மேஷ ராசி என்பது காலபுருஷனின் முதல் வீடு. இதன் அதிபதி செவ்வாய். இங்கு சூரியன் உச்சமும், சனி நீசமும் பெறுவர்.

குடும்ப விவரம்

மேஷ ராசியினர் கோபகுணம் உள்ளவர்கள். முணுக்கென்று முன்கோபம் ஏற்படும். மலைகளில் அலைவதில் ஈர்ப்பும் விருப்பமும் உண்டு. இவர்களது குடும்பத்தினர் அலங்கரித்துக் கொள்வதில் மட்டுமல்ல; உணவு விஷயத்திலும் ரசனை கொண்டவர்கள். இவர்களுடைய இளைய சகோதரர் சற்று குறும்பு பிடித்தவராக இருப்பார். தாயார் அமைதி, அன்பு கொண்டவர். குலதெய்வம் முன்னிலை கொண்ட- வீரமான தெய்வமாக இருக்கும். தாய்மாமன் வெகு புத்திசாலியாக இருப்பார். வாழ்க்கைத்துணை அழகு ரசனையோடும் வியாபார யுக்தியோடும் இருப்பார்.

அடிதடி சண்டை குணமே இவர்களது அவமானத்திற்குக் காரணமாகும். தந்தை தெய்வ நம்பிக்கை கொண்டவராக- சட்டதிட்டங்களை மதித்து நடப்பவராக இருப்பார். இவர்களுடைய தொழில் நிறைய உடல் உழைப்பைக் கொண்டு அமையும். மூத்த சகோதரர் சற்று இறுக்கமானவராக இருப்பார். இவர்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வதும் செலவுசெய்வதும் மிகப் பிடித்தமானதாக இருக்கும். பிறந்த ஜாதக அமைப்பின்படி சில பலன்கள் ஏறக்குறைய அமையும்.

Advertisment

குருவின் இருப்பிடப் பலன்

மேஷ ராசிக்கு குரு பகவான் 9 மற்றும் 12-ன் அதிபதி. அதாவது அதிர்ஷ்டம் மற்றும் விரயாதிபதி. அவர் இவ்வளவு நாளும் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக வந்து, பின் மகரம் திரும்பி, தற்போது அஃபீஷிய லாக கும்பம் வந்து குடியிருக்க ஆரம்பித்துவிட்டார். மேஷத்துக்கு கும்பம் என்பது 11-ஆம் வீடு எனும் லாபஸ்தானம். ஒரு அதிர்ஷ்ட அதிபதி லாப ஸ்தானத்திற்கு வந்து அமர்வதென்பது மிகமிக மேலான கிரகப்பெயர்ச்சி நிலை எனலாம். பதினொன்றாம் இடமென்பது பெருக்கத்துக்குரிய இடமாகும். அதில் அதிர்ஷ்ட குரு அமரும்போது வரவு பெருக்கமடையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு மனிதனின் உண்மையான முன்னேற்றமென்பது பணவரவு மட்டுமல்ல. நிறைவான தன்னம்பிக்கை, எதையும் முடித்துவிடலாம் என்னும் மனத்திண்மை, வெற்றி பெற்றுவிடலாம் எனும் வெகு நம்பிக்கை, சிந்தனைகள் போன்றவற்றை தற்போதைய கும்ப குரு உங்களுக்குத் தருவார். இத்தகைய நேர்மறை எண்ணங்களை 11-ஆமிட குரு கொடுத்து உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்வார். இத்தகைய குரு எவ்விதமாக உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தைத் தருவார்? சிலர் என்றைக்காவது புதையல் கிடைக்காதா என்னும் பேராசை கொண்டிருப்பார்கள். இந்த கும்ப குரு அதற்கான வழியை வழங்குவார். வீடுகட்ட கடைக்கால் தோண்டும்போதோ, கிணறு வெட்டும்போதோ, பண்ணையில் குளம் ஏற்படுத்தும்போதோ, பாறைகளைப் பிளக்கும்போதோ மறைந்திருக்கும் ஏதோவொரு பொருள் புதையல்போல கிடைக்கும். எல்லா மனிதர்களுக்கும் பணம்வேண்டும். அதிலும் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெளிநாட்டுப் பணப்புழக்கத்தைத் தரும். அது நீங்கள் பேசுவதன்மூலம், கற்பிப்பதன்மூலம், கண்கள் பாதுகாப்பு பற்றி விளக்கும் போதும் வெளிநாட்டுப் பணத்தைக் கைக்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்று, அதன்மூலம் பணம் ஈட்டலாம். பேச்சிலேயே வீடுகட்டி பணத்தை அள்ளிவிடுவீர்கள். இந்த கும்ப குரு உங்கள் முதலீடுகளைப் பெருக்குவார். மேலும் முன்பு செய்திருந்த முதலீடுகள் லாபம் தரும். தந்தையின் சொத்து சிலருக்குக் கிடைக்கும். சிலருக்கு அரசியல்வாதியான தந்தையின் உதவிமூலம், இவரும் அரசியலில் குதித்து உடனே ஒரு பதவியையும் பெற்றுவிடுவார். வேலையில் பதவி உயர்வு கண்டிப்பாகக் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் பெருகும். மூத்த சகோதரர் உங்களுக்கு மறைமுக வருமானத்துக்கு ஆவன செய்வார். தந்தைவழி சித்தப்பாவின் சொத்துகள் உங்களை வந்தடையலாம். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள். ஓவியம் வரைவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் மிக மேன்மையும் லாபமும் பெறுவர். இந்த குருப்பெயர்ச்சி உங்களது சில அடங்கா எதிரிகளையும் நட்பு வளையத்துக்குள் கொண்டுவந்து மாயம் நிகழ்த்தும். மனைகள் பல வாங்கும் யோகமுண்டு. சிலர் பாதி மனைகளை சட்டத்திற்கு உட்பட்டும், மீதி மனைகளை சட்டத்திற்குப் புறம்பாகவும் வாங்கிக் குவிப்பார்கள். இனி, குருவின் பார்வைப் பலன்களை காண்போம்.

5-ஆம் பார்வைப் பலன்

Advertisment

மேஷ ராசிக்கு கும்ப குரு தனது 5-ஆம் பார்வையால் 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மையல்லவா! அதனால் 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு, சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பிப் பாப்பாவைத் தந்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார். படிக்கும் மாணவர்களுக்கு கற்பூர புத்தியைக் கொடுப்பார். இதனால் மேஷ ராசி மாணவர்கள் எளிதாக உள்வாங்கிப் புரிந்து கற்கும் திறமையைப் பெறுவர். கைபேசி மிக நன்மை தரும். அதன்மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என பிறருக்கு சொல்லிக்கொடுப்பீர்கள். குழந்தைகள் கல்வி விஷயமாக வீடு மாறக்கூடும் அல்லது ஒரு வீட்டை விற்று இன்னொரு வீடு வாங்குவீர்கள். இளைய சகோதரரின் உயர்கல்விக்கு உதவவேண்டி வரும். சிலரது இளைய சகோதரத்துக்கு திருமணம் நடக்கும். உங்களில் பலர் வானொலி, தொலைக்காட்சி சம்பந்தமான வேலைகளில் சேர்வீர்கள். சிலர் கைபேசி பழுதுநீக்கும் கடை தொடங்குவீர்கள் அல்லது கைபேசிக் கடையில் முதலீடு செய்வீர்கள். பத்திரிகைத் தொழில்புரிவோர் பரிமளிப்பீர்கள். உங்களில் சிலர் கனிமவளம், மண் தோண்டுதல், சுரங்கத்தொழில், பள்ளம் தோண்டுவது என இவ்வகை ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். உங்கள் எண்ணம் நிறைவேறும் பொருட்டு அதிக சிறுதூரப் பயணங்கள் இருக்கும். சிலர் அலைச்சலுடன்கூடிய சிறுதூர வேலை கிடைக்கப் பெறுவர். உங்களில் சிலர் புனிதப் பயணம், புராண விளக்கம், பக்தி சொற்றொடர் போன்றவை சார்ந்த நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, அதனை வெளியிட்டு நல்ல பணமும் புகழும் பெறுவீர்கள். 3-ஆமிடம் என்பது வீரிய ஸ்தானம். இந்த காலகட்டத்தில் சிலருக்கு சில்மிஷம் செய்ய ஆசை வரும். ஆனால் அந்த ஸ்தானத்தைப் பார்க்கும் குரு, "அதெல்லாம் தவறு' என்று அதட்டி அடக்கிவிடுவார். பிறகென்ன? ஜாதகர் நல்லபிள்ளையாக மாறிவிடுவார்.

7-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 7-ஆம் பார்வையால் மேஷ ராசியின் 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். 5-ஆமிடம் என்பது புத்திர ஸ்தானம். அதை குரு பார்ப்பதால் மிக நன்மை விளையும். ஆம்; இவ்வளவு நாளும் பிள்ளைப்பேறுக்காகத் தவித்தவர்களுக்கு குரு, குலம்தழைக்கச் செய்வார். மிக முக்கியமாக, அரசியல் வாதிகள்- குறிப்பாக பரம்பரை அரசியல்வாதிகள் எந்த மந்திரிப் பதவிக்காகக் காத்திருந்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இவ்வளவு நாளும் தோல் வியாதி, கழுத்துவலி, ஒவ்வாமை போன்ற இம்சைகளை அனுபவித்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நிம்மதியும் நல்ல சுகமும் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு அதிகரிக்கும். குலதெய்வத்துக்கு விளக்கு, வெளிச்சம், அன்னதானம், நித்திய பூஜை, மந்திர உபாசனை போன்றவை நடைபெற பெருமுயற்சியும் செலவும்செய்து அவற்றை நிறைவேற்ற ஆவன செய்வீர்கள். உங்களில் சிலர் அரசு குழந்தைகள் காப்பகம், சத்துணவுக் கூடம் போன்றவற்றுக்கு நன்கொடை வழங்குவீர்கள். உண்மையான காதல் துளிர்க்கும். இந்த காலகட்டத்தில் உண்டாகும் காதல் சொந்தத்தில் அமைவது வியப்பான விஷயமாகும். பல ஜாதகர்கள் திரைப்படம், தொலைக்காட்சியில் பங்கேற்பார்கள். அல்லது ஏற்கெனவே கலைத்தொழிலில் உள்ளவர்கள் மிக உயர்வு பெறுவர். இன்னும் சிலர் எடிட்டிங், இயக்கம் போன்ற துறைகளில் மேம்பாடு காண்பர். அரசு, அரசியல்வாதிகளுடன் நட்புறவு உண்டாகும். வாரிசுகள்மூலம் நற்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். வாரிசுகளின் நன்னடத்தை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். இந்த காலகட்டத்தில் பங்குவர்த்தகம் நல்ல மேன்மை தரும். குறிப்பாக அரசு சார்ந்தவை, வெளிச்சம், தங்கச்சுரங்கம், ஆரஞ்சுநிறப் பொருட்கள், செம்பு, மருந்து, ரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் பங்குகள் ஏற்றம் தரும்.

9-ஆம் பார்வைப் பலன்

கும்ப குரு தனது 9-ஆம் பார்வையால் மேஷ ராசியின் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். 7-ஆமிடம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திருமணம்தான். ஆம்; இப்போது திருமண வயதிலுள்ள மேஷ ராசியினருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டுதான் குரு அடுத்தவேலை பார்க்கச் செல்வார். வெளியூர், வெளிநாட்டில் வேலைசெய்யும் வரன் அமைவார். சில வரன்கள் வெளிநாடு சம்பந்த வியாபாரம் செய்யும் குடும்பத்தில் அமைவர். மேஷ ராசியினரின் வியாபாரம் மிக முன்னேற்றம் காணும். நல்ல பங்குதாரர் கிடைப்பார். மேலும் குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் நல்ல உழைப்பாளியான வேலையாட்கள் கிடைப்பர். இதனால் உங்கள் வியாபாரத்தில், நீங்கள் ஒரு கையெழுத்து போட்டால் நூறு கையெழுத்து போட்டது போல, தொழில் பல்கிப்பெருகும். வியாபாரம் ஆரம்பிக்க எண்ணமுடைய ஜாதகர்கள் உடனடியாக வியாபாரம், தொழில், கமிஷன் ஏஜென்சி, திரைப்படத் தொழில், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு, பங்குவர்த்தகம், வேலையாட்கள் ஏற்பாடு செய்துதரும் நிறுவனம், கைபேசி விற்பனை, மந்திர சுலோகம் கற்றுத் தருதல், பயண விஷயம், வங்கி சார்ந்த தொழில், கல்விப் பயிற்சி நிலையம், வீடுமாற்றும் நிறுவனம், விளையாட்டுப் பயிற்சி என இன்னபிற தொழிலில் ஈடுபடலாம். இதுவரையில் தொழிலில் இருந்த பிரச்சினை அல்லது பிரச்சினை கொடுத்துக்கொண்டிருந்த நபர் விலகி விடுவார். மேஷ ராசிப் பெண்களுக்கு வேலையும் கிடைத்து திருமணமும் நடக்கும். உங்களில் சிலர் ஏதேனும் பொருளை இழந்திருந்தால் இந்த குருப்பெயர்ச்சியில் அது திரும்பக் கிடைக்கும். தம்பிகளில் சிலர் பிரிந்திருந்தாலும், சில சந்திப்புகள் உங்களை மீண்டும் சேர்த்துவைக்கும். இதற்கு முக்கிய காரணம், குருவானவர் உங்களின் பழைய யுத்தங்களை மறக்கச் செய்துவிடுவார். இந்த ஞாபக மறதி தம்பதிகளை- நண்பர்களை- உறவுகளை- வியாபாரப் பங்குதாரர்களை, பழையதை மறந்து புதிய நட்புறவைத் துளிர்க்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இதுவரை, திருமணமாகி இல்லறத்தில் நிம்மதியின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, ஒரு குடும்பப் பெரியவரின் ஆலோசனைப் படி நிம்மதி கிடைக்கும். இல்லறம் நல்லறமாகி நன்மை தரும்.

பொதுப் பலன்கள்

மேஷ ராசியின் அருமையான இடங்களை குரு பார்ப்பதால் உங்களுக்கு திருமணம், தொழில் என "ஓஹோ' வாழ்க்கைதான்! குறிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு மனிதருக்கு வாழ்வில் எவையெவை அவசியத் தேவையோ அவையும் கிடைத்து அதற்குமேலும் கிடைக்கும். வேறென்ன வேண்டும்? மேஷ ராசியினருக்கு ஒன்றே ஒன்றுதான் சற்று சிந்திக்க வைக்கிறது. மூன்றாமிடம் என்னும் ஸ்தானத்தை குரு பார்க்கும்போது சிலருக்கு சற்று சபல எண்ணம் அதிகரிக்கும். எனினும் குருவின் பார்வை என்பதால் அதனை அவ்வப்போது தடுத்துவிடுவார். குரு மேஷ ராசியினருக்கு 75 சதவிகித நற்பலன் தருவார்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

குரு அதிக தன்னம்பிக்கைத் தரப்போகிறார். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் மன தைரியம் உண்டாகும். மற்றவர்கள் பயந்து ஒதுங்கும் விஷயத்தைக்கூட நீங்கள் துணிந்து இறங்கி எடுத்துச்செய்து வென்றுகாட்டுவீர்கள். எல்லாவற்றையும்விட ஞாபகசக்தி பெருகி ஓங்கும். இந்த நட்சத்திர மாணவர்களுக்கு- அதிலும் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி மாணவர்களுக்கு இது வரப்பிரசாதமல்லவா! மலைமீதிருக்கும் விநாயகரை வணங்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

கும்ப குரு உங்களை சுறுசுறுப்பாக- பரபரப்பாக மாற்றிவிடுவார். இதுவரை சும்மா இருந்த பெண்களுக்கும் "நாம் ஏதாவது செய்து நான்கு காசு பார்க்கவேண்டும்' எனும் உத்வேகம் எழும். நான்கு பெண்களை உடன் சேர்த்துக்கொண்டு, கூட்டுறவு வகையில் தெரிந்த கைத்தொழில் அல்லது வேறு திறமைகளை நான்குபேர் அறியச் செய்து வாழ்வில் மேன்மை பெறுவர். அதுமட்டுமல்ல; கையில் நாலு காசும் பார்த்துவிடுவார்கள். இந்த நட்சத்திர ஆண்களுக்கும், இவரை சந்தித்து வாழ்வில் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்க வேண்டும் என எதிர்பார்த்த, ஒரு பெரிய- மேன்மையான- அதிகாரம் மிக்கவரின் நட்பு கிடைத்து, வாழ்வின் அடுத்தபடிக்கு நகரத் தொடங்குவீர்கள். மலைமேலுள்ள அம்மனை- மகாலட்சுமியை வணங்கவும்.

கிருத்திகை 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

கும்ப குரு நல்ல சிந்தனையைத் தருவார். நல்ல சிந்தனை நல்லெண்ணங்களைத் தரும். நல்லெண்ணங்கள் நல்ல சொற்களைத் தரும். நல்ல சொற்கள் நல்ல நட்பைத் தேடித்தரும். நல்ல நட்பு சிறந்த வாழ்க்கையைத் தரும். சிறந்த வாழ்க்கை உச்சநிலையைத் தரும். இந்த உச்ச வாழ்வுநிலை, நீங்கள் நான்குபேருக்கு கைகொடுத்து உதவி, அவர்களை மேன்மைப்படுத்த உதவும். இவையெல்லாம் எவ்விதம் நடக்கும்? வேறென்ன... உங்களில் பலர் உயர்பதவி, அமைச்சர், அமைச்சரின் செயலாளர், உதவியாளர் என ஏதோ ஒன்றில் உயரத்திற்குச் சென்றுவிடுவீர்கள். பிறகென்ன... நீங்களும் உயர்ந்து, உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் உயர்த்துவீர்கள். மலைமேலுள்ள சிவனை வணங்கவும்.

பரிகாரங்கள்

சிவபெருமானை வழிபடவும். மேஷ ராசிக்கு குரு லாபத்தில் சஞ்சரிப்பதால், நிறைய நகைகள் அணிவிக்கப்பட்ட சிவனை வழிபடவும். (திருவண்ணாமலையில் சிவனுக்கு அதிக நகைகள் அணிவித்திருப்பார்கள்.) அல்லது அலங்கார நடராஜரை வழிபடலாம். தங்க தானம் நல்லதுதான். இயலாதவர்கள் உழவாரப்பணி செய்யுங்கள். சமையல் கலைஞர்களுக்கு உதவவும். இளைஞர்கள் போட்டி பந்தயங்களில் கலந்துகொள்ள முடிந்த உதவி செய்யவும். அந்தணர்களின் பயணச் செலவுக்கு பணம் கொடுத்து உதவலாம். பிற மதத்திலுள்ள குருமார்களிடம் தேவையறிந்து காணிக்கை செலுத்தவும். "மைத்தகு மேனி வாளரக்கன் தன் மகுடங்கள் பத்தின் திண்தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை' என்று தொடங்கும் பஞ்சபுராணப் பாடலைப் பாடி வணங்கலாம். அருகிலுள்ள சிவன் கோவிலில், பிரசாதம் தயாரிக்கும் இடத்தின் தேவையறிந்து காணிக்கை செலுத்தவும்.