மிதுன ராசியானது காலபுருஷனின் மூன்றாவது ராசி. அதிபதி புதன்.
குடும்ப விவரம்
மிதுன ராசியினர் நல்ல புத்திசாலிகளாக இருப்பர். சிலர் ஒவ்வொரு சமயம் கோணங்கிகள்போல பேசுவர். இவர்கள் குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும். இவர்களுடைய இளைய சகோதரர் எதிலும் முதன்மையாகவும், அரசு செயல்கள் சார்ந்தும் இருப்பார். தாய் நல்ல புத்திசாலியாக- கணக்கு வழக்கில் வல்லவராக அமைவார். பூர்விகம் சற்று தள்ளியிருக்கும். இவர்களில் பலர் சீருடைப் பணியாளர்களாக இருப்பர். இவருடைய மனைவி தெய்வபக்தி மிக்கவராக- வேலை செய்பவராக இருப்பார். பலரது தந்தை, வேண்டாத- விளங்காத செயல் உடையவராக இருப்பார். ஆன்மிகம் சம்பந்தமான தொழில் புரியக்கூடும். மூத்த சகோதரர் சற்று அடாவடியாக இருப்பார். சொகுசாகத் தூங்கும் வசதி செய்துகொள்வீர்கள்.
இவையெல்லாம் மிதுன ராசிக்காரர்களின் பொதுவான குடும்ப விவரம். அவரவர் ஜாதக கிரக அமைப்புப்படி, மேற்சொன்வை முன்னே பின்னே இருக்கும்.
குரு இருக்குமிடப் பலன்
மிதுன ராசிக்கு குரு 7 மற்றும் 10-ன் அதிபதி. இதுவரையில் 8-ஆமிடமான மகரத்தில் குரு மறைந்திருந்தார். இப்போது 9-ஆமிடமான கும்பத்துக்கு மாறியுள்ளார்.
குரு 7, 10-ன் அதிபதியாகி 9-ல் அமர்வது சிறப்பு; வெகு சிறப்பு! 10-ஆம் அதிபதி 9-ல் இணையும்போது தர்மகர்மாதிபதி யோகம் தருவார்.
9-ஆமிடம் என்பது தர்ம, ஆன்மிக ஸ்தானம். அதில் குரு அமர்வதால், மிதுன ராசியாருக்கு தர்மசிந்தனை மேலோங்கும். இதனால் தொழிலிலும் தங்கள் லாபத்தைக் குறைத்து, மலிவான விலையில் தாயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்வர். அல்லது லாபத்தின் ஒரு பங்கை தர்மமாக வழங்குவர்.
குருவின் 7, 10 ஆகிய இரண்டுமே தொழில், வியாபார வீடுகளாகும்.
அதன் அதிபதி, 9 எனும் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் ஏறிட, மிதுன ராசியாரின் வியாபாரம், தொழில் சூடு பிடித்து, சும்மா பிச்சுக்கிட்டு ஓடும்.
இந்தக் காலகட்டத்தில் மிதுனத்தார் தங்கள் லட்சியக்கனவு நிறைவேற, தங்களின் அதிகபட்ச உழைப்பைக் கொட்டுவர். அதன்மூலமும் வியாபாரம் வெகு முன்னேற்றமடையும். மேலும் கொஞ்சம் நீக்கு, போக்காகவும் இருக்க பழகிக்கொள்வர். வியாபார ஸ்தலம், தொழிற்கூடத்தில் கண்டிப்பாக ஹோமம் செய்வீர்கள்.
சிலர் தந்தையின் தொழிலை மேற்கொள்வீர்கள். அல்லது தந்தையின் அனுசரணை கிடைக்கும். சிலர் தந்தை ஆவீர்கள். குரு ஏழாம் அதிபதியாக இருப்பதால், தந்தை வழியில் வரன் அமைந்து திருமணம் நடக்கும்.
சிலர் வியாபாரம், தொழில் விஷயமாக வெளிநாட்டுத் தொடர்பு பெறுவர். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.
இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எந்த விஷயத்தையும் தெளிவான மனநிலையில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள். தளராத முயற்சியெடுக்கும் புத்திவரும். ஒருவேளை அதிர்ஷ்ட ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் அந்த யோகப்பலனே மனம், புத்தி ஆகியவற்றைக் கூர்மையாக்கும் போலும்.
கோசாலை, மடங்கள், உங்கள் குலகுரு சார்ந்த ஆதீனங்கள், ஸ்தாபனங் கள் ஆகியவற்றுக்கும் உதவி செய்வீர்கள். பேரன், பேத்தி கிடைக்கும் யோகமுண்டு. கோவில் கும்பாபிஷேகங்களில் கலந்துகொள்வீர்கள்.
பயணம், ஆன்மிகம், சட்டம், பல்கலைக்கழகம், போக்குவரத்து, செய்தித்துறை, வங்கிகள், தர்மஸ்தாபனம், கடல் சார்பு, மீன்வளத்துறை, சமயம் என இவை சார்ந்த மேன்மைகள் பெருகும்.
5-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 5-ஆம் பார்வையால் மிதுன ராசியைப் பார்க்கிறார். இதுவொரு யோகமான அமைப்பாகும். குரு பார்வை பட்ட இடம் செழிக்கும்; கொழிக்கும்; துளிர்க்கும். எனவே இதுவரையில் சோம்பித் திரிந்த மிதுன ராசியார் குரு பார்வை பட்டவுடன், திடீர் உத்வேகம் பெறுவர். ஒரு பரபரப்பு, சுறுசுறுப்பு வந்து பற்றிக்கொள்ளும் உங்கள் ராசிநாதன் புதன் ஆதலால், முதலில் புத்திசாலித்தனம் கூர்மையாகும். எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்வீர்கள். அதனால் படிப்பு, வியாபாரம், எழுத்து, கணிதம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் தெரியும். இதுவரையில் கணிதப் பாடத்தில் சற்று பின்தங்கிய மிதுன மாணவர்கள், இப்போது நல்ல புரிதலோடு படிப்பர். ஜோதிடம் சொல்லும் ஜாதகர்கள் சற்று சோம்பியிருந்தாலும், இப்போது தொழில் சுறுசுறுப்பாகிவிடும். மிதுன ஆசிரியர்கள் புதுவித வழிகளைப் புகுத்திப் பாடமெடுப்பதால், கல்வித்துறையால் சிறப்பிக்கப்படுவார்கள். மிதுன பத்திரிகைத் துறையினர் பரபரப்பு பெறுவர்.
மிதுன ராசியை குரு பார்ப்பதால், இவ்வளவு நாளும் இவர்களை வாட்டிவதைத்துக் கொண்டிருந்த வியாதி நீங்கி, பொலிவு பெறுவர். முகத்தில் ஞான ஒளி பிரகாசிக்கும். இதற்குக் காரணம், நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்த வராக இருந்தாலும், உங்களை அத்துறையின் தலைவராக்கிவிடுவர். எனவே உங்களையுமறியாமல் முகத்தில் தனிக்களை தாண்டவமாகும்.
மேலும் இக்காலகட்டத்தில், நீங்கள் சார்ந்த சமூகப் பேரவை, சங்கங்கள் போன்றவற்றின் சார்பில், நன்மைக்காக குரல் கொடுப்பீர்கள். எனவே, பரவலாகத் தெரிந்த முகமாக மாறிவிடுவீர்கள். உங்களின் வாழ்நாள் கனவு கள் பலவும் பலவிதமாகும். லட்சியம் ஈடேறும். பிரபலமடைவதால் தனி தேஜஸ் கிடைக்கும்.
7-ஆம் பார்வைப் பலன்
மிதுன ராசியை கும்ப குரு தனது 7-ஆம் பார்வையால் 3-ஆமிடத்தை முறைக் கிறார். 3-ஆமிடம் என்பது வீர, தீர, வீரிய, தைரிய, உபஜெய ஸ்தானம்.
இதனால், மிதுன ராசியில், இதுவரையில் அரசியலில் மூழ்கிக் காணாமல்போய், பிறரால் மிதிக்கப்பட்டு தோல்வி வாழ்வில் இருந்தவர்கள் சட்டென உத்வேகம் பெற்று, ஒரு "தம்'பிடித்து அரசியல் உலகின் "லைம் லைட்'டுக்கு வருவார்கள். இது சூரியனின் வீடு என்பதால், முதலில் அரசியல் எழுச்சியைக் கொடுக்கும்.
அரசுத் துறையில் வேலை மட்டும் பார்த்துக்கொண்டு, மரியாதையே இல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். அதிகம் இல்லாவிட்டாலும், தங்கள் தகுதிக்கேற்ப மரியாதை, சன்மானம், புகழ், ஏற்றம், ஒரு கம்பீரம் என எல்லாம் கிடைக்கும்.
அரசு சார்பில் ஒப்பந்தம் கிடைக்காமலும், கிடைத்த ஒப்பந்தம் பயனற்ற முறையிலும் இருந்தவர்களுக்கு பயனுள்ள வகையாக மாறும்.
அரசு சார்ந்த வீடு விற்பனை அதிகாரிகளுக்கு நல்ல நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறை ஏற்றம் பெறும். வீடுவிற்க முயற்சித்தவர்களுக்கு நல்லமுறையில் விற்கும். உங்கள் மனையை அரசு சுவாதீனப்படுத்தி இருப்பின், அதற்குண்டான தொகை கைக்கு வந்துசேரும். வீடு மாற்றம் உண்டு. அரசு சார்ந்த வீட்டுக்கு மாறுவீர்கள்.
செய்திப் பத்திரிகை, வார துப்பறியும் பத்திரிகை நடத்துபவர்கள், வதந்தி சம்பந்தமான செய்திகளால் பிரபலமடைவீர்கள். அதில் அரசியல், அரசு அதிகாரி சம்பந்தப்பட்ட செய்திகள் அதிகமிருக்கும்.
உங்களில் சிலர் அரசு தொலைபேசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்வீர்கள். அல்லது ஒப்பந்தம் எடுப்பீர்கள். உங்களில் நிறைய பேருக்கு வதந்தி பேச ஆசை வரும். எனினும் குருவின் பார்வை அதனை அணைகட்டித் தடுக்கும்.
மிதுன ராசி குழந்தைகளுக்கு தம்பிப் பாப்பா பிறக்க வாய்ப்புள்ளது. உங்களின் இளைய சகோதரம் வாழ்வில் வெளிச்சம் பரவி வாழ்வு வளமாகும். உங்களது யோசனைகள் நற்பலன் தீரும். அவ்வப்போது வெற்றிச் செய்தி கிட்டும். சிறுதூரப் பயணங்கள் லாபம் தரும். சாலை ஒப்பந்தம் வளம் கொடுக்கும்.
உங்களில் சிலர் புத்திக்குழப்பம், மனத்தடுமாற்றம், அதிக டென்ஷன் என இருப்பவர்களுக்கு அவை சரியாகிவிடும்.
3-ஆமிடம் வீரியஸ்தானம். அப்படி இப்படி இருக்க ஆசையைத் தூண்டும். இது சூரியன் வீடாக இருப்பதால், அரசியல்வாதிகள், அரசு சார்ந்தவர்கள், ஏன்- உங்கள் தந்தை வயதுடையவகள்கூட கொஞ்சம் தடுமாறுவர். ஆயினும் "இதெல்லாம் வாழ்வில் சகஜமப்பா' என்று கண்டு கொள்ளாமல் போய்விடுவீர்கள். குரு பார்வை பிரச்சினை தரும் வகையில் இந்த விஷயங்களைக் கொண்டுசெல்லவிடாது.
9-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 9-ஆம் பார்வையால் மிதுன ராசியின் 5-ஆம் வீட்டை அவதானிக்கிறார். இது மிக நல்ல பார்வை அமைப்பு.
இந்த அருமையான பார்வை மிதுன ராசியினருக்கு அருமையான குழந்தை பாக்கியம் தரும். கூடிய மட்டும் நல்லவிதமாக பிரசவமாகும். தாய், சேய் நலன் நன்றாக இருக்கும். உங்கள் குழந்தைகள் அடம்பிடிக்காமல் சமர்த்தாக இருப்பர். குழந்தைகளின் ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.
நீங்களும் உடற்பயிற்சி, யோக என பின்பற்றி, உங்கள் ஆரோக்கியத்தை அழகாகப் பேணுவீர்கள். குலதெய்வக் கோவில் வழிபாடு சிறக்கும். திருமணம் முடிந்து, குலதெய்வக் கோவில் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பரம்பரைத் தொழில், வியாபாரத்தை முன்னெடுப்பீர்கள். சிலர் திருமணம்முடிந்து, குலத்தொழிலை விருத்தி செய்வீர்கள். உங்களில் சிலருக்கு கோப குணமுடைய மருமகன் வருவார்.
ஆரோக்கியம், மருத்துவனை, சத்துணவு, ஆரோக்கிய உணவு, குழந்தைகள் உணவுத் தயாரிப்பது என வேலைக்குச் சேர்வீர்கள். பங்கு வர்த்தகம் எதிர்பாரத நன்மைகளையும், மேலும் முதலீடு செய்வதையும் நடக்கச் செய்யும். பங்கு வர்த்தக அலுவலகத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும்.
பல மிதுன ராசியார் காதல் வலையில் விழுவார்கள். சிலர் மதம், இனம் மாறியும் விரும்புவார்கள். எனினும் குரு பார்வை அழகாக, அம்சமாக திருமண பந்தத்தில் ஒருங்கிணைக்கும். இதுதான் குரு பார்வையின் விசேஷம். (இதுவே ராகு பகவான் என்றால், "முதலில் இழுத்துக்கொண்டு ஓடு; மீதியை அப்புறம் பார்த்துக்கலாம்' என்று செயல்படச் செய்வார்).
5-ஆமிடம் என்பது கலைத்துறையைக் குறைக்கும். மிதுன ராசியினரின் 5-ஆம் வீடோ சுக்கிரனின் வீடு. எனவே கலைத்துறைக்கான ஸ்தானத்தையும், கலைத்துறைக்கான அதிபதி சுக்கிரனையும் குரு ஒருங்கே பார்ப்பதால், மிதுன ராசி கலைத்துறையினரின் வாழ்வு "ஓஹோ'தான்! தாய்மொழி மட்டுமின்றி வேறு மொழிகளிலும் பங்கேற்று மேன்மை பெறுவர். அலைச்சல்களும், முதலீடும் இருக்கும். சிலர் தயாரிப்புகளில் முதலீடும் செய்வர். சிலர் கலைத் துறைக்குள் தன் சக கலைஞரைக் காதலித்து திருமணமும் செய்வர். சிலருக்கு கலைத்துறை சார்ந்தவர் மருமகனாக வருவார்.
திரைப்படத்தை வாங்கி விற்கும் தொழில், வியாபாரம் உடையோர் பழுதில்லாமல் வர்த்தகம் செய்யலாம். உங்களின் சில குழந்தைகள் திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படுவர். விளையாட்டுத் துறையினர் பரிசு, பாராட்டுகள் பெறுவர். இதன்மூலம் சில விளையாட்டு வீரர்கள் வேலை கிடைக்கப்பெறுவர்.
பொதுப் பலன்கள்
மிதுன ராசி, மூன்றாம் வீடு, 5-ஆம் வீடுகள் குருவின் பார்வையைப் பெறுகின்றன. குருவோ 7, 10-ன் அதிபதி. ராசி என்பது ஜாதகரைக் குறிக்கும். 3-ஆமிடம் வீர, தைரிய இடம். 5-ஆமிடம் காதல். ஆக, இந்த குருப்பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் கரபுஜ பராக்கிரமத்தைக் காட்டவும், அதன்மூலம் காதலைத் தொடங்கவும், பிறகு கல்யாணம் பண்ணவும் செய்வர். இதற்கே நேரம் சரியாக இருக்கும் போலிருக்கிறது. மிச்ச நேரத்தில் கொஞ்சம் வியாபாரம், தொழிலை கவனிப்பார்கள் போலும். குரு பார்வை பெருக்கும் குணமுடையது. காதல் எண்ணிக்கையைப் பெருக்காமல் இருந்தால் சரிதான்.
அப்புறமென்ன... மிதுனத்தாருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்!
அனுபவியுங்கள். மிதுன ராசிக்கு கும்ப குரு 85 சதவிகித நற்பலன்கள் தருவார்.
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சியில் உங்கள் எண்ணங்கள், லட்சியங்கள், யோசனைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், அபிலாஷைகள் என என்னென்ன உண்டோ அனைத்தையும் நிறைவேற்ற கடும் உழைப்பை நல்குவீர்கள். இதற்காக நிறைய நபர்களை சந்தித்து, அவர்களின் வழிகாட்டுதல், ஆசிர்வாதங்களுடன் நினைத்ததை அடைந்தே தீருவீர்கள். சிலருக்கு ஏனோ வேலை கிடைப்பது தட்டிப்போய்க்கொண்டே இருக்கும். இந்த குருப்பெயர்ச்சி, அதனை ஈடேற்றும். சீருடைப் பணி போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. அரசியலில் ஒரு நிலையான இடம் கிடைக்காதவர்களுக்கு இப்போது, தகுதியான ஸ்திரமான இடம் கிடைக்கும். சமையல் ஒப்பந்தக்காரர்கள், தொழிலின் தொய்வு நீங்கி சுறுசுறுப்பு பெறுவர்.
இதுவரையில் உஷ்ண சம்பந்தமான நோய் உடையவர்கள் அதிலிருந்து விடுபடலாம். உங்களில் சிலர் கடனுக்கு அலைந்துகொண்டிருந்தால், இவ்வேளையில் கடன் கிடைக்கும். ஆனால், அதற்காக கடன்தான் கிடைக்கிறதே என்று நிறைய வாங்கக்கூடாது. கடன் பெருக்கம் ஏற்பட்டுவிடும். சற்று கவனமாக இருத்தல் அவசியம். ஊரின் நடுப்பகுதியிலுள்ள நரசிம்மர் கோவிலுக்குச் சென்று வழிபடவும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
இதுவரையில் சிலருக்கு இருந்துவந்த சிந்தனைச் சிதறல்களை குரு ஒழுங்குபடுத்துவார். சரி; அப்படியென்ன சிதறல்? கம்ப்யூட்டரில் எவன் பணத்தையாவது ஆட்டையைப் போடலாமா? தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டலாமா? போலீஸ் மாதிரி டிரஸ் செய்து லஞ்சம் வாங்கலாமா? "விண்வெளியில் ராக்கெட் விடப் போகிறேன்; பாதிவிலையில் டிக்கெட்' என ஊரை ஏமாற்றலாமா? செல்ஃபோனில் பேசிப்பேசியே அடுத்தவர் அக்கவுண்ட் ஞ.ப.ட வாங்கி, பணத்தை வழித்தெடுக்கலாமா? கள்ளக் கணக்கு எழுதலாமா? எதைச் செய்வது? எதை விடுவது என சில திருவாதிரை நட்சத்திரத்தார் பெரிய பெரிய யோசனை செய்துகொண்டிருக்க, கும்பத்திற்கு வரும் குரு, அதட்டி, மிரட்டி உட்கார்த்தி வைத்துவிடுவார். இந்த நட்சத்திரத்தார் "என்னவோ, இப்பெல்லாம் மண்டை ஒர்க் ஆகமாட்டேங்குது. யோசனையே வரலை. நேரம் சரியில்லை போலிருக்கு' என அலுத்துக்கொள்வர். மற்றபடி எல்லாமே மகிழ்ச்சிதான்.
பூனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
மிதுன ராசிக்கு குரு பார்வை படுவதால் இந்த குரு சார நட்சத்திரம் இருமடங்கு லாபம் தரும். கும்ப குரு வந்தவுடன் நிறைய புனர்பூச நட்சத்திரத்தாருக்கு திருமணம் நடக்கும். அதுமட்டுமல்ல; அந்த திருமணம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வெகு கௌரவம் கொண்டுவந்து சேர்க்கும். கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வெகு நல்ல பலனைத் தரும். உயர் கல்வி மாணவர்கள், கணக்குப்பிரிவு, தொழிற் கல்வி, மனிதவள மேம்பாடு என்பன போன்ற துறைகள் கிடைக்கப்பெறுவர். தொழில், வியாபாரம் தொடங்குவீர்கள். அதில் வர்த்தக மேம்பாடு இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டங்களோடு, நிறைய ஆசிர்வாதங்களும் பெறுவீர்கள். மனதில் ஒரு உறுதித்தன்மையும், மனத்திண்மையும் ஏற்படும். இது உங்கள் வாழ்க்கையை உந்து சக்தியாக மேம்படுத்தும். பிறர் பொறாமைப் படும் அளவில் வாழ்வு அமையும். சோலைகள் அல்லது கடலுக்கு அருகிலுள்ள சிவனை வணங்கவும்.
பரிகாரங்கள்
சிவனையும், சங்கர நாராயணரையும் வணங்கவும். வீடு மாற்றம் செய்பவர்களுக்கு முடிந்த உதவி செய்யவும். குழந்தைகள் திறமையை பரிகசிக்காமல் பாராட்டுங்கள். பெண்களிடம் கண்ணியமாகப் பழகவேண்டும். திருமண உதவி செய்யவும். தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நியாயமான வழிகாட்டுங்கள்.
"சால மாமலர்கொண்டு சரண் என்று' எனத் தொடங்கும் பஞ்ச புராணப் பாடல் பாராயணம் செய்யவும். கோவிலில் தொண்டாற்றும் எளிய அந்தணர் களுக்கு உதவவும்.