பொதுவாக நதிக்கரைப் பகுதிகளிலுள்ள ஊர்களின் பெயரோடு ஆடு, யானை, மான் போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்களும் சேர்ந்தே இருக்கும். உதாரணமாக, ஆடுதுறை, கிளியனூர், குரங்காடுதுறை போன்றவற்றைச் சொல்லலாம். ஆல் போன்ற மரங்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். இதற்குக் காரணம், அப்பகுதிகளில் குடியேறிய மக்கள், அங்கு அதிகமாகக் காணப்பட்ட விலங்குகள், பறவை கள், மரங்களின் பெயரால் தங்கள் ஊரைக் குறிப்பிட்டனர்.

sivan

அவ்வாறு வெள்ளாற்றின் தென்கரையில் ஆம்ரவனம் என்று அழைக்கப்பட்ட வனத்தில் குச்சகன் என்னும் வேதவிற்பன்னர் மனைவி காந்தையாளோடு வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பிறக்கும்போதே உடல் முழுவதும் முடி அடர்ந்து காணப்பட்டது. வளர்ந்து வாலிபனாக மாறியபோதும் அதே தோற்றத்தில் இருந்ததால் அவருக்கு மிருகண்டு என்று பெயர் ஏற்பட்டது.

(மிருகங்களுக்குதான் உடல் முழுவதும் முடி இருக்கும்.) மிருகண்டு சிவபூஜையில் அதிக ஈடுபாடு கொண்டார். தனது தோற்றத்தினால் குடும்ப வாழ்வில் ஈடுபட அவர் விரும்பவில்லை. ஆனால் அவரது பெற்றோர்கள் அவரிடம், ""பல ரிஷிகள் குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே தவம்மேற் கொண்டு சிறப்பாக விளங்கினார்கள். அதுபோல் நீயும் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' என்று வேண்டினர். அவர்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார் மிருகண்டு.

Advertisment

பெற்றோர் மகனுக்குப் பல இடங்களில் பெண் தேடியதில், உசத்திய முனிவரின் மகள் விருத்தையைத் தேர்வு செய்தனர். அழகிலும் அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய விருத்தையை மிருகண்டு வுக்கு மணம் செய்துதர சம்மதித்தார் உசத்திய முனிவர். இந்த நிலையில் ஒருநாள் தன் தோழிகளுடன் குளிப்பதற்கு வனத்தை ஒட்டிய ஆற்றுக்குச் சென்றாள் விருத்தை. எல்லாரும் குளித்துவிட்டுத் திரும்பும்போது, கடமா எனும் யானை அவர்களைத் துரத்தியது. உயிருக்கு பயந்து திசைக்கொருவராக ஓடினார் கள் பெண்கள். மாலையில் எல்லா பெண்களும் வீடுவந்து சேர்ந்துவிட்டனர். ஆனால் விருத்தை மட்டும் வரவில்லை.

மகளை யானை துரத்திய தகவலை தோழிகள்மூலம் கேட்டறிந்த உசத்திய முனிவர் ஊர் மக்களோடு மகளைத் தேடியலைந்தார். இறுதியாக புதர் மண்டிய ஒரு பாழும் கிணற்றில் விருத்தை பிணமாகக் கிடப்பதைக்கண்டு எல்லாரும் கதறியழுதனர்.

யானைக்கு பயந்து ஓடும் போது புதர் மறைவில் இருந்த கிணறு தெரியாமல் விருத்தை தவறி விழுந்து மரண மடைந்துள்ளாள். விஷயம் மிருகண்டுவுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் மிகவும் துடித்துப்போனார். ஊர் மக்கள், "மிருகண்டு பெண் பார்த்த நேரம் விருத்தைக்கு இப்படி நேர்ந்துவிட்டது' என்று வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டனர்.

Advertisment

kovil

அப்போது மிருகண்டு விருத்தையின் உடலை எரியூட்டக்கூடாது என்று தடுத்து, அந்த வனத்திலேயே எம்பெருமானை வேண்டிக் கடுந்தவமிருந்தார். தவத்திற்கு இரங்கிய ஈசன் மிருகண்டுவுக்குக் காட்சி கொடுத்ததோடு விருத்தை யின் உயிரையும் மீண்டும் தந்தார். ""நீங்கள் இருவரும் சிறப்பாக வாழ்வீர்கள். உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் எமனையும் வென்று இறவாப்புகழ் பெறுவான். அவன்தான் மார்க்கண்டேயன்'' என்று அருளினார். அப்போது மிருகண்டு முனிவரின் உடல் முழுவதுமிருந்த முடிகளும் மறைந்து முழு மனிதத்தோற்றமும் பெற்றார். விருத்தைக்கும் மிருகண்டுவுக்கும் இங்கு திருமணம் நடந்ததால் இங்குள்ள இறைவனை ஜோதீஸ்வரர், கல்யாணசுந்தர மகாதேவர் என்று அழைக்கின்றனர். அம்பாளுக்கு கல்யாண சுந்தராம்பிகை என்று பெயர் உண்டானது.

கடமா என்னும் சொல் மானையும் குறிக்கும். இவ்வனத்தில் பெற்றோரை இழந்த மான்குட்டிகள் பாலுக்காகத் தவித்தன. இதனைக்கண்ட மிருகண்டு முனிவரின் சீடர்கள் விஷயத்தை முனிவரிடம் சொல்லி வருத்தப்பட்டனர். முனிவர் உடனே எம்பெருமானை வேண்டி தியானித்தார். அதைக்கண்ட அம்பிகை சிவபெருமானிடம், ""பாலுக்காகத் தவிக்கும் மான் குட்டிகளின் நிலைகண்டு பொறுக்க இயலவில்லை. அவற்றின் பசியைப் போக்க வேண்டும்'' என்று வேண்டினாள். அதற்கு ஈசன், ""தேவி, அவரவர் கர்மவினையை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும். இந்த மான்குட்டிகளுக்கு ஏன் இந்த நிலைவந்தது தெரியுமா? கேள்'' என்று கூற ஆரம்பித்தார்.

""கனக சாங்கலம் என்னும் அக்ரஹாரத்தில் வாழ்ந்த அந்தணத் தம்பதியர் வளர்த்த பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்றை தாயிடம் சரியாகப் பால்குடிக்க விடாமல் அவர்களது பிள்ளைகள் கட்டிப்போட்டு விடுவார்கள். கன்று, பால் கிடைக்காமல் பசியால் துடித்தது. தாய்- தந்தையரும் பசுவுக்குப் போதிய அளவு தீனியும் கொடுப்பதில்லை. அதை மேய்த்துவரும் கூலியாளுக்கு சம்பளமும் கொடுப்பதில்லை. பாலைக் கறப்பதில் மட்டும் குறியாக இருந்தனர். மாடு மேய்க்கும் கூலியாளாக இருந்தவன் அடுத்த பிறவியில் வேடனாகப் பிறந்தான். அக்ரஹாரத் தம்பதிகள் மான்களாகவும் அவர்கள் பிள்ளைகள் மான் குட்டிகளாகவும் பிறந்தனர். அந்த வேடன் மான்களை வேட்டையாடிக்கொண்டு போய்விட்டான். (கூலியாக). கன்றுக்குப் பால்விடாமல் செய்த பாவத்தினால் அவர் களின் பிள்ளைகள் இப்போது பாலுக்குத் தவிக்கின்றனர். இவ்வளவு பாவமும் செய்த இந்தக் குழந்தைகள் ஒரு நல்ல காரியத்தையும் செய்துள்ளனர்.

வேதங்களில் கரைகண்டு புலமைபெற்ற ஞானி உக்கிரதபஸ் என்பவர் காசிக்குப் போகும் வழியில் இவர்கள் வாழ்ந்த இடத்திற்கு வந்தார்.

அவருக்கு இந்தச் சிறுவர்கள் பூஜை செய்வதற்கு உதவியாக மலர்கள், இலைகள் போன்றவற்றை சேகரித்துக் கொடுத்துள்ளனர். அந்தப் புண்ணியத்தின் பலனாகவே இந்தப் பகுதியில் மான்குட்டிகளாகப் பிறந்து பாலுக்கு அழுகிறார்கள். நம்மால் பாலூட்டப்படும் பாக்கியத்தைப் பெறவுள்ளனர்'' என அம்பாளிடம் ஈசன் விளக்கிக் கூறினார். ஈசனும் உமையாளும் மான் வடிவமெடுத்து அந்த மான்குட்டிகளுக்குப் பாலூட்டி உயிர்காத்தனர்.

இந்த சம்பவத்தைத் தனது தவவலிமையினால் உணர்ந்த மிருகண்டு முனிவர் தனது சீடர்களை அழைத்து, ""இப்போது போய் அந்த மான் குட்டிகளின் நிலை என்னஎன்பதைப் பார்த்துவாருங்கள்'' என்றார்.

அவர்களும் அவ்வாறே சென்று பார்த்தபோது, மான்குட்டிகள் பால் குடித்த தெம்புடன் ஓடிவிளையாடிக்கொண்டிருந்தன. அவர்கள் ஓடிவந்து முனிவரிடம் தாங்கள் கண்ட காட்சியை மகிழ்வுடன் சொன்னார்கள். மிருகண்டு முனிவரும் புறப்பட்டுச் சென்று அந்த மான்குட்டிகளைக் கண்டு மகிழ்ந்ததோடு, சிவன்- பார்வதி மான்குட்டிகளைக் காத்துள்ள கருணையே கருணை என்று இறைவனை எண்ணி வணங்கினார். சிவனருளால் பாலூட் டப்பட்ட மான்குட்டிகள் பிறகு கயிலையில் சிவகணங்களின் தலைவர்கள் ஆனார்கள்.

இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த ஊருக்கு திருமான்துறை என்று பெயர் உருவாயிற்று. காலப்போக்கில் திருமாந்துறை என்று அழைக்கப்பட்டு வருகிறது. சிவனருள் பெற்ற புண்ணிய பூமி இது. இங்கு ஈசனுக்கும் உமையவளுக்கும் மிகப்பெரிய சிவாலயம் அமைக்கப்பட்டு சிறப்பான பூஜைகளும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

வெள்ளாற்றங்கரையின் இருகரைகளிலும் சப்தத்துறைகள் எனப்படும் ஏழு தலங்கள் உள்ளன. ஏழு இடங்களிலும் ஈசனும் உமையாளும் அருளாசி வழங்கிவருகிறார்கள். அதில் இது மூன்றாவது துறையாக விளங்கிவருகிறது.

""இவ்வாலய இறைவனை வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும். திருமணத்தடை அகலும். மகப்பேறு கிட்டும். பாவ விமோசனம் கிட்டும். விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பரிகாரத்தலமாகவும் இது விளங்குகிறது. மேலும் அனைத்துவிதமான துன்பங்கள், நோய்கள் நொடிகள் நீங்க இங்கே வந்து வழிபடுகின்றார்கள். மாத சிவராத்திரி, மாதப் பிரதோஷம், பௌர்ணமிப் பூஜை உட்பட அனைத்து சிவவழிபாடுகளும் முறையாக நடத்தப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இங்குவந்து வழிபட்டுச் செல்கிறார்கள். வேண்டியதை வேண்டியபடி வழங்கி வருகின்றனர் எங்கள் ஈசனும் பார்வதியும்'' என்கிறார்கள் கோவில் தர்மகர்த்தா பெரியசாமியும், அர்ச்சகர் கணேசனும்.

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூர் அருகே உள்ளது திருமாந்துறை டோல்கேட். அங்கிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டரில் உள்ளது திருமாந்துறை ஊரும், ஆலயமும். ஆலயத் தொடர்புக்கு: 98651 95554.

ப்