"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.'
-திருவள்ளுவர்
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவ ரால் எத்தனை துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலு டையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.
புராணங்களில் கடவுளைப் பிரார்த் தனை செய்து வரம் பெற்றனர் என்றும், மீண்டும் பிறவா நிலையை அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. அப்படி பெற்ற வரத்தை முறை யாகப் பயன்படுத்தாமல், ஆபத்தில் அகப்பட்ட வர்களும் நிறைய பேர் உண்டு.
மகாபாரத காலத்திற்கு முன்பே... நிகும்பன் எனும் அரக்க அரசனுக்கு சுந்தன் மற்றும் உபசுந்தன் என இருபிள்ளைகள். இவ்விருவரும் மிகவும் ஒற்றுமையாக இருந்தனர். மூன்று உலகத்தையும் தாங்களே வென்று அரசாள வேண்டும் என்று பேராசைப்பட்டு கடுமை யாக பிரம்மதேவனை நோக்கி தவம் இருந்தனர் சகோதரர்கள் இருவரும்.
அவர்கள் முன்தோன்றி, "என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார் பிரம்மா. "மூன்று உலகத்தையும் வென்று, அரசாள வேண்டும்; இறப்பு என்பதே எங்களுக்கு வரக்கூடாது...' என இரண்டு வரங்களைக் கேட்டனர் சகோதரர்கள்.
மூவுலகை ஆளவேண்டும் என்ற வரத்தை உடனே அருளினார். ஆனால் இரண்டாவது வரத்தை அளிக்க மறுத்தார் பிரம்மா. "பிறப்பு என்று வந்துவிட்டால் இறப்பைத் தவிர்க்க முடியாது, வேறு வரம் கேளுங்கள் தருகிறேன்...' என்றார்.
தங்களுடைய ஒற்றுமையின்மேல் வைத்திருந்த நம்பிக்கையில், "எங்களுக்குள் சண்டை மூண்டால் மட்டுமே, மரணம் வர வேண்டும்' என்று கேட்டனர் சகோதரர்கள் இருவரும். பிரம்மாவும் அவர்கள் கேட்ட வரத்தினை வழங்கினார். அதிகமான வலிமையும் ஆபத்தானதுதானே? தங்களை இனி யாராலும் எதுவும் செய்யமுடியாது என்ற துணிவால், இரு சகோதரர்களும் அட்டகாசங்கள் செய்து தேவர்களை துன்புறுத்தினர்.
பொறுமை எல்லை கடந்தபோது, பிரம்மாவின் ஆணைப்படி, திலோத்தமை எனும் பெயரில் ஓர் அழகான பெண்ணை உருவாக்கினார் விஸ்வகர்மா எனும் தேவதச்சர்.
உலகிலுள்ள மிக அழகான பொருட்கள் ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு எள் அளவு எடுத்து உருவாக்கப்பட்டவள் திலோத்தமை. திலம் என்றால் எள் என்றுபொருள்.
அந்த பேரழகியை தானே அடைய வேண்டும் என்று சுயநலம் மேலோங்கியதில் சகோதரர்கள் இருவரும் சண்டையிட்டு மடிந்தனர். மூவுலகையும் ஆளும் வரம் கிடைத்தும், பேராசையால் நாசமாயினர் சகோதரர்கள். இதிலிருந்து பதவி, புகழ் மற்றும் செல்வம் என்று எல்லாம் கிடைத்து விட்டதே என தலைகால் புரியாமல் ஆடக் கூடாது. எல்லாமே கடவுள் அருளால்தான் வந்தது என்ற எண்ணம் எந்த சூழ்நிலையிலும் இருப்பது நல்லது.
எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்த வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது...
வியாபாரி எலி பிடிப்பவனைப் பார்த்து எப்படியாவது அந்த எலியைக் கொன்றுவிட்டு வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டான். எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கியுடன் வந்துவிட்டான். எலியைக் கொல்வதற்கு... எலி அங்கே இங்கே போக்குக்காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன.
அந்த நூற்றுக்கணக்கான எலிகளுக் கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது. எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது. சரியாக குறி பார்த்து, அந்த எலியை டுமீல்.... என சுட்டான். எலி மறுகணமே இறந்துவிட்டது.
வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்.
"ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே இருந்ததே...! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்...! என்ன காரணம்?'' அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்.
"இப்படித்தான் பல பேர் திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம்கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல் தூரத்தில் வைத்துக்கொள்வார்கள்.
அதுவே ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது.''
உறவுகளும் அப்படித்தான். சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும். நல்ல எண்ணம் விதையானால் நன்மை அதன் பலனாகும். தேவைப்படும் பொருளாக இல்லாமல் தேடப்படும் இதயமாக வாழ்வதும்; பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாமல்; படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை அழகானதாக மாறும்.
அப்படிப்பட்ட அழகான வாழ்க்கையைத் தரவல்லதொரு அற்புதமான ஒரு திருத்தலம்தான் திருப்பந்துறை ஸ்ரீ சிவானந் தேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்
இறைவி: அருள்மிகு மங்களாம்பிகை, மலையரசி அம்மை.
விசேஷமூர்த்தி: பாலதண்டபாணி.
விநாயகர்: இரட்டை விநாயகர்
புராணப் பெயர்: திருப்பேணுப் பெருந்துறை.
ஊர்: திருப்பந்துறை.
மாவட்டம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம்.
தீர்த்தம்: மங்கள தீர்த்தம், சின்மயானந்த தீர்த்தம்.
தலவிருட்சம்: வன்னிமரம்.
சிவனின் தேவாரப் பாடல்பெற்ற திருத் தலங்களில்; காவிரி தென்கரைத் தலங்களில் 64-ஆவது தலமாக விளங்குகின்ற இவ்வாலயம் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட இத்தலம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டிருந்தாலும், பரம்பரை அறங்காவலர் ஆர். வெங்கட்ரமணி எஃப்.சி.ஏ. மயிலாப்பூர், சென்னை. அவர்களது கண்காணிப்பில் தினசரி இரண்டுகால பூஜைகள் முறைப்படி நடக்கின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருப்பந்துறை ஸ்ரீ சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்.
"பணிவாய் உள்ள நன்கு எழுநாவின் பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ளமிலாத சுமடர்கள் சோதிப்ப அரியார்
அணியார் நீலமாகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே''
-திருஞானசம்பந்தர்.
தலக்குறிப்பு
பிரணவத்தின் வடிவமாக விளங்கும் கந்தன் எல்லாம் அறிந்த அந்த ஈஸ்வரருக்கே பிரணவத்தின் உட்பொருள் உரைத்த தலம் திருவேரகம் எனும் சுவாமி மலை.
தந்தைக்கு தெரியாத மந்திரத்தின் பொருள் உரைத்தது அவரது பெருமைக்கு சிறப்பு சேர்த்தாலும், சொல்லிக்கொடுத்ததோடு நிறுத்தியிருக்கவேண்டுமே ஒழிய அவர் களைத் திட்டியது எவ்வகையிலும் ஏற்புடைய தல்ல என்பதை உணர்த்தும் வகையிலான திருத்தலம் திருப்பந்துறை.
தல வரலாறு
"ஓம்' என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் பிரம்மன் படைப்புத் தொழிலை செய்துகொண்டிருந்தார். இதை முருகப்பெருமான் தெரிந்துகொண்டார். படைக்கும் தொழிலை அவரிடமிருந்து பறித்துக்கொண்டார். சிவபெருமான் இதை கண்டித்தார். அப்படியானால் அந்த பிரணவத்திற்குரிய பொருளை சொல்லிவிட்டு என்னிடமிருந்து மீண்டும் அத் தொழிலை பெற்றுக்கொள்ளட்டும் என்றார் முருகன்.
சகல செயல்களுக்கும் காரணமாகத் திகழும் பரப்பிரம்மமான பரமேஸ்வரனுக்கே அந்த பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. எனவே தந்தைக்கே உபதேசம் செய்த நிகழ்வு நடந்தது சுவாமி மலையில். இதற்கு முன்னதாகவே பிரம்மனை சிறையில் அடைத்துவிட்டான் முருகன்.
வெகுண்ட சரஸ்வதிதேவி அத்தை, கணவன் என்றும் பாராமல் அண்டத்தையே படைக்கும் என் கணவரை உன் ஆணவத்தி னால் சிறையிலிட்டாய். "நீ ஊமையாகக் கடவாய்' என்று சபித்தாள். இதனால் மூவுலகங்களிலும் சஞ்சலத்தோடு சஞ்சாரம் செய்தான் முருகன். இதையறிந்த மாமன் மகாவிஷ்ணு கந்தனை அழைத்து "குற்றங் களையெல்லாம் மன்னித்து அருள்பவர் மகாதேவரே! எனவே மண்ணுலகில் மகேசனைப் பூசனை புரிவாய்'' என்று அறிவுரை வழங்கினார்.
அண்ணன் கஜமுகன் அத்தையாம் வாணியிடம் கெஞ்சி சாப விமோசனம் வேண்ட அவளும் மனமிரங்கி, காவிரியின் கிளை நதியான அரிசொல் ஆறு எனப் படும் அரசலாற்றங்கரையின் தென்புறம் வன்னிமரத்தின் கீழே முறைப்படி சிவலிங்க பூஜைகள் செய்தால் ஊமை நிவர்த்தி யாகும் என்று அருள்கூற அண்ணனும், தம்பியும் அலைந்து கடைசியாக திருப்பேணுப் பெருந்துறை (திருப்பந்துறை) வந்து மங்கள தீர்த்தம் எனும் திருக்குளத்தில் ஸ்நானம் செய்து ஸ்ரீ பிரணவேஸ்வரரை வேண்ட, பின்னர் பரமேஸ்வரனின் பெருங்கருணையினால் பேசும் திறன் பெற்றான் முருகன். சஞ்சலம் நீங்கி சந்தோஷமடைந்தான்.
சிறப்பம்சங்கள்
ப் இறைவன் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ சிவானந் தேஸ்வரர், பிரணவேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறான். இறைவி மங்களாம்பிகை, மலையரசி மங்கை என்ற திருநாமம் கொண்டு அருள்கிறார்.
ப் முருகன் பேசும் திறனை பெற்றபின் தான் வந்த வேலை முடிந்தது என்று கூறிய குகவிநாயகர் முன்னமே அமர்ந்திருந்த சாட்சி கணபதியுடன் தலவிருட்சமான வன்னி மரத்தடியில் அமர இரட்டை விநாயகர்களாக அருள்பாலிப்பது சிறப்பான ஒன்று.
ப் அவதுர்ம மாமுனிகள் தம் தொழுநோய் நிவர்த்திக்காக மங்கள தீர்த்தத்தில் நீராடி இத்தல ஈசனை வணங்கி, நோய் நீங்கப் பெற்று சின்மயானந்த வடிவம் அடைந்ததால் சுவாமிக்கு சின்மயானந்த மூர்த்தி என்ற பெயரும் உண்டானது. மங்களதீர்த்தமும் சின்மயானந்த தீர்த்தம் என்று போற்றப் பட்டது.
ப் கந்தன் மட்டுமில்லாது அம்பிகை மற்றும் பிரம்மனும் இங்கே பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்.
ப் இத்தலத்தின் விசேஷ மூர்த்தியான தண்டபாணி சுவாமி வடக்கு முகமாக நின்றவண்ணம், குடுமியுடன் சின்முத்திரை காட்டி நீளமான காதுகளுடன் கண்கள் மூடிய தியான நிலையில் அதி உன்னதத் தோற்றத் தில் அருட்காட்சியளிக்கின்ற சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனைத் தொடர்ந்து 45 நாட்கள் பருகிவர திக்குவாய் மற்றும் வாய் பேசாத குறைபாடுகள் நீங்குவதோடு, நல்லவாக்கு வன்மை யும், படிப்பில் கவனமிகுதியும் ஏற்படுவது இத்தல சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று.
ப் கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களது குழந்தை நன்றாகப் பேசவேண்டும் என வேண்டிச் செல்கின்றனர். கோரிக்கை நிறைவேறிய பின் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ப் வியாழக்கிழமை இத்தலத்திலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, தலகணபதி, சுவாமி அம்பாள் மற்றும் கந்தனை வழிபட, குஷ்ட ரோகம் முதலான சரும நோய்கள் யாவும் நீங்குகின்றன.
ப் இத்தல நவகிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.
ப் சுவாமி கோபுர விமானத்தில் அர்த்த நாரீஸ்வர தட்சிணாமூர்த்தியும், வீணா தட்சிணாமூர்த்தியும் உள்ளனர்.
ப் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று இத்தலத்திலுள்ள பிட்சாடனாருக்கு அமுது படையல் திரு விழா சிறப்பாக நடக்கிறது.
ப் இத்தலம் அரிசிலாற்றின் தென்கரை யில் அமைந்துள்ளது. "பெரிய' என்றால் பெரியது மற்றும் "துறை' என்றால் ஆற்றங்கரை என்றும் தமிழில் பொருள். எனவே இந்த இடம் பெருந் துறை என்று பெயர் பெற்றது. இத்தலத்தின் வரலாற்றுப் பெயர் திருப்பேணு பெருந்துறை. ஆனால் தற்போது திருப்பந்துறை என்றழைக்கப்படுகிறது.
ப் கரிகாற்சோழன், மன்னன் மதுரை கொண்ட வீரகேசரி, ராஜராஜசோழன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரின் காலத்தைச் சேர்ந்த ஐந்து கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளின்படி இந்தக் கோவில் கரிகால்சோழன் காலத்தில் கற்றளியாக கற்களால் புனரமைக்கப்பட்டதாகவும், இறைவனின் பெயர் "ஸ்ரீ பேணு பெருந்துறை மகாதேவர்' என்றும் அம்மன் பெயர் "ஸ்ரீ மலை அரசி அம்மை' என்றும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
ப் இத்தலத்தில் சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பிச்சாண்டவருக்கு அமுது படையல் விழா, வைகாசியில் வைகாசி விசாகம், ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் அன்னா பிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை மாத திருக் கார்த்திகை, மாசி- சிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் பிரதோஷமும் தொடர்ந்து திருவிழாக்கள் முறைப்படி காலபூஜைகள் நடக்கிறது.
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற- இறக்கங்கள் அனைத்திற்கும் நவகிரகங் களே காரணமாக அமைகிறது. அதனால் இந்த நவகிரகங்களை அந்தந்த நாட்களுக் குரிய தினங்களில் வழிபடும்போது நிச்சயமாக அதன் பலன் கிடைக்கும் என்பது அனுபவித்த வர்களுக்கு நன்கு தெரியும். அதே நேரத்தில் கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்குவதற்கான எளிய வழிகளை அறிந்து செயல்படும்போது வியக்கும்வகையில் மாற்றங்களைக் காணலாம். அந்த வகையில் தெய்வங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு வாகனங்கள் இருப்பது போன்று நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வாகனங்கள் உள்ளது. ஒரு கிரகத்தினால் பாதிப்பு ஏற்படும்போது அதற்கான வாகனங் களை அந்த கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும் காலம் வரை மரியாதை செலுத்தி அல்லது வணங்கிவருகையில் அதனால் மிகுந்த பலன்கிட்டும். அதாவது, ஒரு கிரகத்தின் திசை அல்லது தசாபுக்தி காலத்தில் ஒருவருக்கு பாதிப்புகள் ஏற்படும்போது அந்த பாதிப்பை குறைத்து நல்லது நடைபெற அவற்றின் வாகனங்களை பார்த்துவருவது மிகவும் நல்லதாகும்.
அந்த வாகனத்தின் படம் அல்லது சிறிய சிலையை வீடு அல்லது அலுவலகத்தில் வைத்து பராமரித்து வந்தால் நன்மைகள் ஏற்படும் அந்த வகையில்...
ப் சூரிய தசாபுக்தி காலத்தில் ஒருவருக்கு நன்மை ஏற்பட வீட்டின் மையப் பகுதியில் ஏழு குதிரைகள் பூட்டிய தேர் படம் அல்லது சிறிய உருவச்சிலை வைக்கலாம்.
ப் சந்திர தசாபுக்தி காலத்தில் தென்கிழக்கு பகுதியில் முத்து விமானம் அல்லது மானின் படத்தை மாட்டி வைக்கலாம்.
ப் செவ்வாய் தசாபுக்தி காலத்தில் பாதிப்பு கள் ஏற்படலாம். தடுக்க வீட்டின் தெற்கு பகுதியில் ஆடு படம் அல்லது சிலை வைக்கலாம்.
ப் புதன் கிரக தசாபுக்தி நடக்கும்போது நன்மைகள் ஏற்பட வீட்டின் வடகிழக்கு பகுதியில் குதிரையின் படம் அல்லது சிறிய அளவிலான சிலை வைக்கலாம்.
ப் குரு தசாபுக்தி காலத்தில் நன்மை ஏற்பட, வீட்டின் வடக்கு பகுதியில் யானையின் படம் அல்லது உருவத்தை வைத்து பராமரித்து வரலாம்.
ப் சுக்கிர தசாபுக்தி காலத்தில் நல்லது நடைபெற வீட்டின் கிழக்கு பக்கம் கருடன் படம் அல்லது சிலை வைக்கலாம்.
ப் சனி கிரக தசாபுக்தி காலத்தில் வீட்டின் மேற்கு பக்கத்தில் பறக்கும் நிலையிலுள்ள காகத்தின் படம் அல்லது உருவச் சிலை வைப்பது சிறப்பாகும்.
ப் ராகு தசாபுக்தி காலத்தின்போது வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சிங்கத்தின் படம் அல்லது சிறிய சிலை வைக்கலாம்.
ப் கேது தசாபுக்தி நடக்கும் காலத்தில் வீட்டின் வடமேற்குப் பகுதியில் புறா படம் அல்லது சிலை வைப்பதன்மூலமாக பாதிப்பை தவிர்க்கலாம்.
திருப்பந்துறை ஸ்ரீ பிரணவேஸ்வரர் ஆலயத்தில் சூரியன் தனது தேவியருடனும் மற்ற கிரகங்கள் சிவாகம விதிப்படி அவரவர் தசையிலும் அமைந்துள்ளதால் ஒருமுறை இத்தலத்திற்கு வருகை தந்து சுவாமி அம்பாள் முருகப்பெருமான் மற்றும் நவகிரக வழிபாடு மேற்கொண்ட பின் கிரகங்களின் தசாபுக்தி காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மேற்கூறிய அறிவுரையின்படி வீட்டில் அதற்கேற்ற வழிபாடுகள் செய்துவந்தால் கிரக பாதிப்புகளைத் தவிர்ப்பதோடு, வியக்கத் தக்க வகையில் நல்லதொரு மாற்றத்துடன் ஏற்றமும் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான நாகராஜ சிவாச்சாரியார். மேலும் அவர் கூறுகையில், தமிழ் கடவுள் முருகப் பெருமான் சிவவழிபாடு செய்த திருப்பந்துறை தலத்தில் பிறக்கின்ற தமிழ் வருஷமான விசுவாவசு வருஷத்தில் வருட ஆரம்பமான சித்திரை மாதத்திலேயே வருகை தந்து வருடம் முழுவதும் சீர்மிகு சிறப்புடன் வாழலாம் என்றும் கூறுகிறார்.
திருக்கோவில் அமைப்பு
கும்பகோணம் தாலுக்கா, நாச்சியார் கோவில்- பூந்தோட்டம் பாதையில் அரசிலாற் றின் தென்கரையில் நெற்கழனிகளும் வாழை- தென்னந்தோப்புகளும் நிறைந்த பசுமையான சிறு கிராமத்தின் ஒருபுறம் அரசலாற்றுப் பாசனம், மறுபுறம் திருமலை ராயன் ஆற்றுப் பாசனம், மேற்கே திருக்குடந்தையினின்றும் காவிரிப் பாசனம் என்று நீர்வளம், நிலவளம் மிகுந்த திருப்பந்துறை கிராமத்தில் நடுநாயக மாக அமைந்துள்ளது.
பேருந்து சாலையை ஒட்டினாற் போல் கிழக்கு நோக்கியவாறு ஒற்றை நடை பாதையுடன் அதன் பிரதான கோபுரமான மூன்று நிலைகளுடன்கூடிய ராஜகோபுரத்து டன் எழிலுற அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னே அல்லியும் தாமரையும் பூத்துக் குலுங்கும் மங்கள தீர்த்தம் எனும் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. தீர்த்தக் குளத்தை ஒட்டினாற்போல் குகவிநாயகர், சாட்சி விநாயகர் என்ற இரட்டை விநாயகர்கள் ஒரே சந்நிதியில் தல விருட்சத்தின் கீழ் அருட்காட்சி தருகின்றனர்.
முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட விநாயகர்கள் என்பதால் இவர்களுக்கு இங்கே முக்கியத்துவம் அதிகம். இரட்டைப் பிள்ளையார் மட்டுமல்ல. இங்கே தல விருட்சமும் இரட்டை வன்னி மரம்தான். ஒரே ஒரு பிராகாரத்தைக்கொண்ட ஆலயத் தின் ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், பிரதோஷ நந்தி ஆகியவற்றைக் காணலாம். உள் நுழை வாயிலைக் கடந்தால் முதலில் முன்மண்டபம், அங்கு அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியவாறு நின்றநிலையில் மங்களாம்பிகை அருள்புரிகி றாள். அதை அடுத்து அர்த்தமண்டபத்தில் இத்தல பிரதான மூர்த்தியான தண்டபாணி தவக்கோலத்தில் சோமாஸ்கந்த அமைப்பில் வடக்கு நோக்கி அருள்புரிகிறார். கருவறை மண்டபத்தில் இடப்புறம் சற்றே சாய்ந்த நிலையில் உயர்ந்த பாணத்துடன் சதுர வடிவ ஆவுடையான் லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாய் ஸ்ரீ சிவானந்ததேஸ்வரர் அருள் மழை பொழிகிறார். ஆலய வலம்வருகையில் வடக்கு முகமாக கணபதி மற்றும் நால்வர் காட்சிதருகின்றனர். அதனருகில் கரிகால் சோழனை அரசியாரோடு இருக்கும் காட்சியைக் காணலாம் கோஷ்ட தெய்வங்கள் தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத் பவர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை உள்ளனர். மேற்கு திருமாளிகைப் பத்தில் விநாயகர், முருகன், கஜ லட்சுமி, காசி விஸ்வநாதர், விசா லாட்சி பாணலிங்கம், லட்சுமி நாராயண பெருமாள் காட்சி தரு கின்றனர். பிராகாரத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது. கிழக்குப் புறத்தில் சூரியன் தனது தேவியருடனும் மற்ற கிரகங்கள் முறைப்படி அமைந்துள்ள நவகிரக சந்நிதியும், பைரவர், சூரியன், சனிபகவான் அருட்காட்சி தருகின்றனர். ஆலயத்தின் உள்ளே வில்வ மர மும் மற்றும் வெளியே இடதுபுறம் பூச்செடி களும் நந்தவனம்போல் பசுமையாக அமைந் துள்ளது.
நடை திறப்பு: காலை 8.00 மணிமுதல் 11.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
குறிப்பு: பூஜைப் பொருட்கள் வாங்கி விட் டுச் செல்லவும். அருகில் கடைகள் இல்லை.
அர்ச்சகருக்கு தகவல் சொல்லிவிட்டு செல்லுங் கள்.
ஆலயத் தொடர்புக்கு: பரம்பரை அறங் காவலர், ஸ்ரீ சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்.
திருப்பந்துறை நாச்சியார்கோவில் அஞ்சல்.
பூஜை விவரங்களுக்கு: கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் 612 602. கே. நாகராஜ குருக்கள்- செல்: 94436 50826.
அமைவிடம்: தஞ்சை மாவட்டம், கும்ப கோணம் வட்டம், நாச்சியார் கோவில்- ஏரவாஞ்சேரி, பூந் தோட்டம் சாலையில் நாச்சி யார் கோவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருப்பந்துறை ஆலயம். பேருந்து வசதிகள் உண்டு.
படங்கள்: போட்டோ கருணா