மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முழுவதும் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த புதன் ராசிக்கு 2-ல் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். கேதுவின் பார்வை 2-ஆமிடத்திற்குக் கிடைக்கிறது. 11-ல் உள்ள குரு செவ்வாயைப் பார்க்கிறார். சகோதரவகையில் சங்கடங்கள் விலகும். 5-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் உச்சம். உங்களது திட்டங்களிலும் செயல்களிலும் தேக்கம், தடை ஏதும் இருக்காது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கருதிய காரியங்கள் கைகூடும். 10-ல் சனி ஆட்சிபெற்றா லும் 13-ஆம் தேதிமுதல் வக்ரமாகிறார். வக்ரத்தில் உக்ரபலம். தொழில்துறை, வேலைவாய்ப்பு, உத்தியோகம் போன்றவற்றில் முன்னேற்றகரமான அமைப்பு உருவாகும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிட்டும். 11-ஆமிடத்து குரு சுயதொழில்வகையில் லாபம் தருவார். 2-ல் உள்ள ராகு சிலநேரம் குடும்பத்தில் அமைதிக்குறைவு, சொந்தபந்தத்தில் சங்கடங்களை உருவாக்கலாம். உங்களால் உயர்ந்த உறவுகளே உங்களைப் பற்றிப் புறம்பேசுவதை காதால் கேட்கும் சூழ்நிலைகளும் ஏற்படலாம். நீங்களும் பெருந்தன்மையோடு கண்டும் காணாமல் விட்டுவிடுவீர்கள். சங்கடம்தீர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்யவும்.

ரிஷபம்

இம்மாத ஆரம்பத்தில் ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைவாக இருக்கிறார். 5-ஆம் தேதிமுதல் ஜென்மத்தில் ஆட்சியாவார். 2-க்குடைய புதன் ஜென்மத்தில் இணைகிறார். எனவே, உங்களது பொருளாதாரம், குடும்பம் ஆகியவற்றில் குறையேதும் இல்லை. குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், சரளமான பணப்புழக்கம் காணப்பட்டாலும் சேமிப்புக்கு இடமிருக்காது. ஜென்ம ராகு- சப்தம கேது தாமதத் திருமணத்தை உருவாக்கலாம். வசதியுள்ளவர்கள் காளஹஸ்தி சென்று நாக தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்துகொள்ள லாம். இயலாதவர்கள் தேனி அருகே உத்தம பாளையம் எனப்படும் தென்காளஹஸ்தி தலம் சென்று ராகுதோஷப் பரிகார பூஜை செய்துகொள்ளலாம். 10-ல் உள்ள குரு வாழ்க்கை, தொழில், வேலையில் திருப்தி கரமான சூழலை உருவாக்குவார். குருவுக்கு வீடுகொடுத்த சனி 9-ல் ஆட்சிபெறுகிறார். பூர்வபுண்ணியம், பூர்வீக சொத்துசம்பந்தமாக நல்ல தீர்வுகள் எதிர்பார்க்கலாம். தந்தை வழியிலோ அல்லது தந்தைவழி உறவினர் களுடனோ மனக்கசப்பு ஏற்படக்கூடும். அதை சரிசெய்ய உங்களை "ஈகோ' தடுக்கலாம். விட்டுக்கொடுத்து அனுசரித்துச் சென்றால் பகையுணர்வை மாற்றலாம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. சனியை செவ்வாய் பார்ப்பதால், சிலர் விருப்பத் திருமணத்தை சந்திக்கலாம். (காதல் திருமணம், கலப்புத் திருமணம்.)

Advertisment

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் இம்மாதம் 12-ல் மறைவாக இருக்கிறார். புதனுக்கு மறைவுதோஷம் பெரிதாக பாதிக்காது. 11-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் இருக்கிறார். ஒருபுறம் அட்டமத்துச் சனி நடந்துகொண்டிருந்தாலும், ஜனன ஜாதகத் தில் சாதகமான தசாபுக்திகள் நடந்தால் கோட்சார கிரகநிலைகளை சமாளிக்கலாம். 11-ல் சூரியன் இருப்பது ஒருவகையில் பிளஸ் பாயின்ட்தான். ஒரு நல்ல காரியத்திற்கு 11-ல் சூரியன் இருப்பதுபோல லக்னம் அமைத்துக் கொடுத்தால் அந்த காரியம் தங்குதடையின்றி நடந்தேறும். எனவே, மாத முற்பாதிவரை உங்களது செயல்பாடுகளில் தேக்கம் இருக்காது. 11-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அது உங்களை வழிநடத்தும். உங்கள் லட்சியங்களும் எண்ணங்களும் செயல்வடிவம் பெறும். சீரும் சிறப்புமாக அடையும். தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, வாழ்க்கை முன்னேற் றம் எல்லாம் சீராக அமையும். இதுதான் தர்மகர்மாதிபதி யோகத்தின் சூட்சுமம். எறும்புபோல சுறுசுறுப்பாகவும், யானைபோல வைராக்கியமாகவும் செயல்பட்டால் தோல்விக்கு இடமேற்படாது. குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் ஏற்படலாம். முடியுமென்று நினைத்து முயற்சியோடு முனையுங்கள். வெற்றி உங்களுக்கே.

கடகம்

Advertisment

கடக ராசிக்கு 11-க்குடைய சுக்கிரன் 10-ல் இருக்கிறார். 5-ஆம் தேதிமுதல் 11-ல் ஆட்சிபெறுகிறார். 10-ல் சூரியன் இருக்கிறார். மாத முற்பகுதிவரை சூரியன் 10-ல் இருப்பது நன்மைதான். தொழில், வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல திருப்பமான பலன்கள் உண்டாகும். 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைகிறாரே என்ற சந்தேகம் எழலாம். இருந்தாலும் 8-ல் மாறிய குரு 5-ஆம் பார்வையாக செவ்வாயைப் பார்ப்பதால் தொழில்துறையில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்படாது. ஒரு நன்மை நடக்கிறதென்றால் பல தொந்தரவுகளை சந்தித்துதானே ஆகவேண்டும்? அதுபோல சகிப்புத்தன்மையும் பொறுமையும் இருந்தால் எந்தத் தொழி-லும் வெற்றிபெறலாம். 5-ல் இருக்கும் கேது சிலநேரம் உங்களுக்கு எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கலாம். உங்கள் திட்டங்களில் சந்தேகத்தை எழுப்பலாம். ஆனால் 11-ல் மாறிய சுக்கிரனும், அவருடன் இணையப்போகும் சூரியனும் 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் அந்த எண்ணங்கள் மாறும். 11-ல் சூரியன் மாறியபிறகு செயல்பாடுகளில் வேகமும் விறுவிறுப்பும் உண்டாகும். 7-ல் உள்ள சனி கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவிக்கும் என்றா லும், அன்பும் அன்யோன்யமும் மாறாது; ஒற்றுமை குறையாது. லட்சுமிநாராயணரை வழிபடவும்.

சிம்மம்

இந்த மாத முற்பகுதிவரை சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சமாக இருக்கிறார். உங்கள் காரியங்களில் தடைகள் ஏதும் ஏற்படாது. 13-ஆம் தேதிமுதல் 6-க்குடைய சனி 6-ல் வக்ரமாக மாறுகிறார். ஏற்கெனவே அவர் 6-ல் ஆட்சி. இனி வக்ரத்தில் உக்ரபலம். அவர் 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். 8-ஆமிடம் என்பது ஆயுள், திடீர் அதிர்ஷ்டம், சஞ்சலம் போன்றவற்றைக் குறிக்கும். ஆயுள்குறைவு ஏற்படாது. திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். அதேசமயம் பழகிய வட்டாரத் தில் சங்கடங்கள் ஏற்படலாம். 5-க்குடைய குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சில நேரங்களில் உங்களது வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் உங்கள் எதிரிகளே மறைமுகக் காரணமாக அமைவார்கள். உதாரணமாக ஒரு தேர்த-ல் ஒரே சமூகத்தைச் சார்ந்த இருவர் எதிரெதிர் அணியில் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிப்பதால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றிபெறுவதுபோல! 10-க்குடைய சுக்கிரன் 11-ல் ஆட்சி பெறுவார். (5-5-2021 முதல்). உங்கள் தொழில்துறை வெற்றிக்கு மனைவியும் ஒரு காரணமாக அமைவார். அசுரனைக் கொல்வதற்கு கிருஷ்ணபகவானுக்கு பாமாவின் உதவி தேவைப்பட்டதுபோல, உங்கள் மனைவியின் ஆதரவு உங்களுக்குண்டு.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 9-ல் இருக்கிறார். ராகுவும் சேர்ந்திருக்கிறார். குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடெல்லாம் சிறப்பாக அமைந்தாலும், ஏதோவொரு இனம்புரி யாத குறை இருப்பது போன்ற உணர்வு மனதை நெருடும். அது நிம்மதிக் குறைவை உண்டாக்கும். 9-க்குடைய சுக்கிரன் 9-ல் மாறி ஆட்சிபெற்றபிறகு இந்த குழப்பத்திற்கும் குறைக்கும் தீர்வு கிட்டும். 8-க்குடைய செவ்வாய் 10-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் இதற்கொரு காரணம். 3-ஆமிடத்துக் கேது மன தைரியத்தை ஒருபுறம் தந்தாலும், சங்கடத்தையும் ஏற்படுத்தலாம். உற்றார்- உறவினர்கள், உடன்பிறந்த சகோதர- சகோதரிகள் வகையில் மனக்கசப்பு, கருத்து வேறுபாடு, பிரிவு போன்றவற்றை சந்திக்கலாம். 4-ஆமிடத்து குரு 6-ல் மறைவதால் தேகசுகம் அல்லது தாயின் உடல்நலனில் மருத்துவச் செலவுகள் வந்து விலகும். சிலருக்கு அஜீரணம் சார்ந்த உபாதைகள் தொந்தரவு தரலாம். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு விரயத்தையும் அலைச்சலையும் ஏற்படுத்துவார். 5-ல் சனி ஆட்சி. பிள்ளைகள் வகையில் நல்லவை நடைபெறும். தன்வந்திரி பகவானை வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் 7-ல் இருந்து ராசியைப் பார்க்கிறார். 5-ஆம் தேதிமுதல் ரிஷபத்தில் (8-ல்) ஆட்சியாகிறார். 8-ஆமிடம் மறைவு ஸ்தானமென்றாலும் சுக்கிரன் ஆட்சிபெறுவதால் மறைவுதோஷம் பாதிக்காது. 7-க்குடைய செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவரை 5-ல் மாறிய குரு பார்க்கிறார். ஒரு திரிகோண ஸ்தானாதிபதி மற்றொரு திரிகோண ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. பூர்வீக சொத்துவகையில் நிலவிய பிரச்சினைகள் விலகும். சுமூகமான தீர்வுண்டாகும். தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உண்டான மனக்கசப்பு விலகி அன்பும் பாசமும் மலரும். 5-ல் உள்ள குரு உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் செயல்வடிவம் பெறச் செய்வார். பிள்ளைகளால் நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். கற்பனை பயம் விலகும். சிலர் நிலம், வீடு, வாகனம் சம்பந்தமான முதலீட்டில் ஈடுபடலாம். 8-ல் உள்ள ராகு ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்தினாலும், அது நல்ல மாற்றமாக அமையும். ராசியை குரு பார்ப்பதால் உங்கள் முயற்சி, திறமை, கீர்த்தி எதுவும் வீண்போகாது. "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்ற மொழி உங்களுக்கே பொருந்தும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படும். தாயாருக்கு வைத்தியச் செலவு வந்து விலகும்; பாதிப்பு ஏற்படாது.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைகிறார். 4-ல் உள்ள குரு 8-ஆமிடத்தையும் செவ்வாயையும் பார்க்கிறார். சில நேரங் களில் அதிபுத்திசாலித்தனமாக செயல்படும் காரியங்களில் சறுக்கல் ஏற்படலாம். அவசரப் பட்டு, ஆத்திரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் வில்லங்கம், விவகாரம் போன்றவை ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் நற்பலன்கள் உண்டாகும். பாதகமான தசாபுக்திகள் நடந்தால் எச்சரிக்கையும் கவனமும் அவசியம் தேவைப்படும். 7-ஆமிடம் திருமண ஸ்தானம். அங்கு ராகுவும் 7-க்குடைய சுக்கிரனும் 8-க்குடைய புதனும் இருக்கி றார்கள். எனவே, தாமதத் திருமணம் ஏற்படும். பெண்கள் என்றால் 27 வயதுக்கு மேலும், ஆண்கள் என்றால் 30 வயதுக்கு மேலும் திருமண வயது எல்லைக்கோடாக அமையும். அதைமீறி முன்னதாக இளமையில் திருமணம் நடந்தால், சமையலில் அரைவேக்காடு என்பதுபோல பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். குரு 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். திடீர் பயணம், அலைச்சல் ஏற்பட்டாலும் அதில் ஆதாயமும் கிட்டும். வாழ்க்கையிலும் தொழில்ரீதியாகவும் வேலையிலும் சில மாற்றங் கள் ஏற்படும். அவை முன்னேற்றகரமான மாற்றமாக அமையலாம்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 3-ல் இருக்கிறார். 3-ஆமிடம் மறைவு ஸ்தானமென்றாலும், குருவுக்கு வீடுகொடுத்த சனி ஆட்சி என்பதாலும் 3-ஆமிடமும் சனியின் வீடென்பதாலும் மறைவுதோஷம் பாதிக்காது. தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடந்துகொண்டிருப்பதால், அதில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால்தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரும். அத்துடன் குடும்ப ஸ்தானமான 2-ல் சனி இருப்பதும் தாமதத் திருமணத்தைக் குறிக்கும். 5-க்குடைய புத்திர ஸ்தானாதி பதி செவ்வாய் 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். பிள்ளைகளால் உதவிகள் கிட்டும். அவர்கள்வகையில் நல்லவை நடைபெறும். குருவின் பார்வை 7-ஆமிடத்திற்குக் கிடைப்பதால் மேற்கூறிய தாமதத் திருமணமானது- வரன் தாமதமானா லும் நல்ல வரனாக அமையும். செவ்வாயின் தோஷம் மறையும். 5-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கையானது தொழில்துறையில் அல்லது வேலையில் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தித் தரும். 11-ஆமிடத்தை குரு பார்ப்பதால் அந்தத் திருப்பம் லாபமும் வெற்றியும் கலந்ததாக அமையும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி. மகர ராசிக்கு ஏழரைச்சனியில் இரண்டாம் கூறு ஜென்மச்சனி நடக்கிறது. விரயாதிபதி குரு 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சுபமங்கள நிகழ்வுகள், குடும்ப ஒற்றுமை, கல்வி யோகம் போன்றவற்றை ஏற்படுத்தித் தருவார். 11-ஆமிடத்துக் கேதுவும், அவரைப் பார்க்கும் ராகுவும் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தேடித்தரும். மேலும் பங்காளிவகையில் இதுவரை காணப்பட்ட சங்கடங்களும் சஞ்சலங்களும் நீங்கி சந்தோஷம் உண்டாகும். 11-ஆமிடம் லாபஸ்தானம், வெற்றி ஸ்தானமாகும். அங்கு கேது இருப்பது யோகம். முயற்சிகள் தளர்ச்சியின்றி வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அதனால் கொடுக்கவேண்டிய கடன்களைக் கொடுத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். சிலருக்கு வேலை தொடர்பாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடு போகும் யோகம் அமையும். குறிப்பாக முஸ்-ம் தேசங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும். 6-ல் உள்ள செவ்வாய் கடன் நிவர்த்தி ஏற்படுத்துவார். நோய் அகலும். எதிரிகள் வகையில் வெற்றி உண்டாகும். 5-க்குடைய சுக்கிரன் ஆட்சி. நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்; கனவுகள் பலிதமாகும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 2, 11-க்குடைய குரு ஜென்மத்தில் இருக்கிறார். ராசிநாதன் சனி 12-ல் ஆட்சி. எனவே, மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை நல்ல மாற்றங்களாக அமையும். 12-ல் சனி. ஏழரைச்சனியில் முதல் கூறு விரயச்சனி. சிலர் கடல்கடந்த பயணம் செல்லவும், வெளிநாடு சென்று வேலைபார்க்கவும் வாய்ப்புகள் அமையும். அவ்வாறு அமையும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். 3-ஆமிட சூரியன் உங்களுக்கு தைரியத்தையும் மனவுறுதியையும் தரும். 4-ல் சுக்கிரன் ஆட்சி. மனைவி வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அவர்களால் உதவியும் ஆதாயமும் உண்டாகும். அரசு அல்லது அரசு சார்ந்த பணிகளில் வேலைசெய்யும் அமைப்பு ஏற்படும். 4-ல் உள்ள ராகு பூமி, இடம், கட்டடம் சம்பந்தமாக சில பிரச்சினைகளையும் இழுபறி நிலையையும் ஏற்படுத்தினாலும், ஆட்சிபெற்ற சுக்கிரன் அந்த கவலையை மாற்றுவார். இருபதாம் தேதிமுதல் புதன் பிரச்சினைகளை மாற்றியமைப்பார். 10-ல் உள்ள கேது கிறிஸ்துவ நாடு அல்லது முஸ்-ம் நாட்டுத் தொடர்புகளை உண்டாக்கலாம்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். பொதுவாக ஒரு ராசிநாதனோ லக்கனநாதனோ மறைந்தால், ஒரு செயலை எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் அதை சிரமப்பட்டு முடிக்கும் சூழல்தான் அமையும். 12-ல் மறையும் குரு 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். வீடு, மனை, வாகனம் ஆகியவற்றைப் பொருத்தவரை 6-ஆமிடத்துப் பலனான கடன் போன்றவற்றை சந்தித்துதான் நிறைவேற்ற நேரும். குடும்பத்தில் சுப மங்கள நிகழ்ச்சிகளும் விசேஷங்களும் நடைபெறும். ஏற்படும் விரயங்களை சுபவிரயமாக மாற்றிக்கொண்டால் 6-ஆமிடத்துப் பலனை (நோய், கடன், எதிரி) மாற்றியமைக்கலாம். நோயை மாற்றமுடியுமா என்ற கேள்வி வரலாம். நோயை மாற்றமுடியாவிட்டாலும் அதனிடமிருந்து விலகியிருக்கலாம் அல்லவா! இளைய சகோதரவழியில் சங்கடங்கள் உண்டாகலாம். எனினும் 3-ல் சுக்கிரன் ஆட்சியாக அமர்வதால், அந்த சங்கடங்களை எதிர்கொள்ளலாம். 9-ல் உள்ள கேது ஆன்மிகப் பயணம், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தலாம். குலதெய்வ வழிபாடு, பிரார்த்தனைகள் நிறைவேறும். விருந்து, உபசாரம், கேளிக்கை போன்றவை நடந்தேறும்.