ஒருவருக்கு மனம் சரியாக இருக்க வேண்டும். மனம் சரியில்லாதவருக்கு புத்தியும் சரியாக இருக்காது. மனமும் புத்தியும் சரியில்லாத ஒருவருக்கு, இவ்விரண்டையும் சுமந்துகொண்டுள்ள உடலானது நோய்த் தாக்குதலுக்குள்ளாகி, விரைவில் தானாகவே கெட்டழிந்துவிடும். "மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்.'
இப்போது பூமியை சிதைப்பதென்பது ஒரு தொழிலாக மாறிக்கொண்டு வருகிறது. இது கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போலாகும். ஏனெனில் பூமியை அழிப்பதனால் இயற்கை அழிகிறது. அதனால் நீர்வளம் கெடுகிறது. மழை பொய்த்துப் போகிறது. அதிகரித்துவரும் செயற்கைப் பயன்பாட்டினாலும், இயற்கையை அழிப்பதனாலும் பூமியின் உஷ்ணத்தன்மை அதிகரித்துக்கொண்டே போகிறது. பூமிக்கடியில் சுமார் 700-க்கும் அதிகமான எரிமலைகள் குமுறிக்கொண்டிருக்கின்றன. அழிவு தானாகவே நடக்கிறது. இதற்கெல்லாம் தனிமனிதனின் மனமெனும் மாயக் குரங்கே காரணமாகும்.
மனம் எப்படி இருக்க வேண்டும்? மனமானது எல்லா உயிர்களையும் தன்னுயிராகப் பார்க்கும் தன்மையுடன் இருக்கவேண்டும்.
மனம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்.
ஆனால் நம்பவேண்டியதை விட்டுவிட்டு எதை யெதையோ நம்புகிறோம். அவ்வாறானால் எதுதான் நம்பிக்கை?
நாம் எங்கிருந்து வந்தோம்; நம்மை எது உருவாக்கியது என்று யோசிக்க வேண்டும். அவ்வாறு யோசிக்கும்போது நாம் எதையும் வாங்கிவிட முடியும்; செய்துவிட முடியுமென்ற தன்னிச்சையான எண்ணம் தோன்றாது. இது சாத்தியமா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்போது எது நம்பிக்கை, எது சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. தெய்வப் புலவர் திருவள்ளுவர்-
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு'
என்கிறார்.
இறைவனின் உண்மையான புகழை உள்ள விருப்பத் தோடு சொல்லிப் போற்றுபவனி டம், தனது அறியாமையால் விளையும்- அதாவது வரக்கூடிய பெருந்துன்பங்களும் அவனை ஒன்றும் செய்வதுமில்லை; சேர்வதுமில்லை.
சமஸ்கிருதத்தில் "ஈஸ்வர ப்ரணீதானம்' என்னும் வார்த்தை யுண்டு. அதாவது "மனம் இடைய றாது இறைசிந்தனையில் இருக்க வேண்டும்' என்கிறது. இறைவனின் பற்றற்ற கருணைமீது நம்பிக்கை வைக்கச்சொல்கிறது. சிறுவயதில் நான் மிகுந்த பயந்த சுபாவமுடையவன். தாய் சொல்வதைத் தட்டாத பிள்ளையாக இருந்துவந்திருக்கிறேன். ஒரு தாய் தன் குழந்தையைப் பார்த்து, "அங்கே போகாதே; பேய் இருக்கிறது' என்று சொன்னால் குழந்தையும் அதை அப்படியே நம்பிவிடும். சில தாய்மார்கள் குழந்தையைப் பார்த்து, "சிங்கம் வருகிறது; புலி வந்துவிடும்; கரடி வருகிறது' என்று சொல்லி குழந்தைகள் சில தவறுகளில் ஈடுபடாமலிருக்க இப்படிச் சொல்வார்கள். ஆனால் எனது தாயாரோ, "தம்பி, இருட்டிக் கிட்டு வருது' (இருள் சூழ்வது) என்று சொல்வார்கள். அதைக் கேட்ட அடுத்த நொடி அலறியடித்து வீட்டுக்குள் ஓடிவந்துவிடுவோம். இது எதனால்? அம்மா நமக்கு நல்லது சொல்கிறாள் எனும் நம்பிக்கையே காரணமாகிறது.
ஒவ்வொரு குழந்தையும் இப்படித்தான் தாய் சொல்வதை கண்களை மூடிக்கொண்டு நம்பும். அதேவேளையில் அம்மா, "தம்பி, நீ பயப்பட வேண்டியதில்லை. அங்காள பரமேஸ்வரிமீது நம்பிக்கை வை. உனக்கு ஒரு தீங்கும் நேராது' என்பார். நானும் அதன்மீது அளவற்ற நம்பிக்கைகொண்டேன். அதுவே இன்று எனக்கு அரணாக இருக்கிறது. எனவே இதைப் போன்று தான்- அதாவது ஒரு குழந்தை தாய்மீது நம்பிக்கை கொண்டிருப்பதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஈஸ்வர பக்தியில் நிலைத்திருப்போமானால் ஈசனின் கருணைப் பார்வை நம்மீது விழுவது சாத்தியமே.
மனமானது "இதை நான் செய்துவிட முடியும்; இது என்னால் முடியும்' என்று என்னும்போது அங்கே கர்வமும் அகங்காரமும் தலைதூக்குகிறது. நாமாக தனித்து எதையும் செய்யமுடியாது. "நான்தான் செய்தேன்; நான் செய்வேன்' என்று எண்ணும்போது, செய்யப்பட்ட செயல் நிலைத்திருப்பதில்லை. எது நம்மை உருவாக்கியதோ, எது நாம் உருவாகக் காரணமாக இருந்ததோ அதுவே நம்மை நடத்துகிறது. அதுவே நம்மை இயக்குகிறது. அதுவே பரம்பொருளாகிய ஈஸ்வரனின் கருணை. சதாசிவத்தின் கருணைப் பார்வை யில் நாம் இருக்கும்போது துன்பமென்பதே இல்லை. ஆனால் "நான், எனது, என்னால்' என்ற எண்ணங்களுடன் கூடிய செயல்பாடு, நாம் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் ஒருநாள் நம்மை வெகுசாதாரணமாக கீழே தள்ளிவிடும்.
நாம் நல்லன செய்யும்போதும், நினைக்கும்போதும் இறையருள் நம் கூடவே இருக்கும். எதிர்மறையாகச் செயல்படும்போது அது நம்மைவிட்டு விலகியே இருக்கும். பின்னாளில் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு அது பொறுப்பாகாது.
நாம் காண்பது எதுவும் உண்மையல்ல; பொய்யுமல்ல. நாம் செய்யும் சேவை ஒன்றே மெய். நீரே நிரந்தரம்; நிலமே நிரந்தரம்; ஆகாயமே நிரந்தரம்; காற்றே நிரந்தரம்; நெருப்பே நிரந்தரம். நம்மிடமுள்ள எதுவும் நிரந்தரமல்ல. பஞ்சபூத சக்திகளையும், பிரபஞ்ச சக்திகளையும் அணுவில் அணுவாக எங்கோ இருந்துகொண்டு இப்பூவுலகை இயக்கிக்கொண்டு, அன்பும் அமைதியும் ஒருங்கேபெற்ற மகாதேவ னாகிய தில்லை நடராஜப் பெருமானின் கருணையே என்றும், எப்போதும், எங்கும் நிரந்தரம். ஏனென்றால் ஈசன் "எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன்' என்கிறான்.
"எனக்குள்ளேயும் எல்லா உயிர்களும் இருக்கின்றன; இயங்குகின்றன' என்பதே ஈஸ்வர தத்துவமாகும்.
"கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம(து) ஆள்வர்
மலிந்தவர் மாறுந் துணையுமொன்(று) இன்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே'
என்கிறார் திருமூலர்.
எல்லா உயிர்களிலும் ஈஸ்வரன் இருக்கி றான் எனும் உண்மையை உணர்ந்து, எல்லா உயிர்களிடமும் அன்பும் இரக்கமும் கொண்டு மகிழ்ந்திருப்பவரே பரம்பொருளின் திருவடி நிழலைக் காணும் பேற்றினைப் பெறுவர். இறையருள் அவர்களுக்குக் கிட்டும். உலக இன்பங்களைத் துறந்துவிடத் துணிந்து துறவு மேற்கொண்டு தவமிருப்பவர் வீட்டின்பம் அடையப் பெறுவர். இந்த இரண்டிலும் சேராது, உலக இன்பங்களில் உழன்று, தங்கள் நிலையில் தாழ்ந்து வாழ்பவர் கள், அவர்களுக்குத் துணை என்று சொல்ல யாருமின்றி, அனாதையாக வருந்தி, எமனுடைய கோபத்துக்குள்ளாகி இறப்பர்.
"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து'
என்பது வள்ளுவர் வாக்கு அறநெறி என்பது பிற உயிர்களிடத்து அன்பு செலுத்துவது; பிற உயிர்களுக்கு உதவுவதாகும். ஆகவே பிறரையும் அறநெறியில் நடக்கச் செய்து, தானும் அறத் தினின்றும் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதே சிறப்பானதாகும். அத்தகைய அறம் தவறாத இல்வாழ்க்கையானது தவம் செய்பவரைவிட மிகவும் வலிமையுடையது.
எனவே மனதைச் செம்மையாக்குவோம் புத்தியை நேராக்குவோம். எம்பெருமான் நம் வாழ்க்கையை சீராக்கி ஆரோக்கிய ஆனந்தத்தை அள்ளியருளுவான். அறம் வளர்ப்போம். சிவனின் அருளைப் பெறுவோம்.