ஒரு மனிதனின் உயர்வு- தாழ்வு, ஏழை- பணக் காரன் என்பதெல்லாம் அவரவர் கர்மாவைப் பொருத்தது என்று பழிபோட்டுவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியுமா? இப்படி நடக்கவேண்டுமென்பது விதி.
அதேசமயம் விதியென்று ஒன்றிருந்தால் விதிவிலக் கென்று ஒன்று உண்டல்லவா? அந்த விதிவிலக்கு பெற நாம் என்ன செய்யவேண்டும்? நாம் துதிக்கவேண்டும். துதி என்றால் பஜனை பாடுவது, ஜால்ரா அடிப்பது என்று பொருளல்ல. துதி என்பது மிக உயர்ந்த உள்ளன்புடன் கூடிய பிரார்த்தனையாகும்.
எதற்குப் பிரார்த்தனை? எதைக் குறித்துப் பிரார்த்தனை என்று பல கேள்விகள் உள்ளன. ஆனால் இங்கே பலருக்கும் விடையைக் கண்டுபிடிக்கும் ஆர்வமில்லை. உதாரணமாக, சமைக்க விருப்பமில்லை. ஆனால் ருசிக்க மட்டும் விருப்பமிருக்கிறது. சமைக்கத் தெரியாதவனுக்கு ருசியை முழுமையாக உணர முடியாது. இங்கே ஒவ்வொருவருக்கும் அது எப்படி, இது எப்படி? அது எதற்கு என்று கேள்விகள் நீள்கின்றன. கேட்கும் எல்லாருக்கும் விடை தெரியுமா என்றால் மிகக்குறைந்த சதவிகிதத்தினருக்கு மட்டுமே அந்த ஞானமிருக்கும். அந்த நபருக்கு கேள்வியை பல கோணங் களில் கேட்கவும் தெரியும்; அதற்கான விடையைச் சொல்லவும் தெரியும். இது எப்படி சாத்தியமென்றால் தேடுதலே காரணம். ஒரு நிகழ்வினைப் பார்ப்போம்.
நம் சமகாலத்தில் வாழ்ந்த மிக உயர்ந்த யோகி என்று பார்த்தோமானால் அவர் வேதாத்திரி மகரிஷி என்று குறிப்பிடமுடியும்.
திருமூலரும், திருவள்ளுவரும் ஆராய்ந்தறிந்து உலகுக்கு எடுத்துரைத்த "ஜீவகாந்த சக்தியை'ப் பற்றி ஆராய்ந்தவர். தனது தவ வலிமையின்மூலம் இறைசக்தியின் அருட்பேராற்றலையும், உயிர்சக்தியின் வலிமையையும் உணர்ந்தவர்.
முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருநாவுக்கர சர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் நால்வரும் எதிலும் இளைத்தவர்களல்ல. ஈஸ்வர தரிசனம் கிடைக்கப்பெற்றார்கள். திருமூலர், போகர், அகத்தியர், அவ்வையார், நந்தீஸ்வரர், சுப்ரமண்யர் போன்ற 18 சித்தர்கள், திருவள்ளுவர் உட்பட இவர்களை வேறு எவரோடும் ஒப்பிடக்கூடாது. ஏனென்றால் இவர் கள் யாவரும் உடலெனும் கூட்டிலுள்ள மனமெனும் மாயையை ஒடுங்கச் செய்தவர்கள். மனமென்பது "மகாமாயை' ஆகும். அதுவே பல சிக்கலுக்கும், பலவித மான நோய்களுக்கும் காரணமாகிறது.
நம் மூதாதையர்கள் நம் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளச்சொல்லி பிரதானமாக போதித்தார்கள்.
அப்போது உடல் முக்கியமில்லையா என்ற கேள்வி எழுகிறது. பதஞ்சலி முனிவர் உடல் மட்டுமே முக்கியத்துவம் பெற்றது என்றார். கோரக்கர் எனும் சித்தரோ மனம் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். சுமார் 150 வருடங்களுக்குமுன்பு பிறந்த வீரத்துறவி விவேகானந்தரோ உடல், மனம் இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இவை மூன்றுமே உண்மைதான். அதுபோன்று எனது ஆசானும், என் தாய்வழி தாத்தாவுமான பிச்சை முத்துப்பிள்ளை, எனது இளவயதுக்காலங்களில் என்னிடம் அடிக்கடி "டேய் பெரிய பயலே, உடம்பையும் மனசையும் சுத்தமாக வச்சுக்கணும்டா' என்று கூறுவார். உடலைப் பற்றி சங்ககாலப் புலவர் அவ்வையார்-
"உயிர்க்கு உறுதி எல்லாம் உடம்பின் பயனே
அயிர்ப்பின்றி ஆதியை நாடு'
என்கிறார்.
ஒரு உயிருக்கு உறுதுணை உடம்பேயாகும். அத்தகைய உடம்பினைப் பேணி, அதன் பயனை அடையச் செய்வதே உயிரின் வேலை. எனவே உயிரைப் பாதுகாத்து உயிரைப் போற்றி வளர்ப்பதே ஆதியாகிய இறைவனை அடையும் வழியாகும். "ஊனுடம்பு ஆலயம்' என்பது திருமூலரின் வேதவாக்காகும்.
இத்தகைய உடம்பு நீடித்து நிலையாக இருந்து இறைவனைக் காண மூச்சுப் பயிற்சி எவ்வளவு முக்கியமென்பதை அவ்வையார்-
"இடை பிங்கலைகளில் இரேசகம் ஆற்றில்
அடையும் அரனார் அருள்'
என்னும் வரிகளில் உணர்த்துகிறார்.
இடது நாடி எனும் சந்திரநாடி வழியாகவும், வலது நாடி, பிங்கலைநாடி எனும் சூரியநாடி வழியாகவும்- அதாவது இடப்பக்கம், வலப்பக்கம் இருக்கும் மூக்குத் துவாரம் வழியாக மூச்சை (பிராணவாயுவை) உள்ளே இழுத்து நிறுத்தி, பின்பு வெளியேற்றும் பயிற்சியில் கற்றுத் தேர்ச்சிபெற்றுவிட்டால் இறைவன் எம்பெருமான் சிவனின் அருளை எளிதாகப் பெறலாம்; பெறமுடியும்.
மூச்சு எனும் உயிர்க்காற்றானது உடலினுள்ளே நுழைந்து, சுவாச மண்டலத்தில் புகுந்து சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தில் கலந்து அங்குள்ள செல்களையும் திசுக் களையும் புதுப்பித்து, அதன் ஆரோக்கியத்தையும், வலிமையையும் உறுதிசெய்கிறது. உயிர்க்காற்றை முறையாகப் பயன் படுத்தும்போது புத்தி தூண்டப்படுகிறது. மனம் அமைதியடைகிறது. அமைதி யற்ற மனமானது ஆனந்தத்தை இழப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத் தையும் இழந்துவிடுகிறது. வினைப் பயனை சரிசெய்ய மனதின் செயல் பாடே மிக முக்கியத்துவம் வாய்ந்த தாகும். எண்ணம், சொல், செயல், சிந்தனை எல்லாம் ஒரே நேர்க்கோட் டில்- நேர்மறை ஆற்றலோடு செயல் படவேண்டும். மனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை திருமந்திரச் சிற்பி திருமூலர்-
"மனமாயை மாயை இம்மாயை மயக்க
மனமாயை தான்மாய மற்றொன்றும்
இல்லை
பினை மாய்வதில்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்திருப்பது தத்துவம் தானே'
என்கிறார். மனத்துள் எழுகின்ற பந்த பாசப் பற்றுகளே மாயையாகும். இந்த மாயையானது அறிவை, மனதை மயக்கும் இயல்புடையது. ஆசை உண்டாக்கும் மயக்கம் அழிந்து விட்டால் போதும்; வேறு துன்பம் எதுவுமில்லை. இதற்குமேலும் விடுவதற்கும் அழிவதற்கும் ஒன்று மில்லை. தத்துவம் என்பது தன்னை உணர்வது; தன்னை உணர்வதென்பது தன்னை மயக்கித் தீயவழிச் செல்லத் தூண்டும் பாசங்களை விட்டொழிப் பது. பாசம் எனும் மாயையை அடக்கி விட்டால் மனமானது ஒடுங்கிவிடும். இந்த இடத்தில் ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.
"கண்போன போக்கிலே கால் போகலாமா
கால்போன போக்கிலே மனம் போகலாமா
மனம்போன போக்கிலே மனிதன்
போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து
போகலாமா...'
இந்தப் பாடலுக்கு விளக்கம் வேண்டியதில்லை. மனம்போன போக்கில் ஒருவன் போகும்போது அவன் சேரக்கூடிய இடம் செம்மை யான இடமாக இருக்காது. நேர்மறை சிந்தனையோடு செயல்படும்போது பாதை தெளிவாகிவிடும். பயணம் எளிதாகிவிடும். அய்யன் ஈஸ்வரனின் திருவடிவை எளிதாக அடைந்து விடமுடியும். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.