதார மென்றே போதேந்திரரால் போற்றப் பட்டவர். சிவபெருமான்மீது பல்வேறு துதிகள், கிரந்தங்கள் எழுதியவர். மிகவும் இளகிய மனத்தவர். ஒருமுறை கார்த்திகை அமாவாசை நாளில் அவரது இல்லத்தில் சிரார்த்த தினம். புரோகிதர்கள் வந்திருந்தனர்.

மனைவி வீட்டைத் தூய்மை செய்து சிரார்த்த சமையல் செய்து வைத்தார். ஸ்ரீதர ஐயாவாள் தன் மனைவியிடம், காவிரியில் நீராடிவிட்டு வருவதாகக் கூறிச் சென்றார். வழியில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன், "ஐயா, நான் மூன்று நாட்களாக சாப்பிடவில்லை. நடக்க முடியவில்லை. கண்கள் செருகுகின்றன. உணவு ஏதாவது தாருங்கள்' என கெஞ்சினான். அய்யாவாளின் மனம் இளகியது. விஸ்வநாத சிவன் அன்னபூரணியிடம் வேண்டியதுபோல் தோன்றியது. உடனே வீட்டுக்குத் திரும்பி வந்தவர், சிரார்த்தத்திற்கு சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச்சென்று, பசியென்று கூறியவனுக்கு மனத் திருப்தியுடன் அளித்தார். அவற்றை மகிழ்வுடன் உண்டவன், "மார்க்கண்டேயனுக்கு உயிர்கொடுத்த சிவனோ? நீவிர் வாழ்க' என வாழ்த்தி மறைந்தான். வீடுவந்து பாத்திரங்களை மனைவியிடம் கொடுத்த ஐயாவாள், "மீண்டும் நீராடிவிட்டு சிரார்த்த சமையல் செய். நான் காவிரியில் நீராடிவிட்டு வருகிறேன்' என்று கூறிச் சென்றார்.

அவர் நீராடிவிட்டு வீடுதிரும்ப, அங்கிருந்த அந்தணர்கள் கோபத்துடன், "என்ன ஐயாவாள், நியமம் தெரியாதவரா நீர்? சிரார்த்த தினத்தில் சண்டாளனுக்கு உணவு தந்தீரே. எனவே, நாங்கள் சிரார்த்தம் செய்விக்க இலையில் உட்கார மாட்டோம்' என்றனர். அவர் கூறிய சமாதானத்தை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. ஐயாவாள் விவரம் தெரிந்தவர் என்பதால் தானே சிரார்த்தம் செய்தார். பிரம்மா, விஷ்ணு, சிவனையே வரித்தார். சிரார்த்தம் சிறப்பாக நடந்தது. அவர் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி பக்தர். கோவிலில் அர்ச்சகர் சிவபெருமானுக்கு நிவேதனம் படைக்க முயல, அசரீரி வாக்கு, "இன்று நான் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டில் சிரார்த்த உணவு உண்டுவிட்டேன். எனவே எனக்கு மாலை நேர நிவேதனம் வேண்டாம். அவர் கொடுத்த வேட்டி, தட்சணைப் பணம் வைத்துள்ளேன்' என்று ஒலித்தது. அத்தகைய ஆழ்ந்த சிவபக்தர் ஐயாவாள்.

karthigai

இத்துடன் கதை முடியவில்லை. அக்ரஹாரத்து பிராமணர்கள், "உன்னை நாங்கள் ஜாதிப் பிரஷ்டம் செய்துவிட்டோம். காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு வந்தாலன்றி நீர் இங்கு வசிக்கமுடியாது' என்றனர்.

இக்காலத்தில் உள்ளதுபோல அப்போது ரயில், விமான வசதி கிடையாது. கால்நடைப் பயணமே. செல்வதோ திரும்புவதோ அதிசயமே. இரவு சிவசிந்தனையில் ஐயாவாள் அயர்ந்தார். கனவில் கங்காதேவி தோன்றி, "கங்காஸ்னானம் செய்ய நீர் காசிக்கு வரத் தேவையில்லை. நாளை காலை உமதுவீட்டு கிணற்றில் வழிந்தோடுவேன். உமது சிவபக்தியால் அனைவரும் கங்கா ஸ்நானம் செய்யட்டும்' என்றாள்.

மறுநாள் அனைவருக்கும் விவரம் கூறி, ஐயாவாள் தனது வீட்டுக் கிணற்றை கங்கா தேவியாகப் பூஜித்து, கங்காஷ்டகம் என்று எட்டு துதிகள் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தார். அடுத்த கணம் கிணற்றிலிருந்து கங்கைநீர் பொங்கி வழிந்து தெருவெங்கும் ஓடியது. யாவரும் நெகிழ்ந்து மகிழ்ந்து கங்காஸ்நானம் செய்த னர். தூற்றியவர்கள் அவரைப் புகழ்ந்தனர்.

அந்த கங்கைத் துதிகள் இரண்டின் தமிழாக்கம் சிந்திப்போமா...

= கங்கை என்ற நாமத்தை நினைத்தாலே பாவங்கள் அழியும். பருகினால் ஞானம் பெருகும். சிவனது தலையில் இருப்பவளே, இந்த கிணற்றில் உதிப்பாயாக.

= பகீரதன் தவத்தால் பூமிக்கு வந்தவளே, மக்களை ரட்சிக்க இந்த கிணற்றில் உதிப்பாயாக.

இன்றும் அங்கு பத்து நாட்கள் உற்சவம், பஜனை, கதாகாலட்சேபம், கச்சேரி என நடக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் நீராடுகிறார்கள்.

கார்த்திகைப் பௌர்ணமி

இந்த நாளை பரணி, கார்த்திகை, திருவண்ணாமலை தீபம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடும். திருவண்ணாமலையில் பத்து நாட்கள் இதையொட்டி விழா நடக்கும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இதன் தத்துவம் என்ன?

பிரம்மாவைப் படைத்தவர் மகாவிஷ்ணு. சிருஷ்டித் தொழில் புரிபவர் பிரம்மா.

அவர் சிருஷ்டித்தவற்றைக் காப்பவர் விஷ்ணு. இருவருக்கும் தானே உயர்ந்தவர் என்ற எண்ணம் உண்டானது. அவர்களுக்கு உண்மையை உணர்த்த, சிவபெருமான் அடிமுடி காணா ஒளிப்பிழம்பாகத் தோன்றினார். அவ்வாறு சிவன் தோன்றிய தினமே கார்த்திகைப் பௌர்ணமி. தேவர்கள் யாவரும் வேண்ட, சிவஜோதி சிவராத்திரியன்று மலையாயிற்று. அதுவே அருணாசலம் என்னும் திருவண்ணாமலை. அது நம் எண்ணத்தில் அடங்கா- அண்ணா மலை. மலையே லிங்கம். மலையை வலம் வந்தால் ஐந்து சிறு குன்றுகளைக் காணலாம். இவை சிவனது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களைக் குறிக்கும்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஞானிகள், யோகிகள் பலர். குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், சோணாசல தேவர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், ஈசான ஞானதேசிக சுவாமிகள், ராதாபாய் அம்மையர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர், இசக்கி சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், ஜானகி யம்மாள், ரமண மகரிஷி, ராம்சுரத்குமார் என பலரைச் சொல்லலாம். அவர்களில் இருவரை சிந்திப்போமா...

அம்மணியம்மாள்

திருவண்ணாமலை ஆலயத்திலுள்ள ஒன்பது கோபுரங்களில் வடக்கு கோபுரத்திற்குப் பெயர் அம்மணியம்மாள் கோபுரம்.

திருச்செந்தூ ரில் ஒரு பெரிய கோபுரம் உள்ளது. முருகப்பெருமான் கனவில் கூறியபடி அந்த கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீன ஞானதேசிக சுவாமிகள். சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் பக்தர்கள் அளித்த நன்கொடையைக் கொண்டு கட்டப்பட்டது. சில சமயங்களில் வேலையாட்களுக்குக் கொடுக்க பணம் இல்லாமல் போகுமாம். அப்போது முருகனை வேண்டி அவரது விபூதியைக் கொடுக்க, அது அவர்களுக்கான கூலியாக மாறிவிடுமாம்.

ஸ்ரீரங்கத்திலும் ஒரு மிகப்பெரிய கோபுரத்தைக் காணலாம். அது கட்டி முடிக்கப்பட்டது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே. அகோபில மட ஜீயரால் அரங்கன் ஆணைபெற்று அமைக்கப்பட்டது. அதைக் கட்டுவதற்கு பலரிடமிருந்தும் பண உதவி கிடைத்தது. வெளிநாட்டில் இருந்தும்கூட பலர் பங்களிப்பு செய்தனர். ஆண்டவன் எவரையாவது கருவியாகக் கொண்டு தன் பணியைச் செய்துகொள்வது விந்தையே.

அந்த வகையிலேயே அம்மணியம்மாள் கோபுரம் சுமார் 250 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. திருவண்ணாமலையை அடுத்த சென்ன சமுத்திரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அருள்மொழி அம்மாள். (பின்னர் அம்மணியம்மாள் என்றழைக்கப்பட் டார்.) சிறுவயதிலேயே ஆழ்ந்த சிவபக்தி கொண்டிருந்தார். ஒருமுறை பெற்றோர் அவரை அண்ணா மலைக்கு அழைத் துச் சென்றனர். தரிசனம் முடிந்து புறப்படும் நேரம், அந்த சிறுமியோ, "அம்மா நான் இங்கேயே இருந்து சிவனை வழிபட விரும்புகிறேன்' என்றார். அவரது மனத்துணிவு கண்டு வியந்த அவர்கள், தனது உறவினர் வீட்டில் விட்டு கவனித்துக்கொள்ளச் செய்தனர். அண்ணா மலையானிடம் ஆழ்ந்த பக்திகொண்டார். திருமண வயது வந்தது. அவர் திருமணத்தை விரும்பவில்லை.

வடக்கு கோபுரம் நாயக்கர்கள் ஆட்சியில் கட்டப்பட்டு பாதியில் நின்றுவிட்டது.

அதைப் பூர்த்திசெய்து கும்பாபிஷேகம் செய்ய சிவன் ஆணையிட்டார். அம்மணியம் மாள் செல்வந்தர் அல்ல. ஆகவே கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கோபுரம் கட்ட பணம் கேட்டார். சில செல்வந்தர்களிடமும் வேண்டினார். சிவன் விருப்பப்படி பணமும் சிறிதுசிறிதாக சேர்ந்தது. கோபுரமும் எழும்பியது. அம்மணியம்மாளின் பக்திகண்டு பலரும் தாங்களே முன்வந்து உதவினர். ஒரு மிகப்பெரிய செல்வந்தரிடம், "கோபுரம் கட்ட சிறிது பணம் தாருங்கள்' என்று கேட்டார். அவரோ, "என்னிடம் கொடுக்கும்படியாக பணம் ஏதும் இல்லையே' என்று பொய் கூறினார். அம்மணியோ, "உங்கள் பணப் பெட்டியில் பத்தாயிரத்து இருபது ரூபாய் உள்ளதே. அதில் நூறு ரூபாயாவது தானம் செய்யக்கூடாதா? இறந்தால் அந்தப் பணம் நம்முடன் வருமா?' என்று கேட்டார்.

திடுக்கிட்ட அந்த செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து எண்ண, அம்மணியம் மாள் சொன்ன எண்ணிக்கை சரியாக இருக்க, வியந்த அவர் ஆயிரம் ரூபாய் தானமளித்தாராம். அது இப்போது பல லட்சம் பெறும். கோபுரம் கட்டி முடிந்து கும்பாபிஷேகமும் நடந்தது. அந்த கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றாயிற்று. அவரது சமாதி ஈசானிய குளத்திற்கு எதிரில் உள்ளது.

ஈசானிய தேசிகர்

இவரது சமாதி அம்மணியம்மாள் சமாதி அருகிலேயே உள்ளது. இருவருமே தங்களது சிவபக்தியைப் பகிர்ந்து கொண்டவர்கள். ஈசானிய தேசிகர் 1750-ல் பாலாற்றங்கரையை ஒட்டிய ராய வேலூரில், கந்தப்பன் என்ற பெயருடன் பிறந்தவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றை ஆழ்ந்த பக்தியுடன் ஓதி உணர்ந்தவர். சிவபக்தியில் திளைத்த இவருக்கு திருமணத்தில் ஆசையில்லை. சந்நியாசம் பெற்று பல சிவத்தலங்கள் சென்றார்.

மகான்களையும், ஜீவசமாதிகளையும் தரிசித்தார்.

சிதம்பரம் பிரம்மஞானி ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சைபெற்றார். குருப்பணி செய்து வேதாந்தம். பிரம்மசூத்திரம் கற்றுணர்ந்தார். அவரது ஜீவசமாதிக்குப்பிறகு திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகளை தரிசித்து குருவருள் பெற்றார். பின்னர் சிக்கல் உகண்டலிங்க ஞானதேசிகரை தரிசிக்க, அவர் கூறியபடி திருவண்ணாமலை வந்துசேர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார்.

அவரது தவத்திற்கு இடையூறு நேராவண்ணம் சிவனும் அம்பாளும் புலிரூபமாக அமர்ந்து காத்தனராம்.

ஐடன் துரை என்ற ஆங்கிலேயர் தேசிகரிடம் குருபக்தி கொண்டார். தேசிகர் கூறியபடி தனக்குச் சொந்தமான பல நிலங்களை அண்ணாமலை ஆலயத்திற்கு தானமாகத் தந்தாராம். ஒருசமயம் குருவை தரிசிக்க ஆற்றைக் கடக்கும் சூழல் ஐடனுக்கு வந்தது. ஆற்றிலோ அதிக வெள்ளம். "குருவே, நீயே துணை' என்று குதிரையை ஆற்றில் இறங்கச் செய்தார். ஆறு வழிவிட்டதாம். குருபக்திக்கு ஈடுண்டோ? சீரடிபாபா கூறுவார்- நம்பிக்கை, பொறுமை தேவை என்று! கண்ணனைத் தலையில் ஏந்திச் சென்ற வசுதேவருக்கு யமுனை வழிவிட வில்லையா? ஸ்ரீராகவேந்திரர் சமாதி அடை கின்ற நேரம், அவரைக் காண ஓடோடி வந்த அப்பண்ணாவுக்கு துங்கபத்ரா நதி வழிவிட வில்லையா? ஆதிசங்கரர் அழைக்க, கங்கையாற்றின் மறுகரையிலிருந்த அவரது சீடர் பத்மபாதர் ஆற்றின்மீது நடந்து வரவில்லையா? குருபக்தி எதுதான் செய்யாது?

தேசிகர் தவம்செய்த இடம் வடகிழக்குப் பகுதி. (ஈசானம்) எனவே ஈசானிய தேசிகர் என்றே அழைக்கப்பட்டார். அவர் 1829-ஆம் ஆண்டு மார்கழி மாதம் 29-ஆம் தேதி போகியன்று சமாதியடைந்தார்.

அண்ணாமலையை வலம்வரும் பக்தர்கள் இவ்விருவர் சமாதிகளையும் தரிசித்து குருவருள் பெற்று இன்புறலாமே!