மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் ராகுவுடன் இருக்கிறார். அவர் 5, 8, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். எனவே, உங்களது எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவம் பெறும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். 2-ல் உள்ள ராகு குடும்பத்திலும் மனதிலும் குழப்பத்தையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் கொடுத்தாலும், 9-ஆமிடத்து குரு 10-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குழப்பங்களை சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். 10-ல் சனி ஆட்சி. அவருடன் புதன், குரு சேர்க்கை. உத்தியோகத்தில் நீண்டநாட்களாகப் பணிபுரிந்தும் முன்னேற்றமில்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு இனி உத்தியோக உயர்வு உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். 11-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கை. அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் உதவியும் ஒத்தாசையும் அமையும். அது சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் அமைப்பும் உருவாகும். 18-ஆம் தேதிக்குப்பிறகு சுக்கிரன் மீன ராசிக்கு மாறி உச்சம்பெறுவார். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதால் சுபச் செலவுகள் ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சனி 9-ல் ஆட்சியாக இருக்கிறார். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, உங்களது முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாது. காரிய வெற்றி உண்டாகும். 9-ல் உள்ள குரு ராசியைப் பார்ப்பதால் உங்கள் திறமையும் பளிச்சிடும். 18-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 11-ஆமிடமான மீனத்தில் உச்சம்பெறுவார். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படலாம். வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். 12-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் ராகுவுடன் இணைவது ஒருசிலருக்கு வேலைமாற்றம் அல்லது இடமாற்றத்தை ஏற்படுத்த லாம். பூர்வீக சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். அரைகுறையாக நின்ற கட்டடப் பணிகள் தொடரும். திருமணம், காதணிவிழா போன்ற சுபநிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பை ஏற்படுத்தித் தருவார். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கொடுக்கல்- வாங்கல் சிரமமின்றி நிகழும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் இம்மாதம் 7-ஆம் தேதிமுதல் 9-ல் திரிகோணம் பெறுகிறார். ஒருபுறம் அட்டமத்துச்சனி இடமாற்றம், தொழில் மாற்றம், சிலருக்கு வேலை மாற்றத்தைக் கொடுத்தாலும் அது நல்ல மாற்றமாக அமையும். கும்ப ராசியில் புதன் சஞ்சரிக்கும் காலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். 11-ஆமிடத்துச் செவ்வாய் 12-ல் இருக்கிறார். 12-ஆமிடம் விரய ஸ்தானம். எனவே, சில காரியங்களில் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அவர் 6-க்குடையவரும் ஆதலால், திட்டமிடாது செய்யும் காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை உண்டாகும். 12-க்குடைய சுக்கிரன் 18-ஆம் தேதிமுதல் 10-ல் உச்சம்பெறுகிறார். சொந்தத் தொழில், புரிபவர்களில் ஆடை, ஆபரண வியாபாரத் துறையினருக்கு நன்மையான பலன்கள் அமையும். சிலர் சுபமுதலீடு முயற்சியில் இறங்கி லாபம் பெறலாம். 9-ல் உள்ள சூரியன் தந்தைவகையிலோ அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமாகவோ சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நண்பர்களால் ஆதரவு உண்டாகும்.
கடகம்
இந்த மாதம் 7-ஆம் தேதிமுதல் கடக ராசிக்கு 12-க்குடைய புதன் 8-ல் மறைகிறார். "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்பது பழமொழி. ஒருசிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். 14-ஆம் தேதிமுதல் 2-க்குடைய சூரியன் 9-ஆமிடமான மீனத்திற்கு மாறுகிறார். பொருளாதாரத்தில் நிலவிய தடைகள் அகலும். வேலையிலுள்ள பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும். 18-ஆம் தேதிவரை 11-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவதால் சில காரியங்களில் மந்தமான போக்கு தென்படும். வேலையில் உள்ளவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படலாம். என்றாலும் குரு ராசியைப் பார்ப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் வளரும். 11-ல் செவ்வாய் நின்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், தொழில் துறையில் உள்ளவர்களுக்குப் பொருளாதாரச் சிரமங்கள் குறையும். மாதப் பிற்பகுதியில் புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தந்தைவழியிலுள்ள பிரச்சினைகள் அகலும். பூர்வீக சொத்துவகையில் நிலவிய விவகாரங்கள் விலகும். சாதகமான தீர்வு ஏற்படும். 9-க்குடைய குரு 10-க்குடைய செவ்வாயைப் பார்ப்பதால், தர்மகர்மாதிபதி யோகமும் வழிநடத்தும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியையோ, லக்னநாதன் லக்னத்தையோ பார்ப்பது சிறப்பென்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான். எனவே, உங்கள் முயற்சிகள் வீண்போகாது. செயல்பாடுகளில் தடை ஏற்படாது. 10-க்குடைய சுக்கிரனும் 7-ல் சூரியனுடன் சேர்க்கை. எனவே, தொழிலிலும் வாழ்க்கை அமைப்பிலும் பிரச்சினைக்கு இடமில்லை. பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் ஆர்வம்காட்டுவீர்கள். 14-ஆம் தேதிமுதல் சூரியன் 8-ல் மறைகிறார். அக்காலகட்டத்தில் பொறுமையுடனும் கவனமுடனும் காரியங்களைக் கையாள்வது அவசியம். 18-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் உச்சம்பெறுகிறார். அவர் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே, பொருளாதாரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிக்கலுக்கு இடமிருக்காது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுக்கும் முயற்சிகள் கைகூடும். சுக்கிரன் 3-க்குடையவரும் என்பதால் சகோதரவழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 5-ஆமிடத்திலும், பிறகு 7-ஆம் தேதிமுதல் 6-ஆமிடத்திலும் சஞ்சரிக்கிறார். அவருடன் 12-க்குடைய சூரியனும், 2, 9-க்குடைய சுக்கிரனும் மறைகிறார்கள். மாத முற்பகுதிவரை செலவுகள் சற்று அதிகமாகும். மூன்றிலுள்ள கேதுவும், அவரைப் பார்க்கும் ராகுவும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவார்கள். 5-ல் உள்ள நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு, பிள்ளைகள்வகையில் நன்மைகளை ஏற்படுத்தித் தருவார். 18-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 7-ல் உச்சம்பெற்று ராசியைப் பார்க்கிறார். பெண்களுக்கு கணவன்வழி உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். திருமணத்தடைகள் விலகும். ஜனன ஜாதகத்தில் ராகு- கேது தோஷமுள்ளவர்கள் அல்லது களஸ்திர தோஷமுள்ளவர்கள், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் சுயம்வரகலா பார்வதி ஹோமமும் செய்துகொண்டால் தடைகள் அகலும். நல்ல மணமகள்- மணமகன் அமைவார்கள். 9-ல் உள்ள செவ்வாய் தேங்கிய காரியத்தை சுறுசுறுப்பாக நடைபெற வைப்பார். கடன்சுமை குறைய புதிய வழிகள் பிறக்கும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதிவரை 5-ல் இருக்கிறார். அவருடன் 11-க்குடைய சூரியனும் 14-ஆம் தேதிவரை இணைந்திருக்கிறார். ராசிநாதன் திரிகோணம் பெறுவது சிறப்பு. உங்களது எண்ணங்களிலும் திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். 7-ஆம் தேதிமுதல் 12-க்குடைய புதன் 5-ல் இணைவதால், அவ்வப்போது சிற்சில தாமதங்கள் காணப்பட்டாலும் காரியத்தடைகள் ஏற்படாது. பாகப்பிரிவினை சம்பந்தமாக எடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் காணப்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது. தாயின் உடல்நிலையில் ஏற்பட்ட வைத்தியச் செலவுகள் விலகும். தொழில் முயற்சியில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கலாம். வேலையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஏற்படலாம். ஜனன ஜாதகத்தை ஆய்வுசெய்து அதற்கேற்றபடி நடந்துகொள்ளவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் இருக்கிறார்; ராசியைப் பார்க்கிறார். 7-ல் ராகு; ஜென்மத்தில் கேது. இது ராகு- கேது தோஷமென்று சொல்லப்பட்டாலும், 3-ல் உள்ள குரு 7-ல் உள்ள ராகுவைப் பார்ப்பதால் தோஷம் விலகுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஜனன ஜாதகத்தில் ராகு- கேது தோஷமுள்ள வர்கள் திருமணத்தடைகளை சந்தித்தால், ஆண்களாக இருந்தால் கந்தர்வராஜ ஹோமமும், பெண்களாக இருந்தால் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். 2-க்குடைய குரு 3-ல் நீசமென்றாலும், நீசபங்க ராஜயோகம் பெறுவதால் பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. சகோதர சகாயம் ஏற்படும். நண்பர்களால் ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்கும். தொழில்ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் தானாகவே வந்துசேரும். வீடுகட்டும் யோகம் அல்லது மனையோகம் அமையும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 2-ல் நீசபங்க ராஜயோகமாக இருக்கிறார். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். நீண்டநாள் விருப்பங்கள் ஈடேறும். நிலுவையிலிருந்த பாக்கித் தொகைகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் நிலம், வீடு, வாகனவகையில் சுபமுதலீடு செய்யலாம். 18-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 4-ல் உச்சம்பெறுகிறார்; ஆட்சிபெற்ற சனியின் பார்வையையும் பெறுகிறார். வீடு வகையில் முதலீடு செய்வதற்குக் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டாலும் தைரியமாக வாங்கலாம். கடனும் அடைபட்டுவிடும்; கௌரவம், மரியாதையும் பாதிக்காது. எனவே, வீடுகட்டும் முயற்சி வெற்றிபெறும். வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. வெளிநாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நல்ல தகவல்கள் கிட்டும். மீன ராசிக்கு மாறும் சுக்கிரன் 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஆடை, அலங்காரத் தொழில்புரிவோருக்கு லாபம் பெருகும். வியாபாரமும் பெருகும். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி யாக இருக்கிறார். சனி 2-க்குடையவராவார். பொருளாதார நிலை சீராக இயங்கும். வீண்செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். 7-ஆம் தேதிமுதல் புதன் 2-ல் மாறுகிறார். எனவே, அந்நிய இனத்து நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கமும் ஏற்படும். 4-க்குடைய செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். ஒரு கேந்திராதிபதி திரிகோணம் பெறுவது நன்மைதரும். வீடு, பூமி போன்ற முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு சுமுகமான பலன்கள் நடைபெறும். என்றாலும் அங்கு ராகு இருப்பதால் சற்று பிரயத்தனப் பட்டுதான் நிறைவேற்றும் நிலை அமையும். பிள்ளைகளால் நன்மையும், பிள்ளைகளுக்கு நற்பலனும் ஏற்படும். 5-க்குடைய சுக்கிரன் 2-ல் இருப்பது, குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும். எதிர்பார்க்கும் பொருள்வரவு கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் செலவினங்கள் சற்று அதிகரிக்கக்கூடும். உடன்பிறந்த வகையிலோ உறவினர்கள் வகையிலோ சுபச் செலவுகள் உண்டாகலாம்.
கும்பம்
கும்ப ராசிநாதன் 12-ல் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது என்பது நீங்கள் அறிந்ததே. அத்துடன் 12-ல் குருவும் புதனும் இணைந்திருக்கிறார்கள். 8-க்குடையவர் மறைவது நல்லதென்றாலும், அவர் 5-க்குடையவரும் ஆவதால் அது நல்லதல்ல. உங்கள் எண்ணங்கள், திட்டங்கள், செயல்பாடுகளில் தடைகளும் குறுக்கீடுகளும் காணப்படலாம். எனவே, கடும் பிரயாசையும் விடாமுயற்சியும் தேவைப்படும். 10-க்குடைய செவ்வாய் 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில், வேலை, பதவி, வாழ்க்கை ஆகியவற்றில் எதிர்நீச்சல் போட்டு வெற்றியை எட்டலாம். ஒருசிலருக்கு கட்டிய வீட்டைப் பழுதுபார்க்கும் செலவுகளும் உண்டாகும். சகோதரகாரகன் செவ்வாயை குரு பார்ப்பதால் சகோதரவழி சச்சரவுகள் அகலும். ஒருசிலருக்கு சகோதரர்களால் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். அல்லது சகோதரர்களுக்கு நற்பலன் ஏற்படும். சுக்கிரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதார உயர்வு, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கு 11-ல் குரு இருப்பது பலம். 11-க்குடைய சனி ஆட்சியாக இருப்பது மற்றொரு கூடுதல் பலம். எனவே தொழில், வாழ்க்கை, வேலை ஆகியவற்றில் உங்கள் திட்டங் கள் வெற்றியடையும். 18-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். கணவன்- மனைவிக்குள் பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். திருமண வயதில், திருமணத் தடைகளை சந்திப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். 3-ல் உள்ள செவ்வாயும் ராகுவும் உடன்பிறப்புகள் வழியில் சங்கடங்களையும் வருத்தங்களையும் உண்டாக்கும். இருந்தாலும் 3-ஆமிடத்தை குரு பார்ப்பதால், அவற்றை சமாளிக்க வழிவகைகளும் ஏற்படும். நண்பர்கள்மூலம் புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் சூழ்நிலையும் அமையும். 5-ஆமிடத்தையும் குரு பார்ப்பதால் பிள்ளைகளுக்கு நன்மைகள் ஏற்படும். அவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் கல்வி மற்றும் மேற்படிப்புக்கான நிகழ்வுகளில் அனுகூலம் உண்டு. சில விஷயங்களில் எதிர்பாராத வரவும் வரும்; அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். 9-ல் உள்ள கேதுவால் ஆன்மிக யாத்திரை, வழிபாடு போன்ற விஷயங் களில் ஈடுபாடு ஏற்படும்.