பத்மாவதி ஜெயந்தி 8-12-2021

காவிஷ்ணு வின் அவதாரங்க ளான மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, கிருஷ்ண, பலராம ஜெயந்தி என்று பஞ்சாங்கத் தில் ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பார்கள்.

Advertisment

ஆடிப்பூரத்தை ஆண்டாள் அவதரித்த நாளாகக் கொண்டாடுகிறோம். சீதா ஜெயந்தி என்று வடநாட்டில் கொண்டாடுகி றார்கள். இது ராம நவமிக்கு அடுத்துவரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. அது போல் கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த அஷ்டமி யில் ராதா ஜெயந்தி என்று வடநாட்டில் கொண்டாடுகிறார்கள். வங்காளத்தில் வசந்த பஞ்சமி என்று சரஸ்வதி ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.

பார்வதி, வள்ளி, தேவசேனா திருமணங் கள் பங்குனி உத்திர நாளில் கொண்டாடப் பட்டாலும், அவர்கள் ஜெயந்தி என்று கொண்டாடுவதில்லை. அதுபோல மகா விஷ்ணு ஜெயந்தி, மகாலட்சுமி ஜெயந்தி எனவும் கொண்டாடப்படுவதில்லை. திருப்பதி யில் வேங்கடேசப் பெருமாள் தனியேதான் இருக்கிறார். கர்ப்பக்கிரகத் தாயார் சந்நிதி அங்கில்லை. உற்சவ விக்ரகம் ஸ்ரீதேவி, பூதேவியே. பெருமாளின் மார்பில் மகாலட்சுமி உறைகிறாள். பத்மாவதி தாயாரோ மலைக்குக் கீழே திருச்சானூரில்தான் உறைகிறாள். அவள் மலையேறுவதில்லை. வேங்கடேசர் மலைக் குக் கீழே பத்மாவதியின் அருகில் வர மாட்டார்- பங்குனி உத்திர தினத்தில்கூட! அந்த பத்மாவதித் தாயார் உதித்த தினம் "திருச்சானூர் தாயார் பஞ்சமி தீர்த்தம்' என்று பஞ்சாங்கம் கூறுகிறது. தாயாருக்கு ஒன்பது நாள் உற்சவம் அன்று முடிவடைகிறது. அந்த வைபவம் தோன்றக் காரணத்தை சிந்திப் போமா...

சிவன், பாலா திரிபுரசுந்தரி ஐக்கிய ரூபமான வேங்கடேஸ்வரருக்கு சங்கு, சக்கரம் பொருத்தி விஷ்ணுவாக்கியவர் ஆதிசேஷ அவதாரமான ஸ்ரீ ராமானுஜரே ஆவார். வேங்கடேசர் நாகாபரணம் அணிந்திருக்கிறார்.

Advertisment

வாகனமோ அம்பாளுக்குரிய சிங்கம். அது மதில்மேல் உள்ளதை இப்போதும் காணலாம். இதில் நாம் வேறுபாடு பார்க்கத் தேவையில்லை. ஈடுபாடு போதும். சர்வம் பிரம்ம மயம்.

இக்காலங்களில் திருமணமான தம்பதியர் வேலையின் பொருட்டு வெவ்வேறு இடங்களில் தங்கிப் பணிசெய்ய நேர்கிறது. கணவன் ஓரிடம்- மனைவி ஓரிடமென்பது பத்மாவதி- ஸ்ரீனிவாசன் கற்பித்ததுதான் போலும்!

துவாரகையில் கண்ணனுக்கு எட்டு மனைவிகள். சிசுபாலன் சிறைப்பிடித்து வைத்திருந்த 16,000 பெண்களையும் மணந்துகொண்டான். கண்ணனின் பெற்றோரான வசுதேவர்- தேவகி துவாரகையில் இருந்ததால் அந்தத் திருமணங்களை ஆனந்தமாகக் கண்டுகளித்தனர். ஆனால் கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதை மதுராவுக்கோ துவாரகைக்கோ வந்ததாக வரலாறு இல்லை. அந்த ஏக்கம் தீர யசோதை வகுளாதேவியாக அவதரித்தாள். ஸ்ரீனிவாசன் அவளிடம் மகனாக வந்து சேர்ந்தார். ஆகாச மகாராஜா, மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டுமென்று வேண்ட, அதன்படி பத்மாவதி, திருச்சானூர் பத்ம சரோவத்தில் தாமரை மலரில் தோன்றினாள். அவளை மன்னன் வளர்த்து வந்தான். பின்னர் ஸ்ரீநிவாசன்- பத்மாவதி திருமணம் நாராயண வனத்தில், முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் நடந்தது.

Advertisment

அகத்தியரின் வேண்டுகோள்படி ஆறுமாத காலம் ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் ஸ்ரீநிவாசன்- பத்மாவதி தாம்பத்தியம் நடத்தினர். பின்னர் ஸ்ரீனிவாசன் திருமலையிலும், பத்மாவதி தாயார் திருச்சானூரிலும் வாசம் செய்கின்றனர். வரும் பக்தர்களின் அனைத்துவித வேண்டுதல்களையும் பரிபூரணமாக நிறைவேற்றுகின்றனர். தாயாரை வணங்கியபிறகே பெருமாளை வணங்கவேண்டும் என்பது நியதி. ஏனென்றால் தாயாரை எம் பெருமானுக்கு "புருஷகாரி' என்பர். கணவனாக நடக்காதவர்களையும் கணவனாக்குவது தாயாரின் கடமை. பரமாத்மாவை நாடவிடாதபடி ஜீவாத்மா வைப் பாவங்கள் தடுக்கின்றன. அவற்றை நீக்கி ஜீவாத்மாவைப் பரமாத்மாவிடம் சேர்க்கும் பாலமாக தாயார் விளங்குகிறாள். ஆக, அவளை புருஷகாரி என்பர். "லக்ஷ்மீ புருஷ காரத்வே' என்கிறது சாஸ்திரம்.

ss

நவராத்திரி சமயம் திருமலையில் பெருமாளுக்கு உற்சவம் நடக்கும். மலையடி வாரத்தில் தாயாருக்கும் நடக்கும். கார்த்திகை பஞ்சமியை ஒட்டி தீர்த்தவாரி என்று தாயார் உற்சவம் தனியே நடத்தப்படுகிறது. மகாலட்சுமி சகஸ்ரநாம தியான சுலோகம் கூறுவது என்ன?

"பத்மநாபப்ரியாம் தேவீம் பத்மாக்ஷீம் பத்மவாஸினீம்

பத்மவக்த்ராம் பத்மஹஸ்தாம் வந்தே பத்மமஹர்நிசம்'

என்கிறது. மகாலட்சுமி அஷ்டோத்திரமும்-

"பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் பத்மாக்ஷீம் பத்மசுந்தரீம்

பத்மோத்பவாம் பத்ம முகீம் பத்மநாபப்ரியாம் ரமாம்

பத்ம மாலாதராம் தேவீம் பத்மினீம் பத்ம கந்தினீம்'

என்று கூறுகிறது. தாமரையைக் கண்டாலே மகாலட்சுமி நினைவு வரவேண்டும். சர்வம் பிரம்ம மயம் என்பதுபோல சர்வம் பத்ம மயம்.

பத்மாவதி திருச்சானூரில் உதிக்கக் காரணமென்ன? ஒன்று ஆகாச மகாராஜாவின் மகளாகப் பிறக்க; மற்றொன்று யசோதையின் மறு அவதாரமான வகுளாதேவியின் விருப்ப மான திருமண வைபவம் காண! இவையன்றி மேலும் என்ன?

அகங்காரம் என்பது மனித- மிருக வர்க்கங்களுக்கு மட்டுமல்ல; தேவ, ரிஷி, தெய்வங்களுக்கும் உள்ளது. தங்களில் பெரியவர் யார் என பிரம்மா, விஷ்ணுவுக்கிடையே ஏற்பட்ட அகங்காரத்தை திருவண்ணாமலை சிவனே தீர்த்துவைத்தார். அது கார்த்திகைப் பௌர்ணமியில் நிகழ்ந்தது. நாரதரின் கலகத்தால் தோன்றிய விளைவு இது.

ஆதிகாலத்தில் கங்கை நதிக்கரையில் முனிவர்கள் உலகமக்களின் நன்மைக்காக ஒரு யாகம் செய்ய விரும்பினர். அப்போது நாரதர் அவர்களிடம், "யாரை உத்தேசித்து இந்த யாகம் செய்கிறீர்கள்? பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் உயர்ந்தவர் யார் என்பதைத் தீர்மானித்து, அவரைக் குறித்து யாகம் செய்யுங்கள்'' என்றார். முனிவர்கள் பிருகு முனிவரிடம் வேண்டினார்.

அவர் முதலில் பிரம்மலோகம் சென்றார். வாயிற்காப்போன் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பிரம்மதேவர் வேதத்தில் ஆழ்ந்திருந்தார். சரஸ்வதி தன் வீணா நாதத்தில் ஆழ்ந்திருந்தாள். பிருகுமுனிவர் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை; உபசரிக்கவில்லை. இதனால் கோபமுற்ற முனிவர், "உங்கள் இருவருக்கும் ஆலயங்களில் வழிபாடு இல்லை'' என்று சபித்தார்.

பின்னர் பிருகு முனிவர் கயிலை சென்றார். அவரை நந்திகேசர் தடுத்து, "சிவபெருமானும் பார்வதி தேவியும் அன்யோன்யமாக உள்ளனர்.

எனவே தங்களுக்கு அனுமதி இல்லை'' என்று கூறினார். கோபமுற்ற முனிவர், "இனி சிவனுக்கு உருவ வழிபாடு இல்லை; அருவ (லிங்க) வழிபாடு மட்டுமே'' என்று சபித்தார்.

பின்னர் அவர் வைகுண்டம் சென்றார். மகாவிஷ்ணு லட்சுமிதேவியுடன் ஏகாந்தமாக இருந்தார். வாயில் காப்பாளர்களான ஜெய விஜயர் தடுத்தும் அதைமீறி உள்ளே சென்றார் முனிவர். வரவேற்பு இல்லாததால் கோபத்து டன் மகாவிஷ்ணுவின் மார்பில் உதைத்தார்.

இதுகண்டு வெகுண்ட மகாலட்சுமி திருமாலை விட்டுப் பிரிந்தாள். சுதாரித்துக்கொண்ட மகாவிஷ்ணு முனிவரின் கால்களைப் பிடித்து, "உங்களது கால் வலிக்குமே'' என்று பணிவுடன் தடவிக் கொடுத்தார். இதனால் மகிழ்ந்த பிருகு மகரிஷி பூவுலகம் வந்து முனிவர்களிடம், "விஷ்ணுதான் உயர்ந்தவர். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் அவரே. ஆக யாக அவிர்பாகத்தை அவருக்கே தாருங்கள்'' என்று கூறினார். பகவானின் உன்னதம் ஒரு முனிவரால் நிச்சயிக்கப்பட்டது என்பது வினோதம்தானே.

முனிவர், தனது இருப்பிடமான திருமாலின் மார்பில் உதைத்ததால் கோபமும் அவமானமும் கொண்ட மகாலட்சுமி, அவரைப் பிரிந்து பூவுலகம் (கோலாப்பூர்) வந்தாள்.

அதற்கு கரவீரபுரம் என்னும் பெயருமுண்டு. இரண்டுமே அசுரர்களின் பெயர்கள். காரணம் என்ன?

கயாசுரன், லவனாசுரன், கோலாசுரன் ஆகிய அசுரர்களை பிரம்மா படைத்தார். அவர்கள் முனிவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தினர். கயாசுரன், லவனாசுரனை மகாவிஷ்ணு அழித்தார். (கயாசுரன் பெயரால் கயை என்னும் தலம் விளங்குகிறது. அங்கு விஷ்ணுபாதத்தில் நாம் பித்ரு காரியங்களைச் செய்கிறோம்.)

பின்னர் கோலாசுரன், "இத்தலத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். அவளைக் குறித்து நான் தவம்செய்யப் போகிறேன்'' என்று தன் மகன் கரவீரனிடம் கூறி, அவனிடம் அரசை ஒப்படைத்துவிட்டுத் தவம் மேற்கொண்டான். கரவீரன் முனிவர்களையும் ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்த, சிவபெருமான் அவனை அழித்தார். அவன் வேண்டியபடி ஊர் கரவீரபுரம் என்றாயிற்று.

கரவீரன் அழிந்ததால் கோபம்கொண்ட கோலாசுரன் அனைவரையும் துன்புறுத்தினான்.

மகரிஷிகள் மகாலட்சுமியை வேண்ட, அவள் "என்னிடம் வரம் பெற்றிருக்கிறான். சற்று பொறுத்திருக்கவும்'' என்றாள். குறித்த காலம் வந்ததும் மகாலட்சுமியே கோலாசுரனை அழித்தாள். அவன் வேண்டியபடி அத்தலம் கோலாப்பூர் என்றாயிற்று.

கோலாப்பூரில் மகாலட்சுமி நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி கோவில் கொண்டிருக்கிறாள். ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாலயம் 6,000 வருடங்கள் பழமையானது என்கிறார்கள். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் மகா காளி, சரஸ்வதி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காலபைரவர், நவகிரக சந்நிதிகளும் உள்ளன. நவராத்திரி, சித்ரா பௌர்ணமியில் மிகப்பெரிய திருவிழா நடக்கும். இந்த கோலாப்பூர் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதியாகத் தோன்றினா ளாம்.

வைகுண்டத்தில் மகாலட்சுமியைப் பிரிந்த மகாவிஷ்ணு, அவளைத் தேடி பல இடங்களிலும் அலைந்தார். கரவீரபுரமும் வந்து தேடினார். அப்போது மகாலட்சுமி அசரீரியாக, "தெற்கே கிருஷ்ணவேணி நதிக்கருகே சுவர்ணமுகி நதி உள்ளது. அப் பகுதியில் குளம் அமைத்து தங்கத்தாமரை செய்து மகாலட்சுமியை தியானித்தால் அவள் கருணை கிட்டும்' என்று கூறினாள். அவ்வாறே அவர் 12 ஆண்டுகள் தவம்செய்ய, அவள் ஆகாச மகாராஜனின் வேண்டுதலுக்கும் ஏற்ப, கார்த்திகைப் பஞ்சமி உத்திராட நட்சத்திரத்தில் தங்கத்தாமரையில் அவதரித்தாள். எனவே அவள் பெயர் பத்மாவதி தேவி, அலர்மேலு மங்கை.

இத்தலத்தில் சுகதேவர் என்பவர் தவம்புரிந்தார். அதனால் இது ஸ்ரீ சுகன் ஊர் என விளங்கி, அதுவே திருச்சானூர் என மருவியது. அலர்மேல்மங்காபுரம் என்றும் கூறுவர்.

கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சி. அவர்கள் சிவபக்தர்கள். யோகிமல்லாவரம், பராசரேஸ்வரர் சிவன் கோவில்கள் கட்டினர்.

கி.பி. 1533-ல் யாதவர்கள் பத்மாவதி தாயார் ஆலயத்துக்கு பிரம்மோற்சவம் செய்தனர். கி,பி. 1782-ல் ஹைதர் அலி ஆட்சிக் காலத்தில் கோவில் இடிக்கப்பட்டது. 1843-ல் இதை ஆங்கிலேயர்கள் ஹதிராம்ஜி மடத்திடம் ஒப்படைத்தனர். அவர்கள் புனர்நிர்மானம் செய்தனர். பின்னர் 1933-ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வசம் இவ்வாலயம் வந்தது. தாளப்பாக்கம் அன்னமய்யா முதலில் பத்மாவதி தாயாரையே பாடினார். பசித்த அவருக்கு அன்னமிட்டவள் இந்த அன்னையே.

பத்மாவதி பிரம்மோற்சவம்

பத்மாவதி ஜெயந்தி நாள் கார்த்தி கைப் பஞ்சமியாகும். ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு தீர்த்தவாரி யுடன் முடிவடைகிறது. காலையும் மாலையும் பலவித வாகன அலங்காரங்களுடன் உற்சவம் நடக்கும். விடியலில் அலங்காரத்துடன் வீதி உலா. பின்னர் தாயாருக்கு அபிஷேகம் நடைபெறும். அதிகாரிகள், ஜீயர்கள் கலந்துகொள்வர். திருமலையிலிருந்து புடவை, திவ்யாபரணங்கள் பிரசாதங்களுடன் வரும். பிரபந்த கோஷ்டி சிறப்பாக நடக்கும். தாயார் சக்கரத்தாழ்வாருடன் புஷ்கரணி புறப்படுவார். திருமஞ்சனம் நடக்கும். வேத பாராயணம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம் போன்றவை ஒலிக்க, தாயாருக்கும் சக்கரத்திற்கும் அபிஷேகம் செய்யப்படும். தூப தீப ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் "பத்மாவதி ரமண கோவிந்தா' என்று பாடி புஷ்கரணியில் நீராடுகிறார்கள். தாங்கள் செய்த பாவங்கள் அழிந்ததாக நம்புகின்றனர்.

தாயாரைப் பணிந்து, பெருமாளைப் பணிந்து அருள்பெறுவோம். பத்மாவதி ரமண கோவிந்தா கோவிந்தா!